காசிக்குப் போனால் என்னெல்லாம் நடந்தால் நல்லது என்று கதை ஒன்று சுற்றும். ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்வார்கள். அதில் ஒன்று, காசியில் நீயாக எதையும் தொலைக்கக் கூடாது, ஆனால் அதுவாக தொலைந்து போனால் நல்லது.
நானும் கண்டுகொள்ளாத மாதிரி விலை குறைந்த எதையாவது தொலைத்து விட வேண்டும் என்று நினைத்தேன். என் துரதிர்ஷ்டம், ஒன்றுகூட தொலையவில்லை. செந்தூர டப்பா தொலைந்து விட்டது என்று நினைத்தேன். ஏர்போர்ட்டில் பார்த்தால் பைக்குள் பத்திரமாக அது ஒளிந்து கொண்டிருக்கிறது. இப்படியாக எதையுமே இயல்பாகத் தொலைக்காத பாவியாகிவிட்டேன். இந்தப் பாவத்தைத் தொலைக்க மீண்டும் காசிக்குப் போக வேண்டும், அதுவும் ஜெயக்குமார் செலவில். ப்ச்.
நேற்று அலுவலகத்தில் என்னுடைய இயர் பட்ஸ் டப்பியைத் திறந்து பார்த்தால், அதில் ஒன்றுதான் இருக்கிறது. இன்னொன்றைக் காணவில்லை. இத்தனைக்கும் அதை காசியில் ஒரு முறை கூட பயன்படுத்திய நினைவில்லை. கடவுளே வந்து நான் அறியாத போது ஒன்றை எடுத்துக் கொண்டு இந்தப் பாவியைப் புனிதனாக்கி விட்டார் என நினைக்கிறேன். இனி ஒற்றைக் காதுடன் வலம் வர வேண்டியதுதான்.
அம்மாவுக்குக் கடக ராசி. அதாவது நண்டு. ஆனால் அம்மாவுக்கு நண்டு, தேள் போன்ற எந்த ஜீவராசிகளையும் பிடிக்காது. யாருக்குத்தான் பிடிக்கும்? ஆனால், தேள்களுக்கு அம்மா என்றால் பிடிக்கும் என்பதுதான் பிரச்சினை. எப்படித்தான் தேடி வந்து சரியாக அம்மாவைத் தேள்கள் கொட்டுமோ தெரியாது.
1985 வாக்கில் சேர்மாதேவியில் தேள்களைத் தினம் தினம் பார்க்கலாம். நம்முடன் வீட்டில் வசிக்கும் ஒரு சக உயிரிநண்பன் மாதிரி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். அந்தக் காலத்து வீடுகளில் விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும். தெருவில் இருந்து வீட்டுக்குள் வரும் போது காலைத் துடைத்துக் கொண்டு வர சாக்குதான் போடப்பட்டிருக்கும். சிறுவயதில் எங்கோ படித்த நினைவு. சாக்குகளில் தண்ணீர் தெளித்து ஓரமாகப் போட்டு விட்டால் பத்து நாட்களில் அங்கே தேள் குட்டிகள் பிறந்திருக்கும் என்று. தேள் குட்டிகளால் குஞ்சுகளா என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டுமாம்!
அம்மாவுக்கு ஒரு வழக்கம் உண்டு. வீட்டுக்குப் பின்புறத்தில் இருக்கும் மரங்களில் இருந்து விழும் சுள்ளிகளைப் பொறுக்கி அதில்தான் வெந்நீர் போடுவாள். வெந்நீருக்கு விறகைப் பயன்படுத்தினால் கட்டுப்படியாகாது என்பது அவளது எண்ணம். வெட்டியாகப் போகும் சுள்ளிகளை வீணாக்கக்கூடாது! பொறுக்கிய சுள்ளிகளை ஓரிடத்தில் அழகாக அடுக்கி வைப்பாள். அங்கே சென்று பாதுகாப்பாக வாழத் தொடங்கும் தேள்கள்.
திருநெல்வேலி, சேர்மாதேவி, கல்லுப்பட்டி, சந்தாஸ்பத்திரி என எல்லா இடங்களிலும் இப்படி அம்மா சேமித்து வைத்தது உண்டு. காலை அம்மா வெந்நீர் போட சுள்ளி எடுக்கும்போது சரியாகத் தேள் அவள் கையில் கொட்டும். அம்மா டாக்டருக்கு ஓடுவாள். ஒரு முறை அவள் விரலில் கொட்டிய தேளின் கொடுக்கு இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். ஒரு தடவை தேள் அம்மாவின் கை விரலில் கொட்டியதில் விரல் வீங்கி கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு அந்த விரலை அசைக்க முடியாமல் இருந்தது.
வீடுகளில் பூனைகள் வளர்த்துக் கொண்டிருக்கும் போது இந்தத் தேள்களின் பிரச்சினை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனாலும் தேள்களுக்குப் பூனைகளும் பயப்படத்தான் செய்யும். பூனை உடல் விதிர்த்து ரோமங்கள் தூக்க ஏதேனும் இடத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கினால் அங்கே தேள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோம்.
