கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் கடந்த ஆறு வாரங்களாக வந்துகொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சியை லைவ்வாகக் கொண்டு செல்வது எத்தனை கஷ்டம் என்பது முகத்தில் அறைந்தாற்போல் புரியத் தொடங்குகிறது. நாம் மனதில் நினைத்திருக்கும் வடிவத்தில் 50% நிஜத்தில் வந்துவிட்டாலே பெரிய வெற்றிதான் போல. பங்கெடுக்கும் எழுத்தாளர்கள், மருத்துவர்கள் அவர்களின் அலைவரிசையிலேயே பேசுகிறார்கள் என்பதுதான் பொதுவான சவால். இதை மீறிவிட்டாலே பாதி வெற்றிதான்.
லிவிங் ஸ்மைல் வித்யாவின் நிகழ்ச்சி மிக நன்றாக வந்திருந்தது. (ஒலிவடிவம் இங்கே.) இதன் காரணங்கள் மிக எளிமையானவை. வித்யா நேரடியாக, எளிமையாக, யதார்த்தமாகப் பேசினார். வித்யாவின் மெச்சூரிட்டி இன்னொரு காரணம். வித்யாவின் வருகை, திருநங்கைகளின் மீதான, என்னைப் போன்ற வலைப்பதிவர்களின் பார்வையை வெகுவாக பாதித்துள்ளது போன்றே, வேறொரு நோக்கில் வித்யாவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் – பாஸிடிவ்வாக. அவரது கோபங்கள் மிக நேர்த்தியாக வெளிப்பட்டன. வித்யாவின் இந்த மெச்சூரிட்டி நிகழ்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தையே அளித்துவிட்டது. அவரது ‘நான் – வித்யா’ புத்தகம் பல தளங்களில் மிக முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தியதை உணரமுடிகிறது. திருநங்கைகளைப் போன்றே, உடலளவில் பெண்ணாகவும், உள்ளே ஆணாகவும் உணரும் வகையினரின் கஷ்டத்தை வித்யா சொன்னவிதம் வெகு நேர்த்தியாக இருந்தது.
-oOo-
கிழக்கு வெளியிட்ட சமீபத்திய மூன்று புத்தகங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சீனா – விலகும் திரை, இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு, சென்னை – மறுகண்டுபிடிப்பு ஆகிய இந்த மூன்று புத்தகங்களுக்குக் கிடைத்த வரவேற்பும் மிக முக்கியமானது. கிழக்கு பதிப்பகம் புதிய வாசகர்களை உருவாக்கும் அதே வேளையில், தனது வாசகர்களை மெல்ல இந்தப் புத்தகங்கள் பக்கம் கொண்டு செல்வதும் முக்கியமான ஒன்றாகும். அது இப்போது தீவிரமாக நடக்கத் தொடங்கியிருப்பது சந்தோஷம் தருகிறது.
வயதானவர்களின் மீதான என் பார்வை எப்போதுமே அனுதாபம் சார்ந்ததாகவே இருக்கும். நான் என் வாழ்க்கையில் எதிர்கொண்ட என் தாத்தா பாட்டி ஆகியோரின் உருவத்தையே ஒவ்வொரு வயதானவரிலும் பார்ப்பதால் இப்படி இருக்கலாம். இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு புத்தக வெளியீட்டில், புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் ஆர்.பி.சாரதி (பாராவின் அப்பா) கலந்துகொண்டார். இந்த விழாவில் எல்லாரும் பேசியதை விட, அந்த வயதானவர் கொண்ட நெகிழ்ச்சியே முக்கியமானதாகப் பட்டது எனக்கு. அவர் மேடைக்கு அழைக்கப்பட்டபோது அவர் கொண்ட நெகிழ்ச்சியைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் இன்ஃபார்மலாக நடக்கும் கிழக்கு கூட்டத்தில், நூலின் மூல ஆசிரியரான ராமசந்திர குஹாவுக்கு, அவர் ஒரு பொன்னாடையைப் போர்த்திய தருணத்தில், விழாவில் ஒரு பாரம்பரியத் தன்மை புகுந்துகொண்டதாக உணர்ந்தேன். நான் ரசித்த நல்ல தருணங்களுள் அதுவும் ஒன்று.
