என் சிறுகதை ‘வருகை’ இன்று வெளியாகியுள்ள குங்குமம் இதழில் பிரசுரமாகியுள்ளது. வெளியிட்ட குங்குமம் இதழுக்கும் படம் வரைந்த தமிழுக்கும் நன்றி.
Archive for சிறுகதை
ஒரு செல்ஃபிகாரனின் குறிப்புகள் – சிறுகதை
என் சிறுகதை ‘ஒரு செல்பிகாரனின் குறிப்புகள்’ இன்று (02-03-2018) வெளியாகி இருக்கும் குங்குமம் இதழில் வெளியாகி இருக்கிறது. அனைவரும் வாசித்துவிட்டு, நன்றாக உள்ளது என்றோ மிக நன்றாக உள்ளது என்றோ கருத்துகளைத் தாராளமாகச் சொல்லலாம்.
குங்குமம் இதழுக்கு மிக்க நன்றி.
கிறுக்கல்கள் தங்கமீன்களான கதை
குமுதத்தில் என் சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது. எதோ ஒரு தருணத்தில், சிறிய கதையில் கூட கொஞ்சம் முயற்சி செய்யமுடியும் என்ற எண்ணம் உந்த எழுதி அனுப்பிய கதை இது. அனுப்பிய நாள் செப்டம்பர் 7, 2016. ஒரு பதிலும் இல்லை. குமுதம் போன்ற இதழ்கள் பதில் அனுப்பாது என்று தெரியும் என்பதால், இதழில் வருகிறதா என்று பார்த்தேன். அடுத்த நான்கு வாரங்களில் கதை வரவில்லை என்றதும், இதழில் தேடுவதை நிறுத்திவிட்டேன். 23.10.2016 அன்று, என் கதை வேறு இதழுக்கு அனுப்புகிறேன் என்று குமுதத்துக்கு ஒரு மடலும் அனுப்பினேன். பின்பு அக்கதையை வாரமலருக்கு அனுப்பி வைத்தேன். வாரமலரில் இருந்தும் பதில் இல்லை. எனவே ஜனவரி 2017ல் அக்கதையை என் சிறுகதைத் தொகுப்பு ‘புகைப்படங்களின் கதைகள்’ நூலில் சேர்த்து வெளியிட்டுவிட்டேன். மார்ச் 15ம்தேதியிட்ட குமுதத்தில் என் கதை வெளியாகி இருக்கிறது. அதுவே நண்பர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்! ஒரு கதை ஏழு மாதம் கழித்து வெளியாகும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதெல்லாம் ஸென் நிலை. ஒரு பெண்ணுக்காகக்கூட அப்படி காத்திருக்கமுடியாது என்பதே என் டிஸைன்.
நான் எழுதியதே மூன்று பக்கம் கூட இருக்காது. அதை இரண்டு பக்கமாக சுருக்க்கிவிட்டார்கள். கதையின் பெயரையும் மாற்றி இருக்கிறார்கள்.
குமுதத்துக்கு நன்றி. 🙂
நேற்று உடனே வாரமலருக்கு மடல் அனுப்பினேன், என் சிறுகதை ஒரு தொகுப்பில் வெளிவந்துவிட்டது, எனவே வாரமலரில் வெளியிடவேண்டாம் என்று. அதைப் பார்த்தார்களா, அதற்கு முன் வந்த என் கதையைப் பார்த்தார்களா என்பதெல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது.
நான் எழுதிய கதையையும் குமுதம் எடிட் செய்து வெளியிட்ட கதையையும் இங்கே இணைத்திருக்கிறேன். வாசித்து இன்புற்று ஆசி வழங்குங்கள்.
தேவையா இதெல்லாம்? 🙂
—
கிறுக்கல்கள் (சிறுகதை)
– ஹரன் பிரசன்னா
வீட்டின் சொந்தக்காரர் மாடியில்தான் குடியிருக்கிறார். ஆறு வயது மகள் ஸ்ருதியைத் தூக்கிக்கொண்டு மாடிக்குப் போகும்போது ஒரு கூடை ரோஜாவைத் தூக்கிக்கொண்டு போவது போல் இருக்கும் என்றெல்லாம் ரசிக்க இப்போதைக்கு பாலாவால் முடியாது.