ஒரு முறை சேர்மாதேவி வீட்டில் மாடியில் இருந்து என்னவோ சத்தம் கேட்க அனைவரும் மேலே போய் பார்த்தோம். அங்கே மாடியில் ஒரு பொந்திலிருந்து இன்னொரு சிறிய பொந்துக்கு வரிசையாக தேள்கள் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்து 10 தேள்களாவது இருக்கும். ஒரு பெரிய தேள். மற்றவை எல்லாம் சிறிய தேள்கள். ஆச்சரியத்துடன் பார்த்தோம். அவை எங்களைப் போடுவதற்கு முன்பே மாமா அவற்றைப் போட்டுத் தள்ளி விட்டார்.
நான் கடைசியாக நட்டுவாக்காலியை பார்த்தது திருநெல்வேலியில் சந்தாஸ்பத்திரி வீட்டில் இருந்தபோதுதான். நல்ல மழை நாளில் மரத்தின் பச்சையங்கள் கீழே சிதறி இருக்க வானம் கிளர்ந்திருந்த சமயத்தில் அங்கே கிடந்த நாகலிங்கப்பூவை எடுக்கப் போனேன். அப்போது ஏதோ ஓர் அசைவு கண்ணில் பட, பார்த்தால் அழகாக கருமையாக ஒரு நட்டுவாக்காலி. அது தேள் என்றே நினைத்தேன். ஆனால் நட்டுவாக்காலி.
பகலில் தேள் கண்ணில் பட்டுவிடுகிறது. இரவில்? இரவில் தேள்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அம்மா ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். தூங்கப் போகும் போது சங்கர கோமதி அம்மனை நினைத்துக் கொள், எந்த விஷ ஜந்துகளும் கெட்ட கனவுகளும் உன்னை அண்டாது என்பார். தன்னை எத்தனையோ முறை தேள் கொட்டி இருந்தாலும் உறக்கத்தில் இருக்கும்போது மட்டும் தேள் கொட்டியதில்லை, காரணம் கோமதி அம்மன்தான் என்பார். இன்று வரை இரவு கோமதி அம்மனை நினைத்துக் கொண்டுதான் படுத்துக் கொள்கிறேன்.
இப்போதெல்லாம் தேள்களைப் பார்க்கவே முடியவில்லை. கல்யாண்ஜி மோடில் இருந்தால் தாவிக் குதிக்கும் தேரைகளைப் பார்த்து விட முடிகிறது, தேள்களைத்தான் பார்க்க முடியவில்லை என்று எழுதலாம். ஆனால் அதை எல்லாம் கல்யாண்ஜி போன்றவர்கள் எழுதினால்தான் சரியாக வரும்.
பின்குறிப்பு: அம்மா சொன்னது, “என் மாமியார், அதான் உன் பாட்டிக்கு விருச்சிக ராசி.” நான் கேட்டது, “எப்படி ராசி மாறிப் போச்சு?”
சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில் எழுதியதை நேற்றிரவு பொழுது போகாத நேரத்தில் படித்தேன். அதைத் தொடர்ந்து, இதுவரை எழுதாத ஒன்றைப் பதிவு செய்யலாம் என்று இதை எழுதுகிறேன்.
எனி இந்தியன் பதிப்பகம் சார்பாகக் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருந்த நேரம். அலுவலகம் திநகர் பிஎம்ஜி காம்ப்ளக்ஸில் இருந்தது. நான் கம்ப்யூட்டரில் வேலையாக இருந்தேன்.
அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், பழுப்பு நிறத் தோல் பையோடு வயது உலர்ந்த மனிதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அசோகமித்திரன் என்று பிடிபட எனக்கு ஒரு சில நொடிகள் ஆயின. சட்டென்று எழுந்து, வாங்க சார் என்றேன். அங்கே இருந்து நாற்காலியில் மெல்ல அமர்ந்துகொண்டு, நீங்கதான் பதிப்பகத்தைப் பாத்துக்கறீங்களா என்று தனக்குள் கேட்டபடி, தன் தோல் பையைத் திறந்து, எனி இந்தியன் பதிப்பித்த புத்தகங்களை வெளியே எடுத்தார்.
எனி இந்தியன் பதிப்பித்திருந்த புத்தகங்களை அவர் பார்வைக்கு அனுப்பி இருந்தோம்.
அந்தப் புத்தகங்களை மேஜை மேலே அடுக்கியவர், “இத்தனை புத்தகம் படிக்கறது கஷ்டம். பணம் போட்டுக் கஷ்டப்பட்டு பதிப்பிச்சிருக்கீங்க. வீணாகக் கூடாதுன்னு நேர்ல கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றார். எனக்குப் பாவமாகப் போய்விட்டது. இந்தப் புத்தகங்களைக் கொடுப்பதற்காக இந்த வெயிலில் இவ்வளவு தூரம் வரவேண்டுமா என்று கேட்டேன். வீடு பக்கத்தில்தான், நடந்தே வந்துவிட்டேன் என்றார். இன்னும் கஷ்டமாகிப் போனது.
நாங்கள் அனுப்பிய புத்தகங்களில் தனக்குத் தேவையான ஒன்றிரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டதாகச் சொல்லி, புத்தகங்களுக்கு நன்றியும் சொன்னார்.
“புத்தகத்துல தப்பே இல்லையே.. நெஜமா தமிழ் தெரிஞ்சவங்கதான் போட்டுருக்கணும்னு நினைச்சிக்கிட்டேன்” என்றார்.
