Archive for புத்தகக் கண்காட்சி

உலகப் புத்தகக் கண்காட்சி : டெல்லி 2010 (பாகம் 1)

பாகம் 1 என்று சொல்வது எனக்கே கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. இந்த பந்தாவெல்லாம் தானாகவே வந்துவிடுகிறது!

டெல்லி புத்தகக் கண்காட்சி 2010

முதன்முறையாக நான் டெல்லி புத்தகக் கண்காட்சி சென்றேன். டெல்லி புத்தகக் கண்காட்சி தந்த அனுபவங்கள் மிகவும் முக்கியமானவை. தமிழ்ப் பதிப்புலகம் செல்லவேண்டிய நெடிய தூரத்தையும், தமிழ்ப் பதிப்பாளர்கள் அமைப்பான பபாஸி அடையவேண்டிய பெரும் மாற்றத்தையும் மிகத் தெளிவாக உணர்த்தியது டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சி.

கிட்டத்தட்ட 13 நாள்கள் டெல்லியில் தங்கினேன். ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியாக எழுதுவதை விட மொத்தமாக அங்கங்கே கண்டவற்றைத் தொகுத்தால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்து என் எண்ணங்களை எழுதுகிறேன்.

இங்கிருந்து போகும்போதே டெல்லியின் குளிர் குறித்த மிரட்டல்கள் இங்கேயே உறைய வைப்பதாய் இருந்தன. சிறுநீர் கழிக்க நீங்கள் ‘தேடவேண்டியிருக்கும்’ என்னும் மிரட்டலே அதில் என்னை குலை நடுங்கச் செய்தது. நல்ல குளிர் காற்று வீச மிதமான ஒரு கால நிலையில் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கினேன். டப்ஸக் கண்ணாவிடம் வடிவேலு சொல்வது போல் பங்குனி வெயில் பட்டையைக் கிளப்பியது என்றுதான் சொல்லவேண்டும். வெயிலுக்கிடையில் மிதமான குளிரும், மிதமான குளிருக்கிடையில் இதமான வெயிலும் என மிக ரம்மியமான கால நிலையாக இருந்தது. தங்குமிடத்துக்கு சென்று தயாராகி பிரகதி மைதான் சென்றோம்.

பிரகதி மைதான் என்பது மிகப்பெரிய ஒரு மைதானம். அங்கே ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கூடங்கள், நாடக திரைப்பட அரங்கங்கள், இது போன்ற கண்காட்சிகள் நடத்த முப்பதுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட சிறிய பெரிய அரங்குகள் உள்ளன. அங்கேதான் 8 அரங்குகளில் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஓர் ஒப்பீட்டுக்குச் சொல்வதென்றால் சென்னை புத்தகக் கண்காட்சியைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு பெரியது என்று சொல்லலாம்.

நிரந்தர கட்டடங்கள் இருப்பதால் தூசி போன்ற பிரச்சினைகள் இல்லை. உள்ளரங்கக் கட்டமைப்பு என்பது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. டெல்லி புத்தகக் கண்காட்சி பதிப்பாளர்கள் விற்பனையாளர்களுக்கு இடையேயான வணிக நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது. அதனால் புத்தகம் வாங்கும் வாசகர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்றார்கள். ஆனால் அந்நிலையும் இப்போது மாறிவிட்டது. நிறைய மக்கள் வந்து புத்தகம் வாங்கினார்கள்.

ஒவ்வொரு பதிப்பாளரக்கும் ஒரு அரங்குதான் என்கிற நிலையெல்லாம் இல்லை. நீங்கள் தேவையான அரங்குகளைப் பெறலாம். ஒரு சிலர் கிட்டத்தட்ட 30 அரங்குகளை இணைத்து ஒரே பெரிய அரங்காக வெளியிட்டிருந்தார்கள். இடப்பிரச்சினை இல்லை என்பதால் தங்கள் எண்ணம் போல வடிவமைத்திருந்தார்கள். சில பதிப்பங்களுக்கு இதற்காகவே கலை நிபுணர்கள் வந்து கடையை வடிவமைத்துக் கொடுத்திருந்தார்கள். சென்னையில் இதுபோன்ற ஒரு நிலை வரும்போது கிழக்கு பதிப்பகம் பல்வேறு சாதனைகளை நிச்சயம் செய்யும். ஒருவித பொறாமையோடுதான் டெல்லி புத்தகக் கண்காட்சியில் வலம் வந்தேன் என்று சொல்லவேண்டும்.

