அந்தகாரம் – தமிழின் மிக முக்கியமான படம். நல்ல படம், மோசமான படம் என்ற இரு வகைகளைத் தாண்டி புத்திசாலித்தனமான படம் என்றொரு வகையை புதிய அலை திரைப்படங்கள் தோற்றுவித்திருக்கின்றன. பீட்ஸா, ஜிகர்தண்டா, சூது கவ்வும் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அந்தகாரம் இந்தவகைத் திரைப்படம்.
சில இயக்குநர்கள் தங்கள் வருகையின்போதே தாங்கள் மிக முக்கியமான இயக்குநர்களின் வரிசையில் வரப் போகிறவர்கள் என்று அறுதியிட்டுச் சொல்லும் படங்களோடு வருவார்கள். பாரதிராஜா, மணிரத்னம், நலன் குமாரசாமி, கார்த்தி சுப்புராஜ், மணிகண்டன் போல. விக்னராஜனும் அப்படி ஒரு படத்துடன் வந்திருக்கிறார். அரசியல் செருகல்களால் திசை மாறாமல் இருக்கவேண்டும்!
தமிழில் வந்த திரைப்படங்களில் இது போல, கிட்டத்தட்ட கடைசி வரை என்னதான் நடக்கிறது என்று புரியாமல் இருக்கும் ஒரு படம் இருக்குமா எனத் தெரியவில்லை. படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்றால் இரண்டரை மணி நேரத்தில்தான் இத்திரைப்படத்தின் முழு விஷயமும் பிடிபடுகிறது. காலக் கோட்டைக் கலைத்துப் போட்டு ஆடும் விளையாட்டை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். லூஸியா (தமிழில் என்னைப் போல் ஒருவன்) திரைப்படத்தை மட்டுமே இப்படத்துடன் ஒப்பிட முடியும். படமாக்கலும் கிட்டத்தட்ட லூஸியா போலவே உள்ளது.
படமாக்கலைப் பொருத்தவரை, இயக்குநர் மற்றும் எடிட்டரின் அசாதாரண உழைப்பு நன்றாகத் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு யோசித்துச் செய்திருக்கிறார்கள். தமிழில் இது மிகவும் அரிது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட இத்தனை யோசித்துச் செய்வார்களா என்று சந்தோஷம் கொள்ள வைக்கிறது இப்படம். அதிலும் அந்த விஷயங்கள் துருத்திக் கொண்டிருக்காமல் சரியாக அமைந்திருப்பது பாராட்டப்படவேண்டியது. கதையும் அது நகரும் விதமும் எந்த அளவுக்கு இருந்தது என்றால், தமிழில் இப்படி யோசிக்க யார் இருக்கிறார்கள், நிச்சயம் இது எதாவது ஒரு உலகப் படத்தின் தழுவலாகத்தான் இருக்கும் என்று நான் கூகிளில் தேடும் அளவுக்கு இருந்தது! இயக்குநரைப் பாராட்டும் நோக்கில்தான் இதைச் சொல்கிறேன்.
நடிகர்கள் பெரும்பாலும் புதுமுக நடிகர்கள் என்பதால் படத்துடன் சட்டென ஒன்றிக்கொள்ள முடிகிறது. அத்தனை நடிகர்களும் மிக யதார்த்தமாக நடிக்கிறார்கள். தமிழின் புதிய அலைத் திரைப்படங்கள் நமக்குத் தந்திருக்கும் ஒரு கொடை இந்த யதார்த்த நடிப்பு.
இந்தப் படத்தின் முக்கியமான பலம் வசனம். மிகக் கூர்மையான வசனங்கள். மிகக் குறைந்த அளவிலான வசனங்கள்.
எல்லா வகையிலும் முக்கியமான திரைப்படம் இது. பேய்ப்படம் என்றும் சொல்லலாம். இல்லாவிட்டாலும் கூட இது முக்கியமான திரைப்படமே. பேய் என்றால் திடும் திடுமென இசையைக் கூட்டி அலற வைக்கவேண்டும் என்கிற க்ளிஷேவை எல்லாம் உடைத்து, பேய்ப்படத்தை ஒரு த்ரில்லர் போலக் காட்டி இருக்கிறார்கள். தமிழில் பேய்ப்படங்கள் என்றாலே எதோ ஒரு ஆங்கிலப் படத்தை உல்ட்டா செய்து எடுத்திருப்பார்கள். அப்படி இல்லாமல் இத்திரைப்படம் வித்தியாசமாக இருக்கிறது. அதனால்தான் பேயைக் குறைவாகவும் த்ரில்லர் களத்தை அதிகமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் போல.
படத்தின் குறை என்று பார்த்தால், இரண்டரை மணி நேரத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் எப்படிப் பார்ப்பது என்கிற ஒரு அலுப்பு பார்வையாளர்களுக்கு வரலாம். பொதுப் பார்வையாளர்களுக்கு இப்படி ஒரு அலுப்பு வரவே செய்யும். அதேபோல் நொடிக்கு நொடி மாறும் காட்சிகள், அந்த ஒரு நொடிக் காட்சியைக் கூட மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டிய அவசியம் – இவற்றையெல்லாம் எல்லாரும் புரிந்துகொள்வார்களா எனத் தெரியவில்லை. நான் சொல்லும் குறைகள் கூட பார்வையாளர்கள் பார்வையில்தானே தவிர, திரைப்படத்தின் குறைகளாக இல்லை.
தொடர்ச்சியாகப் பேய்ப் படங்கள் என்கிற பெயரில் வரும் ஆபாசப் படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படம் வித்தியாசமான, முக்கியமான திரைப்படம்.