Tag Archive for அம்மா

மடங்கள்

எனக்கு மடம் என்பது சின்ன வயதில் எப்படி அறிமுகமானது என்றால், வருடத்துக்கு மூன்று நாள்கள் அங்கே சாப்பிடப் போவோம் என்ற அளவில்தான். அதுவும் எனக்கு எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்களே. பின்னால் அதற்குள்ளே இருந்த பிரிவுகள் எல்லாம் தெரியவந்தபோது வெட்கமாகிப் போனது. போன எல்லா மடங்களிலும் ராகவேந்திரரையே மனதுக்குள் நினைத்து, பொத்தாம் பொதுவாக ‘பூஜ்யாய ராகவேந்திராய’ சொல்லிக் கும்பிட்டிருக்கிறேன். தெரிந்ததும் அந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே. எங்கள் மடமான வ்யாஸராய மடம் என்பது கூட, கல்யாணக் காரியங்களுக்கு மட்டுமே யாரோ சொல்லி, அந்தப் பெயர் என் செவிக்கு எட்டும் முன்னரே மறைந்துபோன ஓர் ஒலியாகவே இருந்தது.

ராகவேந்திரரின்ஆராதனையின் மூன்று நாள்களில், அம்மா எங்களை வம்படியாக அழைத்துக்கொண்டு மடத்துக்குப் போவாள். ஆராதனை என்பது ஸ்ரீ ராகவேந்திர் ஜீவ சமாதி அடைந்த நாள் என்பது கூட எனக்கு அப்போது தெரியாது. மதுரையில் பேச்சியம்மன் படித்துறையில் இருக்கும் மடத்துக்குத்தான் அதிகம் போவோம். அதற்கு முன்னரும் பின்னரும் திருநெல்வேலி ஜங்க்‌ஷனில் இருக்கும் மடத்துக்குப் போயிருந்தாலும் அது மதுரையின் மடம் அளவுக்குப் பெரியதல்ல.

மதுரை மடத்தில் சாப்பாடு போட நேரமாகும். பரிமாற ஆள் இருக்காது. கூட்டம் அம்மும். அதுவும் ரஜினியின் ஸ்ரீ ராகவேந்திரர் படத்துக்குப் பிறகு கேட்கவே வேண்டாம். சாப்பாடு பரிமாறி அதைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவி வெயிலும் கல்லும் புழுதியும் சகதியும் இருக்கும் இடத்தில் கை கழுவி விட்டு, அங்கிருந்து அழகரடியில் இருக்கும் வீட்டுக்கு நடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆட்டோ, ரிக்‌ஷா எதுவும் வைக்க மாட்டார்கள். அவ்வளவு வறுமை. பேச்சியம்மன் படித்துறையில் என் அம்மாவுக்கு தூரத்து உறவினர் வேதவியாஸ ராவ் என்று ஒருவர் இருந்தார். வெயிலில் ஏன் அலைகிறீர்கள், எங்கள் வீட்டில் தங்கி, காப்பி சாப்பிட்டுவிட்டு, வெயிலாறப் போகலாம் என்று சொல்வார்கள். அம்மா சந்தோஷமாக அங்கே தங்குவார். ஆனால் எனக்கு என்னவோ போல இருக்கும். (அந்த மாமாவும் அத்தையும் தங்கமானவர்கள். நான் சொல்வது அந்த வயதில் என் மன ஓட்டத்தை.)

ஒவ்வொரு சமயம் பக்கத்தில் இருக்கும் தேவி தியேட்டரில் மதியம் படம் பார்க்கலாம் என்று சொல்வார்கள். அன்று சந்தோஷமாக மடத்துக்குப் போவேன். அன்றைக்குப் பார்க்க இலை போட நேரமாகிவிடும். எரிச்சலாக வரும்.

