Archive for புத்தகப் பார்வை

இருளர்கள் ஓர் அதிசயம்

நன்றி: இட்லிவடை

இருளர்கள் ஓர் அறிமுகம், க. குணசேகரன், 75 ரூபாய், கிழக்கு பதிப்பகம்.

இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தை முதலில் பார்த்தபோதே அதன் மீதான ஓர் ஈர்ப்பு தோன்றியது. புத்தகத்தின் மிக நல்ல அட்டையும், இருளர்கள் என்னும் பழங்குடிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வமும் இவற்றிற்குக் காரணம்.

முதல் அத்தியாத்தைப் படித்தபோது, நூலாசிரியரின் ரசனையை எண்ணி வியந்தேன். அவர் விவரிக்கும் சம்பவங்கள் காட்டு வாழ்க்கை மீதான போதையைத் தந்தன. வாழ்க்கையில் இது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும் சில சமயங்களில் மனம் கொள்ளும் ஒருவித ஆசையை இப்புத்தகத்தின் முதல் அத்தியாத்தில் மீண்டும் கண்டேன். என் சுவாசக்காற்றே திரைப்ப்டடத்தில் வரும் ‘திறக்காத காட்டுக்குள்ளே’ பாடலும் காடு நாவலும், ஜெயமோகனின் சில கட்டுரைகளில் இத்தகைய ஒருவித கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே கிறக்கத்தை இந்நூலின் முதல் கட்டுரையில் என்னால் காணமுடிந்தது. இரண்டாம் அத்தியாயம் அப்படியே மேலெழுந்து, ரசனையை முற்றிலும் உதறி, சிறந்த ஆய்வுப் புத்தகமாக மாறியது. உண்மையில் ஓர் அதிசயத் தருணமாக முதலிரண்டு கட்டுரைகளுக்குள் இருந்த வேற்றுமையை உணர்ந்தேன். கிட்டத்தட்ட இதை ஒத்த உத்தியொன்றை மு.க. புத்தகத்திலும், நான் வித்யா புத்தகத்திலும் பார்த்திருக்கிறேன். என்னளவில் அவை தோல்வியான முயற்சிகள். ஆனால் இப்புத்தகம் மிக இயல்பாக இந்த மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.

முதல் அத்தியாயத்தில் கோபால் ராவ் என்பவர் இருளரைப் பற்றிச் சொல்கிறார். இரண்டாவது கட்டுரையில் குணசேகரன் தன் பார்வையைத் தொடர்கிறார். அங்கே தொடரும் தகவல் மழை இப்புத்தகம் முழுக்க எல்லாக் கட்டுரைகளிலும் கொட்டி வழிகிறது. இவ்வளவு தகவல் மழைகளை எப்படி ஆசிரியர் திரட்டினார் என்பதே பெரும் ஆச்சரியம். தகவல் மழைகள் என்றால், வெறும் அடுக்குதல் அல்ல. ஆராய்ச்சியுடன் கூடிய தகவல்கள். ஆராய்ச்சிக்கான தகவல்களும் அதற்கான நிரூபணங்களும் சங்க காலத்திலிருக்கும் பாடல்களிலிருந்து, இருளர்களின் வாழ்வில் சமீப, கடந்த காலங்களில் சந்தித்த அரசியல், சமூகப் பிரச்சினைகள் வரை நீண்டு விரிகின்றன.

பழங்குடிகளாக வாழ்ந்த மக்கள் கடற்கோள்களாலும் இயற்கைச் சீற்றங்களாலும் பல்வேறு இனக்குழுக்களாக இடம்பெயர்கிறார்கள். அங்கிருந்து கிளைக்கிறது இருளர் என்னும் இனக்குழு. அது பின்னர் சாதியாக நிலைபெறுகிறது. இருளர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு நாடோடியின் வாழ்க்கையையாகவே வாழ்கிறார்கள். காடுகளில் தேன் எடுப்பது, பாம்பு பிடிப்பது, மூலிகைகள் சேகரிப்பது என அவர்களது வாழ்க்கை தொடர்கிறது.

சங்ககால மக்கள் தங்கள் குலச்சின்னங்களாக மரத்தையும் பறவையையும் வரித்துக்கொள்வதை ஆசிரியர் விளக்கியிருப்பது சுவையானது. கீரனார், மருதனார் என எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கி, அதற்கான காரணமாக ஆசிரியர் முன்வைப்பது, அக்கால மக்களின் மனதைத் துல்லியமாகப் படம் பிடிக்கிறது. ‘அவர்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை அளிப்பது போலிருந்தது.’ இருளர்களின் பெயருக்கான காரணங்கள் பல. இருளான பகுதிகளில் வாழ்பவர்கள், இருளைப் போன்ற கருமையானவர்கள், இருள மரத்தின் சந்ததிகளாகத் தங்களைக் கருதுபவர்கள் எனப் பல காரணங்கள். அவர்கள் பேசும் மொழி இருள என்னும் மொழியைப் பேசியிருக்கிறார்கள். இருள என்னும் மொழி தமிழ் மொழியின் ஒரு கிளை. இருளர்கள் ஐவகை நிலங்களில் வாழ்ந்த தமிழர்கள். தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் வழங்கும் நிலங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருவித தனி மொழி புழக்கத்தில் உள்ளது. இன்று இருளர்கள் கன்னடம் பேசினாலும், மலையாளம் பேசினாலும், துளு பேசினாலும், அவர்கள் தமிழர்களே.

இருளர்கள் எந்நிலையிலும் தங்கள் மரபைக் கைவிடாத தீவிர இந்துக்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் வழிபாடு குலதெய்வ வழிபாடு சார்ந்தது. கன்னித் தெய்வத்தை அவர்கள் நம்புகிறார்கள். எல்லாத் திருவிழாக்களிலும், சடங்குகளிலும் கன்னித் தெய்வமே முதலிடம் பெறுகிறது. எல்லா இருளர்களின் வாழ்விலும் கன்னித் தெய்வமும், அவர்களின் மரபான திருவிழாவும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

இருளர்கள் கொண்டாடும் திருவிழா பல்வேறு படிகளைக் கொண்டது. அத்தனையையும் மிக விரிவாக, பொறுமையாக, படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியிருக்கிறார் குணசேகரன். ஆய்வு செய்து, அவர்கள் அத்திருவிழாவின் ஒவ்வொரு நிலையிலும் பாடும் பாடல்களைத் தொகுத்திருக்கிறார். இன்று மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வழிபடும் இடங்களை வைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் ஆசிரியர். தாங்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் கோயிலையும், கடவுளையும் அழைத்துக்கொண்டவர்கள் இருளர்கள்.

வழிபாட்டில் முதல் இறைவணக்கம் பாடும் பண்பாட்டைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் குணசேகரன். பாணர்களின் (பாணரின் மனைவி பெயர் பாணிச்சி என்கிறார் ஆசிரியர். இப்படி போகிற போக்கில் அவர் சொல்லிச் செல்லும் விஷயங்களின் பட்டியலிடவே முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளவும் முடியாது. அத்தனை அதிகம்) பாடல்களையும், பழங்குடிகளின் பாடல்களையும் தொடர்ந்து இன்றுவரை காப்பாற்றிக்கொண்டு வந்தவகள் இருளர்களே. இதனால் இருளர்களின் வாழ்க்கையில் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. (கம்பியில் கட்டிய சலங்கையால் இசையை எழுப்பி, ஒருவரின் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு ஆடுவதை ஆசிரியர் விவரிக்கும்போது, பின்னொலியில் இளையராஜாவின் முள்ளும் மலரும் ஹம்மிங்கான ‘எலலே’ (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்) ஒலிக்கிறது.)

இருளர்கள் திருமணத்திற்காக மேற்கொள்ளும் பெண் பார்க்கும் படலம் மிகவும் சுவையானது. (இதன் நம்பகத்தன்மை குறித்துத் தெரியாது. ஆசிரியர் சொல்வதை அப்படியே நம்புகிறேன். அவ்வளவே.) பெண் பார்க்க வரும் இருளர் அதைப் பற்றிப் பேசுவதில்லையாம். வரும்போது கையில் இரண்டு கம்பிகளைக் கொண்டு வருகிறார்கள். மற்ற எல்லா விஷயங்களையும் நீட்டி முழக்கிப் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். இப்படியே இரண்டாவது முறையும் செய்கிறார்கள். அப்போது பெண் வீட்டார்கள் ‘சென்றமுறையும் இப்படிச் செய்தீர்கள், என்ன விஷயம்’ என்று கேட்க திருமண விஷயம் தொடங்குகிறது. துளை உள்ள பானை ஒன்றை சீதனமாகத் தருகிறார்கள். இதுவே இருள ஆணுக்குப் பின்னர் எலி பிடிக்கப் பயன்படுகிறது. எலி என்பதைச் சிறந்த உணவாகச் சொல்கிறார்கள் இருளர்கள்.

இருளர்களின் இன்றைய முக்கிய வேலை பாம்பு பிடிப்பது. பாம்பு பிடிப்பதன் முகமாகவே இன்றைய இருளர்கள் அறியப்படுகிறார்கள். பாம்பின் வகையை அதன் மணத்தை வைத்தே கண்டறியும் திறமை பெற்றவர்கள் என்கிறார் ஆசிரியர். (எந்தப் பாம்பு என்ன மணம் என்கிற விவரணையும் உண்டு!) எந்தப் புற்றில் பாம்பிருந்தாலும் Y வடிவ முனை கொண்ட கழியை வைத்துப் பிடிக்கிறார்கள். கையாலும் பிடிக்கிறார்கள். காடுகள் குறைந்து வீடுகள் அதிகரிக்கும் சூழலில் இருளரின் தேவையைப் புரிந்துகொள்ளமுடியும். எந்த விதப் பாம்புக் கடிக்கும் மூலிகை மருந்து உண்டு என்கிறார்கள். மூலிகைகளின் பட்டியலையும், பாம்புக்கடிக்கான மருத்துவத்தின் பட்டியலையும் மிக விரிவாகக் கொடுத்து அசர வைக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு தாவரத்தின் தாவரவியல் பெயரையும் கொடுப்பது இன்னும் பாராட்டப்படவேண்டியது.

