Tag Archive for குஜராத்

குஜராத் – மக்கள் நம்பும் முன்னேற்றம்

குஜராத்தின் முன்னேற்றம் பற்றி எல்லா ஊடகங்களும் எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் வேளையில், உண்மையிலேயே அங்கே அந்த முன்னேற்றம் வந்துள்ளதா என்று பார்க்க குஜராத் பயணம் செய்தோம். ஒட்டுமொத்த இந்தியாவின் முன்னேற்றம் என்பதே, குஜராத் மாடல் என்பதையொட்டி இருக்கவேண்டும் என்று இங்கு எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் குரலின் உண்மைத்தன்மை என்ன என்பதே நாங்கள் அறிய விரும்பியது. இதுதொடர்பாக, ஏற்கெனவே கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘மோடியின் குஜராத் – இந்தியாவின் முன்மாதிரி’ என்னும் புத்தகம் எங்கள் ஆவலையும் சந்தேகத்தையும் ஒரு சேரக் கிளப்பிவிட்டிருந்தது. சரவணன் எழுதிய அந்தப் புத்தகம் நிறைய தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் கொண்டது. குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சியை, குஜராத்துக்குச் சென்று அங்கேயே தங்கி, நேரில் பார்வையிட்டு சரவணன் அப்புத்தகத்தை எழுதியிருந்தார். அப்புத்தகத்தை வாசிக்கும் எந்தவொரு இந்திய மனமும், தங்கள் மாநிலம் இப்படி இல்லையே என்றோ, தங்கள் நாடான இந்தியா இப்படி இல்லையே என்றோ ஏக்கம் கொள்வது உறுதி. கூடவே அவையெல்லாம் உண்மைதானா என்ற எண்ணமும், அங்கே வசிக்கும் மக்கள் இந்த முன்னேற்றத்தையெல்லாம் உணர்ந்திருக்கிறார்களா என்ற சந்தேகமும் மேலெழும். இதை ஒட்டியே எங்கள் பயணமும் அமைந்தது.

முதல் ஒருநாள் குஜராத் அரசுத் தரப்பில் கிடைக்கும் விவரங்களைச் சேகரித்துக்கொண்டேன். மீதி நாள்களில் குஜராத் பொதுமக்களின் கருத்தை அறியவே முக்கியத்துவம் அளித்தேன். ஹோட்டல்களில் வேலை பார்க்கும் அடித்தட்டு சர்வர்கள்முதல், ஆட்டோ ஓட்டுநர், கல்லூரி மாணவ மாணவியர், இல்லத்தரசிகள், அரசு அதிகாரிகள், அங்கே வாழும் தமிழர்கள், தொழில்முனைவோர் எனப் பலரிடமும் குஜராத் பற்றிப் பேசினேன். அவர்கள் சொன்ன கருத்துகளை இங்கே தருகிறேன். அதன் பின்னர் என் கருத்துகளைப் பதிவு செய்கிறேன். 

சபர்மதி ஆஸ்ரமத்தில் ரோஹித் என்னும் பி.காம் படிக்கும் மாணவர் ஒருவரை சந்தித்துப் பேசினேன். மோதி பற்றியும் குஜராத் பற்றியும் கேட்டேன். மோதியின் நிர்வாகத்தை வெகுவாகப் புகழ்ந்தார் அந்த மாணவர். அவரது ஆட்சியில், நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகச் சொன்னார். பள்ளி அளவில் கல்வியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கருதினார். மோதியைப் பற்றிச் சரியாகச் சொல்லவேண்டும் என்றால், அவரது வேலையை அவர் ஒழுங்காகச் செய்கிறார் என்றே சொல்வேன் என்றார்.

அங்கே நிதி என்னும் இன்னொரு கல்லூரி மாணவியைச் சந்தித்துப் பேசினேன். எம்.எஸ்.சி படித்த அந்தப் பெண், ‘பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் குஜராத். இரவு 12 மணிக்குக்கூட ஒரு பெண் தைரியமாகத் தனியாக வெளியே சென்று வர முடியும். டெல்லியைப் போல் பயமில்லை’ என்றார். வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்டபோது, ‘ஐடி துறைகளில் அத்தனை வேலைவாய்ப்பு இல்லை. இப்போதுதான் ஐடி வேலைவாய்ப்பு வரத் துவங்கியிருக்கிறது. பெங்களூரு, சென்னை போல ஐடி துறையில் இங்கே வேலைவாய்ப்புகளை எங்களால் எதிர்பார்க்க முடியவில்லை. மேலும் தொடக்கச் சம்பளம் என்பது மிகவும் குறைவாக உள்ளது’ என்றார். மற்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் எப்படி என்று கேட்டதற்கு, ‘மற்ற எல்லாத் துறைகளிலுமே வேலைவாய்ப்பு சிறப்பாகவே உள்ளது. அதேபோல் ஐடி துறையிலும் வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும்’ என்ற கருத்தைச் சொன்னார்.

இதன் பின்பு, எங்களுக்கு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த டிரைவரிடம் பேசினேன். அவரது பெயர் சந்தோஷ். மோதி எப்படி என்று கேட்ட உடனேயே, ‘மோதி ஒரு மிகச்சிறப்பான மனிதர்’ என்றார். ‘கடந்த பத்தாண்டுகளில் மோதியின் தலைமையில் குஜராத்தும், குறிப்பாக அகமதாபாத்தும் பெற்றிருக்கும் வளர்ச்சி அபாரமானது. நான் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம்தான் வேலை பார்த்தேன். ஆனால் மோதியின் குஜராத் மீதான அக்கறையைப் புரிந்துகொண்டு, நானும் மோதி ஆதரவாளராகிவிட்டேன். நான் மட்டுமல்ல, என்னுடன் இருந்த அத்தனை காங்கிரஸ் ஆதரவாளர்களும் இன்று மோதியின் ஆதரவாளர்களே’ என்றார். ‘குஜராத்தின் முன்னேற்றம் பற்றி எப்படிச் சொல்கிறீர்கள்? நீங்களாகச் சொல்கிறீர்களா அல்லது இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா’ என்று கேட்டேன். ’நான் குஜராத்தில் 30 வருடங்களாக இருக்கிறேன். இந்த அகமதாபாத் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை என்னால் நிச்சயம் உணரமுடியும். கடந்த 10 வருடங்களில் இதன் வளர்ச்சி அபரிமிதமானது. சபர்மதி, நர்மதா ஆறுகள் தற்போது எப்படி உள்ளன என்று நீங்களே பார்த்தீர்கள்தானே? முன்பு அவை இத்தனை நன்றாகப் பராமரிக்கப்படவில்லை. அதேபோல் வீட்டில் இப்போதெல்லாம் மின்சாரம் போவதே இல்லை. அதைவிட முக்கியம், கடந்த 10 வருடங்களில் அகமதபாத்தில் ஒரு கலவரம்கூட இல்லை. தடையுத்தரவு இல்லை. நிம்மதியாக வாழமுடிகிறது. இதனால் வியாபாரம் பெருகியுள்ளது. சாலைகளை எல்லாம் பார்த்தீர்கள்தானே? குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்கிறது. நர்மதா ஆற்றின் தண்ணீர் எந்த எந்த ஊர்க்கெல்லாம் போகிறது என்று நீங்களே பார்த்தீர்கள்தானே? இதெல்லாமே மோதியால்தான் சாத்தியமானது’ என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

ஓர் ஆட்டோ டிரைவரின் கருத்து இது. ‘மோதியை நான் குஜராத்தின் சிங்கம் என்றே சொல்லுவேன். பார்த்தீர்களா சாலைகளை? (அப்போது நாங்கள் காந்தி நகரிலிருந்து அகமதாபாத் வந்துகொண்டிருந்தோம். விடாமல் அடைமழை பெய்துகொண்டிருந்தது.) இந்த மழையிலும்கூட மின்சாரம் போகவே போகாது’ என்றார். அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் மஹ்மூத். ‘மோதி பிரதமருக்குப் போட்டியிட்டால் நான் நிச்சயம் ஆதரிப்பேன்’ என்றார் இந்த மஹ்மூத்.

