ரவிக்குமார் ரஜினி தொடர்பான இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். வழக்கம்போல ரஜினி ரசிகர்கள் அப்பதிவுகள் மோசமாக இருந்ததாகவே எடுத்துக்கொண்டார்கள். அப்படி அவர்கள் எடுத்துக்கொள்ளாவிட்டால்தான் அது செய்தி. உண்மையில் ரவிக்குமாரின் அந்த இடுகைகளில் மோசமாக எதுவுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், அந்த இரண்டு இடுகைகளில் ஒன்றுமே இல்லை! பொருட்படுத்தத்தக்க எதுவுமே அந்த இரண்டு இடுகைகளில் இல்லை. (கூறியது கூறல்!) ரஜினி குறித்தோ ரஜினியின் அரசியல் குறித்தோ திண்ணைப் பேச்சுகளில் பரிமாறப்படும் ‘என் கருத்து’ வடிவிலான இரண்டு கருத்துகளையே இரண்டு இடுகைகளாக இட்டிருந்தார் ரவிக்குமார்.
இன்று 3வதாக ஒரு இடுகை. அதில் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவை வாசிக்கும் வாசகர்கள் ரஜினி, வடிவேலு, குஷ்பூ குறித்து மட்டும்தான் வாசிக்கிறார்கள் என்று. இன்றுதான் இவர் இதைக் கண்டுபிடித்தார் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. நடிகர்களைப் பற்றி எழுதினால் அதிகம் பேர் படிப்பார்கள் என்று தெரியாமல்தான் எழுதினார் என்று நம்புவது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.
ரஜினி குறித்த முதல் இரண்டு இடுகைகளில் ரஜினி குறித்த தீவிரமான அலசல்கள் எவையுமே இல்லை. ஆனால் மூன்றாவது இடுகையில் ரவிக்குமார் தான் ஏற்கெனவே இந்தியா டுடேவில் ரஜினி பற்றி எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் பேசுகிறார். இந்தியா டுடேவில் ரஜினி பற்றிய தீவிரமான மதிப்பீட்டை நிச்சயம் ரவிக்குமார் முன்வைத்திருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ரவிக்குமார் மிக முக்கியமான எழுத்தாளரே. ஆனால் அக்கட்டுரையை மையமாக வைத்து, ஒன்றுக்கும் உதவாக இந்த இரண்டு இடுகைகளை அவர் அளக்க முனைவது சரியல்ல. இந்தியா டுடேவுக்கு எழுதியது போல எழுதாமல், கைக்கு வந்த நான்கு வரிகளை எழுதிவிட்டு இவர் வலைப்பதிவு வாசகர்களை நொந்து கொள்வது முரண்.
உண்மையில் so called இந்த வலைப்பதிவு/ஃபேஸ்புக் வாசகர்கள் ரவிக்குமார் போன்ற எழுத்தாளர்களைத்தான் நொந்துகொள்ளவேண்டும். இதே எழுத்தாளர்கள் இந்தியா டுடே, காலச்சுவடு போன்றவற்றில் எழுதும்போது தீவிரமாக உழைத்து எழுதுகிறார்கள். ஆனால் வலைப்பதிவு, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் எழுதும்போது ஏனோ தானோ என்று எழுதிவிடுகிறார்கள். அதே சமயம், சிற்றிதழ்களில் தாங்கள் எழுதும்போது எழுந்த விவாதமோ கருத்துரைகளோ இவற்றுக்கும் எழு வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால், ஃபேஸ்புக், வலைப்பதிவு வாசகர்கள் சரியல்ல என்றும் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். மறந்தும், எழுத்தாளர்கள் ஃபேஸ்புக், வலைப்பதிவுகளில் சரியாக எழுதுவதில்லை என்று பேசுவதே இல்லை. எழுத்தாளர்களின் எழுத்து உழைப்பில் வேறுபாடு உள்ளதுபோலவே வாசகர்களின் வாசிப்பு உழைப்பிலும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டு சரிசம உண்மைகளில் ஒன்றை மட்டும் வெட்டிப் பேசினால் எப்படி?
