Archive for சிறுகதை

வயிறு – சிறுகதை

தாசிவப் பண்டாரத்தின் சங்கொலி இரவின் எல்லாத் திசைகளிலிலும் பரவி அதிர்ந்தது. சிறிய சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியும் எப்போதும் சிரித்து அருள் பாலிக்கும் முருகனும் வேப்ப இலைகளைக் கூட்டி தீமூட்டி கொசு விரட்டும் பாண்டியும் தவிர யாரும் அதைக் கேட்டிருக்கமுடியாது. பண்டாரம் அதிகக் கவலை கொள்ளும்போதோ பழம் நினைவுகள் அவரைத் துரத்தும்போதோ அன்றைய இரவுகளில் முருகனே வந்து நிறுத்தச் சொன்னாலும் சங்கூதுவதை நிறுத்தமாட்டார். அதில் ராகமெல்லாம் கிடையாது. ஒரே மாதிரியான இழுவை மட்டுமே. வேகம் அதிகரிக்கும்போது சங்கொலியின் சத்தம் கூடும். ‘சரி வுடு’ என்று பாண்டி சொல்லும்போது சில சமயம் அடங்கிப் போவார். சில சமயம் இன்னும் சத்தமாய் ஊதி ஒதுங்க இடம் தேடும் ஒன்றிரண்டு நாயை விரட்டி வைப்பார்.

அன்றைய தினம் பண்டாரத்தின் கோபத்துக்குக் காரணமானவர்கள் இரண்டு சிறுவர்கள். எந்தக் குடும்பமோ நேர்ச்சைக்காக பால் குடம் எடுக்க வந்திருந்தார்கள். பால் குடம் எடுக்கும் அன்று சதாசிவப் பண்டாரமே முக்கியப் புள்ளி. அவர் சங்கூதிக்கொண்டே குறுக்குத்துறை பிரகாரங்களில் செல்ல, அந்த ஒலியின் மீது கால்வைத்தே சனங்கள் பின்னால் வரும். மலையைக் குடைந்து ஓட்டையுடன் கிடக்கும் பிரகாரத்தின் ஓட்டைகள் வழியே வெயில் அவர் மேலே வழியும்போது அவர் ஆனந்தப் பரவசமாகி சிவனே சங்கூதுவதாக எண்ணிக்கொண்டு ஊதுவார். கோவில் பூசாரி போதும் என்று சொல்லுமட்டும் ஊதிக்கொண்டே இருப்பார். வலது கையால் சங்கைப் பிடித்துக்கொண்டு, இடது கையால் கழுத்தில் கிடக்கும் உத்திராட்சைக் கொட்டைகளை அவர் சரி செய்யும் காட்சி அவருக்கு இஷ்டமானது. அடிக்கடி அதைச் செய்வார். சில பையன்கள் பால்குடத்தைப் புகைப்படம் எடுத்தபோது, இடது கையால் சைகை செய்து தன்னை ·போட்டோ எடுக்கச் சொன்னார். அவர் அப்போது கொடுத்த போஸ் குறித்த கர்வம் எப்போதும் அவருக்கு உண்டு. நெஞ்சை நிமிர்த்தி, உத்திராட்சக் கொட்டைகள் மார்பில் தனித்து தெரியும் வண்ணம், வலை கையில் சங்கைப் பிடித்துக்கொண்டு, பார்வதி மட்டுமே அருகில் இல்லை என்கிற பாவத்துடன் கொடுத்த போஸ் அது. அப்போது ஒரு சிறுவன் ‘எல, அவர் வயித்த பாத்தியா’ என்றான். ‘ஆமால, தினுசே இல்லாம கெடக்கே, பயமா இருக்குலே’ என்றான் இன்னொரு சிறுவன். சகலமும் சுருங்கி போனது பண்டாரத்துக்கு.

பாண்டி மெல்ல “சரிவே வுடும், ஒதுங்கிக் கெடக்க பண்டாரத்துக்கு வயிறு எப்படிருந்தா என்னவே. கொமரிங்க வந்து தடவப்போறாளுகளா” என்றார். பண்டாரத்திற்கு சமாதானம் ஆகவில்லை. தொண்டை வறண்டு போனதால், சங்கை ஓரமாக வைத்துவிட்டு, பாதி புகைக்காமல் கிடந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்தார். தொண்டைக்கு இதமாக இருந்தது. அவரும் அவர் வயிற்றைப் பற்றிச் சில தினங்கள் நினைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அவரது வயிறு பெரும் தொப்பையைப் போன்று வீங்கித்தான் கிடந்ததாக நினைத்திருந்தார். இரவுகளில் தூண்களில் சாய்ந்து படுத்துறங்கும்போது தனது வயிற்றையே தூணுக்கு அண்டை கொடுத்துப் படுத்துக்கொள்வார். சில மாதங்கள் கழிந்தபோது வயிறு ஒரு தினுசான வடிவத்தில் இருப்பதாகத் தோன்றியது. பிரமையாக இருக்கலாம் என்று நினைத்தார். அன்று வந்த பூசாரி திடீரென்று ‘என்னவே வயிறு தினுசாயிட்டு கெடக்கு’ என்றார். தன் வயிற்றை ஒரு கணம் பார்த்துவிட்டு, ‘ஒம்ம வயிற நீரு பாரும்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டார். அன்றிரவு பாண்டியிடம் கேட்டார். ‘அப்படி ஒண்ணும் தெரியலயே பண்டாரம்’ என்றான். பண்டாரத்தை ஒரு சிநேகப் பார்வை பார்த்துவிட்டு, வழக்கம்போல் வயிற்றை தூணுக்கு அண்டை கொடுத்துப் படுத்தார். மறுநாள் அவரது புகைப்படத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான் பால்குடத்துக்கு வந்து படம் எடுத்தவன். அவருக்கே கொஞ்சம் திக்கென்றிருந்தது அவரது உருவத்தைப் பார்த்தபோது. முடியெங்கும் சடை கட்டி, நான்கைந்து உத்திராட்ச வரிசைகள் கழுத்தில் தொங்க, மார்பு வீங்கி, வயிறு உருவமற்று உருண்டு கிடந்தது. இத்தனை நாள் கண்ணாடியில் முகம் பார்த்திருக்கிறாரே ஒழிய அவரது வயிற்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு எழவில்லை. மனதில் பெரும் பாரம் இறங்க ‘சிவ சிவா’ என்றார்.

‘டவுணாஸ்பத்திரிக்கு போவுமே’ என்றான் பாண்டி. ‘அது மட்டுந்தான் பாக்கி கெடக்கு’ என்று அலுத்துக்கொண்டார் பண்டாரம். ‘ஊதற மட்டும் ஊதுவோம், சிவன் பாத்துக்குவான்’ என்பது அவரது எண்ணம். ‘நீரு வாயில நல்லா சொல்லுதீரு, ஆனா வயிறு இப்படி ஆயிட்டுன்னு ரொம்ப மருகிற மாதிரி தெரியுதுவே’ என்றான் பாண்டி. பண்டாரம் ஒன்றும் சொல்லவில்லை. லேசாக வயிற்றைத் தடவிப் பார்த்துக்கொண்டார். வலதுபக்கம் வீங்கி இடது பக்கம் சுருங்கி கரும் நிறத்தில் வடிவமற்ற இலகுவான பாறை போன்று உருண்டது. ஏனோ அழவேண்டும் போல இருந்தது பண்டாரத்திற்கு. பாண்டி, ‘சங்க எடுத்துறாதீரும்’ என்று பல்லைக் காட்டிச் சிரித்தான்.

மறுநாள் பூசாரி கோயிலைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். வாசலில் சடைமுடியுள் கையைவிட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார் பண்டாரம். பாண்டி நீர் மொண்டு கொடுக்க ஆற்றுக்குள் இறங்கியிருந்தான். பூசாரி ஆரம்பித்தான். ‘பண்டாரம், சொல்றேன்னு வெடைக்காத. டவுணாஸ்பத்திரிக்கு போய் வயிறு வீங்கிக் கெடக்குன்னு சொல்லி மாத்திர மருந்த வாங்கிப் போடும். வயிறு வெடிச்சு செத்துடாதீரும்’ என்றார். பண்டாரம் எரிச்சலுடம் ‘ஒன் வேலய பாரு சாமி’ என்றார். ‘ஏன் சொல்லமாட்டீரு, வேளைக்கு பிரசாதம் கொடுக்கேன்ல, வாய் இப்படித்தான் பேசும்’ என்றார். ‘நீரு கொடுக்கலைன்னா எவனாது கொடுப்பாம்’ என்றார் பண்டாரம். பாண்டி வந்து, ‘ஐயர் சொல்றதுல காரியம் இருக்குவே. சோத்துக்கில்லாம வயிறு வீங்கிச் செத்தா அசிங்கமில்லியா’ என்றான். மெல்ல கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, ‘விசாலத்தயும் பாத்த மாதிரி இருக்கும், டவுணாஸ்பத்திரிக்கு போரும்வே’ என்றான். அன்றிரவு பண்டாரம் ஊதிய சங்கின் ஒலி கைலாயத்தை அடைந்து சிவனின் காதையே கிழித்திருக்கவேண்டும். கடுமையான ஆங்காரத்துடன் எழுந்த ஒலி அது. பாண்டி லேசாக நடுங்கினான். கைலியை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிப்போனான்.

விசாலம் ஒரு தடவை பண்டாரத்திடம் உத்திராட்சக் கொட்டை கேட்டு வந்தாள். பண்டாரம் கர்வத்துடன் தன்னிடமிருந்த முப்பத்திரண்டு பக்க உத்திராட்சத்தை தரமுடியாது என்று சொல்லி அனுப்பினார். ‘கேட்டியா, இது சிவனே நேர்ல தந்ததாக்கும். நீ பசப்பிக்கிட்டு வந்து மொலயக் காட்டி நின்னா தந்துடுவானா இவன்’ என்று திட்டி அனுப்பினார். பூசாரியிடம் சொன்னார், ‘எங்க எவன்கிட்ட எது இருக்குன்னு இவளுவளுக்கு எப்படித்தான் தெரியுமோ’ என்று. ஆனால் விசாலம் விடுவதாய் இல்லை. தினமும் வந்தாள். அவளது எடுப்பான பல்லைப் பற்றிச் சொல்வார் பண்டாரம். அவள் பதிலுக்கு அவரது வயிறை சொல்லிக்காட்டிச் சிரிப்பாள். மெல்ல மெல்ல எடுப்பான அவளது பல் மறைய, பண்டாரத்திற்கு அவள் உடலின் தினவு தெரிய ஆரம்பித்தது. பண்டாரமும் விசாலமும் எச்சிலொழுகப் பேசுவதைப் பாண்டி வாய் பார்த்துக்கொண்டு நிறபான். ஒரு தடவை பூசாரியிடம் சொல்லி ‘இது சிவனுக்கே அடுக்குமா’ என்றான். பூசாரி பாண்டி சொன்னதைக் கேட்டு ‘போல அந்தால’ என்று விரட்டினார்.

டவுணாஸ்பத்திரியில் விசாலத்தைப் பார்த்து ‘காரியத்த சொல்லு’ என்று பூசாரி கேட்டதும், ‘அது கைல 32 பக்க உத்திராட்சம் கெடக்கு. அது சிவனே கொடுத்ததாம். யார்கிட்டயும் சொல்லிப்பிடாதேயும். அது கெடச்சா நிறைய மந்திரம் செய்யலாம்னு சொல்லி கேட்டுவிட்டது பரமசிவம். அதுக்குத்தான்’ என்றாள். பூசார் கெக்கெ பிக்கெ என்று உடல் குலுங்கிச் சிரித்து, ‘அவன் சொன்னானாம் இவ நம்பினாளாம் அவன் அனுப்பினானாம், இவ வந்தாளாம் எக்கேடும் கெட்டுப் போங்க, கோவில்னு மனசுல வெச்சிக்கிடுங்க’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். விசாலத்திற்கு யோசனையாய் இருந்தது.

அன்று இரவு தூணுக்கு பதில் விசாலத்திற்கு அண்டை கொடுத்துப் படுத்திருந்தார் பண்டாரம். அவரது வயிற்றை விசாலம் தடவ ‘கேலி பண்ணுவியேட்டி’ என்றார் பண்டாரம். ‘புடிக்காமயா கேலி’ என்றாள் விசாலம். பல நாளாக அலசாத சடை முடியிலிருந்து எழுந்த வீச்சமும் விசாலத்தின் வாயிலிருந்து எழுந்த துர்நாற்றமும் வெளியெங்கும் பரவியது. பாண்டி சுருட்டு பிடித்து அந்த நாற்றத்தை ஓட்டினான். மறுநாள் காலை பண்டாரம் எழுந்து குளிக்கப்போகும்போது அவரது உத்திராட்ச மாலை அறுந்து கிடப்பதைப் பார்த்தார். சிவன் கொடுத்த உத்திராட்சத்தைக் காணாமல் ஒரு நிமிடம் பதறினார். பின்பு பதற்றப்படவேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் விசாலத்தைப் பார்க்கவில்லை. அவளும் ஏனோ வரவேயில்லை. பாண்டி டவுணாஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்தபின்பு பண்டாரத்திடன் விசலாம் விசாரித்ததாகக் கூறுவான். அசட்டுச் சிரிப்பு சிரிப்பார் பண்டாரம். ‘சிரிக்காதேரும், அவளுக்க சோலியே இப்ப இதுதானுட்டு கேள்வி.’

‘அப்ப ஒருவாட்டி போயி பாக்கலாங்கியா’ என்றார் பண்டாரம். ‘பின்ன, அதுல்லா ஆம்ளைக்கு அளகு’ என்றான் பாண்டி.

பண்டாரம் ஆற்றில் குளித்து, முடி காயவைத்து, சடை கட்டி, வயிற்றுக்கு விபூதி பூசி டவுணாஸ்பத்திரிக்குக் கிளம்பினார். கூட பாண்டியும் ஒட்டிக்கொண்டான். ஆஸ்பத்திரியில் அவரைப் பார்த்த சிறுவர்கள் அவரது வயிறைக் கேலி செய்து ஓடினார்கள். கூட இருந்த பாண்டி அவரது வாட்டத்தைப் போக்கும் வண்ணம் எதாவது சொல்லிக்கொண்டே வந்தான். சீட்டெழுதிக் கொடுத்தார்கள். டாக்டரிடம் ‘கடுமையான வயித்தவலி கேட்டீளா’ என்றார் பண்டாரம். டாக்டர் ஊசிக்கு எழுதிக்கொடுத்தார். ஊசி போடும் அறையில் விசாலம் பெருக்கிக்கொண்டிருந்தாள். பாண்டி ‘பாரும்வே ஒம்ம பார்வதிய’ என்றான். எடுப்பான பல்லைத் தவிர எதையுமே காணவில்லை பண்டாரம். அவருக்கு திக்கென்றிருந்தது. சிவன் சூலத்தோடு அவரது தலைக்குள் ருத்ர தாண்டவம் ஆடுவது போல இருந்தது. உடனே அங்கிருந்து போய்விட அவசரப்பட்டார். ‘இம்புட்டு வந்துட்டு பேசாம போனா எப்படி’ என்றான் பாண்டி. அவரது கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் பயந்து, ‘சரி போயிடலாம்’ என்று அவரைக் கூட்டிக்கொண்டு குறுக்குத்துறைக்கு வந்துவிட்டான். பூசாரி ‘இன்னிக்கு காரியம் எதுவும் உண்டுமால?’ என்று கேட்டார். பாண்டி கண்ணைக் காட்டினான். பண்டாரம் எதுவும் பேசவில்லை.

இரவில் சங்கொலி பாண்டியின் காதைத் துளைத்தது. தூணுக்கு வயிற்றை அண்டை கொடுத்துப் படுத்தபோது பண்டாரத்திற்குக் கண்ணீர் வந்தது.

நன்றி: பிப்ரவரி 2008, வடக்கு வாசல்.

Share

சனி – சிறுகதை

ஸிக்குத் தூக்கமே வரவில்லை. கனவுகளில் சனி பூதாகரமாக வந்து அவன்முன் நின்று பல்லை இளித்துக்காட்டியது. அவன் ஓட ஓட துரத்தினான். சனியைப் பிடிக்கவே முடியவில்லை. அவனுக்கே அதைப் பற்றி நினைத்தபோது கேவலமாக இருந்தது. கனவில் கூட அவனால் சனியைப் பிடிக்க முடியவில்லை. அதன் சாயல் நன்றாக நினைவிலிருந்தது அவனுக்கு. ஆயிரம் எலிகள் அவன் முன்னே வந்து கெக்கலித்தாலும் அவனுக்கு பிரச்சினைக்குரிய சனியைக் கண்டுபிடித்துவிடமுடியும். பரம்பரை பரம்பரையாக வரும் பகையை கூட அவன் மன்னிக்கத் தயாராயிருந்தான். ஆனால் சனியை அவனால் மன்னிக்கமுடியாது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு இரவில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் அந்த எலி ஓடிவந்தது. அவன் அதை விரட்டுமுன்பு டிவியின் அடியிலுள்ள மேஜையின் கீழே புகுந்துகொண்டது. அவனால் அதை நம்பவேமுடியவில்லை. எப்படி ஒரு எலி ஓடிவந்து வீட்டிற்குள், அதுவும் கண்ணெதிரே இப்படி புகமுடியும்? உடனடியாக மேஜையைப் புரட்டிப் பார்த்தான். எலியைக் காணவில்லை. அதிசயமாக இருந்தது அவனுக்கு. எலியைத் தேடு தேடென்று தேடினான். வீடெங்கும் தேடியும் எலியைக் காணவில்லை. அந்தத் தோல்வியை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி கண்முன் நுழைந்த எலி காணாமல் போகும்? களைத்து தூங்கத் தொடங்கியிருந்தபோது சமையலறையிலிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்கிய ஒலியில் அதிர்ச்சி அடைந்தவன் அன்று முழுவதும் உறங்கவே இல்லை. அந்த ஒலி அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஏதோ ஒரு பயத்தை கிளப்பிவிட்டிருந்தது. எத்தனை யோசித்தும் அந்தப் பயம் எங்கிருந்து தூண்டப்பட்டது என்பதை அவனால் கண்டடையவே முடியவில்லை. அதன் காரணகர்த்தாவான சனியின் மீது அவன் வெறுப்பு முழுதும் குவிந்தது.

மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் பார்த்தான். எலியைக் காணவில்லை. ஓய்ந்து படுக்கையில் விழுந்தபோது, அப்படுக்கையின் மெத்தையிலிருந்து சில பஞ்சுகளைப் பறக்கவிட்டு எலி பாய்ந்தோடியது. அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தான். வெளியில் சென்று வீரியமிக்க பூனை ஒன்றை வாங்கிவந்தான். வீட்டுக்குள் விட்டான். பூனை புதிய இடத்தைக் கண்டு மிரண்டு அங்குமிங்கும் ஓடியது. கடுமையாகக் கத்தியது. அதன் சத்தம் அவனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் அந்த எலியை விடக்கூடாது என்று முடிவு செய்திருந்தான்.

பூனைக்கு வகைவகையாக முட்டையும் பிரெட்டும் வாங்கிக்கொண்டு வந்து பழகினான். பூனை முட்டையையும் அவனையும் மிகவும் நேசிக்கத் தொடங்கியது. பகலெங்கும் வீடைச் சுற்றும் பூனை, இரவில் அவன் வந்து தரும் முட்டையையும் பிரட்டையும் தின்றுவிட்டு அவனுக்கு முன்பே உறங்கியது. எலியைப் பிடிக்கவில்லை. அதேசமயம் எலியையும் வெளியில் காணவில்லை. ஆனால் எலி வீட்டை விட்டுப் போயிருக்காது என்று உறுதியாக நம்பினான் கஸி. அத்தனை எளிதான எலி அதுவல்ல என்பது அவனுக்குத் தெரியும். அந்த எலிக்கு பழங்கால மாய தந்திரங்கள் தெரிந்திருக்குமோ என்று கூட யோசித்த தினம் நினைவுக்கு வந்து கொஞ்சம் கூசிப்போனான். பக்கத்துவிட்டு நண்பனொருவன் பூனையைப் பட்டினி போட்டால்தான் எலியைப் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, மூன்றாம் வீட்டுக்காரன் “எதுக்கும் போலீஸ்ல சொல்லிடுங்கோ. இந்தக் காலத்து எலிங்கள அப்படி நம்பிடமுடியாதுன்னா” என்றார். அவன் முறைத்த முறையில் கொஞ்சம் பயந்து, “அது ·போன் பண்ணி உங்கள காலிபண்ணினாத்தான் உங்களுக்கு உறைக்கும்” என்று சொல்லி சிரித்துக்கொண்டே கதவைப் பூட்டிக்கொண்டார். அவர் சிரிப்பு கதவை மீறி வெளியில் வந்து அவன் கண்களைச் சிவப்பாக்கியது.

அன்று பூனையைப் பட்டினி போட்டான். ப்ளூ கிராஸ் நண்பர்களுக்குத் தெரிந்தால் அவனை உள்ளே தள்ளிவிடுவார்கள் என்கிற பயம் ஒருபுறமிருக்க, எலியைக் கொல்லவே அவன் அந்த முடிவுக்கு வந்தான். பூனை மட்டும் அந்த எலியைப் பிடித்துவிட்டால் அதற்கு என்னென்ன உபசாரங்கள் செய்யப்போகிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

அன்றிரவு பூனையைப் பட்டினி போட்டுவிட்டு படத்திற்குச் சென்றான். படத்தில் ஒரு எலி ஓயாமல் பூனையைத் துரத்தியது. ஏந்தான் இந்தப் படத்திற்கு வந்தோமோ என்று நொந்துகொண்டான். இடைவேளையில் பக்கத்திலிருக்கும் ஒருவரிடம் ‘எலியைத் துரத்தும் பூனைப்படம் எந்த தியேட்டர்ல ஓடுது’ என்று கேட்டான். கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டதாக முறைத்த அவர் கையிலிருந்த பாப்கார்னைத் திங்கத் தொடங்கினார். அவனுக்கு எரிச்சலாக வரவும் உடனே எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டான்.

வீட்டின் கதவைத் திறக்கும்போது பூனை அவன் படுக்கையில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. டிவிக்குச் செல்லும் வயர்கள் அனைத்தும் துண்டு துண்டாகக் கிடந்தன. ·பிரிட்ஜுக்குள் அவன் வைத்திருந்த பிரெட் முழுதும் தூள் தூளாகிக் கீழே சிதறிக் கிடந்தது. இவனால் அக்காட்சியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு நிமிடம் பூனையின் மீது சந்தேகம் வந்தது. உடனே அப்படி இருக்கமுடியாது என்கிற முடிவுக்கு வந்தான் கைலியிருந்த டிக்கட்டைச் சுருட்டி பூனையின் மண்டையைக் குறிவைத்து எறிந்தான். பூனை அதிர்ச்சி அடைந்து எழுந்து அவனைப் பார்த்தது. அவந்தான் என்று தெரிந்தவுடன் லேசாகச் சிரித்துவிட்டு தூங்கிப் போனது. எப்படி பசியைத் தாங்கும் பூனை? நண்பன் சொன்னான், “நாலு நாளாவது சாப்பிடாம இருக்கும் பூனை. நாலு நாள் அப்படியே விடு, பார்க்கலாம் அது எப்படி எலிய பிடிக்காம இருக்குன்னு.”

இந்த எலியைப் பிடிக்க இன்னும் நாலு நாள் காத்திருக்கவேண்டும் என்பதே அவனுக்கு அவமானம் தரும் விஷயமாக இருந்தது. பூனைக்கு அதிகம் பசியை உண்டாக்கும் மருந்தை தேடி வாங்கிக்கொண்டு வந்தான். அதை பூனைக்குக் கொடுத்தான். அன்றிரவு பூனையை தனியே விட்டுவிட்டு, படத்திற்குச் சென்றான். எந்தப் படத்திற்கும் டிக்கெட் கிடைக்காமல் மீண்டும் முதல் நாள் பார்த்த படத்திற்குத்தான் டிக்கெட் கிடைத்தது. அதைப் பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம் என்று வீதியில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தான். ஒருவித எதிர்ப்பார்ப்போடு கதவைத் திறந்தான். வீடெங்கும் பூனையில் உடல்துண்டங்கள் சிதறிக்கிடந்தன.

முதன்முறையாக ஒரு எலிக்குப் பயந்தான். மூன்றாம் வீட்டுக்காரர், “நான் தான் சொன்னேனே ஹா ஹா ஹா” என்று கெக்கலிப்பது போல் அவனுக்கு தோன்றியது. ஒரு சாயலில் அந்த எலியின் சாயல் அவர் முகத்தில் தெரிந்தது போல் இருக்கவும் கஸி அவரை முழுமையாக வெறுத்தான். பகக்த்துவீட்டு நண்பன், சில பெருச்சாலிகள் அப்படி துவம்சம் செய்வது உண்டென்றாலும், பூனையை எந்த எலியும் கொன்றதில்லை என்றும் சொன்னான். அவனுக்கு பயமாகவும் தன் மீதே கேவலமாகவும் இருந்தது. அன்றிரவுதான் அவன் கனவில் முதன்முதலாக எலி வந்தது. பக்கத்துவிட்டுக்காரனிடம் பேசும்போது அந்த எலியை சனி சனி என்று திட்டுவான். ஒருவாறாக அந்த எலியின் பெயரே சனி என்று ஆகிப்போனது.

அதன் பிறகு கிட்டத்தட்ட ஏழு நாள்கள். வரிசையாக என்னென்னவோ செய்தான். சிலிண்டரில் ஒரு வாயு விற்கிறது என்றும் அதை பீய்ச்சினால் எலிகள் ஓடி வந்து செத்துவிழும் என்றும் சொன்னார்களென்று அந்த வாயுவை வாங்கிக்கொண்டுவந்து பீய்ச்சினான். கடுமையான செலவு பிடித்தது. தன் கையிலிருக்கும் பணம் முழுதும் செலவழிந்து தான் பிச்சை எடுக்க நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தே அதைச் செய்தான். சரியாக ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது, எதிர்த்த வீட்டு பகக்த்துவீட்டு எலிகள் எல்லாம் ஓடி வந்து செத்து விழுந்திருந்தன. ஆனால் சனியைக் காணவில்லை. அவனுக்கு சனியின் சாயல் நன்றாகத் தெரியும், சனி சாகவில்லை. சனியைக் காணவில்லை என்று நண்பனிடம் சொன்னான். அவன் சொன்னான், ‘எங்க வீட்டுல இப்ப எலியே இல்லடா. ரொமப் தேங்க்ஸ்டா’ எங்கிருந்தோ சனியின் அகங்காரச் சிரிப்பு வீட்டுக்குள் ஒலித்தது. தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான்.

தொடர்ந்து கனவுகளில் சனி அழிச்சாட்டியம் செய்தது. பக்கத்து வீட்டு நண்பன் இன்னொரு உபாயம் செய்தான். எங்கிருந்தோ ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வ்ந்து, அதிலுள்ள சில முறைகளைச் சொன்னான். கஸி சிரித்தான். எதை எதையோ துவம்சம் செய்துவிட்ட எலி இதற்கு எப்படி அகப்படும்? நண்பனின் வற்புறுத்தலில் சரியென ஒப்புக்கொண்டான்.

வீதிகளில் அலைந்து ஒரு மரத்தாலான எலிப்பத்தாயத்தையும் ஒரு வெங்காய வடையையும் வாங்கினார்கள். எலிப்பத்தாயம் விற்பவன் ஒரு கேலியோடு அதைக் கொடுத்தான். ‘இன்னும் இதுக்கு மதிப்பிருக்குதுன்றீங்க?’ கஸி அவனை முறைத்துவிட்டு வீட்டுக்கு வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் சனியின் ஓட்டத்தை அவனால் உணர முடிந்தது. கையிலிருந்த வெங்காய வடையை முகர்ந்து பார்த்தான். அந்த மணம் சனியை அல்லாட வைக்கிறது என்பது புரிந்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இது மட்டும் சக்ஸஸ் ஆனால் எப்படி இருக்கும்? ஆரம்ப கட்டத்திலேயே இதைப் பயன்படுத்தியிருந்தால் எவ்வ்ளவு மிச்சமாகியிருக்கும்? நிறையப் பணம், ஒரு பூனையின் உயிர், கொஞ்சம் வயர், கொஞ்சம் பஞ்சு, நிறைய பிரட். எல்லாம் இப்போது வீணாகப் போய்விட்டது. என்றாலும் பரவாயில்லை. பிரச்சினை தீர்ந்தால் சரி.

