Archive for வலம் மாத இதழ்

Ila Ganesan – Om Shanthi

இல கணேசன் – ஆழ்ந்த அஞ்சலி. 90களில் சன் டிவியில் இல கணேசன் மிக அழகான தமிழில் எந்தத் திராவிடக் கட்சிக்கும் ஆதரவு இல்லாமல் அதிரடியாகப் பேசுவார். அவர் பேச்சில் அத்தனை ஈர்ப்பு இருக்கும். அதை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

கிழக்குப் பதிப்பகம் சார்பாக அவரது நூல் ஒன்றைக் கொண்டு வர நானும் மருதனும், உடன் ஒரு நண்பரும் (அவர் பெயர் மறந்து விட்டது) அவர் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசினோம். அன்று அவர் வீட்டில் பூஜை. எங்களையும் நமஸ்காரம் செய்யச் சொல்லிப் பிரசாதம் கொடுத்தார். தொடர்ந்து அவரது வாழ்க்கை அனுபவங்களை நண்பர் ஒலிப்பதிவு செய்து கொண்டார். ஆனால் ஏனோ அந்த முயற்சி முழுமையாகக் கைகூடவில்லை. அந்தப் புத்தகம் வெளிவரவில்லை.

பின்னர், வலம் இதழில் செப்டம்பர் 2018ல் அபாகி (ப்ரவீன்குமார்) இல கணேசனை ஒரு பேட்டி எடுத்திருந்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்தப் பேட்டி வெளிவராமல் போனது. எத்தனையோ முயன்றும் இல கணேசனின் பரபரப்பான அன்றைய சூழலில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், இறுதி வடிவத்தை அவர் பார்க்க இயலாமல் போனதால் வெளிவரவில்லை.

இந்த அருமையான பேட்டி வெளிவராமல் போனதில் எனக்குப் பெரிய வருத்தம் இருந்தது.

அந்த நீண்ட பேட்டி இப்போது இங்கே…

***

நேர்காணல்: இல.கணேசன் | அபாகி

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த ஸ்வயம்சேவகர், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர், ராஜ்யசபையின் முன்னாள் எம்.பி., பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவர் எனப் பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் இல.கணேசன். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உரையாடினோம். ‘வலம்’ இதழில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னவுடன், “வாங்க… வாங்க… நான் ஏராளமான பத்திரிகைகளைப் படிக்கிறேன். ஆனால், இரண்டு பத்திரிகைகளை மட்டுமே சேகரித்து வைக்கிறேன். அதில் ‘வலம்’ இதழும் ஒன்று’’ என்றபடியே நேர்காணலுக்குத் தயாரானார்.

நீங்கள் எப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தீர்கள்?

எங்க குடும்பமே ஆர்எஸ்எஸ் குடும்பம்தான். எங்க அப்பா, அம்மாவுக்கு 9 குழந்தைகள்; அதில் அண்ணன் – தம்பிகள் 6 பேர். நான் 5வது பையன். எங்க மூத்த அண்ணன் இல.சேஷன், அவருக்கு அடுத்தவர் இல.நாராயணன். இவங்க ரெண்டு பேரும்தான் முதன் முதல்ல ஷாகா போனவங்க. காந்தி கொலைக்குப் பிறகான முதல் தடைக் காலத்தில் பிரசாரக்காக இருந்தவர் இல.நாராயணன். எங்க குடும்பத்துக்கு எப்போ ஆர்.எஸ்.எஸ். பழக்கம் வந்தது, எந்த பிரசாரக் தொடர்பு கொண்டார் என்பதெல்லாம் தெரியாது. ஆனா, எங்க அண்ணா சங்கத்தை தமிழகத்தில் தொடங்கிய தாதாராவ் பரமார்த்திடம் கூடப் பேசுவார். தமிழகத்தில், குறிப்பாக தஞ்சாவூரில் சங்கம் வந்தபோதே எங்க குடும்பத்துக்கு சங்கத் தொடர்பு வந்துவிட்டது. மறைந்த அண்ணாஜி (ஆர்.எஸ்.எஸ். முன்னாள் மாநிலச் செயலாளர், மதுரையில் வசித்த வழக்கறிஞர்) ‘கொத்து கொத்தா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். அதாவது, அப்பா-மகன், அண்ணன் – தம்பி எல்லோரும் ஷாகா வருவது. ‘இதுதான் சங்கத்தோட விசேஷம்’ என்பார். நானும், எனக்கு ரெண்டு வயது மூத்த அண்ணன் கோபாலனும் சேர்ந்து முதன்முதலா ஷாகா போனோம். என்னை ரொம்ப சின்ன வயசிலேயே தூக்கிக்கொண்டு ஷாகா போயிருக்காங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு முதன் முதலா, என்னோட ஐந்து வயதுல, சுதந்திரத்துக்கு முன்னாடி, தஞ்சாவூர் அரண்மனை இடிக்கப்படாதபோது வந்ததுதான் ஞாபகம் இருக்கு. 50, 60 பேர் ஷாகாவுல விளையாடுவாங்க. நான் சின்ன பையங்கறதுனால, கிணத்துப் பக்கத்துல வந்தவங்களோட பொருட்களை பத்திரமா பார்த்துக்க சொல்லிடுவாங்க. அங்க உட்கார்ந்து மத்தவங்க விளையாடறத ரசிப்பேன். இப்பவும் ஷாகான்னா, தஞ்சாவூர் அரண்மனை சுவர்கள்ல ‘நமஸ்தே சதா வத்ஸலே’ன்னு கணீர்னு பாடறதுதான் ஞாபகத்துக்கு வருது. பிறகு, அங்கே கண்காட்சி நடத்தப் போறோம், ஷாகா நடத்த வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம் சில வருஷம் கழிச்சு சீனிவாசபுரத்துல ஷாகான்னு சொன்னாங்க. அப்ப 7ஆவது, 8ஆவது படிச்சிட்டிருந்தேன். தனியாவே ஷாகா போக முடியும். அப்புறம், நடுநடுவுல ஷாகா போவேன், அப்பப்போ நிக்கும். அது 1968ல் மிகவும் தீவிரமாகி, அப்புறம் வாழ்க்கையே இனி சங்கம்தான்னு முடிவு பண்ணி, 1970ல் பிரசாரக்கா வந்தேன்.

உங்களுக்கு ஆதர்ஷமா இருந்த பிரசாரக்குகள் யார்?

மரியாதை எல்லார் மேலயும் இருக்கு. ஆதர்ஷம்னு பார்த்தா… ராம்ஜி-னு ஒரு பிரசாரக் தஞ்சாவூர்ல இருந்தார். உயரமா கம்பீரமா இருப்பார். அவர் சங்கத்தின் சீருடையை அணிந்தால் ரொம்ப அழகா இருக்கும். அப்புறம், கு.இ.ராமசாமின்னு ஒரு பிரசாரக். சங்கத்தோட பத்திரிகை ‘தியாகபூமி’க்கு (விஜயபாரதம்- முந்தைய வடிவம்) சந்தா சேகரிக்கறதுக்காக தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போ எனக்கு 13, 14 வயசு. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சது. தஞ்சாவூர்ல ஸ்ரீபால்னு ஒரு வழக்கறிஞர் இருந்தார். சீனிவாசபுரத்துல வீடு. அவர்கிட்ட சந்தா சேகரிக்கணும்னு என்னைக் கூட்டிட்டு போனார். வழக்கறிஞரோட வீட்டு வாசல்ல நின்னுட்டு, ‘சார்… சார் இருக்காரா?’ன்னு குரல் கொடுத்தார். எனக்கு பயம் வந்தது. “ஏண்டா பதட்டப்படறே… நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?’’ன்னார். உள்ளே இருந்து, “யாரு….?”ன்னு வக்கீலோட மனைவி குரல். “நான்தான் ராமசாமி. சார் இருக்காரா?”ன்னு திரும்ப கேட்டார். “வெளியே போயிருக்கார். வந்துருவார்”னு சொன்ன அந்த அம்மா, உள்ளே உட்கார வச்சிட்டாங்க. காபி கொடுத்தாங்க. ‘அய்யயோ.. வக்கீல் வரப்போறார். நாம மாட்டினோம்’னு நடுங்கினேன். அதுக்குள்ள வக்கீல் வந்துட்டார். “வாங்க… வாங்க… எப்போ வந்தீங்க?”ன்னு கேட்டார். அவர், தன் மனைவிய பார்க்க வந்தவங்கன்னு நெனைச்சுட்டார். “வந்து அரை மணி நேரமாச்சு”ன்னார் ராமசாமிஜி. அந்த அம்மா வந்தாங்க. வக்கீலுக்கு ஏற்கெனவே தெரிஞ்சவங்கன்னு முடிவு பண்ணிட்டாங்க. (சிரிப்பு) பிறகு, தியாகபூமி சந்தா பத்தி சொன்னார். வழக்கறிஞர் ஸ்ரீபால் ஒரு வைஷ்ணவர். நாமம் போட்டுருப்பார். உடனே, அப்போ போட்ட ராமானுஜர் மலரை காண்பிச்சார் ராமசாமிஜி. “அதுக்கென்ன, பண்ணா போச்சு”ன்னு சந்தா கட்டிட்டார், அந்த வக்கீல்.

அதே மாதிரி, நாராயணசாமி ஐயர்னு ஒரு வக்கீல். அவரைப் பார்க்க போனோம். “தியாகபூமின்னு பேர் இருக்கே. இது ஏதாவது தேசபக்தி பத்திரிகையா?”ன்னு கேட்டார். “அதெல்லாம் இல்ல சார்”. “இது ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையா?”ன்னார் திரும்பவும். “இல்ல. யாராவது ஆர்.எஸ்.எஸ். பத்தி எழுதுவாங்க. ஆனா, ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கை இல்ல”ன்னோம். உடனே பத்திரிகையை அப்படியே வச்சிட்டார். “பிரயோஜனமில்ல சார். இந்த நாடு ஹிந்து நாடுன்னு சொல்றவங்க அவங்க ஒருத்தங்கதான். அவங்க பத்திரிக்கை இல்லேன்னா பிரயோஜனமில்ல”ன்னார் வக்கீல். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த காலத்துல அப்படிப்பட்ட வார்த்தை சர்வ சாதாரணம். அப்போ அபூர்வம். உடனே, தடால்னு மாத்திட்டார் ராமசாமிஜி. “என்ன இப்படி சொல்லிட்டீங்க. இந்தப் பையனோட குடும்பமே ஆர்எஸ்எஸ் குடும்பம். இவர் தினசரி ஷாகாவுக்குப் போகறவர். நான் ஆர்எஸ்எஸ்ஸுக்காகவே வாழற பிரசாரக்”ன்னார். (சிரிப்பு) “அப்படி சொல்லுங்க சார்”ன்னு சந்தா கட்டினார் அந்த வக்கீல். அப்புறம்தான் தெரிஞ்சது. வக்கீல் நாராயணசாமி ஏற்கெனவே ஹிந்து மகா சபாவுல தீவிரமா இருந்திருக்கார்.

அதுக்கு அப்புறம் சுப்பராவ். இளைஞர்களைக் கவர அவரை மாதிரி முடியாது. ஒருமுறை ஒரு பையன் சைக்கிள்ல வந்திருந்தான். அவனை ஷாகாவுக்குக் கொண்டு வரேன்னு சவால் விட்டார். அந்தப் பையனுக்கு 14, 15 வயசு இருக்கும். சுப்பராவ்க்கு வயசு அதிகம். அவரோட சைக்கிளை எடுத்துட்டு நேரா, அந்தப் பையனோட சைக்கிள்ல மோத, பையன் கீழே விழுந்துட்டான். “தம்பி. மன்னிச்சிருப்பா. அடியெதுவும் படலையே?”ன்னு கேட்டுட்டே அவனைப் பத்தி விவரத்த வாங்கிட்டார். “அட ராமசாமி யையனா நீ?”ன்னு சகஜமா பேசி அனுப்பிட்டார். திரும்பவும், சாயுங்காலம் அவனோட வீட்டுக்கே போயிட்டார். “தம்பி.. அடி எதுவுமில்லையே?” உடனே அந்தப் பையனோட அம்மா, “என்னப்பா அடி, கிடின்னு” பதறிட்டாங்க. அந்தப் பையன் வீட்டுல கூட சொல்லல. “ஒண்ணும் ஆகலை அம்மா.” “ஒண்ணும் ஆகலை அம்மா.” இப்படிப் பேசி பேசியே அந்தப் பையன் ஷாகா வந்துட்டான்.

எப்படி பிரசாரக்கா வந்தீங்க?

ஒரு லட்சியத்து மேல பிடிப்பு உண்டாக்குறது ஒரு தொடர் வேலை. முதல்ல, லட்சியத்து நெருப்பை மூட்டறது. பிறகு, அந்த நெருப்பைத் தூண்டி விடறது. பிறகு, அந்த நெருப்பை எரிய விடறது. பிறகு, வீசி வீசி பிரகாசமா எரிய விடறது. இப்படி எனக்கு முதல்ல நெருப்புப் பொறியை மூட்டி விடறது கோபால்ஜி. 1958ல் எனக்கு 13 வயசுதான் இருக்கும். அப்போ என்னை சங்க சிக்ஷா வர்க முதலாமாண்டு அழைச்சிட்டு போனாங்க. அப்போ எங்க வீட்டுல முகாம் அனுப்ப வசதி கிடையாது. அப்போ ஹரிஹரன்ஜி தஞ்சாவூர்ல சங்கசாலக்கா இருந்தார். கு.இ.ராமசாமிஜி என்னைப் பத்தி சொல்ல, ‘நம்ம எல்.நாராயணன் தம்பிதானே. கூட்டிட்டு போ. நான் பார்த்துக்கறேன்னு’ சொல்லிட்டார். இதெல்லாம் எனக்குப் பிற்காலத்துலதான் தெரியும். ஆனா, அப்போ எனக்கு 14 வயசு ஆகாததால முகாம்ல அனுமதி இல்ல. பிரபந்தக் (முகாம் ஏற்பாட்டாளர்) ஆக்கிட்டாங்க. அப்போ முகாம் தமிழ்நாடு, கேரளா சேர்ந்து நடக்கும். அதனாலயோ என்னவோ அப்பல்லாம் முகாம்ல கேண்ட்டீன் இருக்கும். நான்தான் அதுக்கு இன்சார்ஜ். ஹரியேட்டன்ஜி, பாஸ்கர்ராவ் களம்பி எல்லாம் சிக்ஷக். அதுக்கு அடுத்த வருஷம் நமக்கே உற்சாகம் வந்தது. 1959ல் முதலாமாண்டு பயிற்சி முடித்தேன். பண்டித தீனதயாள் உபாத்தியாயா வந்திருந்தார். பொது நிகழ்ச்சிக்கு சிருங்கேரி சங்காராச்சாரியார் வந்திருந்தார். அதுக்கப்புறம் படிப்பு முடிஞ்சு வேலை, பட்டுக்கோட்டைக்கு பணிமாற்றம் பண்ணிட்டாங்க. அங்க ஷாகா இல்ல. சு.வெ. என்பவரிடம் தமிழ் இலக்கணம் கத்துண்டேன். இப்படி தீவிரம் குறைஞ்ச காலமும் இருக்கு. அப்புறம், திருச்சிக்கு டிரான்ஸ்ஃபர். திருச்சி காரியாயலத்துலதான் தங்கினேன். அங்க கு.இ.ராமசாமிஜிய திரும்ப சந்திச்சேன். திரும்ப ஷாகா வர ஆரம்பிச்சேன்.

1967 டிசம்பரா, 1968 ஜனவரியான்னு நினைவில்ல. அப்போதான், திருச்சி மலைக்கோட்டைக்கு எதிரே ஒரு வீட்டு மாடியில பைட்டக் (கூட்டம்). கோபால்ஜி (இராம.கோபாலன்ஜி) வந்திருந்தார். அற்புதமான பைட்டக் அது. என் அண்ணன் இல.நாராயணனும் வந்திருந்தார். காலைலேர்ந்து மாலை வரை. முதல்ல, “திருச்சி, தஞ்சாவூர்ல கிருஸ்துவ மதமாற்றம்?”னு கேட்டார். எனக்கு எழுந்து பதில் சொல்றது பிடிக்கும். எழுந்து சொன்னேன். எதுவும் சொல்லாம குறிச்சிண்டார். மத்தவங்களும் சொன்னாங்க. அடுத்து முஸ்லிம்களோட வேலைகள். சொன்னோம். மதிய உணவுக்குப் பிறகு, “தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள்ல கம்யூனிச வேலைகள்?”னு கேட்டார். அப்பல்லாம் நக்ஸல்னு தனியா இல்ல. எல்லாம் கம்யூனிசம்தான். வழக்கம் போல எழுந்து சொன்னேன். அடுத்து கடைசி பைட்டக். “சங்கம், மத்த ஹிந்து அமைப்புகளோட வேலைகள்?”னு கேட்டார். யாரும் பதில் சொல்லலை. இருபது நிமிஷங்களுக்குப் பிறகு ஆரம்பிச்சார். கோபால்ஜிக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு. “என்ன சொல்ல வேண்டியிருக்கு? மத்த வேலைகள் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. நான் சொல்லிதான் தெரியணுமா? அதுக்கு மாற்று சங்க வேலைதான்னு தெரியும்ல? ஏன் செய்யல?” இப்படிதான் கிடுகிடுன்னு ஏறும். “இதோ பாரு. நான் இரக்கமில்லாதவன். நாட்டுக்காக என்ன வேணும்னாலும் கேட்பேன். எனக்கு என் குடும்பத்தைப் பத்தி கவலையில்ல. கல்யாணம் பண்ணிக்காம, வேலைய விட்டுட்டு நாட்டுக்காக முழுநேரமா வருவேன்னு நினைக்கறவங்க கை தூக்குங்க”ன்னார். அப்போதான் எனக்குள்ள நெருப்புப் பொறி. ஆனா கை தூக்கலை. “அப்புறம் முதலாமாண்டு முடிக்காதவங்க முதலாமாண்டு போகணும்; இரண்டாமாண்டு போக வேண்டியவங்க அதுக்குப் போகணும்”ன்னார்.

1968ம் வருஷம் இரண்டாமாண்டு பயிற்சி போனேன். அப்போ வேலைக்குப் போனதால பைசா பிரச்சினை இல்ல. வீட்டுல சொல்லிட்டு கேம்ப் போயிட்டேன். நடுவுல, திருவானைக்காவல்ல குளிர்கால முகாம். பரமபூஜனீய ஸ்ரீ குருஜி வந்திருந்தார்.

இரண்டாமாண்டு போனேன். நான், ஆர்.பி.வி.எஸ்.மணியன், இப்போ பி.எம்.எஸ்.ல இருக்கற சுகுமாரன்னு பிரச்சாரக்கா வர வேண்டியவங்களுக்கு இருபது நாளும் கோபால்ஜியே சர்ச்சா (கலந்துரையாடல்) எடுத்தார். ஆனா, எங்கயும் பிரச்சாரக் பத்தி பேசலை. சங்க சிக்ஷா வர்கன்னா தனி உற்சாகம்தான். முகாம் முடிஞ்சு, எல்லோரும் கோபால்ஜி கிட்ட சொல்லிட்டுப் போகணும். சினிமாவுல நடக்கற மாதிரியே சம்பவம். நான் ‘வரேன் கோபால்ஜி’ என்றேன். ‘நீ வர போறேன்னு தெரியுமே? எப்போ வருவேன்னுதானே கேட்கறேன்’ன்னார். எங்க அப்பா நான் ஏழாவது படிக்கும்போது காலமாயிட்டார். எனக்கு ரெண்டு அக்கா. ஒரு தங்கை. முதல் அக்காவுக்கு மாமா வீட்டுலயே கல்யாணம் நடத்திட்டோம். அப்புறம் எல்லோரும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டோம். என் ரெண்டாவது அக்கா ராஜேஸ்வரிக்கு அப்போ 24 வயசு. வரன் அமையல. எங்க குடும்பம் பத்தி என்னை விட கோபால்ஜிக்கு நல்லா தெரியும். “எங்க ராஜேஸ்வரி அக்காவுக்கு கல்யாணம் நடக்கணும்ஜி. உங்களுக்கே தெரியும்”ன்னேன். “நல்லா தெரியும் டா. அவளோட கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீ பிரச்சாரக்கா வர போறே. அதுவும் தெரியும்”ன்னார் உரிமையோடு. முதல் தடவை அப்போதான் வாய் திறந்து சொன்னேன், “வரேன்ஜி”.

அதுக்கப்புறம், திரும்ப வேலைக்கு வந்துட்டேன். அப்பவே எனக்கு உடற்பயிற்சியில ஆர்வம் இல்ல. பௌத்திக், (அறிவுசார் துறை) தொடர்பு கொள்வதில்தான் ஆர்வம். தஞ்சாவூர் ஜில்லா பௌத்திக் பிரமுக் பொறுப்பு தந்தாங்க. அப்போ, தஞ்சாவூர் கலெக்டர் ஆபிஸ்ல வேலை செஞ்சேன். அஞ்சு மணிக்கு ஆபிஸ் முடியும். 4.55க்கு ஃபைலை மூடி வச்சிடுவேன். சரியா 5 மணிக்கு வேலை முடிஞ்சதும், ஆபிஸ் பின்னாடி இருக்கற கோயிலுக்கு வந்து, காக்கி நிக்கர் மாட்டிட்டு, கலெக்டர் ஆபிஸ் வளாகத்தில் சைக்கிள் மிதிச்சிட்டுப் போவேன். நான் யாருன்னு அங்க எல்லோருக்கும் தெரியும்.