அரங்குகளைப் பற்றிப் பார்ப்போம். ஒவ்வொரு அரங்கும் ஒரு சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்ற அளவுக்குப் பெரியது. இது போன்ற 8 அரங்குகள். உண்மையில் எட்டு அரங்குகள் என்பது தவறு. சிறிய பெரிய பல அரங்குகள். ஏழாம் அரங்கில் ஏழு ஏ எனத் தொடங்கி ஏழு எச் வரை பல அரங்குகள். இப்படி அரங்குகள் அரங்குகள் அரங்குகள் எங்கு பார்த்தாலும் அரங்குகள்தான். ஒரு அரங்கிலிருந்து இன்னொரு அரங்குக்குக் செல்ல அரை கிமீ நடக்கவேண்டும். பதினான்காம் அரங்கிலிருந்து ஒன்றாம் அரங்குக்குச் செல்ல கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் நடக்கவேண்டும். அத்தனை பெரிய மைதானம்.

ப்ரகதி மைதான் அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு பொது இடம். இந்திய அரசோடு தொடர்புடைய எந்த ஒரு மாநில அரசும் எப்படி கேவலமாக ஓர் இடத்தை வைத்திருக்குமோ அப்படித்தான் வைத்திருந்தார்கள் இதனையும். டெல்லியில் பொதுவில் எச்சிலை உமிழாதவர்கள் கலாசாரச் சுரணையற்றவர்கள். எல்லோரும் துப்பினார்கள். எங்கு வேண்டுமானாலும் நீங்கள் துப்பலாம். எச்சில் காவி நிறத்தில் இருக்கவேண்டும் என்பதுதான் கட்டுப்பாடு. டெல்லி காவியின் நகரம். இந்தக் காவியில் இருந்து எப்படியோ மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தை மட்டும் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்.

பிரகதி மைதான் உணவகப் பகுதியிலும் இதே நிலைதான். நான் முதல் நாள் மட்டும் மதியம் அங்கு உண்டேன். மற்றபடி அங்கே நான் செல்லவே இல்லை. வெளியில் கிடைத்த பிஸ்ஸா, வேக வைத்த மக்காச் சோளம் போன்றவற்றைத் தின்றே மதியப் பொழுதைக் கழித்தேன். புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும் உள்ளரங்க அமைப்பையும், வெளியில் நிலவும் இத்தகைய மோசமான அமைப்பையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.

டெல்லி முழுமைக்குமே – நான் பார்த்த இடங்கள் வரை – தூசியும் எச்சிலுமாகத்தான் இருந்தது. டெல்லி தொடர்வண்டி நிலையம் காணச் சகியாததாக இருந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள். டெல்லி எங்கும் தூசி வியாபித்திருந்தது. பச்சை நிற மர இலைகள் எல்லாம் தூசிப் படலத்தைப் போர்த்திக்கொண்டிருந்தன. ஐந்து நிமிடங்கள் ஆட்டோவில் செல்லும்போது என் மூக்கு அரிக்கத் தொடங்கிவிடும். அப்படி தூசி. திராவிட ஆட்சியை இங்கே திட்டிக்கொண்டிருக்கிறோம். டெல்லியைப் பார்த்தால் திராவிட ஆட்சியைக் கைக்கூப்பித் தொழவேண்டும். டெல்லியில் இருக்கும் பேருந்துகளைப் பார்க்கவே பயமாக இருந்தது. பேருந்தின் முன்னே தலையில் இரண்டு கொம்புகளை வைத்து விட்டால் போதும். எருமையின் மீது அமர்ந்து செல்வது போலவே இருக்கும்.

