புனைவில் (உண்மையில் ஒட்டுமொத்தத்தில்) எடிட்டர் பற்றிய தேவைகளை, எல்லைகளைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் ஜெயமோகன்.
அதனால்தான் நான் ஏதேனும் புத்தகத்தை வாசித்து திருத்தி கருத்து சொல்ல நேர்ந்தால், படைப்பாளியின் ஒப்புதல் இல்லாமல் வரிகளைச் சேர்க்கவே மாட்டேன். அவரிடம் தெளிவாகச் சொல்லித்தான் செய்வேன். அவர் அதை மறுக்கும் பட்சத்தில் நான் அதை வற்புறுத்தவும் மாட்டேன். என் கருத்தை, என் நோக்கைச் சொல்வது மட்டுமே என் வேலை என்கிற அளவில் மட்டுமே செயல்படுவேன்.
யாரேனும் என்னை எடிட்டர் என்று சொன்னாலும் தெளிவாக நான் எடிட் செய்யவில்லை, திருத்தம் மட்டுமே செய்தேன் என்று சொல்லி, படைப்பு அவர்களுக்குரியது என்கிற எண்ணத்தை அவர்களுக்கு வரும்படிப் பேசுவேன். ஏனென்றால் நான் செய்ததும் அதை மட்டுமே.
பிரதியை மேம்படுத்துவது மட்டுமே என் நோக்கம். மாறாக மீள உருவாக்குவது அல்ல. அப்படி தேவை என்றால் அதையும் ஆசிரியர்தான் செய்யவேண்டும். அந்த வகையில் அது முழுக்க முழுக்க அவர்களுடைய படைப்பாகிறது.
தமிழின் மிகச் சிறந்த எடிட்டர்களுள் ஒருவர் பத்ரி சேஷாத்ரி. பத்ரியின் பங்களிப்பு, மொழி சார்ந்து மட்டுமின்றி, அதன் கண்டெண்ட் சார்ந்ததாகவும் இருக்கமுடியும் என்பது அவரது ப்ளஸ். குறிப்பாக அபுனைவுகளில்.
எனவே ஒரு எடிட்டராக என் வேலை, பிரதியை ஆசிரியர் மூலம் மேம்படுத்துவது மட்டுமே. ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் என்று பலருடன் அவர்களுக்குச் சொல்லி, அதன் பதிலைப் பெற்றுத்தான் பொதுவாக மாற்றுவேன். நான்கைந்து புத்தகங்களுக்குப் பிறகு நமக்கே தெரிந்துவிடும், ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் எதிர்பார்ப்பது என்ன என்பது.
சில புத்தகங்களை முழுவதுமாக மீள எழுதுவது அவசியமாகும். (ரீ ரைட் செய்வது.) அந்த சந்தர்ப்பம் எப்போது வரும் என்றால், ஒரு துறை சார்ந்த எக்ஸ்பெர்ட் ஒருவர் தன் புத்தகத்தை எழுத முயலும்போது. அப்போது அவர்களுடன் இருந்துதான் அதைச் செய்யவேண்டி இருக்கும். அப்போதும் அதிலுள்ள கண்டெண்ட் விஷயம் ஆசிரியர்களுக்கு உரியதுதான். ஆனால் அதன் மொழிநடை அவருக்கு உரியது அல்ல, ரீ ரைட் செய்பவருக்கு உரியது. தமிழில் பல கொடைகள் இப்படி வருபவைதான். இங்கே ஆசிரியரைவிட அதன் கண்டெண்ட்டே முக்கியம்.
இதனால்தான் சரியாக எடிட் செய்யப்படாத நூல்களும் கூட, அதன் உண்மைத்தன்மைக்காக, அதன் வீரியத்துக்காக, அதன் rawness-க்காக முக்கியம் என்று நான் கருதுகிறேன். சில எடுத்துக்காட்டுகளைச் சொன்னால் சிலர் வருத்தப்படக்கூடும் என்பதால் சொல்லாமல் விடுகிறேன்.
நாவலை எடிட் செய்ய அதன் எல்லைக்குள் நின்று பழகிய ஒருவர் அமைவது ஒரு வரம். நான் எடிட் செய்த புத்தகங்களுக்கு அல்லது திருத்திய புத்தகங்களுக்கு அந்த நியாயத்தை இந்த நிமிடம் வரை நம்புகிறேன் என்பதுதான் எனக்குள்ள நிறைவு.
*
எடிட்டிங் தொடர்பாக சில தனிப்பட்ட அனுபவங்கள் – என் கதை தொடர்பானவை.