ஒரு நண்பர் வீட்டுக்குப் போனோம். அவர் அகமதாபாத்தில் அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கிறார். அன்று அடைமழை பெய்து கொண்டிருந்ததால், அவரது வீட்டின் கீழே நீர் சூழ்ந்துவிட்டது. நீர் விலகியதும் வந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். நாங்கள் போகும்போது வீட்டை நீர் சூழ்ந்திருந்ததற்கான அறிகுறிகளே இல்லை. அத்தனை நீரும் வடிந்திருந்தது. நாங்கள் வீட்டுக்குள் நுழைந்த உடனேயே மின்சாரம் தடைப்பட்டு விட்டது. அந்த நண்பரின் அம்மா பேசினார். ‘ரொம்ப மழையா இருந்ததால காலேலே இருந்தே கரண்ட் இல்லை. இப்பத்தான் வந்தது, திரும்பவும் போயிடுச்சு’ என்று சொல்லிவிட்டு, மெழுகுவர்த்தியைத் தேடினார். எங்கே தேடியும் அது கிடைக்கவில்லை. ‘பவர்கட்டே ஆகாதா, அதனால இதெல்லாம் தயாரா வெச்சிக்கிறதில்லை. இன்வர்ட்டர் கூட கிடையாது’ என்று சொல்லிவிட்டு, பக்கத்துவீட்டில் மெழுகுவர்த்தி இருக்கிறதா என்று கேட்டுவரச் சொல்லித் தன்மகனை அனுப்பினார். அங்கேயும் மெழுகுவர்த்தி இல்லை. அந்தப் பையன் கடைக்குப் போய் மெழுகுவர்த்தி வாங்கிவந்தான். அந்த அம்மா மேலும் பேசினார். ‘1986ல அகமதாபாத்துக்கு வந்தேன். அப்ப இந்த ஊர்ல ஒண்ணுமே கிடையாது. இன்னைக்கு எப்படி முன்னேறியிருக்குன்னு எனக்குத்தான் தெரியும். பவர்கட்டுன்றதே கிடையாது. குடிதண்ணீருக்கும் பிரச்சினையே இல்லை. வீட்டுக்கு சமையல் கேஸ் பைப்ல வருது. வேறென்னங்க வேணும்?’ என்றார். ‘ஒரு யூனிட்டுக்கு கரண்ட் விலை ரொம்ப கூடன்றாங்களே’ என்று கேட்டோம். ‘5.50ங்க. இது கூடவோ கம்மியோ, கரண்ட் போறதே இல்லை. அதான் முக்கியம். கோவில்பட்டிக்கு லீவுக்கு வந்தா பாதி நேரம் கரண்ட்டே இருக்கிறதில்லை. அதுக்கு இது எவ்வளவோ மேல்’ என்றார். ‘மோதி சாப் பிரதமருக்கு போட்டியிட்டால் நிச்சயம் அவரை ஆதரிப்பேன்’ என்றார். பெண்கள் பாதுகாப்பு எப்படி என்று கேட்டேன். ‘நைட் 12 மணிக்குக் கூட நிம்மதியா வரலாம். இரவு தினமும் 10:30க்கு நான், பக்கத்து வீட்டு மற்றும் எதிர்வீட்டுப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து வாக்கிங் போய்விட்டு, 12 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவோம், ஒரு பிரச்சினையுமில்லை’ என்றார். 

அந்த அம்மாவின் பக்கத்து வீட்டு மனிதர் ஒருவரிடம் பேசினேன். அவர் ஒரு பிஸினஸ்மேன். குஜராத்தி. 2002 கலவரங்கள் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘அப்ப நான் இங்கதான் இருந்தேன். மோதி போலிஸை ஆதரிச்சாரா, முஸ்லிம்களைக் கொல்லச் சொன்னாரான்னெல்லாம் தெரியாது. ஆனா அந்த அடிக்குப் பின்னாடிதான் இங்கே கலரவமே இல்லாமல் இருக்கு. முன்னாடில்லாம் அப்படி இல்லை. எங்க எப்ப கலவரம் வரும்னே தெரியாது. இப்ப 12 வருஷமா அந்தப் பிரச்சினையே இல்லை. எத்தனை நாள்தான் ஹிந்துக்கள் அடி வாங்கிக்கிட்டே இருப்பாங்க சொல்லுங்க. அவங்க (முஸ்லிம்கள்) எந்த அளவுக்கு இங்க ஆடினாங்கன்னு பார்த்தவங்களுக்குத்தான் இது புரியும். இப்ப கலவரங்கள் இல்லாததால பிஸினஸ் நல்லா போகுது’ என்றார். ‘இங்கே லஞ்சமே இல்லை என்கிறார்களே, உண்மையா’ என்று கேட்டேன். ‘லஞ்சம் சுத்தமா இல்லைன்னு சொல்லமுடியாது. நிச்சயம் இருக்கும். ஆனா லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும்ன்ற அளவுக்கு இல்லை. பிஸினஸ் செய்ய எதாவது வேணும்னு மனுக் கொடுத்தா, அந்த வேலை தானா நடக்கும். அதுக்கு லஞ்சம் கொடுத்தே ஆகணும்ன்றதெல்லாம் கிடையாது’ என்றார். இந்த மனிதர் சே குவேரா படம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் அணிந்திருந்தார்.

குஜராத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் தமிழர் ஒருவரைச் சந்தித்தோம். மோதியைப் பற்றி நல்லதும் அல்லதுமாகப் பலவற்றை இவர் பகிர்ந்துகொண்டார். ‘மின்சாரம் தடைப்படறதே இல்லைங்க. ஆனா ஒரு யூனிட்டுக்குப் பணம் ஜாஸ்தி. இருந்தாலும் எல்லாருக்கும் மின்சாரம் கிடைக்குது. இதுக்குக் காரணம், மோதிங்கிறதைவிட, அந்த பவர் ப்ராஜெக்ட்டுகளை சிறப்பா முடிக்கும் ஐ.ஏ.எஸ்-னுதான் நான் சொல்லுவேன். தண்ணி இன்னைக்கு எல்லா ஊருக்கும் போகுது. அதுக்கும் காரணம் இன்னொரு ஐ.ஏ.எஸ்தான். இப்படி சிறப்பான ஐ.ஏ.எஸ்களால்தான் குஜராத் முன்னேறியிருக்கு. பல முக்கியமான பொறுப்புகள்ல தமிழர்கள் இருக்காங்க. இவங்களாலதான் மோதிக்குப் பேர்’ என்றார். 2002 கலவரம் பற்றிப் பேசினார். ‘அந்த அடி ஒரு வகைல தேவைங்க. நீங்க நினைக்கிற மாதிரி தமிழ்நாட்டு முஸ்லிம் போல இல்லை இங்க இருக்கிறவங்க. பாக்கிஸ்தான்ல சம்பந்தம் பேச குறியா நிப்பாங்க. எப்ப எங்க கலவரம் வரும்னே தெரியாது. ஆனா இன்னைக்கு இப்படி இல்லை. 12 வருஷமா கலவரமே இல்லை. அதுக்காக மோதியைப் பாராட்டணும்’ என்றார். மின்சாரம் உபரியாக உள்ளது, ஆனால் விவசாயிகளுக்கு 6 மணிநேரம்தான் மின்சாரம், அதுவும் இலவசம் கிடையாது என்பது சரியா என்று கேட்டதற்கு, ‘அது சரிதானே. காலேலதான விவசாயிங்க வேலை பார்க்க போறாங்க? 6 மணி நேரம் மின்சாரம் போதாதா என்ன? இலவசமா கொடுத்தா என்ன நடக்கும்னு நம்ம ஊர்லயே பாத்திருப்பீங்க. அதைத் தடுக்க, இங்கே விவசாயக்குத்துன்னு தனியா லைன் போட்டு கொடுக்கிறாங்க. அது நல்ல விஷயம்தான்’ என்றார். ‘பெண்கள் கல்விக்காக மோதி நிறைய செய்கிறார் என்று கேள்விப்படுகிறோமே’ என்றோம். ‘ஜூன் மாதம் முழுக்க பெண் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதிலேயே ஓய்ந்து போய்விடுகிறோம். அந்த ஒரு மாதமும் பள்ளிகள் வேறு வேலைகளே நடப்பதில்லை’ என்றார். 

