Archive for பொது

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு ஜோதி நரசிம்மனின் பதில்

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு, ஜோதி நரசிம்மன் உயிரோசை.காமில் தன் பதிலைச் சொல்லியுள்ளார். என் விமர்சனம் அவரைப் புண்படுத்தியிருப்பது புரிகிறது. அவர் கடைசியில் சைன் – ஆஃப் செய்யும்போது பெயரோடு ‘அடியாள்’ என்று போட்டிருக்கவேண்டாம். அடியாள் என்பது புத்தகத்தின் பெயராக இருந்தாலும், என்னவோ உறுத்துகிறது.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=596

உயிரோசையில் அடியாள் நூல் விமர்சனம் படித்தேன். நன்றி. என் படைப்பை விமர்சனம் செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் என் எழுத்துப்பணி சிறப்படைய உயிரோசை வாழ்த்துவதாகவே உணர்கிறேன். அந்த விமர்சனத்தில் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐயத்திற்கு நான் பதில் சொல்−யே ஆக வேண்டும். அது உங்களை சமாதானப்படுத்திக்கொள்ள அல்ல. என்னை செப்பனிட்டுக் கொள்ள.

ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார் அதில் எந்தவித வலியும் தெரியவில்லை. தெரிவதில்லை. என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள் அந்த சம்பவத்தை, வலியை உள்வாங்கிக் கொண்டுதான் அவற்றை வெளிப்படுத்தியுள்ளேன். படிக்கும்போது வலியை உணரவேண்டும் என்று எழுதியிருந்தால் அது சம்பந்தப்பட்டவர்களை ஆறுதல் அடைய செய்யாது. மாறாக கோபம் ஏற்படச் செய்யும். அவர்களை சமூகம் எப்படி குற்றவாளியாக மீண்டும் மீண்டும் பார்க்கிறதோ, அப்படியே நானும் பார்க்க நேரிடும். மாறாக அது எனது பார்வைக்கும் அனுபவத்திற்கும் எதிராக இருக்கும் என்பதால் நீங்கள் சொல்லியிருக்கும் அந்த வலியை எழுத்துகளுக்குள் வைக்கவில்லை. மேலும் ஒரு விசாரணைக் கைதியாக குறைந்த நாட்களிலே என்னை வாசிப்புக்கும், எழுதுவதற்கும் தூண்டியது சிறை அனுபவம். அந்த சிறை எத்தனையோ கைதிகளை மீண்டும் மீண்டும் குற்றவாளியாக உருவாக்கியிருந்தாலும் என்னைப்போன்ற சில சமூக ஆர்வலர்களை உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 15 நாட்களில் ஒரு சிறையை முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது என்பது போல் எழுதியுள்ளீர்கள். அது நான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த புத்தகத்தை என்னுடைய எட்டு ஆண்டுகள் அடியாள் அனுபவத்தில் நான் பட்ட அவமானங்களை, துயரங்களை, சொல்லமுடியாத, சகிக்கமுடியாதவைகளின் ஊடாக உணர்ந்து யாரையும் பாதிக்காமல் தொகுத்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நான் ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் கைதியாக சிறை செல்லவில்லை. விடுதலைப் பு−களின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற அமைதி பேரணியில் பங்கேற்று தடையை மீறி பேரணிச் செல்ல முயன்று கைது செய்யப்பட்டேன். நான் இருவேறு நிலைகளிலும் 36 நாட்கள் மத்திய சிறையில் இருந்துள்ளேன். ஹரன்பிரசன்னா போன்றவர்கள் ஓரிரு நாளாவது மத்திய சிறைக்கு சென்றால் என்னைவிட மிகுந்த அனுபவம் பெறமுடியும். அடியாளை விட பெரிய தொகுப்பு எழுத முடியும். மூதோர் மொழிபோல சிறை மனிதனை சிந்திக்கவைக்கும் அறைதான்.

ஜோதி நரசிம்மன் (அடியாள்)

Share

எல்லாம் அம்மா செயல்

என்றைக்கு கருணாநிதி வந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரோ அன்றே தொடங்கிவிட்டது அக்கோயிலின் மீதான ஓர் ஆர்வமின்மை. அதிலும் அக்கோயில் 250 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்ட கோவில் என்றபோது அதன் மீதான ஆர்வமின்மை வெறுப்பை நோக்கி நகரத் தொடங்கியது. இதனாலேயே இக்கோவிலுக்குப் போகலாம் என்கிற பேச்சு வந்தபோதெல்லாம், சில எதிர்மறையான காரியங்களைச் சொல்லி தவிர்த்தே வந்தேன். நேற்று அக்கோவிலுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சரி போவோம் என்று போனேன்.

வேலூருக்கு அருகில் இருக்கிறது கோவில். ஸ்ரீபுரம் தொடக்கத்தில் இருந்து எங்கே பார்த்தாலும் நாராயணியும் அம்மாவும் காட்சி தருகிறார்கள். உண்மையில் நான் ஸ்ரீ அம்மா என்று சொல்லியிருக்கவேண்டும். மரியாதையின்மையின் உச்சம் நான் அம்மா என்று மட்டும் சொல்வது. மேல் மருவத்தூரில் அம்மன் முன்பு அம்மா (இது வேறு அம்மா) நின்று அருள் சொல்வதுபோல, நாராயணியின் முன்பு நின்று அம்மா அருள் பாலிக்கிறார். அம்மா என்று அழைக்கப்படுபவர் கிட்டத்தட்ட 32 வயதான ஒரு ஆண். ’அவர் பிறக்கும்போது அவர் முகத்தில் நாமம் இருந்தது. பின்னர் அவர் கடவுளின் குழந்தையாக இல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும்? அவரைப் பார்த்த சிலர் கண்மூடிக் கண் திறந்தபோது அவர் சிங்கத்தின் மீதிருக்கும் நாராயணியாகக் கண்டார்கள். அவர் நாராயணியின் அம்சம்.’

திருப்பதியை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக உருவாக்கிவிட்டார்கள்! திருப்பதியில் வரும் சின்ன சின்ன எரிச்சல்களெல்லாம் பெரிய அளவில் வருகிறது இங்கே. உள்ளே நுழைந்ததும் கேமரா, செல்ஃபோன் என எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டுவிட்டார்கள். வரிசையில் நின்று, வரிசை மெல்ல மெல்ல நகன்று செல்ல, ஒரு அறையை அடைந்தோம். அங்கே அடைத்துவைத்தார்கள். கொளுத்தும் வெயிலில் நான்கே நான்கு ஃபேன்கள். அங்குள்ள ஒரு டிவியில் அம்மா செய்த யாகங்கள், வேத மந்திர முழக்கங்கள் என எல்லாவற்றையும் வரிசையாகக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அம்மா ஒரு காவி சால்வையைப் போர்த்திக்கொண்டு, கைகளைக் குறுக்காக கட்டிக்கொண்டு மிடுக்காக நடந்துகொண்டே இருக்கிறார்.