இன்னொரு வீடு பார்த்து அட்வான்ஸ் குறைக்கச் சொல்லிப் பேசி வாடகை குறைக்கக் கெஞ்சி வண்டி அமர்த்தி வீடு மாற்றி தன் பருத்த உடலைத் தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கி எல்லாவற்றையும் அடுக்கி நிமிரும்போது, ‘என்னங்க இது, வாஷ் பேசின்ல தண்ணி போகமாட்டேங்குது…’ நினைக்கும்போதே பாலாவுக்கு முதுகு சுண்டி இழுத்தது. இந்த வீட்டுக்குக் குடி வந்து மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. காலி செய்யச் சொல்லிவிட்டார்.
எல்லா வீட்டுக்காரர்களும் ஒரே போல்தான் இருக்கிறார்கள். எல்லா குடித்தனக்காரர்களும்கூட ஒரே போலத்தான் இருக்கிறார்கள். வீட்டுக்காரர் சிரிக்கும்போது சிரிக்கலாம். ஆனால், அவர் கோபப்பட்டால் கூடவே கோபப்படமுடியாது. பணிந்து பேசவேண்டும். இல்லையென்றால் இன்னொரு வீடு பார்த்து அட்வான்ஸ் குறைக்கச் சொல்லிப் பேசி…
மாடிப்படி ஏறி ஒரே ஒரு தடவை மட்டும் பெல் அடித்துவிட்டு வாசல் திறக்க பவ்யமாகக் காத்திருக்கும்போது ஸ்ருதி சொன்னாள். “அப்பா, நான் சொன்ன பாயிண்ட்ட மறந்துறாத.”
வீட்டுக்காரம்மா வந்து கதவைத் திறந்துவிட்டு அவனை உள்ளே வாங்க என்று சொல்லாமல், வீட்டுக்குள் இருக்கும் தன் கணவனிடம் ‘பாலா வந்திருக்கார். வாங்க’ என்று இங்கிருந்தே சத்தமாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நகர்ந்தாள். மாடியில் வைக்கப்பட்டிருந்த ரோஜாச் செடிக்களைத் தட்டித் தட்டி விளையாடிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி. பாலா கண்களால் அதட்டினான்.
உடைந்து விழுவது போல வீட்டுக்காரர் வந்தார். அவருக்கு உடையாத குரல் என்பது பாலாவுக்குத் தெரியும். இவருக்குள் எங்கிருந்து இத்தனை கம்பீரமான குரல் வருகிறது என்று பலமுறை யோசித்திருக்கிறான் பாலா.
“சொல்லுங்க பாலா” என்றார். “அதான் எல்லாம் சொல்லியாச்சே. நீங்க காலி பண்ணிடுங்க. நல்ல ஃபிரண்ட் நாம. அது எப்பவும் அப்படித்தான். உங்கள மாதிரி நல்ல டெனெண்ட் கிடைக்கிறதெல்லாம் சான்ஸே இல்லை. நானே சொல்லிருக்கேனே இதை.”
பாலா மெல்ல சொன்னான். “இல்ல சார், எதோ சின்ன பொண்ணு தெரியாம சுவத்துல கிறுக்கிட்டா… இனிமே நான் கிறுக்காம பாத்துக்கறேன்.”
வீட்டுக்காரர் பாலாவிடம், ‘சே சே. இதுக்குன்னு இல்லை. குழந்தைங்கன்னா கிறுக்கத்தான். கிறுக்கினாத்தான் குழந்தைங்க. என் மாப்பிள்ளைக்கு வேலை மாத்தலாயிருக்கு. இங்கவே வந்து தங்கப் போறாங்க. பேத்தி மலர் எங்க கூடயே இருக்கப்போறான்னு எங்களுக்கும் சந்தோஷம். அதான் காரணம்” என்றார்.
