Tag Archive for தூங்காவனம்

Sleepless night – தமிழில் ஏன் எப்படி எதற்கு

இது சுரேஷ்கண்ணசுபகுணராஜன்கள் எழுதுவதுபோன்ற முக்கியமான திரைக்கட்டுரை அல்ல. எனவே ரத்தம் கொதிக்க காது மடல்கள் சிவக்க படிக்காமல் சாதா‘ரணமாக’ப் படித்துவிட்டு சிரித்துவிட்டு அப்புறம் யோசித்துக்கொள்ளவும். அதேபோல், ரஜினி படம் வருவதற்கு முன்பாக ‘இந்தப் படம் ஒழியணும், நாசமாப் போகணும்’ என்று நான்கைந்து பக்கத்துக்கு வசவிவிட்டு கடைசியாக ஒரு வரியில் அதன் காரணம் ‘வணிகப் படங்களில்கூட மோசமான படம் வெல்லக்கூடாது என்பதுதான்’ ரகக் கட்டுரையும் அல்ல. கமல்ஹாசனை எனக்கு பிடிக்குமா பிடிக்காதா என்றே எனக்கே இன்னும் சரியாகத் தெரியாத நிலையில் (இப்படித்தான் ஆரம்பிப்போம்), கமல்ஹாசன் உள்ளிட்ட யாரொருவரின் படமும் வணிக வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் ஒரு குப்பைப் படமாக இருந்தாலும் அதன் வணிக வெற்றியை ஒரு தொழிலின் வெற்றியாகவும் அத்தொழிலை நம்பியிருக்கும் கணிசமானவர்களின் பிழைப்பாகவும் நான் பார்க்கிறேன். அதேசமயம் ஒரு நல்ல படம் தோற்றுவிட்டால் பெரிய அளவில் அறச்சீற்றப்பொங்கலெல்லாம் எனக்குள் பொங்காவிட்டாலும் வருத்தம் ஏற்படுவது உண்டு. இத்தனை விளக்கமும் சொல்வதற்கான காரணம், இந்தப் படம் வெற்றி பெறக்கூடாது என்பது என் நோக்கமே அல்ல என்பதற்காகவும், ‘கமல் ரசிகர்களே, இத்துடன் நீங்கள் வெளியேறிவிடுங்கள்’ என்று சொல்வதற்காகவும் மட்டுமே.

கதை தெரியாமல் ‘தூங்காவனம்’ படத்தைப் பார்த்தால்தான் பிடிக்கும் என்று நினைப்பவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்கவேண்டாம். ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

ஸ்லீப்லெஸ் நைட் படம் ஒரே இரவில் நடக்கும் ஒரு படம். மிகச் சாதாரணமான கதை. திரைக்கதையும் ஆஹோ ஒஹோவெல்லாம் இல்லை. பல இடங்களில் கொட்டாவி. பார்வையாளர்களை சீட்டு நுனிக்குக் கொண்டுவரும் பரபரப்பும் இல்லை. சுமாரான படம்தான். கமல்ஹாசன் தமிழில் நடிக்கிறாரே என்பதற்காக மட்டுமே நான் இதைப் பார்த்தேன். இல்லையென்றால் நிச்சயம் பார்த்திருக்கவே மாட்டேன்.

மகனைக் கடத்திக்கொண்டு போகும் போதை மருந்து கேங்கிலிருந்து தன் மகனை தந்தை மீட்கும் கதை. இது போதை மருந்து கொடிகட்டிப் பறந்த கொலம்பியா போன்ற ஊர்களில் எடுக்கப்பட்டிருந்தால் அந்த மக்கள் உறைந்துபோய் பார்ப்பார்கள். தமிழில் எப்படிப் பார்ப்பார்கள்? ஏன் இதனைக் கமல் எடுத்தார்? தமிழ்த்தன்மையோ இந்தியத் தன்மையோ இல்லாத இப்படத்தை தமிழில் கமல்ஹாசன் எடுக்க என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று முழுக்க முழுக்க யூகத்தில் எழுதப்படுவதே இக்கட்டுரை. இக்கட்டுரையில் வரும் அத்தனையும் தவறு என்று படம் வரும்போது நிரூபிக்கப்படலாம். அல்லது அத்தனையும் சரி என்றும் அமைந்து தொலைக்கலாம். ‘ஹேராம்’ படம் வந்தபோது கமல்ஹாசன் சொன்னது, ‘காந்தியைக் கொன்றது கோட்ஸே என்று எல்லோருக்கும் தெரியும். அதை படத்தில் மாற்றமுடியாது. ஆனால் அதுவரை நடப்பதை வைத்து புனைவில் என்னவெல்லாமோ செய்யலாம்’ என்று. அதையேதான் இப்போது நான் சொல்கிறேன், ‘தமிழில் தூங்காவனம் வரும்வரை என்னவேண்டுமானாலும் செய்யலாம்.’ எனவே இது ஒரு புனைவு.