இதுவரை அவன் எலிப்பத்தாயத்தில் வெங்காய வடையை வைத்ததே இல்லை. முதலில் சரியாக வைக்கவரவில்லை. பின்பு கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தியதும் அதன் எளிமையான சூத்திரம் பிடிபட்டுவிட்டது. லாகவமாக வெங்காய வடையை வைத்தான். பத்தாயத்தின் மேலே இருக்கும் கொக்கியை பத்தாயத்தின் முதுகின் மிக நுனியில் மாட்டி வைத்தான். சனி உள்ளே நுழைந்து வடையைத் தொட்டாலே போதும், சட். பின்பு அதை உண்டு இல்லையென்று ஆக்கிவிடலாம். நிறைய கேள்விகளைத் தயார் செய்துவைத்துக்கொண்டான். இதையெல்லாம் நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேக்கணும் என்பார்களே, அப்படி கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

இரவு மிகவும் மெல்ல வருவதுபோலத் தோன்றியது. ஏன் பகலில் சனி வ்ந்து வெங்காய வ்டையைத் தின்று தொலைக்கவில்லை?

இரவு வ்ந்த்ததும் சனிப்பத்தாயத்தை சரியான இடத்தில் வைத்துவிட்டு, மனதிற்குள் ‘சீ யூ’ சொல்லிவிட்டு, அறையைப் பூட்டிவிட்டு படத்திற்கு போனான். ஆச்சரியமாக அன்று விசிலடித்தான். அன்றைக்கு பூனை எலியைத் துரத்தும் படம். பூனை எலியைத் துரத்து துரத்தென்று துரத்தியது. திரையில் ஒன்றுமே திரையிடப்படாத நேரத்தில்கூட கைதட்டி ஆரவாரம் செய்தான். பக்கத்திலிருப்பவன் கடுப்பாகி ‘வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்’ என்றான். கஸி சிரித்துக்கொண்டே ‘சனி’ என்றான்.

சோதனையாக அன்று வீட்டிற்கு பஸ்ஸே கிடைக்கவில்லை. என்னவோ பிரச்சினை என்று போக்குவரத்தை நிறுத்தியிருந்தார்கள். நடந்தே வீட்டுக்கு வந்தான். உண்மையில் நடப்பதே அவனுக்குப் பிடிக்காது. அன்று அவனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வெங்காய வடை தன்னைக் கைவிடாது என்று உறுதியாக நம்பினான். தனக்குப் பிடித்த பழமையான பாடலைப் பாடிக்கொண்டு நடந்தான். அப்போது பழமையை மிஞ்சக் கூடிய புதுமையென்று எதுவுமே இல்லை என்று தோன்றியது அவனுக்கு. அந்த நிமிடத்தில் பழமையின் மீது தீராத காதல் கொண்டான். பாரதியார் பாடல்களைத் திக்கித் திணறிப் பாடிப் பார்த்தான். நன்றாகத்தான் இருக்கிறது என்று நினைத்தான். பழைய காதலி சிலி நினைவுக்கு வந்தாள். பழமையால் நிரம்பிய புது உலகம் என்கிற சொற்றொடர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த உலகமே மாறிப்போனது போல் உணர்ந்தான்.

வீட்டிற்குள் சென்று கதவைத் திறந்தான். சனிப்பத்தாயத்தில் சனி மாட்டிக்கொண்டு “லீவ் மீ லீவ் மீ” என்று கத்திக்கொண்டிருந்தது. கற்பனை ரொம்ப இனிமையாக இருந்தது. அந்த இனிமையை கொஞ்சம் அனுபவித்துவிட்டுக் கதவைத் திறந்தான்.

சனிப்பத்தாயம் காலியாக அவன் வைத்திருந்த மூலையில் கிடந்தது. ஓடிச்சென்று அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே வெங்காய வ்டையைக் காணவில்லை. ஒரு கடிதம் இருந்தது. “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று எழுதி, மிகவும் பரத்தலாக என்று கையெழுத்துப் போடப்பட்டிருந்தது.

“Better Luck Next Time”

With Luv,
Sani, The Boss.

-oOo-

(இது நச் போட்டிக்காக எழுதப்பட்டது.)

வகை: அறிவியல் புனைகதை.

Share

சொற்கள் – சிறுகதை

ப்போதும்போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தெருவில் எரியும் சோடியம் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம், அலங்கோலமாகக் கிடக்கும் ஜன்னலின் மூடப்படாத இடங்களின் வழியே உள்ளே தெறித்து விழுந்துகொண்டிருந்தது. சுசியின் தொடைவரை ஏறியிருந்த நைட்டியில் பளீரெனத் தெரிந்தது அவளது நிறம். தனியறையில் படுத்திருக்கும்போது அவளுக்கு எப்படி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கமுடிகிறது. இதுவே வேறு ஏதேனும் ஒரு இடத்தில் படுத்திருந்தால், போர்வையை கழுத்திலிருந்து கணுக்கால் வரை போர்த்தியிருப்பாள். அறையை நோட்டம் விட்டேன். இடது பக்கத்தில் படபடத்துக்கொண்டிருந்தது நேற்று வாசித்துவிட்டு நான் கைவாக்காய் வைத்த புத்தகம். சுசி பார்த்தால் ‘கண்ட கண்ட இடத்துல புத்தகத்தை வைங்க’ என்பாள். அவள் பேசிப் பேசி, அவள் பேசாதபோது கூட அவளது சொற்கள் எங்கும் சிதறிக் கிடப்பது போலத் தோன்றும் எனக்கு. சொற்களைப் பற்றி யோசிக்கும்போதுதான் தோன்றியது, சுசியைப் பற்றி இப்படிச் சொல்லலாம் என. அவள் வாய் எப்போதும் ஒரு வார்த்தையைத் தயாராகவே வைத்திருக்கிறது. நான் எது கேட்டாலும், கேட்ககூட வேண்டாம், பார்த்தாலே போதும், அதற்கான சொல்லை சொல்லிவிட்டிருப்பாள். இப்படி அவளது உலகத்தில் அவள் தயாராய் வைத்திருக்கும் சொற்களைவிடவும் குறைவாகப் பேசி ஒருவனது வாழ்க்கையைக் கழித்துவிட முடியும். இப்படி அவளிடத்தில் குவிந்து கிடக்கின்றன சொற்கள்.

தூக்கம் வராத நேரத்தில் டிவியைப் போட்டுப் பார்ப்பேன். அடுத்த நொடியில் அவள் வாய் பேசத் தொடங்கும். இவ்வளவு நேரம் அவள் தூங்கிக் கொண்டிருந்தாளா அல்லது நான் தூக்கமில்லாமல் அலைந்து எப்போது டிவியைப் போடுவேன் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தாளா எனக்கூட எனக்குத் தோன்றும். நேற்றிரவு மெத்தையில் படுத்தபோது, மெத்தையிலிருக்கும் மண்ணை தட்டிவிட்டேன். உடனே அவள் பேசத் தொடங்கினாள். “என்னைக்காவது ஒரு நாளைக்காவது மெத்தையைத் தூசி தட்டிப் போட்டிருக்கீங்களா? மண்ணைத் தட்டிவிட்டு குத்திக் காமிக்கிறதுல மட்டும் குறைச்சலில்லை.” தொடர்ந்து வந்து விழுந்தன சொற்கள். சுசி அவற்றையெல்லாம் வார்த்தைகளாகவும் வசவுகளாவும் பாவித்தே அதைச் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் அவை என்னளவில் சொற்களாகி நாள்கள் பல ஆகிவிட்டன. ஓரோர் வேளையில் இத்தகைய சொற்களை நான் எதிர்பார்க்கவும் அவை வராதிருக்கும் நேரங்களில் சலிப்படையவும் ஏக்கம் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். ஒருவித வலியை எதிர்பார்த்திருக்கும் சுகம்.

இரண்டு நாள்களுக்கு முன்பு அவளது தம்பி வீட்டிற்கு வந்தபோது அவனிடம் நான் சரியாகப் பேசவில்லை என்பது எனக்கும் தெரிந்தே இருந்தது. அவனது தம்பியின் சொற்கள் வேறு வகையானவை. அவன் என்னிடம் எப்போதும் சொன்னதையே சொல்லுவானேயன்றி எதையும் புதியதாகச் சொல்லிவிடமாட்டான். அவன் ஏதேனும் புதிய வார்த்தைகளை என்னிடம் பிரயோகித்துவிட்டால் அன்றைக்கு பீர் அடிக்கவேண்டும் என்று நினைத்து, கிட்டத்தட்ட தொடர்ந்து 16 நாள்கள் கவனித்துப் பார்த்தும், அவன் எந்தவொரு புதிய வார்த்தையையும் சொல்லிவிடவில்லை. அந்த வெறுப்பில் பீர் குடித்தேன். இப்படியும் ஒரு மனிதனால் இருக்கமுடியுமா? அப்படிக்கு அலுத்துப்போனானா அவனது அத்தான்? ஆனால் அவனது சொற்களுக்கும் அவனது அக்கா, என் மனைவி சுசியின் சொற்களுக்கும் இடையே இருக்கும் ஒத்திசைவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு தலை சுற்றத் தொடங்கிவிடும். இரண்டு பல் சக்கரங்கள் ஒன்றுடன் பொருந்துவது போல, அக்காவும் தம்பியும் சதா எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது நான் என் வாழ்க்கையில் மிகச் சொற்பம் தடவை மட்டுமே கேட்டிருக்கும் சொற்களையெல்லாம் பயன்படுத்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவான். என்னிடம் பேசும்போது அவனுக்குக் கிடைப்பதென்னவோ பத்து அல்லது பதினோரு வார்த்தைகள்தான். “அத்தான் எப்படி இருக்கீங்க, பையன் எப்படி இருக்கான்? அம்மா எப்படி இருக்காங்க? சுசி எப்படி இருக்கா? நான் ஞாயித்துக்கிழமை உங்க வீட்டுக்கு வர்றேன்.” எவ்வளவு யோசித்தாலும் இதைவிட அதிகமான சொற்களை அவன் என்னிடம் பேசியிருக்கிறானா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஒருமுறை பால்குடத்திற்கு அழைத்த நினைவு வருகிறது. பால்குடத்தினத்தன்று சுசியின் சொந்தக்காரர்கள் முழுவதும் நிறைந்து நின்று பேசிப் பேசி பேசிப் பேசி சொற்களை பால்குட நடையெங்கும் விரித்துவைத்திருந்தார்கள். நான் பயந்து ஓடி தாமிரபரணியில் குதித்து நடுவில் இருந்த பாறையில் ஏறி அமர்ந்துகொண்டேன். எந்தவித சொற்களும் என்னை அணுகாது, நீரின் சத்தத்தில் என்னை மீட்டெடுக்க முடியாமல் போயிருந்தால் அன்று என்ன நடந்திருக்கும் என்று என்னால் இப்போது நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

வீட்டுக்கு வந்த தம்பியிடம் நான் சரியாகப் பேசாததற்கு குறைந்தது அரை மணிநேரமாவது சுசி என்னிடம் பேசித் தீர்த்திருக்கவேண்டும். ஆனால் அவள் அன்று ஒன்றுமே சொல்லவில்லை. மிகவும் மெதுவாக அவள் தம்பியிடம், ‘நீ பார்த்துப் போயிட்டு வாடா’ என்று சொல்லி அனுப்பிவைத்தாள். அன்று இரவு முழுவதும் காத்திருந்தேன். வேறு ஏதேதோ விஷயங்களுக்கு என்னென்ன விதமான சொற்களெல்லாம் வந்தன. ஆனால் இந்த விஷயத்தைப் பற்றிய சொல்லை மட்டும் காணோம். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு நேரத்தில் அவளிடமே கேட்டுவிடலாம் என்று கூட நினைத்தேன். அவள் சொல்லாமல் விட்டுப்போன வார்த்தைகள் என்பது ஒன்றாவது இருக்கட்டும் என்று அவளிடம் கேட்காமல் வைத்தேன். ஆனாலும் அது எனக்களித்த அதிர்ச்சி அதிர்ச்சிதான். அன்றுதான் புரிந்துகொண்டேன், அவளின் சொற்களில் எனக்கு வளர்ந்த வெறுப்பு, எப்படியோ எதிர்த்திசையில் வளர்ந்து, அது இல்லாவிட்டால் நான் ஏமாற்றமடைந்துவிடும் நிலைக்குக் கொண்டுவிட்டது என்று. தவிர்க்கமுடியாத காமம் போல தவிர்க்கமுடியாத சொற்கள்? இருக்கலாம்.

மஞ்சள் நிற வெளிச்சத்தைப் புரட்டி அவள் திரும்பிப் படுத்தாள். கைகளை அவள் மீது பரவவிட்டால் உடனே ஒட்டிக்கொண்டு விடுவாள். சொற்களை இறைக்கத் தயங்காதது போல அவள் அவளைத் தருவதிலும் என்றும் தயங்கியதில்லை. சில சமயங்களில் உச்சத்தில்கூட பேசிக்கொண்டே இருந்திருக்கிறாள். அவசர அவசரமாக அழுத்தமான முத்தமிடுவேன். அவளின் சொற்கள் வெளியில் சிந்தாமலேயே எனக்குள் அமிழும் தருணங்கள் அவை.

ஒரு சில தினங்களுக்கு முன்பு சுசியுடன் படித்த சில பெண்கள் வீட்டுக்கு வந்தனர். அதில் ஒருத்திக்கு கல்யாணமாம். அவள் ஏதோ கேட்க இவள் ஏதோ சொல்ல மாறி மாறி பேசிக்கொண்டார்கள். சுசி பேசும்போது அவளது உதடுகளையே கவனிப்பது வழக்கம். சொற்கள் தாங்கள் பிரசவிக்க எப்படிப்பட்ட வடிவங்களில் துளையை ஏற்படுத்திக்கொள்கின்றன என்று கவனிப்பதில் இருக்கும் ஒரு வெறித்தனமான இன்பம் என்றும் எனக்குள்ளே இருக்கிறது. அதில் லயிக்கத் தொடங்கினால் பின்பு சொற்களும் அதன் பிறப்பிடங்களும் தவிர அவள் என்ன பேசுகிறாள் என்பதையே கவனிக்காமல் போய்விடுவேன். உ, ஊ, ஓ என்ற எழுத்துகள் வரும்போதெல்லாம் உதடுகள் குவிவது எனக்குப் பிடிக்கும். சுசி என்றல்ல, எந்தப் பெண்கள் பேசினாலும் உதடிகள் அப்படி குவிவது பிடிக்கும். அப்படி அடிக்கடி உதடுகளை குவித்துப் பேசும் பெண்களுக்குக் கொணட்டி என்று நானும் என் நண்பர்களும் பெயர் வைத்திருந்தோம். எனக்கு ஒரு கொணட்டியே மனைவியாக வாய்த்ததுதான் நல்ல முரண். நான் அவள் பேசுவதைக் கேட்காமல் அவளது சொற்களையும் உதடுகளையும்தான் கவனிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரிந்திருக்காது. பெரும்பாலும் சொற்களைக் கொட்டும்போது அவள் என் முகம் பார்ப்பதில்லை. எனக்குப் பக்கத்தில் நிற்கும் யாரோ ஒருவரிடம் சொல்வதுபோல வேகமாகத்தான் சொல்லுவாள். நான் அப்படித்தான் எடுத்துக்கொள்வேன், யாரோ ஒருவன் எனக்கருகே நிற்பவனுக்கானவை அவை. எனக்கானவை அர்த்தமற்ற சொற்களும் அவள் உதட்டின் அசைவும்தான். அன்று அவளுடன் பேசிக்கொண்டிருந்த, கல்யாணம் நிச்சயமான பெண்ணும் அப்படித்தான். சரியான கொணட்டி. அவள் உதடுகள் சுசியின் உதடுகளைக் காட்டிலும் தீவிரமான வேகத்தில் மாறிக்கொண்டே இருந்தன. விருப்பம்போல சொற்கள் வந்து விழுந்தன. அவர்கள் சென்ற பின்பு, யதேச்சையாக சுசி குப்பைகளைப் பொறுக்கினாள். ஒரு கவிஞனின் லாகவத்தோடு, குப்பை அள்ளும் பிளாஸ்டிக் கையில் சொற்களை அள்ளினாள். குப்பையை வெளியே எறியச் சென்றபோது, யாரும் என்னைக் கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்ட பின்பு, கீழே கிடப்பதாக நான் கற்பனை செய்துகொண்ட ஒரு சொல்லை, என் ஆத்திரம் தீர ஓங்கி உதைத்தேன். அந்தச் சொல் எதிரே இருந்த சுவரில் முட்டி, அதிலேயே புதைந்துவிட்டது.

அவள் படம் பார்க்கும்போதுகூட ஏதோ பேசுவது போலேயே எனக்குத் தோன்றும். சில சமயங்களில் அவளின் குரல் கூட கேட்டதுண்டு. ஏன் படம் பார்க்கும்போது பேசிக்கொள்கிறாள் என நினைத்துக்கொள்வேன். இப்படி சதா பேசும் ஒரு பெண்ணை நான் பார்த்திருப்பது பற்றியும் அவளுடன் வாழ்ந்துகொண்டிருப்பது பற்றியும், அதுவும் நான் அதை வெறுக்கிறேன்; சில சமயங்களில் ஏங்குகிறேன் என்பதும் இவற்றை அவள் அறியாமல் வாழ்வது பற்றியும் எனக்குப் பெருமையாக இருந்தது. எப்போதோ வந்த அவளது சொந்தகாரன் ஒருவன் அவளிடம் கேட்டான், “படம் பாக்கும்போது அந்த வசனத்தை நீ பாட்டுக்கு சொல்லிக்கிட்டு இருப்பியே, அது இன்னும் இருக்கா” என்று. அதை நான் கேட்டுவிட்டது பற்றி அவள் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. நான் இதைப் பற்றிக் கேட்டாலும் குறைந்தது ஒரு மணி நேரம் அதற்கு விளக்கம் அளிக்கும் சக்தி அவளிடம் உண்டு என்பதை நான் அறிந்திருந்ததால் நானும் அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவாறு விட்டுவிட்டேன். அவள் அந்த சொந்தக்காரனிடம் பதில் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். அவன் அவளது வெகுளித்தனத்தையும் விகல்பமில்லாமல் பேசும் குணத்தையும் பாராட்டிவிட்டுப் போகிற போக்கில் என்னிடம் “இப்படி ஒரு பொண்ணு உங்களுக்குக் கிடைச்சது நீங்க பண்ணின அதிர்ஷ்டம் மாப்பிள” என்று சொல்லிவிட்டுப் போனான். இதை கிட்டத்தட்ட இரண்டு வருடமாகச் சொல்ல நினைத்திருந்தானாம். “சரி, போயிட்டு வாங்க” என்று மட்டும் சொன்னேன்.

இன்று காலை அவள் மொபைலில் அவள் அம்மாவுடன் பேசினாள். எல்லா பெண்களும் இப்படித்தான் பேசுவார்கள் போல என தினமும் நினைக்கும் விதமாக யாரேனும் ஒருத்தி பேசிவிடுவதுண்டு. இன்று அவள் அம்மா. அப்படி ஒரு பேச்சு. அதில் சுசி அவள் அம்மா சொன்னதையே திரும்பச் சொல்லிச் சொல்லி, அப்படியா என்று கேட்டுக்கொண்டாள். ‘என்னது பாலாஜிக்கு கல்யாணமா? அப்படியா?’, ‘மூணாவது வீட்ல தீ பிடிச்சிட்டா? அப்படியா?’ ‘அப்பாவை யாரோ கீழ தள்ளிட்டானா? அப்படியா?’ என்றும் வீடெங்கும் சிதறிக் கிடக்கும் அவளது சொற்களோடு சேர்ந்துகொண்டன அவளது குடும்பச் சொற்களும்.

எப்படியும் என்றேனும் ஓர்நாள் நான் அவளிடம் சொல்லியே ஆகவேண்டும். மிகவும் மிருதுவாக, அவள் அதிர்ச்சி அடையாதவாறு, இத்தனை நாள் அமைதியா இருந்த ஆம்பிளைக்கு அப்படி என்ன திடீர்னு அகம் என்று பதில் கேள்வி எழுப்ப இடம் தராதவாறு, மெல்லச் சொல்லியே ஆகவேண்டும். பேசுவதைப் போலவே பேசாமலிருப்பதிலும் உள்ள சுகத்தை, மௌனம் கூட மொழியின் தேவையை செய்யக்கூடிய அழகைச் சொல்லவேண்டும். ஒருவகையில் அவள் இப்படி பேசிக்கொண்டே இருப்பதற்கு, வீடெங்கும் வழியெங்கும் சொற்களை கொட்டிக்கொண்டு செல்வதற்கு நானும் ஒரு காரணம். எனது அதீத மௌனமும் அவளது அதீத பேச்சும் எதிர்த்திசையில் சந்தித்துக்கொள்வதாக இருக்கலாம். இதை அவளிடம் சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வாள் எனத் தெரியவில்லை.

கல்யாணம் ஆன புதிதில் அவள் பேசியதெல்லாம் கிறக்கம் தருவதாகத்தான் இருந்தது. பின்னெப்படி எந்தக் கணத்தில் அவளது பேச்சு வீடெங்கும் இறைந்து கிடக்கும் சொற்களாக எனக்கு மாறியது என்பது தெரியவில்லை. ஒருவேளை வாழ்க்கையில் எல்லா ஆண்களும் இப்படிப்பட்ட ஒரு இடத்தை அடைந்தே தீரவேண்டுமோ. அவள் சொல்லாத வார்த்தைகளுக்குக் காத்துக்கிடந்த காலங்கள் இனி ஒருவேளை வராமல் போகலாம். பெண் நிச்சயிக்கப்பட்ட பிறகு அவளது ஒரு பேச்சுக்கு மணிக்கணக்கில் காத்துக்கிடந்த காலங்கள், எழுதித் தள்ளிய கடிதங்கள், வாய் மூடாமல் அவளைப் பேசச் சொல்லிக் கெஞ்சிய கெஞ்சல்கள் எல்லாம் ஒரு கனவைப் போலத் தெரிந்தன. மழை பெய்யாதா என ஏங்கிய மண் வெள்ளத்து நீரில் அடித்துச் செல்லப்படுவதைப் போல ஆகிப் போனது. அவள் என் மௌனத்தைப் பற்றி என்ன நினைப்பாள் என்றெல்லாம் நான் யோசித்திருக்கிறேன். அவளுக்கும் சேர்த்தே நாந்தான் யோசிக்கவேண்டும். ஒருமுறை கூட அவளை என் மௌனம் படுத்துகிறது என்று சொன்னதில்லை. இன்னும் ஒரு வகையில் சொல்லப்போனால் என் அதீத மௌனத்தையே அவள் விரும்பியிருக்கக்கூடும். பொதுவாகவே அவள் பேசும் போது இடையில் ஏற்படும் தடங்கல்களை விரும்புவதில்லை. ஒருமுறை கோபமாக அவள் அம்மாவிடம், “மொதல்ல நான் சொல்றத கேளு, எதிராளியைப் பேசவிடாம நொய் நொய்னு பேசாத” என்றாள், நான் இங்கே என் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே உட்காருவதை அறியாமல்.

அன்று அவன் தம்பி வந்திருந்தான். நான் வழக்கம்போல ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, காதுகளை அவர்கள் பேசுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அவன் தம்பி புதிய விஷயங்களாகப் பேசினான். எப்படி அவன் அவனது அக்காவிற்காக பேச்சுக்களை சுமந்து கொண்டு வருவான் என்பது ஒரு பெரிய புதிர். அவன் காதல் வயப்பட்டிருக்கும் பெண்ணைப் பற்றிய நீண்ட சம்பாஷணைகளை நிகழ்த்தினான். அவள் பேசுவதே இல்லை என்று அரற்றினான். அவன் சொல்வதையெல்லாம் தொகுத்திருந்தால் சிறந்த கையறுநிலை காவியம் ஒன்று கிடைத்திருக்கும். சுசி ரொம்ப இதமாக, “எல்லா ஆம்பிளைங்களும் ஆரம்பத்துல இப்படித்தாண்டா பேசுவீங்க, கொழந்தை பெத்து அதுங்க பேச ஆரம்பிக்கும்போது பொண்டாட்டி வாயத் திறந்தாலே உங்களுக்கெல்லாம் எரியும்” என்றாள். (நல்லவேளை, என் மகன் இன்னும் பிறக்கவில்லை. தப்பித்தான்.) அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்றும் தோன்றியது; இப்படி ஜாடை மாடையாகப் பேசும் அவசியம் இல்லை என்றும் தோன்றியது. அவள் இப்படிப் பேசுவது எனக்கு எரிச்சல் தரும் என்று தெரிந்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் இருப்பாள் என்று நான் நம்பவில்லை. தம்பி பல புதிய விஷயங்களைச் சொல்லிவிட்டு, பல தடவை சொல்லி ஓய்ந்த அவர்களது குட்டிக்கால கதைகளை ஆரம்பித்தான். அதுவரை கையில் வைத்திருந்த மிக்ஸியின் ஜாரை கீழே வைத்துவிட்டு கொஞ்சம் வசதியாக உட்கார்ந்துவிட்டாள். இன்று சமையல் ஆனாலும் அதில் உப்போ புளியோ நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். நல்ல தம்பி, நல்ல அக்கா.

குட்டிக்கால கதைகள் என்பதைப் பார்த்தவுடன் ஒரு கனவு தேவதையைப் போல சுசியின் குட்டிக்காலங்கள் பல்வேறு கதைகளால் ஆனது என்றெல்லாம் நினைக்கத் தேவையே இல்லை என்பதை இந்த மூன்று வருடங்களில் புரிந்துகொண்டிருந்தேன். மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கு கதைகள். அதில் இரண்டு அவள் அப்பா சம்பந்தப்பட்டது. மற்றொன்று எல்லா குடும்ப உறுப்பினர்களும், அவர்கள் என்றோ வளர்த்து பாம்பு கடித்துச் செத்துப் போன நாய் உட்பட, இடம் பெறும் ஈஸ்மெண்ட் கலர் சோகப் படம் ஒன்று, அவள் முதன்முதலாக சென்னை வந்தபோது அவளது சித்தப்பா குடை ராட்டினத்தில் ஏற்றிச் சுற்றிக் காண்பித்த சென்னையைப் பற்றிய சித்திரம் ஒன்று. இவ்வளவுதான். இவ்வளவேதான். இதை எத்தனை தடவை பேசிக்கொள்வார்கள்? தேர்ந்த கலைஞனைப் போல ஒரே கதையை பலவாறாகச் சொல்லும் வித்தையும் இல்லை. முதல் தடவை எப்படிச் சொன்னாளோ அதையே சொல்லுவாள். அடி பிசகாமல் அப்படியே சொல்லுவாள். நான் சிறுவயதில் படித்த மனப்பாடப் பாடலைக் கூட இப்படி என்னால் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை.

அவளது அப்பா கதையில் அவள் சொல்லும் வாக்கியம்: ஞானிக்கேத்த புத்தி தீனிக்கேத்த லத்தி. இந்தப் பழமொழியைப் பற்றிப் பேசினால் அவள் இந்தக் கதையைத்தான் சொல்லப்போகிறாள் என்று அர்த்தம். அந்தக் கதையை ஆதி முதல் அந்தம் வரை வரி பிசகாமல் என்னால் இப்போது சொல்லமுடியும். அத்தனை முறை நேரடியாகவும் காதுகளைக் கடன் கொடுத்தும் கேட்டிருக்கிறேன். ஆனால் அக்கதை இப்போது தேவையில்லை. அவள் முதல் தடவை எப்படிச் சொன்னாளோ அதே மாதிரி இப்போதும் சொன்னாள். இது 147வது முறையாக இருக்கலாம். முதல் தடவை கேட்டதை விட அதிகம் சிரித்தான் ‘நல்ல தம்பி.’