பரிமாறுபவர்கள் அத்தனை பேரும் தன்னார்வத்தின் பேரில் உதவுபவர்கள். அதில் ஒருவர் மதியம் ஒரு மணிக்குப் பரிமாறிவிட்டு, நடுரோட்டிலேயே பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவார். அம்மா என்னை அழைத்துக் காண்பிப்பார், பாத்தியா எவ்ளோ பக்தின்னு என்று சொல்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

மடத்துக்கு இப்படிச் சாப்பிடப் போகணுமா என்று அடிக்கடி அம்மாவுடன் சண்டை போடுவோம். அவனவன் குருகளு பிரசாதம் கிடைக்காதான்னு ஃபாரின்ல இருந்து வர்றான், பக்கத்துல இருந்துட்டு போறதுக்கு என்ன கொள்ளை என்பதே என் அம்மாவின் பதிலாக இருக்கும். சாப்பாடு போடலைன்னா நீ மட்டும் போவியா என்று எதாவது சொல்லி மடக்குவோம்.

மதுரை மடத்தில் சாப்பாடு போட எப்போதும் தாமதாகிவிடும். செய்வார்கள், செய்வார்கள், பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். அங்கிருக்கும் மண்டபத்தில் யாரையாவது பாட அழைத்திருப்பார்கள். வீரமணி ராதா அடிக்கடி வருவார்கள். அவர்கள் பாடுவார்கள், பாடுவார்கள், பாடிக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அப்போது 11 முதல் 15 வயது வரை இருக்கலாம். சரியாகப் பன்னிரண்டு மணிக்கெல்லாம் வயிறு பசியில் கூவத் தொடங்கிவிடும். மத்தியானம் நல்ல சாப்பாடு என்று பெரும்பாலும் காலையில் எதாவது மோர் சாதம் இருக்கும். அதுவும் இல்லையென்றால், சாமி கும்பிடப் போகும்போது சாப்பிடக் கூடாது என்று சொல்லி, வெறும் வயிறாக இருக்கும். அந்தப் பசியில் 2 மணி வரை சாப்பாட்டுக்காகக் காத்திருக்கும்போது எரிச்சலாக வரும்.

திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள மடத்தில், பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பரிமாறுவார்கள். மடத்தில் இடம் கம்மி. பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும்போதும் அம்மா விடவில்லை. அரை நாள் லீவு போட்டுக்கிட்டு வா, இல்லைன்னா நான் தனியா வீட்டுக்குப் போகணும் என்றெல்லாம் சொல்லி, என்னை வர வைத்துவிடுவார். நானும் சாப்பிட்டுவிட்டு அம்மாவை பஸ் ஏற்றிவிட்டு, எதாவது படம் பார்க்கப் போய்விடுவேன். அப்படிப் பார்த்த ஒரு படம் மலைச்சாரல் என நினைவு. கதாநாயகியின் போஸ்டரைப் பார்த்து அந்தப் படத்துக்குப் போய் பல்பு வாங்கினேன் என நினைக்கிறேன்.

மடம் என்பது அதன் தேவையுடன் எங்களுக்குப் பின்னர் அறிமுகம் ஆனது. அது வருடத்துக்கு மூன்று நாள் சாப்பிடும் இடம் மட்டுமல்ல, அதனால் நமக்கு நிறைய சமயக் கடமைகள் நிறைவேறும் என்று புரியத் தொடங்கியது எப்போதென்றால், என் தாத்தாவின் மரணத்தின் போது. பத்து நாள் காரியங்களை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீ பாத ராஜர் மடத்தில் செய்யும்போதுதான் உணர்ந்தோம். அப்போதுதான் எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டதும். பின்னர் சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அப்பாவுக்கும் எங்கள் மாமாவுக்கு அதே மடத்தில் வைத்தே காரியங்கள் நடந்தன.