நான் எழுதும் கதைகளில் உள்ள பிரச்சினைகளை எத்தனை முறை நான் படித்தாலும் என்னால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் மற்றவர்கள் எழுதுவதில் உள்ள சிக்கலை ஒரே வாசிப்பிலேயே ஓரளவுக்குக் கண்டுகொள்ள முடியும். இப்படிப்பட்ட நிலையில் என்னிடம் அகப்பட்டவர்தான் ஜெயஸ்ரீ கோவிந்த ராஜன். எழுதத் துவங்கியதில் இருந்து சமீப காலம் வரை என் எல்லாக் கதைகளையும் படித்து அதிலுள்ள பிரச்சினைகளை, பொருத்தமின்மைகளை, குளறுபடிகளைச் சொல்பவர் அவர்தான். (யார் கதை எழுதினாலும் எடிட் செய்வார். )
ஒரு கதையில் கதையின் நாயகன் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து எதிர் வரும் பேருந்தில் அடிபட்டுச் சாவதாக எழுதி இருந்தேன். இதன் தர்க்க அபத்தத்தைச் சுட்டிக் காட்டி இருந்தார். அவர் சொல்லாவிட்டால் என்னால் கண்டுபிடித்திருக்கவே முடியாது. அதை, ஓடும் பேருந்தில் இருந்து குதிக்கும் ஒருவனை அப்பேருந்தை முந்திக்கொண்டிருக்கும் இன்னொரு வண்டி அடித்துப் போடுவதாக மாற்றினேன். இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படிப் பலவற்றைச் சுட்டிக் காண்பித்திருக்கிறார். குறிப்பாக இன்னொன்றைச் சொல்லவேண்டும் என்றால், கதையில் நாம் கொள்ளும் கதாபாத்திரத்தின் வயது தொடர்பான குழப்பத்தை. அல்லது தொடக்கத்தில் வரும் கதாபாத்திரம் ஆணா பெண்ணா என்பதை வாசிப்பவர்கள் அவர்களது இஷ்டத்துக்கு எடுத்துக்கொள்ளும் ஆபத்தை. இது தொடர்பாக எனக்கும் முதலில் இருந்தே தெளிவு இருந்தது என்றாலும் கதை எழுதும் வேகத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளவே தோணாது. ஒரு சிறுகதையை அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் எழுதிவிடுவேன். எழுதத் துவங்கி தடுக்கி நின்று மீண்டும் எழுதி – இப்படியெல்லாம் எதுவும் செய்ததில்லை. அதனால் இப்பிரச்சினைகளை எனக்கு எதிர்கொள்ள உதவியர் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
கடந்த ஆறேழு மாதங்களாக அவர் பிஸியாகிவிட்டதால், எழுதிய கதைகளை யாருக்கும் அனுப்பாமல் வைத்திருந்து பிறகு நானே படித்துத் திருத்தி அனுப்புகிறேன்.
இன்னொரு கதை, பதாகையில் வெளி வந்தது. கதையின் முடிவில் எதோ ஒரு நெருடல் இருப்பதாக பதாகை பாஸ்கர் உணர்ந்தார். அதனால் அக்கதையின் முடிவை மட்டும் வெகு சில வரிகளில் மாற்றி அனுப்பினேன். பின்பு படித்துப் பார்த்தபோது அவர் சொன்னது சரி என்றே எனக்குப் பட்டது.
அதேபோல் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதி இன்னும் வெளிவராமல் இருக்கும் சிறுவர் கதைகளில் ஒரு கதையை அரவிந்தன் நீலகண்டன் படித்துவிட்டு வழக்கம்போல பீராய்ந்து போட்டார். அதில் அவர் சொன்ன திருத்தங்கள் முக்கியமானவை. தனிப்பட்ட திருத்தமல்ல அது, ஒட்டுமொத்த தொனியின் திருத்தம்.
இப்படி இன்னொருவர் படிக்கும்போது நம்மால் தொடமுடியாத ஒன்றைத் தொடத்தான் செய்கிறார்கள். இவற்றால் நாம் எழுதியதையே மாற்றுகிறோம் என்பதல்ல. அது ஒரு கருத்து. திருத்தம் செய்தால் நல்லது என்பதான கருத்து. அதைச் செயல்படுத்துகிறோம் அல்லது நிராகரிக்கிறோம். பலமுறை நிராகரித்திருக்கிறேன்.
புனைவுக்கோ அபுனைவுக்கோ வெளியாள் ஒருவரின் பார்வை முக்கியமானது என்று தொகுக்கலாம். அவர் எடிட்டரா திருத்துனரா கருத்தரா என்பதெல்லாம் அவர் செய்யப்போகும் செயலுக்கேற்ற தேர்வுகள் மட்டுமே.