Archive for திரை

காந்தாரா

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்க்காத திரைப்படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் பேரதிர்ச்சியாக இருக்கும். குறிப்பாகத் தமிழில் மிக அதிகம். ஆம், நிறைய முக்கியமான திரைப்படங்களைப் பார்க்கவில்லை. என்னவோ ஒரு சலிப்பு, வேலைப்பளுவும் சின்ன காரணம்.

நேற்றுதான் காந்தாரா பார்த்தேன். 🙂

ஹே ராம் திரைப்படத்துக்கு அடுத்து நான் மிகவும் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்த படம் இதுவே. ஒவ்வொரு ஃப்ரேமிலும் உழைப்பு, பிரம்மாண்டம், எமோஷன் என அசத்திவிட்டார்கள். கதை என்று பார்த்தால், பெரிய புதுமை எல்லாம் இல்லை. ஆனால் அதை கிராம தெய்வ வழிபாட்டுடன் இணைத்ததுதான் பெரிய விஷயம்.

படம் ஓடுமா ஓடாதா, யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், நாம் நம்பும் கதைக்கு 100% உயிரைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் திரைப்படத்தின் ஆதார விதி. இயக்குநர், நடிகர் என அனைவரும் இந்தப் புள்ளியில் ஒருங்கிணைய வேண்டும். இந்தப் படத்தில் அது நிகழ்ந்திருக்கிறது.

பஞ்சுர்ளி தெய்வ கடாக்‌ஷம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் பன்றியை வேட்டையாடுகிறான் என்ற இருமைப் புள்ளி மிக அருமை. இதிலேயே எல்லாம் சரியாக அமைந்துவிட்டது.

ரிஷப் ஷெட்டிக்குள் குலிகா தெய்வம் வரவும், வெறி கொண்டது போல் அவர் நடித்த நடிப்பு அசரடித்துவிட்டது. படம் அங்கேயே முடிந்துவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு பூத கோலா (தெய்வ ஆட்டம்) ஆட்டத்தைப் பொறுமையாகக் காண்பிக்கிறார்கள். அதில் அனைவரின் கைகளையும் இணைத்து ஒன்றாக்கி, ஓ ஓ என்ற சத்தத்தை மட்டும் தரும் காட்சி – புல்லரிக்க வைக்கிறது.

கடலோரக் கிராமக் கன்னட வட்டார வழக்கு வெறி கொள்ள வைத்துவிட்டது. பல வசனங்களை நிறுத்தி நிதானமாகக் கேட்டேன்.

ரிஷப் ஷெட்டி, ராஜ் ஷெட்டி, ரக்‌ஷித் செட்டி மூன்று பேரும் கன்னடத் திரையுலகத்தை எங்கோ கொண்டு போகப் போகிறார்கள். இதில் ரக்‌ஷித்தும் ரிஷப்பும் கடலோரக் கிராமக் கதைகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் போல. சப்த சாஹரக்காச்சே எல்லோ – சைட் ஏ படத்தில் கடலையைக் கதாநாயகி கேட்கும் காட்சியும், உலிதவரு கண்டந்தெ (மறக்க முடியாத திரைப்படம்) படத்தில் வரும் கடலலைகளின் சத்தமும் இன்னும் கண்ணில் நிற்கிறது.

Share

துபாய் பாபா

பாபா 2002 ஆகஸ்ட் 15ல் இந்தியாவில் வெளியானது. அந்த மே மாதத்தில் நான் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்திருந்தேன். பாபா பாடல்கள் வெளியானதும் பாபாவின் பாடல்களை மனப்பாடம் ஆகும் அளவுக்குக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே இருந்த ஐம்பது நாள்களும் ஒரு நாள் விடாமல் அவளுடதான் ஊர் சுற்றல். மீண்டும் துபாய் திரும்ப வேண்டும். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குக் காரில் போனோம். ரிபீட் மோடில் பாபா பாடல்கள். மாயா மாயா பாடலும், பாபா ஒரு கிச்சு தா பாடலும் ராஜ்யமா பாடலும் எனக்கு மிகவும் பிடித்துப் போயின.

துபாயில் ஆகஸ்ட் 22 வாக்கில்தான் பாபா வெளியானது. திருவோணத்துக்கு. முதல் நாள் முதல் ஷோ பார்க்க வாய்ப்பில்லை. வேலைக்குப் போயாக வேண்டும். மாலைக் காட்சிக்குப் போக வேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பினால்தான் டிக்கட் கிடைக்கும். எப்போதும் என்னுடன் படம் பார்க்க வரும் மலையாளி நண்பன் சந்தோஷ் திருவோணம் என்பதால் படத்துக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டான். எப்படியாவது சரியான நேரத்துக்குப் போகவேண்டும், டிக்கட் கிடைக்கவேண்டும் என்கிற என் பரிதவிப்பைப் பார்த்த டாக்டர் கருண் (தமிழர்) என்னை சரியான நேரத்தில் அவரது காரிலேயே தியேட்டரில் டிராப் செய்வதாக வாக்களித்தார். செய்யவும் செய்தார்.

டிக்கட் கிடைத்தது. படம் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தால் பாதிக்கு மேல் மலையாளிகள். திருவோணம் என்பதால் கொண்டாட்டத்திற்கு வேறு படங்கள் இல்லை என்பதால் இப்படத்துக்கு வந்ததாகப் புலம்பினார்கள் சிலர். படத்தில் சினிமா சினிமா பாடலுக்கு தியேட்டரே அதிர்ந்தது. பல மலையாளிகள் எரிச்சலுடன் அமர்ந்திருந்தார்கள். நான் இந்தியாவில் வாழ முடியாத ஏக்கத்தை இந்தப் படத்தில் வந்த கை தட்டல்கள் கொஞ்சம் குறைத்தன. எங்கேயோ ரத்னா அல்லது பார்வதி தியேட்டரில் பார்க்கும் ஒரு உணர்வு. இப்போது நினைத்தாலும் இந்த நினைவு ஒரு சுக அனுபவம்தான்.

இடைவேளை வரை படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடைவேளைக்குப் பிறகு அலை பாய்ந்தது. படம் முடிந்து போகும்போது பல இஸ்லாமியர்கள் மிகவும் ஆச்சரியமாக, இத்தனை மாய தந்திரம் உள்ள ஒரு படத்தை எப்படி வளைகுடாவில் அனுமதித்தார்கள் என்று பேசியபடி போனார்கள்.