பின்பு சென்னைக்கு வந்து செட்டில் ஆனோம். அம்மாவுக்குத் தெரியாத ஊர். ஆனாலும் விடவில்லை. ஆராதனை சமயத்தில் எப்படியாவது என்னை மடத்தில் விட்டுவிடு என்றார். நான் காலையிலேயே தி.நகரில் இருக்கும் அலுவலகத்துக்குப் போய்விடுவேன். என் மனைவி என் அம்மாவுக்கு ஒரு ஆட்டோ அமர்த்தித் தருவாள். அலுவலகத்துக்கு அம்மா வந்துவிட, அங்கிருந்து அருகில் இருந்த தி.நகர் மடத்துக்குக் கொண்டு போய்விடுவேன். நீண்ட வரிசை இருக்கும். அம்மா வரிசையில் நின்றிருப்பாள். ஏம்மா இப்படி கஷ்டப்படற, சாப்பாட்டுக்கா பஞ்சம் என்று கேட்பேன். நீ போடா என்று சொல்லிவிடுவாள். வரிசையில் அம்மா நின்றிருந்த சித்திரம் கண்களில் நீருடன் இப்போதும் எட்டிப் பார்க்கிறது. எப்படிச் சாப்பாட்டுக்காக அம்மா வரிசையில் நிற்கிறாள் என்கிற கேள்வி என்னை வாட்டி எடுத்தது. ஆனால் அதை அம்மா ஒரு சுக்காகக் கூட மதிக்கவில்லை.

திருநெல்வேலியில் பாட்டபத்து-வில் வைக்கதஷ்டமி நடக்கும். அன்று ஊர்ச்சாப்பாடு போடுவார்கள். அதற்கும் அம்மா எங்களை அழைத்துக்கொண்டு போய்விடுவாள். ஆனால் மடத்தில் ஆராதனைக்கு வந்தே ஆகவேண்டும் என்னும் அளவுக்கு வற்புறுத்தமாட்டாள். ஒரு தடவை போய்விட்டு, பின்னர் வரமுடியாது என்று மறுத்துவிட்டேன். அம்மாவையும் அலையவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் மடத்துக்கு ஆராதனைக்குப் போவதை மட்டும் எங்களால் தடுக்கமுடியவில்லை.

அம்மா போய் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ராகவேந்திரரின் ஆராதனை துவக்க நாளைக்கு இரண்டு நாள் முன்னர் அம்மாவின் திதி வரும். நான் அம்மாவுக்குத் திதி செய்யப் போகும்போது மடமே பரபரப்பாக இருக்கும். ஏனென்றால், அம்மாவின் திதிக்கு முதல்நாள் பெரும்பாலும் வரலக்ஷ்மி பூஜை இருக்கும். (சில சமயம் மாறும்.) திதி அன்றேவோ அல்லது மறுநாளோ ரிக் வேத உபகர்மா இருக்கும். அதற்கு மறுநாள் ராகவேந்திரரின் பூர்வ ஆராதனை ஆரம்பித்துவிடும். எனவே முழு பரபரப்பில் இருக்கும் மடம். திதி அன்று எப்போதும் சூழ்ந்திருக்கும் அம்மாவின் நினைவுகளைத் தாண்டி, மடத்தில் சாப்பிட அம்மா எடுத்துக்கொண்ட சிரத்தை என்னை மூழ்கடிக்கும்.

இந்த முறை ஞாயிற்றுக் கிழமை ராகவேந்திரரின் உத்தர ஆராதனை வந்தது. என் பையனையும் மகளையும் அழைத்துக்கொண்டு போக முடிவு. என்னைப் போல் அவர்கள் முரண்டெல்லாம் பிடிக்கவில்லை. உடனே சரி என்று சொல்லிவிட்டார்கள். அடிக்கடி போய் பழகிவிட்டதால் அவர்களுக்கு அது வித்தியாசமானதாகத் தெரியவில்லை போல. அதுமட்டுமல்ல, மடங்கள் இப்போதெல்லாம் அலாரம் வைத்தது போல் சரியாகப் பன்னிரண்டரைக்குள் இலை போட்டுவிடுகின்றன. உதவி செய்யவும் ஆள்கள் பலர் இருக்கிறார்கள். மேலும், மகனும் மகளும் மதியம் 1 மணி வரை பசியுடன் இருக்கப் பழகிக் கொண்டு விட்டார்கள். எனவே அவர்களுக்கு இது ஒரு கஷ்டமான விஷயமாகவே தெரியவில்லை. நான் செய்த அழிச்சாட்டியங்கள் எல்லாம் ஒரு பக்கம் என் மனதில் ஓட, என்னையறியாமல் என் வீட்டில் நான் சொன்னேன், ‘குருகளு பிரசாதம். கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்.’ அம்மாவுக்குப் புரையேறி இருக்கும்.

