Tag Archive for நீர்

சென்னையில் நீர்ப்பற்றாக்குறை – தயாராவோம்

போர் வந்துவிட்டது. போரில் நீர் வற்றிவிட்டது.

சட்டையை ஒரு நாள் மட்டுமே அணிவேன் என்று ஜம்பம் காட்டாதீர்கள். அழுக்காகாத பட்சத்தில், குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும்பட்சத்தில் ஒரு சட்டையை இரண்டு நாள் உபயோகிக்கலாம். அதற்காக உள்ளாடைகளையும் அப்படிச் செய்யலாம் என்று முடிவெடுக்காதீர்கள். கந்தையானாலும் கசக்கிக் கட்டு – இவற்றுக்கு மட்டும். (அபிராம் கருத்து: உள்ளாடை யாருக்கும் தெரியவா போது? என் பதில்: அப்ப நீ போட்டா என்ன போடாட்டா என்ன?)

தெருவுக்குத் தெரு மாநகராட்சி வைத்திருக்கும் கருப்புத் தொட்டிகளில் நீர் கிடைக்கும். முன்பெல்லாம் எப்போதுவேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளலாம். நீர்ப் பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க ரேஷன் முறையில்தான் நீர் கிடைக்கும். கிடைக்கும் நீரைப் பிடித்து சமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குடி நீருக்காக ஆர்.ஓ வைத்திருந்தால், நீர்ப் பற்றாக்குறைச் சமயங்களில் அதைத் தவிர்த்து கேன் தண்ணீர் குடிக்க வாங்கலாம். கேன் தண்ணீரின் சுத்தம் மேல் அவநம்பிக்கை உண்டாகுமென்றால், ஆர் ஓ வெளித்தள்ளும் உப்பு நீரை வீணாக்காமல் கழிப்பறை உபயோகங்களுக்கு அல்லது துவைக்கப் பயன்படுத்தலாம். (இதை எப்போதுமே செய்யலாம், நாங்கள் செய்கிறோம்.)

மாநகராட்சி வண்டி மூலம் நீர் வாங்கினால் பணம் குறைவு. ஆனால் அதற்குச் சில நடைமுறைகள் உள்ளன. முதலில் நீங்கள் மாநகராட்சியில் பதிவு செய்திருக்கவேண்டும். பின்புதான் நீர் கிடைக்கும். போனில் அழைத்துப் பதிவு செய்வதற்குள் கிட்டத்தட்ட உயிர் போய்விடும். காலை 7 மணிக்கு அழைக்கவேண்டும். லைனே கிடைக்காது. கிடைத்தால் நீங்கள் எத்தனையாவது ஆள் என்பதைப் பொருத்தே நீர் சீக்கிரமோ தாமதமாகவோ கிடைக்கும். இல்லைன்னா சங்குதான். இப்போதெல்லாம் பதிவு செய்தால் சீக்கிரம் நீர் கிடைக்கலாம். இன்னும் வெயில் ஏற ஏற நிலத்தடி நீர் குறைய குறைய பதிவு செய்தும் நீர் கிடைக்க நான்கைந்து நாள் கூட ஆகலாம். பத்து பதினைந்து நாள்கள் ஆனதும் கூட உண்டு.

மாநகராட்சி வண்டி மூலம் நீர் வாங்க இணையம் மூலம் பதிவு செய்வது எளிது. இதுவும் சில சமயம் காலை வாரலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அதிக நேரம் குளித்தால் அழுக்கு நன்றாகப் போகும் என்பது ஒரு மாயை. 🙂 அதிக நேரம் குளிக்கப் பிடிக்கும் என்பது உண்மையாக இருக்கலாம். இருக்கும் ஒரு வாளி நீரை ஒரு நாள் முழுக்கக் குளிப்பது உங்கள் திறமை. ஆனால் குளிக்க ஒரு வாளி நீர்தான். (இடைக்குறிப்பு: இப்படி சென்னைல வாழணுமா என்று திருநெல்வேலி நாகர்கோவில்காரர்கள் ஓவர் சீன் போடாதீர்கள் என்பதை ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறோம். ஏனென்றால், நாளை உங்களுக்கும் இதே கதிதான்.)