படம் ஓடவில்லை. இந்தியாவிலும் ஃப்ளாப் என்றே நண்பர்கள் சொன்னார்கள். இருக்கலாம். பாபாவில் ரஜினியின் கெட்டப் பலருக்குப் பிடிக்காது. எனக்குப் பிடித்திருந்தது. பாடல்கள் பலருக்குப் பிடிக்கவில்லை, எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை முன்னேறியது போலத் தோன்றியது இந்தப் படத்தில்தான். காதலி எல்லாம் தேவையில்லை என்று ரஜினி நடித்தது அந்த நேரத்தில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இடைவேளைக்குப் பிறகு வந்த தந்த்ரா காட்சிகளில் இயக்குநர் செய்த பெரிய தவறு, ரஜினி படம்னா என்ன வேணா பாப்பாங்க என்கிற திமிர்தான். ஓம்புரியை ஹிந்தியில் பேச விட்டு அதற்குத் தமிழில் வசனம் பேசி டப்பிங் தெலுங்கு படம் போல ஆக்கி இருந்தார்கள். ஆனாலும் ஒரு நாஸ்டாஜியாவாக துபாய் பாபா எப்போதும் எனக்கு மணக்கத்தான் செய்கிறது. கூடவே, பேசி வைத்த பெண்ணுடன் ஊர் சுற்றிய நினைவுகளும்.

பின்குறிப்பு: இதில் இன்னொரு வரலாற்றுக் குறிப்பும் இருக்கிறது. பாபா திரைப்படம் வருவதற்கு முன்பே இதில் வரும் அசாத்திய ஜாதகம் சம்பந்தப்பட்ட ஒரு கதையை நான் என் கைப்பட அப்போதைய டைரி ஒன்றில் எழுதி இருந்தேன். இதைப் பற்றி நான் மரத்தடி யாஹூ குழுமத்தில் சொன்ன போது, செகண்ட் ஷோ பாத்துட்டு தூக்க கலக்கத்துல அதையே நீ எழுதி வெச்சிருப்ப என்று கேஸை முடித்து வைத்துவிட்டார்கள்!

Share

மாமன்னன் – சாதா மன்னன்

மாமன்னன் – தீவிரமான வெளிப்படையான குறியீடுகளுடன் ஒரு படம். பட்டியலின ஆதரவுத் தரப்பு என்பதை திராவிட அரசியல் நிலைப்பாட்டுடன் வெளிப்படுத்தும் தீவிரமான கலைத்தன்மையுடன் கூடிய திரைப்படங்களைப் போல இன்னும் அதன் எதிர்த்தரப்பிலிருந்து அதே பட்டியலின ஆதரவுடன் வராமல் இருப்பது நம் துரதிஷ்டம் என்றே சொல்லவேண்டும். மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் திராவிட தலித் ஆதரவைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தை எவ்விதச் சார்பும் இன்றி ஆராய்ந்து பார்த்தால்,

• முதல் நாற்பது நிமிடங்கள் படம் எதையுமே சொல்லவில்லை. தாமிரபரணியில் ஆளும்கட்சி / போலிஸால் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை இத்திரைப்படம் சாதிய மோதலாக உருவகிக்கிறது. ஆனால் இந்த முக்கியமான சம்பவம் படத்தின் மையச் சரடோடு பயணிக்காததால் வெறும் ஒரு காட்சியாகத் தனித்து நின்றுவிடுகிறது. எப்படியாவது பதற்றத்தைப் பார்வையாளர்களின் மனதில் உருவாக்கிவிடவேண்டும் என்ற இயக்குநரின் ஆசையைத் தாண்டி எதுவுமில்லை.

• அதற்கடுத்த ஒரு மணி நேரம், பரபரப்பின் உச்சம். அதுவும் மாமன்னன் நாற்காலியில் உட்காரும் காட்சி மிக அருமை.

• அதன் பின் படத்தில் பொருட்படுத்தத்தக்க கோர்வையான காட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அதுவரை மிகத் துல்லியமாகச் சொல்லப்பட்ட வசனங்கள் நீர்த்துப் போகத் தொடங்குகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், ஒரே விதமான வசனம். இவையெல்லாம் வெறும் தனித்தனிக் காட்சிகளாகத் திரையில் தோன்றி மறைகின்றன. அவை எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. சாவுக்கு வரும் காட்சி, திடீரென இளைஞர்கள் திரண்டு வந்து நிற்கும் காட்சி, ரத்னவேலு காலில் விழும் காட்சி, காரில் மாமன்னன் துப்பாக்கியால் மிரட்டும் காட்சி, கீர்த்தி சுரேஷிடம் அதிவீரன் கோபமாகப் பேசும் காட்சி என எதுவுமே ஒட்டவில்லை. எல்லாம் திடீர் திடீர்க் காட்சிகள். அதிலும் ஒரே ஒரு வீடியோவில் மாமன்னன் வெல்வதெல்லாம் கொடுமை. அதிலும் அந்த வீடியோவில் மாமன்னன் பேசுவதெல்லாம் எவ்வித ஆழமும் இன்றி மேம்போக்காக இருக்கிறது.

• உச்சகட்டக் காட்சியில் மாமன்னன் சபாநாயகராகப் பதவி ஏற்பது அருமை. அதற்கு முந்தைய சண்டை எல்லாம் பொறுமையைச் சோதிக்கிறது.

• கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாமன்னன் அதிமுகவாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. முன்னாள் சபாநாயகர் தனபாலை மனதில் வைத்து மட்டும் சொல்லவில்லை. ரத்னவேலு கட்சி மாறியதும் அக்கட்சித் தலைவரின் படம் தினகரனில் முதல் பக்கத்தில் வருகிறது. தினகரனில் முதல் பக்கத்தில் விளம்பரம் வந்தால் நிச்சயம் அது அதிமுகவாக இருக்கமுடியாது. எனவே மாமன்னன் அதிமுகதான் என்பது நிரூபணமாகிறது. (நானே யோசிச்சேன்!)

• இத்தனை முக்கியமான படத்துக்கு இத்தனை சப்பையான பாடல்களைப் போட்டிருக்கவேண்டாம். இன்னும் கதைக்களத்துடன் பயணப்பட ஏ.ஆர்.ரகுமானால் முடியவில்லை. ஆனால் பின்னணி இசையில் சமாளிக்கிறார்.

• ரத்னவேலுவின் மனைவியாக வரும் நடிகையும் சரி, கீர்த்தி சுரேஷும் சரி – வீண்.

• பன்றி நாய் குறியீடெல்லாம் சுத்த அறுவை.

