Archive for ஃபேஸ் புக் குறிப்புகள்

ரூபெல்லா தடுப்பூசியும் வாட்ஸப் முட்டாள்களும்

என் மகனும் மகளும் படிக்கும் பள்ளியில் இன்று ரூபெல்லா தடுப்பு ஊசி போடப்பட்டது. நான்கு நாள்களுக்கு முன்பே ஊசி போடச் சம்மதம் என்று ஒரு படிவத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்கள். நேற்று அழைத்து, இன்று ஊசி போட வரச் சொன்னார்கள். அழக்கூடாது மஹி என்று அவளை அழைத்துகொண்டு சென்றேன். சாக்லேட் வாங்கித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டாள். அபிராமுக்கு இன்று ப்ரவீன் பூர்வார்த் பரிட்சை என்பதால் அவனுக்கு ஊசி போடவில்லை. அடுத்த முகாமில் போடவேண்டும்.

பள்ளியில் கூட்டமே இல்லை. நான் 8 வயதில் இருக்கும்போது காலரா தடுப்பூசி போட்டார்கள். அப்போதும் இதேபோல் ஒரு வதந்தி இருந்தது. காலரா ஊசி போட்டால் கண்ணு போகுதாம், காது போகுதாம், அதுவா டாம் டாம்னு வெடிக்குதாம் என்ற வதந்திகளை மீறி மக்கள் சாரை சாரையாக வந்து வரிசையில் நின்று போட்டுக்கொண்டார்கள். சேரன்மகாதேவியில் நாங்கள் குடி இருந்த தெருவில் எங்கள் வீட்டுக்கு எதிரே தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விழா போல நடந்தது. ஊர் நண்பர்கள் குழந்தைகளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து ஊசி போட்டார்கள். ஊசி போட்டால் ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள். காய்ச்சல் நிச்சயம் வரும் என்றார்கள். காய்ச்சல் வந்தால் 2 நாள் பள்ளிக்கு மட்டம் போடலாம் என்ற என் ஆசையில் மண் விழுந்தது. சரியாக எனக்கு மட்டும் காய்ச்சலே வரவில்லை. நம் வாழ்க்கையில் இப்படி ஒரு தோல்வியா என்று நான் துக்கித்துக் கிடந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் 40 வயது மாமாவுக்கும் அத்தைக்கும் கை வீங்கி அதற்கு தனியே மருத்துவம் பார்க்க ஹைகிரவுண்டு போனார்கள்.

இன்று வாட்ஸப் ஃபேஸ்புக் காலம். விவஸ்தையே இல்லாமல் புரளிகள் மட்டுமே உண்மை என்று சுற்றி வரும் காலம். எவ்வித யோசனையும் இன்றி, காசா பணமா என்று எல்லாவற்றையும் ஃபார்வெர்ட் செய்து பெருமை பீற்றிக்கொள்ளும் முட்டாள் கூட்டம். எதை அனுப்புகிறோம், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் எந்த யோசனையும் கிடையாது. மீம்ஸா அனுப்பு. செய்தியா அனுப்பு. எதையும் யோசிக்க நினைப்பதில்லை. யோசிக்க கொஞ்சம் மூளையும் அவசியம் என்பதால் இப்பிரச்சினை. இதில் உச்சம் என்னவென்றால், இதையே செய்தியாக நம்பி வெளியிடும் பத்திரிகைகளில் பொறுப்பற்ற மூடத்தனம். இதனால் இப்பிரச்சினை இன்னும் கூடுதல் சிக்கல் கொள்கிறது. இன்னும் அதிகம் பகிரப்படுகிறது. வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கின் புரளிகளின் ஆதாரம், ரூபெல்லா தடுப்பூசிக்கு வந்திருக்கும் பயம்.

அரசு கரடியாகக் கத்தினாலும், புத்தி உள்ளவர்கள் இதன் தேவை பற்றிக் கதறினாலும், இவர்களின் செயல்பாட்டைவிட லட்சம் முறை அதிகம் பேசப்படுவது புரளிகளே. இந்த ஒட்டுமொத்த தடுப்பூசிகளினால் ஏற்படும் நன்மை என்ன, தேவை என்ன என்பதன் விவாதம் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை முன்னெடுக்கும் விதம், இதைப் போட்டால் உயிர் போய்விடும் என்ற ரீதியில் அல்ல. இதனால் பயந்துபோய் பலர், பெருவாரியானவர்கள் ஊசி போடவில்லை.

இன்று பள்ளியில் பேசிக்கொண்டிருந்தபோது, 40 பேர் உள்ள வகுப்பில் 5 பேர்தான் போடச் சம்மதித்திருக்கிறார்கள். பலருக்கு வாட்ஸப்பில் வந்த வதந்தியால் பயம். இவர்கள் புத்திசாலித்தனமான வாதமாகச் சொல்வது, “அது பொய்யாவே இருக்கட்டும். ஆனாலும் எதுக்கு ரிஸ்க்?” என்பது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.

மிகச் சொற்ப அளவில் வந்திருந்த குழந்தைகளுக்கே இன்று ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. போட்டவுடன் ஒரு அறையில் அரை மணி நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். அப்வர்வேஷனில் இருக்கவேண்டும் என்றார்கள். இதெல்லாம் வாட்ஸப்பின் கைங்கர்யம்தான். அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு, நர்ஸுகளுக்கு நன்றி சொல்லிவிட்டு மஹியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.

