Archive for ஃபேஸ் புக் குறிப்புகள்

அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

நேற்றைய வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழாவில் அசோகமித்திரன் பேசினார். நேற்று என்றல்ல, அசோகமித்திரன் எப்போதுமே ஒரு கறாரான பேச்சைப் பேசுவதில்லை. அது அவரது பாணியாக இருக்கலாம். ஆனால் அவரது கருத்து என்ன என்பதை ஒவ்வொரு நேயரும் ஒவ்வொரு விதமாக உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிவிடுகிறது என்பதே அதிலிருக்கும் அரசியல். எனக்குத் தெரிந்தவரையில் அசோகமித்திரன் இதைத் திட்டமிட்டே செய்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.

தன்னோடு எழுதவந்த தனக்குப் பின் எழுத வந்த தன்னை ஒத்த அல்லது தன்னைக் கடந்த எழுத்தாளர்களை முழுக்கப் பாராட்டுவதில் அவருக்குப் பெரிய தயக்கம் உள்ளது. மனத்தடை உள்ளது. இதுதானே இயல்பு என்று ஒருவர் சொல்லக்கூடும். ஒருவரைப் பாராட்டத் தோன்றும்போது முழுமையாகப் பாராட்டுவது பெரிய பிழையல்ல. அப்போதும்கூட அதில் ஒரு புள்ளி வைத்துப் பேசுவது தேவையற்றது. அது பேசுபவரின் அதீத தன்முனைப்பையே காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இதே அசோகமித்திரன் தனக்குப் பின் வந்த சில எழுத்தாளர்களை மனமாரப் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவர்களெல்லாம் அசோகமித்திரனை எவ்வகையிலும் தொடமுடியாதவர்கள், தாண்ட முடியாதவர்கள். ஆனால் அசோகமித்திரன் ஜெயமோகனைத் தன்னைத் தாண்டிவிட்ட ஓர் எழுத்தாளராக உள்ளே நினைக்கிறார். எனவே அவருக்கு ஜெயமோகனை முழுமையாகப் பாராட்டிவிடுவதில் சிக்கல் உள்ளது. பாராட்டத் துவங்கும்போதே, தப்பா நினைக்காதீங்க, நீங்க எல்லாம் கைதட்டறேள், நான் இல்லை என்று சொல்கிறார். ஒரு நாடகத்தில் இவர் நடித்தபோது தெரியாமல் இவரது மூக்குக் கண்ணாடி விழுந்துவிட அனைவரும் பிரமாதம் என்று கைதட்டினார்கள் என்கிறார். ஆனால் ஜெயமோகன் எழுதுவதைத் தடை சொல்லக்கூடாது என்று சொல்லி, வயதில் மூத்தவர் என்பதால் ஆசிகள் என்று சொல்லிவிடுகிறார். 30,000 பக்கம் எழுதினா பயமா இருக்கு என்று சொல்லிவிட்டு, தான் எழுதித் தள்ளிய கையெழுத்துப் பிரதிகள் குவிந்து கிடக்கின்றன என்கிறார். அசோகமித்திரனின் பிரச்சினை, ஜெயமோகன் அவரைத் தாண்டுவதை மனதார ஏற்றுகொள்ள முடியாமல் போவதே என்பதே என் முடிவு.

இத்தனைக்கும் அசோகமித்திரன் ஒரு மிகப்பெரிய படைப்பாளி. சாதனையாளர். எத்தனை காலம் தாண்டியும் வாழப்போகும் மிக நுணுக்கமான எழுத்து அவரது. அவருக்குரிய அங்கீகாரம் அவர் நினைக்கும் அளவுக்கு அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல. இப்போது என்றில்லை, அவர் யாரைப் பற்றிப் பேசினாலும் இப்படி ஒரு புள்ளி வைத்துப் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஜெயமோகனுக்கு கைத்தடிகள் இருப்பதாக சிலர் சொல்லுவதுபோலவே அசோகமித்திரனுக்கும் கைத்தடிகள் சிலர் உண்டு. அவர்கள் இதைச் சொல்லி சிலாகிப்பார்கள். என் காதாலேயே கேட்டிருக்கிறேன். அசோகமித்திரனின் பூடகமான விமர்சனத்தை ஊதிப் பெரிதாக்கி தங்கள் வயிற்று உபாதையை அவர்கள் தீர்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்களுக்குப் பொருத்தமானதுதான். ஏனென்றால் அவர்கள் எப்போதுமே ஜெயமோகனை உயர்ந்துதான் பார்க்கப் போகிறவர்கள். ஆனால் அசோகமித்திரன் முகத்தோடு முகம் பார்க்கத்தக்க ஒரு சாதனையாளர்கள். வயதும் கைவிடப்பட்ட தருணங்களும் தரும் சோகத்தை அசோகமித்திரன் வெல்லவேண்டும். அதற்கு நிஜமான சாதனையாளர்களாக அவர் மனம் அங்கீகரிக்கும் எழுத்தாளர்களைப் பாராட்டும் தருணம் வரும்போது மனமாரப் பாராட்டுவது ஒரு வழியாக இருக்கக்கூடும். கறாரான விமர்சனம் தேவைப்படும்போது அதையும் செய்துகொள்ளட்டும். அது அவர் தேர்வுதான். பாராட்டும்போதே ஒரு குறையைச் சொல்வதும், விமர்சிக்கும்போதே ஒரு பாராட்டைச் சொல்வதுமென இலக்கிய உலகின் ரஜினியாக அவர் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே வேண்டுதல்.