குடும்ப உறுப்பினர்கள் கதையில் அக்காவைப் பற்றி: “அழுதுகிட்டே சொல்றா அவ ‘சூடா இட்லி போடும்மா’ன்னுட்டு. அழறோம்கிற ரோஷம் கூட இல்லாம, அதுவும் எத்தனாவது இட்லி? 8வது இட்லி!” ஆறாவது அறிவைப் போல, ஏழாவது உலகத்தைப் போல, யாராவது எட்டாவது என்றால் நான் இட்லி என்பேன். எத்தனை முறை கதை சொல்லியிருக்கிறாள்? ஒரு தடவை கூடவா பிசகாது? மறக்காது? ஆறாவதோ ஏழாவதோ இட்லி என்றுகூட சந்தேகத்தின் பலனைத் தரமாட்டாள். சொற்களை சரியாக வீசுவதில் அவ்வளவு கச்சிதம். ‘நல்ல தம்பி’ இந்தக் கதையைக் குறைந்தது 200 தடவை கேட்டிருப்பான். 201 வது தடவை கேட்கும்போது அவனுக்கு சந்தேகம் வருகிறது, “அக்கா சட்னி கேப்பாளா, மிளகாய்ப்பொடியா?”

‘நல்ல தம்பி’ மடையன் அத்தனைக்கும் தலையாட்டினான். அவனும் சில புதிய சொற்களையும் அவளோடு சேர்ந்து நைந்து பிய்ந்து போன பழைய சொற்களையும் சொல்லிவிட்டுப் போனான். தமிழின் தொடக்கத்திலிருந்து கணக்கு கூட்டிப் பார்த்தாலும் அக்காவும் தம்பியும் பயன்படுத்திய சொற்களை அவர்களைப் போல் யாரும் அவ்வளவு பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அவள் தம்பியை வெளியனுப்ப போனபோது, தரையில் சிதறிக் கிடந்த சொற்களைக் கூட்டிப் பெருக்கி குப்பைக் கூடையில் போடலாமா என்று கூட யோசித்தேன்.

ஒவ்வொரு நேரத்தில் யார் பேசினாலும் எனக்கு வெறுப்பு வந்தது. ஏன் இப்படி சொற்களை உதிர்த்துச் செல்கிறார்கள் என்று தோன்றியது. கடலலையைப் பார்த்தால்கூட வெறுப்புத் தோன்றியது. ஏன் இத்தனை ஆர்பாட்டம், சத்தம்? வானத்தில் தூரத்தில் பறக்கும் பறவைகளை ரசிக்க முடிந்தது. வீட்டு ஜன்னலில் வந்து அமர்ந்து காக்காவைக் கல்லெடுத்து விரட்டினேன். அதை சுசி பார்த்துவிட்டாள். அன்று வீடெங்கும் காக்காய், சனி பகவான் என்பதை ஒட்டிய சொற்கள் சிதறிக் கிடந்தன. எல்லா சொற்களையும் கூட்டிப் பெருக்கி, சனி பகவான் சொல்லை மட்டும் கையில் எடுத்து – பக்திதான் – தூர எறிந்தேன்.

இன்னொரு நாள் சொற்கள் ஏதும் புதியதாக விழாத ஒரு நேரத்தில் ‘நல்ல தம்பி’ வந்தான். அவன் பீச்சுக்கு அழைத்தான். வரும்போது தனியாக வரமுடியாது என்பதற்காக என்னையும் வரவேண்டும் என்று சொல்லி சுசி அழைத்துப் போனாள்.

மணலில் பாவும்போது வீட்டில் இறைந்து கிடக்கும் சொற்களில் நடந்து நடந்து சலித்துப் போன கால் கொஞ்சம் உற்சாகம் கொண்டது. கொஞ்சம் வேகமாக நடந்தேன். மணலில் கால் புதைந்து வெளியேறி, மணலின் வெம்மையும் நுண்மையும் என்னைக் கொஞ்சம் மீட்டெடுத்தன. என்னை ஒட்டிக்கொண்டு கிடந்த சுசியின் சொற்கள் அனைத்தும் கடலில் கரைந்தொழியட்டும் என்கிற எண்ணத்தில் கடலில் குளித்தேன். தூரத்தில் ‘நல்ல தம்பி’ கூட்டிக்கொண்டு வந்த பெண்ணிடம் என்னவோ கொஞ்சிக்கொண்டிருந்தான். வேறென்ன இருக்கும்? பேசச் சொல்லிக் கேட்பான். சொன்னால் அவனுக்கு விளங்காது. பட்டால்தான் தெரியும். அந்தப் பெண் முகத்தை நாணிக் கோணி என்னவோ சொல்லியிருக்கவேண்டும். உடனே சுசியைப் பார்த்து வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பதைப் போல என்னவோ சைகை செய்தான். அங்கிருந்து ஓடி வந்து அக்காவிடம் என்னவோ சொன்னான். அவள் சிரித்துக்கொண்டே என்னவோ சொன்னாள். அவன் மீண்டும் அந்தப் பெண்ணிடம் ஓடினான். நான் சுசியிடம் வந்தேன்.

“என்ன சொன்னான் நல்ல தம்பி?”

அவள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். அப்படி அவள் பார்த்த பார்வை எனக்குக் கொஞ்சம் பயம் தருவதாகவும் கொஞ்சம் சந்தோஷம் தருவதாகவும் இருந்தது.

“உன்னைத்தான் கேக்கிறேன். என்ன சொன்னான் உன் தம்பி.”

‘நல்ல தம்பி’ என்பதைக் கவனிக்கவில்லை ‘நல்ல அக்கா’. அவள் என்னை லட்சியம் செய்யாதவாறு கடலை நோக்கினாள். அன்றுதான் முதன்முதலாக அலையைப் பார்க்கும் குழந்தையிடம் கூட அவ்வளவு ஆர்வம் இருக்காது. அப்படிப் பார்த்தாள் கடலை. அவளிடமிருந்து சொற்கள் எங்கு போயின? ஒருவேளை திருந்திட்டாளோ? கொஞ்சம் கலவரமாக இருந்தது. ஆனாலும் நம்பிக்கை வந்தது, அப்படியெல்லாம் சீக்கிரம் என்னை விட்டுவிடமாட்டாளென.

வீட்டுக்கு வந்தோம். வரும் வழியெங்கும் அவளது அமைதி என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. நான் என் டைரியில் அவளைப் பற்றிய குறிப்புகளை அவள் படித்து, அவளது சொற்களின் மீது எனக்கு இருக்கும் வெறுப்பைத் தெரிந்துகொண்டு, என்னைத் தெரிந்து கொண்டு… வாய்ப்பே இல்லை. நான் டைரி எழுதுவதில்லை. எழுதினாலும் அதிலிருக்கும் சொற்கள் எல்லாமே எப்படியும் சுசியின் வார்த்தைகளாகத்தான் இருக்கும். பெருக்கித் தூர எரிவதே சிறந்த செயல் என்று நான் நினைத்துக்கொண்ட நாள்களிலிருந்து அவளது சொற்கள் எதுவும் என்னிடம் தங்குவதில்லை. அவை வந்த வேகத்தில் என் பார்வையிலேயே முனை மழுங்கி என் மீது மோதி கீழே விழும், நான் அவற்றைப் பொறுக்கிக் குப்பைக் கூடையில் கொட்டுவேன். இப்படி நான் நினைத்துக்கொண்டுவிட்ட நாள்களிலிருந்து சுசியை என்னால் பார்க்கவாவது முடிந்தது. என்ன ஆயிற்று சுசிக்கு? இந்தக் கேள்விக்கு மட்டும் ஏனிந்த குடலைப் புரட்டும் அமைதி.

மீண்டும் ஒரு தடவை மெல்ல கேட்டேன். “என்ன சொன்னான் உன் தம்பி?”

அவள் மெல்ல இருமிக்கொண்டாள். பதில் ஒன்றும் சொல்லவில்லை. எங்கே போயின அவள் தயாராய் வைத்திருக்கும் வார்த்தைகள்?

மறுநாள் அவள் தம்பி என்னவோ ·போன் செய்தான். அவள் வள வளவென்று பேசினாள். ஒன்றும் புதியதாக இல்லை. அதே சொற்கள்தான். வெறும் சொற்கள். ஒரு கோணியை எடுத்துக்கொண்டு போய் அவள் வாயருகே ஏந்திக்கொண்டு நிற்கலாமா? அவன் தம்பி சொன்னதையும் சேர்த்துச் சொன்னாள். அவனது சொற்களும் சேர்ந்து அறையில் விழுந்தன. அடுத்து விழுந்த சொல் புதியதாக இருந்தது. அந்தப் பெண் பேசினாள். எனக்கு கொஞ்சம் ஆர்வம் வந்தது. சுசி சிரித்து சிரித்துப் பேசினாள். ·போனை ஒரு கையால் மூடிக்கொண்டு என்னிடம், “இன்னைக்கும் பீச் போகலாமான்னு அந்தப் பொண்ணு கேக்குது” என்றாள். நேற்று முத்தம் கொடுக்க மறந்திருக்கலாம் ‘நல்ல தம்பி.’

“நேத்து உன் தம்பி என்ன சொன்னான், அதச் சொல்லு” என்றேன்.

“அத அப்புறம் சொல்றேன்.”

“மொதல்ல சொல்லு.”

அவள் என்னை முறைத்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் போகலாம் என்று சொல்லி ·போனை வைத்தாள். நான் வரமாட்டேன் என்றேன்.

“நேத்து அவன் ஓடிவந்து, ‘அக்கா, பொண்ணு நம்ம அத்தான் மாதிரி முசுடு இல்லை, அப்பப்ப பேசுறா, சிரிக்கிறா’ன்னான். போதுமா” என்றாள். பதிலுக்குக் காத்திருக்காமல் அவள் சமையலறைக்குள் சென்றாள். எனக்கு தலை சுற்றியது. நான் இவர்களை பைத்தியம் என்று நினைத்துக்கொண்டிருக்க, பைத்தியங்கள் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு பட்டம் கொடுக்கின்றன. இத்தனை நாள் நானில்லாதபோது இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் இவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருப்பார்களோ? அவள் அங்கு சென்றதும் கீழே கிடந்த சொற்களைப் பார்த்தேன். பைத்தியம் என்கிற வார்த்தையும் முசுடு என்கிற வார்த்தையும் தனியே கிடந்தன. அவற்றை காலால் தள்ளியபோது அவை என் காலிலேயே ஒட்டிக்கொண்டன. எத்தனை காலை உதறியும் அவை காலிலிருந்து போகவே இல்லை. எனக்கே கொஞ்சம் அசிங்கமாக இருந்தது.

பீச்சுக்கு போகத் தயாரானேன். பஸ்ஸில் போகும்போது கேட்டாள், “சந்தோஷமா இருக்காங்கள்ல” என்றாள். உம் கொட்டினேன். “அப்படியே இருக்கணும்” என்றாள். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. “அதுக்கு ரெண்டு பேரும் பேசிக்கணும்” என்றாள். பஸ்ஸின் கண்ணாடியின் வழியே உலகம் என்னை வெறித்து நோக்குவது போல இருந்தது. நான் உம் கொட்டுவதற்கு முன்பு அவள் சொன்ன சொற்களைத் தேடினேன்.

“ஏன் அடிக்கடி எதையோ தேடறீங்க?” என்றாள்.

இங்க சந்துரு சந்துருன்னு ஒரு மானஸ்தான் இருந்தான் என்று சொல்வார்கள் என் நண்பர்கள். நான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

“நாம மொதல் மொதல்ல பீச்சுக்கு போனோமே ஞாபகம் இருக்கா?”

“ம்.”

“எவ்ளோ சந்தோஷம், இல்ல?”

“ம்.”

“ஏன் இப்படி எல்லாத்துக்கும் விட்டேத்தியா பதில் சொல்றீங்க?”

“இல்லியே…”

அவ்வளவுதான். அப்போது ஆரம்பித்ததுதான், பீச்சிலிருந்து வீட்டிற்கு வரும்வரை ஓயவில்லை. தம்பியிடம் அழுது புலம்பி ‘சரியான முசுடுகிட்ட மாட்டிக்கிட்டேண்டா’ என்று சொல்லி என்னைத் திட்டித் தீர்த்தாள். அன்று மட்டும் அவள் சிதறிய வார்த்தைகளின் எண்ணிக்கை எப்படியும் பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கும். ‘நல்ல தம்பி’யோ ஏதோ ஒரு கிறக்கத்திலேயே இருந்தான். சுசி சொன்னதை சிரத்தையாகக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவன் போன பின்பு சுசி பொதுவாக, “இவன் பொண்டாட்டியும் பொலம்பிக்கிட்டுத்தான் அலயப்போறா” என்று சொன்னது காதில் விழுந்தது.

Share

சாதேவி – சிறுகதை

ப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு குழந்தை என்று சொல்லிவிடலாம். மற்ற ஆண்களுக்கு இருக்கும் வல்லமையும் திறமையும் அப்பாவுக்கு இருந்ததாகச் சொல்லமுடியாது. அப்பாவின் உருவத்தை ஒரு ஏமாளிக்குரிய உருவமாகத்தான் நான் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அவரது மரணத்திற்கு வந்த கூட்டம் அவர் கோமாளியல்ல என்று எனக்கு உணர்த்தியது. அப்பா உயிரோடு இருந்த காலங்களிலெல்லாம் அவரது வெகுளித்தனத்தை அம்மா எப்போதும் வைவாள். அப்பா சின்ன வயதாக இருந்தபோது அற்ப காரணங்களுக்காக கிடைத்த நல்ல வேலையை உதறியது முதல் கடைசி வரை அவர் செய்த குழந்தைத்தனமான காரணங்களை அம்மா எப்போதும் வசவாக்கிக்கொண்டே இருப்பாள். அப்பா இறந்தபோது கணவன் இறந்துவிட்டான் என்பதைவிட தனது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக அம்மா உணரத் தொடங்கினாள். அது அவளை ஆற்றாத துயரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.

அப்பாவின் ஈமக்கிரியைகள் மடமடவென நடந்தன. எட்டாம் நாள் காரியத்திலிருந்து சுபம் வரை செய்ய ஸ்ர்ரங்கத்தில் கூடியிருந்தோம். கூட்டமாக சொந்தக்காரர்கள் சேர்ந்ததில் அப்பா இறந்த சோகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு எங்கள் குடும்பத்தின் இயல்பான உற்சாகம் முன்னுக்கு வந்துவிட்டிருந்தது. நானும் அம்மாவும் திடீரென்று அப்பாவை நினைத்துக்கொண்டு அழுவோம். அப்போதும் அம்மா இப்படியும் ஒரு மனுஷன் இருந்துட்டுப் போகமுடியுமா என்று சொல்வாள். இந்தக் காலத்தில் அப்பாவைப் போல வெகுளியாக இருந்து வாழ்க்கையை வெல்லவே முடியாது என்பது அம்மாவின் தீர்மானமான எண்ணம். எனக்கும் அதில் கொஞ்சம் ஒப்புதல் இருக்கவே செய்தது. அப்பாவிற்கு வீட்டுக்கு வெளியில் இருக்கும் தொடர்புகள், நட்புகள் பற்றி நான் அதிகம் யோசித்ததே இல்லை. அவரை ஒரு குழந்தையாகவும் வெகுளியாகவும் கோமாளியாகவும் பார்த்துப் பழகிவிட்டதால் அவருக்கும் ஒரு நட்பு இருக்கும், அவர்களுக்குள் அவர் கொண்டாடப்படுவார் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்க்கவில்லை. சில சமயங்களில் அவர் நட்பு வட்டத்தில் அவர் கிண்டலுக்கான ஒரு சந்தர்ப்பமாகவே மிஞ்சுவார் என்றுதான் நினைத்திருக்கிறேன். ஒரு மஞ்சள் பையைக் கையில் வைத்துக்கொண்டு மாநகராட்சி அல்வா கடைமுன் அவர் நின்றிருக்கும் காட்சி எனக்கு எப்போதும் வெறுப்பை அழிக்கக்கூடியது. மூச்சுக்கு முன்னூறு தடவை மந்திரம் போல வருமா என்பார். மந்திரம் 8வது கூட படிக்கமுடியாமல் பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் எப்படி அப்பாவைக் கவர்ந்தான் என்பது கடைசிவரை பிடிபடவே இல்லை.

அப்பா இறந்து அவரை வீட்டில் கிடத்தியிருந்தபோது மாநகராட்சிக் கடைக்காரரும் மந்திரமும் ஓடியாடி எல்லா வேலைகளையும் செய்தார்கள். அப்போதுதான் அவர்களுக்குள் அப்பாவிற்கு இருந்த இடம் எனக்கு புரியத் தொடங்கியது. ஒருவேளை அன்றுதான் அவர்களுக்கும் புரிந்ததோ என்னவோ. அம்மா ரொம்ப வியந்து போனாள் என்பது மட்டும் உண்மை. உண்மையில் தன் கணவனுக்கு கம்பீரமளிக்கும் அந்தக் கணத்தில் அவள் தன் கணவனின் மரணத்தை விரும்பியிருக்கக்கூடும்.

ஸ்ர்ரங்கத்தின் கொள்ளிடக் கரையில் என்னை 9 முறை மூன்று மூன்று முறையாக முங்கிக் குளிக்கச் சொன்னார்கள். நான் 27வரை எண்ணிக்கொண்டு குளித்தேன். நீர் அதிகம் இல்லை. முழங்கால் வரைக்கும் இருந்த நீரில் மண் தெளிவாகத் தெரிந்தது. மண்ணில் சிறிய சிறிய எலும்புத்துண்டுகள் புதைந்து கொண்டு நின்றன. யாரோ எப்போதோ வீசிய மாலையின் நார் ஒன்று புதைந்துகொண்டு அந்த இடத்தில் சிறிய அலையைத் தோற்றுவித்திருந்தது. அப்பா கூட இப்படித்தான். சிறிய அலையைத் தோற்றுவித்துவிட்டுப் போய்விட்டார்.

மந்திரம் சொல்லி காரியங்கள் செய்துவைக்கும் ஆச்சார் வேகமாக வரச்சொன்னார். ஒரு வாளியில் கொள்ளிடத்தின் நீரை மொண்டுகொண்டு படியேறினேன். 9ஆம் தினத்திற்கான காரியங்கள் நடந்தன. சிலைக்கு [#1] தண்ணீர் ஊற்றி மந்திரங்கள் சொன்னேன். அம்மா சிறிய விசும்பலுடன் ஸ்வாமி என்றாள். எனக்கும் கண்ணீர் வந்தது.

அன்று உணவு உண்ண ஒரு மணி ஆகிவிட்டது. மடி ஆசாரங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் மடம் இது. பொதுவாகவே இதுபோன்று காரியங்கள் நடக்கும் மடத்தின் ஆசாரத்தன்மை நாங்கள் அறிந்ததுதான். ஆனால் ஆசாரங்களை வீட்டில் பேணாத எங்களுக்கு அது பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு ஆச்சார் எதற்காகவாவது முறைத்துவிட்டுச் செல்லுவார். என் அண்ணா திருநெல்வேலி சம்பிரதாயம் இப்படித்தான் என்பார். நாங்கள் எல்லாரும் சிரிப்போம். அம்மா சும்மா இருங்கடா என்று அதட்டுவாள். உண்மையில் அது ஒரு வித்தியாசமான உலகம். மடத்தில் எப்போதும் தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. யாராவது ஒருவரைப் பற்றிய மரணச் செய்தி வந்துகொண்டே இருந்தது. ஆச்சார்கள் மதுரைக்கும் திருச்சிக்கும் தாராபுரத்திற்கும் பயணமாகிக்கொண்டே இருந்தார்கள். ஆளுக்குத் தகுந்த மாதிரி பணம் பெறப்பட்டது. சிலருக்கு இலவசமாகச் செய்து வைத்ததாக தலைமை ஆச்சார் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். மடத்தினுள் ‘மடி மடி தள்ளிக்கோங்க’ என்று கன்னடத்தில் யாராவது யாரையாவது பார்த்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரே சமயத்தில் ஒரு குடும்பத்திற்கு எட்டாவது நாள், இன்னொரு குடுமத்திற்கு 9 வது நாள், இன்னொரு குடும்பத்திற்கு சுபம் என்று விஷேஷம் நடந்துகொண்டே இருந்தது. “பூணூலை வலக்க போட்டுக்குங்க, பூணூலை இடக்க போட்டுக்கோங்க, ஆவாகம் பண்ணுங்க” என்று ஆச்சார் சொல்லச் சொல்ல கர்த்தா அதை செய்துகொண்டிருந்தார். சிலர் எப்போதும் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்கள். இதுமாதிரி விஷேஷங்களுக்கு எதை எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பது அவர்களுக்கு அத்துப்பிடி. வீட்டில் இதுமாதிரி காரியங்கள் வரும்போது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வலுக்கும். அப்பா எப்போதும்போல ஒன்றுமே தெரியாமல் எதையாவது சொல்லிவைப்பார். அம்மா வைவாள். “இவ்ளோ வருஷமாகியும் எது எது செய்யணும் எது எது செய்யக்கூடாதுன்னு தெரியலையே, எப்படித்தான் வாழ்ந்தீங்களோ” என்பாள். கூடவே “15 வயசுல உங்க அம்மா உங்களைப் பெத்தா, அந்த 15 வயசு உள்ளவளுக்குள்ள புத்திதான் உங்களுக்கும் இருக்கும்” என்பாள். இன்னும் இரண்டு பேர் மடத்தின் பக்கத்தில் இருக்கும் ராகவேந்திர மடத்தில் பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். கடுமையான ஆச்சார அனுஷ்டானங்கள். பகல் இரண்டு மணிக்கு இந்த உலகம் ஓயும். அதுவரை அப்படி ஒரு பரபரப்பு. இப்படி ஒரு உலகம் இருப்பதாகவோ அது இவ்வளவு தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பதாகவோ நான் அறிந்திருக்கவில்லை. என் தாத்தாவும் பாட்டியும் இறந்தபோது அனைத்துக் காரியங்களை திருநெல்வேலியில் வீட்டிலேயே செய்துவிட்டோம். இந்தமுறைதான் ஸ்ர்ரங்கத்தின் மடம். மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

மறுநாள் பத்தாம் நாள். அன்றுதான் முக்கியமான நாள். தீவிரமான, மனதை உலுக்கக்கூடிய சம்பிரதாயங்கள் நிகழப்போகும் நாள். ஆச்சார் என்னை அழைத்து மறுநாள் செய்யவேண்டிய காரியங்களைப் பற்றிச் சொன்னார். அவரது கன்னடம் வித்தியாசமாக இருந்தது. தமிழ்க்கன்னடம் பேசிப் பேசியே நாங்கள் பழகிப்போனதால் உண்மையான கன்னடம் எனக்கு அந்தத் தோற்றத்தைத் தந்திருக்கலாம். “காலேல நீங்களும் உங்க அம்மாவும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுங்க. அவங்களை நல்லா குளிப்பாட்டி, மஞ்சள் பூசி குளிக்கச் சொல்லுங்க, பூ வெச்சிக்கிட்டு, குங்குமம் வெச்சிக்கிட்டு, வர்ற வழியில சாப்பிட்டுட்டு வரச் சொல்லுங்க. வெறும் வயிறோடு வரக்கூடாது. சுமங்கலி முகம் பார்க்க வர்றவங்க நாளைக்கே வந்து பார்த்துரட்டும். கமகம் [#2] ஆயாச்சுன்னா விளக்கு வைக்கிற வரைக்கும் யாரும் எந்த சுமங்கலியும் பார்க்கக்கூடாது. இங்கயே ஒரு ரூம் இருக்கு. அங்கயே இருக்கச் சொல்லுங்க. சரியா அஞ்சு மணிக்கு வந்துடுங்க. நிறைய காரியம் இருக்கு ஸ்வாமி. உங்க அம்மாதானே அது… அவ கூட இருக்கிறதுக்கு ஒரு சாதேவியோ சக்கேசியோ இருக்காளா? அதுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க. அம்பட்டயனுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சிடுவோம். காலம் ரொம்ப மாறிடுச்சு. அம்மாவை ரொம்ப கலவரப்படுத்தவேண்டாம். எல்லாம் சிம்பிளா வெறுமனே சாஸ்திரத்துக்கு செஞ்சா போதும். பாவம் வயசான ஜீவன்.”

“சரி நா பார்த்துக்கறேன்.” உள்ளூர பதட்டம் எழுந்தது.

எப்போதும் என் மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கும் அம்மா எதையோ பறிகொடுத்ததுபோல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. எதையோ பறிகொடுத்தவள் என்று நான் நினைத்தது கூடத் தவறு. அவள் இந்த பத்து நாள்களில் தன் வாழ்க்கையையே பறிகொடுத்துவிட்டதாகத்தான் எண்ணினாள். இத்தனைக்கும் அப்பாவின் மரணம் எதிர்பார்க்காத ஒன்றல்ல. நான்கு வருடங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கவேண்டியது. மருந்துகளின் புண்ணியத்தால்தான் அவர் உயிர்வாழ்ந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் எங்கள் குடும்பம் அவர்களின் வாழ்நாளில் பாராதது என்றே சொல்லலாம். அப்படி ஒரு ராஜ கவனிப்பு அவருக்கு. அதிலெல்லாம் என் மீதும் என் அண்ணா மீதும் அம்மாவுக்கு ரொம்பவே பெருமை. எங்களுக்கு அதில் கொஞ்சம் கர்வம் இருந்தது. அப்பா தன் 72 வயது வரை உயிர் வாழ்ந்ததே ஒரு அதிசயம் என்றுதான் நான் நினைத்திருக்கிறேன். அப்படி ஒரு பூஞ்சை உடம்பு. அதிகம் நடக்கமுடியாது. சுறுசுறுப்பு அதிகம் கிடையாது. சிறிய வயதிலிருந்து கணக்குப்பிள்ளையாக இருந்துவிட்டதால், ஏவி ஏவியே காரியம் செய்யும் கலை மட்டுமே தெரிந்ததிருந்தது. தான் இறங்கி ஒரு வேலையை செய்து முடித்ததாக எனக்கு நினைவில்லை. இப்படி அப்பாவின் 72 வயது ஆண்டு வாழ்வே பெரிய கொண்டாட்டத்திற்குரிய விஷயமாகவே இருந்தது. அவர் கடைசி வரையில் தான் இறப்போம் என்று நம்பவே இல்லை. என்ன ஆனாலும் தன் இரு மகன்கள் தன்னைக் காப்பாற்றி வழக்கம்போல வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்றுதான் நம்பினார். அவர் நினைத்ததுபோலத்தான் ஆரம்பத்தில் நடந்தது. ஆனால் ஒரு சென்ற வாரம் வந்த சந்திர கிரஹணம் கொண்ட ஞாயிறு காலையில் அப்பா விழிக்க இயலாத மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அவர் கடைசிவரை ஏதோ சொல்ல வாயெடுத்தார். எங்கள் குடும்பத்தின் ஒவ்வொருவரும் அதை ஒன்றாகச் சித்திரப்படுத்திக்கொண்டார்கள். நான் இப்படி. “கடைசியில என்னை விட்டுட்டீங்க போல இருக்கேடா.”