இருளர்களின் உரிமைப் போராட்டங்கள் பற்றியும் குணசேகரன் எழுதியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருளர்கள் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டதையும் அதற்கான போராட்டத்தையும் ஓர் இருளரே விவரிக்கிறார். இன்றைய இருளர் வாழ்வின் முக்கியப் பிரச்சினையான சான்றிதழ் வாங்குவதைப் பற்றிச் சொல்லும் ஆசிரியர், இதன் காரணமாகவே பெரும்பாலான இருளர்கள் பாம்பு, அணில் பிடிக்கும் இருளர்களாகவே தங்கிவிடுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

மிக எளிமையான தமிழ், ஆழமான பார்வை, தொடர்ச்சியான தகவல்கள் என அசர வைக்கும் ஆசிரியரின் முதல் நூல் இது என்னும்போது அந்த ஆச்சரியம் இன்னும் பன்மடங்கு அதிகரித்தது. இத்தனை முயற்சியும் உழைப்பும் காண்பித்த ஆசிரியர் இன்னும் சில விஷயங்களில் கவனம் கொண்டிருக்கலாம்.

ஒரே விஷயத்தைப் பலமுறை மீண்டும் மீண்டும் சொல்வதன்மூலம் ஏற்படும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். ஐவகை நிலங்கள் பற்றியும், இருளர்களின் மொழி பற்றியும் இது போன்ற இன்னும் நிறைய தகவல்களும் நிறைய முறை வருகின்றன. ஆரிய படையெடுப்பு என்கிற ஒரு கருத்தாக்கம் இன்று பல ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை ஒரு விவாதித்திற்குரிய விஷயமாகக்கூட ஆசிரியர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆரியப்படையெடுத்து நிகழ்ந்தது என்கிற முடிவின் அடிப்படையில் இருளர்களை தஸ்யூக்களாகவே அணுகிறார். அதேபோல், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருளர்களின் பெருமையைச் சொல்வதாக எண்ணிக்கொண்டு, இன்றைய மக்களின் நாகரிகத்தைப் பற்றிய கிண்டல்கள், ஒருவகையில் ஆசிரியரின் சமூக அக்கறையைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ள முடிந்தாலும், செயற்கைத்தனமாக ஒலிக்கிறது. இந்த செயற்கைத்தனமான எழுத்துகள், இந்நூலில் ஆசிரியர் எட்டியுள்ள உயரத்திற்குச் சற்றும் பொருந்தாதவை. சில இடங்களில் இந்த சமூக அக்கறை எல்லை மீறி ஒருவித அலுப்பைத் தருகிறது. ஆய்வுகள் ஊகங்களின் அடிப்படையிலும் நடக்கின்றன என்றாலும், இந்த ஊகம் ஓரோர் இடங்களில் அதிகமாகவிடுகிறது. ஓர் உதாரணம், இருளர்கள் தலைப்பாகை கட்டுவதைப் பற்றியது. இதை இன்றைய உலகின் மக்கள் அணியும் தலைக்கவசங்களோடு ஒப்பிடுவது கொஞ்சம் அதிகபட்ச கற்பனை, ஊகம். இருளர்களின் திருமணம் பற்றிய சிறந்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர், இருளர்களின் மறுமணம் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கலாம். (நிறைய தகவல்களை விடாமல் படித்ததில், இதை நான் பார்க்கத் தவறியிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். நன்றி.) நிறைய நூல்களையும், குறிப்புகளையும் படித்து நூலாய்வு செய்திருக்கும் ஆசிரியரின் கள ஆய்வு குறித்த விவரங்கள் இல்லை. கள ஆய்வும் செய்திருந்தால் இந்நூலில் இருளர்களின் இன்னொரு பரிமாணமும் கைக்கூடியிருக்கலாம்.

‘சோளகர் தொட்டி’ நாவலில் இருளர்கள் வாழ்வின் இன்னொரு பக்கத்தை உணரமுடியும். காட்டில் வாழ்வதால் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் நம்மைப் பதறவைப்பவை. சரியான கல்வி அறிவும், பொருளாதார சமூக முன்னேற்றமும் மட்டுமே இவர்களை முன்னேற்ற முடியும். இன்றைய இருளர்கள் தங்கள் சந்ததிகளாவது படித்து முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் உள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது முக்கியமானது. இது நிகழ அவர்களின் இஷ்டமான கன்னித் தெய்வம் அருளட்டும்.

தமிழக அரசின் சிறந்த புத்தகத்திற்கான விருதைப் பெறும் தகுதியுடைய இப்புத்தகத்தைப் போன்ற இன்னும் பல புத்தகங்களை, ஆய்வு நூல்களை குணசேகரன் எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/767/Irullargal%20:%20Orr%20Arimugam

Share

உயிர்ப்புத்தகம் – ஆன்மாவின் அந்தரங்கக் குரல்

உயிர்ப் புத்தகம், ஸி.வி. பாலகிருஷ்ணன், தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 224 பக்கங்கள், 120 ரூபாய்.

சி.வி. பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய ‘ஆயிஸிண்டே புஸ்தகம்’ என்னும் நாவலின் தமிழாக்கம் இந்நாவல். மலையாளத்தின் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாக இந்நாவல் கருதப்படுவதாக இந்நூலில் உள்ள குறிப்பு சொல்கிறது. நாவலை வாசித்தபோது, இக்குறிப்பு சொல்வது நிச்சயம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்பது புரிந்தது.

இந்நாவலில் சித்திரிக்கப்படும் தோமோ, அவரது தந்தை, தோமோவின் மகன், மகள், மனைவி என ஒவ்வொருவரின் ஆன்மாவின் குரலும் காமத்தை முன்வைத்து ஒலிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த பிரதியையும்கூட காமத்தின் மீதான ஆன்ம விசாரணை என்று வகைப்படுத்திவிடமுடியும். எங்கும் பின் தொடரும் நிழல் போல, ஒவ்வொருவரின் ஆன்மாவையும் காமம் விடாது பின் தொடர்கிறது. சில சமயம் காதல் என்னும் பூச்சோடு. பல சமயங்களில் எவ்வித பூச்சுமில்லாமல் காமம் என்கிற வேகத்தோடு.

தோமோவின் தந்தை தன் பேத்தியின் மீது தானே எதிர்பார்க்காத தருணமொன்றில் காமம் கொள்கிறார். அதற்கான தண்டனையாகத் தூக்கிட்டுச் சாகிறார். தோமோவின் மனைவி இறந்த பின்பு தோமோ திருமணம் செய்யாமல் குடித்துவிட்டுச் சீரழிகிறான். மகள் ஆனி, பாதிரியார் ஒருவருடன் ஓடிப்போகிறாள். மகன் யோஹன்னான் பள்ளியில் உடன் படிக்கும் ஒரு நண்பனுடன் நெருக்கமாகிறான். ஓரினச்சேர்க்கைக்கு அது இட்டுச் செல்லும் சாத்தியக்கூறுகள் ஒருவித பூடகத் தன்மையுடன் சொல்லப்படுகின்றன. பின்பு அவனுக்கு ராஹேல் என்னும் பெண்ணுடன் உடலுறவு ஏற்படுகிறது. அது காதலாக மாறும் முன்பு, ராஹேல் கன்னியாஸ்த்ரி மடத்திற்குச் செல்கிறாள். ஸாரா என்னும் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாத சகரியா கணவனாகிறான். அவளை விடாது காதலிக்கும் யாக்கோப் குடித்துவிட்டு சாகிறான். எவ்விதப் பிடிப்பும் இன்றி அலையும் யோஹன்னான் அவளுடன் உறவு கொள்ளத் தொடங்குகிறான். இந்நிலையில் யோஹன்னின் தந்தை தோமோவிற்கு, மனைவி இறந்து பல வருடங்களுக்குப்பின்பு திருமணம் செய்யும் எண்ணம் வருகிறது. கணவன் இல்லாத ஸாராவைத் திருமணம் செய்ய நினைக்கிறான். தன் மகனுக்கும் ஸாராவிற்கும் இருக்கும் தொடர்பு தெரிந்திருந்தும்கூட, ஸாராவின் அழகு அவனைக் கட்டிப் போடுகிறது. அவள் திருமணத்திற்குச் சம்மதிக்க மறுப்பதால், அவளைக் கொலை செய்கிறான். யோஹன்னான் தனித்து விடப்படுகிறான். இறந்துபோன அவனது தாத்தா, தாய், ஸாரா என எல்லோரையும் ஆன்மாவாகக் காண்கிறான்.

கதையின் நடை ஒருவித மாந்திரிக யதார்தத் தன்மையோடு விவரிக்கப்படுகிறது. இத்தன்மையை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தாமல், தேவையான இடங்களில், ஆன்மாவின் குரலாக வெளிப்படுத்துவதில் ஆசிரியர் கவனமாயிருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஒவ்வொரு முக்கியமான நிகழ்வின்போதும், அதையொத்த விவிலியக் குறிப்புகள் வருகின்றன. பெரும்பான்மையான குறிப்புகள் நடைமுறை வாழ்விற்கும் விவிலியத்திற்குமான முரணாகவே முன்வைக்கப்படுகிறன.