கடந்த ஜனவரியில் பணி ஓய்வு பெற்றுவிட்ட ஜகதீசன் ஐ.ஏ.எஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். குஜராத்தின் பொதுவான வளர்ச்சி எப்போதும் உள்ளதுதான் என்று சொன்ன அவர், மோதியைப் பற்றி விமர்சனபூர்வமாகப் பேசினார். இவரது திறமையான நிர்வாகத்தால்தான் நர்மதாவின் தண்ணீர் இன்று பல ஊர்களுக்கும் பாய்ந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மோதியின் பாஸிடிவ் விஷயங்களாக இவர் குறிப்பிட்டது: ‘அதிகாரிகளின் பணிகளில் எக்காரணம் கொண்டும் தலையிடமாட்டார். யாரும் அவரைப் பார்த்து இந்த ஐ.ஏ.எஸ்ஸை மாற்றுங்கள் என்று சொல்லி அதைச் சாதித்துவிடமுடியாது. ஒரு ஐ.ஏ.எஸ்ஸை பத்து நாள்களுக்கு பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை மாற்றுபவர்களுக்கு மத்தியில், இவர் நான்கைந்து வருடங்கள் வரை ஐ.ஏ.எஸ்ஸை மாற்றமாட்டார். குஜராத்தின் இன்னொரு நல்ல விஷயம் சாலைகள். தமிழ்நாட்டைவிடச் சிறப்பான சாலைகள் என்று சொல்லமாட்டேன், ஆனால் தமிழ்நாட்டோடு ஒப்பிடத் தகுந்த அளவு சாலைகள் இங்கே போடப்பட்டுள்ளன.’

ஹோட்டலில் வேலை பார்க்கும் பையன் ஒருவனிடம் பேசினேன். அவனுக்கு வயது 20 இருக்கலாம். அவனது சம்பளம் 3500 ரூ! ‘இதை வைத்துக்கொண்டு எப்படிச் சமாளிக்கிறாய்?’ என்று கேட்டேன். ‘கஷ்டம்தான்’ என்றான். ‘மோதி பற்றி எல்லாரும் புகழ்கிறார்களே, நீ என்ன நினைக்கிறாய்’ என்றேன். ‘மோதி மிகச் சிறந்த தலைவர். மின்சாரம் வருகிறது. தண்ணீர் கிடைக்கிறது. எல்லா இடங்களுக்கும் பஸ்ஸில் போக முடிகிறது’ என்றான். ‘ஆனா உன் சம்பளம் இவ்வளவு கம்மியாக இருக்கிறதே’ என்றேன். ‘நான் ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதப் போகிறேன். எழுதி பாஸ் செய்துவிட்டால் நல்ல வேலை கிடைத்துவிடும். நான் படிக்காதது என் தவறு’ என்றான்.

மணிநகரில் இருக்கும் தமிழர் ஒருவரைச் சந்தித்தோம். அவர் அங்கே வந்து செட்டில் ஆகி 20 வருடங்கள் ஆகின்றன. அவர் சொன்னது: ‘இங்கே இருக்கிற பெரும்பாலான தமிழர்கள் மோதியைத்தான் ஆதரிக்கிறாங்க. அடிக்கடி தமிழர்கள் கூடும் இடத்துக்கெல்லாம் நான் போவது வழக்கம். அவங்க எல்லாருக்குமே மோதி மேல் பெரிய நம்பிக்கை இருக்கு. முக்கியமா 12 வருடங்கள் கலவரமே இல்லை. இதனால பிஸினஸ் செய்யமுடியுது’ என்றார். ‘மோதி மணிநகர்ல நிக்கிறதே தமிழர்கள் அவரை சப்போர்ட் பண்ணுவாங்கன்ற நம்பிக்கைலதானே’ என்று என்னையே மடக்கினார்.

ஒரு காம்ப்ளக்ஸில் கடை வைத்திருக்கும் இஸ்லாமியர் ஒருவரைச் சந்தித்தோம். இவர் ஜமா இ இஸ்லாமி ஹிந்தோடு தொடர்பில் இருப்பவர். மோதியைப் பற்றிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பெரும்பாலும் அவரது குற்றச்சாட்டுகள் 2002ஐ முன்வைத்தே இருந்தன. ‘2002ல் மோதி சாப் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள் என்பது உண்மை. யார் சொல்லி நடந்தது என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நடந்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய நிவாரணத் தொகை சரியாக வழங்கப்படவில்லை. பல அமைப்புகள் கேட்டுக்கொண்ட பின்னர் இப்போதுதான் அதை வழங்கினார்கள். அவர் கொஞ்சம் சாதனைகளைச் செய்தால், பெரிய பெரிய சாதனைகளைச் செய்ததாகச் சொல்லி பெரிதுபடுத்துகிறார்கள். மோதியின் மார்க்கெட்டிங்தான் இதற்குக் காரணம்’ என்றார். ‘முஸ்லிம்கள் கணிசமாக உள்ள பகுதிகளிலும் மோதியின் கட்சிக்கு வாக்கு கிடைக்கிறதே’ என்று சொன்னேன். ‘அவர்களும் இந்த மார்க்கெடிங்கை நம்புகிறார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார். ‘மோதி ஒரு ஜனநாயகவாதி அல்ல. அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் சொன்னால் உடனே அந்த வேலைகள் நடந்தே ஆகவேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். குஜராத் அரசு அலுவலர்கள் பலரும் அச்சத்தில்தான் வேலை செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவரது கட்சியின் தலைவர்களையே அவர் ஓரம்கட்டிவிட்டார். கட்சியே இன்று மோதி என்றாகிவிட்டது. அத்வானிக்கு என்ன நேர்ந்தது என்று பார்த்தீர்களல்லவா’ என்றார். ‘அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் என்கிறார்களே’ என்று கேட்டேன். ‘மின்சார விநியோகம் தனியாரால் நடத்தப்படுகிறது. எல்லாவற்றையும் தனியார் கையில் மோதி கொடுத்துவிடுகிறார். ரிலையன்ஸ் க்ரூப்புக்காகத்தான் மோதியின் அரசாங்கமே வேலை செய்கிறது என்று நினைக்கும் அளவுக்கு இங்கே விஷயங்கள் நடக்கின்றன’ என்றார். மோதியின் பாஸிடிவ் என்று எதைப் பார்ப்பீர்கள் என்று கேட்டேன். ‘12 வருடங்களாகக் கலவரமே இல்லை. இது ஒரு பெரிய விஷயம். இதற்காக மோதியைப் பாராட்டவேண்டும். இதனால் வியாபாரம் சீராக உள்ளது. இன்னொரு விஷயம், குஜராத்தைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்திருக்கிறார். அவரது மார்க்கெடிங்க்தான் இதற்குக் காரணம் என்றாலும், இதையும் பாராட்டவேண்டும்’ என்றார்.

