Tag Archive for நோன்பு

அனந்த விரதப் பண்டிகையும் தமிழக பிஜேபிக்கு வேண்டுகோளும்

நேர நெருக்கடி இருப்பவர்கள் இந்த மொக்கையைத் தவிர்த்துவிட்டுச் செல்லவும்.

அனந்த விரதப் பண்டிகை என்பது மாத்வர்களின் முக்கியமான பண்டிகளில் ஒன்று. பொதுவாக இதை ஆண்களுக்கான பண்டிகை என்று சொல்லுவார்கள். எல்லாப் பண்டிகைகளும் பெண்களுக்கானது என்றிருக்க, ஆவணி அவிட்டமும், அனந்த விரதப் பண்டிகையும் ஆண்களுக்கானது என்பது மரபு. (எப்படி ஏன் என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்க.) இந்த அனந்த விரதப் பண்டிகையை கொண்டாட ஒரு சில விதிகள் உள்ளன.

பொதுவாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வரும் குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் திருமணம் ஆனவுடன் முதல் வருடத்தில் இந்தப் பண்டிகையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பிடித்துக்கொள்வதற்கு, அப்போது அந்த மருமகள் கர்ப்பமாக இருக்கக்கூடாது. தீட்டு வரும் நாளாக இருக்கக்கூடாது. திருமணமான முதல் வருடத்தில் கல்யாணம் ஆன பெண் முழுகாமல் இருக்கவேண்டும் என்ற விதியை வைத்தவனை (மூக்கிலேயே குத்த) தேடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் முழுகாமல்தான் இருப்பார்கள். எனவே இந்தப் பண்டிகையைப் பிடிக்கமுடியாமல் போய்விடும். இப்படி இல்லாமல் இருந்தால் முதல் வருடத்தில் பிடித்துக்கொள்வது நல்லது, எளிதானது.

அப்படி முதல் வருடத்தில் பிடித்துக்கொள்ள முடியவில்லை என்றால், அடுத்து எப்போது அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமி அன்று வருகிறதோ அன்றுதான் பிடிக்கவேண்டும். அந்த சமயத்திலும் மேலே சொன்ன விதிகளும் சரிவர இருக்கவேண்டும். (இத்தனை கஷ்டப்பட்டு இந்தப் பண்டிகையைப் பிடித்து என்ன ஆகப்போகிறது என்னும் பகுத்தறிவுவாதிகள் ஒதுங்கி நிற்க.)

என் அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் பிடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. நானும் இன்னும் பிடிக்கவில்லை. இடையில் இரண்டு தடவை முழு பௌர்ணமியில் இந்தப் பண்டிகை வந்தபோது எங்கள் வீட்டில் யாரோ இறந்து ஒருவருடம் பண்டிகை இல்லை என்றாகிவிட்டதால் பிடிக்கமுடியாமல் போய்விட்டது. இந்த முறை அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமியில் வருகிறது. செப்டெம்பர் 8ம் தேதி.

அண்ணனும் தம்பியும் சேர்ந்து பிடித்துக்கொள்வது வழக்கம். எனவே நான் திருநெல்வேலிக்குச் சென்றோ அல்லது என் அண்ணன் நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தோ இந்தப் பண்டிகையைச் சேர்ந்து செய்யவேண்டும். இந்த முறை சென்னையில் செய்வது என்று முடிவெடுத்தோம்.

எங்கள் வீட்டில் என் தாத்தா காலம் வரை அனந்த விரதப் பண்டிகை மிகப் பெரிய அளவில் நடைபெறும். ஒட்டுமொத்த குடும்பமும் அன்று ஒன்றிணைந்து இருக்கும். சிறுவர்களான நாங்கள் அன்று தரப்படும் வெண்ணெய்க்கும் தேனுக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருப்போம். ஜால்ரா, சப்ளாக்கட்டை, மணி என மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அனந்த பத்மநாபனைத் தொழுது தோரணம் அணிந்துகொள்வோம். (ஒருமுறை என் அப்பா கடிதம் எழுதும்போது, அனைவரும் சாமி முன்னர் கயிறு மாட்டிக்கொண்டோம் என்றெழுதி அனைவரின் சிரிப்புக்கும் ஆளானார்!)

கடந்த வருட தோரணம் (கயிறு) சிறுவர்களுக்குத் தரப்படும். அவர்கள் கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் கயிரை புஜத்தில் கட்டிக்கொள்ள பெண்கள் மாலைபோல கழுத்தில் போட்டுக்கொள்வார்கள். சமையல் மிகவும் ஆசாரமாக கரி அடுப்பில் செய்யப்படும். நிறைய வகைகள் வேறு உண்டு. 2 மணிக்கே சாப்பாடு போட்டுட்டாங்களே என்றெல்லாம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்! 