பாதிரியார் ஒருவர் காதல் கொண்டு ஒரு பெண்ணோடு ஓடிப்போவது ஒரு முக்கிய விஷயம். அதை பெரிய பாதிரியார் கடைசியில் ஏற்கிறார். பிரம்மச்சரியம் என்கிற விஷயம் குறித்து நான் பலமுறை நினைத்திருக்கிறேன். கடுமையான பிரம்மச்சரியம் என்பது சாத்தியம்தானா என்பது புரியவில்லை. பாதிரியின் காதல் அவரது கட்டுக்களை உடைக்கிறது. அவர் இயல்பான வாழ்க்கையைத் தேடி ஓடுகிறார். பாதிரியாவதற்கான பயிற்சியில் கடுமையான பிரம்மச்சரிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட நிர்ப்பந்திக்கப்படுவது பற்றிய குறிப்புகளும் உள்ளன. பாதிரியார்கள் இருவருக்கிடையேயான காமம் பற்றிய உரையாடல் முக்கியமானது. ‘கன்னியான தன் மகளைக் கல்யாணம் பன்னிக்கொடுக்கிறவனும் நன்மை அடைகிறான், கொடுக்காதவனும் அதே நன்மையை அடைகிறான்.’

தோமோவின் மகனான யோஹான்னனே மிக முக்கிய பாத்திரம். முக்கியமான விஷயம் அவன் வயது. கடைசியில் ஸாராவுடன் உறவுகொள்ளும்போது அவன் வயது 17. ஸாராவின் வயது 36. அதேபோல் மேரி – நைநான் உறவு. அவர்கள் உறவு கொள்கிறார்கள். ஆனால் நைநான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். ஸாராவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான பிரிஜித்தாம்மாவும் தன்னைவிட ஒரு சிறிய பையனிடம் உறவு கொள்ள முயல்கிறாள். கட்டுக்கடங்காத காமத்தின் பிரதிகளாக இவர்கள் அனைவரும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஸாராவிற்கும் யோஹான்னானுக்கும் இடையேயான முறை தவறிய உறவை அறியும் பெரிய பாதிரியார் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறார். அவரால் யோஹன்னனையோ ஸாராவையோ கட்டுப்படுத்தமுடியவில்லை. அதற்கான வார்த்தைகளோ வழிகளோ அவரிடம் இல்லை. அவருக்கு எளியதும் பணிவதும் பிரார்த்தனை மட்டுமே. அவர் பிரார்த்தனையின் வழியாக அடையும் மன அமைதியை, யோஹான்னனும் ஸாராவும் காமத்தின் மூலம் கண்டடைகிறார்கள். அதுபோன்ற காமமே ஒரு பாதிரியாரை ஒரு பெண்ணோடு ஓடச் செய்கிறது.

இதில் வரும் எல்லா முக்கியக் கதாபாத்திரங்களில் ஏதேனும் ஒரு தடவையேனும் தங்கள் உயிரின் ரகசியக் குரலை எதிர்கொள்கிறார்கள். ஒருவித அமானுஷ்யத் தன்மையோடோ அல்லது அது தங்களுக்கான குரல்தான் என்கிற தெளிவோடோ அதை எதிர்கொள்கிறார்கள். யோஹான்னான் அக்குரலை எதிர்கொள்கிறான். தோமோ அக்குரலைக் கண்டு ஓடுகிறான். ஸாரா அக்குரலைப் புறக்கணித்து தனக்கான பாதையைத் தேர்கிறாள். ஆனி அக்குரலோடு உடன்படுகிறாள். உயிரின் குரல் யாரையும் விடுவதில்லை.

இந்நாவலை வை. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார். சிக்கலான மொழியுடைய நாவலை மிக நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். இடையிடையே விவிலியத்திலிருந்து வரும் குறிப்புகளை அப்படியே தமிழில் தந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். சில சமயங்களில் எந்த இடத்தில் குறிப்பு வருகிறது, எந்த இடத்தில் நாவலின் பிரதி வருகிறது என்பதைப் பிரிக்கமுடியவில்லை. சில மலையாள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். (ரூபவதி, பரிகாரப் பிரதக்ஷணம், வரிஷித்தார், ஸாரா என்ற பெயரை ஸாரே என்று சொல்லியிருப்பது, ஆகர்ஷித்தன, குசலப்ரச்னம் இப்படிப் பல.) இவற்றைத் தமிழில் எழுதியிருக்கலாம். அதேபோல் திடீரென ஆங்கில வார்த்தைகள் வருகின்றன. (லீவு நாள், ரெடி ஆயின போன்றவை.) மூலத்திலேயே இப்படி இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். அதேபோல் குற்ற சம்மதம் என்னும் வார்த்தைக்கு பாவ மன்னிப்பு என்றும் கடவுளே என்று அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல்லுக்கு ஆண்டவரே என்னும் மாற்றியிருந்தால், நாவலின் கிறித்துவத்தன்மை கூடியிருக்கும். பொருட்படுத்தத்தகாத இந்த மிகச் சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படிக்க எவ்விதத் தடங்கலுமில்லாத, அழகான மொழிபெயர்ப்பு இது.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/648/Uyir%20Puththagam

.

Share

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு ஜோதி நரசிம்மனின் பதில்

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு, ஜோதி நரசிம்மன் உயிரோசை.காமில் தன் பதிலைச் சொல்லியுள்ளார். என் விமர்சனம் அவரைப் புண்படுத்தியிருப்பது புரிகிறது. அவர் கடைசியில் சைன் – ஆஃப் செய்யும்போது பெயரோடு ‘அடியாள்’ என்று போட்டிருக்கவேண்டாம். அடியாள் என்பது புத்தகத்தின் பெயராக இருந்தாலும், என்னவோ உறுத்துகிறது.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=596

உயிரோசையில் அடியாள் நூல் விமர்சனம் படித்தேன். நன்றி. என் படைப்பை விமர்சனம் செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் என் எழுத்துப்பணி சிறப்படைய உயிரோசை வாழ்த்துவதாகவே உணர்கிறேன். அந்த விமர்சனத்தில் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐயத்திற்கு நான் பதில் சொல்−யே ஆக வேண்டும். அது உங்களை சமாதானப்படுத்திக்கொள்ள அல்ல. என்னை செப்பனிட்டுக் கொள்ள.

ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார் அதில் எந்தவித வலியும் தெரியவில்லை. தெரிவதில்லை. என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள் அந்த சம்பவத்தை, வலியை உள்வாங்கிக் கொண்டுதான் அவற்றை வெளிப்படுத்தியுள்ளேன். படிக்கும்போது வலியை உணரவேண்டும் என்று எழுதியிருந்தால் அது சம்பந்தப்பட்டவர்களை ஆறுதல் அடைய செய்யாது. மாறாக கோபம் ஏற்படச் செய்யும். அவர்களை சமூகம் எப்படி குற்றவாளியாக மீண்டும் மீண்டும் பார்க்கிறதோ, அப்படியே நானும் பார்க்க நேரிடும். மாறாக அது எனது பார்வைக்கும் அனுபவத்திற்கும் எதிராக இருக்கும் என்பதால் நீங்கள் சொல்லியிருக்கும் அந்த வலியை எழுத்துகளுக்குள் வைக்கவில்லை. மேலும் ஒரு விசாரணைக் கைதியாக குறைந்த நாட்களிலே என்னை வாசிப்புக்கும், எழுதுவதற்கும் தூண்டியது சிறை அனுபவம். அந்த சிறை எத்தனையோ கைதிகளை மீண்டும் மீண்டும் குற்றவாளியாக உருவாக்கியிருந்தாலும் என்னைப்போன்ற சில சமூக ஆர்வலர்களை உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 15 நாட்களில் ஒரு சிறையை முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது என்பது போல் எழுதியுள்ளீர்கள். அது நான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த புத்தகத்தை என்னுடைய எட்டு ஆண்டுகள் அடியாள் அனுபவத்தில் நான் பட்ட அவமானங்களை, துயரங்களை, சொல்லமுடியாத, சகிக்கமுடியாதவைகளின் ஊடாக உணர்ந்து யாரையும் பாதிக்காமல் தொகுத்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நான் ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் கைதியாக சிறை செல்லவில்லை. விடுதலைப் பு−களின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற அமைதி பேரணியில் பங்கேற்று தடையை மீறி பேரணிச் செல்ல முயன்று கைது செய்யப்பட்டேன். நான் இருவேறு நிலைகளிலும் 36 நாட்கள் மத்திய சிறையில் இருந்துள்ளேன். ஹரன்பிரசன்னா போன்றவர்கள் ஓரிரு நாளாவது மத்திய சிறைக்கு சென்றால் என்னைவிட மிகுந்த அனுபவம் பெறமுடியும். அடியாளை விட பெரிய தொகுப்பு எழுத முடியும். மூதோர் மொழிபோல சிறை மனிதனை சிந்திக்கவைக்கும் அறைதான்.

