Tag Archive for சிம்புத்தேவன்

புலி என்னும் கிட்டத்தட்ட அம்புலிமாமா

புலியும் தமிழ்நாட்டு சிறுவர் திரைப்படங்களும் – ‘மாஸ்’ திரைப்படம் பார்த்தபோது இதுபோன்ற கட்டுரை (!) ஒன்றை எழுத நினைத்தேன். ‘புலி’ திரைப்படம் பார்த்ததும்தான் எழுத முடிந்தது. ஒன்றோடு ஒன்று மிக லேசாகத் தொடர்புடைய எண்ணங்களை (கொஞ்சம் தொடர்பற்ற எண்ணங்களையும்கூட) ஒன்று கோர்ப்பதே நோக்கம்.

Puli_vijay

முதலில் ‘புலி’ திரைப்படம் பற்றிச் சொல்லிவிடுவோம். முதல் முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்கமுடியவில்லை. சகிக்கமுடியாத திரைக்கதை, கொஞ்சம் கூட ஒட்டாத விஜய்யின் நடிப்பு. பின்பு ஒரு கட்டத்தில் எப்படியோ ‘கதை’ நம்மைத் தொற்றிக்கொள்கிறது. இதிலும் எந்தப் புதுமைகளும் இல்லை. ஏழு கடல் தாண்டி ஏழு மலைதாண்டிய நம் மரபில் வந்த சிறுவர் கதைகளின் இன்னொரு வடிவம். எத்தனையோ முறை அரைக்கப்பட்டுவிட்ட அதே விடுகதை வடிவங்கள். இவையெல்லாம் நிச்சயம் ஒரு மாஸ் ஹீரோவின் திரைப்படம் ஆகமுடியாது. இந்த மாஸ் ஹீரோ என்ற பதத்தை எழுதும்போதே கொஞ்சம் எரிச்சலாகத்தான் வருகிறது. ஆனால் அதைச் சொல்லித்தானே ஆகவேண்டும். அதிலும் சிம்புதேவனின் திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். 23ம் புலிகேசியே கொஞ்சம் சுமாரான திரைப்படம்தான். பல்லாண்டுகளாக அப்படி ஒரு திரைப்படம் வராமல் போனதாலும், வடிவேலு என்றொரு சரியான நடிகர் அந்தப் படத்தில் அமைந்ததாலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் பார்க்கும்போது தோன்றிய உணர்வு, தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை ஒன்றாக்கிய ஒரு படம் என்பதே. அந்த அபத்தத்தை மட்டும் ‘புலி’ எப்படியோ தாண்டி, முழுநீளத் திரைப்படம் என்று இதைப் பார்க்கமுடிகிறது.

இந்தப் படத்தைக் கெடுத்ததில் முக்கியப் பங்கு தம்பி ராமையாவுக்கே. அவர் வரும் காமெடிக் காட்சிகள் நாலாந்தரக் காட்சிகள். சிம்புதேவன் செய்த மிகப்பெரிய தவறு, தொடக்கக் காட்சிகளில் தேவையின்றி வைத்த தம்பி ராமையாவின் காட்சிகளும் விஜய்-ஸ்ருதிஹாசன் காதல் காட்சிகளும். உண்மையில் நான் என் மகனுடன் சென்றிருக்காவிட்டால் இக்காட்சிகளிலேயே எழுந்து வெளியே வந்திருப்பேன்.

அதன் பின்னர் ஓர் இந்திய சிறுவர் திரைப்படத்துக்கான அத்தனை காட்சிகளையும் இப்படத்தில் பார்ப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எதுவும் புதுமையில்லை என்றாலும் இப்படியெல்லாம் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. நாற்பது வருடங்கள்கூட இருக்கலாமோ? இருக்கலாம்.