ஒருநாள் கோபால்ஜிக்கு லெட்டர் போட்டேன். “உங்களை அவசரமா பார்க்கணும்”னு. “எப்போ பார்க்கலாம்”ன்னு கேட்டு பதில் கடிதம். திருச்சியிலேர்ந்து தஞ்சாவூருக்கு ரயில்ல ரெண்டாம் வகுப்புல போகறதா சொன்னார். முதல் தடவையா ரெண்டாம் வகுப்புல போறேன். “ஜி, எப்பவும் சங்க ஞாபகமாவே இருக்கு. ஆபிஸ்லயும் அதே ஞாபகம். ஒரு ஸ்வயம்சேவக் அரசாங்கத்தை ஏமாத்தக்கூடாது. நான் ராஜிநாமா பண்ணிட்டு பிரச்சாரக்கா வந்திடுடறேன்”ன்னேன். “முடியாது டா.. ஒழுங்கா போய் ஆபிஸ்ல வேலை செய். நீ ராஜிநாமா பண்ணிட்டு வந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன்”ன்னார். அதுக்கப்புறம் சொன்னார், “ராஜேஸ்வரிக்கு கல்யாணம் பண்ணனுங்கறது உன் கவலையில்லடா. எங்க கவலை. ஆனா, கல்யாணம் முடிஞ்சு நாலாவது நாள் பைய தூக்கிட்டு வந்திடணும்”ன்னார். நடுவுல, 1969ல் நாகபுரியில் மூன்றாமாண்டு பயிற்சி முடிஞ்சது. தஞ்சாவூருக்கு கோவிந்தன்ஜி பிரச்சாரக்கா வந்தார். அவர் ஒரு ஆதர்ஷ பிரச்சாரக். அவர்கிட்ட என்னைப் பத்தி கோபால்ஜி சொல்லியிருப்பார் போல. என்னை தஞ்சாவூர் காரியாலயத்துலயே தங்க சொன்னார் கோவிந்தன்ஜி. என்னோட சட்டை, வேட்டினு ஒவ்வொண்ணா காரியாலயத்துல வைக்க ஆரம்பிச்சுட்டேன். பிப்ரவரி 9ம் தேதி ராஜேஸ்வரி கல்யாணம். பிப்ரவரி 13லேர்ந்து 16 வரைக்கும் அந்த ஆண்டு மே மாதம் நடைபெறும் சங்க சிக்ஷா வர்க தயாரிப்பு பைட்டக். போனதும், கோபால்ஜியிடம் ‘ஜி… ராஜிநாமா பண்ணிட்டு வந்துட்டேன்’னு சொன்னேன். “அப்படியா… சரி”ன்னார். நாலு நாள் எதுவும் சொல்லலை. அப்போதைய அகில பாரத ஷாரீரிக் ப்ரமுக் மோரோபந்த் பிங்களே வந்திருந்தார். நாலாவது நாள் முடியும்போது என்னைப் பத்தி “தஞ்சாவூர் காரியகர்த்தர். அரசு வேலைய ராஜிநாமா பண்ணிட்டு வந்திருக்கார். இன்னைலேர்ந்து நாகர்கோவில் நகர் பிரச்சாரக்கா இருப்பார்”னு அறிவிச்சார் பிங்களே ஜி. இதுக்குள்ளே ஒருநாள் காலைல ஆளை காணோமேன்னு எங்க அம்மா தேடியிருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா வீட்டுல புரிஞ்சது. என்னதான் சங்கம் நல்ல இயக்கம்னு தெரிஞ்சாலும், மகன் பிரச்சாரக்கா  போகறது எந்தத் தாய்க்கும் கவலையைத் தரும். “விவேகானந்தா நினைவுப் பாறையில 45 நாள் வேலை செய்யப்போறேன்”னு மட்டும்தான் வீட்டுல சொன்னேன்.

எப்படி இருந்தது நாகர்கோவில் பிரச்சாரக் அனுபவம்?

அப்போ விபாக் (மூன்று, நான்கு மாவட்டங்கள் சேர்ந்த ஏற்பாடு) சிஸ்டம் இல்ல. ஜில்லாதான். மத்தவங்க ஒரு ஜில்லா. சுப்பராவ்ஜி மட்டும் கன்னியாகுமரி ஜில்லா, இப்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி சேர்ந்து திருநெல்வேலி ஜில்லா-னு ரெண்டு ஜில்லா பிரச்சாரக். அவரை எனக்கு முன்னாடியே தெரியும். தமிழ்நாட்டுலேர்ந்து கோவா விடுதலை போராட்டத்துல கலந்துண்டவர். என்னை விட வயதில் பெரியவர். மரியாதைக்குரியவர். எனக்கு அவரைப் பிடிக்கும், அவருக்கு என்னைப் பிடிக்கும். நகைச்சுவையா பேசிப்போம். அவர் கீழேதான் நாகர்கோவில் நகர் பிரச்சாரக்.

சுப்பராவ்ஜி புதுசு, புதுசா நிகழ்ச்சி நடத்துவார். நான் நாகர்கோவில் நகர் பிரச்சாரக்கா இருந்தாலும் என்னை ராஜபாளையம் கேம்ப்புக்கு அழைச்சிட்டுப் போவார்.

ராஜபாளையத்துல ஒரு நிகழ்ச்சி. ராத்திரி சாப்பிட்டுட்டு 9 மணிக்கு வரணும். வீட்டுலேர்ந்து சாப்பாடு கொண்டு வரணும். ராத்திரி முழுக்க நிகழ்ச்சிகள். காலையில புறப்பட்டுப் போகணும்.

ஒருநாள் கன்னியாகுமரில ஒரு நிகழ்ச்சி. சாப்பிட்டுட்டு 8 மணிக்கு நாகர்கோவில் காரியாலயம் வரணும். 9 மணிக்கு பதசஞ்சலன். விடிய, விடிய நடக்கணும். நம்பிநாதன்னு ஒருத்தர். அப்போ சின்ன வயசுதான். சுப்பராவ்ஜிக்கு பிடிச்ச காரியகர்த்தர். “ஒண்ணுக்கு வந்தா…”னு கேட்டார். “வந்தா வரிசைலேர்ந்து விலகி போயிட்டு ஒண்ணுக்கு போயிட்டு ஓடி வந்து வரிசையில சேரணும். நடக்கறது நிக்காது”ன்னார். முதல் வரிசையில சுப்பராவ், கடைசியா நானும், நம்பிநாதனும். முதல் நாளே அவர் எல்லா இடத்துக்கும் நடந்து பார்த்து வந்துருக்கார். குளைச்சல், மண்டைக்காடு கடலோரங்கள் எல்லாம் போயிட்டு திரும்ப வரணும். திரும்பும்போது கலைய சொல்லிட்டார். ஆனா, நடக்கறது நிக்கக்கூடாது. அது சனிக்கிழமை இரவு. மறுநாள் காலை 6 மணிக்கு சாங்கிக். நேரா சாங்கிக் போயிட்டு வந்து, குளிச்சிட்டு, இட்லி சாப்பிட்டுட்டு வந்தா, தூக்கம் வந்தது.

அதேபோல, ராஜபாளையத்துல ஒரு சாங்கிக். பக்கத்து ஊருலேர்ந்து அறிமுகமில்லாத ஒரு ஸ்வயம்சேவகரை அழைச்சிட்டு வந்து கைலி கட்ட வச்சார். திடீர்னு சாங்கிக் மேல தாக்குதல். சண்டை உக்கிரமானப்போ, “ஸ்தபோ”னு கட்டளை போட்டு நிறுத்தினார். அந்த ஸ்வயம்சேவகரை அறிமுகப்படுத்தி வச்சார். அப்போ சொன்னார், “தாக்குதல் நடந்தது. பால ஸ்வயம்சேவக் கூடப் பயப்படலை. கையில கிடைச்சதை வச்சி அடிக்க வந்தாங்க. வேடிக்கை பார்த்த மக்கள், பெண்கள் உட்பட ஓடி வந்தாங்க. இதை சோதிக்கத்தான் இந்தப் பயிற்சி.” இதுதான் சுப்பராவ்.

சூரியநாராயண ராவ்ஜியிடம் பழகியதைப் பற்றி?

தாயன்புக்கு கோபால்ஜின்னா, தந்தையன்புக்கு சூரிய நாராயண ராவ். எப்பவும் என் வழிகாட்டின்னா சூரிஜியைதான் சொல்லுவேன். அன்பு காட்ட வேண்டிய இடத்துல அன்பு. கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்துல கண்டிப்பு. எல்லோரும் என் பௌத்திக் நல்லா இருந்ததுன்னு பாராட்டுவாங்க. சூரிஜி முகத்தை உர்ன்னு வச்சிட்டு, “என்ன பௌத்திக்கெல்லாம் குடுத்தீங்க”ன்னு ஆரம்பிப்பார். ஏதோ சொல்ல வர்றார்னு அர்த்தம். அதே நேரத்துல நல்லது செஞ்சா பெரிசா பாராட்டுவார். எனக்கு கூச்சமா இருக்கும்.

ஈவெரா இறந்தப்போ அவரோட உடம்புக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை பண்ணாங்க. எனக்குத் தாங்கலை. “ஒருவர் ஆரம்பத்துல எப்படி வேணும்னாலும் இருக்கலாம். கடைசி காலத்துல எப்படி இருக்கார்ங்கறதுதான் முக்கியம். ஈவெரா ஆரம்பத்துல சுதந்திரத்துக்குப் பாடுபட்டிருக்கலாம். ஆனா, அவரோட கடைசி காலத்துல தேசியக்கொடியை எரிச்சவர். திராவிடஸ்தான் கேட்டவர்”னு எழுதி, ‘தேசவிரோதிக்கு தேசியக்கொடி மரியாதையா’ன்னு ஒரு கட்டுரை விஜயபாரதத்துல எழுதினேன். காரியாலயத்துல சூரிஜி, ‘என்ன… விஜயபாரதத்துல கட்டுரை…?’ன்னார். அத்தனைக்கும் அப்போ அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது. “ஒருத்தர் இறந்துபோகும்போது, அவரைப் பத்தி விமர்சிப்பது பண்பாடு இல்ல. ராமாயணத்துல ராவணனை ராமன் கொன்றான். வானரங்கள் குதித்தன. ராமனுக்கு கோபம் வந்தது. என்ன இருந்தாலும் ராவணன் இலங்கை வேந்தன். அவனுக்கு உரிய மரியாதை தரணும்ன்னார். அதேபோல, ஒருத்தர் இறக்கும்போது அவரோட நல்ல விஷயங்களைத்தான் சொல்லணும்”ன்னார். சில வருஷங்களுக்கு அப்புறம் கண்ணதாசன் மறைந்தார். அவர் கடைசியா இயேசு காவியம் பாடினார். எனக்கு அது தாங்கலை. பிறகு இயேசு காவியம் அவரது கடைசி படைப்பு அல்ல என்று தெரிந்து கொண்டேன். ஹிந்து தெய்வங்களை எழுதும்போது புகழ் பெற்றார். இயேசு காவியம் எழுதியதும் மறைந்துவிட்டாயேன்னு கவிதை எழுதினேன். அப்பவும் சூரிஜி, “இந்த மாதிரி எழுதாதேன்னு முன்னாடியே உங்கிட்ட சொல்லியிருக்கேனே?” என்றார்.

அதேபோல, பாராட்டும் போது எல்லார்கிட்டயும் பாராட்டுவார். தென் தமிழகத்துல இருந்ததால எனக்குப் பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. கோயில் நிகழ்ச்சிகள்ல பேச கூப்பிடுவாங்க. சொற்பொழிவாளர்கள் மாதிரியே சின்ன மேஜை போட்டு, அதுல மைக் வச்சி, உட்கார்ந்துட்டு பேசணும். நானும் `நம பார்வதி பதயே நமஹ`ன்னு ஆரம்பிப்பேன். அப்புறம் எல்லோரும் சங்க பௌத்திக்தான். நான் அப்ப ஜிப்பா போட்டிருப்பேன். அதனால சுகி சிவம் மாதிரியே இருப்பேன்னு சொல்வாங்க. ஒருமுறை சுகி சிவம் ராஜபாளையம் வந்திருந்தார். அவரைப் பார்க்க போயிருந்தேன். “நான் உங்களைப் போலவே இருக்கறதா சொல்றாங்க. அதனாலதான் பார்க்க வந்தேன்”ன்னு சொன்னேன். “நீங்கதான் இல.கணேசனா?”ன்னு கேட்டார். ஆச்சரியமா, “எப்படி தெரியும்?”ன்னு கேட்டேன். “என்னை எல்லோரும் இல.கணேசன் போலவே இருக்கீங்கன்னு சொல்றாங்க”ன்னார். ஒரு கூட்டத்துல ‘தென்பாண்டிச் சிங்கம்’ இல.கணேசன்னு நோட்டீஸ்ல போட்டாங்க. எனக்கு எப்பவும் பட்டப் பெயர் பிடிக்காது. இல.கணேசன் மட்டும்தான். அதுக்கப்புறம், சூரிஜிய பார்க்க சென்னை காரியாலயம் போயிருந்தேன். சூரிஜி அறையில யாரோ பேசிக்கிட்டிருந்தாங்க. தயங்கி நின்னேன். உள்ளே வர சொன்னார். “இவர்தான் இல. கணேசன். இவரை தெற்குப் பக்கம் தென்பாண்டிச் சிங்கம்னு கூப்பிடுவாங்க”ன்னு சொன்னார். கூனிக் குறுகிப் போயிட்டேன்.

ஒருமுறை ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டாவது சர்சங்கசாலக் ஸ்ரீகுருஜி சென்னைக்கு வந்திருந்தார். அவரோட ஒரு பைட்டக் ஏற்பாடாகியிருந்தது. சங்கத்தின் கூட்டங்கள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கும். அதுவும், சர்சங்கசாலக் கலந்துகொள்ளும் பைட்டக். அதுக்கு நாங்க புறப்படும்போது பஸ் ஓடலை. கல்லூரி மாணவர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் சண்டை. கூட்டத்துக்கு நடந்து போனோம். அரை மணி நேரம் தாமதம். எங்களைப் பார்த்தார் குருஜி. தாமதத்துக்கான காரணத்தைச் சொன்னோம். தாமதமானதுக்கு அவர் கோபிக்கலை. ஆனா, மாணவர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் சண்டைனு கேள்விப்பட்டு வருத்தத்தோடு சொன்னார், “சிங்கம் தன்னோட முகத்தை தன்னோட நகங்களால பிறாண்டிக்கற மாதிரி கோரமான காட்சி என் கண்ணு முன்னாடி தெரிகிறது.” அவர் சொன்னது என் மனசுல அப்படியே தங்கியிருந்தது. ஒரு பைட்டக். காலையில குளிக்கறதுக்கு முன்னாடி என் துணிகளை  ஊற போட்டுட்டு பேப்பர் படிச்சிட்டிருந்தேன். அப்போ அந்தக் காட்சி திரும்ப ஞாபகம் வந்து ஒரு பாட்டு பிறந்தது. “நாட்டின் உடைமையை நாமே கற்றால் நஷ்டம் யாருக்கு.”இதுதான் முதல் வரி. அடுத்து, “தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும் தேசத்தின் நன்மைக்கே”. இப்படியே முழு பாட்டையும் ராகம் போட்டேன். எழுதி வைக்கல. சூரிஜியிடம் சொன்னேன். அவர் உற்சாகப்படுத்தினார். அது சங்க சிக்ஷா வர்க பைட்டக். பாடல் பத்தி சர்ச்சை வரும்போது “கணேசன் ஒரு பாட்டு எழுதியிருக்கான்”ன்னு சொன்னார். நான் பாடிய பாடல் அந்த வருடம் சங்க முகாம் பாடலானது. அதுதான் ‘பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்’. அதுதான் நான் எழுதிய முதல் பாடல். அதுக்கப்புறம் அடிக்கடி “என்ன ஏதாவது புதுப் பாட்டு எழுதினயா?”னு கேட்டு உற்சாகப்படுத்துவார்.

என்னவோ தெரியலை. வடக்குல சண்முகநாதன், மேற்குல பத்மநாபன், தெற்குல நான். எங்க மூணு பேரையும் சொந்த பிள்ளைகள் போலவே பாராட்டி, கண்டிப்பு காட்டி வளர்த்தார் சூரிஜி. இதுல மறைந்த பத்மநாபன், சிவராம்ஜி போல சட்டை, வேட்டியைத் துவைத்து இஸ்திரி போடாமல் அணிந்து கொள்வார். ஆனா, பொள்ளாச்சி மகாலிங்கம், தற்போதைய தென் தமிழக சங்கசாலக் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து போன்ற பல தொழிலதிபர்களை சங்கத்துக்கு கொண்டு வந்தவர்.

நெருக்கடி நிலை போராட்டம் பற்றி?

என்னைப் பொருத்தவரை நெருக்கடி நிலை நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. வெறும் சங்கம், சங்கம் சார்ந்த நபர்களோட இருந்த எனது தொடர்பு வெளி நபர்களுக்குச் சென்றது நெருக்கடி நிலையில்தான். பழ.கருப்பையா, பழ.நெடுமாறன் போன்றவர்களைச் சந்தித்தது அப்போதான். கம்யூனிஸ்ட் கட்சி ஆபிசுக்கும் போனேன். பாலசுப்பிரமணியம், ராமமூர்த்தி போன்றவர்கள் இருந்தாங்க. அங்கிருந்த ஒருத்தரிடம் “என்னோட பெயர் சொல்ல மாட்டேன். தலைமறைவுப் பெயர் ராமானுஜம். நான் ஆர்எஸ்எஸ்காரன். நாமல்லாம் சேர்ந்து வேலை செய்யணும்”னு சொன்னேன். அவங்க பேசிட்டு, “நாங்க உங்களோட வேலை செய்ய முடியாது தம்பி. எங்க வழி வேற. தனியா செஞ்சிக்கறோம். நீங்களும் உங்க வழியில செய்யுங்க. வாழ்த்துக்கள்”னு சொல்லி அனுப்பி வச்சாங்க. அதுக்கப்புறம் அவங்களைச் சந்திக்கலை. ஏன்னா, சிபிஐ எமர்ஜென்சியை ஆதரிச்சது. சிபிஎம் ஆதரிக்கலை. ஆனா, எதிர்க்கவும் இல்ல.

பழ.கருப்பையாவை மதுரையில அவரோட வீட்டுக்குப் போய் பார்த்தேன். அவர் தீவிரத் தமிழ்ப் பற்றாளர். ஜ,ஸ மாதிரி எழுத்துக்களைப் பயன்படுத்தமாட்டார். “ஆச்சி குளம்பி (காபி) கொண்டு வா”ன்னு சொன்னார். திருக்குறள் படிச்சதால சைவம் மட்டுமே சாப்பிட ஆரம்பிச்சிட்டார். என்னைப் பொருத்துவரை அவர் சிந்தனையில் குழப்பம். ஆனா, என்னைக் கண்டால் அவருக்குப் பிடிக்கும்; அவரைக் கண்டால் எனக்கும் பிடிக்கும். நல்ல நண்பர்.

அதேபோல, பழ.நெடுமாறனையும் பார்த்தேன். அப்போ அவர் பழைய காங்கிரசுல இருந்தார். அப்பவே அவர் பெரிய தலைவர். நானோ சங்க பிரச்சாரக். அவரிடம் போய், “எமர்ஜென்சிக்கு எதிரா நோட்டீஸ் போட்டிருக்கோம். அதை எங்க வைக்கிறதுன்னு தெரியல. யாராவது வீட்டுல வச்சா மாட்டிக்குவோம். அதனால, அந்த நோட்டீஸை பத்திரமா வைக்க ஏதாவது இடம் பண்ணி தரணும். அதுதான் என் கோரிக்கை” என்றேன். அவரை முதல் தடவையா அப்போதான் பார்த்தேன். உடனே நோட்டீஸை எடுத்துட்டு அவரோட கார்ல உட்கார சொன்னார். ஒரு பழைய பேப்பர் கடைக்கு முன்னாடி காரை நிறுத்தினார். அந்த கடைக்காரரிடம், “இந்த நோட்டீஸை செல்ஃப் அடியில ஓரமா போட்டு வை. இந்தப் பையனோ, இவர் கை காட்டற ஆளோ சொல்லற மாதிரி நடந்துக்கோ. கொஞ்சம் ஜாக்கிரதை!” என்றார்.

அப்போ தலைமறைவா பெயரை மாத்திட்டு இருந்தாலும், வழக்கம் போல எல்லார் வீட்டுக்கும் போவேன். அப்படி மதுரையில எனக்கு தெரிஞ்ச, நல்லா பழகிய காரியகர்த்தரோட வீட்டுக்குப் போயிருந்தேன். போனதும் வழக்கம் போல நேரா உள்ளே போயிட்டேன். “யார் நீ? என்ன சொல்லாம திடீர்னு உள்ளே வந்துட்ட?”னு கத்தறார். முதல்ல எனக்கு ஒண்ணும் புரியல. அதிர்ச்சியாயிட்டேன். அப்புறம்தான் காரணம் புரிஞ்சது. நான் மாறுவேஷத்துல இருந்தேன். அதுக்குள்ள அவரோட மனைவி, “ஸ்ஸ்ஸ்…. எல்.ஜி… எல்.ஜி..”னு சைகை காட்டினாங்க. காரணம், நல்லா பழகியிருந்தாலும் அவர் என் உருவத்தை மட்டுமே தெரிந்து வைத்திருந்தார். ஆனா, அவரோட மனைவியோ, என்னை சில தடவை பார்த்திருந்தாலும், குரல் அடையாளம் தெரிஞ்சிருக்கு.

எமர்ஜென்சி அமலில் இருந்தாலும், சங்க வேலை தொடர்ந்து நடந்தது. பைட்டக், குருபூஜா எல்லாம் நடந்தது. மதுரையில ஒரு ஷிபிர் கூட ஏற்பாடு பண்ணியிருந்தோம். கோபால்ஜி வந்திருந்தார். இன்னொண்ணு, எமர்ஜென்சிய எதிர்கொள்ள சங்கத்துல எந்த விசேஷப் பயிற்சியும் தரலை. நாடு நல்லா இருக்கணும், ஜனநாயகம் காப்பாற்றப்படணும்னு சொல்லப்பட்டது அவ்வளவுதான்.