அந்த அறையிலிருந்து திறந்து விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம். (உண்மையில் நான் இரண்டு மணிநேரம் கழித்துதான் அடுத்த வரி எழுதவேண்டும். அத்தனை நேரம், அத்தனை தூரம் நடந்தோம்.) நடைபாதை சூரிய சக்கரம், சந்திர சக்கரத்தை உத்தேசித்துக் கட்டப்பட்டதாம். நடந்தோம். நடுவில் தங்கத்தில் கோயில் ஜொலிக்க, நாங்கள் அதை அடைய நடந்தோம். நேரடியாக சடுதியில் அடைந்திருக்கவேண்டிய கோவிலை, சுற்றிச் சுற்றி ஸ்டார் வடிவத்தில் இருக்கும் நடைபாதை வழி நடந்தோம். வழியெங்கும் கற்சிலைகள் அழகழாகப் பூத்திருக்க, திரும்பிய பக்கமெல்லாம் பசும்பூல் போட்டு அதை ஆள் பராமரித்துக்கொண்டிருக்க நடந்தோம். ஒவ்வொரு ஒரு கிமீ தொலைவிற்குள்ளும் நன்கு பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள். கழிப்பறை சுட்டி அட்டைகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என எல்லா மொழிகளையும் கொண்டிருந்தன. மலையாளம் காணவில்லை. ஒருவேளை மலையாளிகள் அறிவாளிகளோ என நினைத்துக்கொண்டே நடந்தோம். இன்னும் நடந்தோம். மேலும் நடந்தோம். திடீர் திடீரென நிறுத்தினார்கள். நின்றோம். போகச் சொன்னார்கள், நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. என் அம்மாவிற்கு மூச்சு முட்டியது. ஆஸ்துமா கேஸ். ஆனாலும் ஆர்வம் குறையவில்லை. தங்கக்கோவிலை அவள் தரிசிக்கும் தருணம் அவளுக்கு முக்கியமானது. எங்களுடன் பல நூறு மக்கள், பல்லாயிரக் கணக்கான மக்கள் நடந்தார்கள். எல்லாருக்கும் ஒருவித ஆர்வம், ஆச்சரியம். மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே பக்தி. இது சுற்றுலாத்தலமா இல்லை கோவிலா என்று தோன்றிவிட்டது. ஒருவழியாக நடந்துமுடிந்து தங்கத்தாலான கோவிலைக் காண உள்ளே நுழைந்தோம்.



தங்கத் தூணையும், தங்கச் சிற்பங்களையும் நீங்கள் எட்டி நின்று பார்க்கலாம். மூல ஸ்தானத்தில் உள்ள தங்க அம்மனை நெருங்க முடியாதபடி நீர் சேர்ந்து நிற்கும் அகழி இருந்தது. நீர் ஆடி ஆடி நீரில் இருந்து வெளிப்படும் சூரிய ஒளி தங்கக்கோவிலின் சுவர்களில் ஒளிக்க, கோவிலின் சுவரே ஆடுவதுபோன்ற அழகும். வெகு அழகுதான். அங்கேயும் சுற்றி சுற்றிப் போகச் சொன்னார்கள். போனோம். திடீரென நிறுத்தி, திடீரென அனுப்பி ஒருவழியாக சந்நிதியை அடைந்தோம்… என்றால், கிட்டத்த மூலஸ்தானத்திலிருந்து 75 அடி தள்ளி நின்று பார்த்துவிட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். என் அம்மாவிற்கு வந்த ஏமாற்றம்தான் என்னால் தாங்கமுடியாமல் இருந்தது. மற்றபடிக்கு நான் ஓர் ஆர்வமில்லாமல்தான் நடந்துகொண்டிருந்தேன்.


கடவுளை தரிசித்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு செயற்கை நீரோட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதில் பெண்கள் தங்கள் வளையலை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. இப்போதே கூட்டம் குவியத் தொடங்கியிருக்கிற நிலையில், இன்னும் சில வருடங்களில் கூட்டம் குவியப்போகிற நிலையில், வளையல்களை அள்ள தனி காண்டிராக்ட் விட்டாலும் விடுவார்கள்.

ஏகப்பட்ட வளைவுகள். ஏகப்பட்ட நுழைவாயில்கள். ஜொலிக்கிறது கோவில். ஆனால் பக்தர்கள் வெயிலில் அவஸ்தைப் படாமலிருக்க எவ்வித ஏற்பாடுமில்லை. நவதிருப்பதி செல்வோம். அங்கேயும் இப்படித்தான். எவ்வித ஏற்பாடும் இருக்காது. ஆனால் அது குறையாக உறுத்தியதே இல்லை. காரனம் அவையெல்லாம் ஏழைக் கோவில்கள். நாம் பாரம்பரியத்தையும் மரபையும் தொடர்ந்து காப்பாற்றிக்கொண்டு, தன் பெருமையை பறைசாற்றிக்கொண்டு நிற்பவை. அவை கோவில்கள் என்பதைவிட மனசாந்தி தரும் இடங்கள். ஆனால் இது கார்ப்பொரேட் நிறுவனம். கோவில் ஸ்டலில் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே 250 கோடி செலவளிக்க தகுதி இருக்கிறது. அப்போது மக்களின் கஷ்டத்தையும் நினைவில் வைத்திருக்கலாம். சுட்டெரிக்கும் வெயிலில் கால்கள் பொசுங்க ஓடினோம். பிரசாதமாக சாம்பார் சாதம் தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு ஓடினோம். வெளியில் வரும்போது கடும் எரிச்சல் மட்டுமே மிச்சமிருந்தது. கோவில் மனதிற்குத் தந்திருக்கவேண்டிய அமைதி இல்லை. ஒரு கடவுளை தரிசித்த நிலையில் கிடைக்கவேண்டிய ஆனந்தம், புல்லரிப்பு இல்லை. கோவிலில் குங்குமம் கூடவா கொடுக்கமாட்டார்கள்? 250 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால், 50 அடி தொலைவில் அம்மனை தரிசித்துவிட்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம், 500 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால் அம்மனை மிக அருகில் கண்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம்.

எப்படி திருப்பதி இக்கோவிலிருந்து வேறுபடுகிறது? உண்மையில் திருப்பதியோடு இக்கோவிலை ஒப்பிடுவதே நான் பெருமாளுக்கு செய்யும் துரோகம். இருந்தாலும், இக்கோவில் திருப்பதி போன்று வரவேண்டும் என்கிற நினைப்பில் கட்டப்பட்டிருப்பதால் இது தேவையாகிறது.

திருப்பதி கோவில் ஏற்படுத்தப்பட்டதல்ல. மக்கள் அக்கோவிலுக்கு எளிதாகச் சென்றுவர பல்வேறு வழிகளைச் செய்துவைத்திருக்கிறார்கள். இக்கோவில் ஏற்படுத்தப்பட்டது. கூட்டம் வருவதே எண்ணம் என்ற நினைப்பில் செய்திருக்கிறார்கள்.

திருப்பதியில் பெருமாள் மட்டுமே முக்கியம். இங்கே நாராயணியோடு அம்மாவும் முக்கியம். சில சமயங்களில் நாராயணியைவிட அம்மா முக்கியம்.

திருபப்தியிலும் ஸ்பெஷல் தரிசனங்கள் உண்டு. ஆனால் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே கடவுளைக் கும்பிடமுடியும். பணம் என்பது அங்கு நேரத்தைக் குறைக்கமட்டுமே. அன்றி, வழிபாடு செய்யும் இடம் எல்லோருக்கும் பொதுவானதே. இங்கே அப்படி இல்லை. பணம் கூட கூட நீங்கள் நின்று வழிபடப்போகும் இடம் மாறும்.

