Tag Archive for கண்ணதாசன்

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்

முன்குறிப்பு: ஏன் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ புத்தகத்தைப் படித்தேன்? படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான்!

கவிஞர் முத்துலிங்கத்தின் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தகத்தைப் படித்தேன். வானதி வெளியீடு. பல சுவையான, முக்கியமான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜாவின் இசையில் பல முக்கியமான பாடல்களை எழுதி இருக்கிறார். (மரவண்டு கணேஷ் இவர் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்திருந்தார்.) முரசொலியில் வேலை பார்த்து, பின்னர் எம்ஜியாரின் அதிமுகவில் சேர்ந்து, மேலவையில் இருந்து, பின்னர் அரசவைக் கவிஞராக இருந்தவர் என்று நீள்கிறது இவரது வாழ்க்கை.

பொதுவாகவே திரையைச் சேர்ந்தவர்களின் சுயசரிதை என்பது, அவர்களது நன்றியை, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒன்றாகவே இருக்கும். இதுவும் விதிவிலக்கல்ல. பலருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார். எம்ஜியாருக்கும் எம் எஸ் விக்கும் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார் என்று சொல்லலாம். சின்ன சின்ன நினைவுகளைக் கூடக் குறித்துவைத்துவிடும் வேகம், இந்நூல் முழுக்கத் தெரிகிறது. தவறில்லை, எழுதப்போவது ஒரே ஒரு சுயசரிதை என்னும்போது இதைத் தவிர்க்கமுடியாது. அதனாலேயே பல குறிப்புகளின் தொகுப்பாகிவிடுகிறது இப்புத்தகம். உண்மையில் மணிரத்னம் – பரத்வாஜ் ரங்கன் பேட்டி போலத்தான் ஒருவரின் நினைவுகளைப் பட்டியலிடும் நூல் இருக்கவேண்டும். (தமிழில்: மணிரத்னம் படைப்புகள், கிழக்கு வெளியீடு) ஆனால் அதற்கெல்லாம் பெரும் உழைப்பும் திட்டமிடலும் வேண்டும்.

பல நினைவுத் தெறிப்புகளுக்கு நடுவே சில ஆச்சரியங்கள் கிடைக்கின்றன. இளையராஜா 1973லேயே இசையமைத்த பாட்டு; கண்ணதாசனுக்கு எழுத நேரம் இல்லாததால் அவரைப் போலவே எழுதும் வாலியை வைத்து எழுதப்பட்டு கண்ணதாசன் பெயரில் வரவிருந்த பாட்டு (பின்னர் வாலி பெயரிலேயே வருகிறது); ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை என்னாகும் என்று எழுதி எம்ஜியாரின் கோபத்துக்கு ஆளாகி அந்தப் படத்தில் இவர் நீக்கப்பட்டு இன்னொரு கவிஞரான முத்துக்கூத்தன் ‘ஆளப் பிறந்தவளே ஆடிவா’ என்றெழுதுவது; பொன்னெழில் பூத்தது புதுவானில் பாட்டில் இளவேனில் என்று எழுதி, அதைப் பாடும்போது இழவே நில் என்று வருவதால், நிலவே நில் என்று பஞ்சு அருணாசலம் மாற்றியது – இப்படி ஏகப்பட்ட ஆச்சரியமான தகவல் குறிப்புகள் கடல் போலக் கிடைக்கின்றன.

கவிஞர் சுரதா இவரைப் பார்த்து, “அகமுடையார்தானே?” என்று கேட்கிறார். இவர் உட்பிரிவுடன் தன் ஜாதியைச் சொல்கிறார். எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு சுரதா சொல்லும் பதிலைப் புத்தகத்தில் படிக்கவும். ராகவனே என்று எழுதுங்கள் என்று வைரமுத்து சொல்ல, கோபாலனே என்று எழுதியதை மாற்றி ராகவனே ரமணா ரகுநாதா என்று எழுதுகிறார் முத்துலிங்கம். ஜானகி என்ற சொல் வருவதால் எம்ஜியார் பெயரும் வரட்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீராமசந்திரா என்று ஒரு வரியில் எழுதினாராம்.

இப்புத்தகத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் சொல்ல நினைப்பது: இப்புத்தகத்தில் வரும் ஏகப்பட்ட கவிஞர்கள் எழுதிய திரைப்பாடல்களின் பட்டியலை. அந்த அளவுக்கு எல்லாக் கவிஞர்கள் மேலும் நல்ல அபிப்பிராயத்துடன் இருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம். மருதகாசி, உடுமலை நாராயணக்கவி தொடங்கி இன்றைய யுகபாரதி, நா.முத்துக்குமார் வரை அனைவரையும் பற்றி, பற்பல பெயர் மறந்துபோன கவிஞர்களைப் பற்றி, அவர்கள் எழுதிய மறக்கமுடியாத பாடல்கள் பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். இப்புத்தகத்தில் உள்ள எல்லாப் பாடல்களையும் அதை எழுதிய கவிஞர்களின் பெயர்களையும் இசையமைப்பாளர்களையும் மட்டும் தொகுத்து தனியே வைத்தால் பொக்கிஷமாக இருக்கும்.

இளையராஜாவைப் பற்றிய பல நினைவுகளைச் சொல்லி இருக்கிறார். ராஜா எந்த ஒருவருக்கும் உதவவே இல்லை என்றொரு புரளி பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது. பலர் வெளிப்படையாக ராஜா எப்படியெல்லாம் உதவினார் என்று சொல்லத் தொடங்கியதும் அப்புரளி இப்போது அடங்கிவிட்டது. ராஜா எப்படி எல்லாம் உதவினார் என்பதற்கு முத்துலிங்கத்தின் புத்தகம் இன்னொரு சாட்சி.

தனித்தமிழ்த்தாகம் (சில இடங்களில் கமல்காசன் என்றெல்லாம் வருகிறது!) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்!), அரசியலில் பிற்பட்டுப் போன தன்மை என எல்லாம் அங்கங்கே சிதறல்களாக, எவ்வித ஆழமும் இன்றிக் கண்ணில் படுகின்றன. இவற்றையெலலம் விட்டுவிட்டு, இதன் தகவல்களுக்காக நிச்சயம் படிக்கலாம்.

பின்குறிப்பு: கவிஞர் அநியாயத்துக்கு சந்தி வைக்கிறார். ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே என்பதுதான் புத்தகத்தின் பெயரே. புத்தகத்திலும் பல இடங்களில் தேவையற்ற இடங்களில் சந்தி வருகிறது. ஏனென்று தெரியவில்லை.

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்க, வானதி பதிப்பகம், விலை ரூ 400

Share