“என்னப்பா வீட்டுக்கு போகாம எங்க போற?” என்றாள் மஹி. “சாக்லெட் வாங்க” என்றதும், அவள் சொன்னது. “என்னப்பா நீ. நெஜமாவே வாங்கித் தர! மிஸ்ஸெல்ல்லாம் நாங்க சேட்டை செஞ்சா டார்க் ரூம்ல போடுவோம்னு சொல்லுவாங்க. ஆனா போடவே மாட்டாங்க. எங்களுக்கெல்லாம் நல்லா தெரியும் அவங்க போடமாட்டாங்கன்னு. ஆனாலும் நாங்கள்லாம் அப்படியே பயந்து போய் அமைதி ஆயிடுவோம். நீ என்னடான்னா சாக்லெட் வாங்கித் தர!”

🙂

Share

ஆண்டாள் குறித்து வைரமுத்து – விவகாரம்

ஆண்டாள் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரை மோசமானது. திடீர் இலக்கிய ஞானத்தால் ஏற்பட்ட சறுக்கல். மதங்கள் பற்றியும் ஹிந்து மதம் பற்றியும் வைரமுத்து எழுதி இருப்பது எல்லாமே அபத்தம். இதை மிக எளிதாகவே ஹிந்து நண்பர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். ஜடாயு தமிழிந்துவில் (தமிழ் தி ஹிந்து அல்ல) இதுபற்றி கட்டுரை எழுதி இருக்கிறார்.

ஆனால் கோபம் கொண்டு வைரமுத்துவை வசை பாடுவது, வைரமுத்து சொன்னதிலும் தரம் தாழ்ந்து போவதோடு, வைரமுத்து சொன்னதே பரவாயில்லை என்கிற எண்ணத்தைக் கொண்டு வரும். கடுமையாக எதிர்கொள்வதற்கும் கேவலமாக எதிர்கொள்வதற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதவரை, அடுத்தவர்கள் நம்மீது செலுத்தும் வசையைக் குறை சொல்ல நமக்கு தார்மிகத் தகுதி இல்லை.

ஒருவர் ஒன்றை உளறினால் பதிலுக்கு அவருக்கு உரைக்கவேண்டும் என்ற நோக்கில் அவரது தாயை வசைபாடும் போக்கு ஆபாசமானது. பெண்ணை வசைபாடும் ஆண் மனப்பான்மையை முதலில் கைவிடுவதே நாம் அடிப்படையில் கற்றுக் கொள்ளவேண்டியது.

இப்படிக் கேவலமாகப் பேசி பதிலடி தருவதும் ஒரு தரப்பு என்று சிலர் சொல்லக்கூடும். அதைப் புரிந்துகொள்கிறேன், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற மதங்கள் பற்றி ஒரு நாளும் வைரமுத்து இப்படிப் பேசிவிடத் துணிய மாட்டார் என்பது உண்மைதான். அந்த இடத்தை அடையவே இப்படியான எதிர்வினை என்பதும் புரிகிறது. இப்படித்தான் அடைய முடியுமானால் அந்த இடத்தை அடையவும் வேண்டுமா என்ன.

(ஜனவரி 10)

வைரமுத்து ஆண்டாள் பிரச்சினை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் பாரதி ராஜா. இது கிட்டத்தட்ட கொலை மிரட்டல். ஜாதிய ரீதியிலான தாக்குதல். திராவிட இயக்கங்கள் கற்றுக்கொடுத்த, பிராமணர் தமிழர் இல்லை என்கிற சித்தாந்தப்படி காரணமும் கற்பித்தாகிவிட்டது. வெளங்கிரும். ஆனால் ஆயுதங்களைக் கைவிட்டதாகப் பொய் சொல்லும் பாரதிராஜா இன்னொரு படம் எடுத்தால் போதும், கத்தி அருவா சுத்தியல் டைம்பாம் எல்லாத்தையும்விட படுபயங்கரமான ஆயுதமா இருக்குமே. ராஜா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் செஞ்சிரலாமே… செய்வாரா செய்வாரா?

(ஜனவரி 12)

—–

நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.

இன்று தேவைக்காக இதை ஆதரிப்போர், இப்படியும் ஒரு தரப்பு இருந்தால்தான் புத்தி வரும் என்போரெல்லாம், பின்னாளில் ஹிந்து மதம் மற்றும் ஹிந்த்துத்துவ ஆதரவாளர்களுக்கு நேரப்போகும் அத்தனை மரியாதையின்மைக்கும் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.

இத்தனை நாள் அடிப்படைப் பண்பிலிருந்து விலகுவது, நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் பெரிய குழி. உடனடி மிரட்டல்களுக்கு இது பயன்பட்டாலும் நமக்கு எதிரான ஆயுதமாகவே இது நீண்ட நாள் நோக்கில் பயன்படுத்தப்படும்.
இதை எதிர்த்தாகவேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் ஹிந்துத்துவரின் தேவை. அப்போதுதான் நாளை இதை வாய்ப்பாகச் சொல்பவர்களுக்கு, எங்கள் தரப்பிலேயே மிக அதிக எதிர்ப்பு இருந்தது என்பதை மறுபடியாகச் சொல்லமுடியும்.

*

இந்த ஜீயர் உண்ணாவிரதம் இருக்கும்வரை சிலர் ஆஃபர் அறிவித்ததுதான் நேற்றைய உச்சகட்ட அதிர்ச்சி. ஆனால் மனிதர்கள் இப்படித்தான். பதிலுக்கு நாமும் பல விஷயங்களைச் சொல்லமுடியும். ஆனால் அது தரமற்றது. ஒரு ஜீயர் என்றில்லை, ஒரு மனிதன் உண்ணாவிரதம் இருப்பது எதற்காக என்றுகூட யோசிக்கத் தோன்றாமல் இப்படிப் பிதற்றுவதெல்லாம் எளிது. அரசியல் உண்ணாவிரதத்தையும் அழிச்சாட்டிய உண்ணாவிரதத்தையும் ஐந்து மணி நேர உண்ணாவிரத்தையும் பார்த்துப் பழகியவர்களுக்கு இது ஆஃபர் காலமாகத்தான் தோன்றும். ஆனால் இந்த ஆன்மிக உண்ணாவிரதம் ஒரு தாயாருக்காக. இந்த உண்ணாவிரதத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் நிச்சயம் என்னால் எள்ளி நகையாடிப் புறந்தள்ள இயலாது.