எமர்ஜென்சி முடிஞ்சதும் அப்போ இருந்த காரியாலயத்தை காலி பண்ணினோம். வீட்டு ஓனருக்கு 19 மாசம் வாடகை தர முடியல. இடம் தேடி அலைந்தோம். ஒரு வக்கீல் வீட்டு மாடியில இடம் இருக்குனு தெரிஞ்சு நான் தங்கறதுக்கு வீடு வேணும்னு கேட்டோம். அப்போ பேசும்போது ஆர்எஸ்எஸ் காரியாலயத்துக்குதான் கேட்கறோம்னு தெரிஞ்சதும் அந்த வக்கீலுக்கு ரொம்ப சந்தோஷம். “சார்… எனக்கு ஆர்எஸ்எஸ் பிடிக்கும் சார். எமர்ஜென்சில நல்லா வேலை செஞ்சீங்க. உங்க சங்கத்துல இருக்கற அண்ணாஜி மதுரையில மூத்த வழக்கறிஞர். அவரை நல்லாவே தெரியும்” என்றவர், “எமர்ஜென்சியில உங்க நோட்டிஸைப் படிச்சிருக்கேன். இல.கணேசன்றவர் நல்லா பேசுவார்னு சொல்வாங்க. அவரைப் பார்க்கும்போது நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க சார்” என்றார். நான்தான் இல.கணேசன்னு சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். அப்புறம், ஷாகா வரணும்னு கேட்டார். காலை ஷாகாவுல 5, 10 பேர்தான் வருவாங்க. அதுல, அந்த வக்கீலை எப்படி கூப்பிடறதுன்னு தயக்கம். “நாங்க ஷாகாவுல ரொம்ப சில பேரைத்தான் சேர்ப்போம். எல்லாரையும் சேர்த்துக்கறதில்ல. நீங்க விழாவுக்கு வாங்க” என்றேன். அவர் வற்புறுத்தினார். அடுத்த முறை பார்க்கும்போது “நாங்க பேசிட்டோம். நீங்க ஷாகாவுக்கு வரலாம்”ன்னேன். மதுரை சிம்மக்கல் ஷாகாவுக்கு வந்தார். அந்த பத்து பேருல அண்ணாஜியும் ஒருத்தர். அந்த வக்கீலுக்கு ரொம்ப சந்தோஷம். அப்புறம் கோபால்ஜி ஆள் கேட்டாரேன்னு இந்து முன்னணிக்கு அனுப்பினேன். அதோட மாவட்ட தலைவர், அப்புறம் மாநில தலைவரா இருந்தார். ஆர்எஸ்எஸ்ஸின் அப்போதைய அகில பாரத இணை செயலாளர் யாதவராவ் ஜோஷிஜி அவர் வீட்டுல தங்கியிருக்கார். அவர்தான் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராஜகோபாலன்.

மீனாட்சிபுரம் மதமாற்றம் குறித்து?

மீனாட்சிபுரம் விவகாரம் வேற, ஆனால் அவங்க நோக்கம் வேற. சில இளைஞர்கள் கள்ளநோட்டு அடிச்சிட்டு காவல்துறையிடம் மாட்டிண்டாங்க. அந்த விவகாரத்தைத் திசை திருப்பறதுக்காக தீண்டாமையால் பாதிக்கப்பட்ட ஹிந்து அரிஜனங்கள் கும்பலா முஸ்லிம் மதத்துக்கு மாற போறதா கிளப்பினாங்க. அது ஊடகங்களில் பரவி, பெரிய அளவில் விளம்பரம் தேடித் தந்தது. அந்தச் செய்தியை படிச்ச உடனே ஒரு பொறுப்பாளரைக் கூட்டிட்டு அந்த ஊருக்குப் போயி சேர்ந்தேன். அங்க ஒருத்தர் “வாங்க… வாங்க… ஆர்எஸ்எஸ்காரங்க உடனே வந்துருவாங்கன்னு நேத்துதான் சொல்லியிருந்தேன்”னு சொன்னார்.

இந்த நேரத்துல, கரூரில் சங்கத்தோட மாநிலக்குழுக் கூட்டம் நடந்தது. அந்த பைட்டக்கில்தான் கோபால்ஜியை ஹிந்து முன்னணி ஆரம்பிக்க சொல்லி அனுப்பினாங்க. அப்போ, புது இயக்கத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்னு விவாதம் நடந்தது. தனுசுஜிதான் “ஹிந்து முன்னணினு பெயர் வைக்கலாம்”னு யோசனை சொன்னார். அந்தக் கூட்டத்துக்கு சங்கத்தோட அப்போதைய அகில பாரதப் பொது செயலாளர் சேஷாத்திரிஜி வந்திருந்தார். அவர் கையில் கர்நாடகத்துலேர்ந்து வெளிவந்த ஒரு ஆங்கில நாளிதழ் இருந்தது. அதில், ‘மதுரைக்கு அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் 1,000 அரிஜனங்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறத் திட்டம் போட்டிருக்கிறார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் மனோகர் என்பவர் ஏஜண்ட்டாக செயல்பட்டு மதம் மாற்றி வருகிறார்’னு எழுதியிருந்தது. “இது பற்றிய விவரம் தெரியுமா?”னு சேஷாத்திரிஜி கேட்டார். “தெரியாது” என்றோம். கூட்டம் முடிந்தது. கோபால்ஜி ஹிந்து முன்னணி தொடங்க அனுப்பப்பட்டு விட்டார். நானும், சங்கத்தின் அப்போதைய மாநிலத் தலைவர் ரங்கசாமி தேவரும் மீனாட்சிபுரம் போக முடிவாச்சி. ரங்கசாமி தேவரோட மகள் டாக்டர். அவருக்கு இந்த டாக்டர் மனோகரைத் தெரிந்திருந்தது. அங்க போறதுக்குள்ள அவர் மதம் மாறியிருந்தார்.

நாங்க சங்கத்தின் பெயரை சொல்லலை. ‘தியாகபூமி’னு ஒரு பத்திரிகையிலேர்ந்து வர்றதா சொன்னோம். முதல்ல மதம் மாறாம இருந்தவங்களையும், அப்புறம் மதம் மாறினவங்களையும் பார்த்தோம். “முஸ்லிம் மதத்துல சேரும் எண்ணம் எப்போ வந்தது”ன்னு கேட்டோம். ”முஸ்லிம் மதத்துல சேரும் எண்ணமெல்லாம் இல்லீங்க. ஆனா, ஹிந்து மதத்தை விட்டு வெளியே போற எண்ணம் ரொம்ப நாளா இருந்துச்சுங்க” என்றனர். ஆனா, மதமாற்றத்தைப் பெருமளவு தடுத்துட்டோம். ராமநாதபுரம் மாவட்டம்தான் அவங்க இலக்கு. அப்போ நமக்கு கிடைச்ச சொத்துதான் இப்போதைய மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன்ஜி, சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆத்மநாதசுவாமி போன்றவர்கள். கோவிந்தன்ஜியை ராமநாதபுரம் அரண்மனையில் ஒரு அறையில் தங்க வைத்தோம். அவர் உள்ளூர்ப் பிரமுகர்களை நம் பக்கம் கொண்டு வந்தார்.

பொதுவா, முஸ்லிம்தான் முரடர்கள்; கிறிஸ்துவர்கள் அப்படியில்லைன்னு ஒரு எண்ணம் இருந்தது. அதையும் உடைக்கற மாதிரி கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரம். இப்போ யோசிச்சு பார்த்தா, இதெல்லாம் தமிழகத்தில் சங்கம் வளர இறைவன் ஏற்படுத்திய வாய்ப்புனு தோணுது.

நிறைய தேசபக்தி பாடல்களை எழுதியிருக்கீங்களே?

தமிழகம் ஒரு காலத்தில் உடைக்க முடியாத பாறைனு சொல்வாங்க. கும்பகோணத்தில் ஒரு பைட்டக். யாதவராவ் ஜோஷிஜி வந்திருந்தார். “தமிழகத்தில் 100 ஷாகா”னு வலியுறுத்தினார். பின்னாடி, கன்னியாகுமரி ஜில்லாவுல மட்டும் 100 ஷாகா. அதை வச்சி, “வெறும் கல்லாக இருந்தது தமிழகம் இன்றொரு வில்லாக வளைந்ததைக் காண்போமய்யா… யாரு வந்து பேசினாலும் 100 தாண்டி காட்டு என்பார். 600ஐத் தாண்டியாச்சு. ஆயிரத்த தாண்டப் போறோம்”னு ஒரு பாடல் எழுதினேன்.

டாக்டர்ஜியோட நூற்றாண்டு விழா 1989ல் நடந்தது. ஒரு பைட்டக்கில் “மாநிலத்துக்கு ஒரு பாடல் எழுதணும்”னு சூரிஜி சொன்னார். அன்னைக்கு மதியத்துக்குள்ள “ஜி… ரெண்டு பாரா எழுதியிருக்கேன்”னு சொன்னேன். “ஆனா பாட்டுதான் முஸ்லிம் சாயல்ல இருக்கும்”னு இழுத்தேன். “எங்கே பாடு”ன்னார். “கேசவனை நாம் வணங்குவோம். அவர் பாதையிலே நாமும் செல்லுவோம்”னு பாடினேன். அடுத்த ரெண்டு பாரா-வ ஜெயமணி (சங்கத்தின் மூத்த பிரச்சாரக்) எழுதினார். ராகமும் போட்டு, நாகபுரியில நடந்த டாக்டர்ஜி நூற்றாண்டு விழாவுல பாடினோம். சில பஞ்சாப் ஸ்வயம்சேவக் எங்கயிருந்தோ ஓடி வந்து டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டாங்க. முடிஞ்சதும், “எங்க ஊர் ராகத்தை எங்க இருந்து பிடிச்சீங்க”ன்னு கேட்டாங்க.

ஒரு தடவை மதுரையிலேர்ந்து திருவேடகம் பஸ்ஸுல போயிருந்தேன். அப்போ, ஜயப்ப பக்தர்கள் பாடிட்டு வந்த ராகம் அப்படியே பதிஞ்சிடுச்சு. வரிகளை மனசுல நினைச்சி ராகம் போட்டுட்டே வந்தேன். ”மலையில மகுடம் வச்சி”னு ஒரு பாடல். கரூர்ல ஒரு பொறுப்பாளர். கரகம் ஆடறவர். அவர்கிட்ட சொல்லியிருந்தேன். அவர் கேட்டார், “எங்க கரகத்துல ஆடற ‘சந்தனப் பொட்டு வச்சி’னு பாடல் இது”ன்னார். ஒரு ராகம் எப்படியெல்லாம் பயணிக்கறது பாருங்க.

ஒருமுறை யாதவராவ் ஜோஷிஜியும் நானும் நடைப்பயிற்சி போயிருந்தோம். அவர் பிறவியிலேயே பெரிய பாடகர். அது மூலமாதான் சங்கத்துக்கு வந்தார். ஆனா, இங்க வந்ததுக்கு அப்புறம் பாடறதில்லனு விரதம் பூண்டவர். “எல்லா ஹிந்தி பாட்டையும் ஏன்யா அப்படியே தமிழில் மொழிபெயர்க்கறீங்க. நீ எழுதற பாடல்களை தமிழ்நாட்டு மெட்டுலயே எழுது. அதுதான் அழகு” என்றார்.

சங்கப் பாடல்களை வைத்தே வரலாறு சொல்லிடலாம். கோபால்ஜி எழுதின பாட்டு எல்லாம் மந்திரம். பாரதியாருக்குப் பிறகு தமிழில் அதிகளவு தேசபக்தி பாடல்களை எழுதினவர் கோபால்ஜிதான். ஆனா, சங்கத்துல பாடல்களுக்கு யாரும் பெயர் போட்டுக்கறதில்ல.

ராஜபாளையத்துல சங்கத்தோட முகாம். முதல் தடவையா நான் முகாம் செயலாளர். ஆனா, முகாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நாள் எனக்கு கடுமையான ஜுரம். படுத்த படுக்கையா ஆயிட்டேன். முதல் நாள் அப்போதைய சர்சங்கசாலக் பாளாசாகேப் தேவரஸ் வந்தார். அவரும், கோபால்ஜியும் என்னைப் பார்க்க நான் படுத்துருந்த அறைக்கே வந்துட்டாங்க. அப்புறம், பௌத்திக் (சிறப்புரை) க்கு முன்னாடி பாடல் பயிற்சி நடக்குது. கோபால்ஜி எழுதின பாடல்களை அவரே பாடி அரங்கேற்றுவார். ‘என் ஜன்மபூமி தாயே’ பாடல் அந்த முகாமில்தான் அறிமுகமாகுது. கோபால்ஜி பாடறார். “உனக்காகவே என் வாழ்வு, உனக்காக சாவும் ஏற்போம்” என்று உச்சஸ்தாயியில் போயிட்டு வரும். அந்த வரிகளைக் கேட்டதும், முகம் கை கால் அலம்பி கொண்டு போய் உட்கார்ந்துட்டேன். பிறகு, அந்த முகாமில் ஒருநாள் கூட படுக்கவே இல்ல.

எப்போது பா...வுக்கு வந்தீங்க?

1991-ல. சங்கத்தோட அகில பாரத அதிகாரிகள் ஒவ்வொரு பரிவார் இயக்கத்தின் வேலைகளுக்கு வழிகாட்டுவது வழக்கம். அதேபோல, சங்கத்தின் அப்போதைய அகில பாரத இணை பொதுச் செயலாளர் பாவுராவ் தேவரஸ்ஜி பி.ஜே.பி.யின் அமைப்பு வேலைகளுக்கு வழிகாட்டுவார். அவர் ஒருமுறை கோயம்புத்தூருக்கு ஒரு சிகிச்சைக்காக வந்திருந்தார். சங்கத்தின் மாநில இணை அமைப்பாளரான எனக்கு தென் தமிழகம் பொறுப்பு. எனவே, பாவுராவ் தேவரஸ்ஜியை சந்திக்கப் போயிருந்தேன். “தமிழ்நாட்டுலேர்ந்து பி.ஜே.பி.க்கு எப்போ ஆள் தர போறீங்க?” என்றார். “தர்றோம் ஜி” என்றேன். “எவ்வளவு நாள் இப்படியே சொல்லிட்டிருக்க போறீங்க?” என்றார். அந்த வருடம் அதற்காக உண்மையிலேயே யோசனை செய்திருந்தோம். நானல்ல, வேறொரு நபர். சங்கத்தின் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னால் சொல்வதில்லை. “இப்போ இங்கே ஆட்கள் இருக்காங்க. அப்புறம் ஒருநாள் வந்து சொல்றேன்” என்றேன். என்னை ஏற, இறங்க பார்த்து விட்டு, “நீ ஏன் பி.ஜே.பி.க்கு வரக்கூடாது?” என்றார். எனக்கு அதிர்ச்சி. கனவிலும் அந்த நினைப்பு எனக்கு வந்ததில்லை. “நானோ சங்க பிரச்சாரக். நான் எப்படி தீர்மானிக்க முடியும்?” என்று ஏதோ சமாளித்துவிட்டு வந்துட்டேன்.

பிறகு, சூரிஜியை பார்க்கும்போது விஷயத்தை சொன்னேன். “நீ என்ன சொன்னே? சம்மதமா?” என்றார். “என்ன ஜி சொல்றீங்க? உங்க கிட்ட அப்படி கேட்டா என்ன சொல்வீங்க?” என்றேன் உரிமையுடன். “இல்ல. உன்னை பி.ஜே.பி.க்கு அனுப்பணும்னு ஏற்கெனவே யோசனை பண்ணியிருந்தோம். சேஷாத்திரிஜி உன் கிட்ட பேசறதுன்னு முடிவாயிருக்கு. அவர் பாவுராவ் தேவரஸ்ஜியிடம் சொல்லியிருப்பார். அவருக்கு பணிகள் வளரணுமேன்னு ஆதாங்கம். உன் கிட்ட நேரடியா கேட்டுட்டார்” என்றார் சூரிஜி.

அறிவிப்பதற்கு முன்னாடியே ஈரோட்டில் நடந்த மாநில செயற்குழுவுக்குப் போனேன். அந்த வருடம் நடந்த தேர்தலில்தான், அத்வானிஜி வேண்டுகோளுக்கிணங்க சங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு வேலை செய்தது. சங்கத்தின் சார்பில் என்னைத் தேர்தல் பணிக்கு அனுப்பியிருந்தார்கள். அதனால, என்னை செயற்குழுவில் பார்த்ததும் சிலருக்கு சந்தேகம் வந்தது. அதற்கு முன்னாடியே அப்போதைய மாநிலத் தலைவர் விஜயராகவலுஜிக்கும், மாநில பிரபாரிக்கும் மட்டும் தெரியும். பிறகு, முறைப்படி பி.ஜே.பி. மாநில அமைப்புப் பொதுச் செயலாளர்னு சங்கத்தால் அறிவிக்கப்பட்டேன்.

அப்போதைய தமிழக பி.ஜே.பி.யின் செயல்பாடு எப்படி இருந்தது?

ஜனா கிருஷ்ணமூர்த்திஜி, சங்கர்ஜி எல்லாம் அமைப்பு வேலை பார்த்திருக்காங்க. சில காரியகர்த்தர்களும் தமிழகம் முழுவதும் சுற்றி கட்சியை வளர்த்திருக்காங்க. ஒரு குடும்பம் மாதிரி இயல்பா இருந்தது. பேசிட்டே இருப்பாங்க, திடீர்னு செயற்குழு ஆரம்பிச்சிருக்கும். திடீர்னு எழுந்து போவாங்க, செயற்குழு முடிஞ்சிருக்கும். 16 மாவட்டங்களில் கட்சி வேலை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா வேலை அதிகமாச்சி. எனக்கு வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு இன்ஸ்பிரேஷன். தினசரி அவரோட அறிக்கை பத்திரிகைகளில் வரும். ‘அவரைப் போலவே நாமும் தேசிய கட்சிதானே? நாம ஏன் அறிக்கை தரக்கூடாது’னு எண்ணம். சூரிஜிகிட்ட சொன்னேன். “நீயே அறிக்கை கொடு” என்றார். “நல்லா இருக்காது”. “அப்போ விஜயராகவலு பெயரில் அறிக்கை கொடு” என்றார். அப்படியே கொடுக்க ஆரம்பித்தேன். ஏதோ 7-வது பக்கத்துல சின்னதா ‘பாஜக கருத்து’னு வரும்.

ஒருநாள், காலையில எங்கயோ போயிட்டு அலுவலகம் திரும்பினேன். என் அறைக்குப் பக்கத்துல விஜயராகவலுஜி அறை. சில பேர் இருந்தாங்க. அப்பல்லாம் கட்சி அலுவலகத்துக்கு எப்பவாவதுதான் ஆட்கள் வருவாங்க. என்னனு பார்த்தா, காலையில வந்த அறிக்கைக்கு விளக்கம் கேட்டு வந்திருக்காங்க. விஜயராகவலு மத்த விஷயத்துல நல்ல விவரமான ஆள்தான். ஆனால், ஊடகங்களுக்குp பேச வராது. அப்போதைக்கு ஏதோ சமாளிச்சிட்டார்.

திரும்பவும் சூரிஜி, கோவிந்தாச்சார்யா கிட்ட பேசினேன். “உன பெயருலயே அறிக்கை விடு” என்றார். அப்போ கோவிந்தாச்சார்யா சொன்னார், “பேச ஆள் இல்லேன்னா நீதான் பேசணும். வேலை செய்ய ஆள் இல்லேன்னா நீதான் வேலை செய்யணும்”. அப்புறம் கொஞ்சம், கொஞ்சமா இல.கணேசன்னு வெளியே தெரிஞ்சது. முதல்முதலா என்னோட முழுமையான பேட்டி சன் டி.வி. நேருக்கு நேர் நிகழ்ச்சில வந்தது. என்னை பிரபலப்படுத்ததான் அந்த பேட்டி எடுத்ததா, அவரே பின்னாடி சொன்னார். இதனால, பி.ஜே.பி.யும் வளர்ந்தது.

நான் மாநில அமைப்புப் பொதுச் செயலாளராக இருந்தபோது, நிறைய பிரபாரிகள் வந்திருக்கிறார்கள். அதில் பிரபாரிகளுக்கு உதாரணம் என்றால் ஆந்திராவைச் சேர்ந்த ராமராவை சொல்வேன். காரியகர்த்தர்கள் வளர்ச்சி, அமைப்பு வேலைகளில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவர்தான், “தேசிய பொதுச் செயலாளர் வெங்கைய நாயுடு தென் பகுதியிலிருந்து அகில பாரத பொறுப்புக்கு ஆள் கேட்டார். உங்கள் பெயரைச் சொல்லியிருக்கேன்” என்றார். என் திறமை, தகுதி பற்றி எனக்குத் தெரியும். மாநில அளவில் பொறுப்பு வகிப்பது சரி, ஆனால் அகில பாரத அளவில் பொறுப்பு வகிக்குமளவு ஹிந்தி மொழியறிவு குறைவு. ஆனால், வெங்கைய நாயுடு தலைவரானதும் என்னை அகில பாரதச் செயலாளராக நியமித்தார். பிறகு, ராஜ்நாத் சிங் தலைவரானதும் அகில பாரதத் துணைத் தலைவரானேன்.

பிறகு, என்னை மாநிலத் தலைவராக இருக்கச் சொன்னார்கள். என்ன காரணம்னு எனக்குத் தெரியும். என்னைப் பொருத்தவரை நான் சங்க பிரச்சாரக். சங்கம் சொல்வதைக் கேட்பேன். மற்றபடி பிஜேபி தலைவர்கள் சொல்வதைக் கேட்பேன். மூன்றாண்டுகள் முடிவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னாடி எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பைபாஸ் சர்ஜரி செய்தாங்க. அப்போது துணைத் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், அடுத்து மாநிலத் தலைவரானார்.

எனக்கு சர்ஜரி பண்ணதாலேயே, அடுத்து எனக்கு எந்தப் பெரிய பொறுப்பும் தரலை. பிஜேபி வந்ததுலேர்ந்து இப்போது வரை தேசிய செயற்குழு உறுப்பினர். அதில் தொடருகிறேன். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை செயற்குழு உறுப்பினர்களை நியமிப்பார்கள். அது இல்லாமல், முன்னாள் தேசியப் பொறுப்பாளர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கொண்ட நிரந்தரச் செயற்குழு பட்டியலும் உண்டு. அதில் நானும் இருக்கிறேன். அதேபோல, தேசிய அளவில் பயிற்சி முகாம்களுக்கான குழுவிலும் இருக்கிறேன். அகில பாரத பொறுப்பு தரவில்லை என்றாலும் பிற மாநிலங்களுக்கான பிரபாரி பொறுப்பு கொடுத்தாங்க. கேரளம், ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு பிரபாரியா போட்டாங்க.