ஜோதி நரசிம்மன் (அடியாள்)

Share

அடியாள் – சிறையும் சிறை சார்ந்த இடமும்

சிறையில் நேரும் அனுபவங்களைப் பற்றி, இதற்கு முன்னர் நான் படித்திருந்த புத்தகம் ‘சிறை அனுபவங்கள்’. (அகல் வெளியீடு.)  அது இந்திய விடுதலைக்கு முன்னர் உள்ள சிறை சார்ந்த விஷயங்களைச் சொல்லியது. மலேசியச் சிறைகளில் நிகழும் கொடுமைகளைப் பற்றி நாளிதழ்களில், வார இதழ்களிலும், அக்கொடுமையை அனுபவித்தவர்கள் கொடுத்த நேர்காணலை வாசித்திருக்கிறேன். ‘சோளகர் தொட்டி’ நாவலில் சிறை போன்றதொரு அமைப்பில் கைதிகள் படும் அவஸ்தை பற்றிய, உயிர் கொல்லும் வர்ணனை உள்ளது. உயிர்மை வெளியிட்டிருக்கும், சாரு நிவேதிதாவின் புத்தகம் ஒன்றிலும் (தப்புத் தாளங்கள்) சிறை அனுபவங்கள் பற்றி வாசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் அப்பாவிகளின் குமுறல் என வகைப்படுத்தலாம். ஒரு அரசியல் அடியாளாக இருந்த ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படிப்பது இதுவே முதல்முறை.

ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த ஜோதி நரசிம்மன் அக்கட்சியின் அடியாளாக இருக்கிறார். அக்கட்சிக்காக ஒரு அடிதடி வழக்கில் கைதாகிச் சிறை செல்லுகிறார். சிறை என்றால் தண்டனையாக அல்ல, விசாரணைக் கைதியாக. பத்திலிருந்து பதினைந்து நாள்கள் சிறையில் காணும் விஷயங்களைப் பற்றியும், அங்கே உள்ள கைதிகளைப் பற்றியும் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். பிணைவிடுதலை (ஜாமீன்) கிடைத்து வெளியில் வரும் அடியாள் அரசியலில் ஆர்வம் கொள்கிறார். தமிழர் தேசிய இயக்கத்தில் சேர்கிறார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 26 பேருக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கிறது. அதை எதிர்த்து நடந்த பேரணியில், பழ. நெடுமாறன் தலைமையில் கலந்துகொள்கிறார். தடையை மீறிப் பேரணி என்பதற்காக, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட எல்லோரும் கைதாகிறார்கள். இவரும் கைதாகிறார். மீண்டும் சிறை. மீண்டும் அனுபவங்கள். அரசியல் கைதியாக அவர் சிறை செல்லும்போது, நெடுமாறன், வைகோவைப் பற்றிச் சொல்கிறார். வைகோவை ஆயுள்தண்டனைக் கைதிகள் கெரோ செய்வது போன்ற சுவாரஸ்யமான விவரங்கள் வருகின்றன. முதல் வழக்கில் கைதானதற்கும் இவ்வழக்கில் கைதானதற்கும் உள்ள வித்தியாசங்களை நினைத்துப் பார்க்கிறார். இன்னும் முதல் வழக்கே முடியாத நிலையில் அடுத்த வாய்தாவை எதிர்நோக்கியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.

தான் குற்றம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒருவர் பார்வையில் சிறையின் அனுபவங்கள் விவரிக்கப்படுவது முக்கியமானது. அரசியல் அடியாளாக ஜோதி மாறியது, நெருக்கடியால் அல்ல, தேவையற்ற சகவாசங்களாலேயே என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். நல்ல குடும்பம், நல்ல தந்தை, தாய் என அவருக்கு அமைந்திருந்தாலும், அந்த அரசியல் அடியாள் என்கிற போர்வையிலிருந்து அவரால் வெளிவரமுடியவில்லை. ஆனால் சிறையிலிருந்து வெளிவரும் அவர் அரசியல் அடியாளாகத் தொடர விரும்பவில்லை. சிறையில் அவர் படிக்கும் புத்தகங்கள் அவரைப் புரட்டிப் போடுகின்றன. அரசியலுக்குச் செல்கிறார். கொள்கைக்காகச் சிறை செல்வது அவருக்குப் பிடித்திருக்கிறது.

சிறையில் ஜோதி சந்திக்கும் சிறைக்கம்பிகள் கூடத் தனக்கெனக் கதையை வைத்துள்ளன. கைதிகள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்கள். தவறாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களிலிருந்து, கொலை, கொள்ளையைச் செய்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு கதையும் காரணமும் இருக்கின்றன.

சிறையில் எளிதாகத் தொலைபேசி கிடைக்கிறது. சிறையிலில்லாமல் பொதுவில் வாழும் மனிதர்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தைவிடச் சிறையில் பணப்புழக்கம் அதிகம் இருக்குமோ என்ற யோசிக்க வைக்கிறது ஜோதி விவரிக்கும் சம்பவங்கள். நாடெங்கும் ஊழல், சிறையெங்கும் ஊழல். சிறையில் இருக்கும் ஒருவர் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் பேசமுடிகிறது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை. சிறைக்கைதிகளை நேர்காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தரும் பணம் இதற்குப் பெரிதும் உதவுகிறது. ஜோதியின் சிறை விவரணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ‘மகாநதி’ திரைப்படம் மட்டுமே யதார்த்தத்தோடு ஒட்டிப்போகிறது. அதேபோல் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் வரும், கருணாஸ் பாடும் கானாப்பாட்டு. சிறையில் இரவுகளில் ஏதேனும் ஒரு அறையிலிருந்து எப்படியும் ஒரு கானாப்பாட்டு கேட்கும் என்கிறார் ஜோதி நரசிம்மன்.

சிறையில் ஜோதி அரசியல் கைதிகள் என்றில்லாமல், ஒரு ‘ஆன்மிகக் கைதியையும்’ சந்திக்கிறார். பிரேமானந்தா. பல்வேறு கைதிகள் மனிதாபிமானம் மிக்கவர்களாக ஜோதிக்கு அறிமுகமாவது போல, பிரேமானந்தா பற்றியும் உயர்வான கருத்துகளே ஜோதியால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் எடுக்க வசதியில்லாத பல விசாரணை கைதிகளுக்கு, பிரேமானந்தா உதவியதாகச் சொல்கிறார் ஜோதி.

விசாரணைக் கைதிகளின் முக முக்கியப் பிரச்சினை சாப்பாடு. ஜோதியின் விவரணையில் சாப்பாட்டிற்கு மிக முக்கிய இடம் உள்ளது. வீட்டில் வேண்டியதைக் கேட்டுச் சாப்பிடும் சுதந்தரம் முதல்நாளே சிறையில் பறிபோகிறது. நாக்கைப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. கைதிகளுக்கு அசைவ உணவு அந்தச் சமயத்தில் இல்லை என்பதால், பெருச்சாளியை சமைத்து உண்கிறார்கள். இப்போது அரசு கைதிகளுக்கு வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்குகிறது.

சிறையில் இருக்கும் கைதிகளின் மீதான அணுகுமுறையில் கொஞ்சம் விவாதம் தேவைப்படுகிறது. சிறைக்கதிகள் அப்பாவிகள் அல்ல என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களுக்குத் தரப்படும் அடிப்படை வசதியைப் பற்றி அரசு விவாதிக்கவேண்டியது தேவையான ஒன்றே. இப்புத்தகத்தைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனை இதுவே.

இந்தப் புத்தகத்தின் குறைகளாக்ச் சில விஷயங்களைச் சொல்லலாம். ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார். அதில் எவ்வித வலியும் தெரிவதில்லை. மாறாக, பார்த்தவற்றைச் சொல்கிறார் என்கிற எண்ணமே மேலோங்குகிறது. மேலும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ என்று சொல்லும் ஜோதி, சிறையில் இருந்ததே மொத்தம் பத்திலிருந்து இருபது நாள்களுக்குளேதான் இருக்கும். அதுவும், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட விசாரணைக் கைதியாக மட்டுமே. மேலும் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லுமளவிற்கு ஜோதியின் வாழ்க்கை அப்படி சம்பவங்களால் நிறைந்து வழியவில்லை, அல்லது அவர் சொல்லவில்லை. ஒருமுறை கூட காவல்துறையினரால் அடிக்கப்படவில்லை. கொடூரமாக தண்டனை கொடுக்கப்படவில்லை. இப்படி எவ்வித அனுபவமும் இல்லாமல் இவர் பார்த்தவற்றை மட்டும் விவரிக்கும்போது, அதை இவர் கண்டவற்றைச் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடிகிறதே ஒழிய, ‘ஒப்புதல் வாக்குமூலமாக’ உணரமுடியவில்லை. நிறைய இடங்களில் இது தன் வாழ்க்கையைச் சொல்லுதல் என்கிற இடத்திலிருந்து விலகி, கதை சொல்லும் பாணியைப் பற்றிக்கொள்கிறது. இதனால் தீவிரத்தின் முனை மழுங்கடிக்கப்படுகிறது.

இப்புத்தகத்தில் கால அறிவு சுத்தமாக இல்லை. எந்த நேரத்தில் எது நடைபெறுகிறது என்கிற விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிகழ்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால், விஷயங்களை வைத்து அது எப்போது நடந்தது என்பதனை யோசித்து, அக்காலகட்டத்தின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளை நினைவிற்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து யாரேனும் இப்புத்தகத்தைப் படித்தால் குழப்பமே மிஞ்சும்.