“இல்ல சார், சின்ன பொண்ணு… தெரியாமத்தான் கிறுக்கிட்டா.”
“சின்ன பொண்ணுதான் பாலா. யார் வீட்ல சின்ன பொண்ணுங்க இல்ல சொல்லுங்க? நாமதான் பார்த்துக்கணும். உங்களுக்கு சொந்த வீடு இல்லாததால இதெல்லாம் புரியல. கொழந்தைங்களுக்கு என்ன தெரியும்” என்று சொல்லிவிட்டு, “ஸ்ருதி, சாகெல்ட் வேணுமா?” என்று கேட்டார். ஸ்ருதி ரோஜாச் செடியில் இருந்து கையை எடுக்காமல் “தேங்க்ஸ் அங்கிள்” என்றாள்.
பாலா, “இல்ல சார். இனிமே கிறுக்க மாட்டா. ஷ்யூர்” என்றவன், ஸ்ருதியை அழைத்து, “சொல்லும்மா” என்றான். அவள், “ரோஜாச் செடியே க்யூட் பா” என்றாள்.
காற்றில் கதவில் மாட்டியிருந்த திரை அசைந்து வீட்டுக்காரர் முகத்தை மூடியது. பாலா வீட்டுக்காரருக்குத் தெரியாமல் ஸ்ருதியைக் கண்ணால் மிரட்டினான். ஸ்ருதி, “டோண்ட் டூ தட் டாடி. ஐ ஃபீல் லாஃபிங்” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டே சொன்னாள். வீட்டுக்காரர் ஸ்ருதியைப் பார்த்து, ‘ஸ்வீட் கேர்ள்’ என்று சொல்லிவிட்டு, “இந்த மாசம் காலி பண்ணிக் குடுத்துடுங்க பாலா” என்றார்.
வேறு என்ன என்னவோ வார்த்தைகளில் பாலா அவரிடம் விடாமல் பேசிக்கொண்டிருந்தான். அவரும் விடாமல் கிறுக்கல்கள், மலர், மாப்பிள்ளை என்று சுற்றி சுற்றி பதில் சொல்லிக்கொண்டிருந்தார். வீட்டுக்காரம்மா வெளியில் வந்து பாலாவிடம் “காப்பி கலக்கட்டுமா” என்றுவிட்டு, கணவரை நோக்கி, “துணி காயப்போடணும்” என்று சொல்லிவிட்டுப் போனாள்.
வீட்டுக்காரர் பாலாவிடம், “சரி. நான் என் மாப்பிள்ளைகிட்ட பேசிப் பாக்கறேன். அவர் இங்க தங்கலைன்னா நீங்களே இருங்க. என்ன இப்போ. ஆனா கொஞ்சம் பாத்துக்கோங்க. முழுக்க வெள்ளை அடிக்கணும்னா 20,000 ரூபாயாவது ஆகும். உங்களுக்காக உங்ககிட்ட நான் அட்வான்ஸே 20,000 ரூபாய்தான் வாங்கினேன்” என்றார்.
“நோ நோ. இனிமே கிறுக்கவேமாட்டா” என்றான் பாலா. அவருக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஸ்ருதியைக் கூட்டிக்கொண்டு கீழே இறங்கினான். இறங்கும்போது ஸ்ருதியிடம், “அப்பா வீடு கட்டறேன். வீடு முழுக்க என்ன வேணா நீ கிறுக்கிக்கலாம்” என்றான்.
“அப்பா, நம்ம வீட்டுல மலர் கிறுக்கினதும் இருக்குப்பா. அவ ஹேண்ட் ரைட்டிங் எனக்குத் தெரியும். இதைக் கேட்டிருந்தா அவரால பதிலே சொல்லிருக்க முடியாது. நான் சொல்லிக்கொடுத்த நல்ல பாயிண்ட்டை நீ கேக்கவே இல்லையேப்பா” என்றாள் ஸ்ருதி.
