Archive for கவிதை

பரிகசிப்பு – கவிதை


கேட்டுக்கேட்டு

பார்த்துப் பார்த்து

பழகிப் பழகி

ஒவ்வொன்றாகப் பதித்துக்கொண்டு

சுயம்பு உருவாகிறது

மனதுள், பிம்பமாய்.

சில நிகழ்ந்த கணங்களில்

அணிச்சையாக

தானே வரைந்துகொள்கிறது

ஓர் அருவ ஓவியம், உள்ளுக்குள்.

எதிர்பாராமல் இடறி

கையுதறும் நேரம்

பதறாமல், எதிராளி

சிரித்த நொடியில்,

பொருந்தாத ஓவியப் பிம்பத்தை

கேள்விகளில்லாமல் நெட்டித்தள்ளி

பெரிய பரிகசிப்போடு

உள்வந்தமரும்

இன்னொரு ஓவியம்

தன்னை நிஜமென அறிவித்து.

Share

இரண்டாம் கவனம் – கவிதை

கவனம் ஈர்க்கிறது

முன்னெப்போதோ ஒரு கணத்தில்

மலர்ந்துவிட்ட பூ,

நிறமிழந்து

மணமிழந்து

தேனீக்களின் கவனமிழந்து

காம்பறுத்து

சிதறிய சருகுகளாய்

மென்காற்றிலாடி

கீழே விழும்போதும்.

Share

பெயர் சூட்டிக்கொள்ளும் பறவை – கவிதை

வானத்தில் சுழன்றடிக்கிறது

பெயர் தெரியாத பறவையொன்று

மற்றவையோடு

அதிக வித்தியாசங்களில்லை

அமர்ந்திருத்தலில்

தலைசாய்த்தலில்

இமைத்தலில்

ஓயாமல் இறக்கைகள் அடித்தலில்

வானம் அளத்தலில்

பெண்துணைத்தேடலில்

புதுச்சட்டைச் சகிதம்

தேர் காணப் போகும்போது

“சொத்”தெனப் பொதுப்பதிவு செய்து

பெயர் சூட்டிக்கொள்கிறது

“எச்சமிட்ட பறவை”.

Share

யுகமென – கவிதை

அறையெங்கும் பரவும்

வெளிச்சத்தில்

தன் வீரிய அணுக்களை

விட்டுவிட்டுத் தொலைகிறது

இருள்

விளக்கணைக்கும்

கதவடைக்கும்

ஒவ்வொரு நிகழ்விலும்

சடாரென

முகம்தூக்கும் அணுக்கள்

நீர்த்துப்போகின்றன

மெலிதான வெளிச்ச உட்கசிவில்

முழுதும் இருள்

சாத்தியமே இல்லையென்ற

முடிவை

அசைத்துப் பார்க்கும்

இடியும், அதைத் தொடர்ந்த

மின்வெட்டும்

முற்றாகச் சூழ்ந்த இருளை

துரத்தி

பேய் மழையில் நனையும்

இராட்சத மரத்தைக்

கண்ணுக்குக் காண்பித்து

பயமுறுத்தி

மறையும் நொடி மின்னல்

இவ்வாறாகவும்

வேறாகவும்

தொலைத்துக்கொண்டிருக்கின்றன

இருளும் வெளிச்சமும்

ஒன்றையொன்று

Share

ஒன்று நீங்கலாக… – கவிதை

என்றோ தூக்கியெறிந்த

வேண்டாத பப்பாளி விதைகள்

மரங்களாக நிற்குமழகைக்

காணும்போதெல்லாம்

மண் பெருமை உணர்ந்தாலும்

வீட்டுக்குள் ஒருபிடி மண்ணில்லை

என்பதுவும்-

ஒரு காலத்தில்

நெல்லிக்கொம்பு மிதந்த கிணறு

தூர்வாரச்சொல்லி

பழம்பெருமையோடு மட்டும்

காத்திருத்தல்

காணும்போதும்-

இடதும் வலதுமாய்

தலையைத் திருப்பி

சொறிதலைக்

கடித்துச் சுகம் காணக் கடினப்படும்

வீட்டு நாயின்

தினக்குளியலும்-

பத்தாவது பக்கத்தில் பிரிந்து

காற்றில் பக்கங்கள் சடசடக்க

குப்புறக் கிடக்கும் புத்தக

நினைவும்-

செதுக்கிவைத்த தோல்வியெனினும்

தொடர்ந்துகொண்டே இருக்கின்றன

சில எத்தனங்கள், கூடவே

விதிவிலக்காய் இருந்து

குமைக்கின்றன

எல்லா இரவுகளும்

Share

உங்கள் பார்வையும் என் பதிலும் – கவிதை

சிரிக்கும் ஓநாய்

பச்சப்புள்ள

தந்திரக்கார நரி

விஷமுள்ள பாம்பு

வெள்ளந்தி

கடுவன் பூனை என

என் நிலை மாறிக்கொண்டே

இருப்பதான உங்கள் குற்றச்சாட்டுக்கு

என் பதில் என்னவாய் இருக்கமுடியும்

என் நிலைக்கண்ணாடி

எப்போதும்

என்னை எனக்கு

வெள்ளையாகத்தான் காட்டுகிறது

என்பதைத் தவிர?

Share

நாடோடி – கவிதை

இடது மேல் மூலையில்

மின்னொளிர் ஊதுபத்தி

தொடர்ந்து பேனா, குறிப்பெடுக்க தாள்

கைகட்டிய விவேகானந்தர்

கணினி

தீபாரதனை மணி சகிதம் விர்ச்சுவல் பூஜை

அரட்டைக்கு இயர்·போன்

ஸ்க்ரீன் சேவராய் குடும்பப்படம்

எஸ் எம் எஸ்ஸில் அதிரும் கைத்தொலைபேசியென

மர மேஜையின் நான்கு மூலைகளுக்குள்

சுருங்கிவிட்டது

உலகம்

வரவழைத்துக்கொண்ட சந்தோஷத்துடன்

சின்னச் சின்னச் சண்டைகள்,

உயிர்ப்பகிர்தலின்றி.

Share

ரங்கோலி – – கவிதை

கூடுதல் அழகு,

இடப்பட்ட வெள்ளைப்புள்ளிகள்

சுற்றி இழுக்கப்பட்ட

நெளிகோடுகள் காட்டிலும்

சிக்கிச் சிலிர்த்திருக்கும்

நீர் தெளித்த பழுப்பு நிறத் தரை

Share