Share

விக்கிரமாதித்தனும் வேதாளமும் – கத்தியை முன்வைத்து

முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் என்றொரு அரசன் வாழ்ந்துவந்தான். தன் வாழ்நாளெல்லாம் வேதாளத்தைத் துரத்துவதே அவன் வேலை. அன்றும் அவன் துரத்தி அந்த வேதாளத்தைப் பிடித்து, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

“என்ன விக்கிரமா பேசாமல் வருகிறாய்?” என்று வேதாளம் கேட்டது. விக்கிரமாதித்தன் பதில் சொல்லாமல் வந்தான். பதில் சொன்னால் அவன் மௌனம் கலைந்து வேதாளம் மரத்திற்கு போய்விடுமல்லவா.

வேதாளம் தன் வழக்கம்போல் கதை சொல்லத் தொடங்கியது.

“விக்கிரமா, முன்னொரு காலத்தில் கத்தி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அது துப்பாக்கியின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளி வந்து பெரிய வெற்றி பெற்றது. படத்தை லைக்கா என்றொரு ராஜபக்ஷேயின் பினாமி நிறுவனம் தயாரித்ததாகக் குற்றம் கூறியவர்கள், என்னவோ டீலுக்குப் பின்னர் அமைதியாகிப் போனார்கள் என்றொரு பேச்சும் உண்டு. படத்தில் விவசாயிகளின் பிரச்சினையைக் காட்டியதால் என்ன செய்வது என்று குழம்பிப்போன கம்யூனிஸ்ட்டுகளும் தமிழ்த் தேசியவாதிகளும் கள்ளமௌனம் சாதித்து மெல்ல நழுவிப் போனார்கள். கடைசியில் ராஜபக்ஷே மூலம்தான் தமிழ்நாட்டில் புரட்சி வரவேண்டியிருக்கிறது என்றெல்லாம் அன்றைய தமிழர்கள் பேசிக்கொண்டார்கள். 

அதில் ஒரு வரி கம்யூனிஸம் பற்றி வரும். மிக யதார்த்தமான காட்சி அது. கம்யூனிஸம் படித்துக்கொண்டு ஃபிலிம் காட்டும் யாருக்குமே கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை தெளிவாகக் காண்பித்த காட்சி அது. ஆம், அந்த ஜீவானந்தமும் கம்யூனிஸம் என்றால் இட்லி சட்னி என்று விளக்கிய காட்சியைப் பார்த்து, இப்படி கிண்டலாவது செய்கிறார்களே என்று விரல்சூப்பிக்கொண்டு உத்சொ கொட்டியது கம்யூனிஸக் கூட்டம் என்பது வரலாறு.

அந்தப் படத்தைப் பற்றி பொதுவாக இப்படி கருத்து இருந்தது விக்கிரமா. படம் நன்று. குறிப்பாக விஜயின் நடிப்பு நன்றாக இருந்தது. ஷங்கருக்கு அடுத்தபடியாக ஷங்கரின் ஃபார்முலாவை வெற்றிகரமாகப் படமாக்கிய முருகதாஸ் பாராட்டுக்குரியவர்தான். சில காட்சிகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும், படத்தின் வேகத்தில் அது தெரியவில்லை. இறுதிக்காட்சி சண்டை மட்டுமே தாங்கமுடியாததாக இருந்தது. இப்படி மக்கள் பேசிக்கொண்டார்கள். அது ஒருவகையில் சரிதான் விக்கிரமா.

ஆனால் விக்கிரமா நான் கேட்கப்போவது இதைப் பற்றி அல்ல. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் விமர்சனம் எழுதித்தள்ளிய அன்றைய இணையவீரர்கள் யாருமே ஒன்றைக் கவனிக்கவில்லை.

