Tag Archive for கிழக்கு

நான் பங்கேற்ற கிழக்கு பாட்காஸ்ட்கள்

எனக்கு ஒரு வலைத்தளம் இருப்பதே மறந்துவிட்டது! இந்தப் பதிவை எழுதி ஒரு மாதம் ஆகிறது. சில டெக்னிகல் பிரச்சினை காரணமாக வலையேற்ற இயலவில்லை. இப்போதும் ஒழுங்காக வலையேறுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் வலையேற்றி வைக்கிறேன்.

நானும் பத்ரியும் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் குறித்துப் பேசினோம். அந்த கிழக்கு பாட்காஸ்ட்டுகளைக் கீழே தந்துள்ளேன். அதனைப் பார்த்துவிட்டுத் தங்கள் பொன்னான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :> கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் காஷ்மீர் முதல் யுத்தம் என்ற புத்தகம். இதனை எழுதியிருப்பர் ஆண்ட்ரூ வொயிட்ஹெட். தமிழில் நண்பர் பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்பேப்பரில் சில பல கட்டுரைகளை திடீரென்று போட்டுத் தாக்கும் நண்பர் இவர். ஒரு படத்தைப் பார்த்தால் அந்தத் திரைக்கதையை எப்படியாவது மாற்றி எழுதிவிடுவது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று. இவரது வலைப்பதிவு: http://mahadevanbr.blogspot.com/ இதனைப் பொறுத்துக்கொள்ள முடிந்தால், நல்ல நண்பரே! இவரது மொழிபெயர்ப்பு மிக நன்றாக மெருகேறியிருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள மூல நூலோடு ஒப்பிட்டு இதனை நான் சொல்லவில்லை. நான் சொல்வது, நேரடியாக தமிழ் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது எவ்விதத் தடங்கலும் இல்லாமல் படிக்க முடிகிறது என்பதையே. இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த, கிழக்கு வெளியிட்ட ராஜன்பிள்ளையின் கதை புத்தகமும் எனக்குப் பிடித்த ஒன்று. வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபதிரின் கதையைப் படிப்பதைவிட, தோல்வியடைந்த ராஜன்பிள்ளையின் கதையைப் படிப்பதில் ஏதோ ஒரு நெருக்கத்தை என்னால் உணரமுடிந்தது. இலக்கியம் தந்த சோகமாக இருக்கலாம்! கேப்டன் கோபிநாத்தின் வானமே எல்லை புத்தகத்தை மொழிபெயர்த்ததும் இதே மகாதேவனே! கேப்டன் கோபிநாத் புத்தகம் பற்றி பிறிதொரு சமயத்தில் பேசுவோம். காஷ்மீர் முதல் யுத்தம் பாட்காஸ்ட்டைப் பாருங்கள். 

 

அடுத்த பாட்காஸ்ட் – அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம் புத்தகம் குறித்து. ஜெயமோகன் எழுதிய புத்தகம். நான் ஏற்கெனவே இப்புத்தகம் பற்றிய என் பார்வையைப் பதிந்திருக்கிறேன். இந்த பாட்காஸ்ட்டிலும் கிட்டத்தட்ட அதை ஒட்டியே பேசியிருக்கிறேன்.

 

 

அடுத்த பாட்காஸ்ட்கள் – இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு என்னும் நூலைப் பற்றியது. இந்த நூல் இரண்டு பாகங்கள் கொண்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் பி.ஆர். சாரதி. இவர் நம் பா.ராகவனின் தந்தை. இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளில் வந்த தமிழ் நூல்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். குஹா அடிப்படையில் ஒரு மார்க்ஸியர். எனவே ஹிந்துத்துவ வலதுசாரிகளின் அரசியல் மீது இவருக்குக் கோபமே இருக்கும். அதனை இப்புத்தகத்திலும் காணலாம். இதனை ஒட்டியேதான் நான் பேசியிருக்கிறேன். இதனால் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் எதுவும் குறைந்துவிடவில்லை. மற்றவற்றைப் பாட்காஸ்ட்களில் பார்க்கவும்.

 

 

 

 

இனி வரும் பாட்காஸ்ட்டுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் புகழ்பாடும் விதமாக இந்த பாட்காஸ்ட்கள் உள்ளன என்று குற்றம் சொல்லாதீர்கள். எங்கள் நோக்கமே அதுதான். எனவே திறந்த மனத்துடன் இதனை அணுகவும். வழக்கம்போல நன்றி.

Share