Tag Archive for பேட்டி

கிருஷ்ண சந்திரன் பேட்டி

கிருஷ்ண சந்திரனின் (மலையாளப்) பேட்டியைப் பார்த்தேன். மனதை மயக்கும் பல தமிழ்ப் பாடல்களை (அள்ளி வெச்ச மல்லிகையே, ஏதோ மோகம்) 80களில் ராஜாவின் இசையில் பாடியவர். பேட்டியில் அருவி போலக் கொட்டுகிறார். மனதில் எவ்விதக் களங்கமும் இல்லாதவர்கள் மட்டுமே இப்படிக் கடகடவெனக் கொட்ட முடியும் என்று தோன்றியது.

யேசுதாஸ் உங்களது வளர்ச்சியைத் தடுத்தாராமே என்று கேட்கப்பட்ட கேள்விக்குச் சொல்கிறார், “இதைக் கேட்கும்போது ஒரு பக்கம் சிரிப்பும் இன்னொரு பக்கம் கோபமும் வருகிறது. காலையில் 7 மணிக்கு யேசுதாஸ் படி இறங்கினால், இரவாகி வீட்டுக்கு வரும் முன்பு ஒரு நாளில் 14 பாடல்கள் வரை பாடுவார். நான் பிஸியாக இருந்தபோது 4 பாடல்கள் வரை ஒரு நாளில் பாடி இருக்கிறேன். அதுவே எத்தனை அழுத்தமான வேலை என்று எனக்குத் தெரியும். அப்படி இருக்க இன்னொருவருக்கு எதிராக சதி செய்ய யேசுதாஸுக்கு எங்கே நேரம்? யேசுதாஸை நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும் அவர் எத்தனை நல்ல நேர்மையான மனிதர் என்று” என அடுக்கிக்கொண்டே போகிறார். கிருஷ்ண சந்திரன் பாட வரும் முன்பே யேசுதாஸ் மலையாளிகளின் கான கந்தர்வனாகிவிட்டார். கிருஷ்ண சந்திரன் சினிமாவில் பாடுவதற்கு முன்பே யேசுதாஸுக்கு நேரடிப் பழக்கம். யேசுதாஸின் கச்சேரிகளில் தம்புரா கூட ஒரு முறை வாசித்திருக்கிறாராம்.

திரையுலகம் எப்படி காஸிப்புகளில் மூழ்கித் திளைக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். என்ன பிரச்சினை என்றால், அத்தனையுமே காஸிப் என்று ஒதுக்கிவிடவும் முடியாது என்பதுதான்.

80களின் பிற்பகுதியில் மனோ பிரபலமாகப் பாடத் தொடங்கிய பின்பு, குமுதம் இதழில் காஸிப்பாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அத்தனை வாய்ப்பும் மனோவுக்குப் போவதால் எஸ்பிபி மனோ மேல் கடுப்பில் இருக்கிறார் என்று. எஸ்பிபி மறைந்தபோது மோட்ச தீபம் ஏற்றினார் மனோ.

Share

செண்பகப் பெருமாளின் நேர்காணல் – யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவும்

செண்பகப் பெருமாள் எழுதிய ‘யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவம்’ புத்தகம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சனத்தையும் பெற்றது. என்னளவில் இந்தப் புத்தகம் கிறித்துவம் தொடர்பான பல விஷயங்களை மிகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளும்படியும் சொன்னது. கிறித்துவம் பற்றி அதிகம் தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொண்டு, செண்பகப் பெருமாள் என்ன குற்றச்சாட்டை வைக்க வருகிறார் என்பதை உணரமுடியும். இதுவே புத்தகத்தின் பலம். ஒரு ஆசிரியர் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுப்பது போல இப்புத்தகம் மெல்ல மெல்லப் படிப்படியாக பவுலின் கிறித்துவம் தொடர்பான கேள்விகளை முன்வைக்கிறது. புறஜாதியாருக்குமான கிறிஸ்துவாக ஏசு எப்போது மாற்றப்பட்டார் என்பதை செண்பகப் பெருமாள் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

இப்புத்தகம் வந்தபோது யார் இதைப் படிக்கப் போகிறார்கள் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் புத்தகத்துக்கு இருந்த வரவேற்பு ஆச்சரியமானது.


மேலே உள்ள நேர்காணலில், இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைத் தொட்டுப் பேசுகிறார் செண்பகப் பெருமாள். இப்புத்தகத்தை மேலும் புரிந்துகொள்ள இந்தப் பேட்டி உதவும். பத்ரி சேஷாத்ரியின் கேள்விகளுக்கு எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் செண்பகப் பெருமாள் பதில் சொல்லும் விதம், இத்துறையில் அவருக்குள்ள ஞானத்தையும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

செண்பகப் பெருமாள் ஹிந்துத்துவ ஆதரவாளர். ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளர் தனது எதிர்த்தரப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தப் பேட்டி ஒரு முன்மாதிரி. ஹிந்துத்துவத் தரப்பு மட்டுமல்ல, தன் எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் யாருக்குமேதான்.

Share