15 மாதம் மட்டுமே வயதான என் பையன் ஓடிப்போய் அவ்வா என்று அம்மா மடியில் விழுந்தான். நான் அதட்டினேன். அம்மா இப்படி எதுவும் நடந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தாள். அவனது மெல்லிய தலைமுடி அம்மாவின் கையில் பட, அவனுக்கு கூச்சம் எழுந்தது. முகத்தை நாணிக் கோணிச் சிரித்தான். அம்மா அணிச்சையாக, அப்பாவுக்கும் இப்படித்தான், தலைல எங்க தொட்டாலும் கூச்சம் என்றாள். அவர் உயிரோடு இருந்தவரை அவர் அறியாமல் அவர் தலையின் பின்புறத்தைத் தொட்டு அவருக்குக் கூச்சமேற்படுத்துவோம். தலையில் உள்ள கூச்சத்துக்கு எங்கள் குடும்பத்திலேயே பிரசித்தி பெற்றவர் அவர். எனக்கும் கொஞ்சம் கூச்சம் இருந்தது. ஆனால் அப்பாவின் அளவிற்கு அல்ல. அம்மா ஏதோ திடீரென்று எண்ணம் தோன்றியவளாக, “நா சொல்றத கூச்சல் போடாம கேளு. நா நாளைக்கு மொட்டை போட்டுக்கறேனே” என்றாள். அவள் சொல்வது எனக்குப் பிடிபட இரண்டு நிமிடங்கள் ஆனது. என்னால் அதை எடுத்துக்கொள்ளவே முடியவில்லை. கடுமையாகக் கூச்சலிட்டேன். பக்கத்து அறையில் பேசிக்கொண்டிருந்த அண்ணா, அண்ணி, அக்கா, பாவா (அத்தான்), சித்தப்பா சித்தி என சகலரும் ஓடிவந்தார்கள். என்னைப் போலவே அது எல்லாருக்கும் கடுமையான அச்சமும் பதற்றமும் தருவதாக இருந்தது.

சித்திதான் பதவிசாகப் பேசத் தொடங்கினாள். “பாருங்க மன்னி, உலகம் எங்கயோ போய்க்கிட்டிருக்கு. நீங்க என்ன இப்படி பேசறீங்க. உங்களை அப்படி எங்களால பார்க்க முடியும்னு நினைக்கிறீங்களா? எங்களுக்கெல்லாம் அது பெரிய தண்டனை மாதிரி இல்லையா. பாவாதான் கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டார். ஒருவகையில அது எதிர்பார்த்ததுதான். நீங்க அதைவிட பெரிய கல்லை போட்றாதீங்க மன்னி. குடும்பத்துக்கே அது தாங்காது.”

“இங்க பாரு, நான் யோசிச்சுதான் சொல்றேன். எனக்கு மட்டும் என்ன சந்தோஷமா இதைச் செய்றதுல.” அம்மா அழுதாள். கண்ணைத் துடைத்துக்கொண்டு, “அவர் போயிட்டார். அதுக்கு பின்னாடி மத்ததெல்லாம் எனக்கெதுக்கு?” என்றாள்.

அடுத்து அத்தை பேசினாள். “என்ன அண்ணி ஒளர்ற? ஒனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? அண்ணா போயிட்டா ஒனக்கு வேற ஒண்ணுமே இல்லியா? உங்கிட்ட இவ்ளோ பேசறதே தப்பு. அதெல்லா ஒண்ணும் வேணாம்டா பத்மா” என்றாள் என்னைப் பார்த்து.

மீண்டும் அனைவரும் சொன்னோம். அம்மா சொன்னாள். “ஏன் இப்படி ஆளாளுக்கு பதட்டப்படறீங்க? ஊரு உலகத்துல செய்யாததை நான் செய்யச் சொல்லலை. இது எப்பவும் நடக்கறதுதான்” என்றாள். நான் கேட்டேன், “என்னம்மா ஒளர்ற? நாம சுமங்கலி பூஜை செஞ்சப்ப நம்ம பாட்டியோட நினைவா ஒரு சாதேவி வேணும்னு எவ்ளோ அலைஞ்சோம்? ஒருத்திகூட கிடைக்கலை. காலம் அவ்ளோ மாறிக்கிட்டிருக்கு. நீ என்னடான்னா இப்பவும் நடக்கறதுன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்க.”

“உன் பேசிலேயே பதில் இருக்குடா பத்மா. எப்படி அலைஞ்சோம் ஒரு சாதேவிக்கு? அதை யோசிச்சுத்தாண்டா இந்த முடிவுக்கு வந்தேன். இது நம்மவங்களுக்கு நாம செய்ற உதவி இல்லையா?”

“என்ன மண்ணாங்கட்டி உதவி? ஊருல சாதேவி கிடைக்கலைன்னா உலகம் அழிஞ்சிடுமா? அன்னைக்கு நாம என்ன பண்ணோம்? சாதேவிக்குக் கொடுக்கவேண்டியதை தாமிரபரணியில விடலை? அதுமாதிரி செஞ்சிக்குவாங்க. யாரும் திருநெல்வேலியில ஒரு சாதேவி இருக்கான்னு உன்னைத் தேடிக்கிட்டு வரமாட்டாங்க”

அண்ணா ஒரே அடியாக, “இவ்ளோ எதுக்கு பேச்சு? அம்மாவுக்கு யோசிக்கமுடியலை. அப்பா போன பதட்டம். என்னவோ ஒளர்றா. அதை பெரிசாக்கவேண்டாம். நம்மளை மீறி என்ன நடந்துடப் போகுது?” என்றார். அம்மா அழத் தொடங்கினாள். அதற்கு மேல் என்ன பேசவென்று தெரியாமல் எல்லாரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டார்கள். என் மனைவியில் அண்ணியும் பேசிக்கொண்டபோது, “அத்தையோட பிடிவாதம் இருக்கே, அப்பப்பா ரொம்ப மோசம்” என்று சொல்லிக்கொண்டார்கள். அக்காவும் தலையாட்டினாள். பாவா என்னையும் என் அண்ணாவையும் தனியாக அழைத்துக்கொண்டு போனார். “என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு? இங்க பாருங்கடா, அவங்க அழறாங்கன்னு சரின்னு சொல்லிடாதீங்க. மொதல்ல பாவம். ரெண்டாவது ஊர்ல எல்லாரும் நம்மளை காறித் துப்பிடுவாய்ங்க. பார்த்துக்கோங்க.” நாங்கள் சரி பார்த்துக்கறோம் என்றோம். “இன்னொரு முக்கியமான விஷயம், இதை மடத்து ஆச்சாருங்ககிட்ட சொல்லிடாத. இதுதான் சரின்னு அம்மாவை ஏத்திவிட்டாலும் ஏத்திவிட்டுருவாய்ங்க” என்றார். பாவா சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்றுதான் நான் நம்பினேன். உள்ளிருந்து அக்கா அழைத்தாள். அழுதுகொண்டே சொன்னாள். “அம்மாவுக்கு சகேசியா இருந்தா எந்தவொண்ணும் ஆகாம போயிடுவோம்னு பயம். சாம்ப்ளோர் வந்தா சமைச்சு போடணும்னே முத்திரை வாங்கிக்கிட்டவங்க அவங்க. இப்ப சகேசியா இருந்தா அவங்க எதையும் செய்யக்கூடாது. திதி கிதி வந்தா சமைக்கக்கூடாது. சாம்ப்ளோர் வந்தா அந்தப் பக்கம்கூட போகக்கூடாது. அம்மா மாதிரி சகேசியா இருக்கிறவங்களை சாம்ப்ளோர் பார்த்துட்டா அவங்க அன்னைக்கு முழுதும் சாப்பிடக்கூடாதாம். அவ்ளோ தோஷமாம். அன்னைக்கு ராத்திரி பௌர்ணமி வர்ற வரைக்கும் காத்து இருந்துட்டு, பௌர்ணமி தரிசனம் முடிஞ்ச பின்னாடிதான் சாப்பிடணுமாம்.” அண்ணா கேட்டார், “இதெல்லாம் யார் சொன்னா?” “நேத்து வந்தாளே அந்த கமலா அத்தை, சாதேவி..” “யார் அந்த மொட்டைப் பாட்டியா?” “அவ தாண்டா, அம்மாகிட்ட ரொம்ப நேரம் என்னவோ பேசிண்டிருந்தா. அடிக்கடி அம்மாவ ஒண்ணத்துக்கும் ஆகாம போயிட்டயேடின்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. அவதாண்டா எல்லாத்துக்கும் காரணம்.” நான் பெருமூச்சு விட்டேன்.

பத்தாம் நாள் அதிகாலையில் அம்மாவுக்கு வெந்நீ£ர் வைத்துக் கொடுத்தாள் சித்தி. அம்மா குளித்துவிட்டு அலங்காரம் செய்துகொண்டு வந்தாள். அவளை எந்த சுமங்கலியும் வெறும் வயிற்றுடன் பார்க்ககூடாது என்பதால் நான் தனியறையில் அவளை இருக்கச் சொன்னேன். மற்ற சுமங்கலிகள் எல்லாம் கடையில் கிடைத்த இட்லியை ஆளுக்கொரு துண்டாக வாயில் போட்டுக்கொண்டு, முந்தானையில் மஞ்சள் முடிந்துகொண்டு அம்மாவைப் பார்க்கவந்தார்கள். அம்மாவும் வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஒரு இட்லி சாப்பிட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அந்த இடமே அழுகையால் சூழ்ந்துகொண்டது. எனக்கு படபடப்பு ஏறிவிட்டிருந்தது. அண்ணா, “இதெல்லாம் என்ன சம்பிரதாய எழவோ” என்றார். அம்மாவை அழைத்துக்கொண்டு மடத்திற்குப் போனேன். அங்கு அவளைத் தனி அறையில் இருக்கச் சொல்லிவிட்டார்கள். நான் அவளுடன் இருந்தேன். சுமங்கலி முகம் பார்க்க வந்தவர்கள் வரிசையாக வந்தார்கள். வரிசையாக அழுதார்கள். சம்பிரதாயங்கள் முடிந்த பின்பு கொள்ளிடக் கரைக்குப் போனோம்.

அப்பா இறந்த மறுநாள் செய்த கிரியைகள் அனைத்தையும் மீண்டும் செய்தோம். பலிக்கு அனைவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஆச்சார். ஒட்டுமொத்த குடும்பமும் விழுந்து வணங்கியது. அம்மா விடாமல் “ஸ்வாமி காப்பாத்துங்க” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். பெண்கள் அனைவரையும் அம்மாவின் கண்ணில் படாதவாறு செல்லச் சொன்னார் ஆச்சார். அண்ணா இனி நடக்கப்போகும் கொடுமையைப் பார்க்கமுடியாது என்று சொல்லி குளிக்கப் போய்விட்டார். அம்மாவின் உடன் பிறந்தவர்கள் ஓலமிட்டுக்கொண்டே பிறந்தவீட்டுப் புடைவையைச் சார்த்திவிட்டுப் போனார்கள். அம்மாவுடன் இருந்த சாகேசி தூரத்து அத்தை. அவள்தான் கமுகம் செய்தாள். அம்மாவின் தாலியை அறுக்கவே முடியவில்லை. அம்மா அழுதுகொண்டே, “இது கட்டியா இருக்கு. அவர் இல்லையே” என்று சொன்னாள். அந்தக் காட்சியை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று புடைவையை விரித்துப் பிடித்திருந்த நான் கதறினேன். எல்லாவற்றின் மீதும் வெறுப்பாக இருந்தது. ஆச்சார், “அதை அறுக்கெல்லாம் வேண்டாம். கழட்டி வெச்சிடுங்க. ரொம்ப படுத்தவேண்டாம். வளையலையும் உடைக்கவேண்டாம். கழட்டி வெச்சா போதும்” என்றார். அம்மா ஆச்சாரிடம் “சாதேவி ஆகணும்” என்றார். நான் இரைந்தேன். “ஒனக்கென்ன பைத்தியமா? ஏன் இப்படி நினைச்சதை சாதிக்கணும்னு நினைக்கிற?” ஆச்சார் கொஞ்சம் அதிர்ச்சியுடன் சொன்னார், “இங்க பாருங்கம்மா. நீங்களும் எனக்கு அம்மா மாதிரிதான். எனக்குத் தெரிஞ்சு யாருமே இதை செஞ்சிக்கிறதில்லை. இதெல்லாம் வேண்டாம்” என்றார். அம்மா, “அதனாலதான் நான் செஞ்சிக்கணும்”னு சொல்றேன் என்றாள். நான் கையாலாகாமல் “அண்ணா” என்று கத்தினேன். தூரத்தில் கொள்ளிடத்தின் போக்கை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாவின் செவிகளைனென் குரல் அடையாமல் காற்றில் கரைந்தது.

எல்லாரும் கரையேறிய பின்பு நானும் அம்மாவும் அம்மாவுடன் இருந்த சாகேசி அத்தையும் குளித்துவிட்டு மடத்தின் தனியறைக்குச் சென்றோம். அரசல் புரசலாக அம்மா செய்த காரியம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. ஆளாளுக்கு சத்தம் போடுவது கேட்டது. சித்தி அத்தை அக்கா எல்லாரும் இனிமேல் அம்மாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று சொல்லிச் சொல்லி அழுதார்கள். அண்ணாவும் மாமாவும் கடும் கோபத்துடன் அறைக்குள்ளே வந்தார்கள். அம்மாவைப் பார்த்த மறுகணத்தில் அவர்கள் கோபம் எல்லாம் போய் பெரும் ஓலமிட்டு அழுதார்கள். நான் அம்மாவின் மடியில் படுத்து விசும்பிக்கொண்டிருந்தேன். விஷயம் மெல்ல மெல்லப் பரவி அங்கிருக்கும் ஆச்சார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்துவிட்டார்கள். அதில் ஒரு முதியவர், “இது சாதாரண காரியமில்லம்மா. நீ இப்படி பண்ணியிருக்க வேண்டாம். பண்ணிட்ட. உன் புருஷன் மேல நீ வெச்சிருக்கிற பாசத்தைக் காண்பிச்சிட்ட. எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ஆனா இது ஒரு அசாதாரண காரியம்னு மட்டும் தெரியுது. உன் குடும்பமே வாழையடி வாழையா நல்லா இருக்கும்” என்றார். அம்மா சொன்னாள், “நீங்க பார்க்க என் மாமனார் மாதிர் இருக்கீங்க. அவரே நேர்ல வந்து சொல்றதா இதை எடுத்துக்கறேன். சரியோ தப்போ எனக்கு இப்படி செய்யணும்னு தோணிச்சு. அவர் இருக்கிறவரைக்கும் அவருக்காக இதை நான் செய்வேன்னு யாரும் சொல்லியிருந்தா நானே நம்பியிருக்க மாட்டேன். அவர் போனதுக்கப்புறம்தான் அவரோட இருப்பு தெரியுது. எல்லாம் அவன் செயல்.” எனக்குள் பலப்பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

அம்மா எப்படி இப்படிச் செய்தாள்? இந்த அம்மா புதியதல்ல. தான் நினைத்ததைத் தவிர எதையும் செய்யாதவள் அவள். இன்றைக்கு வரை அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறது. நானும் என் அண்ணாவும் சொல்லி அவள் சில முடிவுகளை மாற்றிக்கொண்டிருக்கிறாள். மற்றபடி யார் சொல்லியும் எதற்காகவும் அவள் தன்னை மாற்றிக்கொண்டதாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. அப்படி வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் தன் முடிவுக்காக சகல சொந்தக்காரர்களையும் இழக்கத் தயாராக இருந்தாள். இந்த விஷயத்தில் என்னையும் என் அண்ணாவையும்கூட இழக்கத் தயாராகிவிட்டாளோ என்னவோ. நேற்று ஆச்சார் ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கணவனின் சிதையில் விழுந்த ஒரு பெண்ணைப் பற்றிய வர்ண்னை. அது நடந்து ஐம்பது வருடங்கள் இருக்கும். இன்றைக்கும் அந்த வெம்மை அவரைத் தாக்குவது போல அவர் சொன்னது அவர் எவ்வளவு தூரம் அதனால் வேதனைப்பட்டார் என்பதை உணர்த்தியது. அந்தப் பெண்ணின் பையன் பைத்தியமாக அலைந்து கொள்ளிடத்தின் கரையில்தான் உயிர் துறந்திருக்கிறான். ஒருவேளை நானும் என் கண்முன்னே நடந்த இந்த விஷயத்தை நினைத்து நினைத்து பைத்தியமடைந்து இந்தக் கொள்ளிடத்தின் கரையில் மடியக்கூடும். என் கண்ணீர் அம்மாவின் தொடையை நனைத்தது. அம்மா என் கண்களை துடைத்துவிட்டாள். நான் எழுந்து அம்மாவை நோக்கினேன். “ஏம்மா இப்படி செஞ்சிட்ட?” “ஒரு காரணமும் இல்லைடா. தோணிச்சு செஞ்சேன்.” “ஏன் இப்படியெல்லாம் தோணிச்சு?” “அப்பா முன்னாடி ஒரு தடவை சொல்லியிருக்றார். புருஷன் போனா மொட்டை அடிச்சிக்கிட்டு தன் அழகையே கெடுத்துக்கிறவதான் புருஷனுக்காவே வாழ்ந்தவன்னு. அதுதான்னு வெச்சிக்கோயேன்” “அப்படின்னா அப்பா வெகுளி இல்லையாம்மா?” “நீ உன் பொண்டாட்டிகிட்ட இப்படி சொல்லுவியா? அவர் சொல்லியிருக்கார். அதுலேர்ந்தே தெரியலையா அவர் வெகுளின்னு?” அம்மாவை பேச்சில் ஜெயிக்கவே முடியாது. வெளியிலிருந்து யாரோ அழைத்தார்கள். வெளியே சென்றேன். “நாஸ்வன் காசு வாங்க வந்திருக்காண்டா” என்றார் மாமா. நானும் மாமாவும் மடத்திற்கு வெளியே சென்றோம். நாவிதர் என்னைப் பார்த்தது எனக்கு என்னவோ போலிருந்தது. மாமாவிடம் அவர் கேட்டார், “என்னை ஞாபகம் இருக்கா சாமி?” “ஏண்டா ஞாபகம் இல்லாம? திருப்பதில பார்த்தோமே. மணிதானே நீ?” “ஆமா சாமி” என்றார். அடுத்து அவர் கேக்கப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தவாறே கேட்டார். என்னைப் பார்த்து, “என்ன சாமி அவ்ளோ படிச்சவங்கன்னு சொல்லிக்கிறீங்க, ஊர் ஞாயம் உலக ஞாயமெல்லாம் பேசிக்கிறீங்க, இதை தடுக்க முடியலயா? திருப்பதில எத்தனையோ பொம்பளேங்களுக்கு நானும் மொட்டை போட்டுருக்கேன். இது… முடியல சாமி. கையெல்லாம் நடுங்கிருச்சு…” அதற்குமேல் அங்கு நிற்கமுடியாமல் மாமாவிடம் ரூபாயைக் கொடுத்துவிட்டு அம்மா இருந்த அறைக்குள் சென்றேன். மாமா என்னவோ அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அம்மா தலையை தன் முந்தானையால் மறைத்துக்கொண்டிருந்தாள். தாலி, கருகமணி எதுவுமே இல்லை. சித்தி கொடுத்த தங்க செயினை மட்டும் போடிருந்தார். ஏற்கனவே எடுப்பாக இருக்கும் பற்கள் இன்னும் விகாரமாகத் தெரிந்தன. கையாலாகாத ஒரு பாவப்பட்ட தெருநாயின் பிம்பம்தான் தெரிந்தது. அம்மா என்று மனதுக்குள் கூவிக்கொண்டே அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுதேன். இந்த அம்மா ஏனிந்த தீராத வலியில் என்னைத் தள்ளினாள்? உண்மையில் ஒரு பெண்ணின் விஸ்வரூபத்திற்கு முன்னால் ஆணால் எடுபடவே முடியாதோ? பெண்கள் ஆணின் அடிமை போல இருப்பதெல்லாம், இதோ இந்த முந்தானையில் மறைந்துகிடக்கும் ஒரு பெரிய ரணம் போல, பெண்ணுள்ளே மறைந்துகிடக்கிறதோ? ஒரு பெண்ணின் தீவிர எழுச்சி என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருந்தது. அம்மா என் தலையை வருடினாள். நான் எழுந்து அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன என்பதுபோல அம்மா பார்த்தாள். அவள் தலையை மெல்ல வருடினேன். மொழுமொழுவென்றிருந்தது. என் மகனுக்கு மொட்டை போட்டுவிட்டு தடவிப் பார்த்தபோது இப்படித்தான் இருந்தது. ஒரு குறுகலான பார்வையில் அவனுக்கும் அம்மாவுக்கும்தான் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?

-oOo-

குறிப்புகள்:

குறிப்பு #1: சிலை: இறந்தவர்களை எரித்த பின்பு, எரித்த இடத்தில் மறுநாள் சாந்தம் (குளிர்வித்தல்) செய்வார்கள். பின்பு அவரைப் போன்ற ஒரு உருவத்தை மண்ணில் வரைந்து அதற்குப் பூஜை செய்வார்கள். அங்கிருக்கும் ஒரு சிறிய கல்லை எடுத்து, ஆவாஹம் செய்து, அதையே இறந்தவராக நினைத்து பூஜை செய்வார்கள். இதுவே சிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்லை பத்திரமாக வைத்திருந்து 13-ஆம் நாள் பூஜை முடிந்தவுடன் ஆற்றில் எறிய வேண்டும்.

குறிப்பு #2: கமகம் (அல்லது கமுகம்): தாலி அறுக்கும் சடங்கு.

மேலும் சில அடிக்குறிப்புகள்:

* கன்னடம் பேசும் மாத்வ சமூகத்தில் கணவர் இழந்தவர்களை இரண்டு வகைகளாகச் சொல்கிறார்கள். சாதேவி என்பவர்கள் கூந்தலை மழித்துக்கொண்ட கைம்பெண்கள். சகேசி என்பவர்கள் கூந்தலை வைத்துக்கொண்டிருக்கும் கைம்பெண்கள்.

* தீவிர மரபுகளைக் கடைப்பிடிக்கும் சில மாத்வ குடும்பங்களில் சாதேவி பெண்கள் மட்டுமே தவசம், சாம்ப்ளோர்கள் வரும்போது அவர்களுக்கு சமையல் செய்து பரிமாறுவது போன்ற காரியங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சகேசி என்பவர்களை சாம்ப்ளோர்கள் காண்பதேகூட தவிர்க்கப்படுகிறது. கூந்தலை மழித்துக்கொள்வது என்பது முற்றிலும் அருகிவிட்ட காலம் என்றாலும் சகேசி பெண்கள் எதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

* சுமங்கலி பூஜையின் போது மாத்வ குடும்பங்களில் ஒவ்வொரு குடுமத்திற்கு ஒரு வழக்கம் இருக்கிறது. இருக்கும் உட்பிரிவுகளுக்கேற்ப இந்த வழக்கங்கள் மாறுபடும். சில மாத்வ குடும்பங்களில் இந்த சுமங்கலி பூஜையின்போது சுமங்கலிகளுக்கு உணவாக பழங்களையே பரிமாறுவார்கள். அசி ஹூ ஹுள்ள என்று இதற்குப் பெயர். இதில், இரண்டு கன்னிப் பெண்களும் அடங்குவர். இவர்களோடு, ஒரு சாதேவி பெண்ணுக்கும் இதைச் செய்யவேண்டும். (இந்த எண்ணிக்கையெல்லாம் ஒவ்வொரு குடும்பங்களுக்கு ஏற்ப வேறுபடும்.) அதாவது அசி ஹூ ஹுள்ள பழக்கம் உள்ள குடுமங்களில் சாதேவி பெண்களுக்குப் படைப்பதும் ஒரு வழக்கம். இந்த சுமங்கலி பூஜை என்பது வருடா வருடம் வரும் சுமங்கலி பூஜையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதை கன்னடத்தில் முத்தைத என்கிறார்கள். முத்தைத என்றால் சுமங்கலி என்று அர்த்தம். (அதனால் சுமங்கலி பூஜை என்று மொழிபெயர்த்தேன்.) இந்த முத்தைத எனப்படும் சுமங்கலி பூஜை எப்போதெல்லாம் செய்யப்படுகிறது என்றால், வீட்டிலிருக்கும் பெண்கள் திருமணமாகிச் செல்கிறார்கள் என்றால் அவர்களின் திருமணத்திற்கு முன்பும், ஆண்களுக்குத் திருமணம் ஆகி வீட்டிற்கு புதுப்பெண் வருகிறாள் என்றால் அந்தப் புதுப்பெண் வீட்டிற்கு வந்தபிறகும் இதைச் செய்கிறார்கள். இந்தப் பழக்கமும் காலமாற்றத்திற்கேற்ப வழக்கொழிந்து வருகிறது. கடந்த 50 வருடங்களில் எங்கள் குடும்பங்களில் ஒரேயொரு முறைதான் இந்த முத்தைத நடந்ததாகச் சொல்கிறார்கள். 50 ஆண்டுகளில் எத்தனை திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும் முத்தைத செய்யவில்லை. என் திருமணத்திற்குப் பிறகுதான் மீண்டும் முத்தைத செய்தார்கள். அவ்வளவு அருகிவிட்டது இந்த வழக்கம். இன்னும் சொல்லப்போனால் இப்போதிருக்கும் மாத்வ இளைஞர்களுக்கு இவையெல்லாம் சுத்தமாகத் தெரியாது என்றுகூடச் சொல்லிவிடலாம்.

* சாம்ப்ளோர்கள் என்பவர்கள் மாத்வ குடும்பங்களில் இருக்கும் பல பிரிவுகளின் தலைமை குரு போன்றவர். கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் சங்கராச்சாரியர்களை ஒத்தவர்கள். மாத்வர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சாம்ப்ளோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரும்போது அவர்களுக்கு உணவு செய்து பரிமாற பெண்கள் முத்திரை பெற்றிருக்கவேண்டும். பெண்கள் முத்திரை பெறுவது என்பது கூட எளிதானதல்ல. சுமங்கலிகளுக்கு மாதவிலக்கு முழுவதுமாக நின்ற பிறகு, ஏழு வருடங்களுக்கு பின்பு இந்த முத்திரை வழங்கப்படுகிறது. கணவன் இழந்த பெண்கள் என்றால் அவர்கள் சாதேவியாய் இருக்கும்பட்சத்திலேயே இந்த முத்திரையைப் பெறமுடியும். ஏற்கனவே முத்திரை பெற்ற சுமங்கலிகள் கணவனை இழக்கும் பட்சத்தில், அவர்கள் சாதேவியாய் மாறும் பட்சத்தில் அந்த முத்திரை அவர்களுக்குத் தொடரும். அவர்கள் சகேசியாக இருக்கும் பட்சத்தில் அந்த முத்திரை செல்லாது.

* முத்திரை என்பது சங்கு அல்லது சூரியன் போன்ற வெள்ளியானால் ஆன முத்திரையை கரி அடுப்பில் சூடு செய்து முத்திரை போன்று கையில் வைப்பார்கள். இதை செய்ய அனுமதி பெற்றவர்கள் சாம்ப்ளோர்கள் என்றழைக்கப்படும் சமூகப் பெரியவர்களே. இப்போது இவையெல்லாம் அருகிக்கொண்டு வந்தாலும், ஆங்காங்கே சில மாத்வ சங்கங்கள் இந்த முத்திரை பெறுவதற்காக அவரவர் சாம்ப்ளோர்களை அழைக்கிறார்கள். நான் மூன்றாவது படிக்கும்போது சேரன்மகாதேவியில் சாம்ப்ளோர் வருகிறார் என்று எங்கள் வீடே அல்லோலப்பட்டது மட்டும் எஞ்சிய நினைவுகளாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்குப்பிறகு இத்தனை வருடங்களில் எங்கள் குடும்பங்களைச் சார்ந்த சமூகங்களில் சாம்ப்ளோர் என யாரும் வரவில்லை.

* தமிழ்நாட்டில் இருக்கும் மாத்வர்கள் வீட்டில் கன்னடம் பேசிக்கொள்வதற்கு இணையாக தமிழே பேசுகிறார்கள். அப்படி அவர்கள் தமிழ் பேசும்போது வழக்குத் தமிழில்தான் பேசுகிறார்களே ஒழிய பிராமணத் தமிழில் பேசுவதில்லை.

