Tag Archive for அம்பை

உடலெனும் வெளி – அம்பை

உடலெனும் வெளி, அம்பை, கிழக்கு பதிப்பகம்.

பெண்ணிய எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு தொகை நூல் என்னும் அளவுக்கு ஆழமான நூல் இது. சில நூல்கள் நம்மை வியப்பிலாழ்த்தும். இது எப்படி சாத்தியம் என்று வியப்பைக் கொண்டு வரும். அப்படியான ஒரு நூல் இது. இதுபோன்ற ஒரு நூலை ஒருவர் சட்டென நினைத்து எழுதிவிட முடியாது. வாழ்க்கை முழுமைக்கான வாசிப்பும் அர்ப்பணிப்பும் தான் தேர்ந்த ஒன்றில் தளராத தொடர்ச்சியும் இருந்தால் மட்டுமே இத்தகைய நூல் சாத்தியம்.

தொடக்க காலங்களில் இருந்து சமீபத்திய பெண்ணிய எழுத்தாளர்கள் வரை அனைத்துப் பெண்ணிய எழுத்தாளர்களின் நூல்களையும் வாசித்து, அவற்றைத் தன் ரசனை மற்றும் பொதுப் பார்வையில் மதிப்பிட்டு, அதில் தேர்ந்தவற்றை நமக்குச் சொல்லியிருக்கிறார் அம்பை. தேந்தெடுத்து எழுதியது இவை என்றால், அவர் எத்தனை வாசித்திருப்பார் என்பதும், அந்த நூல்களைக் கண்டடைய அவர் எப்படி முயன்றிருப்பார் என்பதும் பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது. இத்தகைய நூல்களுக்கு இப்படியான உழைப்பு நிச்சயம் தேவை. இல்லையென்றால் நூல் தரமற்றுப் போய்விடும்.

1950களுக்கு முன்னர் இருந்த பெண்ணிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் பெயரையும் அவற்றில் அவர்கள் எழுத முனைந்த கருத்துகளையெல்லாம் பார்க்கும்போது வியப்பு மேலிடாமல் இல்லை. ஜாதி மதம் என எப்பாகுபாடுமின்றி பெண்கள் நிலை எல்லா இடத்திலும் ஒரே போல்தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை இந்நூல் உணர்த்துகிறது.

பெண் எழுத்தாளர்களின் நாவல், சிறுகதைத் தொகுதி மற்றும் கவிதைகள் என்று பிரித்துக்கொண்டு அவற்றைப் பற்றிச் சுருக்கமாகவும் ஆழமாகவும், எழுத்தாளர்களைப் பற்றி விரிவாகவும் அலசி இருக்கிறார் அம்பை. யார் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார், யார் யாரையெல்லாம் விலக்கி இருக்கிறார் என்பது நிச்சயம் கேள்விகைக் கொண்டு வரும். ஆனால் எல்லாவற்றுக்கும் தெளிவான பதிலுடன் இருக்கிறார் அம்பை.

பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை அணுகுவது குறித்த மிகச்சிறந்த திறப்பை இந்நூல் கொண்டு வரும். நாம் பெண்ணியத்தை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதை, அவர்கள் நம் பார்வையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்கலாம். அதையே இந்நூல் பல்லாண்டுகளான படைப்பு வரலாற்றுப் பின்புலத்தில் பேசுகிறது.

நான் வாசித்த மலைக்க வைக்கும் எழுத்துகளுள் இதுவும் ஒன்று.

விளக்கப் பின்குறிப்பு: இந்நூலின் முன்னுரையில், “கிழக்கு பதிப்பகத்திலிருந்து ஹரன் பிரசன்னா கைப்பிரதியைப் படிக்க விரும்புவதாகக் கூறினார். அவருக்குப் பிடித்திருந்தது; சில ஆண் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு அவர்கள் எழுத்து பிடித்திருப்பது போல இதுவும் பிடித்திருக்கிறது, வெளியிட விருப்பம் என்று! ஆணை ஒட்டியேதான் எல்லாம் அமையும் போலும்! ஆனால் ஹரன் பிரசன்னாவுடன் இணைந்து இந்தக் கைப்பிரதியை வடிவாக்கிய அனுபவம் நன்றாக அமைந்தது. அவருக்கு என் நன்றி” என்று சொல்லி இருக்கிறார். நான் இந்த நூலை வாசித்துவிட்டு அம்பையிடம் சொன்னது, கிட்டத்தட்ட இது போலத்தான். “ஜெயமோகன், பிஏகே, அரவிந்தன் நீலகண்டன் போன்றோரது நூல்களை வாசிக்கும்போது ஏற்படும் மலைப்பு இதைப் படிக்கும்போது ஏற்பட்டது” என்பதைத்தான்.

அம்பை சொல்லி இருப்பது, பல்லாண்டுகளாக அவரது அனுபவத்திலிருந்து கிளைத்திருப்பது. அதை நான் புரிந்துகொள்கிறேன். இந்த விளக்கம்கூட ஒரு பதிவுக்காக மட்டுமே.

Share