மூன்று விவசாயிகள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்கள். அப்போது அவர்களின் கைவிரல் ரேகையில் மையைப் பார்க்க ஓடி வருகிறார் விஜய். முதல் பிணம் ஹிந்துப் பிணம். யாரிடமும் கேட்காமல் உரிமையாக அவரே பிணத்தைத் திறந்து கைவிரலில் மை இருக்கிறதா என்று பார்க்கிறார். இரண்டாம் பிணம் இஸ்லாமியப் பிணம். அங்கே ஓடுகிறார் விஜய். பேஸ்த் அடித்து நின்றுவிடுகிறார் விக்கிரமா. ஆம். அங்கே இருக்கும் இஸ்லாமிய உறவினர்களிடம் அனுமதி கேட்டு கைவிரலைப் பார்க்கிறார். ஏன் விக்கிரமா இப்படி?

இதுமட்டுமல்ல. ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஹிந்து விவசாயிகள் சாகும்போது ஹிந்துமதம் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாமிய விவசாயி சாகும்போது மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சாகிறார். ஹிந்து மதம் செத்துப் போவதற்குப் பெத்துப் போட்டதா விக்கிரமா?

இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. ஏன்? ஆனால் விக்கிரமா இதற்கான பதில் உனக்குத் தெரியும். ஆனால் இந்தமுறை நம் விளையாட்டில் ஒரு விதிமுறை மாற்றம் விக்கிரமா. உனக்குப் பதில் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பதிலைச் சொன்னால் உன் தலைவெடித்துச் செத்துப் போவாய். நான் ஓடிப்போய் மரமேறிக் கொள்வேன். பதில் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தால் நான் உன்னுடன் வந்துவிடுவேன். உன் கோடானகோடி தேடல் முடிவுக்கு வரும் என்றான்.

நொடி யோசித்தான் விக்கிரமன். மெல்லப் புன்னகைத்தான். “வேதாளமே, என் தலைவெடித்தாலும் பரவாயில்லை. நான் பதில் சொல்லியே தீருவேன். இந்த நோயின் பெயர்…” என்று சொல்வதற்குள் அவன் தலை சுக்கு நூறாக வெடித்தது. வேதாளம் ஓடிப்போய் மரத்தின் மேலேறி அமர்ந்துகொண்டு லூசுப்பய என்றது.

Share

பாலகுமாரனை நினைத்து

நவம்பர் அந்திமழை மாத இதழ் தொடர்கதை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. (கமல் 60 சிறப்பிதழும்கூட!) அதில் மெர்க்குரிப்பூக்களை முன்வைத்து நான் எழுதிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது. ஓர் இதழின் விலை 20 ரூபாய் மட்டுமே. வாங்கிப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவும்.

நீண்ட நாள் கழித்து பாலகுமாரனின் ஒரு நாவலை வாசித்தபோது, மனத்தில் பல்வேறு பழம்நினைவுகள் என்னை அலைக்கழித்தன. அன்று பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று நினைத்த நிமிடங்கள் இன்று அப்படி இல்லை என்றாகிப்போன மாற்றமே அதன் முக்கியப் புள்ளியாக இருந்தது. அதை ஒட்டி எழுந்த எண்ணங்களில் சிதறல்களை எழுதி வைத்தேன். அவை:

பாலகுமாரனின் பிரச்சினைகள் – எதையும் அதன் ஆழத்துக்குள் சென்று பரிசீலனைக்குட்படுத்தாதது. எல்லா ஆண் பெண் உறவுகளிலும் ஒரு செக்ஸ் எலிமெண்ட் எப்படியாவது இருந்துவிடுவது. அதிலிருந்து வெளிவர பெண்ணை தெய்வமாக்க முயல்வது. பெண்கள் ஆண்கள் என எல்லோரும் தத்துவார்த்தப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்வது. மெல்ல எப்படியாவது ஜாதிய சிந்தனை இருந்தே தீரும் என்று தொடர்ந்து பின் நின்று சொல்வது. இவை எல்லாவற்றிலும் அவர் ஆழம் போயிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு கேஸ் ஸ்டடியாகி இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூன்று மேலோட்டமான முடிவுகளுக்கு அவர் வந்தார். ஆண் பெண் உறவுகளில் செக்ஸ் அதற்குப் பின்னான வருத்தம், தத்துவார்த்தப் பிரச்சினைகளில் மிகவும் மேலோட்டமான எரிச்சலான தன்னிரக்கம், ஜாதிய சிந்தனைகளில் அவரது பிற்போக்குத்தனம் இவையே அவரை தேங்க வைத்தன. இதே மேலோட்டமான வேகத்தில் அவர் ஆன்மிகத்துக்குப் போனார். எனக்கு ஆன்மிகம் பற்றி அதிகம் பரிச்சயமில்லை. ஆனால் ஆன்மிகத்தை இவர் எழுதியதை வாசித்தபோது அவற்றிலும் ஒரு அவசரத்த்னமையும் தனது வாசகர்களைத் தான் செல்லும் திசைக்குத் திருப்பிக்காட்டவேண்டும் என்கிற வேகமும் முடியும் என்கிற மமதையும் மட்டுமே தென்பட்டன.