“இந்தக் காலத்துல புத்தகமெல்லாம் இன்னும் விக்குதா?” என்று கேட்டார்.
டீ குடிக்கிறீங்களா சார் என்று கேட்டபோது, தண்ணீர் மட்டும் போதும் என்று சொல்லி, குடித்துவிட்டு, வேலை நேரத்தில் உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனார்.
அசோகமித்திரனை வியந்து படித்தவனை அசோகமித்திரனே நேரில் வந்து பார்த்தது (என்னைப் பார்க்க அவர் வரவில்லைதான்) பெரிய ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
இன்னொரு முறை அசோகமித்திரனைப் பார்த்தது, கோபால் ராஜாராமின் வீட்டுத் திருமணம் ஒன்றில்.
அதன் பின்னர் புத்தகக் கண்காட்சிகளில் நான்கைந்து முறை பார்த்துப் பேசி இருக்கிறேன்.
எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கவே கூடாது என்று சுஜாதா சொன்னதை மறுத்து சாரு நிவேதிதா எழுதி இருப்பது, இவற்றை எல்லாம் நினைவூட்டியது.
உண்மையில் சுஜாதா ‘வாசகர்களும் எழுத்தாளர்களும் சந்திக்கக் கூடாது’ என்று எப்போது சொன்னார்? அதுவும் என் (எங்கள்!) சந்திப்பின் போதுதான். அதைப் பற்றி சுஜாதாவுக்கான அஞ்சலியில் 2008ல் எழுதி இருக்கிறேன்.
//தேசிகன் மூலம் நண்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். ஆறு மணிக்கு சரியாக உட்லேண்ஸ் டிரைவ்இன் வந்த அவர் மிக இயல்பாக எல்லாருடனும் பேசினார். இப்படி சிலர் சேர்ந்து அவரை வறுத்தெடுக்கிறோமே என்று எல்லாருக்குமே தோன்றினாலும், விடாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். கமல், ரஜினி, சிறுகதை, தொடர்கதை, பிரபந்தம் என ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டோம். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னார். கவிதைகள் பற்றிப் பேச்சு வந்தபோது என்னைப் பார்த்து ‘நீங்ககூட கவிதை நல்லா எழுதுறீங்களே’ என்றார். இரண்டு முறை சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு அபுல்கலாம் ஆசாத்தின் கஜல் புத்தகத்தையும் ஹரிகிருஷ்ணனின் அனுமன் வார்ப்பும் வனப்பும் புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். இனிமையாக முடிந்த அந்த சந்திப்புக்குப் பின்னர், இரண்டு நாள்கள் கழித்து வந்த ஆனந்தவிகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில், இந்த சத்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இதன் மூலம் அவருக்குக் கிடைத்த செய்தியாக ‘வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான இடைவெளி அவசியம்’ என்பதைச் சொல்லியிருந்தார். சந்திப்பில் பங்குகொண்ட அனைவருக்குமே கொஞ்சம் திக்கென்றிருந்தது. சுஜாதாவுடன் சந்த்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பலர் இடையே வந்து அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்குவதும் அவரது ஃபோன் நம்பர் கேட்பதும் அவரது வீட்டுக்கு வரலாமா என்று கேட்பதுமாக இருந்தார்கள். அவருடைய பாப்புலாரிட்டியின் காரணமாக அவர் எப்போதும் வாசகனுடன் ஒரு இடைவெளியை வைத்திருக்க விரும்பினார். அதுமட்டுமின்றி என் கணிப்பில் அவர் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். தனிமையைக் கொண்டாடுவாரோ என்று கூட நினைத்திருக்கிறேன். தேசிகனிடம் ஏன் கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா இப்படி எழுதினார் என்று கேட்டபோது, கற்றதும் பெற்றதும் பகுதியைப் படித்துவிட்டு பலர் அவருக்கு ·போன் செய்து, நாங்களும் டிரீட் தருவோம், எங்களுடனும் பேசவாருங்கள் என்று அழைத்தார்களாம், அதைத் தவிர்க்கவே சுஜாதா அப்படி எழுதினார் என்று விளக்கம் கூறினார்.//
இப்போது சாருவின் விஷயத்துக்கு வருவோம். எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கலாமா? கூடவே கூடாது. எழுத்தாளர்களுக்காக அல்ல. வாசகர்களுக்காக.
நாங்களெல்லாம் சின்ன வயசில் வானொலி வெறியர்கள். கையில் ஒரு ரேடியோவை வைத்துக்கொண்டு அதன் பட்டனைத் திருகு திருகென்று திருகி திரைப்படப்பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். என் அம்மா தன் இளம் வயதில் இரவு விழித்திருந்து ஃப்ளாஸ்க்கில் காப்பி போட்டு வைத்துக் குடித்துக்கொண்டு விழித்திருந்து பாட்டு கேட்டவர்கள். கர்நாடக சங்கீதம் என்னவென்றே என் அப்பாவுக்குத் தெரியாது என்றாலும் ரேடியோவில் எங்காவது காதில் விழும் ஆலாபனைகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியாகத் தலையை ஆட்டி, கையைத் தட்டித் தாளம் போட்டவர்.