பிற மாநில பிரபாரியாகப் பணியாற்றிய அனுபவம்?

கேரளத்தில் மலையாளம் பேச வேண்டும். ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்தியில் பேச வேண்டும். அந்தமான், நிகோபரில் ஹிந்திதான் மொழி. ஒருமுறை அங்கே தேர்தல் பிரசாரத்துக்குக் கூப்பிட்டாங்க. ஒரு பகுதியில் “இங்கே தமிழர்கள் அதிகம். தமிழிலேயே பேசுங்க” என்றார்கள். தமிழில் பேச ஆரம்பித்ததும் சிலர் ஹிந்தியில் பேசுங்கன்னு சத்தம் போட்டாங்க. அப்படியே ஏதோ ஹிந்தியில பேசிட்டேன். அடுத்து பஞ்சாபிகள் வசிக்கும் பகுதி. “முன்ன பேசினது மாதிரியேதான் ஜி. இங்கயும் பேசுங்க” என்றார்கள். இந்த அனுபவம்தான் என்னை ராஜ்யசபையில் ஹிந்தியிலேயே சொற்பொழிவாற்றும் தைரியத்தைத் தந்தது.

கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடம் பழகியிருக்கீங்க. அவர்கள் பற்றி?

இருவரிடமும் பழகியிருக்கேன். ஜெயலலிதாவிடம் பழகியது குறைவு. பாபர் மசூதி இடிப்புக்கு முன்னாடி கரசேவை நடந்தது. அதைக் கண்டித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் போடுறதா இருந்தாங்க. அந்தக் கூட்டத்துல ஜெயலலிதா கரசேவையை ஸ்ட்ராங்கா ஆதரிச்சி பேசினாங்க. நாம கூட அப்படி வலுவா பேசியிருக்க முடியாது. நல்ல பக்திமான் என்பதைத் தாண்டி சில விஷயங்களில் தெளிவாகவும் இருந்தார். அத்வானியிடமும், மோடியிடமும் நல்ல நட்பு. வாஜ்பாயிடமும் மரியாதை உண்டு. அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் வந்திருக்கலாம். ஒருமுறை அவங்க வீட்டுல அத்வானிஜி, அவரோட உதவியாளர் சோப்ரா, அப்போதைய பிரபாரி ரவிசங்கர் பிரசாத், நான், சுகுமாரன் நம்பியார் எல்லோரும் மதிய விருந்துக்குப் போயிருந்தோம். அந்த அம்மா மட்டும்தான். கலகலன்னு ஒரு மணிநேரம் போனது. சுகுமாரன் நம்பியாரும், அவங்களும் பள்ளித் தோழர்கள். ஒருமையில பேசிப்பாங்க. வருடாவருடம் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து வரும். ஒரு வருடம் ‘அண்ணா, மன்னி, காயத்திரியை விசாரித்ததாகச் சொல்லவும்’ என்று பச்சை இங்க்கில் எழுதிக் கையெழுத்து போட்டிருந்தார்.

அடுத்து கருணாநிதி. நமக்கு எதிர்க் கருத்தா இருந்தாலும், நட்பு பாராட்டுவார். அவரை விட நான் ரொம்ப சின்னவன். ஆனால், நல்லா இருந்தவரைக்கும் மாடிலேர்ந்து கீழே வரைக்கும் வந்து வழியனுப்புவார்.

அவர்கள் இருவரிடம் சங்கத்தைப் பற்றி பேசியிருக்கீங்களா?

ஜெயலலிதாவிடம் பேசியதில்லை. கருணாநிதியிடம் நிறைய பேசியிருக்கிறேன். ஒருமுறை கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி ஒரு வழக்கு. ஆர்எஸ்எஸ் சென்னை சங்கசாலக் வக்கீல் சம்பத்குமார்ஜிதான் வழக்கு போட்டவங்க தரப்பில் ஆஜரானார். அப்போ சங்கத்துலயே என்னை கருணாநிதியிடம் பேச சொன்னாங்க. “நாங்க எந்த மொழிக்கும் எதிரானவங்க இல்ல. தமிழிலேயே தேவாரம், திருவாசகம் பாட்டுகளை கோயில்களில் பாடுறோமே? ஆனா, ஆகம விதிகள் மீறக்கூடாது என்பதுதான் எங்கள் கவலை” என்றேன். அதுபோல, சில விஷயங்கள் பத்தி பேசியிருக்கேன்.

தமிழ்நாட்டில் பா...வை அறிமுகப்படுத்தியது திராவிடக் கட்சிகள்தான் என்று குற்றம்சாட்டப்படுகிறதே?

அவங்க வாதத்துல உண்மையில்லேனு சொல்ல மாட்டேன். விழுப்புரம் பக்கத்துல ஒரு கிராமம். அங்க இருந்து எங்க ஊர்ல ஆர்எஸ்எஸ் ஆரம்பிக்கணும்னு கேட்டு இரண்டு ஆசிரியர்கள் சங்கத்தோட காரியாலயத்துக்கு வந்திருந்தாங்க. அப்போல்லாம் அப்படி கேட்டு நேரில் வருவது ரொம்ப அபூர்வம். என்ன விஷயம்னு கேட்டா, “எங்க ஊர்ல கம்யூனிஸ்டுகாரன் மீட்டிங் போட்டான். ஒரு மணி நேர கூட்டத்துல 50 நிமிஷம் ஆர்எஸ்எஸ்ஸையே திட்டினான். எங்களுக்கு கம்யூனிஸ்டு பிடிக்காது. சரின்னு, ஆர்எஸ்எஸ் ஆபிஸை தேடி அலைஞ்சோம். அப்புறம் யாரோ சொன்னாங்க, சென்னை சேத்துப்பட்டுல ஆர்எஸ்எஸ் ஆபிஸ் இருக்குனு. அதனால இங்க வந்துருக்கோம்”னாங்க. அதனால, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர கம்யூனிஸ்டு கூடக் காரணம் சொல்லிக்கலாம்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பரவலா வளர ஒரு காரணம், துக்ளக்கில் சோ வெளியிட்ட சூரிஜியோட பேட்டி. நெருக்கடி நிலைக்கு அப்புறம், சூரிஜியை பேட்டி எடுத்து, ஐந்து மணி நேரம் வந்த பேட்டியை நாலு பக்கத்துல சுருக்கி வெளியிட்டார். சங்க காரியாலயத்துக்கும், துக்ளக் ஆபிசுக்கும் ஏராளமான கடிதங்கள். அதை நாங்க மாநில குழுவுல பிரிச்சு, எல்லா மாவட்டங்களிலும் கூட்டம் போட்டோம். மதுரை மாதிரி சில கூட்டங்களுக்கு தாணுலிங்க நாடாரும் வந்திருந்தார். அந்தக் கூட்டங்களில் ஷாகா பத்தி முதல்ல சொல்லிடுவேன். அப்புறம் இந்து முன்னணி, பிஜேபி பத்தியெல்லாம் சொல்லிட்டு யாருக்கு எங்கே போகலாம்னு தோணுதோ போங்கன்னு சொல்லுவேன். சிலர் ஷாகாவுக்கே வந்துருவாங்க.

சங்கம், ஷாகா போகற எல்லா இடத்துக்கும் இந்து முன்னணி, பிஜேபியும் போகும். அப்புறம் ஷாகா போகாத இடங்களில் கூட இந்து முன்னணி போச்சு. அப்படியே ஷாகா, பிஜேபியும் போச்சு. இப்போ பிஜேபிக்கு நிறைய இடத்துல கிளை இருக்கு. அப்படியே ஷாகா, இந்து முன்னணியும் போகுது. இது மூணுக்குமே தொடர்பு இருக்கு. இப்போ எங்க அடையாளம் நரேந்திர மோடி. ஊடகங்கள் மூலமா மக்களுக்கு அவரைத் தெரிஞ்சிருக்கு. ‘மோடி தெரியுமா’னு கேட்டுட்டே நாங்களும் போறோம்.

பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு பற்றி?

1960களின் துவக்கத்தில், தஞ்சாவூர் மாவட்டத்துல எங்கே கூட்டம் நடந்தாலும் நண்பர்கள் சேர்ந்து சைக்கிள்ல போயிடுவோம். பட்டுக்கோட்டையில வேலை செய்திருந்தப்போ தமிழ் இலக்கியங்களைப் படித்திருக்கேன். ஆனா, சங்கத்தில் பிரச்சாரக்கா வந்ததும் கடிவாளம் கட்டியது மாதிரி ஒரே மாதிரியான வேலை. பாஜகவுக்கு அனுப்பின பிறகு, சென்னைக்கு வந்தேன். மாலை நேரங்களில் கட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இருக்காது. அந்த நேரங்கள்ல கம்பன் விழா மாதிரி இலக்கியக் கூட்டங்களுக்கு போய் ரசிக்க ஆரம்பிச்சேன். சில சமயங்களில், ஈவெரா, திராவிட இயக்கம் பத்தி சில பேரு பேசுவாங்க. ‘கம்பர் ஒரு தேசியவாதி, அவருக்கு எப்படி திராவிட சம்பந்தம்?’னு யோசிப்பேன். அப்புறம்தான் புரிஞ்சது, அவங்க பக்கம் பயிற்சி பெறுகிறான், இங்கே வந்து பேசுகிறான். இதுபத்தி மறைந்த பத்திரிகையாளர் மலர்மன்னன், ஆ.சொ.முத்துகண்ணன் கூட அடிக்கடி பேசுவோம். ‘நாமும் ஒரு இலக்கிய அமைப்பு ஆரம்பிக்கலாம்’னு முடிவு செய்தோம். “நீங்க யாராச்சும் ஆரம்பிங்க, நான் பின்னாடி இருக்கேன்”னு சொன்னேன்.  கட்சி நடத்தறதுக்கே காசு இல்ல, தனியா ஒரு அமைப்பு நடத்த ஏது பணம்? “இல.கணேசன்ங்ற பெயர் யாருக்கும் இல்ல. உங்க பெயரும் பிரபலமா ஆயிட்டிருக்கு. நீங்களே இருங்க”ன்னு சொன்னாங்க. எனக்கு தெரிந்து ‘இல’ என்ற இனிசியல் யாருக்கும் இல்ல, குறைந்தபட்சம் அரசியலில் இல்லை. ஆ.சொ.முத்துகண்ணன் பெயரில் ஆர்வமானவர்களைக் கூப்பிட்டோம். 26 பேர் வந்திருந்தாங்க. அப்படியே, முதல் கூட்டம் ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது. பாலகுமாரன் கலந்து கொண்டு வாழ்த்தினார். இந்த 13 வருடங்களில் ஆண்டுக்கு 10 கூட்டங்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட, 130 கூட்டங்கள் நடந்திருக்கு. நிறைய தமிழறிஞர்களுக்கு விருது கொடுத்துருக்கோம். சில மறைந்த தமிழறிஞர் குடும்பங்களுக்கு  முடிந்தளவு நிதியுதவி தந்திருக்கோம். இளைஞர்களுக்கு வாய்ப்பு தருகிறோம். இயல், இசை, நாடகம் என்று மூன்று பிரிவுகளுக்கும் இடம் தருகிறோம். கடைசியாக நடைபெற்ற 14வது ஆண்டு விழா எல்லா வகையிலும் நிறைவாக இருந்தது.

தமிழகத்தில் ஆரியம்-திராவிடம்னு பிரிச்சு பேசுறாங்க. இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் திராவிட இனம்தான். ஆரியம் என்பது குணத்தை குறிப்பது. இதற்கு சங்க இலக்கியகளில் இருந்து ஆதாரம் எடுத்து ‘சங்கப் பலகை’ என்ற பெயருல 30, 40 கூட்டங்கள் மூணு, நாலு வருஷம் நடத்தியிருக்கோம்.

இப்படியெல்லாம் முயற்சி பண்ணாலும், தமிழ் படிக்கறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சிட்டே வருது. பிறகு பேசுறவங்களோட எண்ணிக்கை குறையும். அப்புறம் தமிழ் புரிகிறவர்களோட எண்ணிக்கையும் குறையும். இதைத் தடுக்க இலக்கிய அமைப்புகளும், அரசும் முயற்சி எடுக்கணும். இதுதான் இப்போ என்னோட கவலை.

பாஜகவில் இருப்பவர்கள் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்ற கருத்துண்டு. ஆனால், அது தற்போது குறைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே?

நீங்க யாரையோ மனசுல வச்சிட்டு இந்த கேள்விய கேட்கறீங்க. என்னைப் பொருத்துவரை, பிஜேபியில உறுப்பினரா சேரும் படிவத்தோட பின்பக்கத்துல ஐந்து விஷயங்கள் போட்டிருக்கு. அதுல ஒண்ணு, ‘நாங்க தூய்மையான அரசியலைக் கடைப்பிடிப்போம்’. ஆனா, சமீபத்துல மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துல எதிர்க்கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட எப்படி அவதூறு பேசினாங்க. அப்போ நரேந்திர மோடி அந்த அடி அடிக்கலேன்னா என்ன ஆகியிருக்கும்? கர்ணன் கிட்ட கிருஷ்ணர் கேட்கிறார், “யாரிடம் தர்மம் பத்தி பேசுறே? திரௌபதியை துகிலுரியும் போது அந்த தர்மம் எங்கே போச்சு?” என்கிறார்.

சுதந்திரப் போராட்டத்துல காந்திஜி அகிம்சா வழியில் போராடினார். காந்திஜி தி கிரேட். ஆனா, திலகர் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டணுங்கற கட்சி. அவரோட அணியிலதான் நம்ம தமிழ்நாட்டுலேர்ந்து பாரதியார் இருந்தார், வ.உ.சி. இருந்தார், வ.வே.சு.ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரினு பல பேர் இருந்தாங்க. அவங்க தேசபக்தியில இம்மியளவும் குறைந்தவர்களில்லை.

என்னைப் பொருத்தவரை, பெண்களைச் சொல்லும்போது ஜாக்கிரதையா இருக்கணும். அது மட்டும்தான் என்னோட யோசனை. எனக்கு ஒரு சுபாவம். எவ்வளவு கோபப்பட்டாலும் நகைச்சுவையா ஒரு கருத்து சொல்லிடுவேன். என்னைப் போலவே மத்தவங்களோட சுபாவமும் இருக்குமா? நீங்க யாரை மனசுல வச்சி கேட்கறீங்களோ, அவங்க பேச்சுல உண்மை இருக்கறதாலதான், அவங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கு.

PARTY WITH DIFFERENCE என்பதுதான் பாஜகவின் பெயர். தற்போது பாஜகவும் காங்கிரஸ் போலவே மாறிவிட்டது என்று பேசுகிறார்களே?

அது ராஜ தர்மம், ராஜ நீதி. தமிழில் அரசியல். இன்னைக்கு அரசியல்ங்கறதே கெட்ட வார்த்தையாகிப் போச்சு. உண்மையில் அரசியலில் இருக்கும் ஒவ்வொருவரும் மூணு புத்தகங்களைப் படிக்கணும். மகாபரதம், கிருஷ்ணரோட வாழ்க்கையைச் சொல்லும் பாகவதம், சத்ரபதி சிவாஜியோட வாழ்க்கை வரலாறு. இந்த மூணு வரலாறையும் படிச்சிட்டா, நாங்க பிஜேபில பண்றதை யாரும் குறை சொல்ல மாட்டாங்க. நேர்மை, நியாயம் எல்லாம் தர்மத்தின் வழியில் நிற்பவர்கள் பேசுவது. பேசக்கூடாதவங்க கிட்ட தர்மத்தைப் பேசக்கூடாது. அப்படி பேசக்கூடாதவங்களிடம் பேசினா அதுக்கு பெயர் சத்குண விருக்தினு சாவர்க்கர் சொல்வார். கர்ணன் ஆயுதம் இல்லாம இருக்கும்போது கிருஷ்ணர், ‘அர்ஜுனா, இதுதான் சரியான நேரம். அம்பு விடு’ என்கிறார். இதே கிருஷ்ணர் தானே ராமனா இருக்கும்போது ‘இன்று போய் நாளை வா’ என்கிறார். ராமனே மாறும்போது நாங்க மாறக்கூடாதா? மோடிக்காகவோ, அமித் ஷாவுக்காகவோ, இல.கணேசனுக்காகவோ நாங்கள் செயல்படுவதில்லை. இந்த தேசம் நல்லா இருக்கணும்ங்கறதுக்காக எது பண்ணாலும் அது தர்மம். இன்னைக்கு தேசவிரோத சக்திகளெல்லாம் ஒண்ணா இருக்குது. நாங்க தனியா போராடுறோம். அது கவலையில்லை. கௌரவர்கள் நூறு பேர், பாண்டவர் அஞ்சு பேர்னாலும் தர்மம்தான் ஜெயிக்கும்.

Share

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா

வலம் அக்டோபர் மற்றும் நவம்பர் 2019ல் வெளியான மொழிபெயர்ப்பு:

முன்னாள் பிரதமர் ராஜீவுக்கு ஜக்மோஹன் எழுதிய கடிதம். ஜக்மோஹன் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இரண்டு முறை பதவி வகித்தவர். இந்தக் கடிம் ஜக்மோஹனால் ஏப்ரல் 20, 1990 அன்று ராஜீவுக்கு எழுதப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை இக்கடிதம் மிகத் துல்லியமாக அன்றே வெளிப்படுத்தியது என்ற குறிப்புடன் ‘இந்திய எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இந்தக் கடிதத்தின் சில பகுதிகளை வெளியிட்டிருக்கிறது. ஜக்மோகன் கடிதத்தின் முழுமையான தமிழாக்கம் இங்கே.

காஷ்மீரில் பாரத மாதாவைக் கைவிட்டீர்கள்!

அன்புள்ள ஸ்ரீ ராஜீவ் காந்தி,
April 21, 1990

இந்த திறந்த மடலை உங்களுக்கு எழுத வைத்துவிட்டீர்கள். கட்சி அரசியலில் இருந்து தொடர்ந்து நான் விலகியே இருந்து வந்திருக்கிறேன். இருக்கும் கொஞ்சம் திறமையையும் ஆற்றலையும், சில ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய பயன்படுத்தவே விரும்புகிறேன். சமீபத்தில் மாதா வைஷ்ணவோ தேவி கோவில் வளாகத்தை மேம்படுத்த உதவியது போல. இப்படிச் செய்து நம் கலாசார மறுமலர்ச்சிக்கு உதவவில்லை என்றால், விரைவாக அழிந்துவரும் இதுபோன்ற அமைப்புகளைக் காப்பாற்ற முடியாமலேயே போய்விடும். இந்த அமைப்புகளின் உன்னதமான நோக்கங்கள் (அவை சட்ட அல்லது நீதி அமைப்புகளாக இருந்தாலும்) அதன் சாரத்தை இழந்துவிடும். நீதியின் ஆன்மாவும் உண்மையும் இன்றைய அரசியல் சூழலால் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.

நீங்களும் உங்கள் நண்பர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவும் காஷ்மீர் தொடர்பாகப் பொய்யான ஒரு சித்திரத்தை வரையப் பார்க்கிறீர்கள். உங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஷிவ் ஷங்கர் மற்றும் என்.கே.பி.சால்வே போன்றவர்கள், வெளிப்படையாக உங்கள் அறிவுறுத்தலின் பேரில், எனக்கெதிரான மனநிலையை உருவாக்க நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள். துர்க்மன் கேட்டில் 14 வருடங்களுக்கு முன்பு நடந்த பழைய நிகழ்ச்சியைக் கையில் எடுக்கிறார் ஷிவ் ஷங்கர். என்.கே.பி.சால்வே எனது பேட்டியை எடுத்துக்கொண்டு, எனக்கு எதிராக மதவாதக் குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கிறார். அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை!

மணி சங்கர் ஐயரும் சில பத்திரிகைகளில் தன் விஷக் கருத்துகளைப் பதிவு செய்கிறார். ஆனாலும், இந்தத் தொடர்ச்சியான மூர்க்கமான தவறான தகவல் அம்புகளுக்கு பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தேன். ஒட்டுமொத்தமாகப் பொய்களைச் சொன்ன சில பத்திரிகைகளுக்கு மட்டும் சரியான தகவல்களை எப்போதாவது எழுதினேன். எனது நோக்கம், இந்த நாட்டுக்கும் வரலாற்றுக்கும் நான் செய்யவேண்டியதாக நம்பும் கல்வி மற்றும் வரலாற்று ரீதியிலான புத்தகத்தில் மட்டும் இவற்றை எழுதினால் போதும் என்பதுதான்.

ஆனால், ராஜஸ்தான் தேர்தல் கூட்டங்களில் நீங்கள் பேசியவற்றின் சில பகுதிகளை என் நண்பர்கள் காட்டினார்கள். இதுதான் எல்லை என்று அப்போதுதான் நினைத்தேன். உங்கள் திரிபுகளுக்கான நோக்கங்களைச் சொல்லாவிட்டால், நீங்கள் என்னைப் பற்றிய தவறான எண்ணத்தை இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது நாடு முழுக்கப் பரப்புவீர்கள் என்பதை உணர்ந்தேன்.

எச்சரிக்கை மணி

1988 தொடக்கம் முதலே, காஷ்மீரில் சூழத் துவங்கி இருக்கும் புயல் பற்றிய ‘எச்சரிக்கை மணி’களை உங்களுக்கு அனுப்பத் துவங்கி விட்டேன் என்பதை நினைவுறுத்த வேண்டுமா என்ன? ஆனால் உங்களுக்கும், உங்களைச் சுற்றி உள்ள அதிகார வர்க்கத்தினருக்கும், இந்த எச்சரிக்கையைப் பார்க்க நேரமோ ஆர்வமோ இதுகுறித்த தரிசனமோ இல்லை. இவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பது, உண்மையான வரலாற்றுப் பரிமாணத்துக்குத் தீங்கிழைப்பது என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

உதாரணமாக சில எச்சரிக்கை மணிகளை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஆகஸ்ட் 1988ல், வெளிப்படையான மற்றும் மறைமுகமான சூழலை ஆய்வு செய்த பின்னர், இப்படித் தொகுத்துச் சொல்லி இருந்தேன்: “குறுங்குழு மதவாக்காரர்களும், அடிப்படைவாதிகளும் அதிகம் வேலை செய்கிறார்கள். நாசவேலைகள் அதிகரிக்கின்றன. எல்லை தாண்டி நடக்கும் விஷயங்களின் நிழல்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இன்னும் நிறைய நடக்கலாம்.”