(முற்றும்)
—
சுஜாதா (சிறுகதை) – சும்மா வெளாட்டுக்கு
சுஜாதா (சிறுகதை)
சுஜாதா போர்வையை விலக்கிக் கண்களைக் கூசிக்கொண்டே பார்த்தபோது விடிந்திருந்தது. மெத்தையின் இன்னொரு ஓரத்தில் கலைந்து கிடந்த ஷ்யாமை மீண்டும் கட்டிக்கொண்டாள். இன்னும் அவன் உடம்பு சூடாக இருப்பதை நினைத்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள்.
அவனை உலுப்பி, “இன்னும் எத்தன நாள் இப்படி?” என்றாள் சுஜாதா. திரும்பிப் படுத்தான் ஷ்யாம். வீட்டின் சுவர்களில் இருந்த பளபளப்பில் காலை நேரத்தில் கலைந்திருந்த உடையில் அவள் தேவதை போல் இருந்தாள். ஷ்யாமின் கண்கள் அவளை அளவெடுத்துக்கொண்டிருந்தன. “உன்னைத்தாண்டா கேட்கறேன்” என்றாள் சுஜாதா.
பதினாறு வயதுப் பெண்ணின் உடல் என்றால் அவளைப் பார்க்கும் யாரும் நம்பமாட்டார்கள். வாழ்க்கை முழுக்க வறுமையில் வளர்ந்த ஷ்யாமிடம், இப்படி இரவுகளில் செண்ட் மணக்க மணக்க ஒரு பெண் ‘நின்னு விளையாடுவா’ என்று யாராவது சொல்லி இருந்தால் சிரித்திருப்பான். தன் கையை அனிச்சையாய் முகர்ந்து பார்த்தான். சுஜாதாவின் வாசனை.
“போதும், கேட்டதுக்கு பதில் சொல்லுடா.”
அவளை இழுத்துத் தன் மேல் போட்டுக்கொண்டான். பஞ்சுப் பொதி போல இருந்தாள். “இல்ல. எனக்கு இப்ப 22 வயசுதான் ஆகுது. நீ ராணி மாதிரி வளர்ந்திருக்க. உன்னை இப்படி வெச்சு பார்த்துக்கறதெல்லாம் கனவுல கூட நடக்காது.”
“ஸ்டாப் இட் இடியட். இதையே எத்தனை தடவை சொல்லுவ. நைட்ல நீ சொல்றதை நான் கேக்கறேன். பகல்ல இனிமே நான் சொல்றதை நீ கேக்கற. இன்னைக்கு நைட் கோயம்பேட்ல எட்டு மணிக்கு ரெடியா இரு. பெங்களூரு போறோம். குட்பை சென்னை. குட்பை மம்மி டாடி. நம்ம உலகம். நம்ம வாழ்க்கை. நம்ம உடல்” என்று சொல்லிக் கண்ணடித்தவளின் உறுதி கண்டு ஷ்யாமுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவளுக்கு பயமே கிடையாதா? எப்படிச் சமாளிப்பாள்? இவளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம். பயம் வயிற்றில் சுழன்றது.
சுஜாதா ஷ்யாமின் கையைப் பிடித்தபோது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்த காஃபி ஷாப்பில் மணி எட்டைக் காண்பித்தது. அவள் அவன் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டான். கை வியர்த்திருந்தது.
“பயப்படாதடா பொறுக்கி. எதுக்கு பயப்படணுமோ அதுல பயம் இல்லை. இப்ப என்ன” என்றாள். ஷ்யாம் மையமாகச் சிரித்தான்.
