Tag Archive for அபிலாஷ்

90களின் சினிமா – அபிலாஷ்

90களின் சினிமா, கிழக்கு வெளியீடு, ரூ 120

அபிலாஷ் சந்திரனின் 90களின் சினிமா புத்தகம் வாசித்தேன். 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும் அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் புத்தகம் என்பதே சரியானது. ஒவ்வொரு திரைப்படத்தையும் அதன் உலகளாவிய/இந்திய அளவிலான/பிராந்திய அளவிலான சினிமாக்களுடன் முன் – பின் தொடர்ச்சியுடன் அபிலாஷ் எப்படிப் பார்த்திருக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம் தருகிறது. மிகப் பொறுமையாக ஒரு திரைப்படத்தின் பல்வேறு கோணங்களையும் சாத்தியங்களையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் அபிலாஷ். உலக/மலையாள/தமிழ்த் திரைப்படங்களில் மிக ஆழமான கவனம் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்படி ஒரு நூல் எழுதுவது சாத்தியம்.

இவையெல்லாம் இப்புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ். இனி நான் சொல்லப்போவதெல்லாம் இந்நூலை நான் வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட குழப்பங்களைப் பற்றியும் ஒப்புதலின்மையைப் பற்றியும். இதனால் இந்த நூலை நான் நிராகரிக்கிறேன் என்பது பொருளல்ல. மாறாக, இந்நூலை நிச்சயம் ஒரு முக்கியமான நூலாகப் பார்க்கிறேன் என்பதற்கு மேலே எனக்கு ஏற்படும் எண்ணங்கள்.

இந்த நூலில் அபிலாஷ் சொல்லி இருக்கும் அனைத்துப் படங்களையும் இயக்கிய இயக்குநர்களும் இந்த நூலை வாசிக்க நேர்ந்தால் எப்படி உணர்வார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். திரை இயக்குநர்களின் அனைத்துக் காட்சிகளின் அடிப்படையையும் அவர்களது திறமையையும் நான் சந்தேகிக்கவில்லை என்றாலும், அவர்கள் வைக்கும் ஒவ்வொரு காட்சிக்குப் பின்னரும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது என்று நான் நம்பத் தயாராக இல்லை. சில நேரங்களில் கிடைக்கும் ஒரு மின்னல் ஒரு காட்சி உருவாக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். வம்படியாகக் கேள்வி கேட்க வைக்கும் உத்தி, திரும்பிப் பார்க்க வைக்கும் பாணி, எதையாவது வித்தியாசமாகக் காட்டவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எனப் பல விஷயங்கள் உள்ளன, ஒரு காட்சியை வைக்க. ஆனால் அபிலாஷ் இக்காட்சிகளின் பின்னணியில் ஒரு சித்திரத்தை உருவாக்கப் பார்க்கிறார். நான் பெரும்பாலும் இதை ஏற்கவில்லை. முக்கியக் காட்சிகளுக்கு இடையேயான பின்னணி, ஓர் இயக்குநரின் மனச்சாய்வு அவரது எல்லாப் படங்களுக்கும் தரும் பின்னணி இவற்றையெல்லாம் மறுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு சிறிய காட்சிக்குப் பின்னாலும் இருக்கும் ஒரு தொடர்ச்சியை என்னால் ஏற்கமுடியவில்லை. ஆனால் அபிலாஷ் இவற்றை நிரூபிக்க மிகப்பெரிய அளவில் மெனக்கெடுகிறார்.

திரைப்படங்களில் வரும் ஆண் தன்மை பற்றி இந்நூல் முழுக்க விவாதிக்கப்படுகிறது. ஆண் தன்மை பற்றிய விவாதங்களை, வேறு விவாதங்களை முன்வைக்கும்போதும்கூட அபிலாஷால் கைவிடமுடியவில்லை. ஆண் ஆண் நட்பை எல்லாமும் கூட, இயக்குநர் மிகத் தெளிவாக அது நட்பு என்று காட்டினாலும், அவற்றுக்குள் ஒரு ப்ரொமான்ஸ் அல்லது ஓரினச் சேர்க்கை விழைவு இருக்கமுடியும் என்று காண்கிறார். நம் தமிழ்ப்படங்களில் நண்பர்களின் நட்பை இப்படிச் சந்தேகிக்கும் அளவுக்கே காண்பிக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நட்பையும் ஆண் பெண் காதலையும் தனித்தனியே காட்ட இவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் பிரச்சினையே ஒழிய, அல்லது இப்படிக் காட்டியே பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் பிரச்சினையே ஒழிய, இவர்கள் மனத்துக்குள்ளே ஓரினச் சேர்க்கையை அல்லது ப்ராமன்ஸைக் காட்டும் எண்ணம் உள்ளது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை.