எத்தனை கஷ்டத்திலும் என் வீட்டில் எப்போதும் ரேடியோவும் டேப் ரிக்கார்டரும் இல்லாமல் இருந்ததில்லை. சங்கராபரணம் வீட்டில் ஓடிய ஓட்டத்தில் கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்த தமிழர்கள் தெலுங்கர்களாகிவிடுவோமோ என்ற அச்சமெல்லாம் வந்ததுண்டு. திருவிளையாடல் சரஸ்வதி சபதம் வசனம் தமிழ்நாட்டைவிட எங்கள் வீட்டில் அதிகம் ஒலித்திருக்கும்.
இப்பேர்க்கொத்த பரம்பரையில் வந்த ரேடியோ சோழன் எம்எல்ஏவாகிய நானும் இதே ரேஞ்சில் ரேடியோ பைத்தியமாக இருந்தேன். கேசட் வாங்க காசில்லாததால் ரேடியோவே சரணம். திருநெல்வேலியில் இருந்து சென்னை ரேடியோ கேட்க அல்லல்பட்டதெல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. இலங்கை ஒலிபரப்புதான் எங்களைக் காப்பாற்றி உயிருடன் இருக்க வைத்தது. இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலைதான். மதுரைக்குக் குடி பெயர்ந்ததும் கொஞ்சம் சென்னை ரேடியோ கேட்கக் கிடைத்தது. டொய்ங் ட்யூயூ சத்தத்துக்கு நடுவில் சென்னை ஒலிபரப்பின் திரைப்பாடல்களைக் கொஞ்சூண்டு கேட்டோம். என்னவோ சாதித்த மிதப்பு ஒன்று வரும். காலை 8 மணிக்கு, இரவு பத்து மணிக்கு ரேடியோவில் சரியான அலைவரிசை கிடைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். ரேடியோவை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்பி, சரியாக 750 பக்கத்தில் ஒரு அலைவரிசையில் அந்த சிவப்புக் கோட்டு ட்யூனரை நிறுத்தி வைத்து… இதில் சில ட்யூனர்கள் 700ல் நிற்கும், ஆனால் 600க்கான அலைவரிசையை ஒலிபரப்பும். எனவே குத்துமதிப்பாக ஒரு கரெக்ஷன் போட்டு அந்த ட்யூனரைத் திருகி, ரேடியோ தலைகீழாக ஓரமாக நிற்க வைத்து – என்னவெல்லாமோ செய்திருக்கிறோம்.
ஒரு படப்பாடல், ஒரு பாடல் முடிவின் வார்த்தையில் தொடங்கும் அடுத்த பாடல் என்று என்னவெல்லாமோ மாயாஜாலம் செய்வார்கள். திரைப்படங்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி, ஒரு பொருள் வருமாறு சொல்வார்கள். காரில் போகும் பாடல்களாகப் போடுவார்கள். ஆனால் திருநெல்வேலி ரேடியோ ரொம்ப சுத்தபத்தம். இதையெல்லாம் செய்யாது. கடுப்பாக வரும். 85களின் பிற்பகுதியில் மதுரை ரேடியோ வந்ததும், தெளிவாகப் பாடல்கள் கேட்க ஆரம்பித்தோம். சென்னையின் அனைத்து நூதனங்களையும் மதுரை வானொலி செய்தது. காலை 8.20க்குத் துவங்கி 9 மணி வரை திரைப்படப் பாடல்கள். வீட்டில் இருந்து 8.45க்குக் கிளம்பி 9 மணிக்குப் பள்ளி அடையும்வரை தொடர்ச்சியாக எல்லார் வீட்டிலும் பாடல்கள் கேட்கும். கேட்டுக்கொண்டே நடக்கலாம். அற்புதமான உணர்வு அது.
சென்னை ஏ எம்-ஐ, சிற்றலையில் கேட்கலாம் என்று கேள்விப்பட்டபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சிற்றலை என்ற ஒன்றை அதுவரை பயன்படுத்தியது கூட இல்லை. சென்னை ஏ எம்மை சிற்றலையில் கேட்டோம். இதை எப்படிச் சரியாகச் சொல்வது என்று தெரியவில்லை. பேண்ட் 2 என்ற நினைவு. பாடல்கள் தெளிவாக இருக்கும். ஆனால் ஆனால் ஆனால், ஐயோ, கொஞ்சம் குறைந்தும் பின்னர் அதிகமாகவும் பின்னர் குறைந்தும் ஒலி கேட்கும். ஒரு மலைமீது நின்றுகொண்டு, ஊருக்குள் ஒலிக்கும் ஸ்பீக்கர் ஒலி காற்றில் உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்பது போல. கண்ணீர் வரும். அதிலும் சென்னையின் கிரிக்கெட் வர்ணனையைக் கேட்கும்போது அவுட் ஆகும்போதோ அல்லது சிக்ஸ் அடிக்கும்போதோ ஒலி உள்ளே போய்விடும். அப்புறம் அந்த ஹிந்திக்காரன் எழவெடுப்பான், என்ன சொல்கிறான் என்பது புரிந்தும் தொலையாது. ஹேண்ட்ஸ்ஃப்ரியும் கிடையாது. பெரிய ரேடியோவை காதுக்குள் திணித்து திணித்து, என்ன கடவுள் இவனெல்லாம், காதைக் கொஞ்சம் பெரியதாகப் படைத்துத் தொலைத்தால்தான் என்ன என்ற விரக்திக்குள் நுழையும்போது டெண்டுல்கர் அவுட் ஆனது புரிந்திருக்கும்.