அதே அமைப்பைச் சேர்ந்த இன்னொரு இஸ்லாமியரிடம் பேசினேன். ‘மோதியின் புகழ் என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்டது. அதில் உண்மை மிகக் கொஞ்சமும், பொய் மிக அதிகமும் உள்ளது’ என்றார். ‘முஸ்லிம்களின் ஆதரவும் அவருக்கு உள்ளது என்று செய்திகள் வருகின்றனவே’ என்று கேட்டேன். ‘நான் அதில் எந்த முக்கியத்துவத்தையும் பார்க்கவில்லை’ என்று சொன்னார். ‘மோதியின் அரசாங்கம் சாமானியர்களுக்கு எதையும் செய்வதில்லை. கடந்த 10 வருடங்களில் ஒரு பொது மருத்துவமனைகூடப் புதிதாகக் கட்டவில்லை. தொழிலதிபர்களுக்கான ஆட்சிதான் இங்கே நடந்துவருகிறது’ என்றார். 2002 கலவரங்களைப் பற்றிக் கேட்டபோது, ‘அந்தக் கலவரத்தில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கேம்ப்பில் தஞ்சம் புகுந்தார்கள். இன்னும் சில கேம்ப்களில் சில முஸ்லிம்களைப் பார்க்கமுடியும்’ என்றார். நான் அந்த கேம்மைப் பார்த்து அங்கே இருக்கும் முஸ்லிம்களுடன் பேச ஆசைப்பட்டேன். விசாரித்தபோது, தற்போது அந்த கேம்ப்புகள் இல்லை என்றும், கலவரத்தின்போது மட்டுமே முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும், அந்த முஸ்லிம்களெல்லாம் இன்று அவரவர் இடங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

அரசு அதிகாரி ஒருவரிடம் பேசினேன். ‘மோதியின் சாதனைகளாகச் சொல்வது நான்கு விஷயங்களை. ஒன்று மின்சாரம். இன்னொன்று குடிதண்ணீர். இன்னொன்று சாலைகள். நான்காவதாக விவசாயம். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். மின்சாரம், இப்போதில்லை, முன்பே குஜராத்தில் சிறப்பாகவே இருந்திருக்கிறது. சூரிய மின்சாரத்தின் மூலம், குறைவான பற்றாக்குறையைத் தாண்டியிருக்கிறார்கள். இதைப் பாராட்டவேண்டியதுதான் என்றாலும், இதையே சாதனையாகச் சொல்வதில் அர்த்தமில்லை. உண்மையில் உபரிமின்சாரம் இருக்கிறதென்றால், ஏன் விவசாயிகளுக்கு இலவசமாகத் தருவதில்லை? இலவசமாக மின்சாரம் தராமல், உபரி என்று காட்டிக்கொள்கிறார்கள். இன்னொரு விஷயம், குடிதண்ணீர். இதில் ஓரளவு உண்மை உள்ளது. நர்மதாவில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டருக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தைப் பாராட்டலாம். ஆனால் இதற்கான பாராட்டை மோதிக்கு மட்டுமே கொடுக்கமுடியாது. கடந்த 30 ஆண்டுகளாகவே இந்த வேலைகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுக்கொண்டு இருந்தன. வேகம் பெற்றது கடந்த 10 ஆண்டுகளில் என்று வேண்டுமானால் சொல்லலாம். சாலைகளெல்லாம் எப்போதுமே குஜராத்தில் நன்றாகத்தான் இருந்திருக்கின்றன. விவசாயத்தில் குஜராத் எப்போதுமே முதன்மையாகத்தான் இருந்துள்ளது. பருத்தியில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்ததாலும், கடந்த 10 வருடங்களாக மழை பொய்க்காததாலும் விவசாயத்தில் குறையே இல்லாமல் போய்விட்டது. ஆனால் இதையெல்லாம் மோதியின் தனிப்பட்ட சாதனைகளாகச் சொல்வதை ஏற்க முடியாது’ என்றார். 

பரத் பாய் என்னும் டிரைவரின் கருத்து இது: ‘மோதியின் சாதனைகள், இந்தியாவில் யாரும் செய்யாதது. குஜராத்தின் சாலைகளும் மின்சாரமும் எத்தனை மோசமாக இருந்தது என எனக்குத் தெரியும். நான் டிரைவர் என்பதால் குஜராத்தின் பல பகுதிகளுக்கும் போயிருக்கிறேன். இன்றைய குஜராத்தின் வளர்ச்சி அபரிதமானது. மின்சாரத் தட்டுப்பாடே கிடையாது. அகமதாபாத் நாளுக்கு நாள் வளர்கிறது. BTRS என்னும் விரைவுப் பேருந்து சேவையால் அகமதாபாத்தே மாறிவிட்டது. பெரிய வெற்றி இந்தப் போக்குவரத்துச் சேவை. இதனால் இதை சூரத்திலும் செயல்படுத்தப் போகிறார்கள். குஜராத்தின் சாலைகள் நாளுக்கு நாள் சிறப்பாகிக்கொண்டே இருக்கின்றன’ என்றார். 

வடோதராவில் (பரோடா) சில இல்லத்தரசிகளைச் சந்தித்துப் பேசினோம். வெளிநாட்டிலும் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வசித்திருக்கும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இப்போது வடோதரா வாசி. ‘மும்பையில் கரண்ட் கட் அதிகம் இருக்கும். தமிழ்நாட்டைப் போல் மிக அதிகமாக பவர்கட் என்று சொல்லமுடியாவிட்டாலும் மும்பையில் கொஞ்சம் இருக்கும். வழங்கப்படும் மின்சாரமும் சீராக இருக்காது. எலக்ட்ரிக் பொருள்கள் விரைவில் கெட்டுப்போகும். ஆனால் குஜராத்தில் பவர்கட்டே இல்லை. மின்சாரம் ஒரே சீராகவும் இருக்கிறது. எனவே நான் வாங்கியிருந்த யூபிஎஸ், இன்வெர்ட்டர் எல்லாவற்றையும் பரணில் போட்டுவிட்டேன்’ என்று சொன்னார். பெண்கள் பாதுகாப்புப் பற்றிக் கேட்டேன். ’நைட் எத்தனை லேட்டானாலும் ஒரு பிரச்சினை இங்கே இல்லை. குடிகாரர்கள் யாரையும் தெருவில் பார்க்க முடியாது’ என்றார்.