திருப்பதியில் நீங்கள் எங்கேயும் பக்தியை மட்டுமே தரிசிக்கமுடியும். இங்கே பக்தியைக் கொஞ்சமாகவும், பகட்டையும் ஆடம்பரத்தையும் மட்டுமே தரிசிக்கமுடியும். திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவின் அருள்வாக்குகள் பல வண்ண fluxகளில் உங்களைத் துரத்துகின்றன. என்னுடன் வந்த பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தைப் பற்றி மட்டுமே பேசினார்கள்.

திருப்பதியில் கோவில் என்பது நம் மனதோடு சம்பந்தப்பட்டது. இங்கே கோவில் என்பது ஆடம்பரத்தோடு சம்பந்தப்பட்டது.

திருப்பதியில் நீங்கள் மூலஸ்தானத்தை அடைய நடக்கும்போது, உங்கள் மேல் வெயிலே படாது. ஒரு அறையில் அடைக்கப்படும் நீங்கள், அங்கிருந்து நடக்கத் தொடங்கினால், பின்பு நிற்கவேண்டியது இருக்கவே இருக்காது. இங்கே அப்படி அல்ல. செல்லும் வழியெல்லாம் வெயிலே உங்களை வழி நடத்துகிறது. திடீர் திடீரென நிறுத்துகிறார்கள். நின்று நின்று கால்வலித்து, பின்பு நடந்து கால் வலித்து, எப்போதுடா வெளியில் வருவோம் என்கிற எண்ணம் வந்துவிட்டது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், உள்ளே இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம் என்கிற நுழைவாயில்களை வைப்பது குறித்துப் போராடலாம். இப்போது நீங்கள் உள்ளே வந்துவிட்டால், சாமி பார்க்காமல் எச்சமயத்திலும் வெளியில் வரவே முடியாது.

இன்னும் சில காலங்களில் அம்மாவின் புகழ் எங்கும் பரவக்கூடும். அவர் பல்வேறு மருத்துவமனைக்கூடங்கள் எல்லாம் கட்டி அக்கிராமத்தையே தன் வசப்படுத்தக்கூடும். ஆனாலும் 250 கோடியில் ஒரு கோவில் இப்போது தேவையா என்கிற கேள்வியை புறக்கணிக்கமுடியாமல்தான் போகும். அம்மாவின் அருள்வாக்குகளில் ஒன்று, இக்கேள்விக்கும் பதில் சொல்கிறது. ‘250 கோடி செலவில் ஒரு கோவிலுக்கு பதிலாக ஏன் மருத்துவமனை கட்டக்கூடாது என்று கேட்கிறார்கள். இப்படி ஒரு கோவில் மூலம் ஆயிரம் ஆயிரம் மருத்துவமனைகள் சாத்தியமாகும்’ என்கிறது அது. எப்படியோ, 250 கோடியில் கோவில் என்பது அம்மாவையே உறுத்தியிருக்கிறது.

250 கோடி எங்கிருந்து வந்தது? யார் பணம்? எனக்குத் தெரியாது. யாருக்குத் தெரியும் என்பதும் தெரியாது. அரசியல் அம்மா ஆட்சிக்கு வந்தால் என்னாகும் என்பதும் தெரியவில்லை. ஆனால் கூட்டம் என்னவோ வந்துகொண்டேதான் இருக்கிறது. அது பக்திக்கான கூட்டமா, தங்கத்தைப் பார்க்கும் கூட்டமா என்று பார்த்தால், இப்போதைக்கு தங்கத்தைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம் என்று தோன்றுகிறது. நாளை மாறலாம். இதைக் கொஞ்சம் உருப்படியாக்கி, ஒரு நல்ல கோவிலாக மாற்றலாம். அது அம்மாவின் கையில் இருக்கிறது. தன் புகழை அதிகம் அம்மா நாடிவிட்டால், கோவில் பிந்தங்கிவிடும். அம்மாவை மட்டும் கண்டால் கோவில் கிடையாது என்பதை அம்மா புரிந்துகொள்ளவேண்டும். 250 கோடி முதலீட்டில் எக்காலகட்டத்திற்குமான நிரந்தர வருமானம் என்பது எண்ணமாக இருந்தால், நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆடம்பரமெல்லாம் இருந்தாலும் கடவுள் என்பது எதாலும் தீண்டப்படமுடியாத ஒரு உருதான். அதனுடன் விளையாடுவது பற்றி அம்மாதான் முடிவெடுக்கவேண்டும்.

கோவிலுக்குள் இருந்து வெளியே வருபவர்கள் மனதில் இருக்கவேண்டியது பக்தியும் ஆன்மிகமும். இது இல்லாவிட்டால் கோவில் என்கிற கான்செப்ட்டே அடிபட்டுப்போகும். இப்போதிருக்கும் நிலையில், மதமாற்றக்காரர்கள் அக்கோவிலின் வாசலில் ஒரு கடைபோட்டால், செம விற்பனை ஆகும் என்றுதான் தோன்றுகிறது. எல்லாவற்றையும் நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Share

மியாவ்

மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதுதல் அவசியம்.

சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. ஒருமுறை பின்ஜன்னலுக்குக் கீழிருந்து வருவது போலவும் ஒருமுறை வாசலுக்குப் பக்கத்திலிருக்கும் மாடிப்படியின் கீழிருந்து வருவது போலவும் பூனைக்குட்டிகளின் மியாவ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. என் மகன் ஓடிவந்து பூனை அவனைக் கூப்பிடுவதாகச் சொன்னான். அவனுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் டம்பளரில் பாலை ஊற்றிக்கொண்டு, ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்துக்கொண்டும், இரண்டு உதடுகளைக் குவித்து பூனைகளை அழைக்க நாங்கள் மரபாகப் பயன்படுத்தும் ஒலியை எழுப்பிக்கொண்டும் பூனைக்குட்டிகளைத் தேடினேன். ஏற்கெனவே பூனை என் விரலைக் கடித்த அனுபவம் இருந்ததாலும், பூனை நாயொன்றை விரட்டும் காட்சியை நேரில் கண்டிருந்ததாலும் கொஞ்சம் அஞ்சி அஞ்சியேதான் அவற்றைத் தேடினேன்.

பொதுவாகவே பூனைகள் நன்றி அற்றனவாகவும் திருட்டுக்குணம் கொண்டனவாகவும் சித்திரிக்கப்படுகின்றன. பூனைகள் தங்கள் உலகைப் பொதுவில் காட்டாதவை. அவை அவற்றிற்கே உரிய உலகை தங்களோடு ஒளித்துவைத்து வெளியில் அலைபவை என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டது. அதில் உண்மையும் உண்டு. ஒரு பூனை தன் குட்டிகளை ஓரிடத்தில் ஏன் ஒளித்து வைக்கிறது என்பது அந்தப் பூனையைத் தவிர யாருக்கும் தெரியாத மர்மமாகத்தான் இருக்கமுடியும். நான் தேடிக்கண்டடைந்த பூனைக்குட்டிகளும் எங்கள் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் சந்தின் மேல் உள்ள ஸ்லாப்பில் கிடக்கும் பழஞ்சாக்கு ஒன்றில் அண்டிக்கிடந்தன. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு, கண் திறக்காமல் தாயைத் தேடும் அப்பூனைக்குட்டிகளை நான் பார்த்த மாத்திரத்தில், அவை எனக்குப் பிடிதுப்போயின. என் மகன் விடாமல் ‘பூனக்குட்டி பூனக்குட்டி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். நான் மூடப்பட்டிருந்த கிணறு ன்றில் கால்வைத்து மேலேறி மெல்லப் பூனைக்குட்டிகளை வருட யத்தனித்த நேரத்தில் கொஞ்சம் சீறலும் கோபமுமாக பெரிய பூனை ஒன்று குரல் கொடுத்தது. உடலெங்கும் ரோமங்கள் குத்த்திட்டு நிற்க – பூனைக்கல்ல, எனக்குத்தான். பூனையின் குரலில் கொஞ்சம் பயந்துவிட்டேன்! – நான் முகம் வெளிறிப் பூனையைப் பார்த்தேன்.