• வடிவேலுவின் நடிப்பு பிரமாதம். அதேபோல் ஃபகத்தின் நடிப்பும். இருவருக்கும் ஈடுகொடுக்க முடியாமல் உதயநிதி ஏதோ சமாளிக்கிறார்.

பரியேறும் பெருமாள் > கர்ணன் > மாமன்னன்.

Share

திரைப்படங்கள்

ன்னா தான் கேஸு கொடு (M)

படம் மிகவும் சீரியஸான படமாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கினேன். ஆரம்பக் காட்சிகளிலேயே ஒருவிதமான ப்ளாக் காமெடி போன்று முயன்றிருந்தார்கள். நமக்கு இது ஒத்துவராதே என்று தோன்றியது. சரி, முழு படத்தையும் பார்ப்போம் என்று பார்த்தேன்.

சில நம்ப முடியாத காட்சிகளைக் கடந்துவிட்டால், சில எரிச்சலான காமெடிகளைக் கடந்துவிட்டால், சந்தேகமே இல்லாமல் இத்திரைப்படம் அற்புதமான அனுபவம்.  

குஞ்சாக்கோ போபனுக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமையும். உடல்மொழியும் மேக்கப்பும் நடிப்பும் அற்புதம். ஆனால், நீதிபதியாக வரும் குன்ஹி கிருஷ்ணன் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்து பின்னர் திருந்திய ஒரு சாமானியன், அசுர பலம் பொருந்திய அரசை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடுகிறான். நீதிமன்றக் காட்சிகள்தான் படம் முழுக்க. ஆனால் படம் தொய்வில்லாமல் போகிறது. காரணம், நடிகர்களின் இயல்பான நடிப்பு. அரசு வக்கீல்களும், குற்றம் சுமத்தப்பட்டவனின் வக்கீலும், நாம் பார்ப்பது நிஜ நீதிமன்றக் காட்சிகளையோ என்னும் எண்ணத்தை வரவழைக்கிறார்கள்.

ஒரு நீதிபதி ஏன் ஒரு குற்றவாளிக்கு இத்தனை இடம் தரவேண்டும், எப்படி நினைத்தபோதெல்லாம் ஒரு திருடனால் அமைச்சர் முதல் முதல்வர் வரை சந்திக்க முடிகிறது என்பதையெல்லாம் மறந்துவிட்டால், இத்திரைப்படம் நம்மை அள்ளிக்கொள்ளும்.

சாலையில் இருக்கும் ஒரு பள்ளத்துக்கு எப்படி அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும் என்பதைத் தாண்டி,  வழக்கு தொடுக்க முடிந்து அதில் அமைச்சருக்குத் தண்டனையும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ரீதியில் இப்படத்தை அணுகவேண்டும்.

நடிகர்களின் நடிப்பாலும் வித்தியாசமான மேக்கிங்காலும் நம்பவேமுடியாத திரைப்படத்தைக் கூட பேரனுபவமாக மாற்ற முடியும் என்பதை இந்த மலையாளத் திரைப்படம் ஆயிரமாவது முறையாக நிரூபிக்கிறது.

மாளிகப்புரம் (M)

உன்னி முகுந்தனின் அழகான முகத்துக்காகப் பார்க்கலாம். மோடி, மோகன் பகவத்துக்கெல்லாம் நன்றி போட்டு ஆரம்பிக்கும் தைரியம் கேரளா வரை வந்துவிட்டது.

முன்பு இதே போல் நந்தனம் என்றொரு மலையாளப் படம் கேரள பக்தர்களைக் கட்டிப் போட்டது. எனக்கும் அந்தப் படம் ஓரளவு பிடித்திருந்தது. குருவாயூரப்பன் மனிதனாக வரும் படம். தமிழில் தனுஷ் நடித்து வெளிவந்து மோசமான தோல்வியைத் தழுவியது. சீடன் என நினைக்கிறேன்.

மாளிகப்புரம் மிகவும் எளிமையான கதையாகிவிட்டது பலவீனம். முதல் அரை மணி நேரம் படுத்தல். அந்தச் சின்ன பெண்ணும் பையனும் வாவ்.

சின்ன பெண்ணை முறைத்துப் பார்க்கும் வில்லன் காட்சிகளைப் பார்க்கவே முடியவில்லை. வில்லன் தமிழன். இதற்கு முன்பு நான் பார்த்த கூமன் படத்திலும் வில்லன் தமிழன். நாம் பிறருக்குச் செய்வதையே பிறர் நமக்குச் செய்வார்கள்.

கூமன் (M)

ஜித்து ஜோசப்பின் மலையாளத் திரைப்படம். அட்டகாசமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, இடைவேளை வரை புருவத்தை உயர்த்த வைக்கிறது. அதற்குப்பின் எங்கெல்லாமோ அலைபாய்கிறது. ஏன்டா இந்தக் கொடுமையைப் பார்த்தோம் என்ற எரிச்சலில் அப்படியே நிறுத்தி விடலாமா என்னும் அளவுக்கு கோபத்தை வரவழைக்கிறது‌. வேஸ்ட் ஆப் டைம். திருடன் மணியனாக வரும் ஜாஃபர் இடுக்கியின் நடிப்பு பிரமாதம்.

21 Hours (K)

எனக்கு ஏனோ தனஞ்செய் பிடிக்கும். ஆனால் இந்தக் கன்னடப் படம் எல்லா வகையிலும் திராபை. இப்போதும் தனஞ்செய்யைப் பிடித்தே இருக்கிறது. ஆனால் இப்படி இன்னும் நான்கு படங்கள் பார்த்தால் பிடிக்காமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது.

Share

லவ் டுடே – அசட்டுக் காதல்

லவ் டுடே – தமிழகமெங்கும் ‘பரபரப்புடன்’ பேசப்பட்ட படம். ஏழு மாதம் கழித்து ஒரு படம் பார்க்கிறேன். சும்மா வெச்சி செஞ்சி அனுப்பினார்கள். இப்படத்தில் பிராமணர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பற்றிப் பின்னர் பார்க்கலாம். இது இல்லாமல், ஒரு திரைப்படமாக இது எந்த லட்சணத்தில் வந்திருக்கிறது என்று முதலில் பார்த்துவிடலாம்.

