Archive for அறிவிப்பு

அஞ்சலி – நகுலன்

பேராசிரியர் டி.கே.துரைசாமி என்பவர் பின்னாளில் நகுலன் என்றறியப்பட்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதை, நாவல், விமர்சனம் என எழுதி நவீன இலக்கியவாதிகளில் முன்னோடியாகத் திகழ்ந்த நகுலன் நேற்றிரவு (17.05.07 இரவு) இயற்கை எய்தினார்.

நவீன கவிஞர்களில் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படும் நகுலன் ஆரம்ப காலங்களில் தன் கைச்செலவிலேயே சில கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்தார். Thanks: AnyIndian.comபின்பு காவ்யா பதிப்பகம் அவரது கவிதைகளின் மொத்தத் தொகுப்பை வெளியிட்டது. சில மாதங்களுக்கு முன்னால் “கண்ணாடியாகும் கண்கள்” என்ற அவரது கவிதைத் தொகுப்பையும் காவ்யா வெளியிட்டது. அதில் நகுலனின் புகைப்படங்கள் தரமான தாள்களில் அச்சிடப்பட்டிருந்தது. அதில் நகுலனை ஒரு குழந்தையாகக் கண்டடையலாம். அவரது புகைப்படங்களைக் கண்டபோது வயதானவர்கள் எல்லாருமே ஒரே போன்ற முகத்தை அடைந்துவிடுகிறார்கள் என்கிற என் எண்ணம் மேலும் வலுப்பட்டது.

கடந்த சில வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நினைவுகளின் குழப்பம், தீவிர இலக்கியவாதிகளுக்கு மனதளவில் ஏற்படும் நெருக்கடி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். திருமணம் செய்துகொள்ளாத நகுலனை அவரது அன்னையின் தோழியான பிருத்தா கடைசி காலங்களில் கவனித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நகுலன் தன் வாழ்நாளில் பெற்ற ஒரே விருது விளக்கு விருது மட்டுமே.

நகுலனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

நகுலன் நினைவாக:

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
·ப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ஸிகரெட்
சாம்பல் தட்ட்
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

அதிகமான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளான நகுலனின் கவிதை (கோட்ஸ்டாண்ட் கவிதைகள்):

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

இன்னொன்று:

நில்
போ
வா

வா
போ
நில்

போ
வா
நில்

நில்போவா?

(இந்தக் கவிதை விருட்சத்தில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து பிரமிள் அவரது அதிரடிக் கவிதைகளில் நகுலனையும் அதை வெளியிட்ட விருட்சம் அழகிய சிங்கரையும் தாக்கி ஒரு கவிதையை எழுதினார்.நகுலனின் கவிதையைக் கண்டு கோபமடைந்த கும்பகோணன் நாராயணன் இதைக் கேள்விகேட்டு விருட்சத்திற்கு எழுதினார். அதை நகுலனின் அழகிய சிங்கர் தெரிவித்த போது, நகுலன், இக்கவிதைக்கு விளக்கமாக இரண்டு பக்கங்களில் எழுதி அனுப்பினாராம். அழகிய சிங்கர் சொன்ன தகவல் இது.)

தமது கவிதைகளில் அதிக அளவு கடவுளைப் பற்றியும் புராண இதிகாச மாந்தர்களைப் பற்றியும் நேரடியாகவும் குறியீடாகவும் நகுலன் எழுதியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எப்படியும் ஏதோவொரு குறியீடு பெரும்பாலான கவிதைகளில் கவிஞனின் அனுமதியோடோ அனுமதியின்றியோ குடிகொண்டுவிடுகிறது.

இன்று நகுலன் கவிதைகளாகவே மிஞ்சுகிறார்.

Share

checking for beta blogger

சோதனை (மேல் சோதனை!)