ஆனால் என் பால்யம் முழுக்க பாலகுமாரனே நிறைத்துக் கிடந்தார். அதில் காமத்தை பெரும்பாலும் தன் எழுத்துகள்மூலம் அவரே கட்டமைத்தார். ஒவ்வொரு இளைஞனும் வெறும் காமம் பற்றியே பேசும்போது அவர் எனக்குள் ஒரு விஸ்வரூபம் எடுத்தார். பல நாள்களில் பல நேரங்களில் நான் பாலகுமாரனுடன் மானசீகமாகப் பேசினேன். எனக்கு குருக்கள் என்று யாரும் இன்றுவரை இல்லை. ஆனால் மானசீகமாக என் வாழ்க்கையை பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களே வடிவமைத்தார்கள். அந்தவகையில் பாலகுமாரனிடன் எனக்கு எப்போதும் ஒரு மென்மை உண்டு. எப்போதும் நான் அவரை நோக்கிக் கைக்கூப்புவேன்.

பாலகுமாரனின் மயக்கத்தை சுஜாதா போக்கடித்தார். சுஜாதாவிடமிருந்து ஜெயகாந்தன் என்னைக் கொண்டு போனார். இவர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரக் கடாச வைத்தார் ஜெயமோகன். ஆனால் இன்று நோக்கும்போது இவர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் எத்தனை முக்கியமானவர்கள் என்று தெரிகிறது. அதிலும் சுஜாதாவின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. ஜெயமோகன் எங்கேயோ போய்விட்டார். 

பாலகுமாரனின் பெண்களை மிகக் கறாராக வரையறுத்தால், உணவாலும் உடலாலும் ஒரு ஆணைக் கட்டிப்போட முடியும், முடியவேண்டும் என்று சொல்பவர்களாகவே இருந்தார்கள். ஆணிடம் ஒரு பெண் தோற்கும்போது அவர்கள் காமத்தை அனுபவமாக்கியே க்டந்தார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு நொடியில் வீட்டுப் பெண்ணே என்று காண்பிக்க பாலகுமாரன் தவறுவதில்லை. அதேபோல் எந்த ஒரு நொடியிலும் ஒரு வீட்டுப் பெண் பல தளங்கள் உயர்ந்து வெற்றிப் பெண்ணாக வலம்வர வைக்கவும் அவர் தவறுவதில்லை. என்ன, இவை இரண்டுமே நொடிநேர மின்னல்களாக நிகழ்ந்துவிடுவதுதான் சோகம். இதற்கேற்ற ஆழமான காரணங்களோ சம்பவங்களோ இருப்பதில்லை. அப்படி ஒரு பெண்ணால் மாறமுடியும் என்ற ஒற்றைக் காரணம் எல்லா நாவல்களிலும் பாலகுமாரனுக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது.

அனல்காற்று ஜெயமோகன் எழுதியது. பாலகுமாரனின் கதை போன்ற ஒன்றுதான். ஆனால் அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அனுபவங்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் மனத்தில் அப்படியே நிர்வாணமாக்கி நிற்கவைப்பவை. ஆணின் எல்லையையும் பெண்ணின் எல்லையையும் அவர் தொட்டிருக்கும் அற்புதம் வாசித்தால்தான் புரியும். அனல்காற்று நாவலில் பல இடங்களில் நாம் பாலகுமாரனை நினைவுகூர்வோம். ஆனால் பாலகுமாரனால் செல்லவே முடியாத அலசல்களை ஜெயமோகன் நிகழ்த்திக்கொண்டிருப்பார்.

அனல்காற்று ஜெயமோகனின் நாவல்களில் ஒன்றாக வைக்கத் தக்கதல்ல. அத்தனை ஆழமான அலசல்களை மீறியும் அது ஒரு சுமாரான நாவலே. ஆனால் அது ஒரு திரைக்கதையாக எழுதப்பட்டது என்பதை மனத்தில் வைத்தே படிக்கப்படவேண்டும். சட்டென தெளியும் நிலையில் வரும் உறவு விவரணைகளில் உண்மையில் நான் மிரண்டுவிட்டேன்.

Share

ஈவெராவின் ‘பொன்மொழிகள்’

பி.ஏ. அனந்த கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் குறித்து வைத்த இந்தப் பொன் மொழிகளை சேமிப்புக்காகப் பகிர்ந்து வைக்கிறேன்.

 

பெரியாரின் சில பொன்மொழிகளைப் படிக்க நேர்ந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. பார்ப்பனரில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாக இருக்கிறது?

அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை அறையில் அனுமார் படத்தை வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாக இருக்கிறது.

 

2. பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்சத்திற்குப் போய் விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

கடவுள் இருக்கிறார். போதாக்குறைக்கு தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

 

எனது பதில்: ஈவெராவின் நினைவிலி மனத்தில் இருப்பவை இவையே. வெளியில் போட்டதெல்லாம் வேஷம். இவரின் தொடர்ச்சியே இன்றைய தமிழ்நாட்டின் சீரழிவு.