வெயில் காலங்களில் காலை மாலை இரண்டு வேளை குளிப்பேன் என்பதையெல்லாம் திருச்சி திருநெல்வேலியிலேயே கட்டி வைத்துவிட்டு சென்னை வண்டி ஏறுங்கள். சென்னையில் வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு ஒருவேளை குளிப்பதே பெரிய சாதனை என்பதறிக. (ஒருவேளை குளிப்பது தனக்காக இல்லையென்றாலும் பிறருக்காகவாவது அவசியம் என்றறிக.)

டம்ளர் குளியல் என்பதை சென்னைட்ஸ் புதியதாக தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். நல்ல டெக்னிக் இது. அடுத்து ஸ்பூன் குளியலைக் கண்டுபிடிக்கவேண்டும். அரசுக்கும் ஊடகங்களுக்கும் சம்ஸ்கிருதப் பாடல் பாடுவதா, நடிகைக்கு என்னாச்சு என்பது போன்ற பெரிய பெரிய பிரச்சினைகள் உள்ளன என்பதால் இதை நாம் கண்டுபிடித்தாகவேண்டும்.

நன்றாக இல்லையென்றாலும் சுமாராகக் குளித்துவிட்டு நன்றாக செண்ட் அல்லது டியோடரெண்ட் போட்டுக்கொள்ளவும். எப்போதுமே இப்பழக்கம் நல்லது என்றாலும் இப்போது இது தேவை. செண்ட் கொஞ்சம் வீணானாலும் பரவாயில்லை, ஏனென்றால் அது எளிதில் கிடைக்கும். நீர் அப்படி அல்ல.

ஃப்ளாட்டில் தங்கி இருந்தால் பக்கத்து வீடு எதிர் வீடு கீழ் வீடு எனப் பெரிய சண்டை நடக்கும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் சண்டைக்குத் தயாராக இருக்கவும். காலை சண்டை போட்டுவிட்டு ஒன்றாக ஒரு டீ சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலை மீண்டும் சண்டைக்குத் தயாராக இருக்கவும்.

நமக்கே நீரில்லை இதுல மாட்டுக்கு வேறயா என்று தெருவில் வரும் மாடுகளுக்கு, நாய்களுக்கு நீர் வைக்காமல் விட்டுவிடாதீர்கள். கஷ்டத்தோடு கஷ்டம், அவற்றுக்கும் நீர் வைக்கவும்.

திருச்சி திருநெல்வேலியில் இருந்து மாமா மச்சான் அத்தான் அத்திம்பேரெல்லாம் குடும்ப சகிதம் சென்னையில் வந்து ஒரு மாதம் டேரா போடுவது கருட புராணத்தின்படி தண்டனைக்குரியது. சோறு போடலாம் நீர் தரமுடியாது. குளிக்க துவைக்க கழுவ என ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நீர் தேவை என்பதைக் கண்டுபிடித்து ஆள்களால் பெருக்கிப் பார்த்தால் சென்னைட்ஸ் பாவம் என்று உங்களுக்கே புரியும். உங்கள் சொந்தத்தையும் பாசத்தையும் நவம்பர் டிசம்பர் ஜனவரியில் சென்னையில் வளர்த்தால் போதும். அப்போது புயலிலோ வெள்ளத்திலோ ஒன்றாக மிதக்கலாம், வாருங்கள்.

லோ வால்ட் பிரச்சினையில் ஏஸி ஓடாதது, சுட்டெரிக்கும் வெயிலில் எரிச்சல் வருவது, இரவில் கொதிக்கும் காற்றில் தள்ளிப் படுப்பது பற்றியெல்லாம் மே மற்றும் ஜூன் மாதங்களில் எழுதுவேன். காத்திருக்கவும்.

ரஜினி அறிவிக்கும் போர் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். சென்னைக்கான போர் வந்தேவிட்டது. நாம்தான் நம் போரைச் சமாளித்தாகவேண்டும்.

பின்குறிப்பு: சென்னையில் வாழப் போகும் ஜோடிகளுக்கு மே மாதம் கல்யாணம் வைக்காதீர்கள். பாவம்.

Share