ஒப்புதல் வாக்குமூலம் என்கிற வார்த்தைக்கு பலம் சேர்க்கும் வகையில், ஜோதி எக்கட்சியைச் சேர்ந்தவர், ஆளும் கட்சி எது, எதிர்க்கட்சி எது என்பன போன்ற விவரங்களைச் சொல்லியிருந்தால், அது உண்மையில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக ஆகியிருந்திருக்கும். எக்கட்சியிலும் அடியாள்கள் இல்லாமல் இருக்கமுடியாது என்கிற உண்மை எல்லோரும் அறிந்திருக்கிற நிலையில், இதை வெளியில் சொல்வதால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. இதைச் சொல்லாததற்கு ஜோதிக்கும் வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

இது போன்ற புத்தகங்கள் கைதிகளுக்கு ஒருவித புனித பிம்பத்தைக் கட்டமைக்க வாய்ப்பளிக்கின்றன. ஜோதிக்கும் இது நிகழ்கிறது. ஆனால் ஜோதி பெரிய குற்றவாளியாகவோ, கொலையாளியாகவோ இல்லாததால், இது அதிகம் உறுத்தவில்லை. இல்லையென்றால், ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் இங்கே ஒரு புனிதப்பிம்பம் ஏற்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் இவருக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

ஜோதியை அவர் வாசித்த புத்தகங்கள் மாற்றுகின்றன என்று வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது. ‘எனி இந்தியனி’ல் இருந்தபோது ஒரு கைதியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரங்கள் என்கிற புத்தகத்தைக் கேட்டிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர் விசாரணைக் கைதியா, தண்டனைக் கைதியா என்கிற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புத்தகம் ஒரு கைதியை இன்னுமொருமுறை மாற்றக்கூடும்.

இன்னும் வழக்கு முடியாத நிலையில் ஜோதியை அரசியல் அணைக்காமல் இருந்து, அவர் விரும்பும் அவர் மகள் தமிழினி அணைக்கட்டும்.

(அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம், ஜோதி நரசிம்மன், 70 ரூபாய், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.)

Share

அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலங்கள்’ புத்தகத்தின் விமர்சனம் உயிரோசையில் வெளியாகியுள்ளது.

சிறையில் நேரும் அனுபவங்களைப் பற்றி, இதற்கு முன்னர் நான் படித்திருந்த புத்தகம் ‘சிறை அனுபவங்கள்.’ (அகல் வெளியீடு.) அது இந்திய விடுதலைக்கு முன்னர் உள்ள சிறை சார்ந்த விஷயங்களைச் சொல்லியது. மலேசியச் சிறைகளில் நிகழும் கொடுமைகளைப் பற்றி நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், அக்கொடுமையை அனுபவித்தவர்கள் கொடுத்த நேர்காணலை வாசித்திருக்கிறேன். ‘சோளகர் தொட்டி’ நாவலில் சிறை போன்றதொரு அமைப்பில் கைதிகள் படும் அவஸ்தை பற்றிய, உயிர் கொல்லும் வர்ணனை உள்ளது. உயிர்மை வெளியிட்டிருக்கும், சாரு நிவேதிதாவின் புத்தகம் ஒன்றிலும் (தப்புத் தாளங்கள்) சிறை அனுபவங்கள் பற்றி வாசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் அப்பாவிகளின் குமுறல் என வகைப்படுத்தலாம். ஒரு அரசியல் அடியாளாக இருந்த ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படிப்பது இதுவே முதல்முறை.

ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த ஜோதி நரசிம்மன் அக்கட்சியின் அடியாளாக இருக்கிறார். அக்கட்சிக்காக ஒரு அடிதடி வழக்கில் கைதாகிச் சிறை செல்லுகிறார். சிறை என்றால் தண்டனையாக அல்ல, விசாரணைக் கைதியாக. பத்திலிருந்து பதினைந்து நாள்கள் சிறையில் காணும் விஷயங்களைப் பற்றியும், அங்கே உள்ள கைதிகளைப் பற்றியும் அவர் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். பிணைவிடுதலை (ஜாமீன்) கிடைத்து வெளியில் வரும் அடியாள் அரசியலில் ஆர்வம் கொள்கிறார். தமிழர் தேசிய இயக்கத்தில் சேர்கிறார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 26 பேருக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கிறது. அதை எதிர்த்து நடந்த பேரணியில், பழ. நெடுமாறன் தலைமையில் கலந்துகொள்கிறார். தடையை மீறிப் பேரணி என்பதற்காக, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட எல்லோரும் கைதாகிறார்கள். இவரும் கைதாகிறார். மீண்டும் சிறை. மீண்டும் அனுபவங்கள். அரசியல் கைதியாக அவர் சிறை செல்லும்போது, நெடுமாறன், வைகோவைப் பற்றிச் சொல்கிறார். வைகோவை ஆயுள்தண்டனைக் கைதிகள் கெரோ செய்வது போன்ற சுவாரஸ்யமான விவரங்கள் வருகின்றன. முதல் வழக்கில் கைதானதற்கும் இவ்வழக்கில் கைதானதற்கும் உள்ள வித்தியாசங்களை நினைத்துப் பார்க்கிறார். இன்னும் முதல் வழக்கே முடியாத நிலையில் அடுத்த வாய்தாவை எதிர்நோக்கியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.

தான் குற்றம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒருவர் பார்வையில் சிறையின் அனுபவங்கள் விவரிக்கப்படுவது முக்கியமானது. அரசியல் அடியாளாக ஜோதி மாறியது, நெருக்கடியால் அல்ல, தேவையற்ற சகவாசங்களாலேயே என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். நல்ல குடும்பம், நல்ல தந்தை, தாய் என அவருக்கு அமைந்திருந்தாலும், அந்த அரசியல் அடியாள் என்கிற போர்வையிலிருந்து அவரால் வெளிவரமுடியவில்லை. ஆனால் சிறையிலிருந்து வெளிவரும் அவர் அரசியல் அடியாளாகத் தொடர விரும்பவில்லை. சிறையில் அவர் படிக்கும் புத்தகங்கள் அவரைப் புரட்டிப் போடுகிறது. அரசியலுக்குச் செல்கிறார். அவர் கொள்கைக்காகச் சிறை செல்வது பிடித்திருக்கிறது.

சிறையில் ஜோதி சந்திக்கும் சிறைக்கம்பிகள்கூட தனக்கென கதையை வைத்துள்ளன. கைதிகள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்கள். தவறாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களிலிருந்து, கொலை, கொள்ளையைச் செய்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு கதையும் காரணமும் இருக்கிறது.

சிறையில் எளிதாக தொலைபேசி கிடைக்கிறது. சிறையிலில்லாமல் பொதுவில் வாழும் மனிதர்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தைவிட சிறையில் பணப்புழக்கம் அதிகம் இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது ஜோதி விவரிக்கும் சம்பவங்கள். நாடெங்கும் ஊழல், சிறையெங்கும் ஊழல். சிறையில் இருக்கும் ஒருவர் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் பேசமுடிகிறது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை. சிறைக்கைதிகளை நேர்காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தரும் பணம் இதற்குப் பெரிதும் உதவுகிறது. ஜோதியின் சிறை விவரணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ‘மகாநதி’ திரைப்படம் மட்டுமே யதார்த்தத்தோடு ஒட்டிப்போகிறது. அதேபோல் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் வரும், கருணாஸ் பாடும் கானாப்பாட்டு. சிறையில் இரவுகளில் ஏதேனும் ஒரு அறையிலிருந்து எப்படியும் ஒரு கானாப்பாட்டு கேட்கும் என்கிறார் ஜோதி நரசிம்மன்.

சிறையில் ஜோதி, அரசியல் கைதிகள் என்றில்லாமல், ஒரு ‘ஆன்மிகக் கைதியையும்’ சந்திக்கிறார். பிரேமானந்தா. பல்வேறு கைதிகள் மனிதாபிமானம் மிக்கவர்களாக ஜோதிக்கு அறிமுகமாவது போல, பிரேமானந்தா பற்றியும் உயர்வான கருத்துகளே ஜோதியால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் எடுக்க வசதியில்லாத பல விசாரணைக் கைதிகளுக்கு, பிரேமானந்தா உதவியதாகச் சொல்கிறார் ஜோதி.

விசாரணைக் கைதிகளின் மிக முக்கிய பிரச்சினை சாப்பாடு. ஜோதியின் விவரணையில் சாப்பாட்டிற்கு மிக முக்கிய இடம் உள்ளது. வீட்டில் வேண்டியதைக் கேட்டுச் சாப்பிடும் சுதந்தரம் முதல்நாளே சிறையில் பறிபோகிறது. நாக்கைப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. கைதிகளுக்கு அசைவ உணவு அந்தச் சமயத்தில் இல்லை என்பதால், பெருச்சாளியை சமைத்து உண்கிறார்கள். இப்போது அரசு கைதிகளுக்கு வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்குகிறது.

சிறையில் இருக்கும் கைதிகளின் மீதான அணுகுமுறையில் கொஞ்சம் விவாதம் தேவைப்படுகிறது. சிறைகைதிகள் அப்பாவிகள் அல்ல என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களுக்குத் தரப்படும் அடிப்படை வசதியைப் பற்றி அரசு விவாதிக்கவேண்டியது தேவையான ஒன்றே. இப்புத்தகத்தைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனை இதுவே.

இந்தப் புத்தகத்தின் குறைகளாகச் சில விஷயங்களைச் சொல்லலாம். ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார். அதில் எவ்வித வலியும் தெரிவதில்லை. மாறாக, பார்த்தவற்றைச் சொல்கிறார் என்கிற எண்ணமே மேலோங்குகிறது. மேலும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ என்று சொல்லும் ஜோதி, சிறையில் இருந்ததே மொத்தம் பத்திலிருந்து இருபது நாள்களுக்குள்ளேதான் இருக்கும். அதுவும், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட விசாரணைக் கைதியாக மட்டுமே. மேலும் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லுமளவிற்கு ஜோதியின் வாழ்க்கை அப்படி சம்பவங்களால் நிறைந்து வழியவில்லை, அல்லது அவர் சொல்லவில்லை. ஒருமுறை கூட காவல்துறையினரால் அடிக்கப்படவில்லை. கொடூரமாக தண்டனை கொடுக்கப்படவில்லை. இப்படி எவ்வித அனுபவமும் இல்லாமல் இவர் பார்த்தவற்றை மட்டும் விவரிக்கும்போது, அதை இவர் கண்டவற்றைச் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடிகிறதே ஒழிய, ‘ஒப்புதல் வாக்குமூலமாக’ உணரமுடியவில்லை. நிறைய இடங்களில் இது தன் வாழ்க்கையைச் சொல்லுதல் என்கிற இடத்திலிருந்து விலகி, கதை சொல்லும் பாணியைப் பற்றிக்கொள்கிறது. இதனால் தீவிரத்தின் முனை மழுங்கடிக்கப்படுகிறது.

