Tag Archive for தி ஹிந்து

பட்டம் – தினமலர்

வாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்சிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.

http://m.dinamalar.com/detail.php?id=1626970

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் இப்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.

பட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு யாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…!

இன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழுமூச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.

* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.

* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.

* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.

* ஒரு செய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.

* தொடரும்… கூடவே கூடாது.

* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.

* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.

* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.

* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.

* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.

* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.

* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது! மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.

* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே அந்த இதழைப் படிக்கத் துவங்கும்!

பள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.

வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.

இது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.

Share

மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி கட்டுரையை முன்வைத்து

இன்றைய (15-அக்டோபர்-2013) தமிழ் தி ஹிந்துவில் வித்யா சுப்ரமணியம் எழுதிய ஆர் எஸ் எஸ் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோசமான கட்டுரை. படேலிடம் ஆர் எஸ் எஸ் வாக்குக் கொடுத்ததாம். என்னவென்று? அரசியலில் பங்கேற்காது என்று. அதனால்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தடை நீக்கப்பட்டதாம். அப்படி இருக்கும்போது இப்போது எப்படி அரசியலில் பங்கேற்கலாம் என்று கேட்கிறது கட்டுரை. இப்போது ஆர் எஸ் எஸ் என்ன பங்கெடுத்தது? மோதியின் பிரதம வேட்பாளர் அறிவிப்பில் ஆர் எஸ் எஸ்ஸின் பங்கு இருக்கிறதாம்.

* இத்தனை நாளாக ஆர் எஸ் எஸ் பிஜேபியின் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்று வித்யா சுப்பிரமணியம் நம்புவது வேடிக்கை. இப்போதைப் போலவே எப்போதும், நேரடியாகவா மறைமுகமாகவா என்று சொல்லமுடியாத வண்ணம், ஆர் எஸ் எஸ் பாஜகவில் தன் அதிகாரத்தைச் செலுத்தியே வந்திருக்கிறது.

* ஆர் எஸ் எஸ் தன் அதிகாரத்தை பாஜகவிலிருந்து விலக்குமானால் நான் பாஜகவை மற்றுமொரு சாதாரணக் கட்சியாகவே பார்ப்பேன். அத்தனையையும் மீறி பாஜவை ஓரளவு நான் நம்பக் காரணம் இந்த ஆர் எஸ் எஸ் அதிகாரமே. பாஜகவில் இருக்கும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களே கட்சியின் தூண்கள். 

* படேலிடம் வாக்குக் கொடுத்துவிட்டார் என்று பலமுறை வித்யா சுப்ரமணியம் கிட்டத்தட்ட கதறியிருக்கிறார். படேல் மேல் அத்தனை மதிப்பா? சரி ஒழியட்டும். அன்று வாக்குக் கொடுத்துவிட்டால், அதன் பின்பு ஆர் எஸ் எஸ் தன் நிலையிலிருந்து மாறவே கூடாதா என்ன? 

* படேலிடம் வாக்குக் கொடுத்ததைச் சொல்லும் வித்யா சுப்ரமணியம், ஆர் எஸ் எஸ் தன் தொண்டர்களை கட்சிகளில் இணைந்து பணியாற்ற அனுமதித்தது என்றும் சொல்கிறார். அப்புறம் என்ன? கட்சிகளில் சேர்ந்து பணியாற்ற அனுமதிப்பது என்பது கைதட்டிக்கொண்டிருக்கவா? அதிகாரத்தைச் செலுத்தத்தானே!

* கோல்வல்கர் அதிகாரத்தின் மேல் வெறுப்பு உள்ளவராக இருந்தார். எனவே அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அப்போதே அரசியலில் நேரடியாகப் பங்குபெறவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத்தான் செய்தன. தேவரஸ் இதனை முக்கியமான விஷயமாகவே பார்த்தார். எனவே இது புதிய கண்டுபிடிப்பல்ல.

* கோல்வல்கர் மன்றாடினார் என்றொரு எள்ளல். உண்மையில் அவர் மன்றாட மட்டும் செய்யவில்லை. மிகக் கடினமான காலகட்டத்தில் ஆர் எஸ் எஸ் என்ற இந்தியாவின் உன்னத அமைப்பை வழி நடத்தும் அவருக்கு தன் காரியம் ஒவ்வொன்றும் எத்தனை முக்கியமானது என்று தெரிந்திருந்தது. எனவே அரசுக்கு உகந்தமொழியில் சொல்லிப் பார்த்தார். பின்பு வேறு வழியில்லை என்றால் ஆர் எஸ் எஸ் அரசியலில் நேரடியாகப் பங்குபெற வேண்டியிருக்கும் என்ற முடிவை நோக்கி ஆர் எஸ் எஸ் செல்வதைப் பார்த்து பயந்த நேரு அரசு தடையை நீக்கியது. ஏன் இந்தப் பயம்? அன்றைய காங்கிரஸில் ஹிந்துமதத்தைப் போற்றிய, தேசியத்தை உயிராக மதித்த பலர் இருந்தனர். எனவே ஆர் எஸ் எஸ் நேரடியாக அரசியல் களத்துக்கு வந்தால் காங்கிரஸை உட்கொண்டுவிடும் என்று நேருவுக்குப் புரிந்திருந்தது. இதைவைத்து விளையாடித்தான் ஆர் எஸ் எஸ் தடையை நேருவிய அரசு நீக்கியது. எனவே மன்றாடுதல் என்னும் வார்த்தை எள்ளலோடு வரலாறு முடிந்துவிடவில்லை. தன் கட்சியைக் காப்பாற்றவே நேருவிய அரசு தடையை நீக்கியது. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸுக்குப் பங்கிருக்க வாய்ப்பில்லை என்று படேலும் நேருவிய அரசும் உறுதியாக நம்பியபின்பும் ஏன் ஆர் எஸ் எஸைத் தடை செய்யவேண்டும்? இந்த உறுதிமொழியைப் பெறத்தான்.

இத்தனை உண்மைகளைப் புதைத்துவிட்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இதேபோல் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வால் பிடித்த கம்யூனிஸ்ட்டுகளின் கணக்குகளுக்குப் பணம் வந்த கதையையும் தமிழ் தி ஹிந்து எழுதவேண்டும்.

இதைப் பற்றிய ஃபேஸ்புக் குறிப்பு இங்கே.

Share