பொதுவாக இதைப் போல இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பி அதற்கான ஆதாரத்தைத் தர விரும்பும் எழுத்தாளர்கள் செய்யும் குழப்பத்தை, தவறை (அதாவது என் பார்வையில் இது தவறு) அபிலாஷும் செய்கிறார். அர்ஜுனன் – கிருஷ்ணன் உறவு வரை இந்தச் சந்தேகத்தையும் குழப்பத்தையும் நீட்டிச் செல்கிறார். அங்கிருந்து பிதாமகன் என்று தாவியதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம் என்றாலும், நந்தா, தளபதி என்றெல்லாம் போனது அராஜகம். நாம் என்ன நினைக்கிறோமோ அதை மட்டும் தேடிச் சென்று அதை மட்டுமே கண்ணில்பட்டுக் கண்டடையும் பயணம் இது.

அதேபோல் ஆண் மையக் கதாநாயகர்களின் காதல்களையெல்லாம் விவரிக்கும்போது எப்படி அவர்கள் நாயகி முன்னால் நாயகியை நாயகனாக்கி, தான் நாயகியாக மாறுகிறார்கள் என்று பற்பல இடங்களில் விவரிக்கிறார். இவையும் என்னால் ஏற்கமுடியாதவை. ஆண் மையக் காதல் என்று இவர் சொல்லும் காட்சிகளை மட்டுமே ஆண் மையக் காதல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆண் மையத் திரைப்படத்தில் ஒரு ஆண் மைய நாயகன் ஒரு பெண் முன்னால் குழைவது ஓர் உத்தி மட்டுமே ஒழிய, ஓர் இயக்குநரின் ரசனை மட்டுமே அன்றி, அதற்குப் பின்னே ஆண் சரியும் காரணங்களெல்லாம் இல்லை என்று மட்டுமே நான் நினைக்கிறேன். ஆனால் ஆண் மைய போலிஸ் கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் நாயகி முன்பு தங்கள் ஆண் தன்மையை இழக்கிறார்கள் என்று மிக விரிவாக ரசனையாக எழுதிச் செல்கிறார் அபிலாஷ்.

மதுரைக்காரப் படங்களின் பின்னணி குறித்த அலசலிலும் துரோகங்களின் அலசலிலும் ஒரு நல்ல தொடர்ச்சி உள்ளது. இதே போன்ற தொடர்ச்சியை அபிலாஷின் மற்ற விரிவுகளில் காண இயலவில்லை. ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தைப் பார்க்க யோசிக்க விவாதிக்க ஒருவருக்கு இடம் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது என்பதுவே இப்புத்தகத்தின் இடம். அதை மிக அழகாக ஆழமாக மிகமிக விரிவாகப் பயன்படுத்திக்கொள்கிறார் அபிலாஷ். ஒரு திரைப்படத்தை இப்படிக் காண வேண்டிய அவசியம் என்ன என்று நாம் பல சமயங்களில் நினைக்கும் அளவுக்கு, நம் கற்பனைக்கெட்டாத, இயக்குநரின் கற்பனைக்கே எட்டியிராதோ என்ற அளவுக்கான யூகங்களையெல்லாம் அபிலாஷ் முன் வைக்கிறார். ஷங்கரின் உருமாற்றம் குறித்த கட்டுரை இதற்கு நல்ல உதாரணம். உருமாற்றம் தொடர்பாகப் பல நல்ல உதாரணங்களைச் சொல்லும் அபிலாஷ், குண்டு வெடித்து அதனால் ஏற்படும் உருமாற்றங்களைக்கூட தன உதாரணங்களுக்குள் சேர்த்துக்கொள்வது கொஞ்சம் ஓவர். எந்த அரசியல் படங்களில் குண்டு வெடிக்காமல் அதனால் உருமாற்றம் நடக்காமல் இருந்துவிட முடியும்?

திரைப்படங்கள் குறித்த மிக முக்கியமான பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாக
அபிலாஷ் எழுதி வருவது ரசனைக்குரியது. வணிகத் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதே தீட்டு என்ற சிற்றிதழ்ச் சூழல் இன்று தகர்க்கப்பட்டுவிட்டது. வணிகத் திரைப்படங்களை அவற்றுக்கான இலக்கணங்களுடன் எல்லைகளுடன் அணுகுவதும் அவசியமானதே. இதை மிகக் கறாராக நிகழ்த்திக் காட்டியுள்ளது இப்புத்தகம்.

ஹரன் பிரசன்னா

Share