இந்த ஜீயர் பற்றி எனக்கு அதிக தகவல்களெல்லாம் தெரியாது. நான் சொல்வது, இவரது இன்றைய நிலைப்பாட்டை ஒட்டி மட்டுமே.

*
வைரமுத்து பிராமணர்களுக்கு எதிரானவர் என்று இதுவரை எனக்குத் தோன்றியதில்லை. அல்லது அந்தத் திக்கில் நான் யோசித்ததில்லை. ஏனென்றால் வைரமுத்துவே தன் சாதியினரின் ஆதரவாளர் என்ற எண்ணம் இருப்பதால். இந்த ஜீயரின் உண்ணாவிரதம் நிச்சயம் வைரமுத்துவை அசைத்துப் பார்க்கும் என்றே நினைக்கிறேன். ஒருவேளை, நான்கைந்து நாள் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கிறேன். பார்க்கலாம்.

(ஜனவரி 18)

Share

அதிமுக இன்று (10-12-2016)

அதிமுக தற்போதைக்கு உடையாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எதிர்பார்த்ததுதான். அடுத்த நான்கரை வருடங்களை யாரும் வீணாக்க விரும்பமாட்டார்கள். எம்ஜியார் இறந்தபோது ஜெயலலிதா இருந்த நிலையைவிட ஒப்பீட்டளவில் கம்பீரமான நிலையிலேயே இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட் – கரிஷ்மா. சினிமா புகழ். இது இன்று சசிகலாவுக்குக் கிடையாது. அன்று ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய மைனஸ் என்று எதுவும் கிடையாது. இன்று சசிகலாவுக்கு ஏகப்பட்ட சுமைகள். இதையும் மீறி அவரை மக்கள் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதே சசிகலாவின் முன்னே உள்ள மிகப்பெரிய சவால். ஆனால் மக்கள் இதையெல்லாம் எளிதில் கடந்து செல்வார்கள் என்பதே எரிச்சலூட்டும் முகத்திலறையும் உண்மை. அடுத்த தேர்தல் வரை சசிகலாவுக்குப் பிரச்சினை இல்லை. உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்றாலும் பெரிய கவலை இல்லை. சட்டமன்றத் தேர்தலே முதல் இலக்கு. எம்ஜியார் இறந்தபோது அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருக்குமே ஜெயலலிதா ஒரு பொருட்டில்லை. தானே தலைமையேற்க சரியான ஆள் என்று எண்ண பலர் இருந்தார்கள். இன்று சசிகலாவுக்கு இப்பிரச்சினை இல்லவே இல்லை. அடிமையில் மோகம் கொண்ட அமைச்சர்கள் அடுத்த தலைமைக்குத் தயாராக இருக்கிறார்களே ஒழிய, தானே தலைவர் என்றறிவிக்கும் அளவுக்கு தைரியமாக இல்லை. கட்சியை உடைத்துக்கொண்டு போனாலும் சில வருடங்களில் அரசியலில் காலி ஆகிவிடுவோம் என்று தெரிந்திருக்கிறது. அதையும் மீறி கட்சியை உடைக்கும் தேவை திமுகவுக்கு இருக்கிறது.

நம் மக்களின் இன்னொரு பிரச்சினை, ஒரு தடவை ஓர் அரசியல்வாதிக்கு எதிராக ஒரு தேர்தலில் வாக்களித்துவிட்டால், அவருக்குத் தண்டனை வழங்கிவிட்டதாக மானசீகமாக முடிவெடுத்துவிடுவார்கள். சசிகலா கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை விரும்பாத மக்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை மிக மோசமாகத் தோற்கடித்துவிட்டால், அதற்கடுத்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கோபத்தை மறந்துவிடுவார்கள். இது சசிகலாவுக்கு இருக்கும் இன்னுமொரு சாதகம்.