Share

பிரதிமைகள் – சிறுகதை

சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண் விழித்துப்பார்த்தபோது அறையெங்கும் பரவியிருந்த வெளிர் நீலநிறப் படர்வில் என் மகன் எவ்விதக் குழப்பமும் இன்றி இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து ஒருக்களித்துப் படுத்திருந்தான். மனதை முட்டிக்கொண்டு வரும் பேரழுகை கூட அவனைப் பார்த்துக்கொண்டிருந்தால் வடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்ட காலங்கள் இப்போது ஏன் திரும்ப வருவதில்லை எனத் தெரியவில்லை. இன்னொரு மூலையில் மனைவி படுத்துக்கொண்டிருந்தாள். தூக்கத்தில் அவளது உதடுகள் லேசாகப் பிரிந்து பல் வெளியில் தெரிந்துகொண்டிருந்தது. எல்லா முகத்திற்குள்ளும் விகாரம் மறைந்துகொண்டிருக்கிறது. மூத்திரம் முட்ட, சத்தமின்றி எழுந்து சென்று மூத்திரம் கழித்துவிட்டு வந்தேன். பெரும்பள்ளத்தில் விழுந்த உணர்வு இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. என்னை எப்போதும் இம்சிக்கும் நிழல் என்னைச் சுற்றி இருக்கிறதா என்று பார்த்தேன். வெளிர் நீலப் படர்வில் தொலைந்து போயிருந்த நிழல் கொஞ்சம் ஆசுவாசம் தந்தது. குளிர்ந்த நீரைக் கொஞ்சம் பருக அடி வயிற்றில் பரவிருந்த திகிலும் வெம்மையும் மேலும் தணிந்தது. படுக்கையில் கிடந்தபோது என்னைச் சுற்றிச் சலனங்கள் பேயாட்டம் போடுவதாக எழுந்த கற்பனையைப் புறந்தள்ளத் தள்ள அது மீண்டும் என்னைச் சுழன்று முடிவில் என் மேலேயே படர்ந்தது. இப்படி இன்று நேற்றில்லை, பல காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. இரவில் பெரும்பள்ளத்தில் வீழ்வதும், திடுக்கிட்டு எழுவதும் பின்னர் சலனங்கள் குதியாட்டம் போட்டு என்னைச் சூழ்வதும் என் மீது படர்வதும் எனக்கு அலுப்புதரும் விஷயங்களாகிவிட்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவ்வேதனைப்போதைக்கு அடிமையாகிவிட்டிருந்தேன். முதலில் நிழல் என்கிற பிரமையின் மீது எனக்கிருந்த பேரச்சம் பற்றியும் சொல்லவேண்டும். எப்போதும் என்னைத் தொடரும் நிழலில் நான் நிம்மதி இழந்துவிட்டிருந்தேன். இருளில் கூட என்னைத் தொடரும் நிழல் என்பதாக நான் செய்துகொண்ட கற்பனைகளிலிருந்து கொஞ்சம் வெளிவந்தபோது மீண்டும் திறந்துகொண்டது பள்ளம். நினைவுகளில் அழற்சியில் கண்ணுறங்கியபோது அப்பள்ளம் என்னை உள்வாங்கிக்கொண்டது.

இந்த முறை திடுக்கிட்டு எழவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்தேன், நிச்சயமாகத் தெரிந்தது நான் எழவில்லை என்று. ஆனால் நடந்துகொண்டிருப்பது கனவு என்றும் என்னால் நம்ப இயலவில்லை. ஏதோ ஒரு நிலையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிய, என் வீழிச்சியை, பெரும்பள்ளத்தை நோக்கிய என பயணத்தை, பல நாள் எதிர்நோக்கிய ஒரு நிகழ்வாக அனுமதித்தேன். அப்பள்ளம் அறையை ஒத்த ஓரிடத்தில் சட்டனெ முடிந்துகொண்டது. அடர்ந்த இருளும் நான் வந்த பாதை வழி கசியும் சிறிய வெளிர் நீலக்கதிரும் அன்றி அங்கு வேறொன்றுமில்லை. கண் அவ்விருளுக்குப் பழக்கப்பட சில நொடிகள் எடுத்தது. தட்டுத் தடுமாறி எழுந்து நின்றபோது ஒரு பொம்மையை ஒத்த உருவத்தின் கையின் மீது முட்டிக்க்கொள்ள, பின்னகர்ந்தேன். பெரும்பீதி ஒன்று என்னுள் எழுந்தடங்க யார் என்று கூவினேன். கசியும் விளக்கொளி மெல்ல பாதாளத்துள் பரவ – நான் அதைப் பாதாளமென்றே நம்பினேன் – என் கண்ணில் அலையும் திரையின் பின்னே சலனமற்றிருக்கும் ஒரு பொம்மையைக் கண்டேன். அதன் கையில்தான் மோதியிருக்கிறேன். அறையில் வெளிச்சம் கூடிக்கொண்டே வந்தது. கசியும் கதிரின் திறனைத் தாண்டியும் வெளிச்சம் பரவுவது எனக்குள் ஒருவித அச்சத்தைத் தோற்றுவித்திருந்தாலும் என்னால் விடுபடமுடியாத வசீகரமொன்றுள் அமிழ்வதைப் போல அக்கணமும் ஆகிக்கொண்டிருந்தது.

பொம்மையின் முகத்தை உற்று நோக்கினேன். அது பதிலுக்கு என்னை உற்று நோக்கியது போலிருந்தது. சில விநாடிகள் அப்படியே கழிய, சிறிய திடுக்கிடலில் கண்ணிமை மூடித் திறந்தேன். என் உணர்வுகள் அந்தப் பொம்மையினுள் கடத்தப்படுவதை உணர்ந்தேன். இந்த விசித்திரம் பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, ஒரு அவசர கதியில் பொம்மை என்னை முழுவதுமாக எடுத்துக்கொண்டுவிட்டிருந்தது. நானசைய அசைய பொம்மை அசைந்தது. சலனமற்றிருந்த பொம்மை என்கிற எண்ணத்தைப் பொய்யாக்கியது பொம்மையின் கடுமை நிறைந்துவிட்ட முகம். அடிக்கடி என் மனைவி என் முகத்தில் குடியேறிக்கொண்டிருக்கும் கடுமையைப் பற்றிச் சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வர, என்னைப் பற்றிய பயம் என்னுள் எழுந்தது. இந்நிலையிலிருந்து விடுபடமுடியாதென்று மிகத் தெளிவாகவே தெரிந்தது. விடுபடமுடியாத வசீகரம். சந்தேகமேயில்லை. மௌனத்தின் வெளியில் பரவிக்கிடக்கும், பல்வேறு அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளின் மீது நடந்தேன். பொம்மை தானிருந்த இடத்திலேயே இருந்து நடந்தது.

அது மிகச்சிறிய வயது. எல்லாரும் சிறிய வயதென்றே சொன்னார்கள். ஆனால் எனக்குள் அப்போதே கிளைபரப்பி விட்டிருந்த காமத்தின் சுவடுகள் பற்றி நினைக்கும்போது மிகவும் வெறுப்பாயிருக்கும். பொம்மையின் கண்களைக் கண்டேன். அதன் முகவிகாரம் மறைந்து மழலையை ஒத்த முகத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. அதன் கண்கள், எவ்விதக் களங்கமும் அற்ற, என் சிறுவயதின் கண்கள். பொம்மை என் சிறு வயதுப் பிரதிமையாக மாறிவிட்டிருந்தது. அதன் கைகள் பக்கத்திலிருக்கும் வேறொரு பொம்மையின் மார்பகங்களைத் தடவிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பொம்மை அதுவரை என் கண்ணுக்குத் தட்டுப்படாத மர்மம் விளங்கவில்லை. அது விமலாவின் பிரதிமையாகத்தான் இருக்கவேண்டும். விமலாவைப் பார்க்கும் துணிவு எனக்கில்லை. அவள் வயது அதிகமில்லை. ஆனால் என்னைவிட அதிகம்தான். விமலா ஏதேதோ முனகினாள். என் கைகளை அவளிஷ்டத்திற்கு அலைக்கழித்தாள். உச்சநிலை என்று இப்போது புரிகிற ஒரு வலிநிலையை அப்போது அடைந்தேன். இரண்டு நிமிடங்களில் விமலா என்னைப் புரட்டித் தள்ளிவிட்டு ஒன்றும் நடக்காத மாதிரி, அவள் வீட்டிற்குப் போய்விட்டாள். என் பிரதிமையின் முகம் விகாரம் கொள்ளத் தொடங்கியது. உண்மையில் அன்றிலிருந்தே எனக்குள் மெல்லப் பரவத் தொடங்கவிட்ட விகாரம் இப்போது கடும் வேகத்துடன் தனது பெருக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அது இன்னும் உச்சமடையுமே ஒழிய சிறுத்துப்போகாது. விகாரங்கள் குறைந்த நிலையிலேயே ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். என் மகனை நினைத்ததும் பிரதிமையின் முகம் இளகத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் வம்படியாக என் மகனையே நினைத்தேன். உருகிக் கீழே விழுந்துவிடும் என்று எதிர்பார்த்த நேரத்தில், பிரதிமை தன்னிச்சையான எண்ணங்களை உள்ளெடுத்துக்கொண்டு, எனக்குள் அதன் நினைவுகளைக் கடத்தத் தொடங்கியது. இந்தத் தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் அந்த வசீகரச் சுழலில் நான் சிக்கிக்கொள்ள, என் எண்ணங்கள் கடும் சீற்றத்துடன் பாயத்தொடங்கின.

மதுரகாளியம்மனின் பெயரைக் கேட்டாலே உடலெங்கும் ஒரு உதறல் எடுத்து அலைந்த தினங்கள் நினைவுக்கு வந்தன. ஊரெங்கும் மதுரகாளியின் கோபமும் உக்கிரமும் பேச்சாக இருந்த நேரத்தில், அவளின் பெயரைக்கொண்ட ஒரு பெண்ணை எனக்குச் சம்மதம் பேச வந்தார்கள். அப்போது நான் வளர்ந்திருந்தேன். அப்படித்தான் எல்லாரும் சொன்னார்கள். ஆனால் என் கட்டுக்கடங்காத காமம் நான் வளர்ந்து பல நாளாகிவிட்டதை எனக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது. இரவுகளின் நீட்சி, பெண்ணின் நினைவு, ஏற்கனவே சில பெண்களுடன் எதிர்பாராமல் ஏற்பட்ட உடல் நெருக்கங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, நான் மதுரகாளியின் சிவப்பிலும் திளைத்துச் செழித்திருந்த உடல் மதர்ப்பிலும் கிறங்கிவிட்டிருந்தேன். எந்த யோசனைக்கும் இடமின்றி வேலைகள் மளமளவென நடக்க, நானும் மதுரகாளியும் மதுரகாளியம்மன் முன்னிலையில் மாலை மாற்றிக்கொள்ள, என் உடலெங்கும் அனல் பரவிக்கொண்டிருந்தது. மதுரகாளி சதா சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் உதடுகள் சிரிப்பில் அடையும் நெளிவுகள் என்னை இரவை எதிர்நோக்க வைத்தன. மதுரகாளி அலட்டிக்கொள்ளவே இல்லை. சதா சிரித்தாள். எனக்கு கொஞ்சம் கலவரமாகவும் சந்தேகமாகவும் இருந்தது. ஆனாள் அவளின் நிர்வாணத்தில் நிலைகுலைந்துபோனேன் என்றே சொல்லவேண்டும். அவள் உடலின் தினவும் என் கைக்கடங்காத மார்பகங்களும் செக்கச்செவேல் என்றிருக்கும் உடலும் என்னை வேறெதைப் பற்றியும் சிந்திக்கவே விடவில்லை. மீண்டும் மீண்டும் மீண்டும் அவளுடன் கடுமையான வேகத்தில் உடலுறவு கொண்டேன். அவள் அப்போதும் சிரித்தாள். இரண்டு நாள்களில் தெரிந்துவிட்டது. என் வீட்டுக்காரர்கள் அவள் வீட்டுக்குச் சென்று பெரும் யுத்தம் செய்துவிட்டு வந்தார்கள். மதுரகாளி சித்தம் கலங்கிப்போனவள் என்றார்கள். அவள் இந்த வீட்டில் இருக்கக்கூடாது, ஒரு முடிவு கட்டவேண்டும் என்றார்கள். கிடைத்த இரவுகளில் நான் சும்மா இருக்கவில்லை.

திடீரென பெரும் ஓலம் கேட்டு நான் பதறிக் கண்விழித்தேன். இப்போதும் அந்த ஓலம் என் காதுள் கேட்கிறது. என் பிரதிமையின் நெஞ்சு துடிக்கும் வேகம் கூடியிருந்தது. பிரதிமைக்கும் கேட்டிருக்கவேண்டும் அக்குரல். மதுரகாளியின் அம்மா என் வீட்டு வாசல் முன் நின்று அடிக்குரலிலிருந்து பெருங்குரல் எடுத்துக் கத்தினாள். “எம் பொண்ணு போயிட்டா. அவ சாமிடா. ஒனக்கு மதுரகாளியே கூலி கொடுப்பா,” என்று கூக்குரலிட்டாள். என் அடிமனம் சில்லிட்டது. சில நாள் முன்பு வரை நான் விடாமல் அனுபவித்த அந்த உடல் இன்று இல்லை. அவளைத் தூக்கிக்கொண்டு போகும்போது கணுக்கால் வரை விலகியிருந்த சேலையில் அவளது செக்கச்செவேல் என்கிற தேகம் முகத்தில் அடித்தது. சில இரவுகளில் இன்னும் அக்கால்கள் என் கனவில் வருவதுண்டு. அன்றே என் முகம் கடுமையான விகாரத்தைக் கொண்டிருக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.

ஊரெங்கும் என்னைக் குறை சொன்னார்கள். மதுரகாளியை நானே செய்வினை வைத்துக்கொன்று விட்டதாகச் சொன்னார்கள். அவள் நான்கு மாதம் கர்ப்பிணி, நிச்சயம் மதுரகாளி என்னைச் சும்மாவிடமாட்டாள் என்றார்கள். எந்த மதுரகாளியோ. தினுசு தினுசான கதைகள் பரவின. என் கையில் விஷத்தை வைத்துக்கொண்டு, நான் அதைச் சாப்பிடப் போவதாக நடித்ததாகவும் மதுரகாளி என்னைக் காப்பாற்றப்போவதாக நினைத்துக்கொண்டு அதைக் குடித்துவிட்டதாகவும் பரவிய கதை ஊரின் ஒவ்வொரு தெருவிலும் ஒலித்தது.

என் பிரதிமை கையில் விஷத்தை ஏந்திக்கொண்டிருப்பது போல் கையை நீட்டிக்கொண்டிருந்தது. வேகமாக ஓடிச்சென்று பிரதிமையின் கையைத் தட்டினேன். பிரதிமையின் முகம் மாறத்தொடங்கியது. பெண்மையின் சாயலில் அது மாற, ஒரு நிலையில் மதுரகாளியின் முகத்தை அடைந்தது. இரவின் கருமையையும் பரவியிருக்கும் கதிரின் போர்வையையும் மீறி மதுரகாளியின் செக்கச்செவேல் நிறம் பொம்மையைச் சுற்றித் தகிக்கத் தொடங்கியிருந்தது. எனக்குள் காமம் என்னை மீறிக் கிளர்ந்தெழுந்தது. இப்போது மதுரகாளியின் முகம் கடும் கருப்பு நிறத்திற்கு மாற, அவள் உடலெங்கும் கருமை பரவத் தொடங்கியது. என் கிராமத்தின் மதுரகாளியம்மனின் முகத்தை பொம்மை அடைந்துவிட்டிருந்தது. மதுரகாளியின் தாயின் குரல் எங்கிருந்தோ ஒலிக்க, என் நினைவுகள் என்னுள் ஈட்டியைப் பாய்ச்சின. நான் அலறினேன், ஒரு பைத்தியத்துடன் வாழமுடியாது என. பொம்மை சட்டென நிறம் மாறி, மதுரகாளியாக மாறி, ஏளனப் புன்னகை சிந்தியது. மதுரகாளி உடல் சரியில்லாமல் அவள் வீட்டிற்குச் செல்லும் நாள் வரையில் அவளுடன் தினம் உறவுகொண்டிருந்தேன். மீண்டும் கூவினேன், உடலுறவுக்கும் அன்புக்கும் சம்பந்தமில்லையென. பொம்மை எனது பிரதிமையாக மாறியது. இப்போது என்னால் அதனுடன் பேசமுடியவில்லை. என் பிரதிமை என்னைப் பார்த்துச் சிரித்தது.

இவற்றை விட்டு வெளியேற என் உடல் வெகுவாக முயன்றது. என் உடல் படும் வேதனையும் பிரதிமைக்கும் பொம்மைக்குமிடையே அலைக்கழிப்படும் என் நினைவும் வெகு தெளிவாக எனக்குத் தெரிந்தன. இரண்டின் மனநிலைக்குள்ளூம் நான் கடுமையாக மூழ்கினேன். என் கையில் மதுரகாளியின் மார்பு அழுந்திருப்பதாகத் தோன்றவே, கையை மீண்டும் மீண்டும் உதறினேன். என் மனைவி என்னை உலுப்பினாள். என் மகன் தூக்கத்திலிருந்து பயந்து எழுந்து அழுதான். என்னால் கண்ணைத் திறக்கவே முடியவில்லை. என்னைச் சுற்றி பொம்மைகள் அமர்ந்திருப்பதாகவே நம்பினேன். மிகுந்த பிரயாசைக்குப்பின் கண்ணைத் திறந்தேன். அங்கு மதுரகாளி இல்லை. பிரதிமை இல்லை. நான் மட்டும் இருந்தேன். என் மனைவி இருந்தாள். மகன் இருந்தான். நாளையோ நாளை மறுநாளோ மீண்டும் வருவார்களாயிருக்கும். பிரதிமையாக இல்லை என்றால் நிழலாக. அதுவும் இல்லையென்றால் குரலாக. அனிச்சையாகக் கையைக் கையை உதறினேன். கடும் காய்ச்சல் அடித்தது. என் மனைவி பாராசிட்டமால் மாத்திரையும் வெந்நீரும் தந்தாள். அடிக்கடி கனவு கண்டு புலம்புவதாக மனைவி மொபைலில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள். பிரதிமையைக் கனவென்று நானும் நினைக்கத் தொடங்கினால் அன்றே எனக்கு மரணம் சம்பவிக்கும். லேசாக விடியத் தொடங்கியிருந்தது.

ராமநாதன் பொறுமையாகக் கேட்டான். நாடகத்தில் வரும் மிகைநடிப்புப் பாத்திரமொன்றின் மெனக்கெடலுடன் பேசத் தொடங்கினான்.

– நம்ம ஆத்துக்குப் போற வழி இருக்கு பாத்தியா? முதல்ல ஒரு சின்ன பாலம் வருமே, அங்கனதான். என் தாத்தா என்கிட்ட நெறய தடவ சொல்லியிருக்றாரு. அந்த பாலத்துலேர்ந்து வலது கைப்பக்கமா மூணாவது மரம். ஞாபகம் வெச்சிக்கோ.

நாடகம் தொடங்குவதற்கு முன்பாக அந்நாடகத்தோடு தொடர்புடைய சில விஷயங்களைச் சொல்லிவிட்டு, பின் அதை இணைத்துக் கதை சொல்லுவான் போல. நான் சொல்லுவதைக் கேட்க ஒரு ஆள் தேவையாக இருக்கிறது. வேறு வழியில்லை.

– எங்க தாத்தாவுக்கானா சரியான வுவுத்து வலி. வலின்னா உங்க வீட்டு வலி எங்க வீட்டு வலி இல்ல. நெறய நாள் எந்திரிச்சி உட்கார்ந்து வவுத்தப் புடிச்சிக்கிட்டு அழுதுக்கிட்டு இருப்பாராம். என்னடா இது நிம்மதியில்லாத வாழ்வுன்னு சாகலாம்னு தோணியிருக்கு. துண்ட ஒதறித் தோள்ல போட்டுக்கிட்டு (இந்த ராமநாதன் அவன் தாத்தாவைப் பார்த்ததே இல்லை, ஆனால் அவர் அருகில் இருந்து பார்த்தது போலக் கதை சொல்கிறான்.) விறுவிறுன்னு நாலு எட்டு வெச்சி நடந்தாரு. நான் சொன்னேனே அந்த மரம், பாலத்துப் பக்கத்துல வலது கைப்பக்கமா மூணாவது மரம்… நீ கேக்றியா?

– சொல்லு, கேட்டுக்கிட்டுத்தான இருக்றேன்.

– அங்க போயி நின்னுகிட்டு வவுத்த புடிச்சிட்டு ஓன்னு அழுதுக்கிட்டிருந்திருக்றாரு. மணி ஒரு ஆறு இருக்கும். இன்னும் நாலு எட்டு வெச்சா காவேரி. இந்த வவுத்து வலியோட உசிரோட இருந்தா தாங்காதுன்னு முடிவு பண்ணிக்கிட்டு வவுத்தப் புடிச்சிக்கிட்டு அங்கயே நிக்றாரு. மரத்துப் பின்னாடிலேர்ந்து ஒரு சாமி. அதுவரைக்கும் அந்த சாமிய இந்த ஊர்ல யாரும் பாத்ததே இல்லியாம். சாமின்னா அப்படி ஒரு சாமி. சுண்டினா ரத்தம் வரும். அப்டி ஒரு செவப்பு. முடியெல்லாம் சடை விழுந்து தாடியோட அவர் முன்னாடி வந்து நிக்றாரு. தூக்கி வாரி போட்டுச்சாம் தாத்தாவுக்கு.

எனக்குள்ளும் ஒரு திடுக்கிடல் படர்ந்து அடங்கியது. இந்த ராமநாதன் இப்படியெல்லாம் இதுவரை பேசினதில்லை. முடிவே இல்லாத பெரு நாடகமொன்றின் ஓரங்கத்தை மட்டுமே என்றும் சொல்லுவான். இன்று அவன் நாடகம் வேறொரு திக்கில் திறந்துகொண்டு விட்டது புரிந்தது.

– என்ன சாகப்போறியான்னுச்சாம் சாமி. தாத்தாவுக்கு ஒண்ணுமே ஓடல. சட்டுன்னு பொறி தட்டியிருக்கு, ஆகா இவர்தாண்டா நாம தேடிக்கிட்டிருந்த சாமின்னு சாஷ்டாங்கமா கால்ல வுழுந்திருக்றாரு. சரி எந்திருன்னுச்சாம் சாமி. இடுப்புலேர்ந்து சுருக்குப் பையை எடுத்துப் பிரிச்சி அதுலேர்ந்து வூபுதி எடுத்துக் கொடுத்திச்சாம். வவுத்துல பூசுன்னுச்சாம். பூசியிருக்றாரு தாத்தா. கொஞ்சம் வாயில போட்டுக்கோன்னுச்சாம். வாயில போட்ட நிமிஷத்துல போயிடுச்சு வவுத்த வலி. நம்புவியா நீ? அன்னைலேந்து வவுத்த வலி வல்ல தாத்தாவுக்கு. நீ ரொம்ப கஷ்டப்பட்டுக்காத. ஒனக்கும் ஒரு சாமி வரும். மதுரகாளியே வருவா. நீ தெரிஞ்சு ஒண்ணும் தப்பு செய்யல. விடு.

மதுரகாளியின் பெயர் கொஞ்சம் பதற்றத்தைக் கொடுத்தது. ராமநாதன் வேறு ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். ஊர் உறங்கிவிட்டிருந்தது.

ந்தக் கடிதம் ராமநாதன் எழுதியது என்று அறிந்தபோது என்னைப் பதற்றம் பீடித்தது. அவன் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தினம் இரவில் தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டான். எல்லாரும் என்னைத் தோண்டித் துருவிக் கேட்டார்கள். அவன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று நான் சொன்னதை யாருமே நம்பவில்லை. அன்று நான்தான் அவனிடம் நிறையச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சொன்னதெல்லாம் அவனது தாத்தாவைப் பற்றித்தான். யாருமே நம்பவில்லை. எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்தது, அவன் ஏதும் சொல்லி நாம்தான் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்று. நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிரிந்து சென்ற மூன்று மணி நேரத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். கோரமான சாவு. சேலையை ·பேனில் மாட்டிக்கொண்டு தொங்கிவிட்டான். அப்படி என்ன அவனுக்குள் இருந்திருக்கும் என்று யோசித்து யோசித்தே நான் சோர்ந்துவிட்டிருந்தேன்.

ராமநாதனின் கடிதம் என்றதும் திடுக்கிடல், பயம், ஆர்வம் என எல்லாம் ஒன்று சேர, கடிதத்தைப் பிரித்தேன்.

– இந்த லெட்டர் நீ படிக்கும்போது எவ்ளோ பயந்துட்ருப்பேன்னு எனக்கு தெரியுது. இன்னும் ஒரு மணிநேரத்துல சாகப்போறேன். இவ்ளோ பிரச்சினை, கனவு, பொம்மை, பிரதிமைன்னு நீ என்னென்னவோ உளர்ற. ஆனா உனக்கு எப்படி தற்கொலை செஞ்சிக்கணும்னு எண்ணமே வரலேன்னு தெர்யலை. என்னால முடியலைடா. உனக்கு மதுரகாளின்னா எனக்கு இன்னொருத்தி. பேரு வேண்டாம். என்னோடவே இருக்கட்டும். உன்னய மாதிரிதான் என்னயும் ஏமாத்திக்கிட்டு, ஊரயும் ஏமாத்திக்கிட்டு. பிரதிமை கை நீட்டி விஷம் வெச்சிக்கிட்டு இருந்தாமாதிரி காமிச்சதுன்னு சொன்னியா, பிரதிமை பொய் சொல்லுமாடா? நாமதான் பொய் சொல்லணும். எல்லார்கிட்டயும். நீ என்கிட்டயும் நான் உன்கிட்டயும். அவ்ளோதான்.

நான் திக்பிரமை பிடித்து நின்றிருந்தேன். மதுரகாளியம்மன் என்னைக் காப்பாற்றுவாள் என்று அவன் சொன்னதெல்லாம் நாடகத்தின் ஒரு வசனம்போல.

அன்றிரவும் பள்ளம் திறந்தது. இந்தமுறை எனக்காக ராமநாதனின் பிரதிமை கையில் கடிதத்துடன் நிற்பது போல நின்றுகொண்டிருந்தது.

[முற்றும்]

Share

சொக்கலிங்கத்தின் மரணம் – சிறுகதை

[1]

சொக்கலிங்கத்தின் நினைவுகள் தாறுமாறாக அறுத்துக்கொண்டு ஓடின. அவருக்குள் ஏதேதோ எண்ணங்கள் தொடர்ந்து எழுவதும் அதைத் தொடர்ந்து கலக்கமும் எழுந்தன. அவர் செத்துப்போவார் என அவரது சொந்தங்கள் அவர் வீட்டுத் திண்ணையிலும் எதிர் வீட்டுத் திண்ணையிலுமாகக் காத்துக்கிடந்தன. போயிட்டியே என்று கதற ஆயத்தப்படுத்திக்கொண்டு சொக்கலிங்கத்தின் தலைமாட்டில் உட்கார்ந்திருந்தாள் ஒருத்தி. பெரு மழையில் கரைந்து போய் வெளுத்துவிட்ட, கரியில் வரையப்பட்டிருந்த ஸ்டம்ப் கோடுகளைப் பார்த்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாத சோகத்தில் அந்த வளைவின் சிறுவர்கள் கன்னத்தைக் கையால் தாங்கிக்கொண்டு சினிமா கதை பேசிக்கொண்டிருந்தார்கள். மழையின் தீவிரம் கூடிக்கொண்டே இருந்தது. சொக்கலிங்கம் சீக்கிரம் செத்துப்போனால் பெரு மழைக்கு முன் எரித்துவிடலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள் சொந்தக்காரர்கள். சொக்கலிங்கம் சாவதாய் இல்லை. பையன் பாலூத்தினா செத்துடுவான் என்றார் வெள்ளைத் துண்டு போட்ட ஒருவர். ‘யாரு சம்முவமா? நல்லா ஊத்துவாம்ல பாலு!’ என்றார் இன்னொருவர். அவர் கிருதாவைப் பெரிதாக வைத்திருந்தார். ‘என்னதாம் கொலைப்பகையா இருக்கட்டும்வே. அப்பனுக்குப் பையன் பாலூத்தவேணாமா’ என்றார் வெள்ளைத் துண்டு. ‘ஒம் பையன் ஒனக்கு பாலூத்துவானா யோசிவே’ என்று மனதுக்குள் வைதது கிருதா.