கமல்ஹாசன் இப்படத்தை எடுக்க முதல் காரணம் இப்படத்தில் இருக்கும் கமல்தன்மை என்பதே என் எண்ணம். வயதுக்கேற்றவாறு உத்தமவில்லனில் அப்பாவாக வந்தார். இதிலும் ஒரு வளர்ந்த பையனுக்கு அப்பா. எனவே அதிக விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் இந்த அப்பா-மகன் உறவில் காட்டப்படும் அன்பு குறித்து சொல்லவேண்டும். நம் ஊரில் அப்பா-மகன் உறவென்பது, அப்பா இறந்தபிறகு மகன் அவன் அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அல்லது அப்பாவும் மகனும் நல்ல நண்பர்களாக, ஆனால் அதை சொற்களில் வெளிப்படுத்தாதவர்களாக இருந்துவிடுகிறார்கள். இப்படி இல்லாமல் அப்பாவும் மகனும் விலகி இருப்பதும், அப்பாவின் அன்பைக் கண்டு மகன் நெகிழ்ந்து அப்பாவிடம் அப்படியே வெளிப்படையாகச் சொல்வதும் சமீபகாலமாக இறக்குமதி ஆகிக்கொண்டிருக்கிறது. உத்தமவில்லனில் இது எடுபட்டதற்குக் காரணம், அதில் ஹீரோ மரணத்தை நோக்கிச் செல்கிறார் என்பதுதான். மற்றபடி அப்பா மகன் அன்பென்பது வெளியில் சொல்லப்படாத உணர்வுகளால் நிரம்பியது என்பதுதான் நம் இந்தியத்தன்மை என்று நான் நினைக்கிறேன். அப்படி இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் அப்பா மகன் உறவை நாம் நகலெடுத்தால் அது அந்நியத்தன்மையுடனேயே வந்து நிற்கும். ‘தூங்காவனம்’ இதை எப்படி கையாளப்போகிறது என்று தெரியவில்லை.

ஸ்லீப்லெஸ் நைட்டின் பெரிய ப்ளஸ் அந்த ஹீரோ சாதாரண ஆள் என்பது (குறைந்தபட்சம் படத்தைப் பார்க்கும் தமிழர்களுக்கு). நமக்கோ தமிழில் கமல். இது தரப்போகும் அழுத்தத்தை கமல் படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள் உடைக்கவேண்டும். பாபநாசத்தைப் போல. பாபநாசத்துக்கே சொக்கலிங்கத்தைக் காணாமல் கமலைக் கண்டு பொங்கி எழுந்த தமிழர்கள் உள்ள ஊர் இது!

ஸ்லீப்லெஸ் நைட்டில் ஹீரோ வில்லனிடம் போதைமருந்து என்று சொல்லி மாவைக்கொடுத்துவிட்டு வெளியேறும் காட்சியில் வில்லன் சொல்கிறான், ‘இனிமே உன் முகத்தை நான் பார்க்கக்கூடாது’ என்று. ஹீரோவும் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் வெளியேறுகிறான். தமிழில் ட்ரைலரில் பார்த்தேன். கமல் அப்படி வெளியேற முடியாதல்லவா? எனவே வில்லன் பிரகாஷ்ராஜிடம் ‘நானும் அதையே சொல்லிக்கிறேன்’ என்று என்னவோ சொல்கிறார். இப்படித்தான் இந்திய தமிழ்த்தன்மையைக் கொண்டுவரப் பாடுபடுகிறார்கள். (பாடுபடுத்துகிறார்கள் என்று எழுதிவிடவில்லையே!)