Share

அம்மா – சொல்லில் அடங்காதவள்

அம்மாவின் மரணம் கடந்த ஞாயிறு நள்ளிரவு 1.20 மணிக்கு நிகழ்ந்தது. கடந்த சில மாதங்களாகவே அம்மா மெல்ல மெல்ல மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இப்படி இதற்கு முன்பும் இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. அவற்றில் தப்பித்துக்கொண்டவரை இந்த முறை விதி வென்றுவிட்டிருந்தது. சென்னையில் என் வீட்டில் இருந்து என் அண்ணன் வீட்டுக்கு திருநெல்வேலிக்குப் போகவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். கடந்த மே மாதம் திருநெல்வேலிக்குச் சென்றார். அப்போதே உடல்நிலை மிகவும் பலவீனமாகவே இருந்தது. ஆனாலும் பிடிவாதமாக திருநெல்வேலி சென்றே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். திரும்ப அம்மா சென்னைக்கு வரமாட்டார் என்று அப்போதே என் மனதில் பட்டது. அத்துடன் அவரது இறுதி யாத்திரை திருநெல்வேலியில் நிகழ்வதுதான் நியாயம் என்றும் எனக்குத் தோன்றியது.

அம்மாவைப் பற்றி எழுதவேண்டும் என்கிற உணர்வு உள்ளது. ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. கடலைக் குடிக்கப் புகுந்த பூனை என்பதைப் போலவே உணர்கிறேன். பிறந்த நொடி முதல் இந்நிமிடம் வரை எப்போதும் அம்மாவின் ஒரு பிள்ளையாகவே நான் இருந்திருக்கிறேன். அன்போ சண்டையோ எல்லாமே அம்மாவுடன் என்றாகிய வாழ்க்கை என்னுடையது. இன்று அம்மாவை இழந்து நிற்கும்போதுதான் அம்மாவின் தாக்கம் என்ன என்பது முழுமையாகப் புரிகிறது.

பிறந்த மூன்று மாதத்தில் என்னைப் பெற்ற லீலா அம்மா மரணம் அடைந்தபோது என்னைக் கையில் வாங்கிக்கொண்டவர் என் அம்மா சரோஜா அம்மா. அன்றுமுதல் இன்றுவரை அவரது உலகம் முழுக்க முழுக்க என்னைச் சுற்றியதாகவே இருந்திருக்கிறது. என்னிடம் என்றில்லை, என் வீட்டில் உள்ள ஒவ்வொருவர் மேலும் அவர் உண்மையான அன்புடனும் அக்கறையுடனும் இருந்தார். அந்த அன்பும் அக்கறையுமே அவரது பலம். அதில் போலித்தனம் இருக்காது. கோபம் இருந்தால் அதை உடனே வெளியே காட்டிவிடுவார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் என் அம்மாவின் குடும்பமாகவே இருந்தது. ஒவ்வொருவருக்கும் இருந்த தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் என் அம்மாவின் பங்களிப்பு இருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. படிப்பறிவு இல்லை. பட்டறிவு மட்டுமே. எதைக்கொண்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும் கையில் எடுத்தார்? ஒரே பதில், உண்மையான அன்பு என்பது மட்டுமே.

எல்லாரையும் தாண்டி என் மேல் அதிக ஒட்டுதலாக இருந்தார் என்பதை நான் எப்போதும் உணர்ந்தே இருக்கிறேன். என் குடும்பத்தினர் அனைவருமே அதை உணர்ந்திருந்தார். என் அண்ணன் அடிக்கடிச் சொல்வது, என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய அதிர்ஷ்டம் இப்படி ஒரு அம்மா எனக்குக் கிடைத்திருப்பது என்பது. அது உண்மைதான். இப்படி ஒரு அம்மா கிடைப்பதற்குப் பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்கவே வேண்டும்.