Share

சென்னைப் புத்தகக் காட்சியில் எனி இந்தியன் – ஐந்தாம் நாள்

சென்னைப் புத்தகக் காட்சியில் ஐந்தாம் நாளான நேற்று நல்ல கூட்டம் இருந்தது. மாலை ஆறு மணி அளவில் எனி இந்தியன் அரங்கில் ஜெயகாந்தன் ஞானரதத்தில் எழுதியவற்றின் தொகுப்பான “ஞானரதத்தில் ஜெயகாந்தன்” புத்தகம் திரு.சித்ரபாரதியால் வெளியிடப்பட்டது. அதை திரு.பி.ச.குப்புசாமி பெற்றுக்கொண்டார். ஞானரதம் வெளி வந்ததில் சித்ரபாரதியின் பங்கு மிகவும் கணிசமானது. ஞானரதத்திற்கு முன்பே வாசகர் வட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றியிருந்த சித்ரபாரதி ஞானரதத்தையும் சிறப்பான சிற்றதழாக நடத்த முழு முயற்சி மேற்கொண்டதாக என்னிடம் தெரிவித்தார். திரு.பி.ச.குப்புசாமி ஞானரத்தில் கவிதைகளும் கதைகளும் எழுதியுள்ளர். இவர் பி.கே.சிவகுமார் தந்தை. புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய சித்ரபாரதி ஞானரதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொன்னார். அதன் பங்களிப்பு எந்த அளவிற்கு இன்றையத் தலைமுறைக்குத் தேவையானது எனவும் விளக்கினார். ஜெயகாந்தன் பேசவேண்டும் என்று சித்ரபாரதி கேட்டுக்கொண்ட போது, ஜெயகாந்தன் ஒரே வரியில் ‘நல்ல புத்தகங்களை படிங்க’ என்றார். நான் நன்றி தெரிவித்துக்கொள்ள கூட்டம் இனிதே முடிவுற்றது. நிறைய வாசகர்கள் ஜெயகாந்தனிடன் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு மகிழ்ந்தார்கள்.

திரு. ஜெயகாந்தன், திரு. சித்ரபாரதி மற்றும் திரு. பி.ச.குப்புசாமி ஆகியோர்களுக்கும் விழாவிற்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கு எனி இந்தியன் பதிப்பகத்தின் நன்றிகள்.

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்.

நன்றி,
பிரசன்னா.

ஐந்தாம் நாள் கூட்டத்தின் ஒரு பகுதி
ஞானரதத்தில் ஜெயகாந்தன் புத்தக வெளியீட்டைப் பார்வையிடும் மக்கள்
கூட்டம் தொடங்கல்
கூட்டம் தொடங்கல்
புத்தக வெளியீடு
புத்தக வெளியீடு
சித்ரபாரதி பேசுகிறார்
ஜெயகாந்தனுக்கு நன்றி
நன்றி நவிழல்
13-ஆம் தேதிக்கான பரிசு

Share

சே.ராமானுஜத்தின் கைசிகி நாடகம் – ஓர் அறிவிப்பு


கைசிகி நாடகம் இந்த வருடமும் டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி நம்பி கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

கைசிக ஏகாதசியன்று இரவு முழுதும் நாடகம் நடத்தப்படுவதைக் காண்பது புண்ணியம் என பக்தர்கள் கூறுவது ஒருபுறம் இருப்பினும், அதன் நாடகச்செறிவும், சமுதாயப்பார்வையும் பல அறிஞர்களை ஈர்த்திருக்கிறது.

1900களில் பொலிவுடன் விளங்கிய இந்நாடகப் பாங்கு, கால ஓட்டத்தில் சிதைந்து, அனிதா ரத்னம், பேராசிரியர். சே.இராமானுஜம் போன்றோர்களின் முயற்சியால் மீண்டும் உயிர்பெற்று, கடந்த சில வருடங்களாக புதுப்பொலிவுடன் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களாக புராதன வழக்கு சிதையாமல் , ஓலைச்சுவடிகளில் கிடைத்த பாடல்களைக் கொண்டு, பழைய நடிகர்களை ஊக்குவித்து மீண்டும் கட்டமைத்து, சீர்திருத்தப்பட்டுவந்த இந்நாடகம் இப்போது ஒருவாறு முழுதும் சீர்திருத்தப்பட்டு விட்டது எனலாம்.

வருடாவருடம் கைசிகி காண நாடக வல்லுநர்களும், ரசிகர்களும் அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. “கைசிகி காண்பது ஒரு அலாதி அனுபவம்” என்கிறார்கள் கண்டு ரசித்தவர்கள். நாடக வல்லுநர்கள், தேசிய நாடகப் பள்ளி மாணவர்கள் , பன்னாட்டு வல்லுநர்கள் இம்முறை திரளப் போகிறார்கள் -திருக்குறுங்குடியில். கைசிகி காண விழையும் நண்பர்கள் திருநெல்வேலி, சாத்தான்குளம், நாங்குநேரி வழியே திருக்குறுங்குடி செல்லலாம். பேருந்து வசதி நெல்லையில் உண்டு.