இதையும் மீறி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலைச் சந்தித்தால் தோற்கும் வாய்ப்புகளே அதிகம். தோற்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். நான்கரை ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அரசியல் அதிகாரமும் பணமும் இந்த நான்கரை ஆண்டுகளில் எப்படி வேண்டுமானாலும் செயல்படச் சொல்லும். இதை மீறி, தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்கெனவே அதிமுக வென்றிருக்கும் வேளையில், மூன்றாவது முறையாக வெல்வது அத்தனை எளிதல்ல. ஜெயலலிதாவின் கரிஷ்மா என்றும் சசிகலாவுக்குக் கைக்கூடப் போவதுமில்லை. ஜெயலலிதா இருந்தபோது தள்ளி வைத்திருந்த நிலையிலேயே சசிகலாவின் குடும்பத்தினர் உருவாக்கிய பிரச்சினைகள் நமக்குத் தெரியும். இன்று ஜெயலலிதா இல்லாத நிலையில், சசிகலாவின் தலைமை உருவாகி வரும் சூழலில், இவர்கள் மிக வெளிப்படையாகவே அதிகார வட்டங்களை உருவாக்குவார்கள். இது 1996 அளவுக்குக் கூட அதிமுகவைக் கொண்டு செல்லும் வாய்ப்பு உண்டு. கூடவே தமிழ்த் தேசியவாதிகளின் பங்களிப்பும் சேர்ந்துகொண்டால், நிலைமையை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியான திமுகவின் நிலையையும் பார்க்கவேண்டும். கருணாநிதியில் அதிகாரம் இல்லாத அரசியல் அந்நேரம் உருவாகி இருக்கும். வாரிசுச் சண்டைகள் எல்லாம் ஓய்ந்து ஸ்டாலின் நிச்சயம் முக்கியத்துவம் பெற்றிருப்பார். இப்போதே கிட்டத்தட்ட அப்படித்தான். சரியான கூட்டணியுடன் ஸ்டாலின் வெல்லும் வாய்ப்புகளே அதிகம். அந்த வாய்ப்பை உறுதி செய்யவேண்டியதே இன்றைய திமுகவின் முக்கிய வேலையாக இருக்கவேண்டும். பாஜக புழைக்கடை வழியாக வருகிறது, நூலேணியில் இறங்கி வருகிறது என்றெல்லாம் கதை பேசிக்கொண்டிருந்தால், சசிகலாவிடமும் தோற்க வேண்டிய அவல நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதிமுகவை உடைப்பது குறித்து அதிமுகவினரை விட திமுகவினர் பதற்றமடைகிறார்கள். அதிமுகவை பாஜக உடைக்கக்கூடாது என்று திமுகவினர் பதறுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. திமுககூட அதிமுகவை உடைக்கக்கூடாது என்று நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது எதிரணியை உடைப்பதையும் உள்ளடக்கியதுதான் அரசியல். மற்ற கட்சிகளைவிட நல்லாட்சியைத் தருவோம் என்பதே ஒரு முக்கியக் கட்சியின் முதன்மை நோக்கமாக இருக்கும். இதன் பின்னணியில் நல்லது செய்வதை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்சியை உடைப்பதும் அந்த வெற்றிடத்தில் ஆட்சியைப் பிடிப்பதும் அரசியல்தான். இந்த அரசியலை எத்தனை வெளிப்படையாக மேற்கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது. பணத்தின் மூலம் இதைச் செய்வதுதான் பிரச்சினைக்குரியதே ஒழிய, அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு செய்வது பெரிய பாவமல்ல. இதற்காக திமுகவினர் பதறுவதை விட்டுவிட்டு யதார்த்தத்தைப் பற்றி யோசிப்பது நல்லது. இதைச் சொல்வது ஏனென்றால் இது பாஜகவுக்கும் பொருந்தும். 🙂 ஆனால், பொன் இராதாகிருஷ்ணனும் தமிழிசையும் எத்தனை நல்லவர்கள் என்றால், ஒரு ஃபோன் போட்டு, இப்படி அதிமுக தத்தளிக்கும்போது அதை உடைக்கும் அரசியல் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு உடனே ஏற்றுக்கொண்டு இன்னும் அமைதியாகிவிடுவார்கள். அத்தனை நல்லவர்களைப் பார்த்து பின்வாசல் அவதூறுகளைப் பரப்பாதீர்கள். மீறினால் நரகம் நிச்சயம். 🙂

Share

சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி – படிக்கவேண்டிய கட்டுரை

தமிழின் சாதனைக் கட்டுரைகளுள் ஒன்று இந்தக் கட்டுரை. இதை எழுதிய கல்யாண ராமனுக்கு (யார் இவர்!) ஒரு சல்யூட். தமிழில் இது போன்ற ஆய்வாளர்கள் அருகிவிட்டார்கள். இந்நிலையில் இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு பதிப்பாளரும் படித்து இதைப் புரிந்துகொள்ளவேண்டியது அத்தனை அவசியம்.
 
இதை காலச்சுவடு உள்நோக்கத்தோடு செய்ததா என்பது தெரியாது. உள்நோக்கத்தோடு செய்தாலும் அதை நான் வரவேற்கிறேன். இன்னும் அதிக உள்நோக்கங்களோடு கட்டுரைகள் எல்லா இடங்களில் இருந்தும் வரட்டும். 🙂 உள்நோக்கம் என்ற ஒன்றே ஒரு வலிமையான கட்டுரையைக் கொண்டுவருகிறது என்று உறுதியாக நம்புகிறேன். இஸம் சார்ந்த உள்நோக்கம் என்ற ஒரு வஸ்து இல்லையென்றால், இன்றைய ஃபேஸ்புக் சமூகத்தில் என்னதான் மிஞ்சும்? வாழ்க உள்நோக்கம். வளர்க உள்நோக்கக் கட்டுரைகள்.
 
ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிடறேன். ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி.’ இது என்ன எழவு தலைப்பு? இலக்கியக் கட்டுரைன்னா இப்படி என்னத்தையாவது வைக்கணுமா? நல்லவேளை, கட்டுரை தலைப்பைப் போல இல்லை. கொஞ்சம் சூனியத்தினூடேவெடிக்கும்பெருவெளிபிரபஞ்சபிரக்ஞைகளைக் குறைங்க சாமிகளா.
 