-oOo-
பிள்ளையார் சதுர்த்திக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நிறைய பிள்ளையார் சிலைகள் முளைத்திருந்தன. எங்கள் வீட்டிலிருந்து கிழக்கு பணியிடத்துக்கு செல்லுமுன்பு கிட்டத்தட்ட 20 பிள்ளையார்களைப் பார்த்தேன். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
பைத்தியக்காரன் தன் பதிவில் பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார் என்று ஒரு பதிவு எழுதியுள்ளார். பிள்ளையாரை அரசியலுக்கு உரிய ஒரு சாதனமாகப் பயன்படுத்தப்போகிறார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார். இதில் திடீரென்று வருத்தப்பட ஒன்றுமில்லை. எப்படி இஸ்லாமிய, கிறித்துவ, ஹிந்து மதங்கள் தொடர்ந்து அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ, அதன் ஒரு அங்கமாக இதுவும் அமையும். நாம் ஒட்டுமொத்தமாக, தொடர்ச்சியாகக் கவலைப்படலாமே ஒழிய, இதற்காக தனியாக வருத்தப்படவேண்டியதில்லை. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தமிழகத்துக்குப் பிள்ளையார் வந்தார் என்கிறார் பைத்தியக்காரன். 1400 வருட காலப் பழமையே போதுமானதற்கும் மேலான வலு என்ற எனது தனிப்பட்ட கருத்து ஒருபுறமிருக்க, சோ துக்ளக் இதழில் இதுகுறித்து, சில வருடங்களுக்கு முன்பு சிறந்த கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வழக்கம்போல கருணாநிதி ஏதோ சொல்லிவைக்க, அதற்கு பதில் சொல்லும் வகையில்தான் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. பைத்தியக்காரனுக்கு அதில் சில பதில்கள் கிடைக்கலாம். அதுபோக, ஜாவா குமார் சொல்லியுள்ள பதில்களும் முக்கியமானவை. அதற்கு பைத்தியக்காரன் பதில் சொல்வார் என எதிர்பார்க்கலாம். இதுபோக, எந்த எந்தக் கடவுளர்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்போது தமிழ்கத்துக்கு வந்தார்கள் என எழுதவேண்டும். அப்போதுதான் பைத்தியக்காரன் பின்னூட்டங்களின் வலிமையையும், முற்போக்கின் மகத்துவத்தையும் அறிவார். 🙂
-oOo-
பிள்ளையாருக்கு இணையாக, தெருவெங்கும் மாலைகளுடன் காணப்பட்டார் ராஜசேகர ரெட்டி. அவர் மறைவுக்கு அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
ஊடகங்கள் இந்தியாவெங்கும் ஒரு மாயையையும், பரபரப்பையும் உருவாக்கிவிடமுடியும் என்பதற்கு இவை சமீபத்திய உதாரணங்கள். ஆந்திராவின் ஏழைப் பங்களான், அகில இந்திய ரட்சகராக்கப்பட்டார். எதிர்பாராத, இரக்கம் தரும் விதமான மரணம் அன்றி, அவர் இந்த அளவுக்கு இந்தியாவெங்கும் கொண்டாடப்பட அதிக காரணங்கள் எனக்குத் தெரியவில்லை. இது ஆந்திராவில் நிகழ்வது குறித்து பிரச்சினையில்லை; ஏற்கக்கூடியதே. தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் நடப்பது ஆச்சரியம். நல்லவேளை கேரளாவில் இத்தனை ஆர்ப்பாட்டம் இல்லை போலும். எப்படி ஒரு மனிதர் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் ரட்சகராகவும், கேரளாவில் மனிதராகவும் ஆகிப் போனார் எனத் தெரியவில்லை. எல்லாம் ஊடக மாயை. சர்வக்ஞர் சிலை திறப்பில் கிடைத்த உற்சாகத்தைத் தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவைப் பலப்படுத்துகிறேன் என்று, தேவையற்ற ஒரு விடுமுறையை அறிவித்தார் கருணாநிதி. இது அநாவசியமான விடுமுறை. கருணாநிதிதான் ஸ்டண்ட் அடிக்கிறார் என்றால், கர்நாடகமும் விடுமுறை அறிவித்து, திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக நின்றது இன்னொரு கொடுமை. எதற்கெடுத்தாலும் விடுமுறை என்று அறிவிக்கும் வழக்கத்தை கருணாநிதி கைவிடவேண்டும்.