இப்புத்தகத்தில் கால அறிவு சுத்தமாக இல்லை. எந்த நேரத்தில் எது நடைபெறுகிறது என்கிற விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிகழ்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால், விஷயங்களை வைத்து அது எப்போது நடந்தது என்பதனை யோசித்து, அக்காலகட்டத்தின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளை நினைவிற்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து யாரேனும் இப்புத்தகத்தைப் படித்தால் குழப்பமே மிஞ்சும்.

ஒப்புதல் வாக்குமூலம் என்கிற வார்த்தைக்கு பலம் சேர்க்கும் வகையில், ஜோதி எக்கட்சியைச் சேர்ந்தவர், ஆளும் கட்சி எது, எதிர்க்கட்சி எது என்பன போன்ற விவரங்களைச் சொல்லியிருந்தால், அது உண்மையில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக ஆகியிருந்திருக்கும். எக்கட்சியிலும் அடியாள்கள் இல்லாமல் இருக்கமுடியாது என்கிற உண்மை எல்லோரும் அறிந்திருக்கிற நிலையில், இதை வெளியில் சொல்வதால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. இதைச் சொல்லாததற்கு ஜோதிக்கும் வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

இது போன்ற புத்தகங்கள் கைதிகளுக்கு ஒருவித புனித பிம்பத்தைக் கட்டமைக்க வாய்ப்பளிக்கின்றன. ஜோதிக்கும் இது நிகழ்கிறது. ஆனால் ஜோதி பெரிய குற்றவாளியாகவோ, கொலையாளியாகவோ இல்லாததால், இது அதிகம் உறுத்தவில்லை. இல்லையென்றால், ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் இங்கே ஒரு புனிதப்பிம்பம் ஏற்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் இவருக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

ஜோதியை அவர் வாசித்த புத்தகங்கள் மாற்றுகின்றன என்று வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது. எனி இந்தியனில் இருந்தபோது ஒரு கைதியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரங்கள் என்கிற புத்தகத்தைக் கேட்டிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர் விசாரணைக் கைதியா, தண்டனைக் கைதியா என்கிற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புத்தகம் ஒரு கைதியை இன்னுமொருமுறை மாற்றக்கூடும்.

இன்னும் வழக்கு முடியாத நிலையில் ஜோதியை அரசியல் அணைக்காமல் இருந்து, அவர் விரும்பும் அவர் மகள் தமிழினி அணைக்கட்டும்.

(அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம், ஜோதி நரசிம்மன், 70 ரூபாய், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.)

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணிற்கு SMS அனுப்பவும்.

Share

சூஃபி சொன்ன கதை – பீவியும் பகவதியும்

சூஃபி சொன்ன கதை – பீவியும் பகவதியும் – புத்தக விமர்சனம் உயிரோசை.காமில் வெளியாகியுள்ளது.

நன்றி: உயிரோசை.காம்

சூஃபியிஸம் என்பதை அன்பை முக்கியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாம் (அதாவது ஷரியத் சட்டங்களை முக்கியமாக வைத்து இயங்காமல்) எனப் புரிந்துகொள்ளலாம். சூஃபிகள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இருக்கும் மதங்களோடு ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள். அவர்கள் மதங்களைவிட மனிதர்களையும் அன்பையும் பிரதானமாகப் பார்த்து அதன்படி தங்கள் செயல்களை வடிவமைத்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் சூஃபிக்களை இந்துக்களும் முஸ்லிம்களும் முக்கியமானவர்களாகக் கருதுகிறார்கள். ஹிந்துவாக இருந்து, பின்னர் முஸ்லிமாக மாறி, தான் பிறந்து வளர்ந்த மதத்தின் தேவியையும் விக்கிரகத்தையும் கைவிடமுடியாமல் தவிக்கும் ஒரு பெண் பீவியாக மாறும் நாவல் ‘சூஃபி சொன்ன கதை.’ அந்த பீவியை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வணங்குகிறார்கள். கார்த்தி என்னும் பெண், சித்தாராவாகி, வாழ்நாளெங்கும் தன்னை விரட்டும் காமம் சார்ந்த அகச்சிக்கல்களைப் புறந்தள்ளமுடியாமல் அதற்குப் பலியாகி, பீவியாகிறாள்.

பீவியின் மஸாரை (புனித சமாதி) ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வணங்கத் தொடங்குவதோடு நாவல் தொடங்குகிறது, அங்கு வரும் சூஃபி ஒருவர் ‘முதல் பீவி’யின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.

மேலே புல்லாரத் தரவாட்டில் கார்த்தி பிறக்கிறாள். கார்த்தி வளர வளர, அவளின் தாய்மாமன் சங்குமேனன் தன் மருமகள் கார்த்தியின் மீது – கேரள பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது இது – காமம் கொள்கிறான். கார்த்திக்கும் தன் தாய்மாமன் மீது இனம்புரியாத காமம் இருக்கிறது. ஆனால் சங்குமேனன் தன் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நினைவில் கொண்டு அவளிடமிருந்து விலகியிருக்கிறான். அதுமட்டுமன்றி, கார்த்தியை பகவதியின் அம்சமாகவே காண்கிறான். கார்த்தியின் வீட்டில் அனைவரையும் பெரியம்மை நோய் தாக்கும்போது, கார்த்தி மட்டும் நோயிலிருந்து விலகி, ஜோதியாக ஒளிர்கிறாள். தறவாட்டைச் சோதனையிட வரும் வெள்ளைக்காரத் துரைமார்கள் பகவதியின் உருவத்தை ஜோதியாகக் கண்டு அஞ்சி ஓடுகிறார்கள். அந்த ஊருக்கு வியாபாரம் செய்ய வரும் மாமுட்டிக்கும் கார்த்திக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. மாமுட்டி மாப்பிள்ளா சமூகத்தைச் சேர்ந்தவன். தறவாட்டை விட்டுவிட்டு மாமுட்டியோடு செல்கிறாள் கார்த்தி. அதைத் தடுக்க நினைத்தாலும், தடுக்க இயலாதவனாக ஆகிறான் சங்குமேனன்.

ஊரே அதிசயிக்க, ஒரு இந்துப் பெண்ணை அழைத்துச் செல்லும் மாமுட்டியை அவரு முஸலியார் இஸ்லாமானவளாக மாற்றுகிறார். குப்பாயம் மாட்டி, ஐவேளை தொழுது இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுகிறாள். எப்போதும் படுக்கையறையில் மாமுட்டியுடன் காமத்தைத் தீர்த்துக்கொள்ளும் சித்தாராவாகிய கார்த்திக்கு வாழ்க்கையே புதுமையானதாகவும் இனிமையானதாகவும் தோன்றுகிறது. வியாபார விஷயமாக மாமுட்டி மீண்டும் வெளியூர் செல்லும் இரவில், மாமுட்டி இல்லாமல் அலைபாயும் அவள், தான் புகுந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கிறாள். அங்கு அவள் எதிர்பாராமல் காணும் தேவி விக்கிரகம் அவளுக்கு அவள் பகவதி தன்மையை மீண்டும் காட்டிக்கொடுக்கிறது. இஸ்லாம் வீட்டுப் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் ஏதோ இனம்புரியாத ஒன்று வந்துவிட்டதாக அஞ்சுகிறார்கள். ஆனால் மாமுட்டி அவளுக்குத் தனியே கோவில் கட்டித் தருகிறான். இந்த ஹராமான செயலைக்கண்டு, அவனது ஊர்க்காரர்களும் சொந்தக்காரர்களும் அவனை ஒதுக்கிவைக்கிறார்கள். அவரு முஸலியாரும் கடும் கோபம் கொள்கிறார்.

அவரு முஸலியாரின் குடும்பமும் நான்கு தலைமுறைகளுக்கு முன்புதான் மதம்மாறிய குடும்பம். பழம் ஹிந்துக் குடும்பத்தின் நினைவுகள் தாக்கத் தொடங்க, அவரு முஸலியார் தன்வசம் இழக்கிறார். என்ன செய்கிறோம் என்ற நினைப்பில்லாமல் ஹிந்து விக்கிரகங்களைத் தொழவும், நினைவு வந்து அல்லாவிடம் மன்னிப்புக் கேட்கவுமென அலைக்கழிகிறது அவரது வாழ்க்கை. தனது வாழ்க்கை சீரழிவது தன் மனைவியால் என்கிற எண்ணம் எழவும், அவளோடு உறவு கொள்ளமுடியாத அலியாகிறான் மாமுட்டி. தன் காமத்திற்கு வடிகாலாக, பதினைந்தே வயதான அமீருடன் உறவுகொள்ளத் தொடங்குகிறான். இதனை அறியும் கார்த்தி, காமத்தோடும் தாய்மை உணர்வோடும் அவனைத் தன் மார்போடு இறுக்கி, குளத்துக்குள் அமுக்கிக் கொல்கிறாள். ஒரு துரையைப் பார்க்கப் போகும் மாமுட்டி, தனது ஹராமான செயலுக்காகக் கொல்லப்படுகிறான். கார்த்தியும் கடலில் கலந்து பீவியாகிறாள். கடலில் நிலைதடுமாறும் ஆண்களைக் காத்து, கரை சேர்க்கிறாள் பீவி. அம்மக்கள் அவளுக்குக் கல்லறை கட்டித் தொழுகிறார்கள். அவள் பகவதியாகவும் பீவியாகவும் கொண்டாடப்படுகிறாள்.