போயிட்டியே என்று பெருங்குரல் ஒன்று கேட்டது.

அதுவரை சலம்பிக்கொண்டிருந்த ஊரு சனங்களின் பேச்சு சட்டென இரண்டொரு நொடிகள் அடங்கி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. திண்ணையில் உட்கார்ந்திருந்த சொன்ந்தக்காரர்கள் சொக்கலிங்கத்தின் வீட்டுக்குள் போனார்கள். தனது குரலின் எட்டுக் கட்டையை நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே அழுதுகொண்டிருந்தாள் அந்தப் பெண். மாடி வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தான் சண்முகம். ‘அதாம் உசுரு போயிட்டில்லவே, கீழ இறங்கி வாரும்’ என்றது வெள்ளைத் துண்டு. ‘செத்த இருங்க வாறேன் அண்ணாச்சி’ என்று சொல்லி, வீட்டுக்குள் சென்று, குத்தாலத் துண்டு ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு, கைலியை மடித்துக்கொண்டே கீழே இறங்கினான் சண்முகம். ‘அப்பஞ் சாவுக்கு இவ்வளவு சாவாசமா வாற மனுசாளும் ஊர்ல இருக்கானுவடே’ என்று முணுமுணுத்தது கிருதா. மழை நின்றாலும் வளைவில் கிரிக்கெட் விளையாடமுடியாது என அலுத்துக்கொண்டன சிறுவர் கூட்டம். ‘அந்தாளு உசுரோட இருக்கிறப்பயே விளையாட விடமாட்டான். செத்தும் களுத்தறுக்கான் பாரு, மூதி’ என்றான் ஒருவன். பந்து தனது எல்லைக்குள் வந்தால், உடனே ஓடிச் சென்று எடுத்து வைத்துக்கொள்வார் சொக்கலிங்கம். அப்படி எடுக்குமுன் பந்தை எடுத்துவிட ஓடி வருவார்கள் சிறுவர்கள். பந்து சொக்கலிங்கத்தின் கையில் சிக்கிவிட்டால் அது திரும்ப வராது. யாராவது சிறுவர்கள் அவரிடம் பந்தைக் கேட்கப் போனால் தாறுமாறாக வைவார். குடும்பத்தை மட்டுமில்லாமல் சிறுவனின் பரம்பரையையே வைவார். ரோட்ல போய் ஆடுங்கல, கிரவுண்டுல போயி ஆடுங்கல, உங்க வீட்டு அடுப்பாங்கறையில ஆடுங்கல என பல ‘யோசனைகளை’ச் சொல்வாரே ஒழிய பந்தைத் தரமாட்டார். சுவத்துல கரியால கோடு போட்டுக் கோடு போட்டு நாசப்படுத்துறீங்களேல, படிச்சவனுளா என்பார். மறுநாள் பந்து இரண்டாக வாயைப் பிளந்துகொண்டு வெளியில் கிடக்கும். ‘ரெண்டு மூணு நாளு விளையாடாட்டியும் பரவாயில்ல, ஆளு ஒளிஞ்சான் பாரு, அதுக்கே திருச்செந்தூருக்கு மொட்டை போடணும்ல’ என்றான் இன்னொருவன்.

சண்முகம் செத்துக்கிடந்த தன் அப்பாவைத் தூரத்திலிருந்து பார்த்தான். உடனே வெளியில் வந்தான். ‘ஆகவேண்டியதைப் பாக்கணும்’ என்றார் வெள்ளை துண்டுக்காரர். ‘ம்ம்’ என்றான் சண்முகம். மேலிருந்து சண்முகத்தின் மகன் இறங்கி வந்தான். சண்முகம் பார்வையாலேயே அவனை மேலேயே இருக்கச் சொன்னான். ‘தாத்தாவ பாக்கணும்னு வாரான், அவனை வெரட்டாதவே, நீ போல’ என்றார் வெள்ளைத் துண்டுக்காரார். மிகுந்த ஆர்வத்தோடும் கலக்கத்தோடும் காலை உள்ளே வைத்தான் மணி.

[2]

தாத்தாவின் மேல் அமர்ந்திருந்த ஈயைப் பார்த்துக்கொண்டிருந்தான் மணி. அந்த ஈ ஆடாமல் அசையாமல் வெகுநேரம் அவர் மேலே அமர்ந்திருந்தது. யாரோ ஒருவர் இறந்தவருக்கு மாலை போட்டு விட்டுப் போனார். ஈ தன் இடத்தை விட்டுக் கொஞ்சம் அணங்கியது. நேராகப் பறந்து மேலேயிருந்த பரணில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பந்திப் பாயில் அமர்ந்தது. அங்கிருந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்தில் இருந்த பெட்டியில் தாவி அமர்ந்தது. சட்டென்று பறந்து, அந்த அறையை இரண்டு மூன்று முறை சுற்றிவிட்டு ஜன்னல் வழியே வெளியேறியது. மணி வீட்டின் பின்புறம் வழியே சந்துக்குள் நுழைந்து ஜன்னலின் வெளிப்புறம் வழியாகப் பார்த்தான். ஜன்னலின் வழியாகப் பார்த்தபோது தாத்தாவின் முகம் விகாரமாகத் தோன்றியது. ஈயைத் தேடினான். அந்த இடத்தில் இருந்த ஒரே ஒரு ஈ அந்த ஈயாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். தனக்கு ஏதோ சொல்ல அந்த ஈயிடம் ஏதோ இருப்பதாகப்பட்டது அவனுக்கு.

உள்ளுக்குள் பலமாகப் பேசுக்குரல்கள் எழுந்தன. சட்டுன்னு தூக்கணும் என்றது வெள்ளைத்துண்டு. சண்முகம் கத்தினான். அவர யாருன்னு நினைச்சிட்டீங்க அண்ணாச்சி, சாவுற வரைக்கும் கெத்தோட இருந்த மனுஷன் என்றான். கிருதா முகத்தை வேறு பக்கம் திருப்பிச் சிரித்தது. எல்லாருக்கும் சொல்லி, எல்லாரும் வந்து பார்த்து வாக்கரிசி போட்ட பின்னாடிதான் எடுக்கணும்னு என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான் சண்முகம்.

மணி ஈயைப் பார்த்துக்கொண்டே நின்றான். அந்தச் சந்தில் நின்று ஈயைப் பார்த்துக்கொண்டிருப்பது அவனுக்கு விநோதமாகப்பட்டது. ஏதோ ஒரு நாளில் தாத்தாவும் இதே சந்தில் நின்று எதையோ விநோதமாகப் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். ஒரு மனிதனின் சாவுக்குப் பின் அவனது நினைவுகள் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்று தீவிரமாக நம்பினான் மணி. இதை நினைத்துப் பல தினங்கள் அவன் யோசித்திருக்கிறான். அதன் ஒரு தொடர்பே அந்த ஈ. அவனுக்குள் சந்தேகமே இல்லை. ஈயைத் தேடினான். அங்கு அந்த ஈ இல்லை. மீண்டும் பின்கட்டு வழியாக வீட்டுக்குள் வந்தான். தாத்தாவின் மீது ஈக்கள் உட்கார்ந்திருந்தன. தாத்தாவுக்குத் தன்னிடம் சொல்ல பல விஷயங்கள் உள்ளன என்றும் அவர் நிச்சயம் சொல்லுவார் என்றும் உறுதியாக நம்பினான் மணி.

[3]

விடாமல் மழை கொட்டிக்கொண்டிருந்தது. இப்படி ஒரு மழையைத் தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று உறுதியாகச் சொன்னார் ஒருவர். இழவு வீட்டுக்கு வந்தவர்களில் வயதில் மூத்தவர் அவர். இவன் செத்தா இவனுக்கு யாரு பாலூத்துவா என்று யோசித்துக்கொண்டிருந்தது கிருதா. தான் சொல்லும்போதே பிணத்தைத் தூக்கியிருந்தால் எல்லாருக்கும் சௌகரியமாகப் போயிருக்கும் என்று சொல்லிச் சொல்லிப் புலம்பியது வெள்ளைத் துண்டு. அவர் சண்முகத்தைக் குறை சொல்லச் சொல்லச் சண்முகத்துக்கு அவன் அப்பாவின் மீது பாசம் கூடிக்கொண்டே போனது. “அண்ணாச்சி, அவர் என் அப்பா அண்ணாச்சி” – மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களில் சொன்னான். சண்முகத்தின் பொண்டாட்டி, ஆட்டும்னு எடுக்கப் பாருங்க, சோலி நிறையக் கெடக்கு என்றாள். சண்முகம், “அவர் என் அப்பாட்டீ” என்றான். ஊர்ல மத்தவன்லாம் அப்பா இல்லாம பொறந்துட்டானுவளே என்று ரொம்ப வருத்தப்பட்டுக்கொண்டது கிருதா.

மழையின் தீவிரம் சண்முகத்துக்கும் கொஞ்சம் கலவரத்தைக் கொடுத்தது. இருந்தாலும் அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. “நாறிப் போகணும்னு எழுதியிருந்தா நாறட்டும். என்னா பாடு படுத்தினான் பாவி” என்று நினைத்துக்கொண்டான். தாமிரபரணியில் வெள்ள அபாயம் இருப்பதாக ரேடியோவில் சொன்னதாகச் சொல்லிவிட்டுப் போனான் சொக்கன். அவனைத்தான் வீடு வீடாகச் சென்று தகவல் சொல்ல ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் சென்று “பிச்சம்மா காம்பவுண்டு, சம்பந்தர் தெரு பெரியவுக சொக்கலிங்கம் பிள்ளை இன்னைக்குக் காலேல தவறிட்டாக. நாளைக்குக் காலேல எடுப்பாக. வந்துருங்க. சங்கத்துலேர்ந்து சொன்ன தகவலுங்கோய்” என்று கத்திவிட்டுப் போனான். துண்டை தலையில் கட்டிக்கொண்டு, லொடுக்கு விழுந்த கன்னத்தோடு அவன் கத்துவதைப் பார்த்து வீட்டுச் சிறுவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். சில பெரிசுகள், யாருடே போனது, சரியாச் சொல்லு என்று கேட்டுச் சேதியைத் தெரிந்துகொள்வார்கள்.

வெள்ளம் வரப்போவுது என்று சாவு வீடே பேசிக்கொண்டிருந்தது.

மணி வீட்டுக்குப் பின்னால் இருக்கும் ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்தான். தாத்தா வெகு நேரம் அங்கிருந்த பெட்டியை நோண்டிக்கொண்டிருப்பதையும் அங்கேயே அமைதியாய் உட்கார்ந்திருப்பதையும் அவன் நிறையத் தடவைகள் பார்த்திருக்கிறான். தாத்தாவின் மீதிருந்த ஒரு ஈ அந்த அறைக்குள் பறந்துசென்றது. தாத்தாவே கூட்டிச் செல்வதாக நினைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்திருந்தான். தாத்தாவின் மீது அவனுக்கு அவ்வளவு பாசம் இருந்ததா என்பது பற்றியும் அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு சாவு அவனைக் கொஞ்சம் அசைக்கிறதோ என்றும் தோன்றியது. உணர்வுகளுக்குக் கட்டுப்படுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அந்த வயதில் உணர்வுகளுக்குக் கட்டுப்படுவதே அந்த வயதுக்கு செய்யும் மரியாதை என்பதைப் பல இரவுகளில் அவன் கண்டடைந்திருக்கிறான். சாவும் கூட ஒரு உணர்வு ரீதியால் உந்தப்பட்ட விஷயமாக இருப்பதில் அவனுக்குக் கொஞ்சம் உடன்பாடு வந்துவிட்டிருந்தது. மழை நீர் வடியும் வரை தாத்தாவைத் தூக்கமாட்டார்கள் என்பது அவனுக்கு நிம்மதியாய் இருந்தது. அதுவரை அவன் என்ன செய்கிறான் என்று யார் பார்க்கப்போகிறார்கள்? ஒரு ஈ அவன் காதருகில் வந்து சத்தமெழுப்பிச் சென்றது. மணி சிரித்துக்கொண்டான்.

வெள்ள நீர் தண்டவாளம் வரையில் வந்துவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். தண்ணி வடியர வரைக்கும் தூக்கமுடியாதுடே என்றார் வெள்ளைத்துண்டு. என்ன செய்ய அண்ணாச்சி என்றான் சண்முகம். இப்ப கேளு என்றார் கிருதா. சண்முகம் கிருதாவை முறைத்தான். கருப்பந்துறைக்குத் தண்டவாளத்தைத் தாண்டி கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரம் போகவேண்டும். தண்டவாளத்திலேயே தண்ணி என்றால் கருப்பந்துறை முங்கியிருக்கும். சண்முகத்துக்கு ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரலாமா என்று தோன்றியது. “பொணத்தைப் போட்டு நாறடிக்கணும்னே வேணும்னே சொன்னாலும் சொல்லுவானுவோ” என்று நினைத்துக்கொண்டு வெளியில் போக நடையைக் கட்டினான்.

வளைவிலிருந்து வெளிப்பட்ட அவனைப் பார்த்துப் பதறினாள் பிரமு கிழவி. அப்பன் செத்துக் கெடக்கான், வெளிய போகக்கூடாதுடே என்று சொல்லி அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். சண்முகத்துக்கு எரிச்சலாக இருந்தது. அப்பாவின் வைப்பாட்டிகள் என்கிற சண்முகத்தின் பட்டியலில் பிரமு கிழவியும் இருந்தாள்.

இப்படியே இரவு ஆகிவிட்டிருந்தது.

மணி அந்த அறைக்குள் மூழ்கிவிட்டிருந்தான். தாத்தாவின் பல பரிமாணங்கள் அவனுக்கு இன்பத்தையும், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும், காமத்தையும் ஒருசேரத் தூண்டியிருந்தன. தாத்தாவின் வாழ்க்கையே அந்த அறைக்குள் புதைந்து கிடப்பதாகப்பட்டது அவனுக்கு. அங்கிருந்த பெட்டிகள் முழுவதிலும் தாத்தா எழுதிப் போட்டிருந்த கத்தைக் கத்தையான காகிதங்கள் அவனுக்குப் பல விஷயங்களைச் சொன்னது. எதுவும் ஓர் ஒழுங்கான காலவரிசையில் இல்லை. அவன் கையில் கிடைத்த தாளையெல்லாம் பிடித்திழுத்துப் படித்தான்.

[4]

மழையின் உக்கிரம் சற்றும் குறையவில்லை. தொடர்ந்து முப்பத்தாறு மணிநேரமாக மழை பெய்துகொண்டிருந்தது. ஊரெங்கும் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. பிணத்தைச் சுற்றி நான்கைந்து பேர் மட்டுமே இருந்தார்கள். கிருதா அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருந்தது. எரிந்துகொண்டிருந்த விளக்கில் சண்முகத்தில் எரிச்சலும் அவன் பொண்டாட்டியும் எரிச்சலும் அப்பட்டமாகத் தெரிந்தது. ‘செத்தும் கொல்லுதானப்பா’ என்று நினைத்துக்கொண்டான் சண்முகம். தன் கணவனின் வறட்டு ஜம்பத்தால் இப்படி நாறும்படி ஆகிவிட்டதே என்று வயிறு எறிந்துகொண்டிருந்தாள் சண்முகத்தின் பொண்டாட்டி. மணி கையில் கிடைத்த சில முக்கியமான பக்கங்களை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்குள் ஓடினான். மெழுகுவர்த்தியை வைத்து ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டிருந்தான். வெள்ளம் வாகையடி முக்குத் தாண்டி டவுணுக்குள் புகுந்து சம்பந்தர் தெருவைத் தொட்டுக்கொண்டிருந்தது. வெள்ளைத்துண்டு வந்து, “பொணத்தை இங்க வெச்சிக்கிட்டு இருந்தா வேலைக்காகாது. ஐஸ் வாங்கி அதுல படுக்க வெக்கணும். இங்கனயே வெச்சிருக்கமுடியாது. இப்பமே நாத்தம் அடிக்க ஆரம்பிச்சிட்டு. வெள்ளத்தண்ணி இங்கயும் வந்துட்டுன்னா நிலைமை ரொம்ப மோசமாயிடும். பேசாம மாடில உன் வீட்டுக்குக் கொண்டு போயிடலாம். எப்படியும் இன்னைக்கு ராத்திரியில தண்ணி வடிய ஆரம்பிச்சிடும். நாளைக்குக் காலங்காத்தால தூக்கிடலாம்” என்றார். எழு வருசம் மாடிக்கு வராத தன் அப்பனை இப்போது மாடிக்குக் கொண்டுபோகவேண்டுமா என்று யோசித்தான் சண்முகம்.

[5]

தாத்தாவின் எழுத்துகள் மணியை என்னவோ செய்தது.

சொக்கலிங்கம்-1

……….ளின் சேலை காத்துலாடி எம்மேல பட்டது. அதுக்கு மேல சும்மா இருக்க முடியலை. காலேல குடிச்சிருந்த தென்னங்கள்ளு உடம்பை முறுக்கேறி வெச்சிருந்தது. காலேல ஆத்துல குளிச்சப்பையும் அவ ஒடம்பைத்தான் நினைச்சிக்கிட்டுக் கெடந்தேன். எண்ணெய் தேச்ச மாதிரி வேர்வை வழிஞ்சு கெடக்கற கருப்பு இடுப்புலத்தான் எம்பார்வை கெடந்தது. அவளுக்குந் தெரியும் எம்மனசு. ஒடனே ஒத்துக்கப்பிடாதுன்னு நினைச்சாளா கருப்பி? இருக்கும். எங் காந்திமதியில்லா. ஒலகத்துல ஒண்ணும் வேணாமின்னு நினைச்சேன். ஜன்னலுக்கு வெளிய நின்னுக்கிட்டு படுக்கையறைல துணி மாத்திக்கிட்டு இருந்த அவளைப் பாத்தேன். உள்ளவான்னு சொன்னா. நான் உள்ள போனேன். கூளு குடிச்ச ஒடம்போட ருசி, தெனவு எல்லாங் காமிச்சா அன்னைக்கு. (சில வரிகள் அடிக்கப்பட்டிருந்தன. மணி அதை ஊன்றிப் படித்துப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.) ….தைப் படிப்பாங்கன்னு தோணுது. படிக்கட்டும். எல்லா மனுசனுக்குள்ளும் இருக்கிறதைத்தான் எழுதிருக்கேன். நான் அன்னைக்கு அப்…..

எந்த வருடம் என்பதைச் சொக்கலிங்கம் எழுதி வைக்கவில்லை.

சொக்கலிங்கம்-2

காந்திமதி போயிட்டா
பொலிவழிஞ்சு போச்சு திருநெல்வேலி
ஆத்துல தண்ணி நின்னுருக்கும்
நெல்லையப்பனுக்குத்தான் காலம் வாய்க்கலை
.
.
.
.
.
.
.
நெல்லையப்பனுக்குக் காலம் வாய்க்கல்லே…!

(1997)

சொக்கலிங்கம்-3

….ன்னு சொன்னேன். மவனா இவன்? நாய் விளுந்த மாதிரி விளுந்தான். நீரு எனக்கு என்ன மயித்த செஞ்சீருங்கான். அப்பன் புள்ளைக்குப் பண்ணதை நியாபகம் வெச்சுச் சொல்லமுடியுமா கோட்டிப்பலேன்னேன். நீரு கோட்டிவே, ஒமக்குக் கோட்டிவேன்னான். அந்தக் கருப்பச்சி கூட நீரு ஆடின ஆடமெல்லாந் தெரியாதான்னான். நா மறச்சி வெச்சி ஆடலியேன்னேன். காறித்துப்பிட்டுப் போனான். எனக்கு ரத்தம் ஓடிக்கிட்டுக் கெடந்த காலத்துல முன்னாடி நிக்கப் பேலுவான் இந்தச் சண்முவம். இன்னைக்குக் காறித்துப்புதான். அவஞ் சந்தேகப்பட்ட மாதிரியே அந்தக் கருப்பிக்கு மாடியை எழுதி வெச்சி உயிலு மாத்தினேன். அன்னைக்கு வரைக்கு நா நெனைக்கல்லே அப்பிடி. அவஞ் சொன்ன அன்னைக்குத்தான் செஞ்சேன். அவளுக்கு ஒரு கடப்பாடு பாக்கி கெடக்கு. வேணுங்கிறப்பெல்லாம் படுத்தா தாயி. (மணி பக்கத்தைத் திருப்பினான். பின் பக்கத்தில் தொடர்ச்சி இருந்தது.)

எப்படி தெரிஞ்சதோ சம்முவத்துக்கு. அதுவரைக்கும் வேம்படித்தெருவுல பொண்டாட்டி புள்ளையோட தனி வீட்டுல கெடந்தவன், எவ வாரான்னு பாக்கேன் மாடிக்கு, எழுதி வெச்சிட்டா கொடுத்துப்பிடுவோமா, பாக்கலாம், அவ மாதிரி கண்டவனுக்குப் பெக்கலை என் அம்மான்னு சொல்லி மாடிக்கு ஜாகையை மாத்திக்கிட்டான். அவனை வெரட்ட எனக்கு முடியலை. ரத்தம் சுண்டிப்போச்சு. ஆடி ஓஞ்சிட்டேன். முன்ன மாதிரி இருந்தா அவன் மொகரக்கட்டையை ஒடச்சி வெளிய அனுப்பியிருப்பேன். திடீர்னு ஒரு நாள்…..

(தொடர்ச்சியான பக்கத்தைக் காணவில்லை. இந்தத் தாளின் கிடைமட்டத்தில் 1991 என்று எழுதப்பட்டிருந்தது.)

சொக்கலிங்கம்-4

ஹே காற்றே
என்னைச் சுழன்றடிக்கும் காற்றே
வேகமாய் வீசும் காற்றே
புழுதி வாரி இறைக்கும் காற்றே
என்னைச் சுற்றாதே
நானென்ன நெல்லையப்பனா?
வேம்படியில் கருப்புக் காந்திமதி இருக்கிறாள்
வேண்டுமானால் அவளைச் சுற்று
ஹே காற்றே
காந்திமதியின் சாகசங்கள் உனக்குத் தெரியுமா?
அவள் கருப்புக் கடவுள், அறி!
அவளே காந்திமதி, அறி!
அவள் வீட்டுக்குள்ளே வர
வீடெங்கும் பரவுகிறான்
உன் உறவுக்காரத் தென்றல் பையன்.
எங்கோ மொய்த்துக்கொண்டிருக்கும் ஈக்கள்
அவளையும் என்னையும் மாறி மாறி மொய்க்கின்றன
ஹே காற்றே…

(கவிதை முயற்சி என்று தலைப்பிட்டு, 1979-இல் சொக்கலிங்கம் எழுதியது. மணிக்கு ஆச்சரியமாக இருந்தது.)

சொக்கலிங்கம்-5

….னோ அவனுக்கு என்கிட்ட ராஜவல்லிபுரத்துல நெலம் கெடக்குன்னு. வூட்டுக்கு வந்து என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்கான் சம்பந்தம் சம்பந்தமில்லாம. சம்முவத்தோட பொண்டாட்டி அந்த மூளிக்களுதை கூட நிக்கா. வீட்டுக்குள்ள காலை வைக்கும்போது கால எடுட்டீன்னு கத்தலாமின்னு நினைச்சேன். கத்தலை. நா அவளை ஒரு மாதிரி பாக்கேன்னு சம்முவத்துக்கிட்ட சொல்லி வெச்ச நாயி வீட்டுக்குள்ள கால வைக்கலாமா? சம்முவத்தைப் பாத்துக் கத்தினேன். ரோசங் கெட்ட நாயே, மாடியக் காலி பண்ணிட்டுப் போல, அது காந்திமதிக்குள்ள வூடுன்னேன். அவனுங் கத்தினான். எவ காந்திமதி, கண்ட அவுசாரிக்கு காந்திமதி பேரச் சொல்லுதியே. காந்திமதியம்மாவே ஒன்னக் கேப்பா, நா மாடியக் காலி பண்ணுவேன்னு நினைக்காதீரும்வேன்னான். இளுத்துக்கிட்டு கிடக்கும்போது வருவீருவேன்னான். எலேய், நாஞ் செத்தாலும் ஒங்கிட்ட வரமாட்டேம்ல, ரோசக்காரம்ல. தொங்கினாலும் தொங்குவேம்ல. புளுத்துச் செத்தாலும் சாவேம்ல நீ இருக்கற வரைக்கும் மாடிய மிதிக்கமாட்டேம்லனு திட்டி அனுப்பினேன். அன்னைக்கு பூரா பொலம்பிக்கிட்டே இருக்க வெச்சிட்டான் இந்தப் பய. கண்ணதாசன் பாடினானே, சரியாத்தான் பாடினான். புள்ள……

(வருடம் 1996)

[6]

மழை எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்தது. கீழ் வீட்டுக்காரர்கள் மாடிக்கு ஓடினார்கள். ஊரே அல்லோலப்பட்டது. குழந்தைகள் வீட்டின் கீழே சூழ்ந்திருக்கும் முழங்கால் அளவுத் தண்ணீரில் குதித்தாடினார்கள். இப்படி ஒரு மழையும் வெள்ளமும் 88 வருடங்களுக்கு முன்பொருமுறை வந்ததாக தினசரிகள் அறிவித்தன. பெரியவர் ஒருவர் அப்போது தான் பட்ட கஷ்டங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஜங்ஷனில் கவிதா ஷாப்பிங் சென்டர் முங்கிவிட்டதாகவும் பரணி ஹோட்டலில் இரண்டாவது தளத்தில் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும் சுலோச்சனா முதலியார் பாலம் எங்கே இருக்கிறதென்ற சுவடே இல்லையென்றும் பேசிக்கொண்டார்கள். சம்பந்தர் தெருவில் சொக்கலிங்கம் செத்துக்கிடந்த வளைவில் கீழ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் இருந்தது. அருகிலிருந்த ஒரு மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு தூக்குப் படுக்கையில் சொக்கலிங்கத்தைக் கிடத்தி ஆறேழு பேர் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சண்முகத்தின் மனைவி தலையில் அடித்துக்கொண்டாள். சண்முகம் மேலே கொண்டு போயிடலாம் என்றான். அனைவரும் வேற வழியே இல்லை என்றார்கள். வளைவில் இருக்கும் எல்லாரும் அதிசயமாகப் பார்த்தார்கள். சொக்கலிங்கத்தின் வாயிலிருந்து தண்ணீர் வெகுவாகக் கசிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. கடுமையாக ஈக்கள் மொய்த்தன. முகம் மோசமாக விகாரமடைந்திருந்தது.

கஷ்டப்பட்டு வீட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வந்தார்கள்.

மாடிக்குச் செல்லும் படிகள் மிகவும் குறுகலாக இருந்தன.

“நேரா அப்படியே கொண்டு போக முடியாதப்பே”

“கொஞ்சம் சரிச்சிக்க வேண்டியதான்”

“படுக்கையோட கட்டிக்கலாமா?”

“என்னத்தையோ சட்டுன்னு செஞ்சித் தொலைங்க. செத்தும் உயிர வாங்குதான்யா மனுஷன்!”

“தண்ணீல நின்னு நின்னு காலக் கடுக்குதுடே. சட்டுன்னு மேல கொண்டு போவணும்”

“கயறு கட்டித் தூக்கிடலாமா?”

“தண்ணி அடிச்சிட்டுப் பேசுற நாய் மண்டைல போடுங்கேன்”

“சரிடே, ஆளாளுக்குப் பேசாதீங்க. எல்லாரும் படிக்கு நேரா வெச்சிக்கிட்டு நில்லுங்க. கட்டல்லாம் வேணாம். நா சொல்லச் சொல்ல சரிங்க. அப்படியே ஒருக்களிச்சுக் கொண்டு போயிடலாம்”

எல்லாரும் சொக்கலிங்கத்தை அந்தப் படுக்கையில் வைத்து சுமந்துகொண்டு படிக்கு நேரே நின்றார்கள். மெல்ல இரண்டு படி ஏற்றினார்கள். மாடிப்படியின் பக்கச் சுவர்களில் படுக்கை இடித்தது.