நாஸ்டால்ஜியா கொட்டமிடும் நேரத்தில் இப்போதும் தஞ்சம் புகுவது ரேடியோவிடத்தில்தான். எல்லா ஏ எம் சானல்களும் இணையத்தில் கிடைப்பதில்லை. சென்னை மட்டும் கிடைக்கிறது. (சிம்பிள் ரேடியோ ஆப்.) திருநெல்வேலி மதுரை வானொலி ஏ எம் சானல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். முன்பு திருநெல்வேலியில் இருக்கும்போது திருநெல்வேலியைவிட திருவனந்தபுரம் ஏ எம் துல்லியமாகக் கேட்கும். கடும் கோபமாக வரும். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வைத்துத்தான் நேரம் தெரிந்துகொள்வோம். மதுரையில் பாட்டு போட்டால் 8.20. பொங்கும் பூம்புனல் என்றால் 7 என நினைவு. இலங்கை ஒலிபரப்பை நிறுத்தினால் 10. பின்னர் எதோ நேர கரெக்ஷன் போட்டு 10.30 என்றான நினைவு. வானொலியுடனேயே வளர்ந்தோம். அயர்ன் கடைக்காரர் வானொலியில் என்ன வருகிறதோ அதைக் கேட்டுக்கொண்டு அயர்ன் செய்வார். தெருவில் கட்டில் போட்டுப் படுத்துக்கொள்பவரின் தலைக்குப் பக்கத்தில் ரேடியோ இருக்கும். ரேடியோவின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு குரலுக்கும் பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள். ராஜிவ்காந்தி கொலையை அறிவித்த செல்வராஜின் (பெயர் சரியா?) குரல் இன்னும் நினைவிருக்கிறது. என்னென்ன நினைவுகள்.
இன்று சென்னை வானொலி 81ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறதாம். அனைத்து ஏ எம் சானல்களையும் இணையத்தில், ஆப்பில் கிடைக்க வைக்காவிட்டால் சீக்கிரம் மூடுவிழாதான். அப்படி மூடு விழா நடக்காமல் 100ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க வாழ்த்துகள்.
நான் காந்தி நிகேதன் பள்ளியில் (கல்லுப்பட்டி) படித்துக்கொண்டிருந்தபோது தினமும் பள்ளியைச் சுத்தம் செய்யவேண்டும். பள்ளி என்றால் வகுப்பறைகளை மட்டும் அல்ல, பள்ளியைச் சுற்றியுள்ள இடங்கள், மண் தரை எல்லாம். அங்கே நின்றிருக்கும் மரங்களில் இருந்து விழும் இலைகள், காக்கை எச்சம் என எல்லாவற்றையும் தினமும் சுத்தம் செய்யவேண்டும். அன்றெல்லாம் கடும் எரிச்சல் தந்த பணி அது. அந்தப் பள்ளியில் படித்ததற்காக ரொம்ப வருத்தமும் எரிச்சலும் பட்டேன். (இன்றும் பல்வேறு காரணங்களுக்காக அந்த நினைவு அப்படியே உள்ளது. நான் படித்ததிலேயே மிக மோசமான பள்ளி அதுதான்.) அப்போதெல்லாம் அக்காங்களும் ஐயாக்களும் (ஆசிரியர்களை இப்படித்தான் அழைக்கவேண்டும்) காந்தி எப்படி தன் வாழிடப் பகுதிகளைத் தானே சுத்தம் செய்தார், எப்படிக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்தார் என்றெல்லாம் விளக்கி, தங்கள் இடத்தைத் தாங்களே சுத்தம் செய்யவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்கள். பள்ளி காந்தியத்தை பிரம்படியில் போதித்தது. சரியான உணவு இல்லாமல், மிகவும் ஏழ்மை நிலையில் மயங்கிச் சரியும் மாணவர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்தது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் என்றே அன்று நினைத்தேன். வயது அப்போது 12 இருக்கலாம்.
பிற்பாடு, ஒரு மாணவன் தன் பள்ளியைச் சுத்தம் செய்வது அத்தனை பெரிய மோசமான காரியமில்லை என்ற எண்ணம் வந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அத்தனை கெடுபிடியில் அதைச் செய்திருக்கக்கூடாது என்று இன்றும் தோன்றுகிறது.
இன்று இந்தச் செய்தியைப் பார்க்கிறேன். இனி பள்ளிகளில் இப்படிச் சுத்தம் செய்யச் சொன்னால் பெற்றோர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது புரிகிறது. ஆசிரியர்களின் கைகளில் இருந்த பள்ளிகள் இன்று மாணவர்களின் கைகளில் உள்ளது. ஆசிரியர்களின் வேலை ஒழுங்காகப் படிப்பு மட்டும் சொல்லித் தருவது என்பதோடு சுருங்கிவிட்டது. அதற்கு மேல் கண்டித்தால் எந்த வடிவிலும் பிரச்சினைகள் எழலாம். ஆசிரியர்கள் கவனமாக இருப்பது நல்லது, அவசியமும் கூட.