//எழுபதுகளின் சிற்றிதழ்களில் பிரசுரமான மூலவடிவங்களைப் பிரம்மராஜனின் பதிப்பில் காண்பதற்கில்லை என்பது மட்டுமன்று; ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பிலிருந்தும் சில இடங்களில் வேறுபட்டுப் பிரம்மராஜன் கவிதைகளைப் பதிப்பித்துள்ளார். எழுத்துப்பிழை, எழுத்து மாற்றம், சொல் மாற்றம், சொல் விடுபடல், பொருள் மாற்றம், வரி மாற்றம், முழுவரியையும் கவனக்குறைவாக விட்டுவிடுதல், முந்தைய வரிகளைப் பிந்திய வரிகளுடன் சேர்த்துக் குழப்பி மீண்டும் இடம்பெறச் செய்தல், சில வரிகளைத் தவறுதலாக விட்டுவிடுதல், சிலவற்றை முழுதாக நீக்கிவிடுதல், தலைப்புத் திருத்தம், தலைப்பு மாற்றம், புதுத் தலைப்பிடல், ஒரு சொல்லின் மூலவடிவத்தைத் திருத்தி அதன் மாற்றுவடிவத்தைப் பயன்படுத்துதல் (சாலை – ரோடு; வெற்றுடம்புடன் – நிர்வாணமாய்; அச்சம் – பயம்) எனப் பிழைகள் மலிந்ததாகப் பிரம்மராஜனின் பதிப்பு உள்ளது. மூலப்பிரதியிலிருந்து வேறுபட்டுப் பதிப்பிக்கும்போதுகூடச் சிலவேளைகளில் கவனக்குறைவால் நேர்ந்துவிடும் பிழைகளைச் சகித்துக்கொள்ளலாம்; தம் 1989ஆம் ஆண்டுப் பதிப்பிலிருந்து (தன்யா & பிரம்மா வெளியீடு) தாமே வேறுபட்டுப் பிரம்மராஜன் பதிப்பிப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?//
 
http://www.kalachuvadu.com/current/issue-200/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
Share

என் பெயர் என் உரிமை

என் பெயர் படும் பாடு:

ஒரு நண்பர் ஒருவர் அவர்களது தனிப்பட்ட குழும இதழை எனக்குத் தொடர்ந்து அனுப்பி வைப்பார். நண்பர் வயதானவர். உழைப்பாளி. அந்த பத்திரிகையில் ஒட்டும் பெறுநர் முகவரியில் என் பெயரை எல். ஹரிகரப்ரசன்னா என்று தட்டச்சு செய்திருந்தார்கள். நான் முதலில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு தடவை பார்க்கும்போது கொஞ்சம் துணுக்குறும். சரி, அவரிடம் சொல்லிவிடுவோம் என்று ஒரு தடவை சொன்னேன். உடனே மாற்றுகிறேன் என்றார். ஆனால் மாற்றவில்லை. கொஞ்ச நாள் கழித்து மீண்டும் சொன்னேன். மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மாற்றிவிடுவதாகச் சொன்னார். ஆனால் மாற்றவில்லை. நான் மீண்டும் சொல்ல, அவர் மன்னிப்புக் கேட்க என ஐந்தாறு முறை ஆகிவிட்டது. ஆனால் பெயர் மட்டும் மாற்றப்படவே இல்லை. என் இன்ஷியல் V. அதை எல் என்று பார்க்கும்போதெல்லாம் என் அப்பா வாசுதேவ ராவின் நினைவு வரும். இந்த முறை அந்த நண்பரை நேரில் சந்திக்கும்படி ஆனது. மெல்ல பொறுமையாக ஆனால் மிக உறுதியாக அவரிடம் பேசினேன். “ஸார், நீங்க வயசானவர். ரொம்ப உழைக்கறீங்க. மகிழ்ச்சி. ஆனால் ஒவ்வொரு தடவை என் பெயரை இப்படி தப்பா பார்க்கும்போதும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. உங்ககிட்டயும் அஞ்சாறு தடவை சொல்லிட்டேன். இதுவே வேற யாராவது இருந்தா நான் வேற மாதிரிதான் பேசுவேன். ஒண்ணு இனிஷியலை சரியா மாத்தி அனுப்புங்க. இல்லைன்னா இதழே வேண்டாம். இப்படி சொல்றதுக்கு ஸாரி. மன்னிச்சிடுங்க. இதுல எல் – வி-ன்ற எழுத்துப் பிரச்சினை மட்டும் இல்லை. என் உள்ளுணர்வு சார்ந்த தீவிரமான அகப்போராட்டமே இருக்கு. என் அப்பாவுக்கான ஒரே அங்கீகாரம் இந்த எழுத்து மட்டும்தான் இன்னைக்கு. என் அம்மாவும் இதைப் பார்க்கும்போதெல்லாம் சொல்றாங்க. இதுக்கு வேற ஒரு தனிப்பட்ட காரணமும் இருக்கு. (அதையும் அவரிடம் சொன்னேன்.) கொஞ்சம் கவனம் எடுத்துச் செய்ங்க” என்றேன். பலவாறு ஸாரி சொன்னார். எனக்கே வருத்தமாகிவிட்டது. அத்தனை வகையில் வருத்தத்துடன் அவர் பேசினார். அடுத்த முறை நிச்சயம் சரியாக வரும் என்று உறுதி சொன்னார்.

நான் 8ம் வகுப்பு எம்.எல்.டபுள்யூ.ஏ. பள்ளியில் மதுரையில் சேர்ந்தேன். அங்கே இருந்த தமிழாசிரியர் மட்டும் என் பெயரை அரிகரபிரசன்னா என்று எழுதுவார். எனக்கு தீயை விழுங்கியது போல இருக்கும். ஒரு தடவை மெல்ல அவரிடம் சொன்னேன். அவர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நானும் அப்படித்தான் எழுதவேண்டும் என்று அறிவுரையும் சொன்னார். பெயர் அப்படியே பத்தாம் வகுப்பு சான்றிதழ் வரை வந்துவிடுமோ என்று அதீதமாகக் கவலைப்பட்ட நான் என் தாத்தாவிடம் சொன்னேன். மறுநாளே தாத்தா பள்ளித் தலைமை ஆசிரியரைப் பார்க்க வந்துவிட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நெற்றியில் நாமம், நாமத்திடையே அங்காரட்சதை, கோபி முத்திரை, ஒரு சால்வை, தாத்தா கம்பு என்று என்னுடன் நடந்து வந்த அவரை பள்ளிக் கதவில் யாரும் தடுத்து நிறுத்தவில்லை. பெரிய கும்பிடு போட்டு உள்ளே அனுப்பி வைத்தார்கள். மே ஐ கம் இன் சார் என்று அவர் உள்ளே செல்லவும், மிகக் கறாரான கண்டிப்பான தலைமை ஆசிரியர் எழுந்து நின்றதை நான் பார்த்து அதிசயித்து நின்றேன். ஐந்து நிமிடம் மிக எளிமையான அழகான ஆங்கிலத்தில் என் தாத்தா தலைமை ஆசிரியரிடம் பேசினார். சுருக்கம் இதுதான்: என் பேரன் பெயர் ஹரிஹர பிரசன்னாதான். அரிகர பிரசன்னா அல்ல. இதை உடனே மாற்றியாகவேண்டும். எக்காரணம் கொண்டும் அதை அரிகர பிரசன்னா என்று எழுதக்கூடாது. இது அத்தனை சிறிய விஷயம் அல்ல. இதுவே அவர் சொன்னதன் சுருக்கம்.

