Tag Archive for பாலகுமாரன்

பாலகுமாரன் – அஞ்சலி

பாலகுமாரன் – அஞ்சலி
 
பாலகுமாரன் எழுத்தைப் படித்தே நான் புத்தக வாசிப்புக்குள் வந்தேன். இளமையில் பாலகுமாரன் எழுத்தைப் படிப்பது ஒரு அனுபவம். ஒரு பெண்ணைக் காதலிப்பது போல, ஒரு பெண்ணின் உடல் தரும் கிளர்ச்சி போல, பாலகுமாரனின் எழுத்தை வாசிப்பதும் பெரிய கிறக்கத்தைத் தந்தது. தத்துவம் என்கிற பெயரில் பாலகுமாரன் சொன்னவை பாதி புரிந்தும் பாதி புரியாமல் இருந்தாலும் பாலகுமாரன் எழுத்தே ஒரு விஷயத்தின் பல்வேறு கோணங்களை யோசிக்கக் கற்றுத் தந்தது. தோல்வியை ஏற்றுக்கொள்ள, பழகிக்கொள்ள அரைகுறை புரிதலைத் தந்தது. பின்பு அதிலிருந்து மேலேறிச் செல்ல உதவியது. பாலகுமாரனின் பிற்கால எழுத்துகள் முழுவதும் ஆன்மிகமாகவிட்ட போது, மிக எளிதாக பாலகுமாரனைத் துண்டித்துக்கொள்ளவும் முடிந்தது. ஆனால் வாசித்த காலங்களில் உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர் பாலகுமாரனே என்ற எண்ணம் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருந்தது.
 
பெண்களைப் பற்றி பாலகுமாரன் எழுதியவை எல்லாமே ஆண் பார்வையாக இருக்கலாம். ஒரு ஆணுக்கு அந்த எழுத்து தரும் பரவசம் அளவற்றது. பெண்மையை உயர்த்தும் ஆண்மை என்பது தரும் கிறக்கம் அது. அதில் உண்மை இல்லாமல் இருந்திருக்கலாம், முழுக்க நாடகப் பாணியிலானதாக இருக்கலாம். ஆனால் அது மிக நெருக்கமாக இருந்தது. பெரும் ஈர்ப்பைத் தந்தது.
 
உணவுக்கும் உடலுக்கும் பெண்ணுக்குமான சித்திரங்களை பாலகுமாரன் வரைந்து தள்ளினார். எல்லாவற்றின் அடிநாதமும் ஒன்றேதான் என இன்று யோசிக்கும்போது புரிகிறது. ஆனால் அன்றைய வாசிப்பில் ஒவ்வொன்றும் ஒரு தினுசாக இருந்தது. கண்ணீர் மல்கவே சில பக்கங்களை வாசிக்கவேண்டி இருக்கும். எத்தனை எத்தனை நாவல்கள்! ஒவ்வொரு வியாழக்கிழமையும் (என நினைக்கிறேன்) நாவல் டைம் அல்லது மேகலா வருவதற்காக அதிகாலையே பத்திரிகைக் கடையில் காத்து நின்றிருக்கிறேன். அன்புள்ள அப்பா, செந்தூரச் சொந்தம், திருப்பூந்துருத்தி, கடலோரக் குருவிகள், என்றென்றும் அன்புடன், கண்ணாடி கோபுரங்கள் என்று எத்தனையோ நாவல்களை மாத நாவல்களாக வாங்கியும் நூலகத்திலும் வாசித்துத் தள்ளினேன்.
 