நெல்லையில் 1992ம் ஆண்டு வந்த வெள்ளத்தைக் காட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து எழுந்த நாஸ்டால்ஜியாவை அடக்கமுடியவில்லை. இந்த நாஸ்டால்ஜியா குழிக்குள் விழுந்துவிடக்கூடாது என்று எத்தனை ஒத்திப் போட்டாலும் முடியவில்லை என்பதால், இதை எழுதித் தொலைக்கிறேன்.
எனக்கு 8 அல்லது 9 வயது ஆகும்போது தாமிரபரணியில் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது நாங்கள் சேரன்மகாதேவியில் இருந்தோம். சேரன்மகாதேவி ராமர் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடும் குளிரில் புயலில் ஒரு குடையை எடுத்துக்கொண்டு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெள்ள நீர் முழங்காலில் மோதிக்கொண்டிருக்க வெள்ளத்தின் வீச்சைப் பார்த்தது பேரனுபவமாக இருந்தது. தினமும் குளித்துக் கும்மாளமிடும் நதி பற்றிய பயம் ஏற்பட்டது அக்கணத்தில்தான்.
அதன் பின்னர் நான் கண்ட வெள்ளம் 1992ல். மிகப் பெரிய வெள்ளம். நாங்கள் டவுணில் சிவா தெருவில் இருந்தோம். அங்கேயே தெருவில் கணுக்கால் வரை தண்ணீர் இருந்தது. இப்போது நினைத்தாலும் மிரட்சியாக உள்ளது. எல்லார் வீட்டிலும் பாலுக்கு காசு வாங்கி, நான்கைந்து பேர் சேர்ந்து நீரில் நடந்து சென்று (நீந்தில்லா போனோம் என்று சொல்லிக்கொள்வோம்), சந்திப் பிள்ளையார் முக்கு அருகில் இருக்கும் பால் பூத்தில் பால் வாங்கி வருவோம். பால்காரர் குமார் அண்ணனும் வெள்ள நீரில் நின்றுதான் விற்பனை செய்துகொண்டிருந்தார். காப்பி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடலாம் என்று நினைக்கும் நெல்லை மக்களுக்கு குமார் அண்ணன் தான் நெல்லையப்பராகக் காட்சி தந்தார். “இவ்ளோ வெள்ளத்திலயும் நமக்காக பால் விக்கானேய்யா நம்ம குமாரு.”
இரண்டு நாளாக மின்சாரம் இல்லை. புயல். மதியம் 3 மணிக்கெல்லாம் இரவு 7 மணி போன்ற வானம். ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு கடும் குளிர்க்காற்றில் மண்ணெண்ணெய் அடுப்பில் ரவை உப்புமா அக்கா செய்துதர சூடாக உண்டோம். இப்போதும் எப்போதாவது மழை வந்து வானம் இருட்டினால் என் மனம் இதே சூடான உப்புமாவைத் தேடுகிறது. மனமும் நாக்கும் ஒரே புள்ளியில் சந்தித்துவிடும் கணங்கள் அப்படியே மனத்தில் பதிந்துவிடுகின்றன.
மெல்ல மழை நின்றது. வெள்ளம் வடியத் தொடங்கியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீடு உடைமைகளை இழந்துவிட்டார்கள். அவர்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மருத்துவத்தை அரசு வழங்கியது. எனவே எங்களுக்கு விடுமுறை. வெள்ளம் மெல்ல வடியட்டும் என்றே பிரார்த்தனை செய்துகொண்டோம்.
அப்போதுதான் தேவர் மகனும் பாண்டியனும் வெளியாகியிருந்தது. அப்போதெல்லாம் நான் கமல் ரசிகனாக இருந்தேன். ரஜினி சார் என்னை மன்னிக்க, ப்ளீஸ். ஆனால் ராஜா வெறியன். ராஜா எந்தப் பாட்டு போட்டாலும் ஹிட்டான காலம் அது. அவர் டியூன் போடும் முன்னரே சில பாடல்கள் ஹிட்டடித்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பிய நாள்கள். (அப்போதுதான் ரஹ்மான் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். இவன்லாம் எங்க சின்னப்பய என்று சொல்லிவிட்டுத்தான் ராஜா பாடலையே கேட்பேன்.) போற்றிப் பாடடி பெண்ணே பாடலும் பாண்டியனா கொக்கா கொக்கா பாடலும் ஏற்படுத்திய அவசரத்தில் அந்த இரண்டு படத்தையும் முதல் நாளே பார்க்கத் துடித்த நினைவுகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன.
தேவர் மகன் திரைப்படத்திலும் ஒரு வெள்ளம் உண்டு. அட்டகாசமான ஒளிப்பதிவு, தரமான பின்னணி இசை என அந்த வெள்ளம் தமிழ்நாட்டில் எல்லோரையும் மூழ்கடித்தது என்றாலும், திருநெல்வேலிக்காரர்கள் அதை கொஞ்சம் தனிப்பட்டமுறையில் எதிர்கொண்டார்கள். அப்போதுதான் வெள்ளத்திலிருந்து மீண்டிருந்த நெல்லை மக்கள் மீண்டும் அந்த வெள்ளைத்தையும் அதன் பாதிப்பையும் திரையில் பார்த்தபோது எதோ தங்கள் வீட்டுக்குள்ளேயே வெள்ளம் வந்தது போல ஆதங்கப்பட்டார்கள். தேவர் மகன் படத்தை எப்போது நினைத்தாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு மழைக்காலச் சூழல்தான். அந்த அளவு அந்த மழையும் வெள்ளமும் மனத்தில் தங்கிக் கொண்டது.