கமலின் க்ளிஷேவாக நான் பார்ப்பது, தொடர்ந்து ஒன்றை படம் முழுக்க செய்துகொண்டிருப்பது. இன்னொன்று, கையில் அடிபட்டிருக்கும்போது கோபத்தில் அதை மறந்து தரையில் அடித்துவிட்டு கையை வலியில் உதறிக்கொள்வது. இதுபோன்ற காட்சிகளை யார் நடித்தாலும் எனக்குப் பிடிக்காது. அதுவும் கமல் நடித்தால் தாங்கவே முடியாது. ஆனால் இந்தப் படம் கமலுக்கு சரியான தீனி போடுகிறது. ஆம், இந்த ஸ்லீப்லெஸ் நைட்டின் ஹீரோ முதல் காட்சியிலேயே குண்டடிபட்டு காயத்தை மறைத்தபடி கோட் அணிந்துகொண்டு வலியைத் தாங்கிக்கொண்டு ஓடுகிறான். அவ்வப்போது வலிக்கிறது. கமல் இதைச் செய்யப்போகிறார் என்பதே எனக்கு பீதியைத் தருகிறது. துர்ப்பிணி அதிலும் கர்ப்பிணி என்பார்களே, அப்படி.

அதிலும் ஒரு காட்சியில் அந்த காயத்துக்கு மருந்து அடித்துக்கொண்டு நம் பிரெஞ்சு ஹீரோ அலறுகிறார். அப்போது சப்தங்கள் அனைத்தும் மறைகின்றன. இசை இல்லை. ஹீரோ அலறுவதும் கேட்பதில்லை. அத்தனை சத்தங்களும் மறைய, ஹீரோ கத்துவதை பார்க்க மட்டும் செய்கிறோம். தமிழில் கமல் இதை என்ன செய்திருப்பார் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பின்னணிக் காட்சியில் ஜிப்ரான் அமைதியாக இருந்துவிட்டால் பெருமாளுக்கு மொட்டை போடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கமலும் ‘நடித்து’ ஜிப்ரானும் கதறிவிட்டால் என்ன செய்வது? இது நடக்கும் என்று சொல்லவில்லை. நடக்காது என்றும் சொல்லமுடியவில்லை. நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே சொல்கிறேன்.

கமலின் புகழ்பாடுபவர்கள் ஒன்றை அடிக்கடி சொல்வார்கள். காட்சியின் பிரசன்ஸைக் கூட்டுவது என்று என்னவோ சொல்வார்கள். அதாவது ஒரு சாப்பாட்டுக் கடைக் காட்சி என்றால் அங்கிருக்கும் டப்ளர் டபரா என எல்லாவற்றையும் பயன்படுத்துவதாம். இப்படத்தில் பிரெஞ்சு ஹீரோ ஒரு உணவகத்தையே ஒட்டுமொத்தமாகக் கபளீகரம் செய்கிறான். இந்த பிரெஞ்சு ஹீரோ சாதாரண ஹீரோ. நம் கமலோ கமல்சார். என்னவெல்லாம் செய்வார் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்னொரு காட்சி பிரெஞ்சு திரைப்படத்தில் வருகிறது. அந்தக் காட்சியை பிரெஞ்சு திரைப்படத்தில் எழுதியவர்கூட கமல்தானோ என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஹோட்டலில் மாமிசம் வெட்டும் இடத்தில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் ஒரு போலிஸ் சொல்கிறார், ‘சீக்கிரம் காப்பாத்துங்க. மாமிச நாத்தம். நான் வெஜிட்டேரியன்’ என்று. தமிழில் இதையே ஒரு பிராமணப் பெண் கேரக்டராக்கி யாரைவாது பாப்பாத்தி என்றுகூடச் சொல்ல வைத்து, ‘சீக்கிரம் காப்பாத்துங்கோ, நார்றது, சைவமாக்கும்’ என்று சொல்ல வைக்கலாம். இப்படி ஒரு காட்சி லட்டுபோல பிரெஞ்சுத் திரைப்படத்தில் வந்ததே ஆச்சரியதான்.