தலைமை ஆசிரியர் கையோடு தமிழ் ஆசிரியரை அழைத்து இனி நிச்சயம் என் பெயரை ஹரிஹரபிரசன்னா என்றுதான் எழுதவேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழாசிரியர் நல்லவர். இதையெல்லாம் அவர் மனத்தில் வைத்துக்கொள்ளவில்லை. எப்போதும் போல் என்மீது அன்பாகவே இருந்தார். என் திருமணம் முடிந்ததும் அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுவிட்டு வந்தேன்.

இப்படி பெயர் விஷயத்தில் சின்ன வயதிலேயே எனக்கு கருத்துத் தீவிரம் இருந்தது. யாராவது தன் பெயரை விச்வநாதன் என்று எழுதினால் அதை விஸ்வநாதன் என்று எழுதுவதும் தவறே. இப்படியான தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கும் கருத்துத் தீவிரம்.

இன்று மீண்டும் அந்த இதழ் வந்தது. அதில் என் பெயரை A. ஹரிகரபிரசன்னா என்று எழுதி அனுப்பி இருக்கிறார்கள். மீண்டும் அவருக்கு எஸ்.எம்.எஸ். ‘இந்த முறை புதிய தவறுடன் என் பெயர் அச்சாகி வந்துள்ளது. என் சரியான பெயர் V. ஹரிஹர பிரசன்னா.’ அவரது மன்னிப்பு பதிலாக மீண்டும். இந்த விளையாட்டு இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

Share

யூனோ – UNO

நேற்று என் நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே யூனோ என்றொரு விளையாட்டுக்குரிய சீட்டுக்கள் இருந்தன. எனக்கு இதை விளையாடவே தெரியாது. ஆனால் என் மகனோ இதன் விதிகளையெல்லாம் அப்படியே ஒப்பித்துக்கொண்டிருந்தான். என் நண்பனுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவனது மகன் இதன் எல்லா விதிகளையும் சொல்லிவிட்டான். என் மகனும் என் நண்பனின் மகனும் ஆடத் துவங்கினார்கள்.
 
என் மகன் எனக்குச் சொல்லிக்கொடுத்தான். முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு ஒருவாறாகப் பிடித்துக்கொண்டேன். உண்மையில் மிக சுவாரஸ்யமான விளையாட்டுத்தான்.
 
சில சமயம் 2 மணி நேரம்கூட இந்த விளையாட்டு இழுக்கிறது. குழந்தைகளுடன் விளையாட நல்ல விளையாட்டு. இன்றுடன் அபிராமுக்கு பரிட்சைகள் நிறைவடைகின்றன. இந்த சீட்டை இன்று வாங்கி இருக்கிறேன். இனி வீட்டில் விளையாடவேண்டும்.
 
சீட்டில் ரம்மி ஒரு வெறிகொள்ள வைக்கும் விளையாட்டு. சின்ன வயதில் ஆஸ் விளையாடுவோம். வெட்டு மேல் வெட்டு விழும்; பின்பு உறவினர்களுக்குள் பணம் வைத்து ரம்மி ஆடத் தொடங்கவும் அது ஒரு வெறிபிடித்த விளையாட்டாக இருந்தது. கால மாற்றத்தில் ரம்மி விளையாடுவதை நிறுத்திவிட்டோம்.
 
ஆன்லைனில் பணம் வைத்து ரம்மி விளையாடும் விளம்பரத்தைப் பார்த்து 50 ரூ மட்டும் கட்டி இரண்டு நாள் விளையாடிப் பார்த்தேன். எளிதில் வெறிகொள்ள வைக்கும்படியான கச்சிதமாக அட்டகாசமாக உருவாக்கப்பட்ட மென்பொருள். வண்ணமயமாக வசீகரிக்கக்கூடியதாக இருந்த அந்த விளையாட்டு எனக்கு ஏனோ ஒரே வாரத்தில் வெறுத்துப் போனது.
 
ஃபேஸ்புக் டச் ஸ்கிரீன் மொபைல் எல்லாம் இந்த சீட்டு விளையாட்டுக்களை ஓரம்கட்டிவிட்டன என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் கல்யாண வீட்டில் ஒரு ஓரத்தில் எப்போதும் சீட்டுக் கச்சேரி இருந்துகொண்டே இருக்கும். நானும் பலதடவை ஆடியிருக்கிறேன்.
 
இன்று யூனோ வாங்கி இருக்கிறேன். வீட்டில் குழந்தைகளுடன் விளையாடவேண்டும். யூனோ எப்படி விளையாடுவது என்று உங்களுக்குத் தெரியவில்லையா, உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்லித் தருவார்கள். தெரியவில்லை என்றால் UNO என்று இணையத்தில் தேடுங்கள். இதன் விதிகளுக்கென்றே தனியான தளம் ஒன்று உள்ளது.
 