அந்திமழை இதழுக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலை மீண்டும் வாசித்தபோது என் இளமையின் அந்தரங்க நிமிடங்களை நானே திரும்பிப் பார்ப்பது போன்ற ஒரு சந்தோஷமான திடுக்கிடலை உணர்ந்தேன். நமக்கு நிறைய வாசித்துவிட்ட உணர்வு பெருகும்போது பாலகுமாரன் தேங்கிவிட்டதாகத் தோன்றியதும் தோன்றுவதும் உண்மைதான். ஆனால் அந்த எழுத்துத்தான் என்னை அப்படிப் பிடித்துக்கொண்டது என்பதும் நிஜம்தான். யோசித்துப் பார்த்தால் பாலகுமாரன் ஒரு குறிப்பிட்ட வயதுக்காக எழுதி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த வயதொத்தவர்களைப் பிடித்துக்கொள்ளும் பூதம் போன்ற எழுத்து அது. இன்று சாகவாசமாக அதை விமர்சிக்கலாம். அது எளிது. ஆனால் அன்றைய தேதியில் அந்த பாலகுமாரன் தந்த கிளர்ச்சியை, அனுபவத்தை, தத்துவம் மீதான புருவ உயர்த்தலை எல்லாம் மறக்கவே முடியாது. என்றென்றும் நினைவில் இருப்பார் பாலகுமாரன்.
 
திரைத் துறையிலும் பாலகுமாரன் ஒரு வசனகர்த்தாவாக சாதனை செய்தார் என்பதே என் எண்ணம். இளையராஜா மற்றும் கமலுக்கு இணையாக அவர் குணாவிலும் என்றென்றும் தெரிவார் என்றே நம்புகிறேன்.
 
ஓம் ஷாந்தி.
Share

பாலகுமாரனை நினைத்து

நவம்பர் அந்திமழை மாத இதழ் தொடர்கதை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. (கமல் 60 சிறப்பிதழும்கூட!) அதில் மெர்க்குரிப்பூக்களை முன்வைத்து நான் எழுதிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது. ஓர் இதழின் விலை 20 ரூபாய் மட்டுமே. வாங்கிப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவும்.

நீண்ட நாள் கழித்து பாலகுமாரனின் ஒரு நாவலை வாசித்தபோது, மனத்தில் பல்வேறு பழம்நினைவுகள் என்னை அலைக்கழித்தன. அன்று பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று நினைத்த நிமிடங்கள் இன்று அப்படி இல்லை என்றாகிப்போன மாற்றமே அதன் முக்கியப் புள்ளியாக இருந்தது. அதை ஒட்டி எழுந்த எண்ணங்களில் சிதறல்களை எழுதி வைத்தேன். அவை:

பாலகுமாரனின் பிரச்சினைகள் – எதையும் அதன் ஆழத்துக்குள் சென்று பரிசீலனைக்குட்படுத்தாதது. எல்லா ஆண் பெண் உறவுகளிலும் ஒரு செக்ஸ் எலிமெண்ட் எப்படியாவது இருந்துவிடுவது. அதிலிருந்து வெளிவர பெண்ணை தெய்வமாக்க முயல்வது. பெண்கள் ஆண்கள் என எல்லோரும் தத்துவார்த்தப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்வது. மெல்ல எப்படியாவது ஜாதிய சிந்தனை இருந்தே தீரும் என்று தொடர்ந்து பின் நின்று சொல்வது. இவை எல்லாவற்றிலும் அவர் ஆழம் போயிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு கேஸ் ஸ்டடியாகி இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூன்று மேலோட்டமான முடிவுகளுக்கு அவர் வந்தார். ஆண் பெண் உறவுகளில் செக்ஸ் அதற்குப் பின்னான வருத்தம், தத்துவார்த்தப் பிரச்சினைகளில் மிகவும் மேலோட்டமான எரிச்சலான தன்னிரக்கம், ஜாதிய சிந்தனைகளில் அவரது பிற்போக்குத்தனம் இவையே அவரை தேங்க வைத்தன. இதே மேலோட்டமான வேகத்தில் அவர் ஆன்மிகத்துக்குப் போனார். எனக்கு ஆன்மிகம் பற்றி அதிகம் பரிச்சயமில்லை. ஆனால் ஆன்மிகத்தை இவர் எழுதியதை வாசித்தபோது அவற்றிலும் ஒரு அவசரத்த்னமையும் தனது வாசகர்களைத் தான் செல்லும் திசைக்குத் திருப்பிக்காட்டவேண்டும் என்கிற வேகமும் முடியும் என்கிற மமதையும் மட்டுமே தென்பட்டன.