கைசிகி குறித்து எனது வலைத்தளத்திலும் முன்பு சிறிய அளவில் எழுதியிருக்கிறேன். ஆர்க்கைவ்-இல் இருக்கும்.

“எங்கனையோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்.
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நாம்கண்டபின்.
சங்கோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே”

என நம்மாழ்வார் பாடிய நம்பியின் வடிவழகை, கைசிகியோடு உணர்ந்து அனுபவியுங்கள்.

நன்றி: க.சுதாகர்.

கைசிகி நாடகப் பிரதி உருவாக்கப்பட சே.ராமானுஜம் எடுத்துக்கொண்ட உழைப்புப் பற்றி வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். வாய்மழி மரபாக மட்டுமே கிடைத்த இந்நாடகத்தை மீட்டெடுக்க சே.ராமானுஜம் மேற்கொண்ட அசாத்தியமான முயற்சிகள் பாராட்டிற்குரியவை. ஓர் உத்தேச வடிவில் மட்டுமே கிடைக்கப்பெற்றதை மீண்டும் மீண்டும் செதுக்கி, அதைக் கண்டவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கேட்டு இதை இந்த வடிவிற்குக் கொண்டு வந்திருக்கிறார் சே.ராமானுஜம். தமிழ் நவீன நாடக உலகிற்கு சே.ராமானுஜம் ஆற்றிவரும் பங்களிப்பு மிகவும் போற்றுதலுக்குரியது. அவரது நாடகங்களைக் காண நான் ஆவலாய் இருக்கிறேன். என்றேனும் சென்னையிலோ அல்லது அதைச் சுற்றிய பகுதிகளிலோ சே.ராமானுஜத்தின் நாடகம் அரங்கேறுமானால் அவசியம் பார்க்க விரும்புகிறேன். திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

Share

Regarding comments in my blog

எனது வலைப்பதிவில் பின்னூட்டத்திற்கு மாடரேஷன் இருப்பதால், யாரேனும் பின்னூட்டமிட்டால் அது பற்றி எனக்கு மின்னஞ்சல் வரும். இன்று யதேச்சையாக எனது மாடரேஷன் பக்கத்தைப் பார்த்தபோது, ஏழு கமெண்ட்டுகள் அங்கிருப்பதைப் பார்த்தேன். அதைப் பற்றி மாடரேஷன் எனக்கு வரவில்லை. அங்கிருக்கும் பின்னூட்டங்களை இப்போதுதான் உள்ளிட்டேன். எஸ்.கே, மோகந்தாஸ், சந்திரவதானா, தேவ், கானகம், தமிழ்த்தீவிரவாதி போன்றவர்கள் உள்ளிட்டிருந்த பின்னூட்டங்களுக்கு என் நன்றி. தாமதமாக அப்டேட் செய்வதற்கு மன்னிக்கவும்.

நன்றி.

Share

மஹரிஷி – அஞ்சலி

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மஹரிஷியின் சீடர்களுள் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வந்து எங்களுக்கு ஆன்மிகம் பற்றியும் அறிவுத் திருக்கோயில் பணிகள் பற்றியும் சொற்பொழிவாற்றினார். அவர் சொன்ன எளிய உவமைகள் இன்றும் மனதில் அப்படியே இருக்கின்றன. அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் செந்தில் பகவதி முருகன் மஹரிஷியின் தீவிரப் பக்தர்களில் ஒருவர். அவர் மஹரிஷியைப் பற்றி நிறைய விஷயங்கள் அடிக்கடிச் சொல்வார்.