இரண்டாம் பீவியின் கதையை சூஃபி சொல்லத் துவங்குவதுடன் கதை நிறைவடைகிறது.

ஒரு நாவலின் கதையை இப்படி முழுமையாகச் சொல்வது சரியானதல்ல என்றாலும், இந்த நாவலைப் பொருத்தவரையில் இது மிகவும் முக்கியமானதாகிறது. பகவதியாகத் தன்னை இனம் காணும் ஒரு பெண் பீவியாகும் கற்பனை மிக அசாதாரணமானது. இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார் எழுத்தாளர் ராமனுண்ணி. கதை முழுவதும் ஒருவித மந்திரச் சொல்லாடல்கள் போன்ற மொழியில் சொல்லப்படுகிறது. எம்.டி. வாசுதேவன் நாயர் இக்கதை பற்றிச் சொன்னதுபோல, பழைய வார்த்தைகளைக் கொண்டு புதிய பொருள்களை உருவாக்குகிறார் ராமனுண்ணி. இப்படி ஒரு நீண்ட, அசாதாரணமான கற்பனையை ஓர் எழுத்தாளர் சாத்தியமாக்கியிருக்கிறார் என்பதே ஆச்சரியமான ஒன்று.

சங்குமேனன் கார்த்தியின் மீது கொள்ளும் காமமும், அவன் பகவதி மீது கொள்ளும் பக்தியும் ஒன்றோடொன்று பொருந்திப் போவது மிகச் சிறப்பாகப் புனையப்பட்டுள்ளது. இந்த விவரிப்பிற்குத் தேவையான, ஒருவித மெஸ்மரிஸத்தை உருவாக்கக்கூடிய எழுத்து நடையை மிக அழகாகக் கையாண்டிருக்கிறார் ராமனுண்ணி. இது மிகவும் எளிதாகப் படித்துமுடிக்கப்படக்கூடிய நாவலல்ல. மாறாக, வாசகனின் முழுக்கவனத்தையும், கடுமையான உழைப்பையும் வேண்டும் நாவல் என்பதை நாவல் ஆரம்பித்த சில பக்கங்களிலேயே உணர்ந்துகொள்ளலாம்.

கார்த்தியின் அகச்சிக்கல்கள் இந்நாவல் முதலிலிருந்து கடைசிவரை விவாதிக்கப்படுகின்றன. அவளது அகச்சிக்கல்கள் முழுக்க முழுக்க காமம் சார்ந்தவையே. அவள் பூப்பெய்தும் காலத்தில் தன் தாய்மாமன் சங்குமேனன் மீது கொள்ளும் காமம் துவங்கி, தன் கணவன் மாமுட்டியோடு கொள்ளும் உறவுகள் வரை, அவள் நிலைகொள்ளாமல் தன்னையும் தன்னுடலையும் தன் வாழ்வையும் பற்றி எப்போதும் யோசிக்கிறவளாக இருக்கிறாள். உடல் மீது கவனமும் கடும் காமமும் இருக்கும்வரை அவள் பகவதியை நினைக்காமல் இருப்பதும், ஒரே நாளில் ஒரு விக்கிரகத்தை அவள் கண்டடையவும் மிக உக்கிரமாக அவளை பகவதி ஆக்கிரமித்துக்கொள்வதும் நடக்கின்றன. தன்மீது வந்து அழுத்தும் சுமைகளை நீக்க, அவள் வீடெங்கும் கிடக்கும் சுமை நிறைந்த பொருள்களாகத் தூக்கி இறக்குவது சிறப்பான குறியீடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

தன் புகுந்தவீட்டில் தேவி விக்கிரகத்தைக் கண்டடைவதுமுதல், அவள் ஒரு இஸ்லாமானவளாகவும் ஹிந்துவாகவும் இருக்கிறாள். அந்த இடத்தில் அவள் ஒரு பீவியாக மாறத் தொடங்குகிறாள். ஆரம்பத்தில் அவளிடமிருந்து விலகி ஓடும் பெண்கள், அவளுக்குள் இருக்கும் ஒருவித மந்திர சக்தியை அறிந்து, அவளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறார்கள். மிகப்பெரிய பிரச்சினையைக்கூட மிக எளிதாக அவள் எதிர்கொள்ளும் விதமும், எப்போதும் சாந்தம் தவழும் ஜோதி எரியும் முகமுமென அவளை எளிதாக இஸ்லாம் பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்நேரத்தில் அவள் கணவன் அவளிடமிருந்து விலகுவது அவளுக்குப் பெரும் கலவரத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் தன்னுள் பொங்கிப் பிரவகிக்கும் தாய்மையைப் பதினைந்து வயது அமீருக்கு அள்ளிக் கொடுக்கும்போது அவன் அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கிறான். அவனை காமத்தின் உச்சியில், தாய்மையின் கனிவில், பகவதியின் உக்கிரத்தோடு நீரில் முக்கிக் கொள்ளும்போது கார்த்தி சொல்லும் வசனங்கள் மிக முக்கியமானவை. இத்தகைய அகச்சிக்கல் அலைக்கழிப்புகளுக்கு ராமனுண்ணியின் எழுத்தே அதற்கான உயிர்ப்பைக் கொடுக்கிறது. தறவாடெங்கும் பெயரியம்மை பரவுகிறது என்பதை ராமனுண்ணி சொல்லும் விதத்தை, அவரின் எழுத்து நடைக்கு இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம். ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’ படித்தபோது வீடெங்கும் கருமை சூழ்ந்ததை உணர்ந்ததைப் போல, பெரியம்மை வீடெங்கும் வீரிய விதைகளாகப் பரவும் விவரணையைப் படித்தபோது, என் வீடெங்கும் அதன் விதைகள் காற்றில் உலவுவதுபோன்ற ஓர் எண்ணத்தை அடைந்தேன். இது ராமனுண்ணியின் மிகப்பெரிய வெற்றியல்லவா.

அவரு முஸலியார் அறிவு நிலையில் தன்னை முஸ்லிமாகவும், உணர்வு நிலையில் தன்னை இந்துவாகவும் நினைத்துப் படும் அவஸ்தைகளும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு, அவரின் முன்னோர்கள் கூட்டம் கூட்டமாக மதம் மாறுகிறார்கள். உயிர்பயம், காரிய சித்தி போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இஸ்லாமாக மதம் மாற, சிலர் ஜோதிடம்கூடக் காண்கிறார்கள். மதம் மாற மறுக்கும் சிலர் உயிர் துறக்கிறார்கள். அப்போது மதம் மாறிவிட்டாலும், அவரு முஸலியாரின் தாத்தாவிற்குள் ஹிந்து நினைப்பு ஓடுகிறது. அது காலம் காலமாக மறைந்திருந்து, அவரு முஸலியாரின் உணர்வுக்குள் ஏறிக்கொண்டு அவரைப் பாடாய்ப்படுத்துகிறது. வேறு வழியறியாமல், உண்மையான முஸ்லிமாக வாழவேண்டிய ஆசை நிறைவேறாமல், இறந்துவிட முடிவெடுக்கிறார் அவரு முஸலியார். ஆனால் ஒரு பீவியின் தோற்றம் அவரது அலைக்கழிப்பிலிருந்து அவரை மீட்கிறது. ஒரு சூஃபியின் தேவையை மிக அழகாக இந்த இடத்தில் நிலைநிறுத்துகிறது நாவல்.

குறிஞ்சிவேலன் இந்நாவலை மலையாளத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்த்திருக்கிறார். மலையாளத்தில் ராமனுண்ணியின் நடை எத்தனை கடுமையானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்திருக்குமென யூகிக்கமுடிகிறது. அதை மொழிபெயர்ப்பது எளிதான வேலையல்ல. அதைத் திறம்படவே செய்திருக்கிறார் குறிஞ்சிவேலன். ஆனால் பல இடங்களில், பல வாக்கியங்கள் பொருளற்றதாகத் தெரிகின்றன. அதேபோல் பல இடங்களில், அவள் – நான், அவனை – தன்னை – என்னை என்கிற குழப்பங்கள் காணப்படுகின்றன. ஒரு ஆசிரியரின் கூற்றும், ஒரு கதாபாத்திரத்தின் தன்கூற்றும் சட்டென மாறும் இடங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் மொழிபெயர்ப்பாளர். பல இடங்களில் மலையாள வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கான அடிக்குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று. ஆனால் தேவையற்ற பல இடங்களில், அதற்கான தமிழ்வார்த்தைகள் உள்ள நிலையில் அவற்றை ஏன் அப்படியே பயன்படுத்தவேண்டும் என்று புரியவில்லை. வெளிச்சப்பாடு என்பதை வெளிச்சப்பாடு என்று எழுதி, அதற்கான ஒரு குறிப்பையும் கொடுப்பது சரியானதுதான். ஆனால் கிக்கிளி என்பதை அப்படியே பயன்படுத்தவேண்டியதில்லை. கிச்சுகிச்சு என்று சொல்லலாம். மேலும், நாவலில் இன்னும் இரண்டு இடங்களில் கிச்சுகிச்சு என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. புழை என்பதற்கு ஆறு என்றே பயன்படுத்தி இருக்கலாம். புழை என்று பயன்படுத்தி அதற்கான குறிப்பைத் தந்திருந்தாலும், இது தேவையற்றது என்றே தோன்றுகிறது. மூலச் சொல்லை அப்படியே மொழிபெயர்க்க முடியாத நேரத்திலும், அதன் தேவை அவசியம் என்று கருதுகிற இடங்களிலும் மட்டுமே அவ்வார்த்தையை அப்படியே பயன்படுத்திவிட்டு அடிக்குறிப்பு கொடுப்பது நல்லது என்பது என் எண்ணம். இவற்றை எல்லாம் மீறி, ஒரு சவாலான மொழிபெயர்ப்பை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் குறிஞ்சிவேலன் பாராட்டுக்குரியவரே.