இது போன்ற சிறுவர் திரைப்படங்களுக்குத் தேவையானது கொஞ்சம்கூட லாஜிக் பார்க்காத கற்பனை. அதை செயல்படுத்த ஒரு சூப்பர் ஹீரோ. சிறுவர்களைக் கட்டிப்போடும் அரங்க அமைப்புகள், ஒளிப்பதிவு, இசை. இத்தனையும் இப்படத்தில் எல்லா கச்சிதங்களுடனும் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் சில இடங்களில் சொதப்பினாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தேறிவிட்டது என்றே சொல்லவேண்டும். தேவையற்ற பாடல்கள் நாராசமாய் ஒலித்து சிறுவர்களை சோதிக்கின்றன என்றே சொல்லவேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்தப் பாடல்களை இதே சிறுவர்கள் மனப்பாடமாகச் சொல்லக்கூடும். எனவே அவர்களுக்கு இந்தப் பாடல்கள்கூட தடையாக இருக்க வாய்ப்பில்லை.

இப்படத்தைப் பார்க்கும் நாம்தான் சிறுவர் உலகத்துக்கும் முழுமையாகச் செல்லமுடியாமல் வயதுவந்தவர்களுக்கான மெச்சூர்ட் திரைப்படமாக ஏற்றுக்கொள்ளவும்முடியாமல் தத்தளிக்கிறோம். இதற்கான காரணம் பார்வையாளர்களான நம்மிடம் மட்டும் இல்லை. இயக்குநரில் தொடங்கி நடிகர்கள்வரை அனைவருக்கும் பங்குள்ளது.

இந்தப் படத்தைப் பார்க்கத் துவங்கிய சில நிமிடங்களில், மந்திர சக்தி கொண்ட நீர்மத்தைப் பற்றிய காட்சியின்போது நினைத்துக்கொண்டேன். முழுமையான சிறுவர் படத்தில் குள்ளர்கள் வருவார்களே என்று. பாலகிருஷ்ணாவும் ரோஜாவும் நடித்த ஒரு தெலுங்கு மொழிமாற்றப் படத்தைப் பார்த்திருக்கிறேன். (தெலுங்கில் பைரவ த்வீபம் தமிழில் விஜயராகவன் என்ற எதோ ஒரு பெயரில் வந்தது.) அதில் குள்ளர்கள் வருவார்கள். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட் என்று அப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டிருந்தபோதே அடுத்த காட்சியில் குள்ளர்கள் வந்தார்கள். சரி, இது முழுமையான சிறுவர் படம்தான் என்று எனக்கு அப்போதுதான் உரைத்தது. இந்தியத் திரைப்படங்களில் குள்ளர்கள் வரும் திரைப்படங்களில் என்ன என்ன காட்சிகள் வருமோ அவையே வந்தன என்பதுதான் இடைஞ்சல். ஆனாலும் குள்ளர்கள், பறக்கும் மனிதர்கள், ராட்சத வீரன், இறவா வரத்துக்கான அரசியின் யாகம், பேசும் பறவைகள், கொலைகாரத் தளபதி என எதையும் விட்டுவைக்காமல் சிறுவர்களுக்கு ஒரு விருந்தையே படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் இப்படம் வருவதற்கு முன்பு யாரும் வாய் திறந்துகூட இது சிறுவர்கள் படம் என்று சொல்லிவிடவில்லை. சிறுவர்கள் படமெடுக்க உலகெங்கும் பில்லியன் கணக்கில் செலவு செய்துகொண்டிருக்க, இங்கே சிறுவர் படம் என்று சொல்லவே கூச்சம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறுவர் படங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கும் வழக்கமே இல்லை. வயது வந்தவர்கள் என்ன படம் பார்க்க விரும்புகிறார்களோ அதையேதான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அப்படியே அதை மட்டுமே விரும்பத் தொடங்குகிறார்கள். அதோடு உலகத்தில் வெளியாகும் அத்தனை சிறுவர் படங்களையும் நம் சிறுவர்கள் எப்படியோ பார்த்துவிடுகிறார்கள். எனவே தமிழ்த் திரைப்படங்களின் போதாமையே இவர்களின் முகத்தில் முதலில் அறைகிறது. அதுவே அப்படத்தின் தோல்விக்கான முக்கியமான காரணமாக அமைந்தும்விடுகிறது. எனவேதான் சிறுவர்கள் படம் என்று சொல்வதில் யாருக்கும் விருப்பம் இல்லை. சிறுவர்களுக்கான ஒன்றைச் செய்யும் பொறுமையோ வழக்கமோ நம் பெற்றோர்களுக்கும் இல்லை.