பூனையின் முகங்கள் பலவேறானவை. மிகவும் தீர்க்கமான முகம் முதல், முக்கோண முகமாக, அசமந்த முகத்துடன், எப்போதும் பயந்தது போலவே இருக்கும் முகத்துடன் எனப் பல்வேறு பூனைகளை நான் கண்டிருக்கிறேன். இந்தப் பூனையின் முகம் அருளற்றது. தீர்க்கமற்றது. அதன் முகத்தில் எப்போதும் ஒரு கோபம் இருந்தது. கண்களில் எப்போதும் ஒரு மருட்சியிருந்தது. வீட்டில் வளர்க்கப்படாமல் தான்தோன்றியாக வளரும் பூனைகள் எப்போதுமே ஒரு பயத்துடனும் எப்போதும் எங்கேயாவது ஓடிவிட யத்தனிக்கும் ஒரு நினைப்புடன் அலைவது போலவே இருக்கும். இந்தப் பூனையும் அப்படியோர் எண்ணத்துடன் என்னை முறைத்துப் பார்த்தது. நான் கொண்டு போயிருந்த பாலை குட்டிகள் குடிக்கப்போவதில்லை. இருந்தாலும் அங்கு வைத்துவிட்டு வந்தேன். மறுநாள் பார்த்தபோது ஒரு சொட்டுப் பால் இல்லாமல் ப்ளாஸ்டிக் கப் காலியாக இருந்தது. அதைக் குடித்த நன்றிகூட இல்லாமல் அந்தப் பெரிய பூனை வழக்கம்போல் ஏதோ ஒரு கோபத்துடன் என்னைத் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

தொடர்ந்து இரண்டு மூன்று நாள்களுக்கு வேலை விட்டுச் செல்லவும் முதல் வேலை, என் பையனை அழைத்துக்கொண்டு குட்டிகளுக்குப் பால் வைப்பது என்கிற பெயரில் பெரிய பூனைக்குப் பால் வைப்பது என்பதாகிவிட்டது. நான் மறந்தாலும் என் பையன் என்னிடம் ‘பூன என்ன கூப்பிடுது, பால் கேக்குது’ என்று கூட்டிக்கொண்டு போய்விடுவான். ஒருநாள் பூனைக்குட்டிகளின் சத்தத்தையே காணவில்லை. ஒரு தாய்ப்பூனை குட்டிப் பூனைகளின் இடத்தை ஏழு தடவை மாற்றும் என்று என் அம்மா சொல்வாள். அப்படி இடம் மாற்றப்பட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். சில நாள்களுக்குப் பின்பு மீண்டும் பூனைக்குட்டிகளின் சத்தம். பூனைக்குட்டிகள் இரண்டு வீட்டின் பின்புறத்திலுள்ள சிறிய சந்தில் கீழே இருந்து கத்திக்கொண்டிருந்தன. மேலே ஸ்லாப்பில் இன்னொரு குட்டி இருக்கும் என்று தேடியபோது அந்தக் குட்டியைக் காணோம். தாய்ப் பூனையையும் காணவில்லை. குட்டிகள் கொஞ்சம் வளர்ந்திருந்தன.

இப்போது குட்டிகளுக்கே பால் வைக்கத் தொடங்கினேன். என்னைப் பார்த்ததும் எதிர்த்திசையில் ஓட்டமெடுத்தன இரண்டும். நான் ‘புஸி பாஸ் பாஸ்’ என்று கூப்பிடும்போது, நான் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவதாக நினைத்த அப்பூனைக்குட்டிகள் மிரண்டு விழித்தன. என் மனைவி தூரத்திலிருந்து, ‘புஸி பாஸ் பாஸ்னா எனக்கே புரியல, புஸி பால் பால்னா அதுக்குக் கொஞ்சமாவது புரியும்’ என்று சொல்லிவிட்டு, அவளே உரக்கச் சிரித்துக்கொண்டாள். இரண்டடி எடுத்துக் கொஞ்சம் அருகில் சென்றால், பூனைக்குட்டிகள் சீறின. பாலை வைத்துவிட்டு, கையைக் காண்பித்துவிட்டு, அதன் கண்ணில் படாமல் ஒளிந்து நின்றதும், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வந்து குடித்தன. தட்டில் வைத்த பாலைக்கூடக் குடிக்கத் தெரியாத குட்டிகள் அவை. பாலைத் தரையில் தட்டிவிட்டுப் பின்பு நக்கின. என் பையன் ஜாலி ஜாலி என்று குதித்தான்.

ஒருநாள் இரவு 8 மணி வாக்கில் தொடர்ந்து ஒரு குட்டியின் மியாவ் சத்தம் கேட்டது. வெளியிலிருந்து நாயின் குரைப்புச் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். பால் எடுத்துக்கொண்டு போனாலும் குடிக்கப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாயின் விநோதமான சத்தம் திடீரென என்னுள் ஒரு படபடப்பை ஏற்படுத்த தலைதெறிக்க வீட்டின் பின்பக்கம் ஓடினேன். ஒரு கையளவே ஆகாத குட்டியொன்று சுவரோடு சுவராக ஒடுங்கி, கத்தலுடனும் சீறலுடனும் நாயைப் பார்த்துப் பயந்துபோயிருக்க, நாய் அப்பூனைக்குட்டியைப் பார்த்து விடாமல் குரைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தெருநாய் ஏன் அப்பூனைக்குட்டியைக் கடிக்கவில்லை என்பது புரியவில்லை. குட்டிப்பூனையின் சீறல் அந்நாய்க்கு விநோதமாகப்பட்டிருக்கவேண்டும். நாயின் வாயில் பட்ட பூனை பிழைப்பது அரிது. மேலும் நாய்கள் பூனையின் சீறலுக்குப் பயந்து நிற்கும் என்பதும் நிச்சயமல்ல. தெருநாய் என்பதால் எதற்கோ பயந்துகொண்டு குரைத்தலோடு நின்றுவிட்டது போல. கையில் கிடைத்த கம்பொன்றைத் தூக்கி எறிந்தேன். குரைத்துக்கொண்டு ஓடியது நாய். பூனை பிழைத்தது மறுபிழைப்புதான். அன்றிலிருந்து பூனை அங்கேயேதான் இருக்கிறது. இன்னொரு குட்டி எப்போதாவது வரும், போகும்.