“எவனாவது ஈயை விரட்டுங்கப்பா. மொவத்துல வந்து அப்புது”

“லேசா சரிங்கப்பா… லேசா… இன்னும் கொஞ்சம்…. சண்முகம் நீதான் மேல நிக்க. கவனமா இரு. மெல்ல மெல்ல சரி.. இன்னும் கொஞ்சம்…”

கீழே இருந்தவன் கொஞ்சம் வேகமாகச் சரித்துவிட்டான். சண்முகத்தின் கை சுவற்றில் இடித்தது. ஐயோ என்று கையை உதறினான். அவன் பக்கம் சட்டெனக் கீழே சரிந்தது. கீழிருந்தவன், “தாயோளி கெடுத்தான்யா காரியத்தை” என்றான். உருட்டி விட்ட மாதிரி பிணம் மாடிப்படியில் விழுந்தது. சொக்கலிங்கத்தின் வாய் படியில் பலமாக இடித்தது. கொளுக்கென ஒரு குடம் திரவம் கொட்டி படிகளில் வழிந்தது. பிணமும் கீழே சரிந்தது. கீழிருந்தவர்கள் அய்யரவுடன் ஐயோ என்று சொல்லிக்கொண்டு காலைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். சொக்கலிங்கத்தின் உடல் கடைசி இரண்டு படிகளில் சரிந்து கீழே பரவியிருந்த நீரில் அமிழ்ந்தது. தாமிரபரணியின் நீர் அவன் மேலே ஓடியது. அவனது முகம் விகாரமாக வானத்தை விறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. நீர் மூழ்கடிக்காத இடங்களில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.

[முற்றும்]

தேன்கூடு போட்டிக்கான ஆக்கம்.

Share

இரவு – சிறுகதை

டி வந்து ரயிலில் ஏறி அமர்ந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழிந்த பின்பும் நெஞ்சில் படபடப்பும் உடலில் பரவியிருந்த தகிப்பும் குறைந்த மாதிரித் தெரியவில்லை. இந்தப் படபடப்பும் தகிப்பும் உடல் சார்ந்து எழுந்ததல்ல, மனத்தின் போராட்டத்தினால் எழுந்தது. நேற்றிரவு காவேரியின் கரையில் நின்றுகொண்டு நானும் ராஜாவும் பேசிக்கொண்டிருந்தபோது இருந்த அமைதியான, போராட்டமற்ற மனநிலை இப்போதில்லை. ஒரே ஒரு இரவுக்குள் நான் புரட்டிப்போடப்பட்டேன்; இல்லை நான் என்னை புரட்டிப் போட்டுக்கொண்டேன். அதுவரை நானே என்னைப் பற்றி ஏற்றிக்கொண்டிருந்த பீடங்கள் அதன் அடியை இழந்து அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தன. ஸ்டேஷனுக்கு வரும் வழியில் ஓஷோவின் புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தேன். அதைப் பிரித்து வம்படியாக வாசிக்கத் தொடங்கினேன். இப்படி நானாக ஏற்படுத்திக்கொள்ளும் லயிப்பிலிருந்து என்னை நான் காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று நம்பி வாசித்தேன். இதுபோன்ற குழப்பமான நிலையில் புத்தகம் வாசித்தல் நல்லதொரு பழக்கம் என நினைத்துக்கொண்டேன். அப்போதுதான் புரிந்தது, இப்படியே நினைத்துக்கொண்டிருக்கிறேனே ஒழிய, இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை என்று. இந்த நினைப்பு எழுந்ததும் ஓஷோவின் மீதும் என் மீதும் இந்த உலகத்தின் மீதும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு எழுந்தது. ஜன்னல் வழியே காறித் துப்பினேன். ப்ளாட்பாரத்தில் எனது எச்சில் உலக வரைபடத்தில் ஏதோ ஒரு நாடு போலச் சிதறி விழுந்தது. அப்போதுதான் என் ஜன்னலைக் கடந்தவன், என்னைத் திரும்பிப் பார்த்துச் சலித்துக்கொண்டான். எனக்குக் கொஞ்சம் சந்தோஷம் உண்டானது. இன்னும் ரயில் கிளம்பவில்லை. ப்ளாட்பாரத்தின் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் நான் கொஞ்சம் என் நினைவுகளைம் மறக்கலாமோ.

எதிரே இருந்த கடையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் ஒரு நடிகை இரண்டு கைகளையும் தலைக்கு மேலே குறுக்கக் கட்டித் தன் மார்பகத்தை எடுப்பாகக் காட்டிக்கொண்டிருந்தாள். எனக்குள் மீண்டும் நினைவுகள் தலைதூக்கத் தொடங்க, அதை மறுத்துப் பார்வையை ஆவின் பால் ஸ்டாலுக்கு மாற்றினேன். சிறுவன் ஒருவன் அவன் அருகில் நிற்கும் மனிதரிடம் ஏதோ வேண்டும் எனக் கேட்டு அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அவன் அடம் பிடித்தாலும் என்னளவில் அவன் சந்தோஷமாகத்தான் இருக்கிறான். வேணும் என்று கேட்டு அடம்பிடித்தல், வாழ்க்கையின் சுமைகளைப் பற்றிய சிந்தனையின்றி இருத்தல் போன்ற குழந்தைமை விஷயங்கள் ஒரு காலத்திற்குப் பின் மறுக்கப்படுகின்றன. அதை வைத்துப் பார்த்தால் அந்தச் சிறுவன் சந்தோஷமாய்த்தான் இருக்கிறான். ஓடிப்போய் அவனைப் பிடித்துத் தூக்கி முத்தம் கொடுத்து, நீ சந்தோஷமா இருக்கடா பயலே, நீ சந்தோஷமா இருக்கடா, அண்ணாவைப் பார், கெடந்து அலையறேன் எனச் சொல்லலாம் போலத் தோன்றியது. அந்தச் சிறுவன் பக்கத்தில் நின்றிருந்த அந்த ஆள் சிறுவனின் அப்பாவாக இருக்கவேண்டும். சிறுவன் கேட்பதை வாங்கித் தர மறுத்துக்கொண்டிருந்தார். அந்த ஆளைப் பிடித்து உலுக்கி, பசங்க கேட்கிறதையெல்லாம் வாங்கிக்கொடுங்க சார், இந்த வயசு போனால் வராது எனச் சொல்லலாம். மனதில் நினைக்கிறதையெல்லாம் செய்யமுடிகிறதா என்ன? ஆனால் நினைக்காததை செய்ய முடிந்தாகிவிட்டது. காவேரியில் அதிசயமாய் நீர் அதிகம் இருந்தது. நீர் சுழித்துக்கொண்டு ஓடும் அழகைப் பற்றியே சிந்திந்துக்கொண்டிருந்தபோது நேற்றாகிய அந்த நாள் நான் மறக்கமுடியாத நாளாகிப் போய்விடும் எனச் சற்றும் நினைக்கவில்லை. மணற்பரப்பில் நானும் ராஜாவும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோதுகூடக் கீதாவைப் பற்றிப் பேசவில்லை. நானும் ராஜாவும் பேசாத விஷயங்கள்தான் இருக்கிறதா என்ன? ஆனாலும் நேற்றிரவு என்னைக் கீதா அப்படிச் சுற்றிக்கொள்ளுவாள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கீதா, நீ என்னைப் புரட்டிப் போட்டுவிட்டாய். நேற்றும், இன்றும், இனி என்றுமா?

வண்டி கிளம்புவதற்கான ஆயத்தங்கள் ஏற்பட்டன. ஆவின் பால் ஸ்டாலில் இருந்த சிறுவனும் அவனது அப்பாவும் என் கம்பார்ட்மென்ட்க்கு எதிரே இருந்த கடையில் ஒரு புத்தகமும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிவிட்டு வேக வேகமாக எனது கம்பார்ட்மென்ட்க்குள் ஏறினார்கள். பக்கத்து கம்பார்ட்மென்ட் பிரயாணி ஒருவரை வழியனுப்ப வந்திருந்த ஒரு பெண் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக்கொண்டு, ரயிலின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள். அவள் அழுதது அவளது முகம் கோணிக்கொண்டு போவதிலிருந்து தெரிந்தது. நான் யாருக்கும் இப்படி அழுததாக நினைவில்லை. எனக்குள்ளே இந்தப் பாசம், அன்பு போன்ற சமாசாரங்கள் செய்யும் சேட்டைகள் குறைவு என்றே நான் என்னை நம்பி வந்திருக்கிறேன். இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. நான் இப்படித்தான் எனச் சொல்லமுடியாதபடிக்கு, நான் இப்படித்தான் எனச் சொல்லிவந்த ஒரு விஷயத்தில் ஒரு பெரிய இடி நேற்றிரவுதான் இறங்கியிருக்கிறது. அதனால் இனிமேல் கொஞ்சம் பொலிட்டிகல்லி கரெக்டாக, பிற்பாடு என்னிடமிருந்தே நான் தப்பிப்பதற்கு வசதியாக, ‘நான் நம்பி வந்திருக்கிறேன்; நான் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்கிற மாதிரி சொல்லிக்கொள்வது நல்லது. காமம் என்கிற விஷயம் எனக்குள், என் கட்டுக்குள் இருக்கிறது என்று எத்தனை திடமாக என்னைப் பற்றி நானே யோசித்து வைத்திருந்தேன். அத்தனையையும் போட்டு உடைத்தாள் கீதா. எனது பத்தொன்பதாம் வயதில் ஒரு பெண்ணை நான் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. அவள் நெருங்கிப் படுத்தபோது விலக்கியிருக்கலாம். அவளது கைகள் என் மேனியெங்கும் மேய்ந்தபோது விலகிப் போயிருந்திருக்கலாம். அவளது மென்மையான உதடுகள் என் உதடுகளைப் ஸ்பரிசித்தபோது விலக்கியிருக்கலாம் – எனக் கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் அப்போதே நான் என் வசம் இழந்துவிட்டிருந்தேன். என் நினைவு என்னிடம் இருந்தால்தான் விலகலாம், விலக்கியிருக்கலாம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். ரயிலின் ஒரு ஜெர்க்கில் கொஞ்சம் முன்னகர்ந்து பின்னகர்ந்தேன். கைக்குட்டையை மூடி அழுத பெண் என் ஜன்னல் வழியே மெல்ல கடந்தாள். பின்னோக்கி நகர்ந்து தலையைப் பின்னுக்குச் சாத்தி, ரிலாக்ஸ்டாகப் படுத்துக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன். எம் கம்பார்ட்மென்ட்டில் என்னைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தார்கள். ஒரு பெண் மருத்துவத் துறை தொடர்பான புத்தகம் ஒன்றைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். என்ட்ரன்ஸ் பாஸ் செய்து, மெடிக்கலில் சேரப் போகிறாளாயிருக்கும். கரிய நிறம், ரொம்பவும் மெல்லிசாக இருந்தாள். அவளது மேல் நெற்றியில் இருக்கும் கூந்தல் ஜடைக்குள் அடங்காமல் வெளியே பறந்து கொண்டிருந்தது. ஒரு காலை இன்னொரு கால் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு, வலது கையில் செல்·போனையும் இடது கையில் புத்தகத்தையும் வைத்திருந்தாள். அடிக்கொரு தடவை கம்பார்ட்மென்ட்டை விட்டு வெளியே நோக்கினாள். டிக்கெட் எடுக்காதவன் டி.டி.ஆர்.-இன் வரவை எதிர்பார்ப்பது போல. இவள் டிக்கெட் எடுக்காமல் ஏறியிருக்க வாய்ப்பில்லை. அவளது சுரிதார் கொஞ்சம் மேலேறி, ஹீல்ஸ் அணிந்திருந்த அவளது கால் என் முன் துருத்திக்கொண்டு தெரிந்தது. காலில் மிருதுவான ரோமங்கள் முளைத்திருந்தன. கீதாவின் உடலில் ரோமங்கள் இருந்ததாக நினைவில்லை. அவள் என்னை நெருக்க நெருக்க எல்லாம் சொல்லி வைத்தமாதிரி மிகக் கச்சிதமாக அவள் மீது பரவியது நினைத்து இப்போதும் அதிசயமாக இருந்தது. அந்த நினைவு கூட என்னை இன்னும் சூடேற்றியது. இனி காணும் பெண்களை கீதாவின் உடல் நினைவில்லாமல் பார்க்கமுடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. இப்போது என் முன்னே அமர்ந்திருக்கும் பெண்ணைக்கூட நான் எந்தவித மேலதிக எண்ணங்கள் இல்லாமல் பார்க்கிறேனா என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லை. இந்த நேரத்தில் வேறு எண்ணங்கள் எனக்கு இல்லை என்றாலும் அதை உறுதியாகச் சொல்லமுடியாது என்பதையும் உணர்கிறேன்.

பக்கத்து இருக்கையில் ஒரு மாமாவும் மாமியும் இருந்தார்கள். வண்டி கிளம்பிய பத்து நிமிடத்திற்கெல்லாம் தனது பர்த்தில் படுக்க ஆயத்தப்பட்டுக்கொண்டார்கள். எனக்கு அப்பர் பர்த். அவர்களுக்கு வழி விட்டு, நான் எனது பர்த்தில் மேலேறிப் படுத்துக்கொண்டேன். மாமி லோயர் பர்த்திலும் மாமா மிடில் பர்த்திலும் படுத்துக்கொண்டார்கள். அந்தப் பெண் எதிர் வரிசையில் உள்ள லோயர் பர்த்தில் அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த அதே நிலையில் அமர்ந்து அதே புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். நான் என் கண்களை மூடித் தூக்கத்தை எதிர்நோக்கத் தொடங்கினேன். தூக்கத்தைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் மனதுள் அலையாடின. மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது சிரமாமாயிருந்தது. இப்படிச் சிரமமாய் இல்லாமலிருந்திருந்தால் நேற்றே அதை நிறுத்திக் கொஞ்சம் தப்பித்திருக்கலாம். எதுவும் நம் கையில் இல்லை என்கிற சால்ஜாப்புகள் உதவாமல் போனது குறித்துத் துக்கம் தொண்டையை அடைத்தது. இந்தக் காமம் என்கிற பாம்பு எப்போதும் என்னைச் சுற்றியே இருந்திருக்கிறது. எட்டாம் வயதிலேயே காமத்திற்குட்ட காலங்கள் இருந்ததாக என் நினைவு சொல்லியது. எட்டு வயதில் காமம் இருந்திருக்க முடியுமா என்று ஏதேனும் டாக்டரிடம் கேட்கவேண்டும். பதிமூன்றாம் வயதில் சுந்தர் அவனது பள்ளியிலிருந்து கிழித்துக்கொண்டு வந்திருந்த இரண்டு பக்கங்களைக் காண்பித்தபோது உடம்பு சில்லிட்டது. உடம்பின் அத்தனை ரத்தமும் ஒரே இடத்தில் குவிய நான் நிலை கொள்ள இயலாமல் கால் தள்ளாடி அந்த மின் கம்பத்தின் கீழே நின்றிருந்த காட்சிப் படிமம் இப்போதும் என்னுள் அப்படியே அடங்கிக் கிடக்கிறது. அந்த மூன்று பக்கங்கள் மிகவும் கொச்சையான மொழியில் ஆண் பெண் உடலுறவைச் சொல்லிக்கொண்டே போனது. அதில் சொல்லப்படும் கதை போன்ற ஒன்று கூட இன்னும் நினைவிருக்கிறது. முதலிரவுக்குக் காத்திருக்கும் ஒரு கணவனின் எண்ணங்களும் அவனை ஏமாற்றி விட்டு அந்தப் பெண் இன்னொருவனும் உறவு கொள்ளப்போவதும்… இது இப்போது தேவையா? கண் விழித்துப் பார்த்தேன். அரைத் தூக்கத்தில் இருந்திருக்கிறேன். கண் எரிந்தது. கம்பார்ட்மென்ட்டின் விளக்கை யார் எப்போது அணைத்தார்கள் எனத் தெரியவில்லை. தலை கடுமையாக வலித்தது. நேற்றிரவும் தூக்கமில்லாமல் கழிந்தது. அந்த இரவின் சம்பவம் உடலுக்கும் மனதுக்கும் ஏற்றிய அசதியும் வெம்மையும் ஒரே போக்காகத் தலைக்குள் புகுந்துகொண்டது போல. ஒருக்களித்துப் படுத்தேன். கம்பார்ட்மென்ட்டின் இருக்கைகள் கண்ணுக்குப் புலப்படத் தொடங்கியது.

மருத்துவப் புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்த பெண் லோயர் பர்த்தில் படுத்திருந்தாள். அவளின் அருகில் அவளை ஒட்டினாற் போல் இன்னொரு பையன் படுத்திருந்தான். அவனுக்கு வயது இருபது அல்லது இருபத்தி ஒன்று இருக்கலாம். எனக்குப் பக்கென்று இருந்தது. அவன் எப்போது வந்தான், எப்படி வந்தான்? இருவரும் மெல்ல கிசு கிசுவெனப் பேசிக்கொண்டார்கள். அவன் கிசு கிசுவென பேசும் வாக்கில் அவன் உதட்டால் அவளின் செவியையும் அங்கு சூழ்ந்திருந்த அவளது கூந்தலையும் ஒதுக்கித் தள்ளினான். அவனது ஒவ்வொரு உசுப்பலுக்கும் அவள் இடங்கொடுத்து அவனை வெறி கொள்ளச் செய்தாள். எனக்குள் அடங்கிப் போயிருந்த காமம் மீண்டும் தலைதூக்குவதை உணர்ந்தேன். நேற்று இதே போல் ஒரு நிலையில் நான் இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் கீதாவை நான் உசுப்பேற்றத் தேவையில்லாமல் இருந்தது. மிகவும் தீர்க்கமான முடிவுடனேயே அவள் என்னை அணுகியிருக்கிறாள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. அப்படியானால் அவள் மனக்கண்ணில் இத்தனை நாள் நான் இப்படி ஒரு பிம்பத்தைப் பெற்றிருந்திருக்கிறேன் என நினைத்தபோது என்னுள் ஏதோ விட்டுப்போனது. கீதா எனக்கென ஒரு சுதாரிப்பு நேரத்தைக் கூடக் கொடுக்கவில்லை. பரபரவென என் மீது பரவினாள். தூக்கத்தில் இருந்த எனக்கு என்ன நடக்கிறது எனப் புரிவதற்குள் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போயிருந்தது. இது ஒரு அத்துமீறல்தான். இதுவே வேறொரு விஷயத்தில் இருந்திருந்தால் எனது ஈகோ, எனது சுய கௌரவம் போன்ற விஷயங்களை எல்லாம் சம்பந்தப்படுத்தி ஏதேதோ யோசித்து, ராஜாவுடன் தர்க்கித்து ஒரு பெரிய இருப்பை ஏற்படுத்தியிருப்பேன். ஆனால் இந்த முறை காலையில் கிளம்பும்போது, போயிட்டு வர்றேன் கீதா என்றுதான் சொல்லிவிட்டு வரமுடிந்தது.

மருத்துவம் படிக்கும் பெண்ணும் அந்தப் பையனும் இன்னும் நெருக்கமாகப் படுத்துக்கொண்டார்கள். நான் அவர்களைக் கவனிக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயில் எதுவுமே நடக்காதது மாதிரி கருமமே கண்ணாகப் போய்க்கொண்டிருந்தது. இந்த ரயிலைப் போன்ற மனநிலை ஒரு மனிதனுக்கு வாய்த்திருந்தால் அவனே நிச்சயம் பெரிய ஞானியாக இருந்திருப்பான். ஒவ்வொரு நாளும் ரயிலுக்குள் நடக்கும் சம்பவங்கள், பேச்சுகள், சண்டைகள், கலவிகள் போன்றவற்றை யாரோ ஒருவன் தினமும் பார்த்து அதையெல்லாம் பதிந்து வைத்திருந்தால் அதுவே மனித குலத்தின் மகா காப்பியமாக இருந்திருக்கும். அந்தப் பெண் தன் இடையை அவனுக்கு ஏற்றவாறு அவன் அருகில் வைத்துப் படுத்துக்கொண்டாள். அவளின் காலின் மீது அவனது கால்களைப் போட்டுக்கொண்டு, இடது கையை அவளின் வயிற்றின் மீது போட்டுக்கொண்டு, அவளை அணைத்து ஒருக்களித்துப் படுத்துகொண்டான் அவன். அவள் கண்களைத் திறக்கவே இல்லை. அவனும் அவன் கண்களைத் திறக்கவே இல்லை. இரண்டு பேரும் ஏதேதோ முனகிக் கொண்டார்கள். மற்ற பர்த்களில் இருந்த மாமாவும் மாமியும் விட்ட குறட்டையை மீறி அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது கேட்கவே இல்லை. அவன் அவளைத் தன் கால் கொண்டு இறுக்கிக்கொண்டான். அவள் இலேசாக ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். அவன் அவளை மெல்ல முத்தமிட்டான். நான் பெற்ற முத்ததின் வெறியே இன்னும் அடங்காத நிலையில் இந்த முத்தம் இன்னும் என்னை வெறிகொள்ளச் செய்தது. அடுத்த நிறுத்ததில் இறங்கி மீண்டும் திருச்சி சென்று, கீதா அறியாதவாறு அவள் அருகில் படுத்துகொள்ளலாம் என்று தோன்றியது. இந்த எண்ணம் தோன்றவுமே கீதாவைப் பற்றி இப்படித்தான் இத்தனை நாள் நினைத்திருக்கிறேன் போல என்ற எண்ணமும் எழுந்தது. என் உள் மனதில் அடங்கிக் கிடந்த எண்ணம்தான் அவள் என் மீது பரவும்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க வைத்ததோ. மீண்டும் மீண்டும் இந்தக் களியாட்டங்களில் என் மனம் சுழல்வதை நினைத்து வெறுத்து, இனி அவர்களைப் பார்க்கக்கூடாது என முடிவு கட்டி, கண்ணை இறுக்க மூடிக்கொண்டு படுத்தேன். ரயில் மதுரையைக் கடந்திருக்கும். இன்னும் மூன்று மணிநேரத்தில் திருநெல்வேலியில் இறங்கிக் காலையிலேயே அம்மாவின் முகத்தைப் பார்த்துவிடலாம். அம்மாவின் முகம்தான் எத்தனை சாந்தமானது. இதுவரை நான் பார்த்தது போல் அம்மாவின் முகத்தை என்னால் களங்கமில்லாமல் பார்க்கமுடியுமா? இந்தச் சந்தேகம் பரவவும் எனக்குள் ஒரு பீதி எழுந்தது. இனி அம்மாவின் மடியில் தலை வைத்து என்னால் தூங்க முடியுமா? மருத்துவம் படிக்கும் பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. நான் பார்த்தபோது அவள் அவன் கையை இரண்டு முறை செல்லமாகத் தட்டினாள்; பின்னர் மீண்டும் சிரித்தாள். கீதாவின் சிரிப்பொலி ஒரு மாதிரியாகக் கொணட்டிச் சிரிக்கும் சிரிப்பொலி. அவளைப் பலமுறை கொணட்டி என்று கேலி செய்திருக்கிறேன். காவேரியின் கரைகளில் பதினெட்டாம் பெருக்கு அன்று உணவு உண்ட ஒரு சமயத்தில் அவளைக் கொணட்டி எனச் சொல்லப்போக அவளின் அத்தை பையன் என்னைக் கடுமையாகத் திட்டினான். மறுநாள் கீதா என்னிடம் அவனைக் கண்டுக்காத, அவன் யாரு, நீ சொல்லு என்று சொன்னாள். அப்போது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்தச் சந்தோஷம்தான் வித்தாகி மரமாகி அவளாலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறது. பேசாமல் கீதாவைத் திருமணம் செய்துகொண்டுவிட்டு இந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்துவிடலாம் என்றாலும் அதற்கும் வழி இல்லை. அவளுக்கும் எனக்கும் ஒரே வயது. இதெல்லாம் சரிப்படாது என்று எனக்கே புரிந்தது. அதுமட்டுமில்லாமல் உண்மையிலேயே நான் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேனா என்பது பற்றி எனக்கே சந்தேகம் இருந்தது. இல்லையென்றால் மீண்டும் கீதா அருகில் சென்று படுத்துக்கொள்ளலாம் என எப்படித் தோன்றும்? அவளும் நானும் கலந்து கிடந்தபோது அடுத்த கட்டில் கீதாவின் அம்மா மடக் மடக்கென தண்ணீர் குடிக்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் என் தவறையும் என் நிலையையும் உணர்த்த அவளை விட்டு நான் விலக முற்பட்டபோது, அவள் என்னை விடவில்லை. விடவே இல்லை. இப்போது அந்தப் பெண் விடுபட நினைக்கிறாள். அவன் விடவில்லை. அவனின் ஆள்காட்டி விரல் அவளின் வயிற்றுக்கு மேலே வட்டங்களாக இட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வட்டங்கள் அவளை மெல்ல மெல்ல சூழ்கின்றன. அவளால் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர இயலாது என்பது எனக்கு அனுபவபூர்வமாய்த் தெரியும். கீதாவின் அம்மா போல யாரேனும் தண்ணீர் குடிக்கவேண்டும். யாரேனும் எதையேனும் மடார் என்று கீழே போடவேண்டும். அப்போதுதான் கொஞ்சம் தெளியும் அப்பெண்ணுக்கு. அந்த யாரோ நானேவாக இருக்கலாம். சத்தமாக இருமினேன். அந்த இருமல் அவர்களைக் கவனம் கொள்ளச் செய்தது. அதைவிட என் மேல் அப்பிக்கிடந்த கீதாவும் அவளின் எண்ணங்களும் கொஞ்சம் தெறித்து விழ எனக்கே உதவியது. இதை அறிந்ததும் மீண்டும் மீண்டும் இருமினேன். மாமாவின் குறட்டை நின்றது. நான் தட தடவெனச் சத்தம் வரும்படியாக அப்பர் பர்த்தில் எழுந்து உட்கார்ந்தேன். லோயர் பர்த்தைப் பார்த்தேன். அந்தப் பையனைக் காணவில்லை. எப்போது எப்படி ஓடினான் எனத் தெரியவில்லை. அந்தப் பெண் ஒன்றுமே நடக்காத மாதிரி போர்வையைப் போர்த்திக்கொண்டு ‘தூங்கிக்’கொண்டிருந்தாள். அவளின் சீரான குறட்டை ஒலி என்னைக் கலவரப்படுத்தியது. இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்று. அடுத்த நொடியே ‘போயிட்டு வர்றேன் கீதா’ என்று சொன்ன என்னை மாதிரியே எனத் தோன்றியது.

பர்த்தில் இருந்து இறங்கி மூத்திரம் கழித்துவிட்டு மீண்டும் பர்த்தில் ஏறிப் படுத்தேன். தூக்கம் வருவது போன்று இருந்தது. இனி கீதா இல்லை, அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் இல்லை, கனவுலகம் என்னை மெல்ல மெல்ல இழுத்துக்கொண்டு செல்லும். கனவுலகம் நினைவுலகத்தை விட சுமாராக இருந்தது. அங்குச் சிவப்பு நிற மலர்கள் பூத்திருந்தன. தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடியது. வெயில் குறைவாக அடித்தது. மாரியம்மன் கோவிலில் கொடி ஏற்றியிருந்தார்கள். என் அம்மா வீட்டில் பாயாசம் செய்து வைத்திருந்தாள். பூனைக்குட்டி குதித்தாடியது. வேறோர் இடத்தில் பெரும் மழை பெய்தது. மழையில் கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் வெற்றிச் சிரிப்புடன் வந்தாள். அவள் கீதாவாக இருக்குமோ? சட்டென கண் விழித்தேன். ரயில் சீரான ஜதியில் ஓடிக்கொண்டிருந்தது. மாமாவும் மாமியும் எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் நிஜமாகவே தூங்கிவிட்டிருந்தாள். கங்கை கொண்டானை நெருங்கியிருக்கவேண்டும் என்று உள்மனது சொல்லியது. நானும் எழுந்து உட்கார்ந்தேன். என்னுடைய மொபைலை சுவிட்ச் ஆன் செய்தேன். வரிசையாக ஏழெட்டு மெசேஜ்கள் வந்து விழுந்தன. அத்தனையும் அம்மா அனுப்பியது. ஆறு மெசேஜ்கள் where are you? என்று இருந்தது. ஏழாவது மெசேஜ் Happy Birth Day என்று இருந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தவை எல்லாம் ஒரு நாள் இரவில் மாறிப்போன ஞாபகம் வந்தது. அந்த மெசேஜைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அம்மா அழைத்தாள்.