ஒரு இயக்குநர் சொன்னாராம், தான் நல்ல கலைப்படம் எடுத்தபோது அதை வெற்றிபெற வைக்காத தமிழர்களுக்கு நல்ல படம் பார்க்கவோ கேட்கவோ தகுதியில்லை என்று. இதில் கூடுதல் குறைவாக இருந்தாலும், கொஞ்சம் உண்மையும் உள்ளது.

ரேவதியும் அரவிந்த் சாமியும் நடித்து ‘பாச மலர்கள்’ என்றொரு திரைப்படம் வந்தது. படம் வந்த ஒரு வாரத்தில் ரேவதி ஒரு தொலைக்காட்சியில் புலம்பிக்கொண்டிருந்தார். ‘இது குழந்தைகள் திரைப்படம். அவர்களை நம்பித்தான் வெளியிட்டோம். ஆனால் எந்தக் குழந்தைகளும் பார்க்க வரவில்லை’ என்று. அதுவரை அது குழந்தைகள் படம் என்று யாருமே சொல்லததால் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது அது குழந்தைகள் படம் என்று. படம் ஓடவில்லை என்றாகவும் மெல்ல சிறுவர் படம் என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.

இம்சை அரசனை விட ‘புலி’ மிக முழுமையான சிறுவர் திரைப்படம். அந்தக் காலம் என்றால் வரிவிலக்கெல்லாம் கொடுத்திருப்பார்கள். இன்று படம் வருவதே வரிவிலக்கு கொடுத்ததற்கு ஒப்பானதாகிவிட்டது. அதிலும் இப்படத்தில் அரசியல் வசனங்கள் உண்டு. தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று ஜெயலலிதா நினைக்காமல் இருந்ததே விஜய் செய்த பூர்வஜென்ம புண்ணியம். திரையரங்கில் ரஜினியின் அந்தக் காலஅரசியல் வசனங்களுக்கு எப்படி ஆர்ப்பரித்தார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். இதில் வரும் அரசியல் வசனங்கள் பலருக்கும் அவை அரசியல் வசனங்கள் என்றே தோன்றவில்லை. விஜய் இந்த அரசியல் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு நல்லது.

விஜய் நடித்ததின் ஒரு ப்ளஸ் அவரது புகழ் என்றால், மிகப்பெரிய மைனஸ், படம் முழுக்க அவரை பெரிய ஹீரோவாகக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம். தேவையற்ற காட்சிகளிலும் ஸ்லோ மோஷனில் நடந்து பின்னணி இசை ஒலிக்க அவர் வருவதைப் பார்க்கும்போது, இப்படத்தை வயது வந்தவர்களுக்கான திரைப்படமாகவே அவரும் எடுத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பல காட்சிகளில் நடிக்கத் திணறுகிறார். இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்கவும் ஒரு திறமை வேண்டும். மிகவும் மோசம் என்று விஜயைச் சொல்லமுடியாது என்றாலும், என்னவோ ஒட்டவில்லை.

இப்படம் வருவதற்குமுன்பே நினைத்தேன், ஒன்று இப்படம் பெரிய வெற்றியடையும் அல்லது ஊத்திக்கொள்ளும் என்று. இன்று நான் பார்த்தபோது திரையரங்கில் என்னுடன் முப்பது பேர் பார்த்திருந்தால் அதிகம். நமக்கு சிறுவர் படங்கள் இனியும் வாய்க்காமல் போவதற்கு இப்படமும் ஒரு காரணமாக இருக்கும். இதில் வரும் காதல் காட்சிகள், பாடல்கள், கேவலமான காமெடிக் காட்சிகள் என பலவற்றைச் சுட்டிக்காட்டி, இவையெல்லாம் உள்ள ஒரு படம் எப்படி குழந்தைகள் படமாக முடியும் என்று யாரேனும் கேட்டால், அக்கேள்வியைப் புறந்தள்ளவும் முடியாது.