ஏப்ரல் 1989ல் உடனடி நடவடிக்கை வேண்டி தீவிரமாகக் கெஞ்சினேன். நான் சொன்னேன்: “சூழல் மிக வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது. இனி மீட்கவே முடியாது என்னும் ஒரு புள்ளியைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கடந்த ஐந்து நாள்களாக, பெரிய அளவில் தீவைத்தல், துப்பாக்கிச் சூடு, வேலை நிறுத்தம், உயிரிழப்பு என வன்முறை தலைவிரித்தாடுகிறது. நிலைமை கை மீறிப் போய்விட்டது. ஐரிஷ் பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது பிரிட்டிஷ் பிரதமர் டிஸ்ரேலி சொன்னார், ‘முதல்நாள் உருளைக் கிழங்கு, மறுநாள் போப்’ என்று. காஷ்மீரில் இன்று இதே நிலைதான். நேற்று மக்பூல் பட், இன்று சத்தானின் வேதங்கள் (சாத்தானிக் வெர்சஸ்). நாளை அடக்குமுறை நாளாக இருக்கும். பிறகு வேறொன்றாக இருக்கும். முதலமைச்சர் தனித்து விடப்பட்ட தீவு போல் இருக்கிறார். ஏற்கெனவே அவர் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் செயலிழந்துவிட்டார். ஒருவேளை அரசியலமைப்பு ரீதியிலான சடங்குகள் செய்யவேண்டியது மட்டுமே பாக்கியாக இருக்கலாம். அவர் மீது சேறு நிறைந்திருக்கிறது. அவரை ஆதரிப்பது ஆபத்தானது. இவரது தனிப்பட்ட பிறழ்ச்சிகள்கூட இவரது பொது வாழ்க்கையை நாசப்படுத்தி இருக்கிறது. இந்தச் சூழல், செயல்திறன் மிகுந்த தலையீட்டை எதிர்நோக்கி நிற்கிறது. இன்றே செயல்படுவது சரியானது. நாளை என்பது தாமதம் என்றாகிவிடக்கூடும்.”

துணைவேந்தர்களின் பெருக்கம்

மே மாதத்தில் மீண்டும், வளர்ந்துகொண்டே போகும் என் தவிப்பை வெளிப்படுத்தி இருந்தேன். “இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு துணைவேந்தரின் வெற்றியிலும் அவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அவர்களது பகைமை மத்திய அதிகாரிகளுக்கு எதிராகத் திருப்பிவிடப்படுகிறது.” ஆனால் நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. உங்களது செயலின்மை மர்மமாக இருந்தது. இதற்கு இணையான இன்னொரு மர்மம், இரண்டாம் முறையாக நான் நியமிக்கப்பட்டபோதும் இருந்தது. எப்படி நான் சட்டென மதவாதி ஆனேன்? முஸ்லிம் எதிரியானேன்? இன்னும் என்னதான் இல்லை?

ஜூலை 1989ல் நான் ராஜினாமா செய்தபோது, ஒரு வெறுப்பும் இல்லை. தென் டெல்லியின் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். பெரும்பாலும் நம் நாட்டில் நிலவிய அரசியல் சூழல் குறித்த பொதுவான வெறுப்பு எனக்கு இருந்ததால், அந்த வாய்ப்பை நான் மறுத்தேன். ஜம்மு காஷ்மீர் கவர்னராக நான் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்பதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருக்குமானால் நீங்கள் நேரடியான அணுகுமுறையின் மூலம் என்னைப் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லி இருக்கலாம். கிட்டத்தட்ட இனி திரும்பவே முடியாது என்னும் புள்ளியை அடையும் முன்பாக நான் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆலோசித்திருப்பேன். பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது சொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு வந்திருக்காது.

ஒருவேளை நீங்கள் உண்மையையும் எப்போதும் ஒரேபோல் இருப்பதையும் நல்ல குணங்களாகக் கருதாமல் இருந்திருக்கலாம். நம் தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் சத்யமேவ ஜயதே என்னும் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் என்று நினைத்திருக்கலாம். அந்த வார்த்தைகள், நம் நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி நியாயமான வழிகளில் உண்மையான இந்தியாவை உருவாக்க உதவும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அதிகாரம் மட்டுமே உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். அதிகாரம், எந்த வழியிலும் சரி, என்ன விலை கொடுத்தாலும் சரி!

நான் இங்கே வருவதற்கு முன்பும் பின்பும் நிலவும் சூழ்நிலைகளின் நிதர்சனத்தை, நீங்களும் உங்கள் நண்பர்களும் தவறான வழியில் திரிக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், ஜனவரி 19, 1990ல் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இங்கே ஒட்டுமொத்தமாக மனரீதியிலான ஒப்புதல் இருந்தது. டிசம்பர் 8, 1989ல் டாக்டர் ருபையா சயீத்தின் கடத்தலுக்கு ஒரு நாள் முன்பு கூட, இந்த மாநிலத்தை பயங்கரவாதக் கழுகு முழு மூர்க்கத்துடன் சுழன்றடித்தது. 11 மாதத்தில் 351 வெடிகுண்டு வெடிப்புகள் உட்பட 1600 வன்முறைச் செயல்கள் அரங்கேறின. 1990 ஜனவரி 1 முதல் ஜனவரி 19 வரை, இங்கே 319 வன்முறைச் செயல்கள், 21 தாக்குதல்கள், 114 வெடிகுண்டு வெடிப்புகள், 112 தீ வைப்புகள், 72 கும்பல் வன்முறைகள் நிகழ்ந்தன.

நாசவேலைக்காரர்கள் இங்கே அதிகார அமைப்பை முற்றிலும் கைப்பற்றியதைக் கவனிக்க ஒருவேளை நீங்கள் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம். உதாரணமாக, உளவுத்துறை தந்த துப்பை அடிப்படையாகக் கொண்டு ஷாபிர் அஹ்மது ஷா செப்டம்பர் 1989ல் கைது செய்யப்பட்டபோது, ஸ்ரீநகர் உதவி கமிஷ்னர் அவரைக் காவலில் வைக்கத் தேவையான வாரண்ட்டில் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஆனந்த்நாக் என்னும் உதவி கமிஷ்னரும் இதே போன்றே நடந்துகொண்டார். அதோடு, மாநிலத்தின் வழக்கை நடத்த அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தனது பொறுப்பை அரசாங்கத்திடமும் கூடுதல் அட்வகேட் ஜெனரலிடமும் தள்ளிவிட அவர் முயன்றார். அவர்களும் ஆஜராகவில்லை!

நவம்பர் 22 1989ல் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டெடுப்பின்போது என்ன நடந்தது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? சில வாக்குச்சாவடிகளுக்கு முன்பு ‘வாக்களிப்பவருக்கு இது தரப்படும்’ என்ற அறிவிப்புப் பலகையுடன் அதனருகில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் நிர்வாகத்தைச் சேர்ந்த எவரும், அதிகாரத்தை மீறிச் செயல்படும் இந்த அறிவிப்பை நீக்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இணை அமைச்சராக இருந்த சேர்ந்த குலாம் ரசூல் கர்-ரின் சொந்த ஊர் சோபோர் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதேபோல், லெஜிஸ்லேடிவ் கவுன்சிலின் சேர்மனான ஹபிபுல்லாவுக்கும், முன்னாள் நேஷனல் கான்ஃபரன்ஸ் எம்.பியும் இணை அமைச்சருமான அப்துல் ஷா வகிலுக்கும் இதுதான் சொந்த ஊர். இருந்தாலும் சோபோர் நகரத்தில் ஐந்து வாக்குகள் மட்டுமே பதிவாகின. அன்றைய காங்கிரஸ் (ஐ) அமைச்சர் இஃப்திகார் ஹுசைன் அன்சாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் பட்டாணில் ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை. இதுதான் இந்த மாநிலத்தைச் சேர்ந்த உங்கள் தலைவர்களின் ஈடுபாடும் நிலைப்பாடும். இருந்தும் நீங்கள் நினைக்கிறீர்கள், நாச வேலையையும் தீவிரவாதத்தையும் இத்தகைய அரசியலாலும் நிர்வாகத்தாலும் எதிர்கொள்ள முடியும் என்று.

நம்பிக்கை இழந்த காவல்துறை

அந்த சமயத்தில் காவல்துறை நம்பிக்கை இழந்தது. உளவுத்துறை விரைவாக செயலற்றுப் போனது. டோபாக் (TOPAC) போன்ற நாசவேலைகள் குறித்த செய்திகளை சேவை அமைப்புகளில் ஊடுருவி இருந்தவர்கள் கொண்டு வந்தபோது, டாக்டர் அப்துல்லா வெளிநாடு போய்க்கொண்டிருந்தார். பயங்கரமான தீவிரவாதிகள் 70 பேரை விடுதலை செய்துகொண்டிருந்தார். இவர்கள் பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி பெற்றவர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்தவர்கள். பாகிஸ்தானுக்குச் செல்லவும் வரவும் உதவும் குறுக்கு வழிகளை அறிந்தவர்கள். தலைமை நீதிபதியால் கண்காணிக்கப்படும் மூன்று நபர்கள் அடங்கிய அறிவுறுத்தல் மன்றம் இவர்களைக் காவலில் வைக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்ததால், நாசவேலை மற்றும் தீவிரவாத வலைப்பின்னலில் அவர்களால் முக்கியமான பதவிகளைப் பிடிக்க முடிந்தது. இதனால் தீவிரவாதத்தின் சங்கிலித் தொடர் ஒன்று முழுமையானது. இவர்கள் மீண்டும் பாகிஸ்தான் போய் அங்கிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கொலைகளிலும் ஆள்கடத்தல்களிலும் மற்ற தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டார்கள். விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவனான, கேண்டர்பாலைச் சேர்ந்த மொஹமத் தௌத் கான், அல் பகர் என்னும் ஒரு தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவனான். 2500 காஷ்மீர் இளைஞர்களை அந்த அமைப்பில் பங்கெடுக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றினான். 70 தீவிரவாதிகளை விடுவித்து அதனால் ஏற்பட்ட பயங்கரமான குற்றங்களுக்கு யாரைக் குற்றம் சொல்லவேண்டும்? ‘ஜக்மோகன் காரணி (Factor) என்று நீங்கள் யாரிடம் சொல்கிறீர்களோ அவர்களே இக்கேள்விக்கு பதிலளிக்கட்டும்.

கிடைக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், ஜனவரி 19, 1990க்கு முன்பு அந்தத் தீவிரவாதி தலைவனாகிவிட்டான். பொதுமக்களின் மனதை ஆக்கிரமிக்கும் அளவுக்கு, அவனுக்குத் தேவையான களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு கடலில் மீன் போல அவனால் நீந்தமுடியும். அதற்குப் பின் கடல் அவனைச் சூழ்ந்துகொள்வதால் என்ன ஆகிவிடும்?

காஷ்மீர் தொடர்பான உங்களது எல்லாக் கவனக்குறைவுப் பாவங்களையும் நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள். உங்களது சின்னத்தனமான அரசியலுக்காக இதைச் செய்கிறீர்கள். மக்களைப் பிளவுபடுத்தி, அதனால் ஒரு வாக்கு வங்கி உருவாக்குவதைத் தாண்டி இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளிட்ட மொத்த காஷ்மீர் மக்களும் நான் முதன்முறை ஏப்ரல் 26 1984 முதல் ஜூலை 12 1989 வரை கவர்னாக இருந்தபோது என் மீது கொண்டிருந்த மரியாதையைக் குலைக்க நீங்கள் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்கிறீர்கள். எல்லா உண்மைகளையும் தாண்டி, தாக்குப் பிடிக்க முடியாத ஆதாரங்களைக்கொண்ட உங்கள் தனிப்பட்ட பிரகடனங்கள் மூலம் என்னை முஸ்லிம்களின் எதிரி என்று முத்திரை குத்தத் தொடங்கினீர்கள்.

இந்த நேரத்தில், ‘டெல்லி என்னும் சுவர்களுக்குட்பட்ட நகரம்: ஷாஜஹானாபாத்தை உயிர்ப்பித்தல்’ (Rebuilding Shahjahanabad) என்ற என் புத்தகத்தில் முன்வைத்த மூன்று முக்கியமான யோசனைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்: ஒன்று, ஜாமா மசூதி மற்றும் ரெட் ஃபோர்ட்டுக்கு இடையே பசுமைப் பகுதியை உருவாக்குவது தொடர்பானது. இரண்டாவது, நாடாளுமன்ற வளாகத்தையும் ஜாமா மசூதி வளாகத்தையும் இணைக்கும் சாலையை உருவாக்குவது. மூன்றாவது, நகரின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில், பழம்பெரும் பண்பாட்டை புதுமையான வடிவத்தில் வெளிப்படுத்தும் வகையில், மாதா சுந்தரி சாலை – மிண்ட்டோ சாலைக்கும் இடையே இரண்டாவது ஷாஜஹானாபாத்தை உருவாக்குவது. இந்த யோசனைகளெல்லாம் முஸ்லிம் எதிரியான ஒருவனின் சிந்தனையில் வருமா என்ன என்று உங்களைக் கேட்கிறேன்.

நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம் செய்தல்

காஷ்மீர முஸ்லிம்களிடையே எனக்கிருக்கும் பிம்பத்தைக் குறைக்கும் வகையில் நீங்களும் உங்கள் நண்பர்களும் நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள். எம்.பியான என்.கே.பி. சால்வே மே 25 1990ல் ராஜ்ய சபாவில் செய்தவையே இதற்கான ஆதாரம். பாம்பேவின் வாரப் பத்திரிகையான தி கரண்ட்டில் நான் கொடுத்ததாகச் சொல்லப்படும் பேட்டியை (அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை) முன்வைத்து, சால்வே கொஞ்சம்கூட நியாயமற்ற கருத்துகளைக் கூறினார்: “மதச்சார்புக்கு ஒரு வகையான மாதிரி உண்டு. அதை உணரமுடியும். எனவே அவர் (கவர்னர்) தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும் நீக்கும் போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நீக்குவதான மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது கவர்னர் தனது தகாத கொடிய வெறுப்புச் செயலுக்கு அதிகப்படியான வெட்கமற்ற செயல் ஒன்றையும் செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் போராளி என்று சொல்லி இருக்கிறார்.”

எனக்கு சால்வேவைத் தெரியும். அவர் செய்தது அவராகவே செய்தது என்று நான் நினைக்கவில்லை. அவரது பின்னணிக்கும் பயிற்சிக்கும் தொடர்பற்ற ஒன்றை அவர் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், எந்த ஒருவரும், அதுவும் சால்வேவைப் போன்ற முக்கியமான ஜூரி, இப்படி ஒரு பேட்டி என்னால் தரப்பட்டதா என்ற சிறிய விஷயத்தை முதலில் பார்த்திருக்கவேண்டும். ஒருவேளை பேட்டி தரப்பட்டிருந்தால், என்னைக் குறிப்பவை உண்மையிலேயே என்னால் சொல்லப்பட்டதா என்றும் பார்க்கவேண்டும். வெளிப்படையான அவசரம் இதிலேயே தெரிகிறது. இந்தப் பிரச்சினை மே 25 அன்று எழுப்பப்பட்டது. இந்த வாரப் பத்திரிகையின் தேதி மே 26-ஜூன் 2 1990 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் நான் கொடுக்காத இந்தப் பேட்டியை அடிப்படையாக வைத்து நீங்கள் மே 25 அன்றே ஒரு கடிதத்தை அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறீர்கள். மதவெறிக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை கவர்னராக வி.பி.சிங் நியமித்ததாக நீங்கள் விளக்கம் அளித்திருந்தீர்கள். இந்தக் கடிதம் மே 25 அன்று பரவலாக வெளிவரும்படியும் பார்த்துக்கொண்டீர்கள்.

மார்ச் 7 1990ல் நடைபெற்ற ஸ்ரீநகருக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, நான் 370வது பிரிவை 1986லேயே ரத்து செய்ய விரும்புவதாக நீங்கள் சொன்னீர்கள். இந்த காலகட்டம் முக்கியமான காலகட்டம். தீவிரவாதத்துக்கு எதிராக நான் போராடிய கடுமையான காலகட்டம். நாசவேலைகளின் தீய வெளிப்பாடுகளுக்குப் பின் ஜனவரி 26 1990ல் நிலைமை கொஞ்சம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம். நீங்கள் நினைத்தீர்கள், உண்மையை எனக்கெதிராகத் திரிக்க இதுதான் சரியான சமயம் என்று. உங்களது இந்தச் செயல் பொறுப்பானதா பொறுப்பற்றதா என்பதை நாட்டு மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

1986 ஆகஸ்ட் – செப்டெம்பரில் நான் உண்மையிலேயே சொன்னது: ‘370வது பிரிவு என்பது, சொர்க்கத்தின் இதயத்தில் ஒட்டுண்ணிகள் பெருக இடமளிக்கும் களம் அன்றி வேறில்லை. இது ஏழைகளை ஒட்டிக்கொள்கிறது. அவர்களைக் கானல் நீர் போல ஏமாற்றுகிறது. அதிகார வர்க்கத்தினருக்கு நியாயமற்ற முறையில் பணத்தைக் கொண்டு வருகிறது. புதிய சுல்தான்களின் ஈகோவை விசிறிவிடுகிறது. சுருக்கத்தில், இது நீதியற்ற ஒரு நிலத்தை உருவாக்குகிறது, ரத்தமும் முரண்பாடுகளும் நிறைந்த ஒரு நிலத்தை உருவாக்குகிறது. வஞ்சகமும் போலித்தனமும் வாய்ப்பேச்சும் கொண்ட ஒரு அரசியலை உருவாக்குகிறது.

நாசவேலைகளை இது பெருகச் செய்கிறது. இரண்டு நாடுகள் என்ற ஆரோக்கியமற்ற கருத்தாக்கத்தை இது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தியா என்னும் கருத்தாக்கத்தை இது மூச்சுமுட்டச் செய்கிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான சமூக, கலாசாரப் பார்வையை இது மறைக்கிறது. தீவிரவாத நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இது அமையக்கூடும். இதன் அதிர்வுகளால் ஏற்படும் எதிர்பார்க்கவே முடியாத விளைவுகளை நம் நாடு முழுவதும் உணரக்கூடும்.

நான் சொல்லி இருந்தேன், ‘370வது பிரிவை நீக்குவது அல்லது அமலாக்குவது பிரச்சினை தொடர்பான அடிப்படையான விஷயத்தை மறந்துவிட்டோம். அது, இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இன்னும் வரும் காலங்களில், ஆளும் அரசின் கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக இது மாறும். அதிகாரத்திலும், நீதித்துறையிலும் சில தனிப்பட்ட லாபங்களுக்கு இது பயன்படுத்தப்படும். அரசியல்வாதிகளைத் தாண்டி, செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க வசதியான ஒன்றாக இதைப் பார்க்கிறார்கள். இந்த மாநிலத்துக்கு ஆரோக்கியமான நிதிச் சட்டங்கள் வருவதை இவர்கள் அனுமதிப்பதில்லை.

சொத்து வரி, நகர்ப்புற சில வரம்புச் சட்டம், கொடை வரி மற்றும் பல நல்ல சட்டங்கள் இந்த மாநிலத்தில் 370வது பிரிவைக் காரணக் காட்டி அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் 370வது பிரிவு தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறது, தங்களுக்கான நீதியை மறுக்கிறது, அதேபோல் பொருளாதார முன்னேற்றத்தில் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான பங்கைத் தடை செய்கிறது என்பதைப் பொது மக்கள் உணராத வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.’

என் நிலைப்பாடு என்னவென்றால், 370வது பிரிவு என்னும் தடைச் சுவரின் மூலம் காஷ்மீரத்து மக்கள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையான நிலை அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படவேண்டும். இது தொடர்பாக ஏகப்பட்ட யோசனைகளை நான் தெரிவித்திருந்தேன். அதேபோல், சீர்திருத்தம் மற்றும் நிர்வாக மறு கட்டமைப்பு தொடர்பாகவும் சொல்லி இருந்தேன். இவை கண்டுகொள்ளப்படவில்லை. மிகச் சிறந்த வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் என் கருத்தை வலுப்படுத்தி இருக்கின்றன. அதாவது 370வது பிரிவும் அதன் உபரி விளைபொருளான ஜம்மு காஷ்மீருக்குத் தனி அரசியலைமப்புச் சட்டம் என்பதும் போகவேண்டும். இது சட்டத்தாலும் அரசியலைப்பாலும் செய்யப்பட முடியக்கூடியது என்பதற்காக மட்டும் சொல்லவில்லை. நம் கடந்த கால வரலாற்றின் அடிப்படையிலான காரணங்களாலும், நிகழ்கால வாழ்க்கைக்குத் தேவை என்பதாலும் இது போகவேண்டும் என்கிறேன். ஊழல் மேட்டுக்குடியினரின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மட்டுமே இந்தப் பிரிவு உதவுகிறது. இது இளைஞர்களின் மனதில் தவறான கருத்தைக் கொண்டு வருகிறது. மாநில ரீதியான பதற்றத்தையும் மோதல்களையும் இது உருவாக்குக்கிறது. சுயாட்சி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாலும், நிதர்சனத்தில் அது சாத்தியமில்லை.

தனித்துவம் மிக்க கலாசாரம் கொண்ட காஷ்மீரை இந்தப் பிரிவு இல்லாமலேயே பாதுகாக்கமுடியும். இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்துகொண்டால் அவர்களது உரிமைகள் பறிபோகும் என்பது பிற்போக்குத்தனமானது. 44 வருடங்களாக இந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களது எளிய அடிப்படை உரிமையும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இது எல்லாவற்றுக்கும் மேலே, பரந்து விரிந்த இந்தியாவின் பன்முகத் தன்மையின் தேவையோடும் நிதர்சனத்தோடும் இது பொருந்தி வரவில்லை.