“சொல்லும்மா’

“ஹாப்பி பர்த்டேடா செல்லம்”

அம்மாவின் கொஞ்சல் என்றுமில்லாமல் அந்நியமாகப்பட்டது.

“தேங்க்ஸ்.”

“ஏண்டா டல்லா இருக்க? டயர்டா இருக்கா? எங்கே இருக்க? ஏன் மொபைலை ஆ·ப் பண்ண? எத்தனைத் தடவை சொல்லியிருக்கேன், மொபைலை ஆ·ப் பண்ணாதேன்னு. சரியான தூங்கு மூஞ்சி. சீக்கிரம் வாடா செல்லம். பார்த்து ரெண்டு நாளானதே என்னமோ மாதிரி இருக்கு”

“ம்”

“நா இவ்ளோ பேசறேன், வெறும் ம் தானா? சரி சீக்கிரம் வா, கோயிலுக்குப் போகணும், அப்பா காத்துக்கிட்டு இருக்கார்”

போனை வைத்துவிட்டாள். மணியைப் பார்த்தேன் ஐந்து காட்டியது. நான் வீட்டிற்குப் போகுமுன்பு அம்மா குளித்துவிட்டு தயாராகக் காத்திருப்பாள். அம்மாவின் குரலைக் கேட்டதும் என் கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போனது போலத் தோன்றியது. அம்மாவின் உற்சாகம் என்னையும் பற்றிக்கொண்டதோ. கனவில் வந்த பெண்ணை கனவோடு மறந்துவிடுகிற மாதிரி கீதாவைக் கனவாக மறந்துவிட வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டேன். அம்மாவின் செல்லம் என்கிற வார்த்தை நான் எங்கோ ஓரிடத்தில் இன்னும் சின்னப் பையனாக இருக்கிறேன் என்று சொல்லியது. அந்த எண்ணம் என்னை ஒரு சிறு பையனாக மாற்றியது. சிறு பையனின் மூளைக்குள் ஏறிக்கிடந்த தேவையற்ற எண்ணங்களைத் தூக்கி எறிய நான் முயன்றேன். இப்படியே இன்னும் கொஞ்சம் முயன்றால், அம்மாவை நேரில் பார்க்கும்போது அவள் கண்ணில் தெரியும் அந்தச் சிறுவனில் இன்னும் கொஞ்சம் கரையலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

ரயில் திருநெல்வேலியில் நின்றது. எனது பதின்ம வயதின் உச்ச நிகழ்ச்சியை, என் வாழ்நாள் முழுதும் நான் சுமக்கவேண்டிய அந்த நினைவை மட்டும் எடுத்துக்கொண்டு, என் குற்ற உணர்ச்சியை ரயிலிலேயே விட்டு விட்டுக் கீழிறிங்கினேன். ஜன்னல் வழியாக அந்தப் பெண் எட்டி என்னைப் பார்த்தாள். “பை பை” என்றேன். திடுக்கிட்டுத் தலையை உள்ளிழுத்துக்கொண்டாள். திருச்சி ரயில் நிலையத்தில் ஒட்டியிருந்த அதே போஸ்டர் திருநெல்வேலியிலும் படபடத்தது. கையைத் தலைக்கு மேலே குறுக்கே கட்டித் தன் மார்பை எடுப்பாகக் காட்டிக்கொண்டிருந்தாள் ஒரு நடிகை. ஒரு நிமிடம் நின்று இரசித்துவிட்டுத் தொடர்ந்து நடந்தேன்.

-oOo-

தமிழோவியம் – தேன் கூடு போட்டிக்கான (வளர்சிதை மாற்றம்) படைப்பு.

Share

பிரசாத் – சிறுகதை

பிரசாத்தின் கையிலிருந்து காலாவதியாகிக்கொண்டிருக்கும் சிகரெட்டின் மீது நிலைக்குத்தி நின்றிருந்தன என் கண்கள். அந்தச் சமையலறையின் வாஷ் பேசினில் சரியாக அடைக்கப்படாத நீர் சொட்டிக்கொண்டிருந்தது. பிரசாத் பேசாதபோது சொட்டும் நீரின் ஒலியே எனக்குத் துணை.

பிரசாத் ஏதோ ஒரு மோன நிலையில் லயித்தவர் போல, தன்னிலையில் இல்லாது வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தார். குடித்தவன் வார்த்தைகள் போல அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. பிரசாத் குடித்திருந்தார்தார். தொடர்பற்ற வாக்கியங்களுக்கு இடையில் ஒரு தொடர்பை நம்மால் உருவாக்கிக்கொள்ள இயலுமானால் பிரசாத்தின் வார்த்தைகள் மிகப் பலம் பொருந்தியவை.

மெதுவாக நகரும் கலைப்படம் மாதிரி எங்கள் இருப்பை நினைத்துக்கொண்டேன். பிரசாத் வார்த்தைகளைக் கொட்டுவதற்குத் தேவையான இடைவெளியை எடுத்துக்கொண்டார். ஒரு வரியைச் சொல்லி முடித்துவிட்டு, மிக ஆழமான ஒரு இழுப்பை இழுத்தார். புகையை சில வினாடிகள் உள்ளுக்குள் அடக்கி, மிகவும் இரசித்து வெளிவிட்டார். புகை அடர்த்தியாக வெளிவந்து, சமையலறையுள் விரவி நீர்த்தது. அறையெங்கும் மிக இலேசான புகை மூட்டம் இருப்பதை வெளியில் இருந்து அறையினுள் வரும் புதுமனிதர்கள் மட்டுமே கண்டுகொள்ளமுடியும். என்னாலோ பிரசாத்தாலோ முடியாது. யாராவது வந்து ‘வீடு ஒரே புகையா இருக்கே’ என்னும்போதுதான் அதைக் கவனிப்போம்.

பிரசாத்தின் மேலிருந்து வந்த விஸ்கி வாசமும் சிகரெட் வாசமும் ஒன்று கலந்து ஒருவித நெடியை சமையலறைக்குள் பரவி விட்டிருந்தது. அதுவும் எனக்குப் பழகிவிட்டிருந்தது.

மெதுவாக நகரும் எங்கள் கலைப்படத்திலும் எப்போதோ ஒருமுறைதான் பிரசாத் பேசினார். அந்த வார்த்தைகள் பிரசாத்தின் ஆழ்மனத்தில் அவர் கொண்டிருந்த சோகத்தின் வெளிப்பாடாக இருந்தன. பிரசாத் பேசும்போது அவரின் கண்ணிமைகள் மேலேயும் கீழேயும் அலைந்தன. அவர் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியானார். கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் இழுத்தார். எதிரே நின்றுகொண்டிருக்கும் என்னை உற்றுப் பார்த்தார். நான் ஏதேனும் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ என்று நினைத்து, வாயில் வந்ததைச் சொல்ல எத்தனித்தேன். அதற்குள் அவர் பார்வை கேஸ் அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரின் மேல் மாறி நிலைத்தது.

நான் என் கவனத்தைச் சொட்டும் நீரின் மேல் மாற்றினேன். எங்களைச் சுற்றிய கலைப்படம் அந்த நேரத்தில் மிகவும் இரசிக்கத்தக்கதாயிருக்கிறது என்று நினைத்தேன். இந்நேரத்தில் பிரசாத்தைப் பற்றிக் கொஞ்சம் நினைக்கலாம். பிரசாத்தின் அறிமுகம் கலீக் என்ற வகையில்தான் தொடங்கியது. சிகரெட் குடிப்பவர்கள் அரைமணிக்கொருதரம் வெளியில் செல்லும் போது கொஞ்சம் இறுகியது. குடிப்பவர்கள் இராத்திரி கூடும் பொழுதில் இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டது. நாற்பத்தைந்து வயதில் திருமணம் ஆகாமலிருக்கும் ஒருவர் குடித்தால், அவர் தன்னிலையில் இல்லாதபோது அவரிடமிருந்து வரும் குமுறலின் பலத்தை பிரசாத்திடம்தான் கண்டேன். பிரசாத் ஒருகாலத்தில் அவரை இலக்கியவாதியாகவும் நினைத்துக்கொண்டவர்.அதனால் அவரது குமுறல் இரண்டு மடங்காக இருந்தது. ஒரு முப்பது வயது இளைஞனைப்போல் தோற்றமும் சிவப்புத் தோல் சருமமும் கைநிறையச் சம்பளமும் உள்ள பிரசாத் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்காக அவர் சொல்லாத காரணங்களில்லை. கொஞ்சம் தொகுத்துப்பார்த்தால் இவர் காதலித்த பெண் இவரை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லலாம். ஏனென்றால் இந்த ஒரு காரணத்தை மட்டுமே அவர் சொல்லவில்லை. ஆனால் இந்தக் காரணத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோக அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவேண்டும் என்ற பலத்த சந்தேகம் எனக்கு இருந்தது.

கலைப்படத்தில் பிரசாத் பேசத்தொடங்கினார். அவரின் பார்வை கொதிக்கும் சாம்பாரின் மீதுதான் இன்னும் நிலைக்குத்தி இருந்தது. இந்த முறை பிரசாத்தின் வசவு எங்கள் மேனேஜரின் மீதானது. அவர் பிரசாத்தை அண்டர் எஸ்டிமேட் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டு, தன் நேரம் வரும்போது தன்னை நிரூபித்து அவர் முகத்தில் கரியைப் பூசுவதாகத் துணை நினைவை எழுப்பிக்கொண்டு, அதன்பின் சொன்ன வார்த்தைகளே பிரசாத் சொன்னவை. வரிகளுக்குப் பின்னால் சென்று பார்த்து அதைப் புரிந்துகொண்டேன். அவர் சொல்வதை மட்டும் கேட்டால் ஒன்றும் புரியாது. தினமும் பிரசாத்திடம் பேசுவதால் “பின் சென்று பார்ப்பதில்” எனக்குக் கஷ்டம் இருப்பதில்லை.

பிரசாத் சிகரெட்டை மீண்டும் இரசித்து இழுத்தார். இந்த முறை பாதிப் புகையை மூக்கின் வழி விட்டார். நான் என் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தேன். அதைப் பற்ற வைக்க பிரசாத்திடம் சிகரெட்டைக் கேட்க எத்தனித்தேன். பிரசாத்தின் கவனம் என் மீது விழவேயில்லை. ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் சிறுத்துக்கொண்டிருக்கும் சிகரெட்டின் மீது இருந்தது. லேசாகச் சிரித்தார். கலைப்படத்தின் காட்சிகள் ஏதோ ஒரு கணத்தில் இறுக்கத்தை இழப்பது போல. இரண்டு வினாடிகள் இடைவெளியில் சத்தமில்லாமல் மெல்ல குலுங்கிச் சிரித்தார். நான் அவரை “என்ன?” என்பது போலப் பார்த்தேன். இலேசான சிரிப்பினூடே, இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கும் சிகரெட்டைக் காட்டி, “அல்மோஸ்ட் செக்ஸி!” என்றார். நானும் சிரித்தேன். கட்டை விரலால் சிகரெட்டி பின்பக்கத்தைத் தட்டி சிகரெட்டைக் கொஞ்சம் முன்னகர்த்தினார். நான் சிரித்தேன். என்கையிலிருக்கும் சிகரெட்டைப் பற்ற வைக்க அவரின் சிகரெட் வேண்டும் என்று நான் கேட்க வாயெடுக்க நினைத்தபோது, கொஞ்சம் பலமாகச் சிரித்தார். “செக்ஸி!” என்றார். சிகரெட்டின் எரியும் முனையில் சாம்பல் சேர்ந்துவிட்டிருந்தது. கட்டை விரலால் இரண்டு முறை தட்டினார். சாம்பல் தெறித்துக் காற்றில் பறந்தது. ஒரு சிறிய துகள் காற்றிலாடி கொதிக்கும் சாம்பாரில் விழுந்தது போலிருந்தது. பிரசாத் அதைக் கவனிக்கவில்லை. பிரசாத் மீண்டும் மௌனமானார். என் கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் உள்ளே வைத்துவிடலாமா என்று நினைத்தேன். பிரசாத் சொட்டிக்கொண்டிருக்கும் குழாயை, பலமாகத் திருகி அடைத்தார். சொட்டும் நீர் நின்றது. சாம்பார் கொதிக்கும் சப்தத்தை மீறி அறையில் அமானுஷ்ய மௌனமும் இலேசான புகையும் சிகரெட்டின் நெடியும் பிரசாத்தின் கடந்த கால ஏக்கங்களும் அவர் மீதான என் வருத்தங்களும் நிறைந்திருந்தன. கலைப்படத்தின் அமைதியான காட்சிகள் அவை.

வாசல் மணி ஒலித்தது. இலேசாக அதிர்ந்து அடங்கினேன். பிரசாத் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வேகமாக விரைந்தார். ஒரு பாட்டில் விஸ்கியும் ஒரு சிகரெட் பாக்கெட்டும் சாம்பாருக்குத் தாளிக்க கடுகும் வாங்கிவரச் சொல்லியிருந்த பையன் வந்திருப்பான். அவனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு பிரசாத் சமையலறைக்குள் வந்தார். அவர் கையில் சிகரெட் பாக்கெட்டும் கடுகும் மட்டுமே இருந்தது.

அவர் வருவதற்குள் எரியும் கேஸ் அடுப்பில் என் சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தேன். பிரசாத்தைப் போல் நிதானமாக, இரசித்து என்னால் சிகரெட் புகைக்க முடியாது. கடனென இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு வீசியெறிந்துவிடுவேன். அப்படிச் செய்யும்போதெல்லாம் ஏதோ நினைவு வந்தவராக பிரசாத் சிரிப்பார். ஏன் சிரிக்கிறார் என நான் புரிந்துகொண்டதில்லை.

பிரசாத்தின் இரவுகள் சட்டெனத் தீராது. மறுநாள் விடுமுறையென்றால் நீண்டுகொண்டே இருக்கும். விஸ்கி பாட்டில் காலியாகும் வரை அவர் உறக்கம் தொடங்காது. சிகரெட் பாக்கெட்டுகள் எண்ணற்றவை காலியாகிக் கிடக்கும். இதைப் பற்றியெல்லாம் என்றுமே பிரசாத் நினைத்துப்பார்த்ததில்லை. கேட்டால் மேன்சன் வாழ்க்கை என்பார்.

எனக்கான இரவு முடியும் நேரம் நெருங்கிவிட்டது. பிரசாத்திடம் சொல்லிவிட்டுச் சென்று படுத்துக்கொள்ளலாம். படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை. எதையேனும் யோசித்துக்கொண்டிருப்பேன். பிரசாத் சாம்பாரில் தாளித்துக்கொட்டுவதில் மும்முரமாக இருந்தார். ஒரு சிறிய வாணலியில் எண்ணெயை இட்டு, அதில் கடுகை இட்டு வெடிக்க வைத்தார். யாருக்கோ சொல்வதுபோல “கருவேப்பிலை இல்ல” என்றார்.

நான் பொறுமை இழந்து அடுத்த சிகரெட்டை எடுத்தேன். பிரசாத்தின் விரல்களிலிருந்த சிகரெட் இறுதியை எட்டியிருந்தது. அவர் இழுத்ததைவிட, வெறுமனே அது காற்றில் புகைந்த நேரமே அதிகம். இடது கையின் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் மத்தியில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, வலதுகையால் தாளித்த எண்ணெயெயைச் சாம்பாரில் கொட்டினார். சத்தத்துடன் சாம்பாரின் ஒரு துளி பிரசாத்தின் கையின் மீது தெறித்தது. பிரசாத் கையை உதறினார். சிகரெட் கீழே விழுந்து அணைந்தது. பிரசாத் அதை எடுத்து, டேப்பைத் திறந்து நீரில் காண்பித்து முழுவதுமாக அணைத்தார். பின் ட்ஸ்ட்பின்னில் தூக்கி எறிந்தார்.

சமைத்தவற்றை எடுத்துக்கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றார். வேறு வழியின்றி நானும் அவர் பின்னே சென்றேன். அவர் மீதிருந்த கழிவிரக்கம் மெல்ல விலகி, நான் தூங்கப் போகவேண்டும் என்ற எண்ணம் தலைகொண்டது.

பிரசாத் ஒரு வித்தியாசமான ஆளுமை. அவருக்கு என்னை விட்டால் வேறு யாரையும் நண்பர்கள் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால் பல பெயர்களைச் சொல்லி அவர்களெல்லாம் என் நண்பர்கள் என்பார். இன்றிருக்கும் பெரிய எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லி, நாங்களெல்லாம் ஒரே சமயத்தில் எழுதினோம் என்பார். இவற்றையெல்லாம் வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவே எனக்குப் பிடிக்கும். அவற்றில் எவ்வளவு உண்மையிருக்கும் என்பதைப் பற்றி யோசிப்பதை நான் நிறுத்திவிட்டிருந்தேன். சில சமயங்களில் பிரசாத் என்னை வடிகாலாக வைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைப்பதுண்டு. இருந்தாலும் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு அமைதியாகிவிடுவேன்.

இப்போது பிரசாத் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இடது கையில் புகையும் சிகரெட். பிரசாத்தின் சித்திரத்தை கையில் சிகரெட் இல்லாமல் யோசிக்கமுடிந்ததே இல்லை. அவரது வாழ்க்கையையும் நிறையப் புகை நிறைந்ததே. அவர் எல்லோரிடமும் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றே சொல்லி வைத்திருந்தார். ஆனால் அதில் எனக்குப் பலத்த சந்தேகம் இருந்தது. அவரது அறையில் காணக் கிடைத்த சில கடிதங்களும் அடிக்கடி வரும் தொலைபேசிகளும் எனக்கு அந்தச் சந்தேகத்தை அளித்திருந்தன. ஆனால் அவர் அடிக்கடி தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் அதை நம்புவதே அவருக்குத் திருப்தி தரும் என்று நம்பத் தொடங்கினேன்.

மூன்றாம் அறையிலிருந்து கேசவன் வந்தான். எங்களைப் பார்த்துச் சிரித்தான். பிரசாத் அவனைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நான் கேசவனைப் பார்த்துச் சிரித்தேன். “கிச்சன் ·ப்ரீயாயிட்டு போலயே. அப்ப நான் சமைக்கலாம்” என்றான். நான் கிச்சனில் சமைப்பதில்லை. வெளியில்தான் சாப்பிடுகிறேன். அதனால் இந்தக் கேள்வி பிரசாத்திற்குரியது. ஆனால் பிரசாத் பதில் சொல்லவில்லை.

பிரசாத் யாருடனும் அவ்வளவு எளிதில் பேசமாட்டார். கேசவனுக்கு எரிச்சல் வந்திருக்கவேண்டும். அவன் என்னிடம் பிரசாத்தைப் பற்றிப் பல முறை திட்டித் தீர்த்திருக்கிறான். இன்றோ நாளையோ அவன் கேட்ட கேள்விக்குச் பிரசாத் பதில் சொல்லாமல் இருந்ததைப் பற்றித் திட்டித் தீர்க்கத்தான் போகிறான். “பிரசாத் சமைச்சிட்டார். நீ சமை” என்றேன் லேசான புன்னகையோடு. கேசவன் என்னை ஆழமாகப் பார்த்துவிட்டு, அவன் அறைக்குச் சென்றுவிட்டான். நாளை என்னைப் பார்க்கும்போது, பிரசாத்தை மேன்சனை விட்டுக் காலி செய்யச் சொல்லவேண்டும் என்பதைப் பற்றி கேசவன் நிச்சயம் வலியுறுத்துவான்.

கேசவன் வந்த அடையாளமோ நாங்கள் பேசிக்கொண்டதன் சலனமோ பிரசாத்திடம் இல்லை. பிரசாத் தட்டை வழித்து நக்கினார். சமையலறையில் உள்ள வாஷ் பேசினில் தட்டைக் கழுவினார். அங்கேயே வாய்க்கொப்பளித்துத் துப்பினார். பிரசாத் இப்படி சமையலறை வாஷ் பேசினில் வாய் கொப்பளித்துத் துப்புவதைப் பற்றிப் பலமுறை கேசவன் கோபப்பட்டிருக்கிறான். நானும் பிரசாத்திடம் சொல்லியிருக்கிறேன். “கேசவன் கோபப்பட்டானா? அவன் யாரு கோபப்பட” என்றார் ஒருமுறை. இன்னொரு முறை “அவன் கெடக்கான் தாயோளீ” என்றார்.

சமையலறையில் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு மெயின் ஹாலில் வந்து அமர்ந்தார். டிவியை ஆன் செய்து, விசிடி ப்ளேயருக்குள் ஒரு விசிடியைச் செருகினார். திரை உமிழ்ந்தது. நீலப்படம். தினம் ஒரு நீலப்படம் பார்க்காமல் பிரசாத் உறங்கியதே இல்லை. பலமுறை பார்த்துவிட்ட அந்நீலப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எனக்கு மனப்பாடம். பிரசாத் கையிலிருந்த சிகரெட்டிலிருந்து அறையெங்கும் புகை சூழ்ந்தது.

“ஜன்னலைத் திறந்து வைக்கட்டுமா” என்று பிரசாத்தைக் கேட்டேன்.

“இப்பவா” என்றார்.

“புகையா இருக்கே”

“திறந்து வெச்சா புகை போயிடுமா”

“சரி நான் படுத்துக்கப் போறேன்”

“அப்ப புகை போயிடுமா”

அமைதியாக இருந்தேன்.

“என்ன பேச்ச காணோம்?”

“சும்மாதான்”

“புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல் தெரியுமா? என்னைக்காவது ஒரு நாள் முழுக்க சலனமோ குழப்பமோ சந்தேகமோ அடுத்த நாள் பற்றிய பயமோ இல்லாம இருந்திருக்கியா? குழந்தையா இருக்கிறப்ப விட்று. நான் சொல்றது நீ யோசிக்க ஆரம்பிச்ச பின்னாடி. நீ யாருன்னு ஒனக்குத் தெரிஞ்ச பின்னாடி. என்னைக்காவது புகையில்லாம இருந்திருக்கியா? புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல். ஜன்னலைத் திறந்து வெச்சிட்டா புகை போயிடும்னு சொல்றது அசட்டுத்தனம் இல்லையா?”

“எனக்குத் தூக்கம் வருது”

“தூங்கு. ஆனா தூக்கம் வருமா”

“தெரியலை”

“சரி.. போய் படு,” என்று சொல்லிவிட்டு டிவிக்குள் ஆழ்ந்தார். நான் மெயின் ஹாலைவிட்டு விலகி என் அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டுப் படுத்தேன்.

படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தேன். கேசவன்.

“என்னடா தூங்கிட்டியா”

“இல்ல, இப்பத்தான் படுத்தேன்”

“என்னடா ஆச்சு உனக்கு?”

“ஏன், ஒண்ணுமில்லையே. நல்லாத்தானே இருக்கேன்”

“டேய், சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. ஒரு ரெண்டு மாசம் லீவு போட்டுட்டு ஊருக்குப் போயிட்டு வா. நா மேனேஜர் கிட்ட சொல்லியிருக்கேன். லீவு தர்றேன்னு சொல்லியிருக்கார்”

“எனக்கு எதுக்கு லீவு?”

“பிரசாத் பிரசாத்னு அவனோட சுத்தாதடா. அவன் ஆள் சரியில்லை. நம்ம ஆபிஸ்ல யாராவது அவனோட பேசறாங்களா? எப்பவும் குடி, சிகரெட்.”

மெயின் ஹாலை எட்டிப் பார்த்தேன். பிரசாத்தின் முன்னே விஸ்கியும் இடது கையில் சிகரெட்டும் இருந்தது. நீலப்படத்தின் ஏதோ ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு தலையை லேசாக உயர்த்தி லேசாகச் சிரித்தார்.

“ஒரு நாள்கூட அவரால ப்ளூ ·பிலிம் பார்க்காம இருக்கமுடியலை. அவர் வயசு என்ன? உன் வயசு என்ன? எப்பவும் அவர்கூட சுத்திக்கிட்டு, உம்மனா மூஞ்சி மாதிரி… நம்ம ஊர்ல எப்படியெல்லாம் இருந்த? ஏண்டா இப்படி மாறின? என் கூட நீ பேசறதே இல்லை”

“கேசவன். போதும் நிறுத்து. எனக்குத் தூக்கம் வருது”

“சொல்றதைக் கேளு. ரெண்டு மாசம் லீவு போட்டு ஊருக்குப் போயிட்டு வா. எல்லாம் சரியாயிடும். அதுக்குள்ள அவரை நம்ம ரூமை விட்டுக் காலி பண்ணிடறேன். இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு. நேத்து சீனு சொல்றான், ஒனக்கும் அவருக்கும் இடையில என்னவோ தப்பு இருக்குன்னு. இதெல்லாம் ஒனக்குத் தேவையா?”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அவரை என்னைக்கோ ரூமை விட்டு அனுப்பியிருப்பேன். உன் பிடிவாதத்தாலதான் வெச்சிருக்கேன்”

நான் குழப்பத்தில் நின்றிருந்தேன். சில சமயம் நானே யோசித்திருக்கிறேன், பிரசாத்தை விட்டுக் கொஞ்சம் விலகி இருப்பது நல்லது என்று.

“சரி இப்ப போய் படு. நாளைக்குப் பார்த்துக்கலாம்” என்றான்.

அறைக்குள் சென்று படுத்தேன். அரைத்தூக்கத்தில் ஏதேதோ பிம்பங்கள் என் கண்ணில் நிழலாடின. பிரசாத் சத்தமாகச் சிரித்தார். அமைதியாக இருந்தார். நிறையத் தத்துவங்கள் சொன்னார். திடீரென என் மீது பாய்ந்தார். திடுக்கிட்டு விழித்தேன். அவரது பெட் காலியாக இருந்தது. மெயின் ஹால் விளக்கின் வெளிச்சம் என் அறையில் கசிந்தது. பிரசாத் இன்னும் டிவி பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

எப்போது உறங்கினேன் எனத் தெரியாமல் உறங்கிப்போனேன்.

அறைக்கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். மீண்டும் கேசவன். பதட்டமாக இருந்தான். என் கையை இழுத்துக்கொண்டு சென்று மெயின் ஹாலில் நிறுத்தினான். பிரசாத் மெயின் ஹாலின் மெத்தையில் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு சாய்ந்து கிடந்தார். அவரது வாயின் ஓரத்திலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவர் இறந்துவிட்டதாகக் கேசவன் கூறினான்.

“சூசயிட் பண்ணிக்கிட்டார்டா. என்ன பண்றதுன்னு தெரியலை. மேனேஜர்க்கு போன் பண்ணி சொல்லியிருக்கேன். அவரோட ·ப்ரெண்ட் ஒருத்தர் வக்கீலாம். அவரையும் கூட்டிக்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கார்”

எங்கள் கலைப்படத்தின் இக்காட்சி எனக்கு விளங்கவில்லை.

“ரொம்ப புகையா இருக்குடா”

“எங்கடா”

“ஒண்ணுமில்லை விடு. நான் ஊர்க்குப் போகணும்”

“அதான் நல்லது, போய்ட்டு வா. நா பார்த்துக்கறேன்”

கேசவன் சில காரியங்களை அடுக்கிக்கொண்டே போனான். நான் ஜன்னல் கதவைத் திறந்துவைத்தேன். மீண்டும் பிரசாத்தைப் பார்த்தேன். அவரது இடது கையின் கீழே ஒரு சிகரெட் துண்டு கிடந்தது. புகையற்றிருந்த சிகரெட்டின் மீது பிரசாத்தின் கண்கள் நிலைக்குத்தி நின்றிருந்தன.

* * *

Share