ரஜினி குறித்த இரண்டு இடுகைகளில் (மீண்டும் மீண்டும் நான் இவற்றை இடுகை என்றே அழைப்பதன் நோக்கம், இதனைக் கட்டுரை என்று அழைக்க எவ்வித ஞாயமும் இல்லை என்பதே!) பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டுகளின் நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும் என்கிறார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஞானம் வந்துவிட்டதாக ரஜினியைச் சொல்லும் ரவிக்குமார், நன்றாக ஐந்து வருடம் எம்.எல்.ஏவாக இருந்த வேளையில் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட் குறித்து நினைத்துப் பார்த்திருக்கவேண்டும். ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கு டிக்கெட் பிளாக்கில் விற்றது குறித்து இவர் கடும் போராட்டங்களை நடத்தியிருக்கலாம். சன் பிக்சர்ஸ் கையில் சிக்கிக்கொள்ளும் தியேட்டர்களில் என்ன என்ன நடக்கிறது, பிளாக்கில் டிக்கெட் விற்பது அத்தியேட்டர்களுடன் தொடர்புடையதா ரஜினியுடன் தொடர்புடையதா என்றெல்லாம் அவர் யோசித்திருக்கலாம். பிளாக்கில் டிக்கெட் விற்பது ரஜினி படத்துக்கு மட்டும்தான் நடக்கிறது என்று நான்கைந்து நாளாக முயன்று தன்னைத்தானே நம்பவைத்துக் கொண்டிருக்கலாம். பதவி போகும்போதுதான் எம் எல் ஏக்களுக்கும் ஞானம் வருகிறது.
மகளையே தயாரிபபாளராக்கி பணம் அள்ளுவது பெரிய குற்றமே. ஐயமே இல்லை. ஒரு படத்துக்கு வசனம் எழுதி 50 லட்சம் சன்மானம் பெறும் முதலமைச்சரின் கவிதைகள் பிடிக்கலாம், தவறில்லை. படங்களை அந்த முதலமைச்சரின் குடும்பங்களே வெளியிட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி கூட்டணியில் இல்லாவிட்டால்தான் பேசலாம், அதுவும் தவறில்லைதான். ரஜினியின் மகள் பணத்தை அள்ளுவதுதான் பெரும் தவறு. ’மரணத் தறுவாயிலாவது’ ரஜினி இதனை யோசிக்கவேண்டும். வடிவேலுவின் பக்கத்தில் கைக்கூப்பி நின்று ஓட்டுக் கேட்டபோது, வடிவேலுவும் அவரது குடும்பத்தினரும் பணத்தை அள்ள எதுவுமே செய்வதில்லை என்று ரவிக்குமார் நம்பியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் அது அத்தனை முக்கியமல்ல. ஆனால் ரஜினி மட்டும் ‘மரணத் தறுவாயிலாவது’ இதனை யோசிக்கவேண்டும்.
முன்பு ஒரு டிவி ஷோவில் தங்களுக்கு பிடித்த படம் என்ன என்ற கேள்விக்கு, மாபெரும் இலக்கியவாதியான ரவிக்குமார் சொன்ன பதில் ‘சிவாஜி.’ ரஜினியைப் பிடித்திருக்கிறது என்பது தவிர வேறு பெரிய காரணங்கள் இருந்துவிட முடியாது சிவாஜி திரைப்படத்தைப் பிடிக்க. இதில் தவறில்லை. ரவிக்குமாரே தனது 3வது இடுகையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார், ரஜினி படங்களை மட்டும் முதல் காட்சியில் பார்ப்பேன் என்று. இப்படிச் சொல்லும் ஒருவர், ஏன் ராணா நல்லவிதமாகச் சுருண்டு விட்டது என்று சொல்லவேண்டும்? ரஜினியின் மகளே பணத்தை அள்ளப் போவதினாலா? கருணாநிதியின் மகன்கள், பேரன்கள் பணத்தை அள்ளுவது பற்றி ரவிக்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதற்கு முன்னர் அவர் பேசியிருக்கலாம்!) பேசியிருக்கிறாரா? இலக்கியவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கான அதே அரசியல் சூத்திரம்தானா? இத்தனை ரஜினியைப் பிடிக்கும் என்று சொல்பவர், ஏன் திவ்யா நடிக்காமல் போனது நல்லது என்று சந்தோஷப்படவேண்டும்? தேவையற்ற கேள்விகள். ஏனெனில், ரவிக்குமார் பதில் சொன்னால், அவரது வலைப்பதிவில் அதிகம் பேர் படித்துவிடுவார்கள். ஃபுல் டைம் இலக்கியவாதி மற்றும் பார்ட் டைம் அரசியல்வாதி ஒருவரின் வலைப்பதிவில் நடிகர்கள் பற்றிய பதிவு அதிகம் படிக்கப்படுவது அவருக்கு இழுக்கு. அவருக்கு ஏன் அந்த இழுக்கு இன்னொருமுறை வரவேண்டும்?