சூஃபி சொன்ன கதையின் மலையாள மூலம் கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது. இது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சூஃபி சொன்ன கதை, நாவல், கே.பி. ராமனுண்ணி; தமிழில்: குறிஞ்சிவேலன், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, விலை: 110 ரூபாய்.

Share

கருத்த லெப்பை – அருவத்தின் உருவம்


கருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.

சிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்தின் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழும். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.

கருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.

அஹம்மது கனி, எந்த ராவுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.

கருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவலிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.

இரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.

மிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ராஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.

சில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.

‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.

அஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

லெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது.

ஆன்லைனில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=34061

நன்றி: வடக்கு வாசல், நவம்பர் 2008.

Share

கடல்புரத்தில் – புத்தகப் பார்வை

கடல்புரத்தில், கிழக்கு பதிப்பகம், ரூபாய் 75.
ஆன்லைனில் வாங்க: காம்தேனு.காம்.

தமிழில் கடல்புரத்தைச் சார்ந்த நாவல்கள் எல்லாமே பெரிதாகப் பேசப்பட்டவை. ஒரு கடலோர கிராமத்தின் கதை (தோப்பில் முஹம்மது மீரான்), புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் (ப.சிங்காரம்), ஆழிசூழ் உலகு (ஜே.டி. குரூஸ்). வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலும் சிறப்பான ஒன்றே.

கடல்புரத்தில் வாழும் ஒரு மீனவ கிறித்துவக் குடும்பத்தின் கதை. பிலோமியின் நிறைவேறாத காதலின் வழியே, குருஸுவின் உலகத்திற்கும் அவரது மகன் செபஸ்தியின் உலகத்திற்கும் இடையேயான தலைமுறை இடைவெளியின் வழியே, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் போராட்டம், வன்மம், உறவு, துரோகம் என பல உணர்வுகளை மையமாக வைத்துச் சுழலும் நாவல்.

குருஸு தன் பரம்பரைத் தொழிலான மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு நகரத்திற்குச் செல்ல விருப்பப்படாதவர். மகன் செபஸ்தி எல்லாச் சொத்தையும் விற்றுவிட்டு நகரத்தில் ஆசிரியராக வாழும் வாழ்க்கையைத் தொடர விரும்புபவன். குருஸுவின் மனைவி ஒரு வாத்தியாரோடு தொடர்பு வைத்திருப்பவள். குருஸுவின் மகள் பிலோமி, சாமிதாஸோடு ஏற்பட்ட காதலில் தன்னை இழந்தவள். செபஸ்தியும் ரஞ்சியுடனான காதலில் தோல்வி அடைந்தவனே. குருஸு படகில் மீன்பிடிப்பவர். அங்கே லாஞ்சில் சென்று மீன் பிடிப்பவர்களுக்கும் படகில் சென்று மீன்பிடிப்பவர்களுக்கும் எழும் பிரச்சினையில் ஒரு உயிர்ப்பலி நேர்கிறது. குருஸுவின் மனைவி அதிகம் குடித்து, கீழே விழுந்து அடிபட்டு இறக்கிறாள். இனியும் கடல்புரத்திலேயே மீன் பிடித்து வாழ்க்கையைக் கழிக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளும் குருஸு, வேறு வழியின்றி, தன் சொத்தை விற்றுவிட்டு நகரத்திற்குச் செல்லமுடிவெடுக்கிறார். முடிவெடுத்துவிட்டாலும், தன் ஊரை, தன் மண்ணை விட்டுப் பிரியும் சோகம் அதிகமாக, அவர் புத்தி பிறழ்கிறது. குருஸுவின் மனைவியோடு தொடர்பு வைத்திருந்த வாத்தியார், பிலோமிக்கு உதவத் தொடங்க, தன் நினைவுகளோடு, அங்கேயே வாழ்க்கையைத் தொடருகிறாள் பிலோமி.

கதை என்பது தனியாக இல்லை என்பதே இந்நாவலின் முக்கியத்துவம். கடல்புரத்தில் அன்றாடும் நிகழும் நிகழ்வுகளும், யாரும் எப்போதும் கடல்புரத்தில் கண்டுவிடக்கூடிய மக்களின் முகமுமே நாவல் எங்கும் காட்டப்படுகின்றன. அதில் கதை தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. பிலோமி தன் காதல் நிறைவேறாது என்பதை மிக எளிதாக ஏற்றுக்கொள்கிறாள். தன் அண்ணன் ரஞ்சியுடன் கொண்டிருந்த காதலும் இப்படி நிறைவேறாமல் போனதே என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால் தன் காதலும் நிறைவேறாமல் போவதில் அவளுக்குப் பெரிய அதிர்ச்சியில்லை. எதிர்பாராமல் அவளுக்கும் சாமிதாஸுக்கும் இடையே ஏற்படும் உடலுறவு அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

குருஸுவின் மனைவி மரியம்மைக்கும் வாத்திக்கும் இருக்கும் உறவு சொல்லப்பட்டிருக்கும் விதம் அழகானது. மரியம்மையின் மரணத்தின்போது வாத்தி அடையும் கலக்கங்களும் ஒன்றிரண்டு வரிகளில் விளக்கப்பட்டுவிடுகின்றன. வாத்திக்கும் பிலோமிக்கும் இடையே உருவாகும் அன்பும், உறவும் புதிர்த்தன்மை கொண்டதாக இருக்கிறது. வாத்தி பிலோமியிடம் மரியம்மையையே பார்க்கிறார். ஊரிலும் பலவாறாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் கதையில் எந்த ஒரு இடத்திலும் பிலோமியோ, வாத்தியோ அதை மறுப்பதுமில்லை; ஏற்பதுமில்லை.

எல்லா கதாபாத்திரங்களும் தன்னளவில் நிறைவுபெற்று விளங்குகின்றன. அதிலும் பிலோமியின் பாத்திரம் நாவலில் பெரும் எழுச்சி கொள்கிறது. மிகச்சாதாரணமாக, தன் காதலனைக் காண்பதையே இன்பமாகக் கருதும் ஒரு சிறிய பெண்ணாக அறிமுகமாகும் பிலோமி, வாத்தியின் புதிரான அன்பை ஏற்றுக்கொள்வதும், ரஞ்சியின் அன்பைப் பற்றி நினைத்து அடையும் மகிழ்ச்சியும் என வேறு ஒரு பரிமாணம் கொண்ட பெண்ணாக, வாழ்க்கையில் எல்லாவற்றையும் கண்டு அனுபவித்து அதன் பின் கிடைக்கும் அனுபவத்தைக் கைவரப்பெற்றவளாக முதிர்ச்சி பெறுகிறாள். இந்த முதிர்ச்சிக்குக் காரணம் என்று பார்த்தால், அவள் சாமிதாஸுடன் கொள்ளும் உறவு. அந்த உறவுக்குப் பெண் அவளது சிறுமித்தன்மை காணாமல் போகிறது. சாமிதாஸுடன் தனக்குத் திருமணம் நடக்காது என்பது தெரிந்தவுடன், அவள் இவ்வுலகத்தில் எல்லா அனுபவங்களையும் கண்டு தெளிந்துவிட்ட பெண்ணாகிவிடுகிறாள். அவளால் வாத்தியுடன் உறவு வைத்துக்கொண்டிருந்த தன் மரியம்மையை நேசிக்கமுடிகிறது. வாத்தியைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவளது உலகம் எல்லாரையும் நேசிக்கும் உலகமாகிவிடுகிறது.

இந்நாவலில் சொல்லப்படும் விவரணைகளே கடல்புரத்தையும் அது சார்ந்த மக்களின் செயல்பாடுகளையும் கண்முன் நிறுத்துகின்றன. இந்த எளிமையான, பலமான விவரணைகள் வழியாகவே கதாபாத்திரங்கள் உயிருள்ளவர்களாக மாறுகிறார்கள். கதையை படித்துமுடித்ததும், கடல்புரத்து மனிதர்களோடு வாழ்ந்துவிட்ட உணர்வைத் தருபவை இந்த விவரணைகளே. இந்த விவரணைகள் தனியே தெரியாமல், மிக நேர்த்தியாக கதையோடு பின்னிக் கிடக்கின்றன என்பதால், அவை நம்மை கடலுக்குள்ளும், அதைச் சுற்றிய ஊருக்குள்ளும் எளிதில் இழுத்துச் செல்கின்றன.

நாவலின் இன்னொரு முக்கியத்துவம் அதன் வட்டார மொழி. கடல்புரத்து கிறித்துவ மக்களின் வட்டார மொழியை அவ்வளவு சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் வண்ணநிலவன். வண்ணநிலவன் சில மாதங்கள் கிறித்துவராக மதம் மாறி வாழ்ந்திருந்தார் எனக் கேள்விபட்டேன். இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு சிறப்பான நாவலைக் கொண்டுவர, அக்காலகட்டம் உதவியிருக்குமானால், அதற்காக மகிழலாம். இந்நாவலை வண்ணநிலவன் எழுதும்போது 29 வயது. என்னளவில் இது ஓர் ஆச்சரியம்; அதிசயம்.

Share