கமல் என்றால் முத்தம் பற்றிப் பேசாமல் எப்படி இருக்கமுடியும்? தமிழர்களுக்கு முத்தம் கொடுக்க கற்றுத் தந்ததே கமல்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! இந்தப் படத்தில் கன்னாபின்னாவென்று முத்தக்காட்சிகள். தமிழில் இத்தனை முத்தக்காட்சிகள் வருமா என்றெல்லாம் தெரியவில்லை. பாபநாசத்துக்கே ‘மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறது, வன்முறையை நியாயப்படுத்துகிறது’ என்றெல்லாம் சொல்லி வரிவிலக்கு மறுக்கப்பட்டது. இத்தனை முத்தக் காட்சிகள் இருந்தால் நிச்சயம் வரிவிலக்கை மறுத்துவிடுவார்கள். வரிவிலக்கு இல்லையென்றால் ஒரு படத்தின் லாபம் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே கமல் எப்படி இதைக் கையாள்கிறார் என்று தெரியவில்லை. இல்லையென்றால், ஹீரோ தன் முகத்தைப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து ஒரு பெண்ணை முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டிய ‘அவசியக்காட்சி’யெல்லாம் ‘காதல் இளவரசனுக்கு’ அல்வா மாதிரி அல்லவா. அதுபோக இப்படம் நடப்பது நைட் கிளப்பில். அங்கங்கே யார் யாரோ கட்டித் தழுவிக்கொண்டும் முத்தமிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். குணா படத்தில் ‘ஹொய்லாலோ’ பாட்டை நினைத்துக்கொள்ளவும். தமிழிலும் அடித்து தூள் பண்ணவேண்டியதுதான். வரிவிலக்குத்தான் பாடாய்ப் படுத்துகிறது. பிரெஞ்சுப் படத்தில் வில்லனுக்கும் ஒரு முத்தக்காட்சி உண்டு. தமிழில் அப்புரட்சி பிரகாஷ்ராஜால் சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. சாத்தியப்படாது என்றே தோன்றுகிறது.

ஒரு காட்சியில் சாதாரண ஒருவன் ஹீரோவை அடிக்கிறான். அப்போது அமைதியாகச் சென்றுவிடும் ஹீரோ, பின்னால் நேரம் கிடைக்கும்போது அவனை மீண்டும் அறைந்து தான் ஹீரோ என்று நிரூபிக்கிறார். தமிழில் இதைக் கைவைக்கத் தேவையிருக்காது. அப்படியே எடுக்கவேண்டியதுதான்.

போதை மருந்தை ஒரு கழிப்பறைக்குள் ஒளித்துவைக்கிறார்கள். அதுவும் பெண்கள் கழிப்பறை. எனவே ஆண்கள் பெண்கள்கழிப்பறைக்குள் வருவதும் போவதுமான காட்சிகள் உண்டு. அதிலும் இரண்டு மூன்று ஆண்கள் ஒரே கழிப்பறைக்குள்ளே இருப்பதும், வெளியிலிருந்து பெண்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பதும் கே என்று கிண்டல் அடிப்பதும் அதற்கொப்ப கழிப்பறைக்குள்ளே இருந்து சத்தம் வருவதும் தமிழில் என்னவாகிறது என்று பார்க்க ஆர்வமாக உள்ளேன். தமிழ்த்திரையை உலகத்திரைக்கு உயர்த்த நல்ல ஒரு சந்தர்ப்பம் வீணடிக்கப்படுமா பயன்படுத்தப்படுமா?

மதம் சம்பந்தப்பட்ட நேரடிக் காட்சியை இத்திரைப்படத்தில் பார்த்ததுபோல் நினைவில்லை. இப்படம் ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. தமிழில் இரண்டரை மணி நேரம் ஓட்டலாம். நான்கைந்து பாடல்கள் போட்டு, மீதி நேரத்தில் மதத்தைக் கிண்டல் செய்தால் சரியாகத்தான் வரும். ஆனால் கமல் இப்படித்தான் செய்வார் என்று நம்மால் சொல்லமுடியாது. பாபநாசத்தில் கடவுளைக் கையெடுத்தே கும்பிட்டுவிட்டார். படமும் ஓடியிருக்கிறது. அந்த நன்றியை மறந்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.

கடைசியாக ஒன்று. கமல்சார்ஆதரவுசுபகுணராஜசுரேஷ்கண்ணன்கள் இப்படத்தின் ஜானரில் இருந்து துவங்குவார்கள். தமிழுக்கு புதுசு என்று தொடர்வார்கள் கமல்சார்ரசிகர்கள். அதிலும் சிலர் மிக நிச்சயம் சொல்லப்போவது ‘பத்து வருடம் கழித்து வந்திருக்கவேண்டிய படம்’ என்று. எத்தனை பார்த்திருக்கிறோம்.

பின்குறிப்புகள்:

* இந்தப் படம் வணிக ரீதியாக வெல்ல கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள். 🙂

* டீஸரில் ‘நான் சொன்னா செஞ்சிருவேன்’ என்றொரு வசனத்தைக் கமல் சொல்லக் கேட்டேன். மிக நல்ல பன்ச் இது. கமல் சொல்லுபோது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் முழுமையான ரீச்சுக்கு இதை ரஜினிக்கே வைத்திருக்கவேண்டும். 🙂 ரஜினியில்தான் முடிப்போம்.

Share