சேரன்மகாதேவியில் ஒரு நாளில் மாலைப் பொழுதில் பேருந்து நிலையம் அருகில் இருந்த ஓரிடத்தில் வைத்து எதோவொரு பத்திரத்தில் கையெழுத்திட்டார்கள் என் அம்மாவும் அப்பாவும். (அம்மாவுக்கு இணையாகக் கொண்டாடப்படவேண்டியவர் என் அப்பா. அப்படி ஒரு நல்ல இதயம் கொண்டவர் அவர். இவர்கள் இருவருக்கும் மகனாக இருப்பது ஒரு பேறு.) அது என்னை அவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொண்ட தினம். அதற்கு முன்பும்கூட நான் அவரது மகனாக மட்டுமே அறியப்பட்டிருந்தேன். ஆனாலும் சட்டரீதியாக எடுத்துக்கொண்டார்கள். அந்தப் பத்திரத்தில் அவர்கள் கையெழுத்திட்ட காட்சி இன்னமும் மங்கலாக நினைவிருக்கிறது. அதன் கடனை நான் அவருக்குக் கொள்ளி வைப்பதன் மூலமாக அடைக்கவேண்டும் என்பதே என் அம்மாவின் ஒரே ஆசை. அதைச் செய்துமுடித்தேன். கடைசியாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும்போதுகூட, ‘என் கடைசி காலத்துல நீ கூட இருக்கணும். சங்கரர் மாதிரி வந்து சேரணும்’ என்றார். எங்கே இருந்தாலும் வருவேன் என்று சத்தியம் செய்துவைத்தேன்.

அம்மாவை எப்படி வரையறுப்பது என்று யோசித்தால் உணவின் வடிவமாகவே வரையறுக்கத் தோன்றுகிறது. அம்மாவின் ஒரே எண்ணம், பிள்ளைகள் பசியோடிருக்கக்கூடாது என்பதே. அம்மா தன் பதினெட்டாவது வயதில் என் அப்பாவைக் கைப்பிடித்து வீட்டுக்குள் நுழையும்போது அவரது நாத்தனாருக்கு வயது 30 நாள். அதாவது 30 நாள் குழந்தை. மைத்துனனுக்கு வயது 6 அல்லது 7. இப்படி குழந்தைகளுடனேயே அவரது மண வாழ்க்கை துவங்கியது. ஆனால் அவருக்கென்று ஒரு குழந்தை பிறக்கவில்லை. பெரிய குடும்பம். எல்லாரையும் அரவணைத்து அதிர்ந்து அடக்கி என சகலமும் செய்து குடும்பத்தின் இணையில்லாதவர் ஆனார். அம்மா செய்த பணிவிடைகளை இன்றுவரை நினைவுகூரும் என் சித்தப்பாவும் அத்தையும் அடிக்கடிச் சொல்வது, எங்க அம்மா எங்களைப் பெத்தா, செஞ்சது எல்லாமே அண்ணிதான் என்பது. இது வாய்வார்த்தை இல்லை, உண்மை. இன்றுவரை பிறந்த குழந்தைகள் அத்தனை பேரையும் என் அம்மாவுக்கு உயிர். குழந்தைகள் வயிற்றுப் பசியுடன் இருக்கக்கூடாது என்பது மட்டுமே அம்மாவின் முதலும் கடைசியுமான குறிக்கோள். இதனாலேயே என் வீட்டில் பல சின்ன சின்ன சண்டைகள் நிகழ்ந்ததுண்டு. காப்பி, டிஃபன், சாப்பாடு எனக் குழந்தைகளுக்கு எல்லாமே அந்த அந்த நேரத்தில் நிகழவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்.

