சுமாராக இருக்கும் என்று நினைத்துத்தான் இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். 9 நாள்களில் எடுக்கப்பட்ட படம் என்றும், 90 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் என்று கூகிள் சொல்லவும், இப்படி விளம்பரத்துக்காகவும், சாதனைக்காகவும் எடுக்கப்பட்ட படங்களின் லட்சணங்கள் எப்படி இருக்கும் என்ற ஓர் அனுபவம் தந்த எச்சரிக்கையே இப்படி ஒரு முன்முடிவு வந்ததற்குக் காரணம்.
அதிலும் சுரேஷ் கோபியும் பார்த்திபனும் நடிக்கிறார்கள் என்றதும் என் அச்சம் பலமடங்கு கூடிவிட்டது. போடா புல்லே என்று சொல்லாமல் சுரேஷ் கோபி நடித்த படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும் என்றாலும், அவர் போடா புல்லே சொல்லாத படங்கள் வெகு குறைவு என்பதே என் அச்சத்துக்குக் காரணம். பார்த்திபன் என்ற பெயரே போதும் பயந்து நடுங்க.
இத்தனையையும் மீறியே இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். என்ன அறுவையாக இருந்தாலும், வேற்று மொழி என்பதால் மலையாளப் படத்தைப் பார்த்துவிட முடிகிறது. எனவே இதனையும் பார்த்துவிடலாம் என்று பார்க்கத் தொடங்கினேன்.
ஆனால் தொடங்கிய பத்து நிமிடங்களில் இந்தப் படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. சுரேஷ் கோபியின் அலட்டாத நடிப்பும், (சுகர் வந்து முகம் இறுகிப் போன) பார்த்திபனின் இறுக்கமான நடிப்பும் படத்தைப் பிடிக்கச் செய்துவிட்டது. ஒரே அறைக்குள் நடக்கும் கதை. மேஜர் மார்ஷல் என்ற விசாரணையைப் பற்றிய படம். பார்த்திபன் தன்னைவிட மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்றுவிடுகிறார். இருவரைச் சுடுகிறார், ஆனால் ஒருவர்தான் மரணமடைகிறார். இன்னொருவர் தப்பித்துவிடுகிறார். தாந்தான் சுட்டதாக ஒப்புக்கொள்ளும் பார்த்திபன் மீதான விசாரணையில், டிஃபெண்ஸ் தரப்பில் ஆஜராகி, அவர் ஏன் சுட்டார் என்பதற்கான காரணங்களைக் கண்டடைகிறார் சுரேஷ் கோபி.
எதிர்பாராத ஒரு காரணம் சொல்லப்படும் தருணத்தில் அந்தப் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. ஏதேனும் செண்டிமெண்ட்டாக ஒரு காரணம் இருக்குமென்று நினைத்தேன். பாதி படம் கடக்கையில், வேகமாக பார்த்திபன் ஓடி, தனனிவிட உயர்ந்த ரேங்க்கில் இருக்கும் அதிகாரி தோற்கக் காரணம் ஆவதும், அதனால் எரிச்சலடையும் உயரதிகாரி பார்த்திபனை ரேக்குவதும், அந்தக் கோபத்தில்தான் பார்த்திபன் கொன்றிருப்பார் என்றும் நினைத்தேன். அல்லது இதனை ஒட்டிய காரணங்கள் பின்பு விரிவாகும் என்று நினைத்தேன். விரிவாகியது. அனைத்துக்கும் காரணம், பார்த்திபன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்பது.
தன்னைவிட நன்றாக ஓடும் பார்த்திபன், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவன் என்பதைவிட தன்னைவிடத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதே உயரதிகாரியை வெறுப்படைய வைக்கிறது. அவர் பார்த்திபனைத் தொடர்ந்து ஏசுகிறார். தோட்டி என்றும், பறையன் என்றும், பறையனிண்டே மோன் என்றும் ஏசுகிறார். இவரோடு சேர்ந்துகொண்டு இன்னொரு உயர்சாதி அதிகாரியும் பார்த்திபனை ஏசுகிறார். ஒரு கட்டத்தில் பார்த்திபனின் தாயைத் தகாத வார்த்தை கொண்டு ஏசுகிறார்கள். கோபமடையும் பார்த்திபன் துப்பாக்கியால் சுடுகிறார். ஓர் அதிகாரி இறந்துபோகிறார். இன்னொரு அதிகாரி தோள்பட்டையில் குண்டு பாய்ந்து, உயிர் பிழைத்துக்கொள்கிறார்.