இன்னொரு நாள் நான் வீட்டுக்குள் நுழைந்தவுடன் என் பையன் என்னிடம், ‘இன்னைக்கு பூனைக்குட்டி வீட்டுக்குள்ள வந்திட்டு’ என்றான். என் ஷ¥வை நக்கியது அவனுக்குப் பிடிக்கவில்லை போல. அதையே சொல்லிக்கொண்டிருந்தான். தினமும் பால் ஊற்றுவோம். நானும் என் பையனும் பூனைக்குட்டிகளின் கண்களில் இருந்து மறைந்து பின்னரே பூனைக்குட்டிகள் பாலைக்குடிக்கும். உண்மையில் பூனையின் உலகம் வேறானதுதான். ஏனென்றால் அதிகம் ஓடத் தெரியாத குட்டிகள்கூட திடீரெனப் பகலில் எங்கு காணாமல் போகின்றன, எப்போது வருகின்றன, திடீர் மழையில் எங்கு ஒதுங்குகின்றன, ஏன் திடீரென மௌனம் காக்கின்றன, ஏன் திடீரென விடாமல் கத்துகின்றன என்பது எதுவும் புரிவதேயில்லை. வீட்டில் வளரும் பூனைகள் இப்படி தானாக வளரும் பூனைகளிலிருந்து வெகுவாக வேறுபட்டவை. வீட்டில் வளரும் பூனைகள் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும்வரை விடாமல் கத்தும். ஓரளவு நம்முடன் பரிச்சயம் ஏற்பட்டபின்பு, காலையும் மாலையும் பால் ஊற்றும் சமயங்கள் நீங்கலாக அவை கத்துவதே இல்லை.

இரவில் உங்கள் படுக்கையில் படுக்கும் பூனைகள், நீங்கள் ஒருக்களித்துப் படுக்கும்போது அசைந்து கொடுத்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உங்கள் குழந்தையைப் போல, தன்னைப் பாதுகாத்துக்கொள்பவை. எக்காரணம் கொண்டும் அவை தூக்கம் கலைத்துவிட்டு ஓடுவதில்லை. அல்லது அதன் மேலேவிழும் உங்கள் கையைக் கடிப்பது இல்லை. காலை நேரங்களில் வீட்டுப் பூனைகள் அடையும் பரபரப்பு என்றென்றும் ரசிக்கத்தக்கது. ஒரு பூவையோ ஒரு ஈர்க்குச்சியையோ நீங்கள் ஆட்டும்போது, மிகக் கூர்மையாக அதைப் பார்த்து, அவை பதுங்கி -அப்படிப் பதுங்கி அமரும்போது விடாமல் வாலை ஆட்டும் அழகு ரசிக்கத்தக்கது – பின் சடாரெனப் பாயும் அதன் வேகமும் விளையாட்டு ஆர்வமும் பிரமிக்கத்தக்கது. இவற்றையெல்லாம் தெருப்பூனைகள் செய்வதில்லை. அல்லது யாரும் தெருப்பூனையிடம் இப்படி விளையாடுவதில்லை. ஒரு தெருப்பூனையை வீட்டுப் பூனையாக்குவது குறித்து யோசிக்கிறேன். ‘பூன நம்ம வீட்டுக்கு ராசிதான், ஆனாலும் எதுக்கு இப்ப’ என்ற குரல்கள் என் வீடெங்கும் ஒலிக்கும் என்பது தெரியும். அதனால் யோசனையாகவே இருக்கிறது. மட்டுமின்றி, பூனையின் ரோமங்கள் வீட்டிலிருக்கும் குழந்தையின் உடல்நிலைக்கு ஆரோக்கியமானதல்ல என்பதும் ஒரு கருத்து. இப்படிப்பட்ட யோசனைக்கிடையில் தெருப்பூனையாகவே காலம் கழித்துவருகின்றன இரண்டு பூனைக்குட்டிகள்.

இந்த இரண்டு பூனைக்குட்டிகளின் முகம்கூட அருளற்றதாகவும் பதற்றம் நிறைந்ததாகவுமே தோன்றுகிறது. பதற்றம் அதற்குத் தொடர்ந்து கிடைக்காத உணவின் காரணமாக இருக்கலாம். அருளற்ற முகம் நிச்சயம் அதன் தாயிலிருந்தும் மரபு மரபாக தொடர்ந்து அலையும் தெருப்பூனைகளிலிருந்து வந்ததாகவே இருக்கவேண்டும். நான் அப்பூனையை வீட்டுக்குள் கொண்டு வராததற்கு, இந்த அருளற்ற முகம்கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று இக்கணத்தில் உணர்கிறேன்.

முதலிலேயே தலைப்பைச் சொல்ல நினைத்தேன். ‘பொழுதுபோகாத பூனைகளும் காய்ச்சல்காரனின் கசாய முயற்சிகளும்.’ ஆம், கடுமையான காய்ச்சலன்றுதான் இக்காவியத்தை நான் இயற்றினேன்.

தொடர்புடைய சுட்டிகள்: 🙂

பின் தொடரும் பூனைகள்

Share

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

(இது அரசுக்கெதிரான நடவடிக்கை அல்ல.)

Share

புத்தகக் காட்சி – என் கவனத்தை ஈர்த்த புத்தகங்கள்

இந்தப் புத்தகக் காட்சியில் என் கவனத்தைக் கவர்ந்த புத்தகங்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். நான் பட்டியலிடும் புத்தகங்கள் இந்த ஆண்டு வெளிவந்தவை மட்டுமல்ல, வந்து பல ஆண்டுகள் ஆன புத்தகங்களாகவும் இருக்கலாம். என் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்க்க, அதைப் பட்டியலிட்டிருக்கிறேன். அதேபோல், பட்டியலிடும் எல்லாப் புத்தகங்களும் நான் வாசித்தவை அல்ல. இன்னொரு விஷயம், சில புத்தகங்கள் என் நண்பர்கள், நான் அறிந்தவர்கள் எழுதியவை. அதையும் பட்டியலிட்டிருக்கிறேன். மொத்தத்தில் இது என் சார்புள்ள பட்டியல். யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி. எனி இந்தியனின் புதிய வெளியீடுகள் நான்குமே முக்கியமான பதிவுகள் என்று நான் நினைப்பதால் அதையும் சேர்த்திருக்கிறேன்.

கயறு – தகழி சிவசங்கரன் பிள்ளை, தமிழில் சி.ஏ.பாலன் – சாகித்ய அகாடமி
மார்த்தாண்ட வர்மா – சாகித்ய அகாடமி
இருபது கன்னடச் சிறுகதைகள் – சாகித்ய அகாடமி
காந்தியம் – அம்பேத்கர் – விடியல்
இந்துயிஸத்தின் தத்துவம் – அம்பேத்கர் – விடியல்
கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும் -ஆ.சிவசுப்ரமணியன் – வம்சி
சிறுவர் சினிமா – விஸ்வாமித்திரன் – வம்சி
பாதையில்லாப் பயணம் – ப்ரமிள் – வம்சி
நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம் – காலச்சுவடு
அக்ரஹாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன் – காலச்சுவடுப்
புணலும் மணலும் – ஆ.மாதவன் – காலச்சுவடு
புத்தம் வீடு – ஹெப்சிகா ஜேசுதாஸன் – காலச்சுவடு
ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – காலச்சுவடு
நடந்தாய் வாழி காவேரி – தி.ஜா & சிட்டி – காலச்சுவடு
பேசும்படம் – செழியன் – காலச்சுவடு
இரானிய சினிமா – திருநாவுக்கரசு – நிழல்
உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் – விஜயா பதிப்பகம்
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
சுஜாதாவின் குறுநாவல்கள் – உயிர்மை
சொல்லில் அடங்காத இசை – ஷாஜி – உயிர்மை
நான் வித்யா – கிழக்கு
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் – கிழக்கு
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் – கிழக்கு
மாயினி – எஸ்.பொன்னுத்துரை – மித்ர வெளியீடு
சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் – தமிழினி
கமண்டல நதி – ஜெயமோகன் – தமிழினி
காந்தி இறுதி 200 நாள்கள் – பாரதி புத்தகாலயம்
விடுதலைப் போரில் பகத்சிங் – பாரதி புத்தகாலயம்
கங்கணம் – பெருமாள்முருகன் – அடையாளம்
புஸ்பராஜா படைப்புகள் – அடையாளம்
முட்டம் – சிறில் அலெக்ஸ் – ஆழி
உலக சினிமா – செழியன் – ஆனந்தவிகடன்
சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி – என்.சி.பி.எச்.
பண்டைய இந்தியா (பண்பாடும் நாகரிகமும்) – டிடி கோசாம்பி – என்.சி.பி.எச்.
பாரதிபுரம் – யூ.ஆர்.அனந்த மூர்த்தி – அம்ருதா
உயிர்த்தலம் – ஆபிதீன் – எனி இந்தியன்
வாஸந்தி கட்டுரைகள் – எனி இந்தியன்
வெளி இதழ்த் தொகுப்பு – எனி இந்தியன்
நதியின் கரையில் – பாவண்ணன் – எனி இந்தியன்
ஈழத்து தலித் சிறுகதைகள் – எதிர் வெளியீடு
அரவாணிகள் பற்றிய புத்தகம் ஒன்று – தோழமை வெளியீடு (சரியான பெயரை பின்னர் சொல்கிறேன். மறந்துவிட்டது.)

