Tag Archive for அப்பா

அப்பாவும் வாக்மேனும்

இன்று ஹனுமன் ஜெயந்தி. காலை எழுந்ததும் எதோ நினைவுக்கு வர யூ ட்யூபில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஹனுமான் பாடல்களைக் கேட்கலாம் என்று கேட்க ஆரம்பித்தேன். அப்பாவின் நினைவு வந்துவிட்டது.

ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் பாலமுரளி கிருஷ்ணா பாடிய கேசட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். இன்னும் அந்த கேசட்டின் முகப்பு அட்டை கூட நன்றாக நினைவிருக்கிறது. அப்பாவுக்கு வாக்மேனில் பாட்டு கேட்பது என்றால் அத்தனை இஷ்டம். சங்கராபரணம் திரைப்படம் போன்று பாடல்கள் உலகத்திலேயே கிடையாது என்பது அவரது தீர்மானமான அபிப்பிராயம். இப்படிச் சில எண்ணங்கள் அவருக்கு உண்டு. இரு கோடுகள் மட்டுமே உலகில் மிகச் சிறந்த படம், எந்த ஒரு படம் அல்லது எந்த ஒரு மெகா சீரியல் அல்லது எதிலாக இருந்தாலும் சரி, அதில் வரும் நீதிமன்ற வழக்குக் காட்சிகள் அனைத்துமே மிகச் சிறப்பானவையாகவே இருக்கமுடியும் என்று உறுதியாக இருந்தார். விதி படத்தில் வரும் நீதிமன்றக் காட்சிகளை நூறாவது முறை கேட்கும்போது கூட முதல்முறை அடையப் போகும் அதிர்ச்சியைவிட அதிக அதிர்ச்சியுடன் கேட்பார். ஆம், விதி, பாகப் பிரிவினை, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்றவை எங்கள் வீட்டில் சக்கை போடு போட்ட கேசட்டுகள். மொத்தத்தில் அப்பா மிக எளிமையான வெள்ளந்தியான மனிதர். இன்றைய உலகின் மிகக் கறாரான வரையறையின்படி சொல்வதென்றால் ஏமாளி.

23ம் புலிகேசி படத்தையும் அப்படி புகழ்ந்து தள்ளினார். அப்பாவுக்கு ஒன்று பிடித்துவிட்டால் அவ்வளவுதான்! அம்மா ‘அதிவிஷ்ட்டு அனாவிஷ்ட்டு’ என்பாள். 
அப்போதெல்லாம் சிடி வந்துவிட்டது என்பதால் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்றார். ஆனால் எனக்கோ அதை ஒரு படமாகப் பார்க்கப் பிடிக்கவில்லை, அதேபோல் காட்சிகளாகப் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டது. இருந்தாலும் பரவாயில்லை என்று, அவர் பல தடவை கேட்டுக்கொண்ட பிறகு, 23ம் புலிகேசி சிடி வாங்கினேன். வழக்கம்போல திருட்டு சிடிதான்! பீச் ஸ்டேஷனுக்குப் போன சமயத்தில் அப்பாவின் நினைவு வந்து வாங்கிக்கொண்டு வந்து தந்திருந்தேன். ஆர்வமாக அதைப் பார்க்கத் துவங்கினார். குடும்பத்தில் அனைவரும் பார்த்தோம். அப்போதெல்லாம் விசிடி என்பதால் இரண்டு சிடி இருக்கும். முதல் சிடி நன்றாகவே ஓடியது. இரண்டாவது சிடி ஓடவில்லை! அதைப் போய் மாற்றிக்கொண்டு வரவும் எனக்கு முடியவில்லை. நான் அப்போது ராமாபுரத்தில் இருந்தேன். கடைசி வரை பார்க்காத இரண்டாவது சிடியையே சொல்லிக்கொண்டிருந்தார்!

ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் என் அப்பாவுக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஹனுமான் பாடல்களைக் கொண்டு வந்து தரவும், அப்பா அதை வாக்மேனில் கேட்டார். வாக்மேனில் கேட்பதற்கென்றே பாடல்கள் இருக்கின்றன, இதையெல்லாம் கேட்டால் வாக்மேனுக்கே அசிங்கம் என்றெல்லாம் சொல்வேன். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டைப் போட்டுக்கொண்டு தலையை தலையை ஆட்டிக்கொண்டிருப்பார். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள்கூட தலையை அப்படி ஆட்டமாட்டார்கள். அப்பாவுக்கு கர்நாடக சங்கீதம் சுத்தமாகத் தெரியாது. ஆனால் எப்படியோ தலையை ஆட்டுவதும் தாளம் போடுவதும் மட்டும் பிடிபட்டுவிட்டது!

வீட்டில் அப்போது சோனி டேப் ரிக்கார்டர் வாங்கினோம். திருநெல்வேலியில் இருந்த சமயம். டேக்-கில் பணி நிரந்தரம் ஆகி வந்த முதல் மாதச் சம்பளத்தில் வாங்கினேன். 3,200 ரூபாய். அதில் முதலில் போட்ட கேசட், சங்கரா பரணம். அடுத்து போட்டது இந்த ஹனுமான் பாடல்களைத்தான். காலையில் அடிக்கடி இந்த கேசட்டைப் போடுவோம். முதலில் பாடல்கள் அத்தனை வசீகரமாக இல்லாதது போலத்தான் தோன்றியது. என்ன பாட்டு இதெல்லாம் என்றுதான் கேட்கத் தொடங்கினேன். பல தடவை கேட்டு கேட்டு பாடல்கள் மனதில் தங்கின. அது எனக்குப் பிடித்துவிட்டது என்பதேகூட மிகப் பின்னால்தான் தெரிந்தது. அப்பா போய், பல ஆண்டுகளுக்குப் பிறகு எதோ ஒரு கோவிலில் இந்த கேசட்டில் உள்ள பாடல் ஒன்றைக் கேட்டபோது சட்டென அடுத்தடுத்த வரிகள் ஞாபகம் வந்து, ஒரு பக்தி வந்து, இந்தப் பாடல்கள் இத்தனை பிடிக்குமா என்று ஆச்சரியமாகிவிட்டது. அதேபோலவே ஊத்துக்காடு பாடல்களும். குறிப்பாக யேசுதாஸ் பாடியவை. இப்போது பித்துக்குளி முருகதாஸ் பாடியதைக் கேட்டு, யேசுதாஸ் பாடியதைவிட அதிகம் பிடித்துவிட்டாலும், யேசுதாஸ் பாடல்களைக் கேட்கும்போது பழைய நினைவுகள் வந்துவிடுகின்றன. அப்படி வெறித்தனமாகக் கேட்டிருக்கிறேன். இப்படி இன்னும் மிகச் சிறிய வயதின் நினைவைத் தரும் மற்றுமொரு பாடல், பித்துக்குளி முருகதாசின் ‘பச்சை மலை வாகனனே’ பாடல். மார்கழி மாதத்தில் திருநெல்வேலி டவுனில் பெருமாள் கோவில் தெருவில் ஐந்து வயதில் சுற்றிக்கொண்டிருக்க வைத்துவிடும்.

இன்று ஹனுமன் ஜெயந்திக்காக பாலமுரளி கிருஷ்ணாவின் பாடலைக் கேட்கவும் இந்த நினைவுகள் எல்லாம் வந்துவிட்டன. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்பாக இந்தப் பாடல்களைக் கேட்கிறேன். யூ ட்யூப் என்கிற ஒன்றுக்கு நாம் எத்தனையோ கடமைப்பட்டிருக்கிறோம். இந்தப் பாடல் கேசட்டை முன்பு வாங்கிக் கொடுத்த ஜெயக்குமார் ஸ்ரீனிவாசனுக்கும்.

Share