நவீன விக்கிரமனாக பிரதீப் ரங்கநாதன் உருவாகி இருக்கிறார். அசட்டு காமெடி, கிறுக்குத்தனமான திரைக்கதை, கொஞ்சம் கூட ஆழமே அற்ற மேம்போக்கான காட்சிகள், வாய்க்கு வந்ததைப் பேசும் வசனங்கள், மோசமான மேக்கிங் – இப்படித்தான் கிட்டத்தட்ட படம் முழுக்க. யுவன் சங்கர் ராஜா ஏன் எஸ்.ஏ.ராஜ்குமார் போல இம்சை அளித்திருக்கிறார் என்றே புரியவில்லை. எஸ்.ஏ.ராஜ்குமார் லாலலலா என்பதை குரலில் போட்டே கொல்வார் என்றால், யுவன் படம் முழுக்க எதோ ஒரு இசையை ஓடவிட்டே கொன்றிருக்கிறார். அதிலும் நகைச்சுவைக் காட்சிகளில் இசை தாங்கமுடியாத இம்சையாக இருக்கிறது. விக்கிரமனின் பாணியைப் போலவே, பாஸிட்டிவான ஒரு செய்தியைச் சொல்லி, புல்லரிக்க வைத்து அனுப்புகிறார்கள். திரையரங்கில் பலர் அழவும் செய்கிறார்கள். நான் ஒருவன் மட்டுமே தாங்கமுடியாமல் நெளிந்துகொண்டிருந்தவன் என நினைக்கிறேன்.

விக்கிரமன் படத்தில் நிஜமான ஒரு நேர்மறை அம்சம் இருக்கும். அது யாரையும் மனம் நோக வைக்காமல் இருப்பது. இந்த பிரதீப் அப்படியுமில்லை. பிராமணர்கள் மேல் ஏன் அப்படி ஒரு இளக்காரம், கோபம்!

இப்படத்தில் வரும் கதாநாயகி ஏன் பிராமணப் பெண்ணாக இருக்கவேண்டும்? கதைக்கும் ஜாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பிராமண அப்பாவாக வரும் சத்யாராஜுக்கு நடிக்கவே வரவில்லை. சத்யராஜும் இன்னும் சில கதாபாத்திரங்களும் பிராமணப் பேச்சு வழக்காக நினைத்துக்கொண்டு பேசும் வசனங்களைக் காதால் கேட்கமுடியவில்லை. மலபார் போலிஸில் சத்யராஜ் மலையாளம் கலந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசிய பாலக்காட்டுத் தமிழின் கொடூரம் இன்னும் காதில் ஒலிக்கிறது. இப்போது திடீர் திடீர் என்று இத்திரைப்படத்தில் பேசும் பிராமணப் பேச்சு வழக்கும் அதனுடன் சேர்ந்துகொள்கிறது.

வக்கிரமான ஒருவனைக் காண்பிக்கும்போது அவன் நெற்றியில் வம்படியாக விபூதி இருப்பது போல் காண்பிக்கிறார்கள். ஆனால் பிராமணப் பெண்ணோ சாதாரண பொட்டு கூட பல காட்சிகளில் வைப்பதில்லை.

ஒரு பையன் ஹோம குண்டத்தில் சிறுநீர் கழிக்கிறான். காமெடி என்று நினைத்து இக்காட்சியை இயக்கிய இயக்குநரை என்ன சொல்ல!

அந்தச் சிறுநீரை லெமன் சர்பத்தில் பிடிக்கும் ஹீரோ, யாரோ ஒருவரிடம் தரும்போது, அதைக் குடிப்பவரைப் பார்த்து ‘குடிங்கோ’ என்று சொல்கிறார். ஹீரோ பிராமணரல்ல. தான் காதலிக்கும் பெண்ணிடம் கூட அவர் பிராமண வழக்கில் பேசுவதில்லை. ஹீரோ வீட்டுக்கு எத்தனையோ அபிராமணர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் சிறுநீர் கலந்த எலுமிச்சை சர்பத்தைக் குடிப்பவர் ஒரு பிராமணர். அசட்டு நகைச்சுவையாக, 1960களிலேயே சலித்துப் போன, ‘என்ன உப்பா இருக்கு’ என்ற வசனமும் உண்டு.

பல காட்சிகள் தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியலின் தரத்தில்தான் இருக்கின்றன. குறிப்பாக, யோகி பாபுவின் டிராக். அதை நல்ல டிராக் என்று நம்பி எப்படித்தான் எடுத்தார்களோ!

பிராமணரான சத்யராஜ் கண்டிப்பானவர் என்பதைக் காண்பிக்கும் காட்சிகளும் இதே ரகத்திலானவையே. தண்ணீர் கேன் போடுபவருக்குத் தருவதற்காக ஒரு ரூபாய்க்கு அவர் தேடுகிறாராம். அதனால் கண்டிப்பானவராம். கோபமானவராம். இத்தனை கண்டிப்பான கோபமான அப்பா என்னவோ செய்யப் போகிறார் என்றால், அவர் செய்யும் வேலை கிறுக்குத்தனமானதாக இருக்கிறது.

இத்தனை அவலட்சணங்களையும் தாண்டி எது இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது? இரண்டு விஷயங்கள். கதாநாயகன் மற்றும் நாயகியின் நடிப்பு. அசரடிக்கிறார்கள். இவர்கள் இருவரின் நடிப்பு மட்டும் இல்லையென்றால், இந்தக் கிறுக்குத்தனத்தைத் தாங்கிக்கொண்டிருக்கவே முடியாது. இரண்டு மொபைலை மாற்றுவதன் மூலம் ஒன்றும் ஆகிவிடாது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இந்த ரௌடிக்கேத்த பொண்ணு அந்த ரௌடிதான் என்ற முடிவுக்கு வேண்டுமானால் வரலாம்.

இதில் ஒரு பையன் மாங்கொட்டையை ஊன்றி வைத்துவிட்டு தினமும் எடுத்துப் பார்க்கிறான். 20 வருடம் கழித்து அது வளர்ந்து மரமாக நிற்கிறதாம். இது பாஸிடிவ் வைபாம். இதை நம்பி, அந்தப் பையன் மாங்கொட்டைக்கு தண்ணீர் ஊற்றுவதை ஏதோ அவார்ட் படம் போலக் காட்டிச் சாவடிக்கிறார்கள். செத்தோம் பிழைத்தோம் என்று தப்பித்து வீடு வந்தேன்.