அதே அபார்ட்மெண்ட்டில் இருந்த பிரகாஷ் காம்லியா என்ற ஒரு வயதான மனிதரைச் சந்தித்தோம். ‘பரோடா மோதியின் ஆட்சியின்கீழ் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. முதலிலிருந்தே பரோடா வளர்ச்சி பெற்ற இடம்தான் என்றாலும், கடந்த பத்தாண்டுகளில் அதன் வளர்ச்சிவேகம் பிரமிக்கத்தக்கது. நல்ல கல்வி கிடைக்கிறது. கலவரங்கள் எதுவுமே 10 ஆண்டுகளாக இல்லை. நல்ல அரசு மருத்துவமனைகள் உள்ளன’ என்றார். மோதி பிரதம வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுவிட்டாரே, அதற்கு உங்கள் ஆதரவு உண்டா என்று கேட்டேன். ‘நிச்சயம் ஆதரிப்பேன்’ என்றார். மோதியின் நெகடிவ் என்று எதைச் சொல்வீர்கள் என்று கேட்டேன். ‘தொழிலதிபர்களுக்கு மோதி அதிகம் செய்கிறார் என்று குற்றம் சொல்கிறார்கள். எனக்கு அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதே அளவுக்கு மக்களுக்கும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதேபோல், உத்திரபிரதேசக் காரர்களுக்கும், பிஹாரிகளுக்கும் மோதி அதிகமாகச் செய்கிறார். குஜராத்திகளுக்கு அதிகம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார். 

ஃபல்குனி ஸ்வாடியா என்னும் இன்னொரு இல்லத்தரசியைச் சந்தித்தோம். அவர் சௌராஷ்ட்ரா பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அகமதாபாத்தில் இருந்துவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக வடோதராவில் இருக்கிறார். அவர் சொன்னது: ‘அகமதாபாத் போல வளர்ச்சி அடைந்த இடம் இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லுவேன். அதன் காரணம் மோதிதான். குறிப்பாக அந்த விரைவுப் பேருந்துப் போக்குவரத்து, அகமதாபாத்தையே மாற்றிவிட்டது. எங்கே இருந்து எங்கேயும் பஸ்ஸில் போகலாம். நான் பிறந்தது சௌராஷ்டிராவில். அங்கே பல தொழிற்சாலைகள் வந்துள்ளன. இதனால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கிறது. அது நல்ல விஷயம்’ என்றார். ‘இப்படி தொழிற்சாலைகள் அதிகம் வந்தால், நிலத்தடி நீரையெல்லாம் அவர்கள் உறிஞ்சிவிடுவார்களே’ என்று கேட்டதற்கு, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் வேலை கிடைக்கிறது. மின்சாரம் கிடைக்கிறது. குடிக்க நீர் கிடைக்கிறது. நல்ல சாலைகள் உள்ளன. என் குழந்தைகளுக்கு நல்ல பள்ளி கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன. வேறேன்ன எனக்கு வேண்டும்’ என்று சொல்லிவிட்டார்.

வடோதராவில் 30 வருடங்களாகப் பணிபுரியும் வங்கி அதிகாரி ஒருவரைச் சந்தித்தோம். அவர் சொன்னது: ‘மோதி ஆட்சில 10 வருஷத்துல பெரிய அளவுல மாற்றங்கள் நடந்திருக்குன்றது உண்மை சார். மின்சாரம் தடைபடறதே இல்லை. தினமும் வீட்டுக்கு குடி தண்ணீர் வருகிறது. எல்லா இடத்துக்கும் பஸ் கிடைக்குது. நைட்ல எவ்ளோ நேரமானாலும் என் பொண்ணு பாதுகாப்பா வீட்டுக்கு வரமுடியுது. நேத்துகூட நைட் 12 மணிக்கு ஆட்டோலதான் என் பொண்ணு வந்தா. 10 வருஷமா எந்தக் கலவரங்களும் இல்லை. இதைவிட வேறென்ன சார் வேணும், எனக்கு என் மாநிலத்தில் வசிப்பதை இழக்கிறமோ என்ற எண்ணமே வருவதில்லை’ என்றார். 2002 கலவரங்கள் பற்றிக் கேட்டோம். ‘அப்ப யார் சொல்லி என்ன நடந்ததுன்னு தெரியாது. ஆனா முஸ்லிம்கள் பயத்தோட இருந்தாங்கன்றது உண்மைதான். இன்னொன்னையும் சொல்லணும், அந்தக் கலவரத்துக்குப் பின்னாடிதான் குஜராத்ல ஒரு கலவரமும் இல்லை’ என்றார். மோதி பிரதமராக வந்தால் ஆதரிப்பீர்களா என்று கேட்டேன். ‘ஆதரிப்பேன். ஆனா குஜராத்தை வென்றது போன்ற எளிமையான விஷயமாக அது மோதிக்கு இருக்காது. மேலும் ஒரு பிரதமராக மோதி சாதித்து வெல்வார் என்று நான் நம்பவில்லை’ என்றார்.

அவருடன் பணிபுரியும் இன்னொரு வங்கி அதிகாரி சொன்னது: ‘இங்கே கல்வி தரமாகவும் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது குறைந்த செலவிலும் கிடைக்கிறது. என் பெண்ணுக்கு இங்கேயே இன்ஜினியரிங் சீட் கிடைத்தால், குஜராத்திலேயே செட்டில் ஆகிவிடுவேன்’ என்றார். இவர் தமிழ்நாட்டுக்காரர்.

வடோதராவில் முகம்மது என்னும் டிரைவர் ஒருவரைச் சந்தித்தோம். மோதியின்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். ‘2002 கலவரங்களில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளார்களோ அங்கெல்லாம் வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசு நினைத்திருந்தால் மிக எளிதாகக் கலவரங்களைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் மூன்று நாள்களுக்கு அரசு இயந்திரம் செயல்படவே இல்லை’ என்றார். குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கேட்டேன். ‘வளர்ச்சி என்பதெல்லாம் ஊடகங்கள் சொல்வது. குஜராத் எப்போதுமே வளர்ச்சி பெற்ற மாநிலமாகத்தான் இருந்திருக்கிறது. இதில் மோதியின் சாதனைகள் எதுவுமே இல்லை’ என்றார். ‘நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். கலவரத்திலும் பங்குபெற்று, வளர்ச்சியும் இல்லை என்றால், ஏன் மோதியை மக்கள் தொடர்ந்து 3 முறை வெல்ல வைத்தார்கள்’ என்று கேட்டேன். ‘இங்கே வலுவான எதிர்க்கட்சி என்று, வலுவான தலைவர் என்றோ யாரும் இல்லை. அதுதான் காரணம்’ என்றார். ‘அது மட்டுமே ஒருவரை 3 முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருக்கமுடியுமா’ என்று கேட்டேன். ‘அவரது மார்க்கெட்டிங் முக்கியமான காரணம்’ என்றார். ‘மூன்றில் ஒரு பங்கு ஹிந்துக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்களே’ என்று கேட்டேன். ‘சில பகுதிகளில் அப்படி நிகழ்ந்ததும் உண்மைதான்’ என்றார். ‘சரி, முஸ்லிம்கள் கணிசமாக உள்ள பகுதிகளிலும் மோதியின் வேட்பாளர்கள் வெல்கிறார்களே’ என்று கேட்டேன். ‘ஒரு லட்சம் பேர் உள்ள ஒரு தொகுதியில் 60,000 வாக்குகள் விழுகின்றன. 40,000 பேர் வாக்குப் போடுவதில்லை. யார் அவர்கள்?’ என்று என்னைக் கேட்டார். ‘முஸ்லிம்களா’ என்றேன். ‘நீங்கள்தான் யோசிக்கவேண்டும்’ என்றார். ‘கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைச் சந்திக்கமுடியுமா’ என்று கேட்டேன். ‘தனியாக யாரையும் என்னால் சொல்ல இயலாது. ஆனால் அவர்கள் வாழும் பகுதிக்குச் சென்றால், பல கதைகளை அவர்களே சொல்வார்கள்’ என்றார். ‘கடந்த 12 வருடங்களாக கலவரங்களே இல்லையே, அது பெரிய சாதனை இல்லையா’ என்றேன். அதற்கு அவர், ‘பாஜக ஆட்சியில் இருந்தால் கலவரம் வருவதில்லை. அவர்கள் ஆட்சியில் இல்லை என்றால் உடனே கலவரம் வருகிறது. ஆட்சியில் இருக்கும்போது எப்படி அவர்களே கலவரம் செய்துகொள்வார்கள்’ என்றார்.

