Tag Archive for தூப்புக்காரி

Thooppukkaari – Malarvathi’s Novel

தலித் நாவல்களை தலித்துகள் எழுதுவதுதான் அழுத்தம் நிறைந்ததாகவும் உணர்வுபூர்வமான வலியைப் பதிவு செய்வதாகவும் இருக்கும் என்றும், தலித்துகள் அல்லாத ஓர் எழுத்தாளர்கூட சிறப்பான முறையில் தலித் நாவலைப் படைக்கமுடியும் என்றும் இரண்டு கட்சிகள் எப்போதுமே உண்டு. இந்த முறை தலித் அல்லாத, ஆனால் தலித்தின் வாழ்க்கையை நெருக்கமாக உணர்ந்து வாழ்ந்த வலியை அனுபவித்த ஒரு படைப்பாளி, அதிலும் ஒரு பெண் இந்த நாவலை எழுதியிருப்பது இந்நூலுக்கு அதிக்கப்படியான முக்கியத்துவத்தை அளிக்கிறது. நாவலின் முதலும் கடைசியுமான ஒரே முக்கியத்துவம் இது மட்டும்தான் என்பதுதான் சோகம்.

சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்ததைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் நாவலாசிரியர் மலர்வதியின் பெயரும், நாவல் பெயரும் அடிபடத்துவங்கியதும், அனைவரும் இந்நூலைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். 2011ல் வெளியான நூல் நல்ல கவனம் பெற்றது 2013ல்தான்.

வாழவே வழியில்லாத நிலையில் ஒரு ’நாடாத்தி’ (கனகம்), மலம் அள்ளும் துப்புரவு வேலைக்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் போராட்டங்களே கதை. அந்தப் பெண்ணை எல்லாருமே தூப்புக்காரி என்றே அழைக்கிறார்கள். அந்தப் பெண்ணின் மகள் (பூவரசி), மரியாதையற்ற இத்தொழில் இருந்து வெளிவந்தாரா என்பதுதான் கதையின் உச்சம். நூல் முழுக்க நாகர்கோவில் வட்டார மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. படிக்க ஆரம்பித்த உடனேயே சட்டெனத் தடுமாற வைக்கும் வட்டார வழக்கு. பல சொற்கள் பலருக்கும் புரியாமல் போகும் வாய்ப்பு அதிகம். வட்டாரச் சொற்களுக்கான பொருளடைவு நாவல் முடிந்தபின்பு கொடுக்கப்பட்டுள்ளது. அது கொடுக்கப்பட்டிருப்பதே நாவல் முடிந்தபின்புதான் பலருக்கும் தெரிந்திருக்கும். அதை முதல் பக்கங்களிலேயே கொடுத்திருக்கலாம். 

மலர்வதியின் இரண்டாவது நாவல் இது. இன்னும் நாவல் வடிவம் மலர்வதிக்குக் கைக்கூடவில்லை என்பது தெரிகிறது. நாவல் என்பது வெறும் கதை சொல்லல் அல்ல. ஆவணப் பதிவு மட்டும் அல்ல.

இந்நாவலில், கதையோடு தொடர்ந்து இடையிடையே வரும் தத்துவங்கள் கதையோடு சம்பந்தப்படாமலோ அல்லது மிகச் சம்பிரதாயமாகவோ சொல்லப்படுகின்றன.  நாவலை மையமாக வைத்து வாசிகன் யோசிக்க வாய்ப்பளிக்காமல், அனைத்தையும் நாவலாசிரியரே சொல்லிவிடுவதால் அவை பெரும்பாலும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கதையும் பெரும்பாலும் யூகிக்கத்தக்கதாகவே இருக்கிறது. அதிலும் கதையின் உச்சத்தில் வரும் இறுதிப் பக்கங்கள் முழுக்க முழுக்க நாடகத்தனமாகவும், வலிந்து திணிக்கப்பட்ட முற்ப்போக்குத்தனம் கொண்டதாகவும் உள்ளன.