பாண்டியன் திரைப்படத்தை பேரின்பவிலாஸில் போட்டிருந்தார்கள். அங்கேயெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருந்தது, எனவே அங்கு படத்துக்குப் போகக்கூடாது என்று ஏகக் கெடுபிடி. ஜங்க்ஷனில் கவிதா ஷாப்பிங் செண்டரின் முதல் மாடி மூழ்கியதும் சுலோச்சனா முதலியார் பாலம் மூழ்கியதும் நெல்லையையே புரட்டிப் போட்டிருந்தது. வெள்ளம் வடிந்துவிட்டாலும் அங்கெல்லாம் போக வீட்டில் தடை. ஒருவழியாக சம்மதம் வாங்கி பேரின்பவிலாஸ் போனேன். தியேட்டரின் கவுண்ட்டர் தரையெல்லாம் வெள்ளத்தின் கசடுகள். கொஞ்சம் அச்சமாக இருந்தது. பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெள்ளம் வந்துவிடுமோ என்றெல்லாம் தோன்றியது. பாண்டியனா கொக்கா கொக்காவைப் பார்த்தபின்னர் வெள்ளம் வந்தால் நல்லது என்று தோன்றியது. மாட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த திருமலை என்ற நண்பன், ‘என்னல வெள்ளத்தப்ப படத்துக்கு வந்திருக்க, அதுவும் சாயங்கால ஷோவுக்கு? பாத்துக்கோல’ என்று வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை, நிம்மதியாக பாண்டியன் பார்த்தேன். பாண்டியனா கொக்கா கொக்கா பாடலை இப்போது கேட்டாலும் இந்த நினைவுகள் மேலெழும். ராஜாவின் எந்த ஒரு பாட்டுக்கும் இப்படி நினைவுகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இந்த வெள்ளத்தைப் பார்க்கப் போன மளிகைக்கடைச் செட்டியாரின் பையன் திரும்பி வரவில்லை என்று டவுணே அலோலப்பட்டது. செட்டியாரின் பையனும் இன்னொரு பையனும் வெள்ளத்தைப் பார்க்க சைக்கிளில் போயிருக்கிறார்கள். சைக்கிளில் டபுள்ஸ் ஏறி உட்காரும்போது அந்தப் பையன் தவறி வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அதன்பின் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இதுதான் கேள்விப்பட்டது. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதைச் சொல்லிச் சொல்லி இதை நானே நேரில் பார்த்தது போன்ற ஒரு நிலைக்கு உள்ளாகிப் போனேன். அவன் சைக்கிளில் பின்னால் ஏறும்போது கீழே விழுவது என மனக்கண்ணில் ஓடத் தொடங்கி, கொஞ்சம் மிரண்டுவிட்டேன்.
எத்தனையோ தேடியும் செட்டியார் பையனைக் காணவில்லை. மூன்றாம் நாள் அவர் வீட்டு முன்னர் பந்தல் போட்டிருந்தார்கள். யார் யாரோ துக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான்காம் நாள் வழக்கம்போல காலையில் செட்டியார் கடையைத் திறந்து வியாபாரத்துக்கு வந்திருந்தார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், இவ்ளோதானா பாசம் என்று ஏமாற்றமாகவும் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் பையன் வந்து நிற்பான் என்று ஏனோ உறுதியாக நம்பினேன்.
ஒரு சில நாள்களில் இதை மறந்துபோனேன். ஒரு நாள் செட்டியாரின் கடை மூடி இருந்தது. என்னவென்று விசாரித்தபோது, அன்று அந்தப் பையனின் பதினாறாம் நாள் காரியமாம். நான் பட்ட ஏமாற்றம் சொல்லி முடியாது. எப்படி அப்படி அவன் வரமாட்டான் என்று நம்பி காரியம் செய்கிறார் இந்தச் செட்டியார் என்று கோபமாக வந்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பையன் வரவே இல்லை.
வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அன்று கற்றிருக்கிறேன். அது என்னவென்றே தெரியாமல்.
குறிப்பு: விவேகா விவேக் என்பவர் நெல்லை மாநகரம் என்ற ஃபேஸ்புக் குழுவில் இப்படி திருநெல்வேலி போட்டோவாகப் போட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். பார்வையிட: https://www.facebook.com/groups/nellaimaanagaram/
நான் என் பையனை ப்ரீகேஜி சேர்த்தபோது எனக்குத் தேவையாகத் தோன்றியவற்றை இங்கே பதிகிறேன். இப்போது இதே அடிப்படையில்தான் என் மகளுக்கும் பள்ளியைத் தேடி இருக்கிறேன்.
* வீட்டிலிருந்து அதிகபட்சம் 2 கிமீ தொலைவுக்குள் இருக்கும் பள்ளி.