 

நான் ப்ளஸ் டூ படித்தபோது பள்ளி முடிந்து மாலை 5.45 மணிக்கு வீட்டுக்கு வருவேன். அடுத்த டியூஷன் 6 மணிக்கு அந்த பதினைந்து நிமிடத்துக்குள், குழம்பு சாதம், ரசம் சாதம், மோர் சாதம் எனப் பிசைந்து கையில் போட்டுத்தான் அனுப்பி வைப்பார். கையில் பிசைந்து உருண்டை பிடித்துக் கொடுப்பது என் அம்மாவின் வழக்கம். கடந்த பத்து வருடங்களில் அவருக்குக் கை வலி வந்துவிட்டதால் இதைத் தவிர்த்துவிட்டார். அதற்கு முன்பு வரை எப்போதும் கையில் உருண்டை பிடித்துக் கொடுப்பதுதான் அவரது பாணி. அப்படியேதான் என் உடல் வளர்ந்தது. மிக மோசமான சமையல்கூட என் அம்மாவின் கை வழியே வரும்போது எனக்குப் பிடித்துப் போனதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

அம்மா சமையல் செய்த காலங்கள் மிகக் குறைவு. எப்போதும் சுற்றுவேலையே அவரது முதல் பணி. சமையல் என்று செய்தது, நானும் அம்மாவும் அப்பாவும் மதுரையில் தனித்து இருந்த ஒரு வருடத்திலும், பின்னர் அக்கா கல்யாணம் ஆகிச் சென்றபிறகான ஒரு வருடத்திலும்தான். அண்ணி வீட்டுக்குள் காலை வைத்த மறுநாள் முதல் சமையலறை பக்கமே அம்மா போகவில்லை. அம்மாவின் சமையல் கட்டுசெட்டாக இருக்கும். சிக்கனத்தின் உச்சம் அம்மா. ஒருவகையில் கஞ்சம் என்றுகூடச் சொல்லலாம். மதுரையில் ஒரு டவராவில் சாம்பார், ஒரு டவராவில் ரசம் என வைப்பார். ஆச்சரியமாக இருக்கும். அம்மா அட்டகாசமாகச் செய்வது, பாகல் பொறியல், பிட்ளை, வெந்தயக் குழம்பு, மோர் களி போன்றவை. எப்போதும் ஒரு சிட்டிகை உப்பு தூக்கலாகவே இருக்கும் அவரது சமையலில். எத்தனை சொன்னாலும் அது சரியாகவே ஆகாது.

அம்மாவின் பாதி வாழ்க்கை வரை முழுக்க கஷ்ட ஜீவனம். என் அண்ணா வேலைக்குச் செல்லவும்தான் நாங்கள் நல்ல உணவையே பார்க்க ஆரம்பித்தோம். அதுவரை அம்மா அத்தனை கஷ்டத்தையும் வெகுமான மன உறுதியுடன் எதிர்கொண்டார். இரண்டு கைகளில் பத்து பத்து கிலோ அரிசி மூட்டைகளை ரேஷன் கடையில் வாங்கிச் சுமந்துகொண்டு வரும் காட்சி இன்னும் கண்ணில் உள்ளது. மண்ணெண்ணெய்க்கு வரிசையில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடப்பார். மதுரையில் தண்ணீர்ப் பஞ்சத்தில் நீருக்காக அலைந்ததெல்லாம் இப்போது நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படியெல்லாம் அம்மா வளர்த்த என் அக்கா அடிக்கடிச் சொல்வார், அம்மாவின் வளர்ப்பு என்பதால்தான் எனக்குப் புகுந்த வீட்டில் மரியாதை என்று. உண்மைதான். அம்மாவுக்கும் அக்காவுக்குமான உறவை வரையறுப்பது கஷ்டம். எப்போது பிறாண்டிக் கொள்வார்கள், எப்போது கொஞ்சிக் கொள்வார்கள் என்று சொல்லவே முடியாது. ஆனால் உள்ளூர இருக்கும் அன்புக்கு எக்குறையும் இல்லை.