Thanks:http://vethathiri.org

மஹரிஷியைப் பற்றி நான் அதிகம் யோசிக்கத் தொடங்கியது எனது 21 – ஆம் வயது வாக்கில். எங்களுக்கு மேலதிகாரியாக இருந்த தண்டவேல் மஹரிஷியின் தீவிர பக்தர். அவர் எங்களுக்கு மஹரிஷியைப் பற்றியும் அவரது ஆன்மிகக் கருத்துகள் பற்றியும் அவரது எளிய குண்டலினிப் பயிற்சி பற்றியும் விடாமல் தினமும் சொல்லி வந்தார். அவரது புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருந்த காலம் அது. வாழ்க்கைப் பயணம் விலகிப் போகவும் மஹரிஷியை மறந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வருத்தம் ஏற்பட்டது. எனது சில நண்பர்கள் அவரது தீவிரப் பக்தர்கள். அவர்களில் ஒரு நண்பர் யோகா மூலம் அடைய முடியாத சித்திகளே இல்லை என்று சொல்வார். ஏதோ ஒருநாள் அவர் கண்ணாடியில் உற்று நோக்கிக் கொண்டிருந்தாராம். கண்ணாடியில் அவரது முகம் மெல்ல மறைந்து வேறொரு முனிவரின் முகம் தெரிந்ததாம். அவருக்கே பயமாகிவிட்டதாம். பின்னொருநாள் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தான் கண்ணாடியில் கண்ட அதே முனிவரைக் கண்டதாகக் கூறினார் என் நண்பர். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் நம்புவதில்லை. இந்த விஷயமும் அப்படியே. ஆனால் மஹரிஷியின் ஆன்மிகக் கருத்துகள் இதுபோன்றவை அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன். எனது வேறு சில நண்பர்கள் குண்டலினி சக்தியை நெற்றிக்கு ஏற்றிக்கொண்டு, நெற்றியில் நம் சக்தி துடிப்பதைக் காணலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தப் பயிற்சிக்குச் செல்லவில்லை. நான் அதிகம் ஈர்க்கப்பட்டது அவரது எண்ணங்களினால்தான். ஆன்மிகத்திற்கும் நிகழ்முறை வாழ்வுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்க அவர் சொல்லும் எளிய உவமைகள், சிந்தனைகயைத் தூண்டும் கேள்விகள் பெரிதும் அர்த்தமுள்ளவை, அதிசயத்தில் ஆழ்த்துபவை.

வேதாத்ரி மஹரிஷி மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

Share

நாடகம் – அழைப்பிதழ்

mudiyAtha saman - azaippithaz

கோபி கிருஷ்ணன் நினைவாக கோபி கிருஷ்ணனின் “முடியாத சமன்” சிறுகதையின் நாடகமாக்கம்.

நாடகமாக்கம்: வெளி ரங்கராஜன்

நடிப்பு, இயக்கம்: ஜெயராவ் (கூத்துப்பட்டறை)

Social Work, a-social work, anti-social work கோபி கிருஷ்ணனின் ‘சமூகப் பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’ நூலின் ஆங்கில மொழியக்காம், வெளியீடு.

ஆங்கில மொழியாக்கம்: லதா ராமகிருஷ்ணன்
நூல் வெளியிடுபவர்: மா.அரங்கநாதன்

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.ஜலாலுதீன் அறிமுகம்.

அறிமுகம் செய்பவர்: ‘வசந்தம்’ சிறப்புக் குழந்தைகள் பள்ளி இயக்குநர் திருமதி. அல்லி

தமது பணி குறித்தும், கோபி கிருஷ்ணன் குறித்தும் ஜலாலுதின் அனுபவப் பகிர்வு.

இடம்:

தக்கர் பாபா வித்யாலயா,
வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர், சென்னை – 17.

நாள்: 04.06.2005, சனி மாலை 6.00 மணி.

ஏற்பாடு: குறிஞ்சி அமைப்பு.

Share

ஒரு அவசரப்பதிவு – மதி கந்தசாமிக்கு

தங்கமணியின் பதிவொன்றில் மதியின் பின்னூட்டமொன்றைக் கண்டேன். அவரது பாணியில், போகிற போக்கில் சொல்கிறார்போல் விஷமத்தனத்தைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். மதியின் இந்த விஷமத்தனம் நான் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இந்த முறை புதிய ஒன்றுடன் வந்துள்ளார். எனி இண்டியன்.காமை அவரது பல நண்பர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினாராம். அதுவும் நான் கேட்டுக்கொண்டபடியாம். நான் எப்போதும் நட்பையும் எனது வேலையையும் ஒன்றாகக் கலக்கவிடாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் கொள்வேன். எனி இண்டியனில் சேர்ந்த பின்பு இதுநாள் வரையில், இணைய நண்பர்கள் யாரிடமும் -நேரில் பார்த்திரா விட்டாலும், இணையத்தின் மூலம் எனது மிக நெருக்கமான நண்பர்களாகிப் போன ஜெயஸ்ர், ஹரியண்ணா, ஆசீஃப் மீரான், ஆசாத் பாய், கே.வி.ராஜா, உஷா ராமசந்திரன், மரத்தடி ப்ரியா, பரிமேழலகர், ஹைகூ கணேஷ் மற்றும் பலர் உள்ளிட்ட யாரிடமும் – எனி இண்டியன் பற்றி நண்பர்களிடம் சொல்லுங்கள் என்று கேட்கவில்லை. இவ்வளவு ஏன்? இணையத்திற்கு முன்பே எனக்கு மிக நெருக்கமான நண்பரான எம்.கே. குமாரிடம் கூட இப்படிக் கேட்டதில்லை. உண்மை இப்படியிருக்க, தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் தனக்குப் பிடிக்காதவர்களின் மீது வெறுப்பை உமிழவும் மதி “நான் கேட்டுக்கொண்டபடி” என்று எழுதியிருக்கிறார். அவராகவே அவரது நண்பர்களிடம் சொன்னதாக அவர் ஒத்துக்கொண்டால், பெரும் இழுக்கு வந்துவிடும் என்று அவர் அஞ்சுகிறாரோ என்னவோ.

