Tag Archive for சென்னை தினம்

சென்னை தினம் – 2017

டிசம்பர் 2004. இனி சென்னையில்தான் வேலை என்ற நிலையில் சென்னையில் வந்து இறங்கினேன். பதிமூன்று ஆண்டுகாலம் ஓடிவிட்டது. தொடக்கத்தில் சென்னை தந்த கலக்கம், எரிச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. திருநெல்வேலி சொர்க்கம் என்றும் சென்னை குப்பை என்ற எண்ணமும் மனம் முழுக்க நிறைந்திருந்தது. ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும் எப்போது இந்த சென்னையை விட்டு ஓடுவோம் என்ற எண்ணம் மேலோங்கிய காலம். இரவு ஏழு மணிக்கு மேல் சென்னைக்குக் கொம்பும் ரத்தக்காட்டேறியின் பற்களும் முளைத்துவிடும் என்று நம்பிய காலம். சென்னையில் கண்ணில் பட்ட ஒவ்வொன்றும் எரிச்சலை மட்டுமே கொண்டு வந்தது. முறையான பேருந்து இல்லை. மரியாதை இல்லை. ஊர் முழுக்க குப்பை. நீர்ப் பிரச்சினை. இப்படியே எண்ணங்கள் ஓடும்.

மெல்ல மெல்ல சென்னை என்னை உள்வாங்கிக் கொண்டது. இப்போதும் திருநெல்வேலிக்குச் செல்வது சொர்க்கம் போன்ற ஒரு நிகழ்வுதான் என்றாலும், சென்னையை வெறுத்துச் செல்லும் காலங்கள் ஓடிப்போய்விட்டன. திருநெல்வேலியில் ஒருவாரம் தங்கிவிட்டு வரலாம், இனி அங்கேதான் வாழ்க்கை என்றால் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. சென்னை தன் கடல் போன்ற வளத்தைத் திறந்துகாட்டிவிட்டால் அக்கடலின் வசீகரத்தில் இருந்து யாராலும் வெளியேறவே முடியாது. சென்னையின் நிறம் நீலம் என்றால் நீலம் தீண்டிய உடல் இழக்க விரும்பாத போதையை சென்னை உங்களுக்குப் புகட்டும். எனக்குப் புகட்டி இருக்கிறது.

தொடக்கத்தில் கண்ணில் பட்ட எரிச்சல்களெல்லாம், சென்னையின் குணங்கள் என்றாகிப் போகின. சென்னையின் பிரம்மாண்டத்துக்கு இணையான ஊர் தமிழ்நாட்டில் இல்லை என்று அடிக்கடித் தோன்றும். சென்னைக்குள் பத்து திருநெல்வேலிகளைப் பார்க்கலாம். ஐந்து திருச்சிகளைப் பார்க்கலாம். அப்புறம் என்ன?

கிழக்கு பதிப்பகம் சென்னை தினத்தை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில், சென்னை குறித்த இதே எண்ணத்தைப் பதிவு செய்து வந்த கதைகள் ஏராளம். பொதுவாக சென்னை ஒரு பலாப்பழம் போலவே எல்லாராலும் பார்க்கப்படுகிறது என்று தோன்றுகிறது. தொடக்கத்தில் முள், உள்ளே சுளை. சென்னையின் வெள்ளம் தந்த மிரட்டல் சென்னையைப் பற்றிய பீதிக்கதைகளுக்கு வேறொரு நிறம் கொடுத்தது. ஆனால் அதே வேகத்தில் சென்னை மீண்டெழுந்தபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிசயித்து நின்றது. சென்னையைப் பற்றித் திரைப்படங்கள் சொல்லிய கதைகள், சென்னையைத் தாண்டிய தமிழ்நாட்டில் சென்னையைப் பற்றிய ஒரு கருத்தை முற்றான ஒரே கருத்தாக எல்லார் மனத்திலும் பதிய வைத்திருக்கின்றன. அந்த சென்னையும் உண்மைதான் என்றாலும் அது மட்டுமே சென்னை இல்லை. சென்னையிலும் அன்பு உண்டு. நம்புங்கள்.

சென்னையில் யாருக்காவது கஷ்டம் என்றால் ஒருத்தனும் திரும்பிப் பார்க்கமாட்டான் என்பதெல்லாம் பொய். எப்படி திருநெல்வேலியில் சில நேரம் பார்ப்பார்களோ சில நேரம் பார்க்கமாட்டார்களோ அப்படித்தான் சென்னையிலும். சென்னைக்கென்று பிரத்யேகமான குணங்கள் இருக்கலாம். ஆனால் அவை தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, திருகிய குணங்கள் அல்ல. வெட்டியும் ஒட்டியும் உள்ளவை மட்டுமே. எல்லா இடங்களையும் போலத்தான் சென்னையும்.

சென்னையைத் தாண்டிய தமிழ்நாடு சென்னையைப் பார்க்கும் பார்வை தரும் கலவரத்துடன் சென்னைக்குள் வருபவர்கள் நீண்ட கால வாழ்வில் பெரிய வித்தியாசம் தெரியாத நிலையில் சென்னைக்குள் அமிழ்வார்கள். கிராமப்புறங்களில் இருக்கும் அடிப்படைவாதப் பிரச்சினைகள்கூட சென்னையில் இருப்பதில்லை என்ற திடீர் ஞானோதயமெல்லாம் தட்டுப்படத் தொடங்கும். அப்போது நீங்கள் சென்னைடா என்ற ஹேஷ் டேக் போட்டுக்கொண்டிருப்பீர்கள்.

#சென்னைடா. #சென்னைதினம். #ஐலவ்சென்னை

Share