அம்மாவின் இளமைப் பருவத்தில் அவரது ஆர்வம் மூன்று விஷயங்களில் இருந்தது. இதுவே அவரது வாழ்க்கையாகக் கொள்ளலாம். ஒன்று, தொடர்கதைகளை பைண்ட் செய்து வைப்பது. கே.பாலசந்திரின் மூன்று முடிச்சு நாவலை இப்படி நான் வாசித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் வண்ணப் படங்களுடன் பைண்ட் செய்து வைத்திருந்தார். உறவினர் ஒருவர் அதை லவட்டிக்கொண்டு போனதை கடைசிக் காலம் வரையில் புலம்பிக்கொண்டிருந்தார். இரண்டாவது ஆர்வம், சினிமா பார்ப்பது. வாரத்துக்கு இரண்டு மூன்று படங்கள் அசராமல் பார்ப்பார் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை சிவாஜி கணேசனின் 275 படங்கள் அடங்கிய பட்டியல் வெளி வந்திருந்தது. அதில் 197 படங்கள் பார்த்திருந்தார். சிவாஜி கணேசன் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற அளவுக்கு சிவாஜி வெறியர்கள் சூழ் குடும்பம் எங்களது. மூன்றாவது ஆர்வம், ரேடியோவில் பாட்டுக் கேட்பது. இரவில் கண் விழித்து டீ போட்டுக் குடித்துக்கொண்டு பாடல் கேட்டிருக்கிறார். இவையெல்லாம் அவரது 35வயது வாக்கில் மெல்ல விட்டுப் போயின. இவை அனைத்தையும் எங்கள் குடும்ப நலன் காவு வாங்கிக் கொண்டிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

 

கடைசிப் பத்து வருடங்களில் அம்மாவின் ஒரே பொழுது போக்கு சன் டிவியின் மெகா சிரீயல் என்றானது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு வாக்கில் சங்கரா டிவியும் திருப்பதி தேவஸ்தானமும் வந்தபோது, அவற்றுக்குள் அப்படியே அமிழ்ந்து போனார். கடைசிவரை மெகா தொடரும் கடவுளர் சானலுமே அவரது ஒரே பொழுது போக்காக இருந்தது. டிவியைப் பார்த்துக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வார். இங்க வாடா வந்து கும்பிட்டுட்டுப் போ என்று கூப்பிடுவார். இந்த மூன்று சானல்களுக்கும் மனதார நன்றி சொல்ல விரும்புகிறேன்.

 

அம்மாவுக்குப் பேரக் குழந்தைகள் மேல் உயிர். மொத்தம் 8 பேரக் குழந்தைகள். ஒவ்வொருவரும் உயிர்தான். யாரையும் தனித்துச் சொல்லமுடியாது என்றாலும், முதல் பேரனான சுஜித் மேல் கொஞ்சம் வாஞ்சை அதிகம்தான். அதேபோல் கடைசி பேரனான நாராயண் மேலும் அத்தனை பிரியம். என் இரண்டு குழந்தைகள் மேலும் உயிராக இருந்தார் என்றாலும், மஹிதான் அவரது வாழ்க்கை என்ற அளவுக்கு ஒட்டிப்போனார். அபிராமை வளர்த்ததே அவர்தான் என்பதில் அவருக்கு அத்தனை கர்வம். மஹி பிறந்தபோது, பொண்ணா, சரி சரி, ஆணோ பொண்ணோ என்ன இப்போ என்றே சொன்னார். பின்னர் பலமுறை, இந்த வைடூரத்தையா வேணான்னு நினைச்சேன் என்று சொல்லி சொல்லிக் கொஞ்சுவார். தன்னுடைய வாரிசி மஹிதான் என்று உறுதியாக நம்பினார். தான் இறந்துவிட்டால் தன் பேரக் குழந்தைகளைப் பார்க்கமுடியாது என்பது மட்டுமே அவரது பெரிய சோகமாக இருந்தது. இதைச் சொல்லி பல தடவை அழுதிருக்கிறார். தான் இறந்துவிட்டால் தன் உடலைச் சுற்றி எத்தனை பேர் அழுதாலும், சுற்றி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் குரலே தன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்பது அவரது நம்பிக்கை. அது அப்படியே நிகழ்ந்தது. குழந்தைகள் அத்தனை பேரும் சோகத்தின் ஆழம் புரியாத வயதில் விளையாடிக்கொண்டிருக்க, நாங்கள் யாரும் அவர்களைக் கண்டிக்கவே இல்லை. ஏனென்றால் அம்மா விரும்பியதே அதைத்தான்.