பெங்களூரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துகொண்டார்கள். ஷ்யாம் கையில் ஒன்றுமே கொண்டு வரவில்லை. எதுவும் கொண்டுவரக்கூடாது என்று சுஜாதா சொல்லி இருந்தாள். சுஜாதாவிடம் ஒரு ஹேண்ட் பேக்கும், ஒரு பெரிய சூட் கேஸும் இருந்தது. பக்கத்தில் இருந்த ஷ்யாம் கையைப் பிடித்து இழுத்து அந்தப் பெட்டியின் மேல் வைத்து, “இது சூட் கேஸ் இல்லை, சூட் கேஷ். 2 கோடி ஹாட் கேஷ். இனி கவலையே இல்லை” என்று ரகசியமாக அவன் காதில் மட்டும் விழுமாறு சொன்னாள். பின்னால் உட்கார்ந்திருந்த இன்னொரு ஜோடி இவர்களைக் கவனிக்காமல் தெருவில் ஓடிக்கொண்டிருந்த ஆங்கில செய்தி சானல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தது.
“ரெண்டு கோடின்னா இந்தப் பெட்டிக்குள்ள அடங்கிடுமா?” என்று அப்பாவியாகக் கேட்ட ஷ்யாமின் கன்னங்களில் யாரும் அறியாமல் உரசிக்கொண்டே சிரித்தாள் சுஜாதா. “இந்த அப்பாவித்தனம்தாண்டா என்னை சாச்சிடுச்சு.”
தன் ஹேண்ட் பேக்கைத் திறந்து ஒரு ஸ்மார்ட் வாட்சை எடுத்து அவன் கைகளில் கட்டிவிட்டாள்.
“மறக்கமுடியாத இந்த நாளோட கிஃப்ட் ஒனக்கு. சோனி ப்ராண்ட். 40,000 ரூபாய். உன் கைல ஸோ க்யூட்.”
அவன் வாட்ச்சைப் பார்த்தான். November 8, Tuesday, 8.05 PM என்று காட்டிக்கொண்டிருந்தது.
சிசு – சிறுகதை
சாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு
இந்த 2015 புத்தகக் கண்காட்சியில் எனது சிறுகதைத் தொகுப்பான “சாதேவி” புத்தகமும் வெளியாகிறது. இதனை வெளியிடும் மயிலை முத்துகள் பதிப்பகத்துக்கும், இதற்கு பலவழிகளில் உதவிய Jayashree Govindarajan,Suthanthira Viji, Manikandan Vellaipandianஆகியோருக்கு எவ்விதம் நன்றி சொன்னாலும் போதாது.
பப்ளிஷர் சார் முத்து கணேஷ் அவர்களுக்கு நன்றி.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்கhttps://www.nhm.in/shop/100-00-0002-377-9.htmlஇங்கே செல்லவும். 34 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 360 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தின் விலை ரூ 300.
உடனே வாங்குவீர்!
மேல்வீடு – சிறுகதை
நான் எழுதிய மேல்வீடு சிறுகதை சொல்வனம்.காமில் வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.
புதியவர்களின் கதைகள்
ஜெயமோகனின் வலைத்தளத்தில் புதியவர்களின் கதைகள் வெளியிடப்பட்டு, பதினோரு சிறுகதை எழுத்தாளர்கள் ஜெயமோகனால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் போன்ற ஒரு மூத்த, முக்கியமான எழுத்தாளரால் இவர்கள் அறிமுகப்படுத்தப்படுவது மிக முக்கியமானது. இதனால் இவர்கள் நிச்சயம் நல்ல கவனம் பெறுவார்கள். ஜெயமோகன் இப்படிச் செய்ய நினைத்ததே, வரும் தலைமுறை மீது அவர் வைத்திருக்கும் ஆர்வத்தினால்தான். இப்படி ஏற்கெனவே பல மூத்தாளர்கள் செய்திருந்தாலும், அவற்றுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்தப் பதினோரு எழுத்தாளர்களும் இணையத்தின் மூலம் எழுத வந்தவர்கள் என்பதே. இணையத்தின் வழியே ஒரு சிறுகதை எழுத்தாளர்கள் தலைமுறை உருவாகிவந்தால், தொடர்ந்து சபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இணைய உலகம் கொஞ்சம் தலை நிமிரலாம்.
மேலும் வாசிக்க இங்கே செல்லவும்.