Share

தேவதேவனுக்கு விளக்கு விருது (2007) விழா அழைப்பிதழ்

Share

உயிர்மை ஏழு நாவல்கள் வெளியீட்டமர்வு – டிசம்பர் 2007

* மனுஷய புத்திரன் வரவேற்புரை கூற விழா தொடங்கியது.

* இந்திரா பார்த்தசாரதி தலைமையேற்றார். தமிழனவனின் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ புத்தகத்தை வெளியிட்டு, அதைப் பற்றிப் பேசினார். தான் வார்ஸாவில் வாழ்ந்த காலத்தில் பார்த்த மனிதர்களுக்கும் தற்போது தமிழவன் தன் நாவல் வழியாகக் கண்டடைந்த மனிதர்களுக்குமிடையே உள்ள வேறுபாட்டை விளக்கினார். தான் வாழ்ந்த காலத்தில் ராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டில் இருந்த நிலம், தற்போது சுதந்திரத்திற்குப் பின்னான மனநிலையை எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் தொட்டுப் பேசினார்.

* ஜீ.முருகனின் மரம் என்கிற நாவலை வெளியிட்டு திலீப்குமார் பேசினார். இயல்பாகவே திலீப்குமாரின் குரல் மிக மென்மையானது. அதனால் அவர் பேசியது பலருக்கும் கேட்கவில்லை. மரம் நாவலில் வரும் மனிதர்கள் எப்படி பாலிச்சை மிகுந்தவர்களாக தீவிரமாக உள்ளார்கள் என்பதைப் பற்றிப் பேசினார் திலீப்.

* புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘கண்யாவனங்கள்’ என்கிற மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டு பேசினார் யுவன் சந்திரசேகர். எப்போதும் சிரிப்பும் நட்புமாக இருக்கும் யுவன் மேடையை பேச ஆரம்பித்த ஐந்தே நிமிடங்கள் வளைத்துக்கொண்டார். நாவல் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொன்ன யுவன் தமிழின் மொழிபெயர்ப்பு சார்ந்த கருத்துகளைப் பற்றிப் பேசினார். அழகான இயல்பான தமிழில் அவரது பேச்சு மிகச்சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பை இரண்டாகப் பிரித்துக்கொண்டு (பொதுநீரோட்ட மொழிபெயர்ப்பு, சிற்றிதழ் சார்ந்த மொழிபெயர்ப்பு) அதன் சாதக பாதக அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்நாவல் எப்படி சிறப்பாக, மூல நூல் சொல்ல நினைக்கும் கருத்துகளைச் சிதைக்காமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார். புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் நாவலை வாசிக்க விரும்புவர்கள் கன்யாவனத்தில் தொடங்கி, அதன் வழியாக மீஸான் கற்கள், அதன் பின்னர் மஹ்சர் பெருவெளி எனச் செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். வெளிநாட்டில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதில் ஆபிதினின் இடம் ஒரு முக்கிய நாவல் என்றும் அது கீழ்த்தட்டு மக்களைப் பேசுகிறது என்றும் சொல்லிய யுவன், இந்நாவல் அதற்கு மாறாக ஒரு அராபிய முதலாளி பற்றிப் பேசுகிறது என்றும் சொன்னார். நாவலில் வெக்கையும் தகிப்பும் எப்படி உள்ளும் புறமும் மையச்சரடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

* சி.வி.பாலகிருஷ்ணனின் ‘திசை’ மொழிபெயர்ப்பு நாவலை வெளியிட்டு தமிழவன் பேசினார். 1995க்குப் பின் வந்த தமிழ் நாவலைப் படிக்க வாய்ப்பிருக்கவில்லை என்று ஆரம்பித்த தமிழவன், நாவலின் கட்டுமானம் பற்றிப் பேசினார். கடந்த பத்து வருடங்களில் தமிழர்களின் சிந்தனை, வெளிப்பாடு வரைபடம் நேர் குத்துக்கோடுகளாக ஆகிவிட்டது என்றும் அதற்கு முன்னர் கிடைமட்டமாக இருந்தது என்றும் சொன்னார். கைகளால் காற்றில் வரைந்து காட்டினார்! இந்நாவலில் வரும் திடீர் திடீர் பாத்திரங்கள் அதே மாதிரி காணாமல் போகின்றன, ஆனால் இவையே ஒரு சுவையான விஷயமாக நாவல் நெடுகிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சொன்னார். மொழிபெயர்ப்பின் கச்சிதம் பற்றியும் பேசினார்.


* எஸ். செந்தில்குமாரின் ஜீ.சௌந்தர ராஜனின் கதை என்னும் நூலைப் பற்றிப் பேசினார் நாஞ்சில் நாடன். நூலில் தெற்றுப் பார்க்கப் போவதில்லை என்று தொடங்கிய அவர், இந்நூல் இன்னும் பெரியதாக எழுதப்பட்டிருக்கலாம் என்றும் அதற்கான தேவையும் அவகாசமும் இருக்கிறது என்றும் சொன்னார். செந்தில் குமார் புதிய எழுத்தாளர் என்ற போதிலும் அவர் எடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினை இன்றைய நிலையில் கண்டிப்பாக விவாதிக்கப்படவேண்டியது என்பதால் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் சொன்னார்.

