Tag Archive for குடியரசு தினம்

குடியரசு தினம் – 2017

தமிழ்நாட்டுப் பிரிவினையை ஏற்காத 99.99% தமிழர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
 
தனித் தமிழ்நாடு என்ற உயிரிழந்த கோஷத்தை மெல்ல உயிர்கொடுக்கப் பார்க்கும் ப்ரீ பெய்ட் போராட்டக்காரர்களுக்கு மிக நன்றாகவே தெரியும், இது ஒரு நாளும் எடுபடாத கோரிக்கை என்று. தங்கள் அரசியலுக்காக மட்டுமே இதைக் கையில் எடுக்கிறார்கள். இத்தனை பிரச்சினைக்குப் பின்னும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது. எந்தக் கட்சி ஆண்டாலும் இந்திய அரசு, காஷ்மிர் தன் ஒருங்கிணைந்த பகுதி என்ற நிலையில் இருந்து பின்வாங்கியதே இல்லை. இதில் தனித்தமிழ்நாடு கோரிக்கையெல்லாம் மிக லேசாக வலுப்பெற்றால்கூட இந்திய அரசு அதை எப்படிக் கையாளும் என்பதை ஒரு குழந்தை கூடப் புரிந்துகொள்ளமுடியும்.
 
இந்தியாவில் குஜராத் வேகமாக முன்னேறுகிறது என்றபோது, போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார சமூகப் புலிகள் எல்லாம் எப்படி தமிழ்நாடு இந்தியாவில் எப்போதுமே முன்னேறிய மாநிலமாக இருந்துவந்துள்ளது என்பதை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்காட்டினார்கள். அன்று இதே தமிழ்ப் பிரிவினைவாதிகள் அதனை ஏற்றுக்கொண்டு குஜராத்துக்கு எதிராகக் களமாடினார்கள். இதன் பொருள், எந்நாளும் தமிழ்நாடு இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டதில்லை என்பதே. மாநிலங்களுக்க்குத் தேவையான அதிகாரங்கள் இன்னும் அதிகமாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும், அதை மையமாக வைத்து தமிழ்ப் பிரிவினைவாதிகள் தனித்தமிழ்நாடு கோருவதும் ஒன்றல்ல.
 
எத்தனையோ பேர் போராடிப் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தின் நோக்கம் இந்தியத் திருநாடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே. தனித்தமிழ்நாடு என்னும் கோஷத்துடன் கூட்டம் சேர்த்துப் பார்த்தால் 300 பேர் கூடக் கூடமாட்டார்கள் என்று தெரிந்தவர்கள்தான் மூன்று லட்சம் பேர் கூடிய கூட்டத்தை தங்கள் கூட்டமாக மாற்றப் பார்த்தார்கள். இந்த சக்திகள் முன்னெடுத்தால் தமிழக அரசியலில் குழப்பமும் கூச்சலும் அமைதியின்மையுமே எஞ்சும் என்பதற்கு கடந்த வாரக் காட்சிகளே உதாரணம். இந்திய அரசும் தமிழக அரசும் ஈவு இரக்கமின்றி இந்த பிரிவினை சக்திகளை ஒடுக்கவேண்டும் என்பதே இந்த இந்தியக் குடியரசு தினத்தன்று மேற்கொள்ளவேண்டிய உறுதிமொழியாக இருக்கவேண்டும்.
 
அனைவருக்கும் இந்தியத் திருநாட்டின் குடியரசு தின வாழ்த்துகள்.
Share