Share

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

இப்போதுதான் ராக்கெட்ரி திரைப்படம் பார்க்க முடிந்தது. Ready to fire புத்தகத்தை முன்பே படித்துவிட்டிருந்ததால், படமாகப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ என்கிற தயக்கம் இருந்தது. புத்தகம் முழுக்க பாதி நம்பி நாராயணன் மீது போடப்பட்ட வழக்கு பற்றியது என்றால், மீதி இஸ்ரோவின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றியது. எனவே ஒரு திரைப்படமாக இதை இந்தியாவில் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்தான். ஏற்கெனவே பல பயோபிக்சர்கள் தந்த கொடூரமான அனுபவமும் மனதில் ஓடியவண்ணம் இருந்தது.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், மாதவன் டீசண்டான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இத்தனை டெக்னிகல் சவால்கள் உள்ள ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்ததே ஆச்சரியம்தான். இந்தியாவின் பெருமைக்குரிய விஞ்ஞானி சாதனையாளரா தேசத் துரோகியா என்னும் ஒற்றை வரி சுவாரஸ்யமானதுதான். ஆனால் மாதவன் அதை மட்டும் படமாகச் செய்யவில்லை. எப்படி நம்பி நாராயணன் தன் புத்தகத்தை ஒரு விரிவான களமாகக் கொண்டாரோ அதே போல மாதவனும் தன் திரைக்களத்தை விரிவாக அமைத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் நம்பி நாராயணன் வழக்கு பற்றிய விஷயங்கள் மிகக் குறைவாகவே வருகின்றன.

நம்பி நாராயணன் உலகம் முழுக்கச் சுற்றி இந்தியாவின் இஸ்ரோவுக்கு வளர்ச்சியைக் கொண்டு வரப் பாடுபடும் காட்சிகள் அனைத்தும் மிக நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. நாம் காண்பது ஆங்கிலத் திரைப்படமோ என்னும் மயக்கம் வருமளவுக்குக் காட்சிகளின் தரம் உள்ளது. இதெல்லாம் எத்தனை பேருக்குப் புரியும், வணிக ரீதியாகப் படம் எப்படிப் போகும் என்றெல்லாம் மாதவன் அலட்டிக்கொண்டது போலவே தெரியவில்லை.

உலகத் திரைப்படங்களுக்கு உரிய ஒரு பொதுமொழி, பொறுமை. இந்தப் படமும் அதே பாதையில் மிகப் பொறுமையாக ஒவ்வொன்றையும் விவரிக்கிறது. ஃப்ரான்ஸ், ரஷ்யா தொடர்பான காட்சிகளின் விரிவும், வசனங்களின் ஆழமும் பிரமிப்பைத் தருகின்றன. இயக்கத்துக்காக மட்டுமின்றி வசனத்துக்காகவும் மாதவன் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். வளவள வசனங்கள் இன்றி, சுருக்கமாக, தீர்க்கமாக வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

மாதவன், சிம்ரன் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு விஷயமே அல்ல என்னுமளவுக்கு, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மேல்நாட்டு நடிகர்களில் இருந்து உள்ளூர் நடிகர்கள் வரை இதைச் சாத்திருக்கிறார்கள். இயக்குநர் மாதவனாக இந்தப் படத்தை அவர் தூக்கி நிறுத்தியது, இந்த நடிகர்களின் நடிப்பின் மூலமாகவே நிகழ்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

புத்தகத்துக்கும் திரைமொழிக்கும் உள்ள வேறுபாடுகள் தெரிந்தவையே. ஆனாலும் மாதவன் இன்னும் சில விஷயங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் சில விஷயங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கலாம். புத்தகத்தில் மிக ஆழமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் இங்கே விரைவான தொனியில் சொல்லப்படுகின்றன. குறிப்பாக உன்னி விஷயம். (புத்தகத்தில் பாலகிருஷ்ண பிள்ளை.) பாலகிருஷ்ணன் நம்பி நாராயணனை அறைந்ததாக எனக்கு நினைவில்லை. அந்தப் புனைவுச் சுதந்திரத்தை மாதவன் எடுத்துக்கொள்ளலாம்தான். ஆனால் ரத்தமும் சதையுமாக நம்பி நாராயணன் நம்முன் இருக்கும்போது ஏனோ நெருடுகிறது. உன்னி தொடர்பான காட்சிகள் புத்தகத்தில் நெடுக சொல்லப்படும்போது, அவர் மகன் இறந்து போயும் அவனிடம் மறைக்கப்பட்ட செய்தி ஒரு தாக்கத்தைக் கொண்டு வந்தது. திரைப்படத்தில் அதைச் சில நிமிடங்களில் சொல்லவேண்டிய கட்டாயம். எனவே அதன் தாக்கமும் குறைவாகவே உள்ளது. அதுவே உன்னி கைதுசெய்யப்பட்ட நம்பியைக் காணும் காட்சி வலுவாக வந்திருக்கிறது. காரணம், இரு காட்சிகளுக்கும் இடைப்பட்ட காலம்தான்.

இந்த உன்னி காட்சியையும், தொடக்க சில நிமிடங்களையும் விட்டுவிட்டால், படம் முழுக்க அறிவியல் திரைப்படம்தான் என்றே சொல்லிவிடலாம். வழக்கு ரீதியான விஷயங்கள் எல்லாம் ஒரு சீரியலைப் போல ஒரே டேக்கில் சொல்லி முடிக்கப்பட்டு விடுகின்றன. ஒரு நீதிமன்றக் காட்சி வந்தது போலக் கூட நினைவில்லை.

தமிழ்நாட்டில் இஸ்ரோவுக்கு இடம் கேட்கும்போது குடித்துவிட்டு வந்த திமுக மந்திரியைப் பற்றிய காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. படத்துக்கு அது தேவையில்லை என்று மாதவன் நினைத்திருந்தால், அதுவும் சரிதான். ஆனால் அதை வைத்திருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. 🙂

மாதவன் தவறவிட்ட அற்புதமான ஒரு விஷயம், உனக்குத் தெரிந்த முஸ்லிம் ஒருவன் பெயரைச் சொல் என்று போலிஸ் நம்பி நாராயணனை வற்புறுத்தும்போது அவர் சொல்லும் பெயர் ‘அப்துல் கலாம்’. இந்தக் காட்சி சினிமா ரீதியாகவே நன்றாக இருந்திருக்கும். மாதவன் இதையும் வைக்கவில்லை. ஒருவேளை ஒரு திரைப்படமாகப் பார்க்கும்போது நம்பி நாராயணனின் குத்தலான விளையாட்டைச் சிலர் புரிந்துகொள்ளாமல் போகக் கூடும் என்று மாதவன் நினைத்திருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

ஒரு சினிமாவுக்கே உரியவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதால், ஆங்காங்கே தெரியும் சில நாடகத்தனமான காட்சிகளையும் தாண்டி, இத்திரைப்படம் மிக முக்கியமானது. பயோ பிக்சரில் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறோம் என்று பெருமைப்படலாம்.