* வாமு.கோமுவின் கள்ளி நாவலை வெளியிட்டுப் பேச வந்தார் சாரு நிவேதிதா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி பத்து ஓவர்கள் இங்கிருந்துதான் தொடங்கியது! தமிழவனுடன் 1978 முதல் 1985 வரை தனக்கிருந்த ஆழமான நட்பு, தினம் தினம் கடிதம் என்று தொடங்கிய சாரு, அதை இப்படி முடித்தார். தமிழவன் எழுதிய நாவல் (பெயர் மறந்துவிட்டது, சாவு என்று எதோ வரும்!) ஒன்றைப் பற்றி சாரு கடுமையாக விமர்சிக்க அன்றோடு முடிவுக்கு வந்ததாம் தமிழவனுடனான நட்பு. இதேபோல் யுவன் சந்திரசேகரைப் பற்றியும் பேசினார். ய்வனுடன் மிக ஆழமான நட்பு இருந்ததாகவும் ஒரு நாள் பார்க்காவிட்டால் கூட தலை வெடித்துவிடும் என்கிற அளவிற்கு நட்பு இருந்ததாகவும் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் நடைபாதையின் படிகளில் அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசியதாகவும் சொன்ன சாரு, அன்றைக்கு யுவனின் சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதியைப் படித்துவிட்டு யுவனை கொண்டாடுவாராம். இந்நிலையில் யுவன் இன்னொரு கையெழுத்துப் பிரதியைத் தந்தாராம். ‘குள்ளச் சித்தன் சரித்திரம்.’ அதைப் படித்துவிட்டு மறுநாள் 15 நிமிடம் காரசாரமாக சாரு யுவனை விமர்சிக்க, அன்றோடு முடிவுக்கு வந்ததாம் யுவனின் நட்பு! அதன் பின்பு டிசம்பருக்கு டிசம்பர் உயிர்மை விழாவில்தான் பார்க்கமுடிகிறதாம். அதேபோல் வாமு கோமுவின் அறிமுகத்தையும் அவரது சிறுகதைகளை தான் கொண்டாடியதையும் சொன்ன சாரு, இந்நாவல் மீண்டும் இயல்புவாதம் என்கிற மூடப்பட்ட பிரதிக்குள் விழுந்துவிட்டது என்றும் சொன்னார். பின் நவீனத்துவமே திறந்த எழுத்து என்றும் அதுவே இன்றைக்குத் தேவை என்றும் பின்நவீனத்துவ மாணவன் என்கிற முறையில் தன்னால் இதுபோன்ற எழுத்துகளைப் படிக்கமுடிவதில்லை என்றும் சொன்ன சாரு, பின் நவீனத்துவத்தைப் பற்றியும் கொஞ்சம் விளக்கினார். கடைசியில், வாமு. கோமு இன்றோடு பேச்சை நிறுத்திவிடக்கூடாது என்றும் சொல்லி, let us be friends என்று சொல்லி உரையை நிறைவு செய்தார்.

* எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலை வெளியிட்டு பேசினார் ஜெயமோகன். தொடங்கும்போதே சாருவிற்கான பதிலாகத் தொடங்கினார். சாருவின் எழுத்தை தான் பொருட்படுத்தியது கிடையாது என்றும் எல்லாரும் எழுதுகிறார்கள், சாருவும் எழுதுகிறார் என்ற அளவில் மட்டுமே நினைத்திருந்ததாகவும் சொன்ன ஜெயமோகன், ‘ஸீரோ டிகிரி’ நாவலைப் படித்த பின்புதான் அதில் ஒரு நாவல் இருக்கிறது என்று அறிந்து, அதை சாருவிற்குக் கடிதமாகவும் அனுப்பியதாகச் சொன்னார். அதன்பின்புதான் சாரு தன்னை நண்பன்¡க நினைத்தார் என்று சொன்னார்! அதேபோல் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில், நடையில் தனக்கு கடுமையான விமர்சனம் இருந்தது என்றும் அதை சொல்லியும் இருக்கிறேன் என்றும் சொன்ன ஜெயமோகன், உப பாண்டவம் படித்தபோது, எஸ். ராமகிருஷ்ணனில் சிறந்த நாவலாசிரியர் இருப்பதை அறிந்தேன் என்றும் சொன்னார். உப பாண்டவம் முக்கியமான நாவல் என்றும் நெடுங்குருதி தமிழின் நல்ல படைப்புகளுள் ஒன்று என்று நம்புவதாகவும் சொன்னார் ஜெயமோகன். அதன்பின் எஸ்.ராமகிருஷ்ணனின் நட்பும் கிடைத்தது என்றும் சொல்லி, இது இயல்பானது என்றார். ஒரு சமயம் ஜெயமோகனை யுவன் சந்திரசேகர் தொலைபேசியில் அழைத்து, அவருடன் சாரு பேசுவதே இல்லை என்றும் ஜெயமோகன் சாருவை அழைத்து இது பற்றிச் சொல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம். ஜெயமோகன் என்ன நடந்தது என்று கேட்டதற்கு, சாரு கோணல் பக்கங்கள் புத்தகத்தைத் தந்தார், அதைப் படித்துவிட்டு கருத்து சொன்னேன், அன்றிலிருந்து சாரு பேசுவதில்லை என்றாராம் யுவன் சந்திரசேகர்! பின்பு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவல் பற்றிப் பேசினார் ஜெயமோகன். யாமம் நாவல் அத்தர் தயாரிக்கும் இஸ்லாமிய குடும்பத்தின் கதை என்றும் அது ஷாஜஹானின் அரண்மனையில் தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள், அதன் பின்பு வந்த சென்னை பட்டினம், அது சந்தித்த போர்கள் வழி நீள்கிறது என்றார். Metaphor மூலம் கட்டமைக்கப்படும் metaphysics எனப்படும் மீப்பொருண்மை வாதம் பற்றிய விளக்கிய ஜெயமோகன், அதை இந்நாவல் எப்படி வெற்றிகரமாக கையாண்டிருக்கிறது என்றும் விளக்கினார். இப்பிரபஞ்சத்திற்கு இணையான இன்னொரு பிரபஞ்சத்தை முன்வைக்கிறது இந்நாவல் என்றார். போர்ஹேயின் எழுத்தைப் பின்பற்றியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், அவரது நடையை அப்படியே பின்பற்றாமல் எழுதியிருப்பது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படுகிறது என்று சொன்ன ஜெயமோகன், இந்நாவலைப் படிக்க சிறந்த வழி, வாசனை மூலம் கண்டடைவது என்றார்.

* விழா இனிதே முடிவடைந்தது.

(குறிப்பு 1: இதிலிருக்கும் விஷயங்கள் அத்தனையும் என் நினைவிலிருந்து எழுதியது. குறிப்புகளும் எடுக்கவில்லை. அதனால் எந்த எழுத்தாளர்களாவது இப்படி பேசவில்லை என்றோ, இந்த வார்த்தையைச் சொல்லவில்லை என்றோ சொல்வார்களானால், அதுவே சரி.

குறிப்பு 2: விழாவில் பார்த்த வலைப்பதிவுலக, இணைய நண்பர்கள் – மதுமிதா, சாபு, அப்துல் ஜப்பார், நிர்மலா. எல்லாருடனும் ஹாய் சொல்ல மட்டுமே நேரம் இருந்தது.)

வெளியீட்டமர்வு நடந்த நாள்: 15.12.007 மாலை 6 மணி
இடம்: புக் பாயிண்ட், (ஸ்பென்ஸர் பிளாசா எதிரில்),சென்னை.