எனி இண்டியன்.காம் தொடங்கிய காலத்தில் என்னுடைய மெசெஞ்சரில் மதியிடமிருந்து ஒரு ஆஃப்லைனர் வந்திருந்தது. அதில், எனி இண்டியன்.காமில் ஹரன்பிரசன்னா என்ற பெயரைக் கண்டதாகவும் அது ஒன்றே அவருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும், அதனால் அவர் தன் நண்பர்களிடம் சொல்லப்போவதாகவும் சொல்லியிருந்தார். நானும் “அந்த ஹரன் பிரசன்னா நாந்தான். சந்தேகப்படவேண்டாம்” என்ற பதிலை அனுப்பியிருந்தேன். அடுத்த முறை வந்த ஆஃப் லைனரில், அவரது இலங்கைத் தோழி ஒருவர், புலிநகக்கொன்றையின் ஆங்கிலப் பதிப்பை வாங்க விரும்புவதாகவும், அது கிடைக்குமா என்றும் கேட்டிருந்தார். அப்போது பதில் அளிக்கும்போது, அதைப் பற்றி விசாரிக்கிறேன் என்றும் பல இலங்கைத் தமிழர்கள் தொலைபேசி மூலமும், இணையத்தின் மூலமும் எங்களிடம் வாங்குகிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அடுத்த ஆஃப்லைரில் மதி, அந்த இலங்கைத் தோழி வேறொரு மூலத்தின் வழியே அப்புத்தகத்தை வாங்கிவிட்டதாகச் சொன்னார். இவ்வளவுதான் நடந்தது.

நான் யாருடன் சாட் செய்யும்போதும் அதை சேமிப்பதில்லை. அதனால் மதியுடனான சாட்டையும் சேமிக்கவில்லை. மேலும் இது ஆஃப்லைனரில் நடந்தவை. சாட் என்று கூடச் சொல்லமுடியாது. முதன்முதலில் என் பெயரைக் கண்டுவிட்டு நம்பிக்கை வந்ததாகவும் அதனால் தன் நண்பர்களிடம் சொல்லப்போவதாகவும் சொன்னவர் மதிதாம். ஆனால் இப்போதோ, போகிற போக்கில், நான் கேட்டுக்கொண்டபடி என்று எழுதுகிறார். மிக நுணுக்கமான வேறுபாட்டின் மூலம் தன்னை உயர்வாக்கிக்கொள்ள விரும்புகிறார். மதியின் இக்குணம் நான் முன்னமே அறிந்ததுதான்.

நான் இப்போது சொன்னவற்றை, நான் ஏற்கனவே எழுதுவதை தொடர்ந்து வாசிப்பவர்கள் நிச்சயம் நம்புவார்கள். மதியுடன் நட்பு வைத்திருக்கிறவர்களும் நம்புவார்கள். மதியிடம் சென்று “மற்ற நண்பர்களிடம் சொல்லுங்கள்” என்று நான் கேட்டுக்கொள்ளவில்லை. மதி அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடவேண்டும். இல்லை என்றால் இதற்கான விளக்கம் அளிக்கவேண்டும்.

தங்கணி, மதி இது பற்றி உங்கள் பதிவில் பேசியதால் நான் இங்கு பதிலிட வேண்டியதாயிற்று. உங்கள் பதிவை இதற்குப் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

நன்றி,
ஹரன்பிரசன்னா

Share