முதல் திரைப்படத்திலேயே இத்தனை பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கும் மாதவனை வாழ்த்துவோம். ஹே ராம் போன்ற ஒன் முவீ வொண்டராகத் தேங்கிவிடாமல் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களைத் தர மாதவனுக்கு வாழ்த்துகள்.

Share

வலிமை – ஹைடெக்

வலிமை – மிரட்டலாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து உச்ச நடிகர்களும் நகைச்சுவைக் காட்சிகள், காதல், குடும்பத்தைக் கொல்லும் வில்லன், பழிவாங்கல் என்று போய்க்கொண்டிருக்க, இது எதுவுமே இல்லாமல் ஒரு படத்தை நடிக்க முன்வந்திருக்கும் தைரியத்துக்காக அஜித்தை நிச்சயம் பாராட்டவேண்டும். ஒரு நவீன தொழில்நுட்பத் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார்கள். வித்தியாசமாக யோசித்து, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்து, லாபமும் பார்ப்பதெல்லாம் பெரிய சாதனை. வலிமை டீமுக்கு வாழ்த்துகள்.

மைனஸ் பாய்ண்ட் என்று சொல்லவேண்டுமானால், பேசி பேசியே அனைத்துப் பெரிய பிரச்சினைகளையும் அஜித் விடுவிப்பது, நீளமான அந்த பைக் ரேஸ், வில்லனை ஏமாற்றுவதை ஒரே போல் இரண்டு முறை செய்வது, என்னதான் லாஜிக் வேண்டாம் என்றாலும் அரசு வசம் இருக்கும் போதை மருந்தை அஜித் எடுப்பது இவையெல்லாம்தான். செண்ட்டிமெண்ட் அதிகம் என்று அனைவரும் சொன்னார்கள், நான் பார்த்தது எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் போல, அதில் அத்தனை செண்டிமெண்ட் இல்லை.

மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது, உச்சக்காட்சியில் கதாநாயகன் கொலைகாரர்களை மன்னித்து ஒரு வழக்கு கூட இல்லாமல் விடுவிப்பது – இது அராஜகம். என்னதான் கதாநாயகனுக்குக் காவடி எடுக்கவேண்டும் என்றாலும் இத்தனை தூரம் தரம் தாழவேண்டியதில்லை.

வில்லனை அஜித் காவல்துறை பஸ்ஸில் கொண்டு போகும் சேஸிங் காட்சி, மிக நீளமாக இருந்தாலும், அட்டகாசமாக இருந்தது. அஜித் நன்றாக இருக்கிறார், கெத்தாக இருக்கிறார், முக்கியமாக மிக நன்றாக நடிக்கிறார்.

செய்ன் அறுப்பு என்பது எனக்கு மிகவும் பதற்றம் தரும் ஒன்று. சில நிஜ வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். அதை நினைத்தாலே பதற்றம் வந்துவிடும். இந்தப் பதற்றத்தை அப்படியே திரையில் கொண்டு வந்த தமிழ்ப்படம் மெட்ரோ. உச்சக்காட்சிகள் மட்டுமே சொதப்பல். வலிமை திரைப்படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள், அஜித் வராதபோதும், பரபரப்பாக இருந்ததற்கு இந்த செய்ன் அறுப்புக் காட்சிகளும் அதை ஒட்டிய கொலைகளுமே காரணம். இன்னும் ‘மெட்ரோ’ படத்தை இப்படம் தொடவில்லை என்றாலும், வலிமையும் முக்கியமான பதிவுதான்.

இனி அரசியல். இவ்வளவு பார்க்கவேண்டுமா என்பவர்கள் இங்கேயே ஜூட் விட்டுவிடவும். என் நோக்கமே இதைப் பதிவு செய்யத்தான்!

பொதுவாகவே அஜித் ஹிந்துக்களுக்கு எதிராக வேண்டுமென்றே எதையும் திணிப்பதில்லை என்று இங்கே இருக்கும் அஜித் ரசிக ஹிந்துத்துவர்கள் சொல்வது வழக்கம். நானும் அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றுதான் நம்புகிறேன். இப்போதும்!

அதே சமயம் இந்தப் படத்தில் வந்திருக்கும் சில காட்சிகளைப் பற்றி ஒரு குறிப்பாவது எழுதி வைத்துக்கொள்வது நல்லது என்றும் தோன்றியது. இந்த இயக்குநரின் அடுத்த படத்துக்கு நமக்கு உதவலாம்! (இயக்குநர் மட்டுமே இதற்குப் பொறுப்பு என்று நழுவிவிடவும் முடியாது!) இதே இயக்குநரின் மிக முக்கியமான படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இப்படிப் பிரச்சினைகள் இருந்தன. மத ரீதியிலானது அல்ல, இவர்கள் இப்படித்தான் என்னும் மோசமான முத்திரை குத்தல் தொடர்பானது.

வலிமை படத்தில், குடிகாரனாக வரும் ஒருவன் பெரும் பட்டை போட்டுக்கொண்டு வருகிறான்.

ஐயப்ப மாலை போட்டிருக்கும் அண்ணன் ஐயப்ப மாலையைப் பாலில் கழற்றிப் போட்டுவிட்டுக் குடிக்கிறான்! அப்படிக் குடித்தால் பாவமில்லை என்று ஒரு நியாயமும் கற்பிக்கிறான். இதைப் பார்த்துவிட்டு இன்னும் எத்தனை பேர் ஆரம்பிக்கப் போகிறார்களோ..

வில்லன் கதாபாத்திரம், அதாவது செய்ன் அறுப்பு + போதை மாஃபியா + கொடூரக் கொலைகாரனை மட்டும் ஜி என்று அழைக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

மற்றபடி வலிமை வலிமைதான்!