நாடார் பெண் ஒருவர் தலித் வாழ்க்கை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்ததுடன் தூப்புக்காரியாகிறார். இப்பின்னணியில் நாவலை வாசிக்கவேண்டி உள்ளதால், இந்நாவல் பெரும்பாலும் பொருளாதார அடுக்கோடு சம்பந்தட்ட ஒன்றாகவே தோற்றம் கொள்கிறது. அதோடு ஏன் ஒரு நாடார் பெண் மலம் அள்ளப் போனார் என்பது பற்றிய ஆழமான குறிப்புகள் இல்லை. என்னதான் வறுமை என்றாலும், தலித் அல்லாத ஒருவர் இவ்வேலைக்குச் செல்வாரா என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது. ஒரு மருத்துவமனையில் துப்புரவு வேலை என்பதை ஏற்கமுடிகிறது. ஆனால் நாவல் முழுக்க வரும் மலம் பற்றிய விவரிப்புகள், ஏன் அந்த மருத்துவமனையில் அப்படி உள்ளது என்ற ஐயங்களை ஏற்படுத்துவதோடு, இந்த வேலையை எப்படி ஒரு நாடார் பெண் ஏற்றுக்கொண்டார் என்றும் யோசிக்க வைக்கிறது.

தூப்புக்காரிக்கு வரும் கஷ்டங்கள் அனைத்துமே நாடகத்தன்மை கொண்டதாகவே அமைகின்றன. இடையிடையே அவருக்குக் கிடைக்கும் மனித உதவிகளும்கூட, அடுத்தடுத்து இயற்கையாகவே தகர்ந்துவிடுவது, நாவலில் சோகத்தை வலிந்து ஊட்டுவதாகத் தோற்றம் தருகின்றது. அதேசமயம், படித்து முன்னேறினால் இத்தொழில் இருந்து விடுபட்டு வாழ்வில் முன்னேறலாம் என்ற நம்பிக்கையைச் சொல்வதில் மலர்வதி பின்வாங்கவில்லை. இது நம்பிக்கை தரக்கூடியதுதான். 

தூப்புக்காரியாக வேலை செய்தாலும், தன் மகளுக்கு வரும் மாப்பிள்ளை நிச்சயம் சக்கிலியராகவோ வேற்று சாதி ஆணாகவோ இருக்கக்கூடாது என்று கனகம் எண்ணுவதும், அதையே படித்த மகள் பூவரசி எண்ணுவதும் அப்படியே நாவலில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கும் யதார்த்தம். வழக்கம்போல, மேல் சாதி ஆண் தன் மனத்தைத் திறந்து காட்டாதவனாகவும், சாக்கடை சுத்தம் செய்யும் சக்கிலியரோ (மாரி) பல துன்பங்களுக்குப் பின்பும் தூய்மையான அன்பைச் செலுத்துபவராகவும் வருகிறார். இதில் நமக்கு முக்கியமாகத் தோன்றுவது, பூவரசியின் எண்ணங்களே. 

கற்பு, ஒழுக்கம் போன்றவற்றுக்கு எந்த தனிப்பட்ட அர்த்தமும் இல்லை என்பதை இந்நாவலில் இரண்டு இடங்களில் பார்க்கமுடிகிறது. ஒன்று, சக்கிலியராக வரும் மாரியின் தொடர்புகள். இன்னொன்று, பூவரசி மனோ உடலுறவு. ஏன் திடீரென்று மாரி இறந்துபோகிறார், அதற்குப் பின்பு ஏன் நாவல் எவ்வித யதார்த்தமும் இல்லாமல் (அதற்கு முன்பும் பெரிய அளவில் யதார்த்தம் இருந்துவிடவில்லை என்பது வேறு விஷயம்) அலைபாய்ந்து போகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. நாவல் என்பதற்கு ஒரு தொடக்கம், ஒரு முற்போக்கு முடிவு, நடுவில் கதை என்பன போன்றவை தேவை என்ற கற்பிதங்கள் கலைந்துபோன இச்சூழலில் இந்நாவல் அதே பழைய பாதையில் பயணிக்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். இந்தக் கற்பிதங்களில் இருந்து விடுபட்டு, மொழி நடையில் கூடுதல் கவனம் செலுத்தி, ஒரு நல்ல எடிட்டர் மூலம் நாவல் நன்கு எடிட் செய்யப்படுமானால், அடுத்த நாவலில் மலர்வதி அதிகம் மிளிரக்கூடும்.

இதற்குமுன்பு கிறித்துவ மதம் தொடர்பான மூன்று கட்டுரைத் தொகுதிகள் எழுதியிருக்கும் மேரி புளோரா என்னும் மலர்வதிதான் இந்நாவலின் நூலாசிரியர். தோழர் பொன்னீலனும் மேலாண்மை பொன்னுசாமியும் இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இந்தப் பின்புலத்தில் ‘தூப்புக்காரி’ நாவலை வாசித்தால், இந்நூல் வேறொரு வகையில் ஆவணமாகும்.

தூப்புக்காரி, அனல் வெளியீடு, மலர்வதி, விலை ரூ 75, பக் 136.

ஆனலைனில் வாங்க இங்கே செல்லவும்.

Share