கடைசி வரை எப்படியும் பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் தன் இறுதி மூச்சையும் அம்மா விட்டார். அம்மாவின் நினைவுகள் நான்கைந்து நாளாகக் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா துணிவுடன் எத்தனை விஷயங்களை எதிர்கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. என் பதின்ம வயதில் இரவுகளில் காமத்தின் முதல்படியில் நின்றிருந்த காலங்களில் ஒருநாள் காலையில் போகிற போக்கில் அம்மா சொன்னார், ‘அக்காவுக்கு கல்யாண வயசு ஆயிடுச்சு. அடுத்து அண்ணனுக்கும் கல்யாணம் பண்ணனும்’ என்று. அந்த வரி தந்த அர்த்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. அப்படியே மிரண்டு நின்றேன். அந்த அம்மா சாதாரணமான அம்மா அல்ல. நான் ஒரு பெண்ணைக் காதலித்தபோது அதை அந்தப் பெண்ணுக்குச் சொல்வதற்கு முன்பாகவே அம்மாவிடம் சொன்னேன், அந்தப் பெண்ணிடம் சொல்லப் போகிறேன் என்று. ஒரே வரியில் சொன்னார், ‘ஒத்து வராது. ஆனா உன் இஷ்டம்’ என்றார். அது ஒத்துவராமலேயே போனது.

இப்படி அம்மா எளிதாகக் கடந்த தீவிரமான விஷயங்கள் ஆயிரம் உள்ளன. என் வாழ்க்கையில் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உள்ளது. அதனால்தான் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த இழப்பு பெரியதாக உள்ளது. என்னளவில் இது பேரிழப்பு. இந்த இழப்பு நிகழும் என்று எதிர்பார்த்ததுதான். அதையும் மீறி என்னால் தாங்கிக் கொள்ளமுடியாத அளவுக்கு அது பேரிழப்பாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான்கைந்து நாள்களுக்குப் பிறகுதான் மெல்ல என் நிலைக்குத் திரும்புகிறேன். ஒவ்வொரு விஷயத்திலும் இனி அம்மா சொன்னது நினைவுக்கு வரும். அது ஒரு சுகமான நினைவாகவும் இருக்கும்.

அம்மாவைப் பற்றி முடிப்பதற்கு முன்னால் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம், என் அண்ணியைப் பற்றியும் என் மனைவியைப் பற்றியும். என் அம்மா எத்தனைக்கு எத்தனை அன்பான அம்மாவோ அத்தனைக்கு அத்தனை கடினமான மாமியார். அம்மாவின் ஒரே நோக்கம், தன் சொல் கேட்கப்படவேண்டும் என்பது மட்டுமே. அது ஒரு கெத்து. இப்படி ஒரு மாமியாருக்கு மருமகள்களாக இருப்பது கொஞ்சம் சாபம். அதை எதிர்கொண்டு வெற்றிகரமாகச் சமாளித்தவர்கள் என் அண்ணியும் என் மனைவியும். இன்னும் சொல்லப்போனால் என் அம்மாவின் நிம்மதியான வாழ்க்கைக்குக் காரணம், நானும் என் அண்ணாவும் என்பதைவிட, இவர்கள் இருவருமே. இவர்கள் இருவரும் இல்லையென்றால் எங்கள் வாழ்க்கையே நரகமாகிப் போயிருக்கும். அம்மாவின் மீதான எனது மற்றும் என் அண்ணாவின் அன்பைப் புரிந்துகொண்டு இவர்கள் தங்களைப் பின்தள்ளி என் அம்மாவின் நலனை முன்வைத்து நடந்துகொண்டார்கள். அதுவும் கடைசி இரண்டு வருடங்களில் இவர்கள் இருவர் செய்த சேவை மறக்க முடியாதது. இதனால்தான் அம்மா தன் கெத்துடன் மரணம் அடைந்தது சாத்தியமானது. இவர்கள் இருவருக்கும் நன்றி என்று சொல்வது சாதாரண வார்த்தை. வேறென்ன சொல்ல.

Share