Share

தி காஷ்மீர் ஃபைல்ஸ் – ஆஸாதியின் நிறம்

நான் அப்போது பதினோரம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்று வகுப்புக்கு வந்த ஆசிரியர், யாரெல்லாம் சைக்கிளில் போகிறீர்கள் என்று கேட்டார். பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுந்து நின்றோம். யார் எந்தப் பகுதி என்று கேட்டபோது, நாங்கள் டவுன் என்றும், பொதுவாக சிந்துபூந்துறை வழியாகச் செல்வோம் என்று சொல்லவும், எங்களை உட்காரச் சொல்லிவிட்டார். மேலப்பாளையம் வழியாக யாராவது போவீர்களா என்று கேட்டபோது, அப்படி யாரும் இல்லை என்று சொல்லவும், அப்ப பிரச்சினை இல்லை என்றவர், எதுக்கும் இன்றொரு நாள் விபூதி குங்குமத்தை அழிச்சிட்டுப் போங்க, நம்ம ஊர்ல பிரச்சினை இல்லைதான், எதுக்கும் கவனமா இருக்கட்டும் என்று தன்னுடன் வந்த இன்னொரு ஆசிரியருடன் பேசிக்கொண்டு போனார்.

இது நடந்தபோது, ஏன் இவர்கள் இப்படிக் கேட்கிறார்கள் என்று கூட எங்களுக்குப் புரியவில்லை. அப்போது அது ஒரு விஷயமாகக் கூடத் தெரியவில்லை. நாங்கள் எப்போதும் போல் சைக்கிளை ஜாலியாக ஓட்டிக்கொண்டு போனோம். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஊர் எப்போதும் போலத்தான் இருந்தது. பின்னர் புரிந்துகொண்டோம், அயோத்தியில் மசூதி உடைக்கப்பட்டதன் எதிரொலியாகவே ஆசிரியர் எல்லாரையும் எச்சரித்திருக்கிறார் என்று. முதல்நாள் உடைக்கப்பட்ட மசூதி விவரம் மறுநாள் திருநெல்வேலியில் எங்களுக்குத் தெரிந்துவிட்டிருந்தது. காஷ்மீரில் பண்டிட்டுகள் விரட்டப்பட்டார்கள் என்று தெரிந்தபோது எனக்கு வயது 22க்கு மேல். அப்போதும் அதை ஒரு அலட்சியத்துடன் அணுகியதை இப்போது வெட்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். அதன்பிறகு நான்கைந்து வருடங்கள் கழித்தே, அது விரட்டப்பட்டது மட்டுமல்ல, இனஒழிப்பு என்ற அதிர்ச்சியான உண்மை புரிந்தது. இன்று இந்த வலியை மிகத் தீவிரமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.

மசூதி உடைப்பு ஒட்டி எழுந்த கலவரங்களை நாடெங்கும் கொண்டு சேர்க்க முடிந்திருக்கிறது, ஆனால் காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இத்திரைப்படம் வந்தபின்னர் ஃபேஸ்புக்கில் பலர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். இப்படி ஒரு அவலம் நடந்தது பற்றி எப்படித் தெரியாமல் போனது என்று. ஹிந்து இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தவிர, சாதாரண மக்களுக்கு இந்தப் பெரிய கொடுமை தெரியவே இல்லை. இதே கேள்வியை இப்படத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியும் கேட்டிருக்கிறார்.

விவேக் அக்னிஹோத்ரியின் திரைப்படங்களின் ஆதாரமாக இரண்டைச் சொல்லலாம். ஒன்று, மூளைச் சலைவையால் குழப்பப்பட்ட இளைஞர்கள். இன்னொன்று, இதைச் செய்யும், அராஜகத்துக்குத் துணைபோகும், பொய்ச் செய்திகளைப் பரப்பும், உண்மைச் செய்திகளை மறைக்கும் ஊடகத் துறையினர். அர்பன் நக்ஸல்ஸ் என்னும் பதத்தை இவர் பரப்பியதே இதனால்தான். புத்தா இன் டிராஃபிக் ஜாம், தாஷ்க்ண்ட் ஃபைல்ஸ் மற்றும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் மூன்றிலும் இந்த இரண்டு அடிப்படைகளைக் காணலாம். இந்த அடிப்படைகளை உடைத்து, தான் சொல்ல வந்த உண்மையை ஒரு திரைப்படத்துக்கு ஏற்றவாறும் சொல்லிவிடுவது இயக்குநரின் அபாரத் திறமைதான்.

இதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் ஷிக்காரா என்றொரு திரைப்படத்தைப் பற்றியும் பேசவேண்டும். Our moon has blood clots என்றொரு புத்தகம், ராகுல் பண்டிதா எழுதியது. இந்தப் புத்தகத்தையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன். காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதைப் பற்றி விவரிக்கும் ஒரு புத்தகம் இது. ஹிந்துக்களுக்கு ஆதரவான தொனியில் அமைந்த புத்தகம் அல்ல இது என்பதை, ஆசிரியர் வேண்டுமென்றே ஆர் எஸ் எஸ் பற்றி ஒரு பக்கம் எழுதித் திணித்த குறிப்புகளில் இருந்து புரிந்துகொண்டாலும், இப்புத்தகத்தில் உள்ள தரவுகள் முக்கியமானவையே. அதுவும், ஹிந்துத்துவ சித்தாந்தத்தை எதிர்க்கும் ஒருவர் எழுதி இருப்பதால், இந்தத் தரவுகளை நம்புவதில் பெரிய சிக்கல் இருக்கமுடியாது. ஷிக்காரா படத்தைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது, இந்தப் புத்தகத்தைத் தொட்டுக்கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் என. ஆனால் யாருக்கும் எதற்கும் கொஞ்சம் கூடக் கோபமே வந்துவிடக் கூடாது என்ற ரீதியில், இத்தனை பெரிய இன ஒழிப்பை முலாம் பூசி ஒப்பேற்றி இருந்தார்கள். ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் குமுறலை, ஒரு குடும்பம் தன் வீட்டை இழந்த ஒரு நாஸ்டால்ஜியாவாக மாற்றி இருந்தார்கள். அந்த இழப்பின் பின்னால் இருந்த அநியாயங்களை மங்கலாக மட்டுமே காட்டி இருந்தார்கள். அந்தப் புத்தகத்தில் இருந்த தரவுகளைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு பெரிய அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு திரைப்படம் இத்தனை திராபையாகவா இருக்கும்? இந்த நேரத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் வந்திருப்பது எத்தனை முக்கியமானது என்று யோசித்துப் பாருங்கள்.