அகமதாபாத்தில் வாழும் கல்லூரி விரிவுரையாளரிடம் பேசினேன். ‘நான் ஆறு வருடங்களாக இங்கே இருக்கிறேன். ஆறு வருடத்தில் சாலைகள் பல புதிதாகப் போடப்பட்டுள்ளன. விரைவுப் பேருந்து சேவை ஒரு வரப்பிரசாதம். எத்தனை பெரிய மழை பெய்தாலும், ஒரு மணி நேரத்தில் நீர் வடிந்துவிடும். இது ஆச்சரியமான விஷயம். கல்லூரிகளின் வளர்ச்சிக்கும் அரசு பெரிய அளவில் உதவுகிறது’ என்றார்.

அகமதாபாத்திலிருந்து 130 கிமீ தொலைவில் இருக்கும் புன்சரி என்ற கிராமத்துக்குச் சென்றோம். இது ஒரு ரோல் மாடல் கிராமம். அங்கே இருக்கும் ரேஷன் கடைகளுக்குச் சென்று பார்த்தேன். மிகத் தரமான பச்சரிசி 2 ரூபாய்க்குக் கிடைக்கிறது. கோதுமையும் 2 ரூபாய்தான். டிஜிட்டல் தராசில் நிறுத்துத் தருகிறார்கள். எதுவுமே இலவசமில்லை. 

அங்கே இருக்கும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று பார்த்தேன். தமிழ்நாட்டைப் போலவே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு (ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெனு) இலவசமாகத் தரப்படுகிறது. இந்த உணவை உண்டு பார்த்தேன். நன்றாகவே இருந்தது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் தரப்படுகின்றன. சீருடையும் இலவசம். மாணவர்களுக்கு மட்டுமே இலவசங்கள் தரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாகப் பல்வேறு கருத்துகளுடன் குஜராத்தை வலம் வந்தேன். இனி என் கருத்துகள் சில:

* குஜராத்தில் நாங்கள் சந்தித்த பலரும் சொன்ன விஷயம்: அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு பிரச்சினையில்லாமல் கிடைக்கின்றன.

* எப்போதுவேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும் பூமியான குஜராத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக கலவரங்களே இல்லை. இதைச் சொல்லாதவர்கள் இல்லை.

* கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு நேர்ந்தது தேவைதான் என்று பலரும் நினைக்கிறார்கள். (நான் இதை ஏற்கவில்லை. எந்தக் கலவரம் என்றாலும் நீதி சார்ந்த தீர்ப்பு மட்டுமே சரியானது என்பதே என் கருத்து. நான் சந்தித்தவர்கள் சொன்ன கருத்தாக மட்டுமே இதைப் பதிகிறேன்.)

* குஜராத்திகளின் ரத்ததிலேயே வியாபாரம் ஊறியிருக்கிறது போல. ஒவ்வொருவரும் தங்கள் வியாபாரம் பெரிய அளவில் நடக்க கலவரமற்ற அமைதியே முக்கியக் காரணம் என்று நினைக்கிறார்கள். இதனாலேயே மோதியை ஆதரிக்கிறார்கள்.

* மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமலிருப்பது குறித்த ஒரு பெரிய பெருமையை நான் சந்தித்தவர்களிடன் காண முடிந்தது. மோதியின் சரியான திட்டமிடலே இதற்குக் காரணம்.

* ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே காரணம் என்று ஓர் அதிகாரி காரணம் சொன்னதாக எழுதியிருந்தேன். அதுதான் உண்மை என்றாலும், நியாயமாக அந்தப் பெருமையும் மோதிக்கே சேரவேண்டும். நிர்வாகக் குறைபாட்டுக்கு மோதி காரணமென்றால், அதன் சிறப்புக்கும் மோதியே காரணமாகவேண்டும்.

* அரசு அதிகாரிகள் அஞ்சி வேலை பார்க்கிறார்கள் என்று ஒருவர் சொன்னார். இதை அவர் குறையாகச் சொன்னார். நான் இதை நிறையாகப் பார்க்கிறேன். இந்த அச்சம் இல்லாவிட்டால் அரசு அலுவலகங்கள் எப்படி நடக்கும் என்பது நமக்குத் தெரியும்.

* மோதி ஒரு சர்வாதிகாரி என்றார். ஒரு தலைவருக்குள் சிறிதளவாவது சர்வாதிகாரத்தன்மை வேண்டுமென்றே நான் நினைக்கிறேன். கருத்துகளுக்கு மதிப்பளித்துக் கேட்டுவிட்டு, தன் அறிவால் எதைச் செய்ய நினைக்கிறாரோ அதைச் செய்ய நினைத்து, அதைச் செய்து ஓயும்வரைப் போராடுவது சர்வாதிகாரத்தன்மை என்றால், அதை நான் வரவேற்கிறேன். மோதி ஜனநாயக ரீதியில்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே அவர் ஒரு மக்கள் தலைவர். சர்வாதிகாரத் தன்மைக்கும் சர்வாதிகாரத் தலைவருக்கும் இடையேயான வேறுபாடுகளே முக்கியம். 

* மோதியின் மார்க்கெட்டிங் பற்றி பலரும் குறை சொன்னார்கள். வெற்று மார்க்கெட்டிங் என்றுமே நிலைபெறாது. காரியத்தைச் செய்யாமல் மார்க்கெடிங் மூலமே சாதித்துவிடமுடியும் என்றால், இன்று இந்தியாவில் எல்லா மாநில முதல்வர்களும் இதைச் சுளுவாகச் செய்திருப்பார்கள். மோதியின் மார்க்கெட்டிங்கின் அடிப்படை, அவரது நிஜமான சாதனைகளில் உள்ளது. இல்லையென்றால் அது நிச்சயம் எடுபட்டிருக்காது.

* அகமதாபாத்தில் உள்ள விரைவுப் பேருந்து சேவை பல்வேறு தரப்பினரிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இத்திட்டம் சாத்தியமுள்ள குஜராத்தின் பல்வேறு இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படப் போகிறது.

* நர்மதாவின் தண்ணீரை குஜராத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வாய்க்கால்களைப் பார்க்கும்போது, நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தேன். இதுவே இந்தியாவின் தேவை. ஒவ்வொரு மாநிலமும் என்ன சாதிக்கமுடியும் என்பதை குஜராத் உணர்த்துகிறது. நாங்கள் குஜராத்தில் இருந்தபோது இரண்டு நாள்களாக பெரும் மழை பெய்தது. நர்மதாவில் விழுந்த மழைநீர் அந்த வாய்க்கால்கள் வழியோடி மக்களின் விவசாயத்துக்குப் பயன்பட்டிருக்கும்.