என் நண்பனின் மகன் எப்போது இதை விளையாடினான், யாருடன் விளையாடினான், எப்படி இந்த விதிகளெல்லாம் அவனுக்குத் தெரிந்தன என்று என் நண்பனுக்குப் புரியவே இல்லை. அவன் நண்பனான எனக்கும் என் மகனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது என்றும் புரியவே இல்லை. வயதாவது இப்படி எதிர்பாராத உருவத்தில் வரும்போது ஒரு சின்ன ஜெர்க் ஏற்படத்தான் செய்கிறது.
 
ஜெய் யூனோ.
Share

புரியாத பேச்சு – விஜய்காந்த்

விஜய்காந்தின் பேச்சு புரியவே இல்லை என்பதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. ஆனால் நிஜமாகவே புரியவில்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது. இதை வைத்துக் கிண்டல் செய்பவர்களை நான் ஏற்கவில்லை. (ஆனால் சில மீம்கள், வீடியோக்கள் கடுமையான சிரிப்பை வரவழைக்கின்றன. அதைச் செய்தவர்களின் வெற்றியாக மட்டும் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்!) ஆனால் இதைத் தவிர்க்கமுடியாது. ஜெயலலிதாவையும் இப்படி கிண்டல் செய்திருக்கிறார்கள். இது தலைவிதி, இதிலிருந்து தப்ப முடியாது.

ஆனால் விஜய்காந்த் பேசுவது நிஜமாகவே புரியவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் பேசுவது புரியவில்லை என்றால் நான் அவருக்காகப் பரிதாபப்படுவேன். ஆனால் நாளைய முதல்வராகப் போகிறேன் என்று சொல்பவர் பேசுவது புரியவில்லை என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வேன். விஜய்காந்த் தரப்பிலிருந்து மிகத் தெளிவான விளக்கம் இதற்குத் தரப்படவில்லை என்பதுதான் விஷயம். இப்போதுதான் தொண்டைப் புண் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுவரை அவரது குடிப்பழக்கமே காரணம் என்று திரைமறைவில் சொல்லப்பட்டது. எது காரணமாக இருந்தாலும் அவர் பேசுவது புரியவில்லை என்பது புரியவில்லைதான்.

எம்ஜியாருக்கு சுடப்பட்டு பேச்சு போனபோது இதே சமூகம் பதறியது. பின்பு கிண்டலும் செய்தது. ஆனால் விஜய்காந்துக்கு அப்படி அல்ல. ஜெயலலிதா பற்றியும் பல கதைகள். ஏன் இத்தலைவர்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை பொதுவில் வைக்க இப்படி தயங்குகிறார்கள்? எல்லா மனிதர்களுக்கும் வரும் பிரச்சினைதானே? ஏன் மூடி மறைக்கவேண்டும்? சர்க்கரை நோய் பிரச்சினை என்று வெளியே தெரிந்துவிட்டால் என்ன ஆகிவிடும்?

இன்றைய நவீன உலகத்துக்கேற்ப தலைவர்கள் உருவாகி வரவில்லை. ‘என் பிரச்சினை இதுதான், இதைத்தான் நான் எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறேன், என் பலவீனம் இது’ என்று வெளிப்படையாகச் சொல்லும் தலைவர்களே மக்கள் மனத்தில், ஆயிரம் கிண்டலையும் மீறி, இடம் பிடிக்கப் போகிறார்கள். இந்த எளிய சூத்திரம் கூடத் தெரியாமல் இல்லாத இமேஜைக் கட்டிக் காக்க இவர்கள் போடும் நாடகம், மக்களை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறது. இதனால் தேவையற்ற கதைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இதையே பெருமையாகக் கருதிக்கொள்வார்களோ என்னவோ.

மூப்பனார் பேசும்போது கீழே சப்டைட்டில் போட்டது சன் டிவி. அதற்குப் பலர் கொதித்தார்கள். ஆனால் சன் டிவி சப்டைட்டில் போட்டதில் தவறே இல்லை. விஜய்காந்த்துக்கும் சப்டைட்டில் போட்டால் நல்லது. உடல் நலம் சரியாகி அவர் நன்றாகப் பேசும் வரை இது தொடரவேண்டியது அவசியம். கிண்டலாக இல்லை, சீரியஸாகத்தான் இதைச் சொல்கிறேன்.

Share

சில திரைப்பட விமர்சனக் குறிப்புகள்

கள்ளப்படம் பார்த்தேன். ஹீரோ உள்ளிட்ட நடிகர்களின் மொக்கை நடிப்பு கொடுமை. கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யத்தையும் தனி ஆளாகக் கெடுத்தார் சிங்கம் புலி. இவர் இயல்பில் நல்லவராக இருக்கலாம். இவரது இயக்குநர் நண்பர்களுக்கு இவர் செய்யும் பேருதவி இவர் நடிக்காமல் இருப்பது. இடைவேளைக்குப் பிறகு படம் நாட் பேட். இப்படத்தின் இயக்குநர் வடிவேலால் நல்ல படங்களைத் தரமுடியும் என்ற எண்ணம் வந்திருக்கிறது எனக்கு. தெருக்கூத்து பற்றி வரும் பாடல் படமாக்கப்பட்டவிதமும், ஒரு அறைக்குள் இருந்து ஒருவரும் வெளியில் இருந்து ஒருவரும் பேசும் காட்சியில் மாறி மாறி வரும் ஒளி அமைப்பும் அருமை.