மேலதிக விவாதங்களைப் படிக்க: https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/982137541812430?fref=nf&pnref=story

Share

யமுனாவின் மேற்கோள் அரசியல்

ஃபேஸ்புக்கில் போட்டது, சேமிப்புக்காக இங்கே.

/உலோகம் ஒரு கார்ப்போரேட் காக்டெயில் நாவல். ‘தமிழின் முதல் சைக்கலாஜிகல் திரில்லரான’ சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவே, ‘அரபு தேசக் கதைக்களனுடன் அதகளப்படுத்தும் திரில்லரான’ ராம் சுரேஷின் பழி, பாவம், படுக்கையறை, ‘பர்மா பஜார் நிழல் உலகைப் பதைபதைக்கச் சுற்றிவர’க்கோரும் யுவ கிருஷ்ணாவின் அழிக்கப் பிறந்தவன், ‘இங்கிலாந்து உளவாளியின் மயிர்க்கூச்செறியும் அட்டகாசங்கள் நிறைந்த’ தரணியின் ஓடு, ஓடு, ஒளி போன்ற ‘அட்டகாச’ திரில்லர்கள் வரிசையில், ‘கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டுவந்து’ ஜெயமோகன் உலோகம் எழுதியிருக்கிறார்.

தயவு செய்து குபுக்கெனச் சிரித்துவிட வேண்டாம். சத்தியமாக மேலே இருக்கிற நாவல்கள் குறித்த வர்ணனைகளை நான் எழுதவில்லை. கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை. இந்த நாவல்களின் பண்புகளுடனான உணர்ச்சிகமான திரில்லர் சமச்சாரங்களுடன் அங்கங்கே ஜெயமோகனுக்கு ஈழம் குறித்துத் தெரிந்த இலக்கியம் இலக்கியவாதிகள் அவர்களுக்குச் சுந்தர ராமசாமியுடன் இருந்திருக்கக்கூடிய உறவுகள் போன்றவற்றுடன உருவாகியிருக்கிற சுத்த இலக்கியக் காக்டெயில் யுனிக் நாவல்தான் உலோகம்.//

இப்படி யமுனா ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.

ஆனால் உலோகம் பின்னட்டையில் உள்ளவை –

”உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. த்ரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தைக் கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு த்ரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணர வேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம், கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம், அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு முடிச்சைப்போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த த்ரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக்கூடியது. ஈழத்தோடு தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்க முடிகிறது.”

புத்தகத்தின் உள்ளே, உள் முன்னட்டையில் நில்லுங்கள் ராஜாவே மற்றும் பழிபாவம்படுக்கையறை நாவல்கள் பற்றிய விளம்பரங்கள் உள்ளன. உள் பின்னட்டையில் அழிக்கப் பிறந்தவன், ஓடு ஓடு ஒளி நாவல் பற்றிய விளம்பரங்கள் உள்ளன.

ஆனால் யமுனா ராஜேந்திரன் சொல்வது: ”கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை.”

 

எப்படி யமுனாவால் ஒரு விஷயத்தை திரித்து எழுதமுடியும் என்பதற்கு இது உதாரணம். நான்கு விளம்பரங்கள், பின்னட்டையில் உள்ள வாசகத்தை ஒன்றாக்கி, சில வரிகளில் கோட் போட்டுவிட்டு, என்னவோ கிழக்கு பதிப்பகம் அப்படி எழுதியது போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டுவருவது மூலம் இவர் சாதிக்கப் போவதென்ன என்று தெரியவில்லை.

 

 

யமுனா ராஜேந்திரனின் வலைத்தளம்: http://yamunarajendran.com/?p=1035

Share

ஜெயமோகனின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதலாம் கட்டுரை தொடர்பாக

லத்தின் வரிவடிவில் தமிழை எழுதலாம் என்று ஜெயமோகன் சொன்னார். நிச்சயம் அது எனக்கு ஏற்புடையதல்ல. தமிழ் என்னும் மொழியின் அழிவாகவே இது அமையும் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஆனால் இந்தக் கருத்தைச் சொல்ல, ஒரு விவாதத்தை உருவாக்க யாருக்கும் உரிமையுள்ளது. சொன்னது ஜெயமோகன் என்பதற்காகவே இந்த விவாதம் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று பார்க்கும்போது எரிச்சலே மிஞ்சுகிறது. மனநோயாளி, மலையாளி, தமிழை அழிக்கப் பார்க்கிறார், அவரது புத்தகத்தை இப்படி வெளியிடவேண்டியதுதானே, அவரது வலைத்தளத்தை இப்படி நடத்தவேண்டியதுதானே, சம்ஸ்கிருதத்தை இப்படிச் சொல்வாரா, மலையாளத்தைச் சொல்வாரா, தன் கவன ஈர்ப்புக்காகச் செய்கிறார் என்பது போன்ற சில்லுண்டித்தனமான எதிர்வினைகளே முன்வைக்கப்பட்டன. 

நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனிடம் ஒருமுறை, கருணாநிதி இலக்கியவாதியல்ல என்று சொல்லிவிட்டீர்களே என்று கேட்டேன். நான் எதைச் சொன்னாலும் அது குறித்து நூறு பக்கங்களாவது என்னால் எழுதமுடியும் என்றால்தான் சொல்வேன் என்றார். இன்றுவரை அவர் அப்படியேதான் இருக்கிறார். வெறும் கவன ஈர்ப்புக்காக எதையும் சொல்லிவிட்டு அவர் ஓடி ஒளிவதில்லை. அவர் நம்பும் கருத்துகளையே அவர் சொல்கிறார். அது கவன ஈர்ப்பாகவும் அமைந்துவிடுவது அவரது சிறப்பு. இதைக் கருத்தால் எதிர்கொள்ள வழியில்லாதவர்களே அவரை வேறு வழிகளில் ஏசத் தொடங்குகிறார்கள்.

சிலர் ஒரு படி மேலே போய் இது ஜெயமோகனின் கருத்து அல்ல, அவர் காப்பி அடிக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த விவாதத்தை ஒழுங்காக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. ஜெயமோகனின் காப்பி என்பதோடு அவர்களும் நின்றுகொண்டார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்தேதான் ஜெயமோகன் முன்பே எதிர்வினையை எழுதி வைத்ததாகச் சொல்லி ஒரு பதிலை அவரது தளத்தில் வெளியிட்டார். வழக்கம்போல அந்தப் பதிலில் அவரது விவாதத்துக்கு மேம்போக்காகப் பதில் சொன்னவர்களை இடது கையால் நிராகரித்திருந்தார். 

இன்று தி தமிழ் ஹிந்துவில் வரும் செய்தியைப் பார்த்தபோது ஜெயமோகனின் இடதுகை நிராகரிப்பு சரிதான் என்று நினைக்க வைக்கிறது.

தமிழறிஞ்சர்கள் ஒன்றுகூடி கண்டுபிடித்தது, ஜெயமோகன் மலையாளி, நாயர், தமிழின் உடலை அழித்து மொழியை அழிக்கப் பார்க்கிறார் என்பதுதான். யாராவது எதாவது பதிலடி கட்டுரைகளைத் தந்திருக்கிறார்களா என்றால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. 

இந்த தமிழறிஞ்சர்கள் நாயர் என்ற சாதிக் கண்டுபிடிப்பை வெளிப்படுத்த எந்தத் தகுதியாவது இருக்கிறதா என்று அவர்களை அவர்களே கேட்டுக்கொள்வது நல்லது. ஜெயமோகனை நாயராகத்தான் பார்ப்பார்கள் என்றால், அந்த ’நாயர்’ அளவுக்கு எந்த நாயகராவது (நாகரிகத்தொடை கருதி இப்படி எழுதவேண்டியிருக்கிறது) தமிழுக்குப் பங்களிப்பு அளித்திருப்பார்களா என்ன? ஜெயமோகனின் தமிழ்ப் பங்களிப்பு வார்த்தைகளில் அடங்காதது. இதே வேகத்தில் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தால், காந்திக்கும் அம்பேத்கருக்கும் அடுத்து எழுதிக் குவித்தவர் ஜெயமோகனாகவே இருப்பார் என்று நினைக்கிறேன். எனவே அவர் தமிழ் பற்றிப் பேசவும் விவாதத்தை முன்னெடுக்கவும் சகல தகுதியும் உள்ளவர். நாயர் உள்ளிட்ட சாதிகளை இவர்கள் புறக்கணிக்கத் தொடங்கினால், அவர்கள் அதை நீதிக்கட்சியின் வரலாற்றில் இருந்து தொடங்கட்டும். பிறமொழி வெறுப்பில் இருந்து தொடங்கினால் அதை ஈவெராவில் தொடங்கட்டும். 