* அகமதாபாத்தில் கொசுத்தொல்லையே இல்லை. 60 வருடங்களாகவே பாதாளச் சாக்கடைகள் இருப்பதால் கொசுத்தொல்லை குறைவு என்று ஒருவர் சொன்னார். 

* அகமதாபாத்தில் மின்சாரக் கம்பிகளின் வயர்கள் வெளியே தொங்குவதில்லை. நிலத்தின் கீழே அவை பதியப்பட்டுள்ளன.

* தொழில்மயமாக்கப்படுவது பற்றிச் சிலர் குறை கூறினார்கள். ஆனால் நான் இதை வரவேற்கிறேன். இட்லி கடையைக்கூட அரசு நடத்தவேண்டும் என்ற அவலநிலை மாறினால்தான் இந்தியா முன்னேற முடியும். ஒரு தொழிற்சாலையில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால்தான் தெரியும், அது எத்தனை பேருக்கு சோறு போடுகிறது என்று. அதைவிட முக்கியம், மறைமுகமாக எத்தனை பேர் அத்தொழிற்சாலையால் பிழைக்கிறார்கள் என்பது. இதையும் ஒருசேர யோசித்துப் பார்த்தால்தான் ஒரு தொழிற்சாலையின் பிரம்மாண்டம் விளங்கும். அந்த வகையில் மோதி மிகச் சரியாகவே திட்டமிட்டுச் செயல்படுகிறார்.

* மின்சார விநியோகம் தனியார்த் துறையின்கீழ் செயல்படக் காரணம், தனியார்த் துறை அதிகம் லாபம் சம்பாதிக்கத்தான் என்ற குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இத்தனைக்குப் பிறகும் மின்சாரம் மானியத்தில்தான் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டோடு ஒப்பிடத்தக்க வகையில்தான் மின்சாரத்தின் விலையும் உள்ளது. ஆனால் தரமோ மிக நன்றாக உள்ளது. கூடவே மின் தட்டுப்பாடும் கிடையாது. எனவே இதில் தனியார்த்துறையைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. மேலும் தனியார்த்துறை லாபம் சம்பாதிக்கக்கூடாது என்பதும், தனியார் நடத்தும் தொழில்களையெல்லாம் அரசே நடத்தி அந்த லாபத்தை அரசே பெறவேண்டும் என்பதும் எனக்கு ஏற்பில்லாதது. அரசின் வேலை நிர்வாகத்தை சீர் செய்வது. அதில் குறை இருந்தால் மட்டுமே நாம் கேட்கவேண்டும்.

* உபரி மின்சாரம் இருந்தால் ஏன் விவசாயிகளுக்கு இலவசமாகத் தரக்கூடாது என்று கேட்கிறார்கள். உண்மையில் இது அரசின் கொள்கை முடிவு. இலவசம் தேவையில்லை என்று ஓர் அரசு முடிவு செய்யுமானால், அதையும் மக்கள் ஏற்றுக்கொண்டு அந்த அரசுக்கே மூன்று முறை வாய்ப்பும் தருவார்களானால், வேறென்ன வேண்டும்! விவசாயிகளுக்கென்றில்லை, பொதுமக்கள் யாருக்கும் எதற்கும் இலவசமே தரக்கூடாது என்பதுதான் சரியான நிர்வாகம்.

* பெண்கள் பாதுகாப்பு முக்கிய நகரங்களில் மிக நன்றாகவே உள்ளது என்று பலரும் கூறினார்கள். அவர்கள் அனைவரும், டெல்லியைப் போன்ற பாதுகாப்பின்மை இங்கே இல்லை என்று சொன்னது முக்கியமானது.

* மாணவர்களுக்குத் தரப்படும் இலவசங்கள் தவிர, வேறு எந்த இலவசமும் மக்களுக்குத் தரப்படுவதில்லை. மாணவர்களுக்குத் தரப்படும் இலவசங்கள் நியாயமானதே. 

* கலவரங்களைப் பற்றி. உண்மையில் கலவரங்களைப் பற்றி ஊடகங்களே பொங்குகின்றன. மக்கள் அதையும் ஒரு நிகழ்வாகவே கடந்திருக்கிறார்கள் என்றுதான் அங்கே பார்த்தேன். மோதிக்கு எதிராக வேறு எந்த ஊழல் புகாரும் சிக்காத நிலையில், ஏற்கெனவே ஊடகங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடதுசாரிகளுக்கும் போலி முற்போக்காளர்களுக்கும் வயிற்றெரிச்சல் இருந்த நிலையில், மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது எரியும் கொள்ளியில் நெய் ஊற்றிய செயலாக இருந்தது. இவர்கள் கையிலிருக்கும் ஒரே ஆயுதம் 2002 கலவரங்கள். இவர்கள் இந்தக் கலவரங்களை மையமாக வைத்து முஸ்லிம்களின் மனசாட்சியைத் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். அதே மனசாட்சியுடனேயே முஸ்லிமகள் தொடர்ந்து மோதியை மூன்றுமுறை வெல்ல வைத்திருக்கிறார்கள் என்பதை இவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. இவர்களே அதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அவை என்ன?

குஜராத் கடந்த பத்தாண்டுகளில் மிக வேகமாக முன்னேறியுள்ளது என்று சொன்னால், உடனே அதை ‘குஜராத்தில் பாலும் தேனுமாக ஓடுகிறது’ என்று சொன்னதாகத் திரிக்கிறார்கள். இவர்களே இதைச் சொல்லிக்கொண்டு, குஜராத்தில் உள்ள பிரச்சினைகளைச் சொல்லி, இதுதான் பாலும் தேனும் ஓடும் லட்சணமா என்று கேட்கிறார்கள். குஜராத் என்றில்லை, இந்தியாவின் இந்த ஒரு மாநிலத்திலும் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு பாலும் தேனும் ஓடாது. இந்தியா என்றில்லை, உலகின் மிக முன்னேறிய எந்த நாடொன்றிலும் சேரிகளும், அந்நாட்டுக்கே உரிய பிரச்சினைகளும் இருந்தே தீரும். எனவே எந்த அளவு ஒரு நாடு (அல்லது மாநிலம்) முன்னேறி வந்துள்ளது என்பதே முக்கியமானது.