இவை அனைத்தும் ஒரே அறையில் சுரேஷ் கோபி செய்யும் விசாரணைகளில் வெளிப்படுகின்றன. ஒரு காட்சிகூட நேரடிக் காட்சி கிடையாது. எல்லாமே விசாரணைகள் மட்டுமே. உயர்சாதி உயரதிகாரி மமதையோடு பேசுகிறார். தரவாடித்துவம் (பாரம்பரியம்) இல்லாதவனெல்லாம் ராணுவத்துக்கு வரப்போய்த்தான் ராணுவ மரியாதையே போய்விட்டது என்கிறார். தனது பாரம்பரியம் எங்கே, இவன் எங்கே என்று பார்த்திபனை தூஷிக்கிறார். இவரது தரவாடித்துவத்தைப் பல கேள்விகளில் சிதறடிக்கிறார் சுரேஷ் கோபி. இக்காட்சி பத்து நிமிடங்கள் வரலாம். திரையில் இப்படி ஒரு காட்சி வருவது அதிசயம் என்றே கொள்ளவேண்டும். ஜாதியைச் சொல்லாமல், மேம்போக்காகப் பேசும் படங்களே நமக்குப் பழக்கமானவை. இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இல்லாமல், உயர்சாதித் திமிர் மிக அழகாக அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபூர்வம்.
தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான பார்த்திபனே, உயர்சாதி அதிகாரிக்காக மரணமடையும் ஒரு ராணுவக்காரரின் மகளைத் தத்தெடுத்து வளர்ப்பது. ஆனால் தனக்காக உயிரிழந்த ராணுவக்காரருக்கு உயர்சாதி அதிகாரி எதுவுமே செய்வதில்லை. இதுதானா தரவாடித்துவம் என்று கேட்கிறார் சுரேஷ் கோபி. உயர்சாதி இதற்குச் சொல்லும் பதில் – அது அவன் கடமை.
இன்னொரு சுவாரஸ்யம், இப்படம் தமிழில் வந்துவிட்டது என்கிற கூகிள். உள்விலாசம் என்ற பெயரில். ஏற்கெனவே மேல்விலாசம் என்ற படம் தமிழில் உள்விலாசம் என்ற பெயரில் வரும் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் வந்ததாகத் தெரியவில்லை. வந்திருந்தால், இந்த பறையன், தோட்டி, உயர்சாதி வசனங்கள் தமிழில் என்னவாகின என்றறிய ஆவலாக உள்ளது. தமிழில் இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு கொடுங்கனவு போலத்தான் இருக்கும். ஆனாலும் யாரேனும் தமிழில் பார்த்தால் அதைப் பற்றிச் சொல்லுங்கள்.
உணர்ச்சிமயமான நாடகத்தனமான இறுதிக்கட்ட காட்சியோடு படம் முடிவடைகிறது. சுட்டது தவறுதான் என்று பார்த்திபனுக்கு மரண தண்டனையை மார்ஷல் விதிக்கிறது. நேர்மையான அதிகாரியான வழக்கை நடத்தும் அதிகாரி தனது தீர்ப்பை பார்த்திபனிடம் சொல்லிவிட்டு, உண்மையை நோக்கி வணக்கம் சொல்வதாகச் சொல்லி சல்யூட் அடிக்கிறார். இதற்கிடையில் உயர்சாதி அதிகாரிக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது. யதார்த்தம்.
படத்தின் குறைகள் என்ன என்று பார்த்தால், இப்படத்தைத் தமிழிலும் வெளிடவேண்டும் என்பதற்காக, சரியாக மலையாளம் பேசத் தெரியாத, தமிழ்போல் மலையாளம் பேசும் நடிகர்களான பார்த்திபனையும், தலைவாசல் விஜய்யையும் நடிக்க வைத்தது. மலையாளத்தைக் கடித்துக் குதறுகிறார்கள். மற்ற படங்களில் மற்ற மலையாள நடிகர்கள் பேசும் தமிழைக் காட்டிலும் இது பேதம் என்பது உண்மையே. ஆனாலும் இவர்கள் தமிழ் பேசுவது போன்றே உள்ளது. ஒரே அறை தரும் அலுப்பு. ஆனாலும் இந்த அலுப்பை இயன்றவரைப் போக்கும் அளவுக்கு வேகமான திரைக்கதை உண்டு என்றே சொல்லவேண்டும். படத்தின் ப்ளஸ், சுரேஷ் கோபியின் சுத்தமான வசனம் பேசும் முறை. படத்தின் பலமே அதுதான் என்று தெரிந்துகொண்டு தெளிவான மலையாளத்தில் அழகாகப் பேசுகிறார். பொதுவாகவே இவர் இப்படித்தான் பேசுவார் என்றாலும், இந்தப் படத்துக்கு இது அப்படியே பொருந்திப் போகிறது. பாடல்களோ, அசட்டு காமெடிகளோ எதுவுமே இல்லை. ஆகச்சிறந்த படம் என்றோ மாற்றுத் திரைப்படம் என்றோ கூற முடியாது. ஆனால் நல்ல படம். நிச்சயம் பார்க்கலாம். ராணுவத்துக்குள்ளே நடக்கும் தகிடுதத்ங்களைச் சொல்லும் படம் என்பதால் முக்கியமான படமும் கூட.