ஹிந்துத்துவவாதிகள் ராஜசேகர ரெட்டியை ராஜசேகர சாமுவேல் ரெட்டி என்கிறார்கள். இதற்கான ஆதாரங்களைக் கேட்டால், வாய்வழி பரப்பப்பட்ட உண்மை என்கிறார்கள். இணையத்தில் தேடினால், சில தளங்கள் அவரை ராஜசேகர சாமுவேல் ரெட்டி என்று சொல்கின்றன. இவையெல்லாம், ரெட்டி மரணத்துக்கு முன்பே எழுதப்பட்டவை என்பது முக்கியமான விஷயம். அவர் சாமுவேல் ரெட்டியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் பிரச்சினையில்லை. இதையெல்லாம் மீறித்தான் அவர் ஆந்திராவில் செல்வாக்குப் பெற்றிருக்கிறார். உண்மையில் அவர் கிறித்துவராகவே மதம் மாறி இருந்தாலும் பிரச்சினையில்லை. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம் என்பதுதான் கேள்வி. இரு மத அரசியல் ஆதாயங்களையும் பயன்படுத்த அவர் இப்படி நடந்துகொண்டாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
-oOo-
கந்தசாமி திரைப்படம் பார்த்தேன். முதல் நாள் முதல் ஷோ. ரஜினி, கமல் படமில்லாமல் இன்னொரு நடிகரின் படத்தை முதல் ஷோவில் பார்ப்பதே கேவலமாக இருந்தது. 🙂 இருந்தாலும் என்ன செய்ய, பார்க்கவேண்டிய கட்டாயம். ஓசி டிக்கட்!
ரிச்நெஸ் இல்லை படத்தில். கேமரா ஒரே எரிச்சல். எல்லா காட்சிகளிலும் மஞ்சள் ஷேட், ப்ளூ ஷேட் ஒரே கலர் ஜிங்கிச்சா.
இத்தனை ஹிட்டான பாடல்களையெல்லாம் எப்படி சொதப்பவேண்டும் என்று சுசி கணேசனிடம் கற்கலாம்.
ஸ்ரேயே பாதி மார்பு வெளித்தெரியும்படி வருகிறார். படம் முடியும் நேரத்தில் வில்லனுக்கு ஒரு குத்துப் போட்டு. சகித்துக்கொள்ள முடியவில்லை. அதில் ஆடும் ‘ஆப்பிள் நைஸா கடிச்சிக்கோ’ புகழ் நடிகை, கிட்டத்தட்ட மேலாடையே இல்லாமல் குதிக்கிறார். இதை மட்டும் சகித்துக்கொண்டேன். 🙂
இத்தனை எரிச்சலையும் மீறி…
படம் முழுக்க ஒரே அரோகராதான். எல்லாவற்றையும் அந்த கந்தசாமியே செய்கிறான்! கடவுள் பெயரால் ஆசாமி செய்கிறான் என்று போலிஸ் குறிவைத்துப் பிடிக்கிறது ஆசாமி கந்தசாமியை. இதிலெல்லாம் விஷேஷமில்லை…
ஒவ்வொருதடவை விகரம் சிக்கலில் மாட்டும்போதெல்லாம் அவர் முருகனை நினைத்து வழிபடுகிறார். ஒவ்வொருதடவையும் சிக்கலில் இருந்து மீள்கிறார். இதுதான் முக்கியம். சமீபத்தில் இப்படி கடவுள் நம்பிக்கைக்குக் காவடி எடுத்து ஒரு மாஸ் படம் வந்ததில்லை என நினைக்கிறேன். சரத்குமாரின் ‘ஏய்’ இந்த ரேஞ்சுக்கு இருந்தது நினைவுக்கு வருகிறது. மெக்ஸிகோவில் ஐந்து வில்லன்கள் துப்பாக்கி முனையில் கந்தசாமியைக் கொல்லப் போகிறார்கள். கடைசி நொடியில், இறக்கும்போது அவர் முருகனை நினைக்கிறார். எங்கிருந்தோ வரும் ஒரு கார் அவரைக் காப்பாற்றுகிறது.
மக்கள் எல்லாருமே முருகந்தான் கந்தசாமி என்று படம் முழுக்கச் சொல்கிறார்கள்.
பின்னணி இசைகூட ‘முருகா முருகா முருகா முருகா’தான்.
இது ஒரு ஹிந்துத்துவா படம் என்று கிளப்பிவிடலாம் என்றால், படத்தின் தரம் அதைச் சொல்லவே நாகூச வைக்கிறது.
இந்தப் படம் இத்தனை மோசமாக இருந்தாலும், ஃப்ளாப் ஆகாது, சூப்பர் ஹிட் ஆகவிட்டாலும், நஷ்டமில்லாமல் ஓடிவிடும் என நினைத்தேன். அதற்கான உழைப்பை விக்ரம் கொடுத்திருக்கிறார். சேவல் மாஸ்க் இலவசம் என்று சொன்னதும், மக்கள் கூட்டம் அதிகமாகி லாபம் வருகிறது என செய்திகள் பார்த்தேன். உண்மையா எனத் தெரியவில்லை. சேவல் போல வரும் விக்ரமை சிறுவர்கள் ரசிப்பார்கள் எனத்தான் நினைக்கிறேன்.