சில ஃபேஸ்புக் டிவிட்டர் இடுகைகள் இன்னும் கேவலமானதாக இருந்தன. இதே கருத்தை ஜெயமோகன் மலையாளத்துக்கோ கன்னடத்துக்கோ சொல்லியிருந்தால் அவரை முட்டி போட வைத்திருப்பார்கள் என்ற கருத்தெல்லாம் சொல்லப்பட்டன. ஒரு கருத்தைச் சொன்னதற்காக முட்டி வைக்கப்படவேண்டும் என்பது பாசிஸம். இதை யார் எந்த வடிவில் எந்த சாதி மதப் போர்வையில் செய்தாலும் அதைக் கண்டிக்கவே செய்யவேண்டும். மலையாளிகளும் கன்னடர்களும் அப்படி நடந்துகொண்டால் அவர்களது கண்மூடித்தனமான வெறியைத்தான் நாம் கண்டிக்கவேண்டுமே அன்றி, அப்படித் தமிழர்கள் நடந்துகொள்வதில்லை என்பது தமிழர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று அவர்களைக் கொண்டாடவேண்டுமே அன்றி, தமிழர்கள் இப்படி நடந்துகொள்ளவில்லையே என்று நொந்துகொள்ளக்கூடாது. பக்குவம் என்பது நாம் தொடர்ந்து முதிர்ச்சி அடைவதில்தான் உள்ளது, அன்றி வன்முறையாக ஒரு கருத்தை முடக்குவதில் அல்ல.

அ.மார்க்ஸ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படி மேலே போய் இது ஆர் எஸ் எஸ் சார்பு என்று சொல்லியுள்ளார். ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்துக்குமான வரிவடிவம் தேவநாகரியாக இருக்கவேண்டும் என்பது ஆர் எஸ் எஸ் கொள்கையாம். வட இந்திய வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் மதமாற்றம் நிகழ்ந்தபோது, கிறித்துவ அமைப்புகள் மிகவும் உக்கிரமாக அங்கிருந்த வட்டார மொழிகளின் வரிவடிவத்தை அழித்து, அவற்றை லத்தின் வரிவடிவில் எழுத வற்புறுத்தினார்களாம். இதை ஒரு நண்பர் சொன்னார். இதை வைத்துக்கொண்டு பார்த்தால், ஜெயமோகன் செய்தது அப்பட்டமான ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு விவாதம்! ஆனால் மார்க்ஸோ இதை ஆர் எஸ் எஸ் ஆதரவு என்கிறார்! விநோதம்தான். மதமாற்றக் கும்பல்கள் செய்த வரிவடிவ அழிப்பைப் பற்றி அ.மார்க்ஸ் எதுவும் பேசப்போவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

மதமாற்ற இங்கே வந்து தமிழறிஞராகக் கொண்டாடப்படும் வீரமாமுனிவரையெல்லாம் விட்டுவிட்டு, உண்மையில் தமிழுக்குப் பெரிய பங்களிப்பை அளித்துக்கொண்டிருக்கும் ஜெயமோகனை மதவாதி என்பதுதான் இவர்கள் ஞானத்தின் உச்சம்.

இன்றைய தி தமிழ் ஹிந்துவில் தமிழறிஞ்சர்கள் கூட்டமைப்பு கொடுத்த அறிக்கையில் ஒரு விஷயம், பிராமி என்பது தமிழின் மூலமல்ல, அது வேறு; தமிழ்பிராமி வேறாம். முதல் குரங்குக்குத் தொத்தாமல் இருக்க இவர்களால் முடியாது.

தமிழறிஞ்சர்களின் எதிர்வினை இங்கே.

ஜெயமோகனின் கட்டுரை இங்கே.

ஜெயமோகனின் எதிர்வினை இங்கே.

அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகை இங்கே.

Share

ஞாநி, அ.மார்க்ஸ், மோதி, படேல், தி தமிழ் ஹிந்து

படேலின் இறுதி ஊர்வலத்தில் நேரு கலந்துகொள்ளவில்லை என்று மோதி சொன்னதாகவும் அது தவறான செய்தி என்றும் ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கடுமையாக விமர்சித்து ஞாநி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடிருந்தார். இன்றைய தமிழ் தி ஹிந்துவில் அ.மார்க்ஸும் இதைப் பற்றி மிகவும் எள்ளலாக ஒரு வரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இப்படி மோதி சொல்லவே இல்லை. அப்படிச் சொன்னதாக செய்தி வெளியிட்ட திவ்யபாஸ்கர் தினசரி தான் சொன்னது தவறு என்றும் சொல்லிவிட்டது. தவறாகச் சொன்னதை ஒப்புக்கொண்டுவிடும்போது சொன்ன தவறு சிறியதாகிப் போய், பெருந்தன்மை மேலெழுந்துவிடுகிறது. ஆனால் இதே தவறை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக்கப் பார்க்கிறார்கள். தி தமிழ் ஹிந்து நாளிதழ் வரை இந்தப் பொய் பிரசாரம் வந்தாகிவிட்டது. இனி சில வருடங்கள் கழித்து  இதுவே அதிகாரபூர்வ செய்தியாகிவிடும். மீண்டும் மீண்டும் இதையே நிரூபணமாகக் காட்டுவார்கள்.

மோதி வெற்றிபெற்றுவிடுவாரோ என்னும் பயம் இவர்களையெல்லாம் எப்படி ஆட்டுவிக்கிறது பாருங்கள்.