குஜராத்தில் லஞ்சம் கேட்பது குறைந்துள்ளது என்றால், உடனே இவர்கள், ‘குஜராத்தில் லஞ்சமே இல்லை என்று சொல்வது பொய்’ என்று வருவார்கள். எப்படி அடுத்த சில பத்தாண்டுகளில் முழுவதும் முன்னேறிய மாநிலத்தை நாம் பார்க்கமுடியாதோ, அதேபோல், லஞ்சமே இல்லாத மாநிலம் ஒன்றையும் நாம் பார்க்கமுடியாது. லஞ்சம் என்பது (கொடுத்தாலும் சரி, பெற்றாலும் சரி) நம் ரத்தத்தில் ஊறிப் போயுள்ளது. இதிலிருந்து மீள நமக்கு ஒரு பெரிய கலாசார மாறுதலே தேவை. அது நிகழ்ந்தால்தான் நாம் லஞ்சமற்ற இந்தியாவைப் பற்றிக் கனவு காணமுடியும். இந்தச் சூழலில், லஞ்சம் குறைவு என்ற நிலையை அடைவே எத்தனை பெரிய சாதனை என்று யோசித்துப் பாருங்கள். இப்படி ஒரு எண்ணம் மக்களிடையே வந்திருப்பதுதான் எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை மறக்கமுடியுமா என்பது இவர்கள் அடுத்த கேள்வி. முஸ்லிம்கள் என்றில்லை, யார் எங்கே கொல்லப்பட்டாலும் மறக்கமுடியாது. இங்கேதான் இவர்கள் போலித்தனமும் வெளியாகிறது. இந்தியாவில் இதுவரை எந்த எந்த மாநிலங்களில் யார் ஆட்சியில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று இவர்கள் யாருக்கும் அக்கறை இல்லை. மோதியைக் குறைசொல்ல வேறு ஒரு வழியில்லை என்பது மட்டுமே இதன் பின்னால் இருக்கும் ஒரே காரணம். பிரபாகரன் தலைமை வகித்த விடுதலைப்புலிகள் அமைப்பால் கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி இவர்கள் வருத்தப்படும் அதே வேளையில், பிரபாகரனையும் ஆதரிப்பார்கள். ஆனால் மோதி என்று வரும்போது, முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைச் சொல்லி, மோதியை நிராகரிப்பார்கள். இத்தனைக்கும், மோதி எங்கேயும் சென்று ஓடி ஒளியவில்லை. மோதி ஒரு ஜனநாயகவாதி. தேர்தலில் போட்டியிட்டு, தன் கட்சி பெரும்பான்பை பெற்றால் தானே முதல்வர் என்று அறிவித்து, மக்களைச் சந்தித்து வெற்றி பெற்று மூன்று முறை முதல்வரானவர். அத்தோடு கலவரங்களில் மூன்றில் ஒரு பங்கு ஹிந்துக்களும் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும் கலவரங்களில்தானே ஒழிய, அரசால் அல்ல. இன்னொரு விஷயம், அக்கலவரங்கள் ஹிந்து சன்னியாசிகள் உயிரோடு எரிக்கப்பட்ட கோத்ரா சம்பவத்திலிருந்து தொடங்குகிறது. அதன் பதிலடியாகவே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. நேரடியாகத் தொடங்கினாலும் சரி, பதிலடியகத் தொடங்கினாலும் சரி, நாம் கலவரங்களை ஆதரிக்கக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஆய்வு என்று வரும்போது ஒரு கலவரம் எப்படித் தொடங்கியது என்பது முக்கியமாகிறது. இத்தனைக்குப் பிறகும் இவர்கள் பிரபாகரனை ஆதரித்து, மோதியை எதிர்த்து தங்கள் போலித்தனத்தைப் பறைச் சாற்றுவார்கள்.

* மோதி பிரதமராவது குறித்து ஒரு குஜராத்திப் பெருமை பெரும்பாலானவர்களிடமும் இருக்கும் என்று தோன்றுகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் வழக்கத்துக்கு அதிகமான ஆதரவு மோதிக்கு உருவாகலாம்.

* இத்தனை ஊடக எதிர்ப்பையும் மீறி மோதியின் செல்வாக்கு குஜராத்தில் பிரமிக்கத்தக்கதாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

* அகமதாபாத், வடோதரா உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோக்காரர்கள் பெரும்பாலும் மீட்டர் போட்டே ஓட்டுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் நமக்கு இதுவே சாதனையோ என்று நினைக்க வைத்துவிடுகிறார்கள்.

* குஜராத்தின் இன்னொரு முக்கியமான விஷயம், மதுவிலக்கு. நம் ஊர்களில் இரவானால் குடித்துவிட்டுத் தள்ளாடி நடந்து நமக்குத் தொல்லைகொடுக்கும் ‘குடி’மக்களை நாம் அங்கே பார்க்க இயலாது. மதுவிலக்கு என்றாலும், குடிக்க மது கிடைக்கிறது என்று பலர் சொன்னார்கள். இருக்கலாம். ஆனால் நிச்சயம் நம் ஊரைப் போலக் குடித்துவிட்டு தெருவில் தள்ளாடி நடந்து நமக்கும் தொல்லை தரும் இழிய நிலை அங்கே இல்லை என்றே சொல்லவேண்டும்.

* பெண்கள் கல்வியைப் பற்றி ஓர் ஆசிரியர் குறைப்பட்டார். உண்மையில் இந்தப் பெண் கல்விக்காக ஒரு மாதம் கல்வி வீணாகப் போனால் பரவாயில்லை என்றுதான் சொல்வேன். இரண்டு காரணங்கள். ஒன்று, ஒரு மாதக் கல்வியைவிட, ஒரு பெண் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது முக்கியமானது, அவசியமானது, இந்தியாவுக்கே ஆதாரமானது. இரண்டாவது, ஒரு மாதக் கல்வி என்பது யதார்த்தத்தில் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. இதற்காகத் தனியே அலுவலர்களை நியமித்தும் இதைச் செய்யமுடியும். ஆனால் இப்போது நடப்பது போல ஆசிரியர்களைக் கொண்டு செய்வதுதான் சரியானது.

* பெண்கள் வீட்டில் பிரசவம் பார்க்காமல் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது கடந்த சில ஆண்டுகளாகக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இது ஆச்சரியம் தருவதாகும். ஏனென்றால் தமிழ்நாட்டில் இந்த விஷயத்தில் நாம் எங்கோ உயரப் போய்விட்டோம்.

* சாலைகளைப் பொருத்தவரை, ஜெகதீசன் ஐ.ஏ.எஸ் சொன்னதுபோல, தமிழ்நாட்டைவிட குஜராத் முன்னேறிவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. ஆனால், தமிழ்நாட்டளவுக்கு வந்துவிட்டது. இதுவே ஒரு சாதனைதான்.

* கல்வியின் தரத்தைப் பொருத்தவரையிலும்கூட தமிழ்நாடு உயரேதான் உள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதே வேகத்தில் போனால் குஜராத் தமிழ்நாட்டைத் தாண்டிச் செல்லும் காலம் தூரத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

இதையெல்லாம்விட நான் முக்கியமாகச் சொல்ல நினைப்பது இதுதான்:

புள்ளிவிவரங்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிட்டு, மக்களின் மனநிலையைத்தான் நான் பார்க்க நினைக்கிறேன். இன்று மக்கள் மனத்தில் நல்ல சாலை தருவதும், நல்ல குடிநீர் தருவதும், விவசாயத்துக்கு நீர் தருவதும், நல்ல தடையற்ற மின்சாரம் தருவதும், கலவரமின்றிப் பார்த்துக்கொள்வதும் அரசின் கடமை என்ற விஷயம் ஆழ ஊன்றிவிட்டிருக்கிறது. இப்படியே இன்னொரு தலைமுறை தொடருமானால், அடுத்து வரும் எந்த ஒரு அரசும் இதைத் தரவேண்டிய கட்டாயம் உருவாகும். இல்லையென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள். இதுவே மோதி செய்துள்ள சாதனை.

இன்னொரு விஷயம், மோதியின் சாதனை என்று நாம் காண்பது எல்லாமே, ஒரு முதல்வரின் கடமைகள்தான். கடமையைச் செய்யும் முதல்வர்களும் அதிகாரிகளும் அருகிவிட்ட நிலையில், மோதி செய்த தன் கடமைகளைக்கூட நாம் சாதனை என்று சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல முதல்வர்களும் தங்கள் கடமையைச் செய்ய முன்வருவார்களானால் அதுவே மோதியின் சாதனையாக இருக்கும்.

இந்த வகையில் மோதி நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

( இதன் சுருக்கப்பட்ட வடிவம் ஆழம் நவம்பர் 2013 இதழில் வெளியாகியுள்ளது )

Share