எப்படி இருந்தாலும் இப்படி ஒரு படத்தை நடிக்க முன்வந்ததற்காக விஜய்யைப் பாராட்டவேண்டும். முதலில் உள்ள ஒரு மணி நேரத்தில் பல காட்சிகளை வெட்டி நீக்கி, பின்னர் கடைசியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சியை கொஞ்சம் முன்னகர்த்தி நகாசு வேலை செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பிழைத்திருக்கலாம்.

சிம்புதேவனின் பல மொக்கைத் திரைப்படங்களுக்கு மத்தியில் இது ‘சிறுவர் திரைப்படம்’ என்ற அளவில் கொஞ்சம் தேறுகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இதன் வணிகத் தோல்வி தவிர்க்க முடியாததுதான். ஐந்து வயது முதல் பத்து வயது சிறுவர்களுக்கான முழுமையான சிறுவர் படம் கடந்த முப்பது நாற்பது வருடங்களில் வந்தது எது என்று யோசித்தால் நமக்கு பதிலே கிடைக்காது.  தங்கமலை ரகசியம், வேதாள உலகம் அளவுக்கு, அதைவிட அட்டகாசமான ஒரு தரத்தில் இப்படம் வந்திருக்கிறது. இன்னும் ஒரு ஐம்பது வருடம் கழித்து இப்படம் வெறும் ஓர் உதாரணமாக மட்டும் தேங்கும் என நினைக்கிறேன்.

ஒரு பொறுப்பற்ற அவசரத்தாலும் வணிக வெற்றியை நினைத்தே செயல்பட்டதாலும் திரைக்கதைக்கு மெனக்கெடுவது அநாவசிய வேலை என்ற தமிழ்த்திரைப்பட முடிவுகளாலும் இத்திரைப்படம் கண்டிக்கும் வணிகத்தோல்வி, சிறுவர் திரைப்படங்கள் மீண்டும் தமிழில் இல்லாமல் போவதற்கு காரணமாக அமையும். நம் தொழில்நுட்ப வசதி உயரும்வரை, சிறுவர் திரைப்படங்களுக்கான தேவையை வயது வந்தவர்கள் அறியும்வரை தமிழில் சிறுவர் திரைப்படங்கள் வந்து என்னதான ஆகப்போகிறது?

அறிவுரையே சொல்லாத, லாஜிக்கே இல்லாத, கற்பனையின் உச்சத்துடன் இயக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை உங்கள் குழந்தைகள் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? நிச்சயம் இப்படத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். படம் பார்க்க சகிக்காமல் நெளியும் காட்சிகளில் நீங்கள் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் குழந்தை எப்படி வாயை பிளந்து ரசிக்கிறது என்று பார்த்து அதை நீங்கள் ரசிக்கலாம்.

குறிப்புகள்:

* விட்டலாச்சாரியாவின் கேவலமான (டப்பிங்) திரைப்படங்களை நான் கணக்கிலேயெ எடுக்கவில்லை.

* பாகுபலி வந்தபோது புலி டீம் ஏன் பதறியது என்பதற்கான காரணம் கிராஃபிக்ஸ் பிரம்மாண்டம் மட்டுமல்ல, கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பதுதான். இந்த இரண்டின் கதையும் கோச்சடையானின் கதையும்கூட ஓரளவுக்கு ஒன்றுதான். கோச்சடையான் தமிழின் மிக முக்கியமான மேலான முயற்சி. அப்படத்தின் தோல்வியும் ‘புலி’ படத்தின் விமர்சனத்துடன் ஒப்பிடத்தக்கதே.

* சொல்லி வைத்தாற்போல் இப்படத்தில் வரும் எந்த முக்கிய நடிகையும் நெற்றிப் பொட்டு வைத்துக்கொள்வதில்லை. நடிகரும் வைத்துக்கொள்வதில்லை. அதெப்படி?

* மாஸ் திரைப்படமும் நல்ல குழந்தைகள் திரைப்படமும். என்ன பிரச்சினை என்றால் வெங்கட் பிரபுவுக்கோ சூர்யாவுக்கோ அதைப் பார்த்த பெற்றோர்களுக்கோ அது வழக்கம்போல தெரியாது என்பதுதான்.

Share