இன்றைய இந்தியாவின் தேவை, இந்தியாவின் ஆன்மாவையும் ஆசைகளையும் குலைத்து, வலிமையற்ற தலைமையால் ஒரு சிறிய ‘வாழைப்பழ குடியரசாக’ மாற்றப்படும் வெற்று இறையாண்மை அல்ல. மாறாக, நீதியின்பாலும் நியாயத்தின்பாலும், உண்மையையும் நேர்மையும் கருணையும் கொண்ட புதிய சமூக, அரசியல் மற்றும் கலாசார இந்தியாவே தேவை. தூய்மையான தீவிரமான துடிப்பான உள்ளார்ந்த அமைப்புதான் வேண்டும். இதுவே உண்மையான சுதந்திரம், உண்மையான ஜனநாயகம், உண்மையான எழுச்சியை அனைவருக்கும் தரும்.

நான் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். மற்ற மாநிலங்கள் கூடுதல் சுயாட்சி அதிகாரத்தைக் கேட்கும்போது, அவர்கள் தனித்துப் போகவேண்டும் என்ற பொருளில் அதைக் கேட்பதில்லை. அவர்கள் உண்மையிலேயே அதிகாரப் பரவலாக்கலை விரும்புகிறார்கள். இதனால் நிர்வாகத்தையும் வளர்ச்சிப் பணிகளையும் விரைவாக மேற்கொள்ள முடியும். இதனால் மக்கள் சேவையின் தரம் கூடும். காஷ்மீரில் 370வது பிரிவைத் தொடர்ந்து வைத்திருக்க எழும் கோரிக்கை, அதாவது 1953ல் இருந்து நீர்த்துப் போகாமல் இருப்பதாகச் சொல்லப்படும் ‘அசலான தூய்மை’, வேறொரு நோக்கத்தில் இருந்து உருவாகி இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒரு தெளிவான தந்திரம் இது. தனி நாடு, தனிக் கொடி, முதலமைச்சருக்கு பதிலாக ஒரு பிரதமரை வைத்துக்கொள்ள விரும்புவது, கவர்னருக்குப் பதிலாக சாத்ர்-இ-ரியாசாத்தை வைத்துக்கொள்வது, கூடுதல் அதிகாரம் மற்றும் ஆதரவைப் பெறுவது போன்றவற்றுக்காகத்தானே ஒழிய, மக்களுக்கான நன்மைக்காகவோ, அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவோ அல்லது பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதை அடைவதற்காகவோ அல்ல. நியோ எலைட்டுகள் என்று அறியப்படும் ‘நியோ ஷேக்’குகளின் தேவைகளுக்காகத்தான்.

வாக்கு வங்கியின் காவலாளியாகவே தொடர விரும்புபவர்கள் தொடர்ந்து சொல்வார்கள், 370வது பிரிவு என்பது நம்பிக்கையின்பாற்பட்டது என்று. அதற்கு மேல் சொல்லமாட்டார்கள். அவர்களை அவர்களே இப்படிக் கேட்டுக்கொள்வதில்லை: நம்பிக்கை என்றால் என்ன? அதன் காரணம் என்ன? இந்திய அரசியலைமைப்புக்குள் இந்த மாநிலத்தைக் கொண்டு வந்து அதற்கு கூடுதல் ஒளியுள்ள, கூர்மையான நம்பிக்கையைத் தரவேண்டாமா? இப்படித் தருவதன் மூலம் இதை கூடுதல் நீதியும் அர்த்தமும் கொண்டதாக்கவேண்டாமா?

இதே ரீதியில்தான், ‘வரலாற்றுத் தேவையும் சுயாட்சியும்’ இவர்களால் அணுகப்பட்டிருக்கின்றன. நடைமுறையில் இவற்றுக்கான பொருள் என்ன? வரலாற்றுத் தேவை என்பது, காஷ்மீர் என்பது இந்தியாவின் பகுதி என்று, அதீதமாகச் செலவு செய்து ஒரு கையால் ஒரு காகிதத்தில் எழுதித் தருவதும், நிதர்சனத்தில், இன்னொரு கையால் தங்கத் தட்டில் எழுதித் தருவதுமா? சுயாட்சி என்றால் என்ன? அல்லது 1953க்கு முன் அல்லது 1953க்குப் பின் என்று சொல்லப்படும் நிலை உணர்த்துவதுதான் என்ன? காஷ்மீரத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்ல இது வழிவகுக்காதா: ‘நீ அனுப்பு, நான் செலவு செய்கிறேன். ஊழல் மிகுந்த, உணர்ச்சியற்ற, தன்னலம் மிகுந்த குழு ஒன்றை நான் உருவாக்கினாலும், நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாகி டாமோக்ளெஸ்ஸின் வாள் உன் தலை மீது தொங்கினாலும், நீ இல்லை என்று சொல்லக்கூடாது.’

காஷ்மீர் பண்டிட்டுகள்:

உண்மையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டிய இந்தியா தன் பலத்தை இழந்து நிற்கும்படி நீங்களும் உங்களைப் போன்றவர்களும் செய்திருக்கிறீர்கள். யாராவது நியாயமாக இருக்க நினைத்தால் அவர்கள் மதச்சார்பானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் பிரச்சினை இதற்கான தெளிவான உதாரணம்.

காஷ்மீர் பண்டிட்டுகளின் வரலாற்றில் எப்படியான ஏற்றத்தாழ்வும் இருந்திருக்கலாம். கடந்த காலங்களில் விதி பல அநியாயங்களை அவர்களுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இப்போது நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது இவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. மிக அறிவார்ந்த, பல்துறை நிபுணத்துவம் பெற்ற, பெருமை மிக்க இந்தியச் சமூகம் ஒன்று, சுதந்திர இந்தியாவில் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய சமூகம் ஒன்றுக்கு அதற்கு இணையான மிகப் பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது என்பது எப்படியான நகைமுரண்! இந்தக் கொடுமை மதவெறிபிடித்த சிக்கந்தர் போன்ற இடைக்கால சுல்தான்களின் கீழே நடக்கவில்லை. அல்லது எதேச்சிகார வெறிகொண்ட ஆஃப்கன் கவர்னர்களின் அரசில் நடைபெறவில்லை. மதச்சார்பற்ற தலைவர் என்று சொல்லப்படும் உங்களைப் போன்ற, விபி சிங்கைப் போன்றவர்களின் கீழே நடைபெறுகிறது. தங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் அதிகாரத்தின் நாணமற்ற தேடலை, காஷ்மீரத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் இன்றைய தாங்கமுடியாத கஷ்டங்களையும் அவர்களது கண்களில் தெரியும் எதிர்காலம் குறித்த பயத்தையும் திட்டமிட்டே புறக்கணிப்பதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் வலியையும் பரிதவிப்பையும் அதிகரிக்கும் விதமாக, ‘காஷ்மீர் முன்முயற்சி குழு’ (Committee for Initiative on Kashmir) போன்ற அமைப்புகள் இருக்கின்றன. அதீத ஆர்வத்தாலும் அதீத செயல்பாட்டாலும் அவர்களது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்றன இந்த அமைப்புகள். புலம்பெயர்ந்தவர்களின் கஷ்டகாலத்தின்போது துணை நிற்க விரும்புகிறவர்களை மதவெறியர்கள் என்று இவர்கள் முத்திரை குத்துகிறார்கள்.

இந்தியாவின் குரூரமான ஒரு பகுதி, தன் உடலிலும் ரத்தத்திலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகளைக் கொடூரமாகத் தனிப்படுத்தி, அவர்களை மேய்ப்பன் இல்லாத மாடுகளாக்கி வைத்திருக்கிறது. பரபரப்பான, இதயமற்ற, ஆன்மாவை இழந்த நகரங்களில், காஷ்மீர் பண்டிட்டுகள் ஒரு தனிப்பட்ட சமூகமாகப் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. பிரிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட எல்லோராலும் கைவிடப்பட்டு, அவர்கள் இன்று தனியாக நிற்கிறார்கள். தங்கள் கால்களுக்குக் கீழே நழுவிக்கொண்டிருக்கும் சுக்கான் இழந்த உடைந்த படகை நம்பிக்கையின்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பான கரையில் நம்பிக்கையுள்ள எதிர்காலத்தில் தங்கள் பாதங்களைப் பதிப்பதற்கு முன்பாக, மிகவும் பயங்கரமான கொந்தளிப்பான கடலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

காஷ்மீரப் புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் இந்த பெரும் நெருக்கடி (அதனாலேயே இது ஒட்டுமொத்த காஷ்மீரின் நெருக்கடி), உண்மையில் இந்திய மதிப்பீடுகளின் மீதான நெருக்கடி. அதாவது அரசியலமைப்பின், அரசியலின், சமூகத்தின், தார்மிக விதிகளின் நெறிப்பிறழ்வு. அகதிகளின் முகாம்களை நான் பார்வை இட்டிருக்கலாம். மிகுந்த துயரில் இருக்கும் ஒரு சமூகத்துக்கு நீதியின் உறுதியான கரத்தை நீட்டி இருக்கலாம். பணத்தைப் பிச்சையிடுவதற்குப் பதிலாக விரட்டப்பட்ட காஷ்மீர பண்ட்டிட்டுகளின் அரசு அலுவலர்களுக்கு விடுமுறைச் சம்பளம் தர அறிவுறுத்தி இருக்கலாம். ஒரு தீவிரவாதியால் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் விதவையாகிப் போன அவரது மனைவி, தனக்கு வீடு ஒன்றை (அதுவும் பணம் கொடுத்தபின்பே) ஒதுக்கவேண்டும் என்று கோரிய வேண்டுகோளை ஏற்று ஒப்புக்கொண்டிருக்கலாம். இவற்றையெல்லாம் நான் செய்திருந்தால் நான் உடனே மதவெறியனாகி விடுகிறேன். முஸ்லிம்களின் எதிரியாகிப் போகிறேன். என்னைப் பற்றி இட்டுக்கட்டப்பட்ட கதைகள் பத்திரிகைகளில் பரப்பப்படுகின்றன. மாறாக, யாராவது இந்திய ராணுவத்தையும் கவர்னரின் நிர்வாகத்தையும் பொய்யாகக் குற்றம் சாட்டினால், வீட்டுமனைகளும் வண்டிகளும் தரப்பட்டன என்று எவ்வித நிரூபணமும் இன்றிச் சொன்னால், அதிலும் குறிப்பாக ஜெக்மோகனைத் தாக்கினால், அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியாகின்றன. இந்த அறிக்கைகள் தேசிய மற்றும் பன்னாட்டு மன்றங்களில் விவாதிக்கப்படுகின்றன. உங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆர்வத்துடன் மேற்கோள் காட்டப்படுகின்றன. இப்படிச் செய்பவர்கள் மதச்சார்பற்றவர்கள் என்றும் முற்போக்காளர்கள் என்றும் மனித உரிமையின் காவலர்கள் என்றும் புகழப்படுகிறார்கள்.

ஜெக்மோகன் காரணி (Jagmohan Factor) என்பதற்கு உறுதியான சான்றுகள்:

எனது தற்பெருமைக்கு வழிவகுக்கும் எந்த ஒன்றையும் நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், ஜெக்மோகனின் மதவெறிக் காரணி குறித்த உங்களது திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்துடன் உங்களை விட்டுவிடவும் தயாரில்லை. என்னைப் பற்றி இந்தப் பள்ளத்தாக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய சில அசைக்கமுடியாத ஆதாரங்களை உங்கள் கவனத்துக்கு நான் கொண்டு வரவேண்டும். நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் எனது இரண்டாவது கவர்னர் பதவிக்காலம் தொடர்பாகப் பொய்ப் பிரசாரத்தை ஆரம்பிக்கும் முன்பு இதைச் செய்தாகவேண்டும்.

என்  மீது உருவாக்கப்பட்ட முஸ்லிம் எதிரி என்ற பிம்பத்தைக் கட்டமைப்பதில், இன்றைய காஷ்மீர அரசியலின் உங்களது முதன்மை ஆதரவாளரான டாக்டர் ஃபரூக் அப்துல்லாவுக்கும் பங்குண்டு. ஆகஸ்ட் 30, 1990ல் டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையில் வெளியான அவரது நேர்காணலில் அவர் சொல்கிறார், “முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு மாநிலத்துக்கு முஸ்லிம் எதிரி என்று நன்கு அறியப்பட்ட ஒருவர் கவர்னராக நியமிக்கப்படுகிறார்.” என்ன ஒரு பொய்ப் பிரசாரம். எத்தனை அநியாயம் இது. நவம்பர் 7, 1986ல் எனது பதவியேற்பின்போது ஃபரூக் அப்துல்லா பொதுக்கூட்டத்தில் சொன்னதை வைத்தே இதைப் புரிந்துகொள்ளமுடியும். “கவர்னர் அவர்களே, நீங்கள் எங்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்கமுடியாத அளவுக்கு அவசியம். மூளை வளர்ச்சி குன்றிப் போய், அழுகிக் கிடக்கும் இந்த நிர்வாகத்தை, மிகக் குறைந்த காலத்திலேயே மிகச் சிறந்த முறையில்  பணியாற்றி உங்களால் மாற்றமுடியும். தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஒரு வாக்குப்பெட்டி, காங்கிரஸுக்கு ஒரு பெட்டி, உங்களுக்கு ஒரு பெட்டி என இன்று மூன்று பெட்டிகள் வைக்கப்படுமானால், உங்கள் பெட்டியே வாக்குகளால் நிறையும், மற்ற இரண்டு பெட்டிகளும் காலியாக இருக்கும்.”

நமது நாட்டின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், உண்மைகளைப் பற்றி அக்கறை கொள்ளாத, குறிக்கோளற்ற, மேம்போக்கான அரசியலுக்கு மட்டுமே அக்கறை கொள்ளும் டாக்டர் ஃபரூக் அப்துல்லா போன்ற தலைவர்களை நாம் பெற்றிருப்பதுதான்.

மறைந்த தங்கள் அம்மாவையும் முஸ்லிம் எதிரி என்று டாக்டர் ஃபரூக் அப்துல்லா சொல்கிறார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? ஏனென்றால், 1984ல் அவர் பிரதமராக இருந்தபோதுதான் ‘வெளிப்படையான முஸ்லிம் எதிரி’ முதல் தடவையாக ‘முஸ்லிம்கள் பெரும்பான்மையான மாநிலத்துக்கு’ கவர்னராக நியமிக்கப்பட்டார்.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா, ஃபிப்ரவரி 15, 1990 அன்று ஒரு எழுத்துபூர்வமான அறிக்கையை பத்திரிகைகளுக்கு உருதுவில் தந்திருக்கிறார். இதைத் தங்களுடன் கலந்தாலோசித்தே தந்ததாகத் தெரிகிறது. அதில் அவர் சொல்கிறார், “ஹல்லாகு மற்றும் செங்கிஸ்கானின் உருவகமாக விளங்கும் கவர்னர்  இந்தப் பள்ளத்தாக்கை மிகப்பெரிய சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார். ஜனவரி 20ல் இருந்து தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால், ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் குண்டுகளுக்கு எத்தனை பேர் பலியானார்கள் என்பதைச் சொல்வது கடினம். எத்தனை வீடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சொல்லமுடியாது. இந்த நேரத்தில், காஷ்மீரிகள் தங்கள் அன்புக்குரிய நாடு இப்படி சுடுகாடாக மாற்றப்படுவதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு மற்றும் உலக அளவில் மனிதத்தன்மையை ஏந்திப் பிடிப்பவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு, துணை ராணுவப் படையினரால் காஷ்மீரிகள் கொல்லப்படுவது குறித்து உலகளாவிய விசாரணைக்கு உதவுங்கள்.”

இதோ உங்கள் ‘தேசப்பற்றாளர்’ காஷ்மீரை ‘ஆஸிஸ் வாட்டன்’ என்று சொல்வதைப் பாருங்கள். தனி நாடு வேண்டுமென யோசனை சொல்கிறார். இதோ உங்கள் ‘தேசத் தலைவர்’  காஷ்மீரிகள் இந்திய ராணுவத்தாலும் துணை ராணுவப் படையாலும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக உலகளாவிய விசாரணை  வேண்டுமெனக் கேட்பதைப் பாருங்கள். இதோ உங்கள் ‘பொறுப்பு மிக்க நண்பர்’ இந்தப் பள்ளத்தாக்கில் 25 நாளாகத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இருப்பதைப் பற்றியும், அதனால் ‘ஆயுதம் ஏந்தாத அப்பாவி காஷ்மீரிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்’ என்பதையும் ‘எத்தனை காஷ்மீரிகளின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன’ என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதைப் பாருங்கள். அவருக்கு மிக நன்றாகவே தெரியும், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஊரடங்கு இல்லாமல் எத்தனை நாள்கள் இருந்தன என்று. எத்தனை பொதுமக்கள் இறந்தார்கள் என்பது பற்றி அதிகாரிகள் பட்டியலிட்டிருக்கிறார்கள். ஃபிப்ரவரி 16 வரை 40 பேர். தொடர்ந்து பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படி விட்டுப்போன பெயர்கள் இருந்தால் அதையும் சேர்த்து அதிகாரபூர்வ அறிக்கையை உருவாக்கமுடியும். ‘ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள்’ இந்திய விமானப் படை அதிகாரிகளையும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களையும், தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகளையும், அப்பாவி இளைஞர்களையும் எப்படி இரக்கமே இல்லாமல்  கொல்லமுடியும் என்பதை விளக்க கொஞ்சம் கூட அக்கறையற்ற முன்னாள்  முதல்வர் ஒருவர் இங்கே இருக்கிறார். அதேசமயம் நீளமான, பரபரப்பான அறிக்கைகள் மூலம் மக்களைத் தூண்டத் தவறுவதில்லை. ஆனால் அதில், இப்படியான கொடூரமான கொலைகளைக் கண்டிக்க ஒரு வார்த்தை கூட அவருக்குக் கிடைப்பதே இல்லை.

டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் இந்தத் துரதிர்ஷ்டமான  போக்கை ஏன் நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை இந்த நாடு அறிந்துகொள்ள உரிமையில்லையா? பிப்ரவரி 7, 1991ல் டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையில் வெளியான அவரது சமீபத்திய அறிக்கையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? “எனது கட்சிக்காரர்கள் ரகசியமாக எல்லை தாண்டிப் போய் ஆயுதப் பயிற்சி பெற்று என்ன வேண்டுமானால் செய்துகொள்ளுங்கள். ஆனால் ஜக்மோகன் கையில் பிடிபட்டுவிடாதீர்கள்.”

தனிப்பட்ட முறையில் என் முதுகில் குத்துவது எனக்கு ஒரு பொருட்டே இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் இந்தப் பிரச்சினையை ஆற விடாமல் கனன்று கொண்டே இருக்க வைப்பதன் மூலம், இன்னும் பல மரணங்களையும் பல அழிவுகளையும் கொண்டுவருகிறீர்கள்.

வேர்கள்:

ஒருமுறை நீங்கள் சொன்னீர்கள்: ‘நான் வரலாற்றைப் படிப்பவன் அல்ல, படைப்பவன்.’ வரலாற்றைப் படிக்காமலேயே படைக்க விரும்புபவர்கள் பொதுவாக மிக மோசமான வரலாற்றையே படைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என நினைக்கிறேன். ஒரு பிரச்சினையின் உள்ளார்ந்த போக்கையும், நிகழ்வுகளை வடிவமைத்து எதிர்கால இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அடிப்படைச் சக்திகளையும் இப்படிப்பட்டவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

வரலாற்று நோக்கில் ஒரு பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததால், நீங்களும் உங்களைப் போன்றவர்களும் இப்பிரச்சினையின் வேர்களையும், அதனால் இன்று வளர்ந்து நிற்கும் காஷ்மீர் பிரிவினைவாதத்தையும் காஷ்மீரின் தோல்வியையும் புரிந்துகொள்ள முடியவில்லை. காஷ்மீரின் ஆன்மாவில் விஷ விதைகள் நிரந்தரமாக விதைக்கப்பட்டுவிட்டன. இவற்றுக்கு மிகத் தாராளமாக உரமும் தரப்பட்டுவிட்டது. இந்தப் பயிர்களையும் அதற்கான உரங்களையும் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டியது உங்களது கடமை. ஆனால் உங்களுக்கோ வரலாற்றின் பாலபாடம் கூடத் தெரியவில்லை. தீமையுடன் சமரசம் செய்துகொள்வது இன்னும் பெரிய தீமைகளையே கொண்டு வரும். நமக்கு வசதியற்ற உண்மைகளைப் புறக்கணிப்பது அதை மேலும் சிக்கலாக்கும். பலவீனமானவனைக் கொடுமைப்படுத்துபவன் முன்பு பணிந்து போவது நாளை கசாப்புக் கடைக்காரனைக் கொண்டு வரும். இவை எதுவுமே உங்களுக்குப் புரியவில்லை.

எனது கருத்தை வலியுறுத்தும் பல உதாரணங்களை என்னால் தரமுடியும். ஆனால் ஒன்றிரண்டு உதாரணங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறேன்.

மென்மையான போக்கும் சரணடைதலும்

அக்டோபர் 2, 1988ல் மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று அவரது சிலை ஸ்ரீநகரில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட இருந்தது. விழா அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருந்தார். ஆனால் சில முஸ்லிம் வழக்கறிஞர்கள் இதை எதிர்த்தார்கள். விழாவின்போது பிரச்சினை செய்யப்போவதாக அவர்கள் மிரட்டினார்கள். முதலமைச்சர் கைவிட்டார். அதுவும் வேண்டுமென்றே, மிரட்டல்களுக்குப் பணிந்து அப்படி நடந்துகொண்டார். விழா ரத்து செய்யப்பட்டது.