 

தங்க மகன் படம் பார்த்தேன். எழுபதுகளில் ராஜா வந்ததை, பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் வந்ததை, 80களில் ராஜ பார்வை வந்ததை 80களின் பிற்பகுதியில் மணிரத்னம் வந்ததை, 90களில் ரஹ்மான் வந்ததை, 2010களில் பீட்ஸா வந்ததை, பின் தொடரும் அதிரடி புதிய அலையை ஒட்டுமொத்தமாக தங்கமகன் இயக்குநர் வேல்ராஜிடம் இருந்து யாரோ மறைத்திருக்கிறார்கள். இத்தனையையும் மறைக்கமுடியுமென்றால் இயக்குநர் வேல்ராஜ் எத்தனை அப்பாவியாக இருக்கவேண்டும் என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

ஜில் ஜங் ஜக் பார்த்தேன் என்று சொல்லவே கேவலமாக இருக்கிறது. இந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனா தானோவென்று நடிக்கும் ஒரு நடிகர் என்றால் இதை ஒரு விஷயமாகப் பொருட்படுத்தாமல் சென்றிருப்பேன். ஆனால் சித்தார்த், எனக்குப் பிடித்த நடிகர். லூசியாவை தமிழில் எனக்குள் ஒருவன் என்று எடுத்து அதில் நடிக்கவேண்டிய அவசியம் அவருக்கு என்ன? நல்ல சினிமாவின் மேல் அவருக்கு ஆர்வம் இருக்கிறது என்ற ஐயம் எனக்கு உள்ளது. smile emoticon அதனால்தான் இதை எழுதுகிறேன்.
சித்தார்த் மனதுக்குள் எங்கேனும் கமல் போல முயலவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை உடனே தூக்கி எறிந்துவிட்டு தலைமுழுகுவது நல்லது. ஏனென்றால் கமலின் முயற்சி என்ற வகையிலான பல சினிமாக்கள் போணியாகாத பூமி இது. போணி ஆகவில்லை என்பதல்ல, அது கொடுமையாகவும் இருந்தது. மும்பை எக்ஸ்பிரஸ் தந்த கொடுங்கனவை மறக்கமுடியாது. புஷ்பக் விமான் புது முயற்சி என்ற பெயரில் ஒரு வன்கொடுமை. ஜில் ஜங் ஜக் ஆயிரம் மும்பை எக்ஸ்பிரஸ் போல உள்ளது.
கமலுக்காவது ராஜா இருந்தார். அதோடு அவர் என்ன கொடுமையை எடுத்தாலும், அது 20 வருஷம் கழிச்சுப் புரியும் என்று ஜில்ஜங்ஜக் அடிக்க ஆள்கள் இருந்தார்கள். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பஞ்ச தந்திரம் ஜோக்கெல்லாம் 20 வருஷம் கழிச்சு கூட புரியாது என்பார்கள். திடீரென்று ஆளவந்தான் அன்றைய நிலையில் ஒரு அசுர சாதனை என்று எழுத இலக்கியத்தீவிரவாதிகள் இருந்தார்கள். சித்தார்த்துக்கு இது எதுவுமே கிடையாது. எனவே ஜில் ஜங் ஜக்கையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு, கமல் கதையம்சத்துடன் நடித்த நல்ல/இடைநிலை வணிகப் படம் போல முயற்சி செய்யுங்கள். ஹே ராம், விருமாண்டி, ராஜ பார்வை அல்லது மகா நதி, குருதிப்புனல், குணா போல முயற்சி செய்யுங்கள். படம் ஓடாவிட்டாலும் பெயராவது கிடைக்கும். கமல் தன் பொற்காலத்தை மிகக் குறைவான படங்களில் மட்டும் நடித்துக் கெடுத்துக்கொண்டார். அத்தவறைச் செய்யாமல் இருங்கள். ஜில் ஜங் ஜக் வேண்டாம். எனக்குள் ஒருவன் வகை திரைப்படங்களே தேவை.

பசங்க 2 என்னும் பூர்ஷ்வா படத்தைப் பார்த்தேன். மனநிலை சரியில்லாத டாக்டராக சூர்யா கலக்கிவிட்டார். 🙂

டார்லிங் 2 பார்த்தேன். கொடுமை.

சேதுபதி பக்கா கமர்ஷியல். படு வேகம். ரஜினி நடித்திருக்கவேண்டிய படம். smile emoticon விஜய் சேதுபதியுடன் கூடவே வரும் போலிஸ் (லிங்கா) நன்றாக நடித்திருக்கிறார். குழந்தைகள், குடும்பத்துடன் வரும் காட்சிகள் அழகு. ஜிவ்வென்று ஒரு சூப்பர் கமர்ஷியல்.

Watched Charlie. Excellent love story. Love of two freaks. 🙂 Enjoyed.

Thozha – Sentimental lengthy boring very regular, highly predictable one. Not a must watch.

Yesterday I started watching Dhilwale. Could not tolerate it. Dropped it after 30 minutes. What a pathetic movie.

Watched Bjajrang Bhaijaan. What a feel good movie. Excellent. Highly dramatic from start to end with parallel funny scenes. Each Indian, of course each Pakistani, would love this movie. Must watch.

என்னு நிண்டே மொய்தீன் என்ற கொடுமையை ஸ்லோ மோஷனில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாத்துட்டீங்களா பாத்துட்டீங்களா என்று ஒரு வாரமாக தினமும் இரண்டு முறை கேட்ட நண்பரின் சதிமுகம் இப்போதுதான் புரிகிறது. ஏன்யா, ஒரு படம் முழுக்க ஸ்லோ மோஷன்லயா? பின்னணி இசை சிறுபிள்ளைத்தனம். காத்திருந்நு பாடலுக்கு தேசிய விருதெல்லாம் ஓவர். புலம்ப விட்டுட்டீங்களேய்யா.

Share