முதல் முறை பிடிக்கும்போது, ஆண் வாரிசின் மாமனார் மாமியார் முக்கியமாக வரவேண்டும். கூடவே உடன்பிறந்த சகோதரிகளும் வரவேண்டும். இப்படியாக இந்தப் பண்டிகை இந்தமுறை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஏக தடபுடலாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் புதுத் துணி எடுத்தாகிவிட்டது. மடியான சமையலுக்கு ஆள் சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. பூஜைக்குத் தேவையான சாமான்கள், பலசரக்கு எல்லாம் வாங்கியாகிவிட்டது. எல்லோரும் வரும் 8ம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்

இரண்டு அம்மாக்கள் குண்டை போட்டார்கள். ஒருவர் என்க்கு அம்மா. இன்னொருவர் நமக்கு ‘அம்மா.’

கடந்த வாரம் என் அம்மாவுக்கு திடீரென உடல்நிலை குறைவடைய, ஆஸ்பத்திரியில் 4 நாள் சேர்க்கும்படி ஆகிவிட்டது. இன்னும் சரிவர அவர் குணமாகவில்லை. மருத்துவம் தொடர்கிறது. எதை உண்டாலும் வயிறெல்லாம் வலி. உப்பசம். மூச்சுத் திணறல். எப்போதும் வயிற்றைக் கௌவும் ஒரு வலி. எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த சோதனை, நீர் சோதனை எல்லாம் செய்தாகிவிட்டது. நாற்பதாயிரம் செலவில் கிடைத்த முடிவு, எல்லாம் நார்மல். ஆனால் வலி மட்டும் அப்படியே. இந்தப் பண்டிகையை இந்த முறையாவது பிடித்துவிடவேண்டும், அடுத்தமுறை தான் இருப்போமோ இல்லையோ என்ற எண்ணம் அம்மாவுக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர் சீரியஸாக இல்லை என்றாலும், அவர் அப்படி நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இன்னொரு ‘அம்மா’ யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல அதிரடியாக திடீரென்று மேயர் தேர்தலை அறிவித்துவிட, என் அண்ணன் படு பிஸியாகிவிட்டார். இப்போது அவரால் வரும் திங்களன்று வரமுடியுமா என்றுகூடத் தெரியவில்லை. போதாக்குறைக்கு என் தங்கைகளும் அக்காவும் வரமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிட்டது. ஒரே குழப்பம். எப்படியாவது வந்துவிடச் சொல்லி நாங்கள் சொல்ல, கடும் நெருக்கடியில் வருவது சாத்தியமில்லை என்று அண்ணா சொல்ல, என் அம்மா இன்னும் வருத்தமாக, ஒரே குழப்பம்தான்.

இந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஓர் எளிய வழி உள்ளது. நெல்லை மேயர் தேர்தலுக்கு இதுவரை அதிமுக மட்டுமே விண்ணப்பித்துள்ளது. தேமுதிக, மதிமுக, திமுக, காங்கிரஸெல்லாம் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது. ஆனால் தமிழக பாஜக மட்டும் வீராப்பாக உள்ளது. நான் தமிழக பிஜேபியிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படியும் நெல்லை மேயர் தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை. நீங்களும் ஒதுங்கிக்கொண்டு (ஓடி)விட்டால், அன் அப்போஸ்ட்டாக அதிமுக ஜெயித்துவிடும். இதில் நாட்டு நலனும் என் வீட்டு நலனும் பாதுகாக்கப்படும். தேவையற்ற பணம் விரயமாவது தவிர்க்கப்படுவதோடு, எங்கள் வீட்டுப் பண்டிகையும் நன்றாக நடக்கும். அனந்த பத்மநாபன் அருள் உங்களுக்குக் கிடைக்கும். யோசிக்கவும். இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜஸ்ட் ஒரு பத்து மணி நேரம் நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். நமக்கு நீலகிர் அனுபவமும் உண்டு என்றறிக.

ஹிந்துக்கள் மனது வைத்தால் திருவனந்தபுரத்தோடு இருக்கலாம் என்று சொன்னவர் உள்ள கட்சிக்காரர்கள், திருவனந்தபுரத்துப் பெருமாளின் பண்டிகையை கன்னடம் பேசும் சுத்தத் தமிழன் கொண்டாட வழிவகை செய்து இந்திய தேசியத்தை நிலைநாட்ட உதவவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதைக் குறியீடாகக் கொண்டு யோசித்து நல்ல முடிவு எடுத்து மேயர் தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு தமிழக நெல்லை பிஜேபி வகையறாக்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன். இதனால் என் அண்ணன் நிம்மதியாக வந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுப் போகமுடியும். செய்வீர்களா செய்வீர்களா?

Share