Tag Archive for அவள் பெயர் தமிழரசி

விழித்திரு

‘அவள் பெயர் தமிழரசி’ திரைப்படம் ஒட்டுமொத்தமாக மிக சுமாரானது என்றாலும் அதில் சில காட்சிகள் மாற்றுத் திரைப்படங்களின் வகைமையைச் சேர்ந்தவையாக இருந்தன. எழுத்தாளர்கள்களும் கலைஞர்களும் நடித்திருந்தார்கள். இயக்குநர் என்னவோ முயற்சி செய்யப் பார்த்திருக்கிறார் என்பது புலனாகும். ஆனால் படம் தோல்வி. ஒரு தடவை (எங்கே எப்போது என்று என்ன யோசித்தாலும் நினைவுக்கு வரவில்லை, எதோ ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்தான்) தியடோர் பாஸ்கரனிடம் இப்படத்தைப் பற்றி ஒரு வார்தை பேசியபோது, அவள் பெயர் தமிழரசி படத்தில் இயக்குநருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் என்றும் இல்லையென்றால் படம் சிறப்பாக வந்திருக்கும் என்றும் சொன்னார். இயக்குநர் பெயரையும் அடுத்த சில தினங்களில் மறந்துவிட்டேன்.

இப்போது மீரா கதிரவன் ‘விழித்திரு’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார். முதல் படம் தந்த தோல்வி, அவரை வெகுஜனத் திரைப்படத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது போல. 2014ல் எடுத்து முடிக்கப்பட்ட படம் இப்போதுதான் வெளியாகி இருக்கிறது.

நிகழ்கால தீவிர அரசியல் களத்தைத் திரைப் பின்னணியாகப் படம் எடுப்பது கொஞ்சம் சவாலானது. பிரச்சினைகள் நிறைந்தது. மணிரத்னம் தீவிரப் பிரச்சினைகளைப் பின்னணியாக வைத்துப் படம் எடுப்பார். ஆனால் படத்தின் பிரச்சினைகளைப் பற்றி ஆராயாமல் அதில் காதல் பிரச்சினைகளோ உணர்வு ரீதியான பிரச்சினைகளோ இருக்கும். ஒருவகையில் திரைப்பட இயக்குநர்களுக்கு இந்த சமூகமும் அரசியல் அதிகாரமும் தரும் சுதந்திரம் அதுதான். அதைமீறித் தங்கள் வாழ்க்கையையே பணையம் வைக்க இயக்குநர்களுக்கு தைரியம் வேண்டும். அப்படியே பணையம் வைத்தாலும் இந்த சமூகத்தில் சாதிக்கப்போவது என்ன, இந்த சமூகம் இதை எப்படிப் பார்க்கப் போகிறது என்பது கேள்விகள்.

விழித்திரு திரைப்படம், ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். மணிரத்னத்தின் பின்னணிக்கே அதைக் கழுவி ஊற்றுவார்கள் விமர்சகர்கள். இதில் இயக்குநர் இந்த ஆணவக் கொலை பற்றிய விஷயத்தை, மணிரத்னம் அளவுக்குக் கூடப் பின்னணியாகக் கொள்ளவில்லை. ஒரு காரணமாக மட்டுமே கையாண்டிருக்கிறார். இதைப் பற்றிய அலசல்களோ விவரிப்போ எதுவுமே இல்லை. ஒரு பரபரப்புத் திரைப்படத்துக்கான பின்னணி மட்டுமே என்ற அளவில் இதைப் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் இதை மிக சீரியஸான படம் என்று வகைப்படுத்த முடியாது.

அரசியல் கொலை என்ற பின்னணியை விட்டுவிட்டுப் பார்த்தாலும், படம் அட்டகாசமான த்ரில்லர் என்று சொல்லக்கூடிய வகையிலும் அடங்கவில்லை. ஒரே இரவில் நான்கு கதைகளைச் சொல்லும் வகைமைத் திரைப்படம். படம் எடுத்து முடிக்கப்பட்டு உடனே வெளியாகி இருந்தால் இதில் ஒரு சுவாரஸ்யம் இருந்திருக்கலாம். இது போன்ற வகைமைகளில் பல படங்கள் வந்துவிட்டன. ‘மாநகரம்’ சட்டென நினைவுக்கு வரும் உதாரணம்.

‘ஆய்த எழுத்து’ திரைப்படம் மூன்று புள்ளிகளை இணைக்கும் ஒரு படம். ஆனால் அதன் பின்னணி மிக முக்கியமானது, அழுத்தமானது. அதில் வரும் மூன்றாவது புள்ளி, மற்ற இரண்டு புள்ளிகளுடன் மிகப் பின்னால்தான் இணையும். அதுவே நம்மை அதிகம் பாதிக்காத புள்ளி. அதேசமயம் சித்தார்த் தொடர்பான காட்சிகள், அக்காட்சிகளுக்கே உரிய நியாயத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. அப்படி இருந்தும் எடுபடவில்லை. (தனிப்பட்ட அளவில் ‘ஆய்த எழுத்து’ எனக்கு மிகப் பிடித்த படம், மிக முக்கியமான படம்.) இது போன்ற திரைப்படங்களில் நான்கு வேறு வேறு சம்பவங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு குறுக்கீடு நல்ல சுவாரஸ்யத்தைத் தரலாம். இது யதார்த்தம் இல்லை என்பது சரிதான். ஆனாலும் இதுவே நம்மைக் கட்டிப் போடும் ஒன்று. அப்படி ஒன்று இப்படத்தில் இல்லை.

அதுபோக, நான்கு கதைகளுமே நம்பகத்தன்மை இன்றிச் செல்கின்றன. எனவே இவை அனைத்தும் முட்டி நிற்கும்போது நமக்கு எவ்விதப் பரபரப்பும் உண்டாவதில்லை. இது ஒரு பலவீனம். எப்படியே எல்லாவற்றையும் இழுத்துவந்து அதை ஒரு அரசியல் பின்னணியில் ஒட்டச் செய்வதாலோ, கதாபாத்திரத்தின் பெயர்களைத் தன் கொள்கைக்கேற்ப வைப்பதாலோ ஒரு படம் எதையும் மக்களுக்குச் சொல்லிவிடாது என்றே நினைக்கிறேன்.

டி.ராஜேந்திரரின் குத்துப்பாட்டு வைக்கப்படவேண்டிய அவலத்தை இயக்குநர் மீரா கதிரவன் வெளிப்படையாகச் சொன்னார். உண்மையில் இந்தக் குத்துப்பாட்டு படத்துக்கு மிகப்பெரிய தடையைத்தான் தருகிறது. இதை ஏன் விநியோகஸ்தர்கள் வேண்டும் என்கிறார்கள் என்பதே புரியவில்லை. அதிலும் டி.ராஜேந்திரர் ஆடுவது, நமக்குத் தரப்படும் இனிமாதான்.

2014ல் எடுக்கப்பட்டும் படம் இன்றுவரை ஃப்ரஷாக இருக்கிறது என்பது ஆச்சரியம். ஒரு தடவை பார்க்கலாம் என்ற ரீதியில் இருப்பது பொருளாதார ரீதியாகப் படத்துக்கு பலம் சேர்க்கலாம். இன்னும் சுதந்திரமான வாய்ப்பளிக்கப்பட்டால் மீரா கதிரவன் மிக நல்ல படங்களை எடுக்கலாம். அந்த வாய்ப்பு அவருக்கு அமையட்டும். அதற்கான அரசியல் சூழலும் மலரட்டும்.

Share