ஆனால் என் பால்யம் முழுக்க பாலகுமாரனே நிறைத்துக் கிடந்தார். அதில் காமத்தை பெரும்பாலும் தன் எழுத்துகள்மூலம் அவரே கட்டமைத்தார். ஒவ்வொரு இளைஞனும் வெறும் காமம் பற்றியே பேசும்போது அவர் எனக்குள் ஒரு விஸ்வரூபம் எடுத்தார். பல நாள்களில் பல நேரங்களில் நான் பாலகுமாரனுடன் மானசீகமாகப் பேசினேன். எனக்கு குருக்கள் என்று யாரும் இன்றுவரை இல்லை. ஆனால் மானசீகமாக என் வாழ்க்கையை பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களே வடிவமைத்தார்கள். அந்தவகையில் பாலகுமாரனிடன் எனக்கு எப்போதும் ஒரு மென்மை உண்டு. எப்போதும் நான் அவரை நோக்கிக் கைக்கூப்புவேன்.

பாலகுமாரனின் மயக்கத்தை சுஜாதா போக்கடித்தார். சுஜாதாவிடமிருந்து ஜெயகாந்தன் என்னைக் கொண்டு போனார். இவர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரக் கடாச வைத்தார் ஜெயமோகன். ஆனால் இன்று நோக்கும்போது இவர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் எத்தனை முக்கியமானவர்கள் என்று தெரிகிறது. அதிலும் சுஜாதாவின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. ஜெயமோகன் எங்கேயோ போய்விட்டார். 

பாலகுமாரனின் பெண்களை மிகக் கறாராக வரையறுத்தால், உணவாலும் உடலாலும் ஒரு ஆணைக் கட்டிப்போட முடியும், முடியவேண்டும் என்று சொல்பவர்களாகவே இருந்தார்கள். ஆணிடம் ஒரு பெண் தோற்கும்போது அவர்கள் காமத்தை அனுபவமாக்கியே க்டந்தார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு நொடியில் வீட்டுப் பெண்ணே என்று காண்பிக்க பாலகுமாரன் தவறுவதில்லை. அதேபோல் எந்த ஒரு நொடியிலும் ஒரு வீட்டுப் பெண் பல தளங்கள் உயர்ந்து வெற்றிப் பெண்ணாக வலம்வர வைக்கவும் அவர் தவறுவதில்லை. என்ன, இவை இரண்டுமே நொடிநேர மின்னல்களாக நிகழ்ந்துவிடுவதுதான் சோகம். இதற்கேற்ற ஆழமான காரணங்களோ சம்பவங்களோ இருப்பதில்லை. அப்படி ஒரு பெண்ணால் மாறமுடியும் என்ற ஒற்றைக் காரணம் எல்லா நாவல்களிலும் பாலகுமாரனுக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது.

அனல்காற்று ஜெயமோகன் எழுதியது. பாலகுமாரனின் கதை போன்ற ஒன்றுதான். ஆனால் அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அனுபவங்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் மனத்தில் அப்படியே நிர்வாணமாக்கி நிற்கவைப்பவை. ஆணின் எல்லையையும் பெண்ணின் எல்லையையும் அவர் தொட்டிருக்கும் அற்புதம் வாசித்தால்தான் புரியும். அனல்காற்று நாவலில் பல இடங்களில் நாம் பாலகுமாரனை நினைவுகூர்வோம். ஆனால் பாலகுமாரனால் செல்லவே முடியாத அலசல்களை ஜெயமோகன் நிகழ்த்திக்கொண்டிருப்பார்.

அனல்காற்று ஜெயமோகனின் நாவல்களில் ஒன்றாக வைக்கத் தக்கதல்ல. அத்தனை ஆழமான அலசல்களை மீறியும் அது ஒரு சுமாரான நாவலே. ஆனால் அது ஒரு திரைக்கதையாக எழுதப்பட்டது என்பதை மனத்தில் வைத்தே படிக்கப்படவேண்டும். சட்டென தெளியும் நிலையில் வரும் உறவு விவரணைகளில் உண்மையில் நான் மிரண்டுவிட்டேன்.

Share