நடந்தது சொல்வது என்ன? மதச்சார்பற்ற இந்தியாவின் ஒரு பகுதியான மதச்சார்பற்ற காஷ்மீரில், நம் தேசத்தின் மத நல்லிணக்கத்துக்காகத் தன் உயிரையே தந்த துறவியைப் போன்ற தேசத் தந்தையின் சிலையை, இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் நீதிபதியால்கூட நிறுவ முடியாது. இதை நிறுவுவதற்கு எதிராகக் கலகம் செய்தவர்களில் முக்கியமானவர் யார்? வேறு யாருமில்லை, மொஹம்மட் ஷாஃபி பட். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற  வழக்கறிஞர். தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர். பின்னர் இவருக்கு 1989 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீநகரில் இருந்து போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. மார்ச் 7 1990ல் நீங்கள் ஸ்ரீ நகர் வந்தபோது, கவர்னரின் நிர்வாகத்துக்கு எத்தனை கஷ்டங்களைத் தர முடியுமோ அவற்றைத் தருவதற்காக, இவருடனேதான் நீங்கள் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவழித்தீர்கள்.

அந்த நேரத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி (எஃப்), காங்கிரஸ் (ஐ) ஆட்சியில் இருந்தது. இப்படித்தான் கொள்கைப் பிடிப்பில்லாமல் அவை நடந்துகொள்ளும். அரசை அமைத்த காங்கிரஸ்காரர்களின் குணமும் இப்படிப்பட்டதுதான். அந்த விழா ரத்து செய்யப்பட்டபோது, எப்படியாவது அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக, அதற்கு எதிராக இவர்கள் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.

பலவீனமானவர்களை மிரட்டுபவர்களின் பசிக்கு இதைவிடச் சிறப்பாக யாரும் படையல் அளித்திருக்கமுடியாது. மிரட்டல்கள் இதைவிடச் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கமுடியாது. மிரட்டல்காரர்களுக்கு இதைவிடச் சாதாரணமான, உறுதியற்ற எதிரிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை. இப்படிச் செய்தால் இதைவிடப் பெரிய இலக்குடன் மிரட்டல்காரர்கள் வளர்வார்கள் என்பது இயல்புதானே? இதைவிடத் தீவிரமான மிரட்டல்களை முன்வைத்தால் இன்னும் அட்டகாசமான முடிவுகள் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்களா? காஷ்மீரின் இன்றைய சூழலில் இப்படி மென்மையான போக்குடன் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து மிரட்டல்காரர்களிடம் சரணடைந்தால், அது தீவிரவாதத்துக்கும் போருக்கும் வழிவகுக்காது என்பதை அப்பாவிகளால் மட்டுமே நம்பமுடியும்.

மத நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தை (Religious Institutions (Prevention of Misuse) Act) 1988ல் அரசு இயற்றியது. இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாது. ஏனென்றால், 370 பிரிவு. இந்தச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தவேண்டும் என்றால், மாநில அரசின் ஒப்புதல் வேண்டும். ஆனால் அது தரப்படவில்லை. ஏன்? ஏனென்றால், ஜம்மு காஷ்மீர் வேறுபட்டது! மத நிறுவனங்களின் இருப்பிடங்களை அரசியல் நோக்கத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துவதை முற்றிலும் நீக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்குத் தரப்பட்ட பதில்! எப்பேற்பட்ட பதில்!

ஜம்மு காஷ்மிரைவிட இந்தச் சட்டம் மிகவும் தேவையான இடம் வேறில்லை. மத நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீரைவிட வேறு எங்கும் இத்தனை தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை. விஷ விதைகளான மதவெறியும் அடிப்படைவாதமும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கே இருக்கும் மசூதிகளின் பிரசங்க மேடைகளில் மிகக் கவனமாக விதைக்கப்படுவது போல வேறு எங்கேயும் விதைக்கப்படுவதில்லை. ‘இந்திய ஜனநாயகம் முஸ்லிம்களுக்கு எதிரானது, இந்திய மதச்சார்பின்மை என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது, இந்திய சோசியலிசம் முஸ்லிம்களுக்கு எதிரானது’ என்று இங்கே பிரசங்கம் செய்யப்படுவதைப் போல வேறு எங்கேயும் செய்யப்படுவதில்லை. அப்படி இருந்தும் இரண்டு மதச்சார்பற்ற கட்சிகளால் ஆளப்படுவதாகச் சொல்லப்படும் இந்த மாநில அரசும், மத்திய அரசும் இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதிலுள்ள சதி என்னவென்றால், இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் 100 மில்லியன் முஸ்லிம்களுக்கும் நல்லது என்று கருதப்படும் ஒரு சட்டம், காஷ்மீரின் 40 லட்சம் முஸ்லிம்களுக்கு நல்லதல்ல என்று கருதப்படுவதுதான்.

தேசிய நோக்கில் ஒரு கட்சி செயல்படாமல் போனால், தேசியவாத சக்திகள் ஒரு நாட்டை ஆள்கிறது என்று சொல்வதில் என்ன  பயன்? மதவாதத்தின் அரசியலில் மனப்பிறழ்ச்சி கொண்ட அடிமைகளாக அவர்கள் சிக்கி இருந்தால்… வெற்று வார்த்தைகளில் மட்டும் நம்பிக்கை கொண்டு செயல்பாட்டில் நம்பிக்கை இல்லாமல் இருந்தால்… நாட்டை வழிநடத்தாமல் மிரட்டல்களுக்கு அடிபணிந்து நடந்தால்… பிரிவினைவாத சக்திகளைத் தோற்கடிக்காமல் அதை ஊக்குவித்தால்… மனிதத் தன்மையிலும் ஆன்மிகத்திலும் பலமான  புதிய சமூகத்தை உருவாக்காமல், அழுகி துர்நாற்றம் வீசும் பழைய பிரச்சினைகளை அறிந்தோ அறியாமலோ இன்னும் கிளறி இன்னும் பலம் கொண்டு எழச் செய்து தெளிவற்ற நிலையைத் தொடரச் செய்தால்… நம் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் இலக்குகளுக்கும் எதிராக, இன்றைய சூழலுக்கு மட்டுமே எப்போதும் முன்னுரிமை அளித்தால்… இவற்றால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த மூர்க்கமான அமைப்புகள் நம்மை எங்கே கொண்டு செல்லும் என்று அறிந்துகொள்ள வித்தியாசமான நுண்ணறிவு வேண்டாமா?

எவ்வித அரசியல் அல்லது தனிப்பட்ட விருப்புவெறுப்புமின்றி அணுகும்படி மட்டும் கேட்டுக்கொண்டு இக்கேள்வியை நம் தேசத்தின் நலம்விரும்புபவர்களிடம் விட்டுவிடுகிறேன். எப்படி டாக்டர் ஃபரூக் அப்துல்லா என்னை ஹல்லாகு என்றோ செங்கிஸ்கான் என்றோ அழைக்கலாம்? என்னை ‘370வது பிரிவின் எதிரி’ என்று அம்பலப்படுத்த நீங்கள் ஸ்ரீநகர் வரை வருகிறீர்கள். அதே நேரம் பெனாசிர் பூட்டோ என்னை துண்டு துண்டாகக் கிழிப்பதாக சபதம் எடுக்கிறார். ‘ஜக்மோகனை பாக்பாக் மோகன் ஆக்கவேண்டும்?’ (*பாக் என்றால் ஹிந்தியில் துண்டு துண்டாக அதாவது பாகம் என்று பொருள்.)

காஷ்மீரின் இன்னும் பல தரப்புகள் பொய்களின் குவியல்களுக்குக் கீழே புதைக்கப்பட்டுள்ளன.  மேம்போக்கான கருத்துகளில் அவை புதைந்து போய்க் கிடக்கின்றன. இந்தக் குவியல்களில் சிலவற்றை நீக்குவதில் இத்தனை நாள் நான் பரபரப்பாக இருந்தேன். இந்தப் பிரச்சினையின் உண்மையான தன்மையை ஒருநாள் இந்தத் தேசம் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன். நான்தான் அவர்களின் மிகச்சிறந்த நலம்விரும்பி என்று காஷ்மீரப் பொதுமக்கள் உணர்வார்கள். தங்களைச் சுரண்டும் தன்னலக் குழுக்களிடம் இருந்தும், மதவாத ‘சீஸர்’களின் சூழ்ச்சிகளில் இருந்தும், உண்மையை வேண்டுமென்றே மறைக்கும் கும்பல்களிடமிருந்தும் காஷ்மமீர மக்களை நிரந்தரமாகக் காக்க எண்ணினேன்.

காஷ்மீரில் பாரத மாதாவைக் கைவிடும் பாவத்தை நீங்கள் ஏற்கெனவே செய்துவிட்டீர்கள். இப்போது இன்னொரு மாதாவையும் கைவிடும் பாவத்தையும் கூட்டிக்கொள்ளாதீர்கள். என்ன இருந்தாலும் நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அவளை நினைவில் வையுங்கள். அவள் ஒருவேளை உங்கள் அலட்சியத்தை மன்னிக்கக்கூடும். ஆனால், உங்கள் தவறுகளுக்காக, அதுவும் அவற்றைத் தொடர்ந்து உங்களிடம் நினைவூட்டிக்கொண்டே இருந்த அப்பாவியையே குற்றம் சுமத்திய பாவத்துக்காக அவள் ஒருநாளும் உங்களை மன்னிக்கமாட்டாள்.

என்னைப் பொருத்தவரை, காஷ்மீரில் மிகச் சரியான செயல்களையே செய்தேன் என்கிற சோகமான பெருமை எனக்கு இருக்கிறது. உண்மைதான், உள்ளூர் மக்களின் நல்லெண்ணத்தை நான் தற்காலிகமாக இழந்திருக்கிறேன் என்றே தெரிகிறது. ஆனால் நான் யாரிடமும் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை. தேசியக் கடமையைச் செய்யவே நான் இரண்டாம் முறை கவர்னராகச் சென்றேன். நம் நாட்டின் அரசியலும் நிர்வாகமும், ஒரு தீவிரமான பிரச்சினையை அதன் வேரோடு நீக்கவே முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டுவிட்டிருக்கிறது. தேர்தல்கள் அதன் பொருளையே இழந்து நிற்கின்றன. இந்திய ஜனநாயகமும், அதன் அரசியலமைப்பும் ஆரோக்கியமான பண்பாட்டு அடித்தளத்தையும், மண்ணின் தூய்மையான ஆன்மாவையும் பெறாதவரை இந்த பொருளற்ற நிலை தொடரவே செய்யும். நீதியின் விதையும், தன்னலமற்ற சேவையுமே முளைவிட்டு மகா மரமாகப் பூக்கமுடியும். அதுவே கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை நிழலைத் தர முடியும். இப்போது அதன் ஆன்மா இல்லாமல் போய்விட்டது. கண்பார்வையற்றவர்கள் தங்கள் கைகளில் விளக்கை ஏற்றி நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரச்சினையிலிருந்து இன்னொரு பிரச்சினைக்கென நாம் தள்ளாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு கவிஞர் சொல்வதைப் போல:

அது நிகழ்ந்தது
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
அது மீண்டும் நிகழும்.

வாழ்த்துகளுடன்,
தங்கள் உண்மையுள்ள,
ஜக்மோகன்

Share

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

நம் சமூகத்தில் ஆசிரியர்களுக்கான மதிப்பு என்பது மிக உயர்ந்தது. தொன்றுதொட்டே அவர்கள் குருவென மதிக்கப்பட்டு தெய்வத்துக்கு இணையாகப் போற்றப்பட்டவர்கள். குரு என்பவர் எத்தகைய ஒருவராகவும் இருக்கமுடியும். நம் இன்றைய சமூகத்தில் நாம் குரு என்று நினைப்பது நம் ஆசிரியர்களையே. ஒவ்வொரு தனி நபரும் தன் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கமுடியாத ஆசிரியர் என்று குறைந்தபட்சம் ஒருவரையோ அல்லது பலரையோ நிச்சயம் நினைவில் வைத்திருப்பார்கள். நமக்கு எவ்வித பேதங்களும் தெரியாத வயதில் நம்முடன் இணைந்துகொள்ளும் ஆசிரியர்கள் வாழ்நாள் முழுமைக்குமான நினைவாக உருக்கொள்வதில் வியப்பேதுமில்லை. இன்றும் நம் சிறுவயதில் நமக்குக் கற்பித்த குரு ஒருவரை நினைக்கும்போது நமக்கு எழும் எண்ணங்கள் நிகரற்றவை. ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீட்டிலும் ஆசிரியர்கள் குறித்த மதிப்பீடு இதுவாகவே இருக்கிறது. இதனாலேயே ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட சிறிய வீழ்ச்சி கூட மிகப் பெரிய சமூக வீழ்ச்சியாகவே விவாதிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த மனநிலைக்குப் பின்னே வைத்தே நாம் பார்க்கவேண்டியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்தம், அதிலும் இன்னும் சில நாள்களில் மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இவர்கள் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தம், பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததற்கு, ஆசிரியர்களின் மீதான இந்த ஒட்டுமொத்த மதிப்பீடும் ஒரு காரணம். இந்த மதிப்பீடு சரியா தவறா, தேவைதானா என்பதெல்லாம் தனிப்பட்ட விவாதங்கள். யதார்த்தத்தில் இப்படியான ஒரு பொதுப்புத்தி நிச்சயம் இருக்கவே செய்கிறது.

ஜேக்டோ (பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) மற்றும் ஜியோ (அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) இணைந்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இவற்றில் உள்ள ஒன்றிரண்டு கோரிக்கைகள் மிக முக்கியமானவையே. குறிப்பாக, இவர்களது ஓய்வூதியப் பணம் என்ன ஆனது என்பது பொதுவில் கேட்கப்படவேண்டிய கேள்வியே. அரசு இதற்கு ஒரு பதில் அளித்தது. இவர்கள் இப்படிப் போராட்டம் செய்திருக்காவிட்டால் அரசு நிச்சயம் இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் இதனைப் பல காலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதேசமயம், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புமாறு அரசை நிர்ப்பந்திப்பது, நிச்சயம் செயல்படுத்த முடியாத ஒன்று.

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது, சுருக்கமாகச் சொன்னால், அரசு ஆசிரியர் பணி ஓய்வு பெறும்போது பெறும் சம்பளத்தில் பாதியை வாழ்நாள் முழுமைக்கும் (அவரது மரணத்துக்குப் பிறகு அவரது மனைவியின் வாழ்நாள் முழுமைக்கும்) மாதா மாதம் பெறுவது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி (2003ல் இருந்து), அரசு ஆசிரியரின் (அனைத்து அரசு ஊழியர்களின்) சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை (12%) அரசும் ஊழியரும் ஓய்வூதியப் பணமாக செலுத்துவது; அதைப் பங்குச் சந்தையில் அரசே முதலீடு செய்வது; ஓய்வின்போது ஒட்டுமொத்த பணமாக அரசு ஊழியர் பெற்றுக்கொள்வது. மாதாமாதம் ஓய்வூதியமெல்லாம் இல்லை.

2003 முதல் வேலைக்குச் சேர்ந்தவர்கள் இதனை ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அரசு வேலை கிடைக்கும்வரை அதற்காகப் போராடுவதும், சேர்ந்த பின்பு வேறு வகையில் போராடுவதும் சரியா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்விதான். அதேசமயம், இதைத் தவிர்க்கமுடியாது என்பதும் மிக மிக முக்கியமானதே. எனவே வேலைக்குச் சேர்ந்த பின்பு எப்படிப் போராடலாம் என்பதை விட்டுவிடலாம். அரசுக்கும் இதில் பெரிய பொறுப்பு உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி இருந்த பல சலுகைகள் இப்போது இல்லை; அல்லது பெறுவது கடினமாக இருக்கிறது. உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், ஓய்வூதியப் பணத்தில் இருந்து கடன் (லோன்) பெறுவது. அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல் மற்றும் காலதாமதம். இவையெல்லாம் அரசுத் தரப்பில் இருக்கும் எப்போதைக்குமான சிக்கல்கள். ஆனால் அரசு இதையெல்லாம் பொதுவெளியில் சொல்வது இல்லை. அரசு ஊழியர்கள் சொன்னாலும், பொது மக்கள் எப்போதுமே ஒரு எரிச்சலில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அணுகுவதால், இதைக் கவனிப்பதோ ஏற்பதோ இல்லை.

எனவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஒட்டுமொத்தமாகத் தவறு என்றோ தேவையற்றது என்றோ சொல்லிவிட முடியாது.

அதேசமயம், அரசு ஊழியர்களின் போராட்டம் நிச்சயம் அவர்களது பணித் திறமையோடு நிச்சயம் சேர்த்தே பார்க்கப்படும். 30-01-2019 தேதியிட்ட தமிழ் தி ஹிந்து இதழில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்த வேலை நிறுத்தத்த்தின் போது அரசு ஊழியர்களின் செயல்பாடுகளைச் சொல்வ்வது வேலை நிறுத்தத்தைத் திசை திருப்புவது என்று சொல்லி இருக்கிறார். இதை நிச்சயம் ஏற்கமுடியாது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின்போது அவர்கள் பெறும் சம்பளம், அவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் இவற்றுக்கு எதிராக அவர்கள் செய்யும் பணி, ஒப்பீட்டளவில் மற்றவர்களது வேலை மற்றும் சம்பளம் என எல்லாமும் விவாதிக்கப்படுவது நிகழவே செய்யும். விவாதிக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அரசு ஆசிரியர்களும் ஊழியர்களும் தாங்கள் எப்பேற்பட்ட ஒரு வேலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கும். இதனால் பயன் இல்லாமல் போகலாம் என்பது வேறு விஷயம்.

ஒரு அரசு ஆசிரியர் ஆவேசமாகப் பேசும் வீடியோ ஒன்றை அனைவரும் பார்த்திருக்கலாம். நாங்கள் ஏன் வேறு பணிகளைச் செய்யவேண்டும், நாங்கள் ஏன் வேலைக்குச் சேர்ந்த பின்னரும் தேர்வெழுதி வெல்லவேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். வேறு பணிகளைச் செய்வது அரசுக்கு நிச்சயம் தேவை. இதைத் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் அரசின் ஓர் அங்கம். பொதுத் தேர்வுகளின் போது நீண்ட நாள் விடுப்பு கிடைக்கும் ஒரே துறை அது. அப்படியானால் அவர்கள் பயன்படுத்தப்படவே செய்வார்கள். ஏன் மீண்டும் மீண்டும் தேர்வெழுதவேண்டும் என்பது கொஞ்சம்கூடப் பொருட்படுத்த முடியாத கேள்வி. ஒவ்வொரு ஆசிரியருக்கும் (அரசு ஆசிரியர், தனியார்ப் பள்ளி ஆசிரியர் என்ற பேதமில்லாமல்) தெரியும், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எத்தனை சதவீதம் பேர் சராசரிக்கு மேல் தேறுவார்கள் என்று. உண்மையில் ஆசிரியர்களின் தகுதி என்பது ஒட்டுமொத்த இந்தியாவில் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்பதே என்னுடைய மனப்பதிவு.

தமிழ்நாட்டுக் கல்வியைக் குறித்த ஆய்வின் படி, கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமையைக் குறித்த புள்ளிவிவரம்:

  • ஐந்தாம் வகுப்பில் வார்த்தையை வாசிக்கத் தெரியாதவர்கள் தோராயமாக 32% பேர்.
  • ஆறாம் வகுப்பில் 23% பேர், ஏழாம் வகுப்பில் 15%, எட்டாம் வகுப்பில், 9% பேர்.
  • ஐந்தாம் வகுப்பில் கழித்தல் தெரியாதவர்கள் தோராயமாக 39% பேர்.

இன்னும் கூட்டல், பெருக்கல், வகுத்தல், வட்டிக் கணக்கு, செய்யுள் படித்தல், ஆங்கிலம் அறிவியல் எல்லாம் இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் தோராயமாக 37%. அரசு உதவி பெறும் பள்ளிகள் 19%. மீதி தனியார்ப் பள்ளிகள்.

ஜேக்டோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தின்போது அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்களும் பங்குகொள்ளவேண்டும் என்றாலும், அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படியோ ஆணையின்படியோ இவர்கள் நடந்துகொள்வார்கள். அதேசமயம் ஜேக்டோ அமைப்புக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். அப்படியானால் முழுக்க முழுக்கப் பங்கேற்றது அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே. அதாவது, கிராப்புறங்களில் இருக்கும் மாணவர்களே இப்போராட்டத்தின் பலி.

பொதுவாகவே நம் கல்வி அமைப்பு என்பது, குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளிகளின் கல்வி அமைப்பு, முழுக்க முழுக்க ஆசிரியர்களைச் சார்ந்தது. பல்வேறு சமூக மற்றும் குடும்பச் சூழலில் இருந்து அரசுப் பள்ளி ஒன்றையே தனது விடுதலைக்கான வழி என்று நம்பி வரும் மாணவர்களே இப்பள்ளிகளில் அதிகம் இருப்பார்கள். இவர்களைக் கையில் எடுத்து நல்ல கல்வி தரவேண்டிய பொறுப்பே அரசு ஆசிரியர்களின் முதன்மையான வேலை. நம் கல்வி அமைப்பின் இன்னொரு பிரச்சினை, தேர்வு நேரங்களில் மட்டுமே பொறுப்பாகப் படிப்பது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருமே காரணம். எனவே இந்தத் தேர்வு நேரத்தில் இப்படியான அரசு ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இதனால் பாதிப்படையப் போகும் கிராமப்புற மக்களுக்கு அரசு ஆசிரியர்களின் என்ன பதில் உள்ளது?

இதிலுள்ள நகை முரண் என்னவென்றால், பாதிக்கப்படப் போவது கிராமப்புற மக்கள் என்பதாலேயே அரசு ஊழியர்களுக்குப் பொது மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை என்பதுதான். இது கொடுமை என்றாலும், பெரும்பாலான நகர்ப்புற மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் படிப்பதால், இவர்களது பெற்றோர்கள் அரசுத் தரப்பையும் சரி, அரசு ஆசிரியர்கள் தரப்பையும் சரி, ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் யாருக்கும் ஒரு ஆதரவோ எதிர்ப்போ பெரிய அளவில் உருவாகிவரவில்லை. அதேசமயம் அரசு ஊழியர்கள் பெறும் சம்பளம் குறித்த புள்ளிவிவரங்கள், பொது மக்களின் மனதில், இவர்கள் இன்னும் சம்பளம் கூடுதலாகப் பெறவே போராடுகிறார்கள் என்ற எளிய எண்ணத்தை மட்டும் விதைத்துவிட்டது. இது அரசுக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. போராட்டமும் பிசுபிசுத்துவிட்டது.