* நார்மலான கட்டணம். (வருடத்துக்கு அதிகபட்சம் 10,000. இதுவே மிக அதிகம்தான்! ஆனாலும் இப்படி ஆகிவிட்டது.) மிக அதிகக் கட்டணம் கொடுத்து எக்காரணம் கொண்டு ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கத் தேவையில்லை. 6ம் வகுப்பிலிருந்து நல்ல அரசுப் பள்ளி (ஆங்கில வழிக் கல்வி) போதும்.
* தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி – இந்த மூன்றுக்கும் இணையான முக்கியத்துவம் வேண்டும்.
* ஓரளவு நல்ல பள்ளி போதும். அந்த வட்டாரத்திலேயே சிறப்பான பள்ளி தேவையில்லை. ஏனென்றால்,
* அந்த வட்ட்டாரத்திலேயே மிக நல்ல பள்ளி என்றால் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துவார்கள் என்பது என் மனப்பதிவு. எனவே வேண்டாம்.
* குழந்தைகள் என்றால் ஒழுக்கம் இல்லாமலும் சேட்டை செய்துகொண்டும்தான் இருப்பார்கள். அவர்களை அதற்காகத் தண்டிக்க கூடாது. சேட்டை எல்லை மீறும்போது மிகக் குறைவாகத் தண்டிக்கலாம்.
* ஹோம்வொர்க் செய்யாமல் ஒரு பையன் வருவது இயல்பு. அதற்கு பெரிய தண்டனை எல்லாம் கூடாது.
* பொய் சொல்வது குழந்தைகளின் உரிமை. அதற்காக கடுப்பாகக் கூடாது.
* 70 மார்க் வாங்கினாலும் போதும், ஏன் 90 வாங்கவில்லை என்று படுத்தக்கூடாது.
* குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரையாவது சனி ஞாயிறு விடுமுறை அளிக்கவேண்டும். உண்மையில் 9ம் வகுப்பு வரையில் சனி ஞாயிறு விடுமுறை கொடுத்தாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.
* அதிகம் ஹோம் வொர்க் கொடுத்து கையை உடைக்கக் கூடாது.
* புரிந்துகொண்டு படிப்பது நல்லதுதான். முக்கியமானதும் தேவையானதும் கூட. ஆனால் மனனம் செய்ய பள்ளி வற்புறுத்தவேண்டும். மனனம் என்பது ஒரு கிஃப்ட். அதை சிறந்த முறையில் குழந்தைகளுக்கு வசப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.
* பெற்றோர்களை வரச் சொல்லி துன்புறுத்தக்கூடாது. பரிட்சை முடியும்போது பேப்பர் திருத்தித் தரும் நாள் மட்டும் வரச் சொன்னால் போதும். அதுவும் அப்பாவோ அம்மாவோ வந்தால் போதும் என்றிருக்கவேண்டும். இரண்டு பேரும் வரவேண்டும் என்று படுத்தக்கூடாது.
* எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளை பள்ளியில் விளையாட அனுமதிக்கவேண்டும். 6ம் வகுப்புக்குப் பிறகு ஒழுக்கத்தைப் போதித்தால் போதும்.
* எப்போதும் பாடப் புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்லாமல், பள்ளியில் உள்ள நூலகத்தை உண்மையாக பயன்படுத்தச் சொல்லி மாணவர்களை வற்புறுத்தவேண்டும்.
* கடவுள் வழிபாடு மிக முக்கியம். தினமும் பள்ளியில் வழிபாடு நடக்கவேண்டும்.
* இந்தியா குறித்த பெருமிதம் மிக முக்கியம். அதனை மாணவர்களுக்குத் தவறாமல் ஊட்டவேண்டும்.
* கடைசியாக எனக்கே எனக்கான ஒன்று – அது ஹிந்துப் பள்ளியாக இருக்கவேண்டும்.
இப்படித்தான் மகளையும் சேர்க்கப் போகிறேன். நாளை என் மகளுக்கு இண்டர்வியூ. வயசு 2.5 ஆகுது.
ஏ பி சி டி
உங்கப்பந்தாடி
வந்தா வாடி
வராட்டி போடி
என்று அழகாகச் சொல்லுவாள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
”வேண்டுமென்று ஒரு ஜாதியைக் குறி வைத்து, அவர்களுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அது தவறுதான். அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தச் சமூகத்தில், ஹரிஜன சமுதாய மக்கள், காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறைத்துவிடமுடியாது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை, நம் அருகிலேயே வரக்கூடாது என்ற நிலையில் முன்பு வைத்திருந்தோம். அதனால் அப்பிரிவினருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாகச் சில இடங்களில், சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் அம்மாதிரியான ஓரிரு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, ஒரு சமுதாயத்துக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவது என்பது நல்லதுமல்ல, நியாயமுமல்ல. இவ்விஷயத்தில், ராமதாஸ் கூரிய கருத்தை ஏதோ நான் வரவேற்றது போல் இங்கு பேசியவர் குறிப்பிட்டார். ஆனால், நான் அவ்வாறு வரவேற்கவில்லை.”
துக்ளக் ஆண்டுவிழாவில் சோ.
(இனி நான் சேமிக்க விரும்பும் பகுதிகளை இங்கே வெளியிட முடிவு செய்திருக்கிறேன். ஃபேஸ்புக், டிவிட்டரில் தேடுவதற்குள் தாவு தீர்ந்துவிடுவதால் இத் தாமத முடிவு.)