இந்தப் பதிவுக்குக் கூட, ரஜினி ரசிகர்கள் இப்படித்தான் ரஜினியைப் பற்றிப் பேசினால் பொறுத்துக்கொள்ளாமல் எதையாவது சொல்வார்கள் என்றோ உளறுவார்கள் என்றோ அவரோ மற்றவர்களோ சொல்லக்கூடும். ரவிக்குமாரைப் போலவே நானும் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. (வந்தால் அவருக்கே நிச்சயம் ஓட்டு என்பது வேறு விஷயம்!) ரஜினிக்கு அரசியலுக்கு வருவதை விரும்பால பல ரஜினி ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர் அரசியலுக்கு வருவதற்குக் காரணம் விஜய்காந்தின் வெற்றி என்றெல்லாம் காமெடி பண்ணாதிருக்கவேண்டும். ரஜினி மீண்டும் வந்து நன்றாக வாழ்ந்தாலே போதும். நடிக்கவே தேவை இல்லை. ஒருவேளை அவர் நடிக்கவும் செய்தால் அது போனஸ் மகிழ்ச்சி. இதைத்தான் ரவிக்குமாரும் சொல்ல நினைக்கிறார். ஆனால் அவருக்கு உள்ளேயிருந்து சில குரல்கள் அவரறியாமல் சில வரிகளை எழுதிவிடுகின்றன. இப்போது எனக்கு நடந்துவிட்டதைப் போலவே.
வாசகர்கள் வசதிக்காக…
ரவிக்குமாரின் முதல் இடுகை: (இது அவரால் நீக்கப்பட்டுவிட்டது)
ரஜினி அரசியலுக்கு வரப்போகிறாரா?
ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர் சிங்கப்பூருக்குப் போவதற்கு முன்பு பேசியதாக ஒரு ஒலிப்பதிவு தற்போது இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் அவருடைய குரல் மிகவும் ஆயாசத்தோடு ஒலிப்பதைக் கேட்கும்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என நம்புவது கடினமாக இருக்கிறது.
தான் பணம் வாங்கிக்கொண்டுதான் நடிப்பதாகவும் அதற்கே இவ்வளவு அன்பு செலுத்துகிறீர்களே என்றும் தமது ரசிகர்களைப் பார்த்து அவர் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது தனது ரசிகர்கள் தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்ளும்படி தான் நடந்துகொள்வேன் என்றும் அவர் அதில் வாக்குறுதி அளித்திருக்கிறார். நடிகர் விஜயகாந்த் தற்போது பெற்றிருக்கும் அரசியல் வெற்றி ரஜினியை சிந்திக்கவைத்துவிட்டதுபோல்தெரிகிறது. தானும் அரசியலில் ஈடுபட அவர் முடிவெடுத்துவிட்டார், தான் குணமடைந்து தமிழகம் திரும்பும்போது கடவுள் தன்னை இதற்காகத்தான் பிழைக்க வைத்தார் என்பதுபோல ஒரு வசனத்தைப் பேசிவிட்டு ரஜினி புதிய கட்சி ஒன்றைத் தொடங்கக் கூடும் என்பது என் அனுமானம்.
ரஜினி அரசியல் கட்சி துவக்கினால் அவருக்கான ஆதரவு எப்படி இருக்கும்? விஜய், அஜித் ரசிகர்கள் அவருக்குப் பின்னால் போய்விடுவார்களா? ஓரிரு வாரங்களில் இதற்கான விடை கிடைக்கும் என நம்புகிறேன்.