Share

சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்

நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்த சமயம். தங்கராமு ஐயா என்கிற வாத்தியார் ஒருவர் இருந்தார். இவரை தமிழ் வாத்தியாராக, கணக்கு வாத்தியாராக அல்லது ஆங்கில வாத்தியாராக, எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தலாம். ஏனென்றால் எதை வேண்டுமென்றாலும் எடுப்பார். எதுவுமே எங்களுக்குப் புரியாது என்பதால் அவர் எதை எப்படி எடுத்தாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்கள் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஐயாவிற்குத் திடீரென்று தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. வித்தியாசமில்லாமல் சகட்டுமேனிக்கு யார் வேண்டுமானாலும் பேசலாம் என்கிற சட்டம் அமலில் இருந்துவந்தாலும் அது உபயோகப்படாததால், புதுச்சட்டம் ஒன்றைப் பிறப்பித்துவிட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவராவது பேசவேண்டும் என்று. அதற்கு அந்த அந்த வகுப்பாசிரியர்களே பொறுப்பு. பையன்களின் பேச்சாற்றலை வளர்ப்பதைவிட தமது மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும் என்கிற வேகம் பெருகிப்போந்த நிலையில், தங்கராமு ஐயாவின் கைகளில் நான் மாட்டிக்கொண்டேன்.

அவர் எழுதிக்கொடுத்த பன்னிரண்டு பக்கங்களுக்கு மேலான சுதந்திர தின எழுச்சி உரையை மனப்பாடம் செய்தேன். மனப்பாடம் செய்யும் சக்தி எனக்கு அந்தக் காலத்தில் அதிகமாக இருந்தது. அதனால் எளிதில் மனப்பாடம் செய்துவிட்டேன். குரல் வேறு கணீரென்று இருக்கும். அதனால் எல்லாரும் என்னை உசுப்பேத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் மனப்பாடம் செய்த பகுதிகளை வீட்டில் சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தேன். வீர உரை வேறு. நானே கப்பலோட்டிய தமிழனாக மாறிவிட்டதுபோன்ற வேகத்தில், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்று ஒப்பித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் அண்ணா வந்தார். முதல் கேள்வி, ‘ஏண்டா, தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, ‘இந்த ஒரு வரியை வெச்சே பத்துவருஷம் ஓட்டுறானப்பா’ என்றார். அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் என்கிற அவரது நண்பனைக் கூப்பிட்டார். ‘நாராயணா, இவன் சொல்றதக் கேளு’ என்று சொல்லி, என்னைப் பார்த்து, ‘சொல்லுடா!’ என்றார். நான், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்.’ அடுத்த நொடி நாராயணன் சத்தமான சிரிப்புடன், ‘தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். என் ஒட்டுமொத்த உற்சாகமும் வடிந்துவிட்டது. இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. மடமடவென ஒப்பிக்கும்போது, அந்த வரி வரும்போது ஒரு துணுக்குறலுடன் மெல்லத்தான் சொல்லுவேன்.

ஆகஸ்ட் 15. வகுப்பில் எல்லார் முன்னிலும் தங்கராமு ஐயா என்னைப் பேசச் சொன்னார். சும்மா வீரவசனம் பொங்கி ஓடியது. ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்ற வரி வரும்போது லேசாகச் சிரித்துவிட்டு, முழுதும் பேசி முடித்தேன். தங்கராமு ஐயா, ‘என்ன எடையில பல்லக் காமிக்கிறவன்? ஒழுங்கா பேசமுடியாதா? சுதந்திரம்னா நக்கலா ஒனக்கு?’ என்றார்.

நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்ட்டு (ஓவிய ஆசிரியர்) என்னைக் கூப்பிட்டு, ‘நல்லா பேசறியேப்பா… இதுக்கு முன்னாடி நிறையப் பேசிரிக்கியோ?’ என்று கேட்டார். ‘இல்லை, இதுதான் முதல்ல பேசப்போறேன்’ என்றவுடன், கையில் இருந்த பத்து பைசாவைக் கொடுத்து (1987இல்) ‘வெச்சிக்கோ’ என்றார். உடனடியாக ஓடிப்போய் குச்சி ஐஸ் வாங்கித் தின்றேன். என்னுடன் படித்த நரசிம்மன் என்னையே பொறாமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

எல்லாரும் வரிசையாக கலையரங்கத்திற்குச் சென்றோம். பேசப்போகிறவர்களெல்லாம் மேடைக்கு அருகில் அமர வைக்கப்பட்டார்கள். நான் ஓரமாக அமர்ந்துகொண்டேன். லேசாக பயம் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பயப்படுகிறேன் எனவும் கேட்டுக்கொண்டேன். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். மேடை ஏறினேன். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் என் பார்வையில் பட்டது. எங்கு திரும்பினாலும் வெள்ளை வேட்டியும் நீல அரை டிரவுசரும் பச்சை தாவணியும் கண்ணில் பட, என் நாக்கு எழவே இல்லை. யாராவது ஓடிவந்து ஒரு டம்ளர் தண்ணி தரமாட்டாங்களா என்பது போலப் பார்த்தேன். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒப்பிக்கத் தொடங்கினேன்.

வகுப்பில், வீட்டில் பேசிய வீர வசனம், உச்ச ஸ்தாதி எதையும் காணோம். கடகடவென ஒப்பித்தேன். ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்கிற வரி வந்தது. அடுத்த வரி வரவில்லை. அந்த வரியிலேயே நின்றுகொண்டிருந்தேன். பால்ராஜ் ஐயா, ‘சரிப்பா, சும்மா கிடைக்கலை. அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்ற? அதச் சொல்லு மொதல்ல’ என்றார். அவ்வளவுதான். அதைச் சொல்வதையும் நிறுத்திவிட்டேன். கூட்டத்தில் கலகலவென பேச ஆரம்பித்துவிட்டார்கள். பின்னாலிருந்து யாரோ, ‘சரி போ போ’ என்று சொன்னார்கள். கீழிறங்கிவிட்டேன். ஆர்ட்டு தூரத்தில் இருந்து முறைத்தார். நரசிம்மன், ‘இதெல்லாம் தேவையா ஒனக்கு’ என்றான்.

இன்று யோசித்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. [தங்கராமு ஐயா அந்த வருடமே, நான் அவருக்கு பேப்பர் திருத்த கொடுத்த பேனாவைத் திரும்பத் தராமலேயே, மேலே போய்ச்சேர்ந்தார். நரசிம்மன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பால்ராஜ் ஐயா ரிட்டயர் ஆகி பல மாணவர்களுக்கு நன்மை செய்தார்.]

சில தினங்களுக்கு முன்பு சடகோபனின் ‘சிறை அனுபவம்’ என்கிற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். (அகல் வெளியீடு.) அப்போது மீண்டும் இந்த சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம் நினைவுக்கு வந்தது. சத்யாகிரஹியான சடகோபன் அவரது அஹிம்சைப் போராட்டத்தின் ஒருபகுதியாகச் சிறைக்குச் சென்றபோது அங்கு அவர் சந்தித்த அனுபவங்களை தொகுத்திருக்கிறார். எவ்வளவு கஷ்டப்பட்டு சத்யாகிரஹிகள் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் என்று யோசித்தபோது, ஒரு நெகிழ்வான மனநிலையில் விழுந்தேன்.

சிறையில் அவருக்குத் தரப்பட்ட உணவின் தரம், வேலையின் கடுமை, பட்ட கஷ்டங்கள், சத்யாகிரஹிகள் அல்லாத பிற கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்த சிறிய நூல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சிறையை எமலோகத்தில் இருக்கும் நரகத்துடன் ஒப்பிடுகிறார் சடகோபன். இன்று சிறை எந்த நிலையில் இருக்கும்? நிச்சயம் மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவின் நிலைமைகள் பல இடங்களில் கேள்வி கேட்கப்பட்டாலும், சுதந்திரம் என்கிற ஒன்றை அனுபவிக்கும்போது அதன் மேன்மை புரிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

.

Share