-oOo-
இப்போது டிவியில் ராமாயணம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ராமானந்த சாகரின் ராமாயணம் ஹிந்தியில் வந்தபோது, வீடு வீடாக அலைந்து டிவி பார்த்தது நினைவுக்கு வருகிறது. தினமலரில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடுவார்கள். அதை முதலிலேயே படித்துவிட்டு, அதை ஒப்பிட்டுப் பார்த்து, புரிந்துகொள்வோம். இப்போது தமிழிலேயே வருகிறது.
இந்த ராமாயணத்தில், கோசலை, கைகேயி, சீதை எல்லாம் மிகவும் செக்ஸியாக வந்தார்கள். இவர்கள் ராமாயணத்தை உள்குத்தாகக் காண்பிக்கிறார்களோ என்றெல்லாம் தோன்றியது. எல்லார் வீட்டிலும் சிறுவர்கள் இந்த ராமாயணத்தை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். வயது வந்தவர்கள் தவிர, இந்த ராமாயணத்தை யாருமே பார்க்கமாட்டார்கள் என நினைத்திருந்தேன். ராமாயண நாடகத்தின் டைட்டில் பாட்டான ‘ஜெய்ஸ்ரீராம்’ எனக் கேட்டதும், சிறுவர்கள் ஓடி வந்து டிவி முன் உட்கார்கிறார்கள். எந்த சிறப்பு நிகழ்ச்சி வந்தாலும், ராமாயணத்தை நிறுத்தாமல் ஒளிபரப்பிவிடுகிறது சன் டிவி.
இப்படி பத்து வருடங்களுக்கு ஒருமுறை ராமாயணத்தையும், மகாபாரத்தையும் காண்பிப்பது நல்லது என்ற எண்ணம் வந்துவிட்டது! என்ன, கைகேயி, கோசலை, சீதைக்கெல்லாம் நல்ல மாராப்புத் துணியைக் கொடுத்து, இடுப்பை மறைத்துக்கொண்டு நடிக்கச் சொல்லித் தந்தால் நல்லது.
-oOo-
உதயா டிவியில் சில கன்னடப் படங்கள் பார்த்தேன். எல்லாப் படங்களுமே தமிழில் இருந்து சென்றவைதான். கன்னட ரமணாவிலும், நாட்டாமையிலும் விஷ்ணு வருத்தன். கன்னட ஆண்பாவத்திலும், எங்க சின்ன ராசாவிலும் ரவிச்சந்திரன். இன்று இரவு கன்னட முத்துவில் இருவருமே வரப்போகிறார்களாம்!
மலையாளத்திலும் தெலுங்கிலும் தசாவதாரம் பார்த்தேன். மலையாளத்தில் நாயுடு கமல் தெலுங்கு பேசுபவராகவே வந்துவிட்டார். தெலுங்கில் நாயுடு கமல் தமிழ் பேசுகிறார். ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்’ என்று பாடுகிறது அவரது மொபைல். ‘தெலுகா’க்கு பதில் தமிழா என்கிறார். ‘இல்லை மலையாளி’ என்கிறார், தமிழில் கன்னடம் என்றும் மலையாளத்தில் கன்னடம் என்றும் சொல்லும் ஒரு நடிகர். தமிழ் நாயுடு கமல், தெலுங்குப் படத்தில், மலையாளத்துக்கும் தமிழுக்கும் ஒரே ஸ்க்ரிப்ட்தான் என்று தமிழில் சொல்கிறார். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்கே குழப்புவதுபோல, தெலுங்கு, மலையாள தசாவதாரங்கள் நல்ல காமெடியாக இருந்தன.
-oOo-
சாரு நிவேதிதா…
… பற்றி நான் என்ன எழுதிவிடப் போகிறேன்..? அவர் நித்யானந்தர் வழியாக எங்கோ போய்க் கொண்டிருக்கிறார். வாழ்க நித்ய ஆனந்தத்துடன். :))
-oOo-
தோழமை வெளியீடாக ‘இருள் விலகும் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு – நிறைய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – வெளிவந்துள்ளது. கடந்த சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டியது. இன்னும் நான் பார்க்கவில்லை. எனது கதை ஒன்றும் இதில் உள்ளது. புத்தகம் கைக்கு வந்ததும் சொல்கிறேன். எனது கதை இந்த சிறுகதை உலகை எப்படி மாற்றியமைக்கிறது என்பது பற்றி நாம் நிறையப் பேசலாம். 🙂
-oOo-