இரண்டாம் இடுகை: (இதுவும் நீக்கப்பட்டுவிட்டது)
ராணா – இன்னொரு ஜக்குபாயா?
ராணா படத்தின் துவக்கம் இப்படி சோகமாக முடியும் என ரஜினி ரசிகர்கள் நினைத்திருக்கமாட்டார்கள். ஏற்கனவே இப்படி அறிவிக்கப்பட்டு நின்றுபோன ஜக்குபாயின் நிலைதான் ராணாவுக்கும் என்பது என் அனுமானம்.’ ஆண்டவன் சொல்றான் அண்ணாமலை செய்யிறான்’ என்று வசனம் பேசிய ரஜினி இனிமேல் சினிமா வேண்டாம் என்று ஆண்டவன் சொல்லிவிட்டான் என அறிவிக்கக்கூடும்.
ராணா ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் தயாரிக்கப்படுவதாக இருந்தது. தெலுங்கில் டப்பிங் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. தனது மகளையே தயாரிப்பாளராக்கி லாபத்தை அள்ளலாம் என நினைத்திருந்த வேளையில் இப்படி சோதனை வந்துவிட்டதே என்று ரஜினி வேதனைப்பட்டிருக்கலாம். ஆனால் எனக்குக் கொஞ்சம் ஆறுதல். நான் ரசிக்கும் மிகவும் திறமைமிக்க நடிகைகளில் தீபிகா ஒருவர். அவர் ராணா படத்தில் நடிக்கிறார் எனத் தெரியவந்ததும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். ஐஸ்வர்யா ராய்க்கு எந்திரனில் நேர்ந்த கதி தான் தீபிகாவுக்கும் நேரும் என்று தெரிந்ததால் வந்த வேதனை அது. எந்திரனில் ரஜினியின் கேரக்டர்தான் ரோபோ என்றாலும் உண்மையில் ஐஸ்வர்யாவின் பாத்திரம்தான் ரோப்போவாக்கப்பட்டிருந்தது. தீபிகாவை அப்படியொரு நிலையில் எண்ணிப்பார்க்க கஷ்டமாக இருந்தது. எப்படியோ நல்லவிதமாக ராணா சுருண்டுவிட்டது.
மரணம் நெருங்கிவிட்டதாகத் தெரியும்போது எந்தவொரு மனிதனுக்கும் ஞானக்கண் திறந்துகொள்ளும். ரஜினிக்கும் அப்படித்தான் ஆகியிருக்கிறது. தனது ரசிகர்களின் அன்பை நினைத்து அவர் உருகியிருக்கிறார்.அல்லது அப்படி பாவனை செய்திருக்கிறார். வாக்களித்துவிட்டு விலைவாசி ஏறிவிட்டது எனச் சொல்லி எந்த அணிக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை தனது ரசிகர்களுக்கு சமிக்ஞை காட்டினார் ரஜினி. அந்த நேரத்தில் அவர் தான் வாங்கும் சம்பளத்தையும் தான் நடித்து வெளியாகும் படங்களுக்கு ப்ளாக்கில் விற்கப்படும் டிக்கட்டுகளின் விலையையும் நினைத்துப் பார்த்திருக்கவேண்டும்.
எப்படியோ சிங்கப்பூருக்குப் போகும் முன்னால் ரசிகர்களுக்கு வெளியிட்ட ஆடியோ பதிவில் தனது ரசிகர்கள் தலை நிமிர்ந்து பெருமைப்படும் விதமாக நடந்துகொள்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். மரண பயம் வரும்போது பேசிய பேச்சாக அல்லாமல் அதை ஒரு வாக்குறுதியாக அவர் கருதுவாரேயானால் நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே கருதுகிறேன். அவருக்குக் ‘ க்ருபா’ தரும் கடவுளும் , குருவும் என்ன செய்தியை அவருக்குக் கூறியிருக்கிறார்களோ! பொறுத்திருந்து பார்ப்போம்.
மூன்றாம் இடுகை:
ரஜினி குறித்த பதிவுகளுக்கு முடிவு: (விரைவில் நீக்கப்படும்!)
http://nirappirikai.blogspot.com/2011/05/blog-post_31.html