எத்தனையோ கொடூரமான திரைப்படங்களைப் பார்க்கிறோம். சைக்கோபாத் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, இரண்டு நாள்களில் மறந்துவிடுகிறோம். ஆனால், நாம் எதிர்பாராமல் பார்க்கும் ஒரு நிஜமான விபத்து வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாமல் ஆகிவிடுகிறது. உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளி இது. உண்மையில் நடந்த ஒரு வாழ்க்கையைத் திரைப்படம் ஆக்கும்போது அது நமக்குத் தரும் பதற்றத்தின் பின்னணியில் உள்ளது, ‘அது வெறும் புனைவல்ல, ரத்தமும் சதையும் சேர்ந்த உண்மை’ என்பதுதான்.

இப்படம் நம்மைப் பதற வைக்கிறது. முதல் பதினைந்து நிமிடங்கள் மிக முக்கியமானவை. கடைசி ஐந்து நிமிடங்கள் தரும் பதற்றத்தைப் பார்க்க திடமான மனம் வேண்டும். இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் ராதிமா மேனோனாக நடிக்கும் நடிகையும், அனுபம் கெர்ரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டென ரத்தம் தோய கண்கள் மூடாமல் மரிக்கும் அச்சிறுவனின் களங்கமற்ற முகம் என்றென்றும் மறக்க முடியாதது.

ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முன்னால் அது தொடர்பான அத்தனை தகவல்களையும் திரட்டி எடுப்பது விவேக் அனிஹோத்ரியின் பாணி. கூடவே அத்திரைப்படம் சொல்ல வரும் கருத்துக்கு எதிரான அனைத்துக் கருத்துக்களையும் அத்திரைப்படத்திலேயே வைத்து, அதற்கும் சேர்த்து பதில் சொல்வார். எந்த அளவுக்கு என்றால், இதுதான் உண்மையோ என்று உருவாக்கப்படும் பொதுப்புத்திக்கு ஆதாரமாக இவர் சொல்லும் வாதங்களையே வைக்கலாம் என்னும் அளவுக்கு. ஆனால் உண்மைப் பின்னணி நமக்குத் தெரியும் என்பதால், இந்தப் பத்திரிகையாளர்கள் எந்த அளவுக்குக் கீழிறங்கிப் புனிதப் பிம்பங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பது நமக்கு அதற்கு இணையாகப் புரிகிறது.

குழம்பிக் கிடக்கும் கிருஷ்ணன் தீவிரவாதியிடம் பேசும் காட்சி மிக முக்கியமானது. தனது பார்வையாக அந்தத் தீவிரவாதி முன்வைக்கும் பார்வையும், பாகிஸ்தானின் குரலும், இந்திய வெறுப்பாளர்களான ஊடகத்தினரின் பார்வையும் ஒரே போல இருப்பதைப் பார்க்கலாம். இது தற்செயல அல்ல. திட்டமிட்ட ஒன்றிணைப்பு. காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் விருப்பப்பட்டதைத் தந்துவிட்டால் என்ன என்று ஜனநாயகக் காவலர்கள் போல கம்யூனிஸ்ட்டுகள் பேசுவது சும்மா இல்லை. இந்தக் குரலுக்கான ஆதாரம் பாகிஸ்தானின் நியாயத்தில் இருந்து வருகிறது. கம்யூனிஸம் இந்தியாவுக்குத் தேவையா இல்லையா என்று இந்தியா முழுக்க வாக்கெடுப்பு நடத்தி தேவையில்லாத மாநிலங்களில் தடை செய்ய ஒப்புக்கொள்வார்களா இவர்கள்? இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர் என்ற பின்பு ஏன் வாக்கெடுப்பு? தேவையே இல்லை. நேரு வேறு வழியின்றி இதை ஒரு நல்ல முடிவு என்று சொல்லி இருந்தாலும் கூட, இனி தேவையே இல்லை.

ராதிகா மேனோன் பல பத்திரிகையாளர்களின் கலவை. அப்பட்டமான தோலுரிப்பு. தீவிரவாதி யாசின் மாலிக் மற்றும் கராத்தே பிட்டாவின் ஒன்றிணைப்பு. யாசின் மாலிக் பிபிசிக்கு அளித்த நேர்காணல் ஒன்றின் வீடியோவைப் பார்த்தேன். அதில் அவர் கொன்ற விமானப் படைக்காரர்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது வெளிப்படும் இளக்காரமான புன்னகையில் இப்படத்தின் அடிப்படை நியாயம் அமைந்திருக்கிறது. அரவிந்தன் நீலகண்டன் சொல்லி, கராத்தே பிட்டாவின் வீடியோவைப் (https://www.youtube.com/watch?v=c5Kw5bvvMfw) பார்த்தேன். அதில் அவன் சொல்கிறான், மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் அண்ணனையும் கொல்வேன், அம்மாவையும் கொல்வேன் என்று. எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இல்லை. இதே வசனம் இத்திரைப்படத்திலும் வருகிறது. இந்த வசனம் மட்டுமல்ல, பற்பல வசனங்கள் நிஜத்தில் யாராலோ எப்போதோ சொல்லப்பட்டவைதான்.

நிஜமான ஆஸாதி (சுதந்திரம்) மதம், மொழி, இனம், நிறம், ஜாதி பார்க்காது. மதவாத அடிப்படையிலான ஆஸாதி உண்மையான ஆஸாதிக்குக் களங்கம் கற்பிப்பதைத் தவிர, நாட்டைத் துண்டாடுவதைத் தவிர எதையும் சாதிக்காது. இத்திரைப்படம் அதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறது.

ஒரு திரைப்படம் என்ற அளவிலும் இத்திரைப்படம் தரமாகவே உள்ளது. மெல்ல நகரும் திரைப்படம்தான். யோசித்து யோசித்து வசனங்கள் வரும் திரைப்படம்தான். ஆனாலும் ஏன் இந்தியர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைப் பார்த்து வரவேற்றார்கள்? இது வெற்றுப் புனைவல்ல, உள்ளத்தை உலுக்கும் உண்மை என்பதால்தான். தரமும் உண்மையும் கூடி வந்தால் எந்த மொழியிலும் இதைச் சாதிக்க முடியும். தமிழிலும் இத்தகைய திரைப்படங்கள் எல்லாச் சார்பிலிருந்தும் வெளிவரவேண்டும். அதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ என்கிற ஏக்கம் வராமலில்லை.

370ம் பிரிவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான நியாயத்தையும், ஏன் நாட்டை நேசிப்பவர்கள் இந்தியாவை ஆளவேண்டும் என்பதையும்கூட இப்படம் சந்தேகத்துக்கு இடமின்றி வலியுறுத்தி இருக்கிறது. நிச்சயம் தியேட்டருக்குச் சென்று பாருங்கள் – மன தைரியத்துடன்.

Share