பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05)
நான்கு நாள்கள் கடுமையான வேலை செய்து களைத்துப்போனால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வது போன்ற நாளாக அமைந்தது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாள். எங்கு பார்த்தாலும் வெட்ட வெளி. 🙂 ’கூட்டம் குறைவாக இருப்பதால் விற்பனை நன்றாக இருக்கிறது, ஏனென்றால் நின்று படித்து வாங்குகிறார்கள்’ என்று ஒரு பதிப்பாளர் சொன்னார் என்று ஞாநி என்னிடம் கூறினார். சிரித்தேன். 😛 பல பதிப்பாளர்கள் அரங்கில் இல்லாமல் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருட்ந்தார்கள். நான் கிழக்கு கடையில் இருந்தேன். காலச்சுவடு, எனி இண்டியன், தோழமை வெளியீடு, உயிர்மை அரங்குகளைப் பார்வையிட்டேன்.
இன்று முதல் வரும் எல்லா நாள்களும் முழு வேலை நாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது பபாஸி. பல பதிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். சில பதிப்பாளர்கள் முழுநாளும் சும்மா இருக்கணுமா என்றார்கள்.
சென்ற ஆண்டு விளம்பரங்களை ஒப்பிடும்போது, பபாஸியின் இந்த ஆண்டு விளம்பரங்கள் குறைவாகவே இருக்கின்றன. சென்ற ஆண்டில் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரத் தட்டி முளைத்திருந்தது. சன் டிவியில் விளம்பரங்கள் வந்தன. இப்போது அதெல்லாம் காணாமல் போய்விட்டது. Cost cutting வேலையாக இருக்கலாம். சன் பண்பலையில் விளம்பரங்களைக் கேட்டேன். அது போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல.
தமிழக அரசின் குடும்ப விழாவான சங்கமத்திற்கு ஊடகங்கள் அடிக்கும் மஸ்கா அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். அதில் ஒரு சிறு பங்காவது ஊடகங்கள் புத்தகக் கண்காட்சியில் உள்ள அரங்குகளுக்குக் கொடுத்திருக்கலாம். ஒரு பத்திரிகைகூட உருப்படியாக புத்தகக் கண்காட்சி பற்றிய கவரேஜ் வெளியிடவில்லை. இங்கிருக்கும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் கவரேஜ் என்பது விளம்பரம் என்றாகிவிட்டது. அரைப்பக்கம் விளம்பரம் கொடுத்தால் அரைப்பக்கம் எழுதுவார்கள். அப்படியானால் பத்திரிகைகள் பதிப்பாளர்களைப் பற்றி, அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் பற்றி, அங்கு வரும் வாசகர்களின் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி, அங்கு செய்யப்படவேண்டிய மேம்பாடுகள் பற்றி எப்போதுதான் எழுதுவார்கள்? அப்துல்கலாம் வந்து திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ. (அவர் பேசும்போது கவிதை மாதிரி ஒன்றை சொல்லி, அதை எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள் என்று ஆசிரியராகிவிடுவார். 60 வயது கிழமெல்லாம் குழந்தைகளாகி கருமமே கண்ணாக அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். அவர் வராததால் அந்த சிறந்த நகைச்சுவைக் காட்சியைக் காணமுடியாமல் போய்விட்டது!) கருணாநிதி திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ, ஒரு கட்டுரை. இவ்வளவுதான் பத்திரிகைகள் அறிந்த விஷயம். அதை மீறி ஒரு விவாதப்பூர்வமான ஒரு கட்டுரையையோ, புத்தகக் கண்காட்சியின் தேவை, சிறப்புகளைப் பற்றியோ எழுதுவதில்லை. கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ புத்தகக் கண்காட்சியைக் குத்தகைக்கு எடுத்தாலொழிய அரசின் கவனம் இப்பக்கம் திரும்பும் என்று தோன்றவில்லை.
கிழக்கு அரங்கில் மாயவலை புத்தகம் விற்பனைக்கு வெளிவந்தது. பாரா இப்புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அது கை நழுவிக் காலில் விழுந்துதான் அவருக்கு அடிபட்டது என்கிற செய்தியெல்லாம் இப்போது வெளியே கசியத் தொடங்கியிருக்கிறது.
இன்று முதல் வரும் ஆறு நாள்களும் ஆகும் விற்பனையைப் பொருத்தே ஓர் அரங்கின் ஒட்டுமொத்த விற்பனை வெற்றியா தோல்வியா என்பது தெரியும். ஆறு நாள்களில் நான்கு நாள்களாவது நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம். சென்னையில் வீட்டுக்குள் அடைந்துகொண்டிருக்கும் மக்களைப் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டு வருவது எப்படி? முதலில் எங்கிருந்தும் புத்தகக் கண்காட்சிக்கு வர பேருந்துகள் தேவை. புத்தகக் கண்காட்சி முடிந்து வீட்டுக்குச் செல்ல, பேருந்தை நம்பி ஒரு பதிப்பாளரோ வாசகரோ வந்தால் பெரும் கஷ்டம்தான். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். சங்கமம் குடும்ப விழாவிற்கு ஒரு கோடி தரும் முதல்வர், புத்தகக் கண்காட்சிக்கென சில பேருந்துகளை இயக்குவது பற்றி சிந்திக்கலாம். பபாஸியிலிருந்து இக்கோரிக்கை பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். இதிலென்ன பெரிய நஷ்டமோ, கஷ்டமோ அரசுக்கு இருந்துவிடமுடியும் என்பது புலப்படவில்லை. பெண்கள் வீட்டுக்குச் செல்ல படும் பாட்டை பார்க்க பாவமாக இருக்கிறது.
இயக்குநர் சுகா வந்திருந்தார். சுகுமாரனைத் தேடி கவிதையைக் கண்டடைந்தார். அந்தக் கொடுமையை அவரே எழுதுவார். கவிஞர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். உங்களால் மறுக்கமுடியாத வகையில், லட்டு என்று சொல்லி, எப்போது வேண்டுமானாலும் ‘வெடிகுண்டு’ ஒன்றைக் கையில் திணிப்பார்கள்.