பத்து வருடம் ஆசிரியர் பணியில் இருக்கும் ஒரு அரசு ஆசிரியரின் தோராயமான சம்பளம் நிச்சயம் 65,000 ரூபாய் இருக்கலாம். தலைமை ஆசிரியரின் சம்பளம் 85 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கலாம். எப்போதெல்லாம் மத்திய அரசு பே கமிஷனை நியமிக்கிறதோ அப்பொதெல்லாம் கூடுமான வரையில் தமிழக அரசும் அதை ஒட்டிய சம்பளத்தை அறிவித்துவிடுகிறது. காலதாமதமானாலும் முன்கூட்டிய தேதியிட்டு அறிவித்து ஈடுகட்டுவிடுகிறது. இந்நிலையில் போராட்டத்தில் சம்பள உயர்வையும் (அல்லது வேறுபாடுகளைக் களைவது) சேர்த்துக்கொண்டிருப்பது பொது மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தி இருக்கிறது.

3000க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதைக் கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் தேவையற்றதே. இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் குறைந்துவரும் நிலையில், தமிழ்வழிக் கல்வியின் ஆர்வம் குறைந்துவரும் நிலையில், பள்ளிகளை மூடுவது என்பது தவிர்க்கமுடியாதது. 35% பேருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றால் எப்படி அந்தப் பள்ளிகளில் சேர முன்வருவார்கள்? இந்த புள்ளிவிவரம் தனியார்ப் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் என்றாலும், ஒப்பீட்டளவில் இது அரசுப் பள்ளிகளில்தான் அதிகம் என்பது வெளிப்படை. இந்நிலையில் மாணவர்களே இல்லாத அல்லது மாணவர்கள் குறைந்த பள்ளிகளை மூடுவது, குறைவான அளவில் உள்ள மாணவர்களை இன்னொரு பள்ளியோடு இணைப்பது எல்லாம் நிகழவே செய்யும்.

இதற்கான தீர்வு, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதிலேயே உள்ளது. அரசு ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதிலேயும் இருக்கிறது. ஆனால் அரசு ஆசிரியர்களோ, எங்களுக்கு ஏன் இன்னொரு தேர்வு என்று அப்பாவியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசுக்கு தன் மாணவர்களின் எதிர்காலம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லை. பாடத்திட்டத்தை உருவாக்குவதில் உள்ள முனைப்பு, அரசுப் பள்ளிகளை ஆயத்தப்படுத்துவதில் இல்லை. மிக முக்கியமான காரணம், அரசு ஊழியர்களின் வாக்கு வாங்கி என்கிற மாயை.

மாணவர்களின் தரக் குறைப்பாட்டுக்கு அரசும் நிச்சயம் ஒரு காரணமே. ஆனால் தேர்வை எதிர்கொள்ளும் நேரத்தில் மாணவர்கள் இருக்கும்போது இந்த வேலை நிறுத்தம் அராஜகம் என்பதுதான் உண்மை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு இடமாற்றத்தில் முன்னுரிமை தரப்படும் என்று அரசு சொன்னதுமே பிசுபிசுத்துப் போய்விட்டது இந்தப் போராட்டம். தங்கள் வசதி என்று வந்ததும் ஆசிரியர்கள் உடனே வேலைக்கு வந்துவிட்டார்கள். இதில் கிண்டலுக்கு ஒன்றுமில்லை என்றாலும்கூட, மாணவர்களைக் குறித்தும் இவர்கள் யோசித்திருக்கலாமே என்ற எண்ணம் வலுப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

இந்தக் கூத்துக்கு இடையில் இன்னொன்றும் நிகழ்ந்தது. எனக்கு (நமக்கு!) அது இன்னமும் முக்கியமானது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்துக்கான காரணங்களில் ஒன்று, சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு ஆதரவு தருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கும் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கும் என்ன தொடர்பு? ஏன் நீதிபதி பரந்தாமன் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை நீதிமன்றம் பாகுபாடு காட்டாமல் அணுகவேண்டும் என்று மட்டும் சொல்லி, இப்போராட்டத்தில் சபரிமலை விவகாரம் தேவையற்றது என்று சொல்லவில்லை? கம்யூனிஸம். அரசு ஆசிரியர் சங்கங்களில் ஒன்று முற்போக்காளர்களின் சங்கம் என்ற பெயரில் இந்தக் கோரிக்கையை நுழைத்துள்ளது. ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை அல்ல இது. எங்கே இருந்தாலும் தங்கள் கோரிக்கையை நுழைத்துவிடுவதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள். அனுபவம் மிக்கவர்கள். நல்லவேளையாக ஹிந்து ஆதரவு ஆசிரியர் சங்கம் ஒன்று இதற்கு பதிலடி கொடுத்தது. ஒருவழியாக சபரிமலைக்குப் பெண்கள் செல்லும் விஷயத்திலான கோரிக்கையைப் பொதுவில் பெரிய அளவில் ஜேக்டோ கொண்டு செல்லவில்லை என்பது ஆறுதல்.

ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான நியாயமான கோரிக்கைகளை அரசு ஆராயவேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ப்ரீகேஜி வகுப்புகளுக்குச் செல்வதை மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள். இதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட அளவில் இது எனக்குப் பெரிய விஷயமில்லை என்பதையும் சொல்கிறேன். ஆனால் ஆசிரியர்களின் உணர்வுக்கு மரியாதை அளிக்கவேண்டும். ப்ரீ கேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி தேர்ச்சி போதுமானது என்று மத்திய அரசின் வழிகாட்டும் குழு சொல்லி இருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி தேர்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த வகுப்புகளுக்குச் செல்வதை ஏற்காதது நியாயமே. இந்த வருடம்தான் இது தொடங்கி இருக்கிறது என்பதால், எதிர்வரும் வருடங்களில் அரசு இப்பிரச்சினையைச் சரி செய்யும் என்றே தோன்றுகிறது. இது போன்ற விஷயங்களில் அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதே சரியானது. அப்போதுதான் அடுத்த நகர்வாக அரசு ஆசிரியர்களின் தர மேம்படுத்துதலை மேற்கொள்ள முடியும்.

பொதுவாகவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் மிகவும் அரிதான காலங்களில் நடப்பது நல்லது. அதாவது வேலை நிறுத்தமே கூடாது என்ற வகையில் இருந்துவிடுவது இனி அவர்களுக்கு நல்லது. காலம் மாறி இருக்கிறது. வேலை நிறுத்தத்தை பொதுமக்கள் கொண்டாடின அல்லது ஏற்றுக்கொண்ட காலம் போய்விட்டது. நீதிமன்றமும் சரி, மக்களும் சரி, எந்த ஒரு அரசுத் தரப்பின் போராட்டத்தையும் இனி சட்டென ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனடிப்படையில் தங்கள் தேவையை அரசுத் தரப்போடு பேசியோ, நீதிமன்றத்தை அணுகியோ அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்வது நல்லது. நீதிமன்றத்தின் தலையீடு என்பது அரசு நிகழ்வதற்கு சில பிரச்சினைகளை உருவாக்கலாம். ஆனால் அது குறித்துக் கவலை கொள்ளவேண்டியது அரசுதானே ஒழிய, அரசு ஊழியர்கள் அல்ல.

நன்றி: வலம் மாத இதழ்

Share

நீட்

நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்கச் சொல்லி உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அஹம்த் அடங்கிய பென்ச், தற்போது நடக்க இருக்கும் கலந்தாய்வையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ இரண்டு வாரங்களுக்குள் இந்த புதிய மதிப்பெண்களிடன்படி தரவரிசையை உருவாக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றம் செல்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல கேள்விகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது.

தமிழில் தேர்வு நடந்த உடனேயே, பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. டெக் ஃபார் ஆல் என்னும் அமைப்பு, இக்கேள்விகளில் உள்ள தவறுகளைப் பட்டியலிட்டு, குறைந்தது 196 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன என்றது. சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன் இதை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். இதை ஒட்டிய தீர்ப்பே இப்போது வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே மாணவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தீர்ப்பின்படி தேர்வுபெற்ற புதிய மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டால், ஏற்கெனவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் நிலை என்ன? அவர்களை அப்படியே வைத்துக்கொண்டு, கூடுதலாக புதிய மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்றால், கூடுதல் இடங்களை அரசு உருவாக்குமா? இப்படியான சிக்கலை உருவாக்கி இருக்கிறது இத்தீர்ப்பு.

இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற தன்மைதான். நீட் பிரச்சினையில் தொடக்கம் முதலே சிபிஎஸ்இ அலட்சியமாகவே நடந்துகொண்டுள்ளது. நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்குதலில் சிபிஎஸ்இயின் எதிர்பாராத பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் கேள்வித் தாள் பிரச்சினையில் சிபிஎஸ்இ நடந்துகொண்ட விதம் நிச்சயம் பொறுப்பற்றதனமே. நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ, தாங்கள் சிறப்பான மொழிபெயர்ப்பாளர்களையே நியமனம் செய்ததாகவும், அதற்குமேல் அதில் பிரச்சினை இருந்தால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறி இருக்கிறது. இது இத்தனை எளிதாகக் கடந்து செல்லவேண்டிய விஷயம் அல்ல.

சிபிஎஸ்இயின் பாடத்திட்டப்படியான புத்தகங்கள் தமிழில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் வார்த்தைகள் தொடர்ச்சியாகத் தமிழ்ப்பாடத்திட்டப்படியான அரசுப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழக அரசுகள் தொடர்ச்சியாகப் பல காலங்களாக மிகக் கவனமாகவே செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதப்போவதில்லை என்னும் நிலையில், தமிழில் தேர்வை எதிர்கொள்ளப் போகிறவர்கள் அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில், மொழிபெயர்ப்புக்கான சரியான அறிவியல் வார்த்தைகளை அரசுப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஒப்புநோக்கித் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். மிகச் சிறிய விஷயம் இது. இதைச் செய்திருந்தால் இந்தியா முழுமைக்குமான தலைக்குனிவை சிபிஎஸ்இ சந்திக்க நேர்ந்திருக்காது.

ஆங்கிலம் மற்றும் மண்டல மொழிகளில் கேள்விகள் தரப்பட்டிருக்கின்றன என்றாலும் இறுதியான முடிவு ஆங்கிலக் கேள்வியே என்ற ஒரு பொறுப்புத் துறப்பை ((Disclaimer) சிபிஎஸ்இ செய்திருக்கிறது. “மொழிபெயர்ப்பில் சந்தேகமான வார்த்தைகள் இருப்பின், அந்தக் கேள்விகளின் பதில்களை ஏற்பதில் ஆங்கில வினாக்களின் பொருள்தான் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும். தமிழில் தேர்வை எழுதும் மாணவர்கள், இதை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறது `பொறுப்புத்துறப்பு!’ இதையும் ஏற்பதற்கில்லை. ஒன்றிரண்டு கேள்விகள் என்றால் சமாதானம் கொள்ளலாம். 49 கேள்விகள் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. மொத்தம் 180 கேள்விகள், 720 மதிப்பெண்கள். இதில் 49 கேள்விகள், 196 மதிப்பெண்களில் குழப்பம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.

49 கேள்விகளில் என்ன என்ன தவறுகள் நேர்ந்தன என்பதைச் சரியாக அறியமுடியவில்லை. டெக் ஃபார் ஆல் இக்கேள்விகளின் பட்டியலை வெளியிட்டதாகச் செய்திகளில் பார்க்கமுடிந்தது. ஆனால் ஒட்டுமொத்த கேள்விகளின் பட்டியலும் கைக்குக் கிடைக்கவில்லை. டெக் ஃபார் ஆல் அமைப்புக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். மடல் அனுப்பினேன். என்ன தேவைக்காக என்றும் என்னைப் பற்றிச் சொல்லுமாறும் கேட்டார்கள். என் ஜாதகத்தைத் தவிர அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இதை அறிந்துகொள்ளவேண்டும் ஒரு முனைப்பில் கேட்பதாகச் சொன்னேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதிலே இல்லை.

49 கேள்விகள் அனைத்துக்குமே ஏன் மதிப்பெண் தரவேண்டும் என்பதும் கேட்கப்படவேண்டிய கேள்வியே. இந்த 49 கேள்விகளில் எவையெல்லாம் மாணவர்களைக் குழப்பும் கேள்விகள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தின் நோக்கம், இது போன்ற ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்த சிபிஎஸ்இஐப் பதற வைப்பது என்றே தெரிகிறது. அப்படி ஒன்று நடந்தால்தான் இனி எல்லாம் சரியாகச் செயல்படும் என்று நீதிமன்றம் யோசித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ இத்தேர்வுகளை நடத்தாது என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

49 கேள்விகளின் பட்டியலில் உள்ள சில கேள்விகள் மட்டும் எனக்குக் கிடைத்தன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது, மேலதிகப் புரிதலைத் தர உதவலாம். நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவன். அரசுப் பள்ளியில் படித்தவன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் கனவில் தேர்வில் பங்கெடுத்தேன். உயிரியல் தேர்வின் கேள்வித் தாளின் முதல் பக்கத்திலேயே ம்யூட்டேஷன் என்றால் என்ன என்றொரு கேள்வி இருந்தது. நான் உயிரியலில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க நினைத்திருந்தவன். இந்தக் கேள்வி எனக்குப் பெரிய பதற்றத்தைத் தந்தது. ஏனென்றால் ம்யூட்டேஷன் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. மரபணு மாற்றம் என்றோ மரபணுப் பிறழ்வு என்றோ தூண்டப்பட்ட மரபணு மாற்றம் என்றோ படித்தேன். (இப்போது நினைவில்லை.) இன்னும் சில கேள்விகள் இப்படி இருந்த நினைவு. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பேசிகொண்டது, தவறாக இருந்த கேள்விகளைப் பற்றிய வருத்தத்தைத்தான். இதில் நீட் தேர்வில் பங்குகொள்ளும் மாணவர்களின் வருத்தமும் பதற்றமும் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லாருமே தேர்வு பெறப்போவதில்லை என்றாலும், இக்கேள்விகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்களை நாம் புறக்கணிக்கமுடியாது.

இதன் அடிப்படையில் 49 கேள்விகளின் மொழிமாற்றப் பிரச்சினையை அணுகவேண்டும். கொஞ்சம் மாற்றி மொழிபெயர்த்திருந்தாலும் ஏன் மாணவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பது, நம் பாடத்திட்டம் உருவாக்கும் மாணவர்களைப் பற்றிய வேறொரு பிரச்சினை. ஏன் சிபிஎஸ்இ சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

தமிழ் அல்லாமல் பிறமொழிகளில் எப்படி இக்கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, அங்குள்ள மாணவர்கள் எப்படி இதை எதிர்கொண்டார்கள், அங்குள்ளவர்கள் சார்பாக ஏன் வழக்குகள் பதிவாகவில்லை என்பதெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியவையே.

என் பார்வைக்குக் கிடைத்த தவறான தமிழ்க் கேள்விகளை மட்டும் இப்போது பார்க்கலாம். இவை இணையத்தில் கிடைத்த செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை.

செங்குத்து என்பது நேர்குத்து என்று கேட்கப்பட்டுள்ளது. செங்குத்து என்றே நான் பள்ளிகளில் படிக்கும் காலம் தொட்டு 25 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதை நேர்குத்து என்று சொன்னால் மாணவர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கமுடியாது. சிறுத்தை என்பதற்குப் பதிலாக அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் சீத்தா என்று எழுதி இருக்கிறார்கள். சிறுநீர் நாளம் என்று கேட்காமல் யூரேட்டர் என்று கேட்கப்பட்டிருக்கிறதாம். இயல்பு மாற்றம் என்பது இயல் மாற்றம் என்றும், தாவரங்கள் என்பது ப்ளாண்டே என்றும் கேட்கப்பட்டுள்ளன. இறுதி நிலை என்பது கடை நிலை என்றாகியுள்ளது. புதிய அரிசி ரகம் என்பது புதிய அரிசி நகம் என்று கேட்கப்பட்டுள்ளது. வவ்வால் என்பது வவ்னவால் என்று அச்சிடப்பட்டுள்ளது. பலகூட்டு அல்லீல்கள் என்பது பல குட்டு அல்லீல்கள் என்றாகி உள்ளது. ஆக்டோபஸ் ஆதடபஸ் என்றாகி இருக்கிறது. நீள  பரிமாணங்கள் என்பது நீள  அலகுகள் என்று வந்திருக்கிறது. விதை வங்கி வதை வங்கி ஆகி இருக்கிறது.

இப்படியாகப் பல கேள்விகள் தவறாகவே கேட்கப்பட்டுள்ளன. டெக் ஃபார் ஆல் 49 கேள்விகள் தவறு என்று பட்டியலிட்டாலும், 18 கேள்விகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் சிலர். ஆனால் உயர்நீதிமன்றம் கேள்விகளின் தவறுகள் எத்தகையவை என்பதற்குள் போகவே இல்லை. உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியான ஒன்றே.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் பங்கேற்ற கோகுல ஸ்ரீனிவாஸ் இது தொடர்பான முக்கியான கருத்து ஒன்றை வெளியிட்டார். “இத்தீர்ப்பு சரியான ஒன்றே. ஆனால் ஏன் நீதிமன்றம் இத்தீர்ப்பை முன்பே வெளியிட்டிருக்கக்கூடாது” என்பதுதான் அவரது நிலைப்பாடு. உண்மையில் இத்தீர்ப்பு முன்பே வந்திருக்குமானால் பல குழப்பங்களைத் தவிர்க்க அது உதவியிருக்கக்கூடும். ஆனால் ஏன் சிபிஎஸ்இ உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் காத்திருக்கக்கூடாது என்னும் கேள்வியும் நியாயமானதுதான். சிபிஎஸ்இ தான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை என்பதுதான் இதற்கான வருத்தத்துக்குரிய பதில்.

நீட் தொடர்பாக ஏற்கெனவே பல பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில் இப்பிரச்சினை இன்னும் சிக்கலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சேர்க்கை குறைந்து சிபிஎஸ்இ செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாமே தங்கள் வசம் சிபிஎஸ்இ பள்ளிகள் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து அவற்றைத் துவங்கத் தேவையான முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தமிழில் கேள்விகள் இப்படித்தான் இருக்கும் என்பது நீட் எதிர்ப்பாளர்களுக்கும், மத்திய அரசின் எதிர்ப்பாளர்களுக்கும் பெரிய வசதியாகப் போயிருக்கிறது.

நீட் தேர்வின் குழப்படிகளைக் களைவதில் ஆர்வம் காட்டுவதைவிடக் கூடுதலாக, நீட் தேர்வு ஒழிப்பில் காட்டுகிறார்கள். இனி அது சாத்தியமில்லை என்னும் நிலையையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே வஞ்சனை செய்கிறது என்கிற பிரசாரத்தைத் துவங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுத மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற பிரச்சினையிலும் இவர்கள் இதையே முன்வைத்தார்கள். தமிழ்நாட்டை ஒழிக்க ஏன் மத்திய அரசு நீட் தேர்வில் பங்குபெறும் ஆயிரம் மாணவர்களை மட்டும் குறி வைக்கவேண்டும் என்று இவர்கள் யோசிக்கவே இல்லை. இதன்மூலம் தமிழ்நாட்டை என்ன செய்துவிடமுடியும்? தமிழில் தேர்வுக்கேள்விகள் இப்படி வந்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம், அநியாயம். ஆனால் இதன் பின்னணியில் அலட்சியம் மட்டுமே இருக்கிறதே ஒழிய தமிழ்நாட்டை ஒழிக்கவேண்டும் என்கிற எந்த ஒரு எண்ணமும் இருக்க வாய்ப்பில்லை.

மற்ற அரசுகளுக்கும் தற்போதைய மத்திய அரசுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், தவறுகள் நேரும்போது அதைத் திருத்திக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைதான். இதைப் பற்றி ஏன் மத்திய அரசு பேசுவதில்லை என்ற கேள்விகள் பொருளற்றவை. பேச்சைக் காட்டிலும் செயல்பாடும் தீர்வுமே முக்கியம். இனி சிபிஎஸ்இ நடத்தப்போவதில்லை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸிதான் நடத்தும் என்பது, இப்பிரச்சினைகளை ஒட்டி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஒரு முன்னகர்வு. அது எப்படி இயங்கும், அது சிபிஎஸ்இயில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கும் என்பதெல்லாம் இனிதான் நாம் பார்க்கவேண்டியது. ஆனால் நிச்சயம் காங்கிரஸ் அரசைப் போல ஒரு கண் துடைப்பு அறிவிப்பாக இது இருக்காது என்று நம்பலாம். சிபிஎஸ்இ எதிர்ப்பு மற்றும் மத்திய அரசு எதிர்ப்பு இரண்டையும் ஒன்றாக்கி, வெகுஜன மக்கள் மத்தியில் மத்திய அரசு எதிர்ப்புக்கான விதையை ஊன்றுவதுதான் சிலரின் நோக்கம். இதிலிருந்து விடுபட்டு தமிழக மாணவர்களுக்கு எது தேவை என்பதை மட்டும் யோசிப்பதுதான் சரியான நிலைப்பாடு.

உச்சநீதி மன்றத்தில் வரும் தீர்ப்பு இவ்விஷயத்தில் ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அதை ஒட்டி இன்னும் குழப்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறலாம். ஆனால் இனி வரும் தேர்வுகளில் இப்படியான ஒரு அலட்சியத்தை எந்த அமைப்பும் கைக்கொள்ளாது என்பதை இப்பிரச்சினை உறுதி செய்திருக்கிறது என்றே நம்புகிறேன்.

நன்றி: வலம் ஆகஸ்ட் 2018

Share