ஞாநியின் ஃபேஸ்புக் பக்க ஸ்டேட்டஸின் லின்க்: https://www.facebook.com/gnani.sankaran/posts/10201577288946767

அ.மார்க்ஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் மூஞ்சாவைப் பற்றி அவன் இவன் என்று ஏக வசனத்தில் குறிப்பிட்டிக்கிறார். பேராசிரியரின் மொழி இது. ஹிந்துத்துவர்களும் இப்படிப் பேசுவது உண்டு. நான் இல்லை என்று பொய் சொல்லமாட்டேன். நிச்சயம் ஹிந்த்துத்துவர்கள் இப்படிப் பேசுவது அநாகரிகம். ஆனால் இந்த அநாகரிகத்தை உலகமே கண்டுபிடித்துச் சொல்லும். திட்டும். ஆனால் அதே உலகம், அ.மார்க்ஸ் போன்ற பேராசிரியர்கள் இப்படிப் பேசும்போது கள்ளமௌனம் சாதித்துவிட்டுக் கடந்து செல்லும்.

இந்த ஃபேஸ்புக் இடுகையில், மூஞ்சே முசோலினியைப் பார்த்துவிட்டுப் பாராட்டியதாகச் சொல்லியிருக்கிறார் அ.மார்க்ஸ். கள்ள மௌனத்துக்கு இன்னொரு உதாரணம் இந்த இடுகை. அ.மார்க்ஸ் பாராட்டும் காந்தியாரும் முசோலினியைப் பார்த்து, முசோலினியைப் பாராட்டியிருக்கிறார். இதே அளவுகோலில் காந்தியாரை ஏன் அ.மார்க்ஸ் அவன் இவன் என்று பேசவில்லை? இத்தனைக்கும் காந்தி முசோலினியைச் சந்திக்கக்கூடாது என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தன. அத்தனையையும் புறக்கணித்திருக்கிறார் காந்தி. அதோடு முசோலினியைப் பாராட்டியும் இருக்கிறார் காந்தி. எப்படி முசோலினியைப் பாராட்டலாம் என்று கேட்கப்பட்டபோது, வன்முறைக்காக முசோலினியை எதிர்க்கவேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும்தானே எதிர்க்கவேண்டும் என்ற ரீதியில் பதில் சொன்னாராம் காந்தி. (இது பற்றிய ஆதாரங்களை நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். கிடைத்ததும் உள்ளிடுகிறேன்.) காந்தியார் உட்பட இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற அனைவரும் முசோலினியைச் சந்தித்திருக்கிறார்கள். இன்று மோதியைக் கட்டம்கட்ட எங்கே இருந்து எப்படி வரலாற்றை திரித்துக்கொள்கிறார்கள் பாருங்கள்.

அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகைக்கான லிங்க் இங்கே.

நேருவை மோதி வெறுப்பதில் என்ன வியப்பு கட்டுரை லின்க் இங்கே.

டிவிட் லாங்கர் லின்க்: http://www.twitlonger.com/show/msqcbi

 

gnani facebook status

amarx facebook status

twit longer image

Share

கருணாநிதியின் கண்ணியம்

கருணாநிதி ஜெயலலிதாவைப் பற்றி இப்படிப் பேசியிருக்கிறார். ஜெயலலிதா என்ன பேசினார் என்று தெரியவில்லை. அதுவும் இதுபோன்ற ‘கண்ணியத்துடன்’ இருந்தால் அதையும் இங்கே பகிர்வேன். பொதுவாக ஜெயலலிதா அடிக்கடி கண்ணியக்குறைவாகப் பேசுபவர் அல்ல. அவர் கண்ணியம் தவறிப் பேசியது என்று யோசித்துப் பார்த்தால், சென்னா ரெட்டியைப் பேசியது நினைவுக்கு வருகிறது. வேறு ஏதேனும் இருந்தால் இங்கே கமெண்ட்டில் சொல்லவும். கருணாநிதி பேசிய கண்ணியமற்ற வரிகளைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போடலாம் என்று நினைக்கிறேன்.

பெண்ணென்றால் என்னவும் பேசலாம் என்பதை இதில் பார்க்கிறேன். நடிகைகளுக்கு மட்டுமல்ல, முதலமைச்சரே ஆனாலும் பெண்ணென்றால் இளக்காரம்தான். பெண்ணிய செலக்டிவ் அறச்சீற்றங்களில் இது வராது என்பது கூடுதல் தகவல்.

கருணாநிதி ஃபேஸ்புக்கில் எழுதியது:

நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு """"நடுங்கா நாக்கழகி"" என்று பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.

ஃபேஸ்புக் லிங்க்: https://www.facebook.com/Kalaignar89/posts/672757329403142

ஸ்கிரீன் ஷாட்:

ஜெயலலிதாவின் இந்த அறிக்கையைத் தொடர்ந்தே கருணாநிதி இப்படிப் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=712695455427166&id=182480735115310

Share