இப்படியான அதிர்ச்சியில் என் முதல் நாள் தொடங்கியது. டெல்லியின் இதமான குளிரில் இதமாக வியர்த்தது. நான் நடக்கவேண்டும் என்று நினைக்கும்போதே எனக்கு வியர்க்க ஆரம்பித்துவிடும் என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். டெல்லி தமிழ்ச்சங்கத்தைத் தேடிப் போனோம். கே.எஸ்.ரவிக்குமார் ராணுவத்தில் இருந்து திரும்பி வந்தவர் என்பதை ‘ஏ கைஸா ஹை’ என்ற வசனத்தின் மூலம் சொல்லிவிடுவார். அதே போல் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் ஆட்டோக்காரரிடம் என்னவோ சொன்னேன். அவர் பதிலுக்கு எனன்வோ சொன்னார். கூட வந்தவர்கள் என்னிடம் அவர் என்ன சொன்னார் என்று கேட்டார்கள். இரண்டுக்கும் சம்பதமில்லாத மூன்றாவது ஒன்றை அவர்களிடம் சொல்லி வைத்தேன். ஆட்டோக்காரர் டெல்லி தமிழ்ச்சங்கத்தை டெல்லி முழுக்கத் தேடினார். ஒரு வழியாக டெல்லி தமிழ்ச் சங்கம் சென்று சேர்ந்தோம்.

எங்கள் எண்ணம். அங்கிருப்பவர் டெல்லி தமிழ்ச் சங்க உறுப்பினர்களை கண்காட்சிக்கு அனுப்பி வைக்க உதவுவார் என்பது. அதாவது ஓர் அறிவிப்பு மட்டும். டெல்லி தமிழ்ச் சங்க வாசலில் எஸ். வி. சேகர் நாடக அறிவிப்பு இருந்தது. உள்ளே சென்று அங்கிருந்த ஒருவரைச் சந்தித்தேன். நான் கிழக்கு பதிப்பகம் பற்றியும் அதன் சாதனைகள் பற்றியும் விலாவாரியாகச் சொன்னேன். அவர் பாலசந்தரின் சௌகார் ஜானகி மாதிரி அச்சா என்றார். தமிழ் சரியாகத் தெரியாதோ என்று மீண்டும் ஆங்கிலத்தில் சொன்னேன். அதற்கும் அச்சா என்றார். தன் மேஜை மீதிருந்த மணியை அழுத்தினார். என்னவோ நமக்கு சாதகமாகச் சொல்லப் போகிறார் என நினைத்தேன். வெளியில் இருந்து இன்னொருவர் வெந்நீர் கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தார். தனது கோட்டில் இருந்து ஒரு சில மாத்திரையை எடுத்துக்கொண்டே, சொல்லுங்க என்றார். நல்லவேளை தமிழ் தெரிந்திருக்கிறது. இது போன்ற அமைப்புக்களுக்காகவே செய்துகொண்டு எடுத்துப் போயிருந்த மிக அழகான விலைப் பட்டியலை அவர் முன் வைத்து கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஆயிருந்தது. அவர் அதைப் புரட்டிக்கூடப் பார்க்கவில்லை. மாத்திரையை சாப்பிட்டார். மீண்டும் சொன்னேன். அவர் ஒரே வரியில் முத்தாய்ப்பாக ‘இங்க யாரும் புத்தகம் வாங்கமாட்டாங்க, இதெல்லாம் நடக்காது. மார்க்கெட்டிங் எல்லாம் இங்க பண்ண முடியாது. வேஸ்ட்’ என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்தார். டெல்லி தமிழ்ச்சங்கத்தின் புத்தக அரங்குகளில் அடக்கி ஒடுக்கி திருவள்ளுவரும் திருநாவுக்கரசரும் படுத்துக் கிடந்தார்கள்.

அங்கேயேதான் இந்திய வார நாளிதழ்களைப் பதிவு செய்யும் Registrar of Newspaper for India இருக்கிறது. நேராகச் சென்றால் ஐந்து நிமிடத்தில் செல்லவேண்டிய இடத்தை சுற்றிச் சுற்றி அரை மணி நேரத்தில் சென்றடைந்தோம். தமிழ்ச் சங்கம் தந்த சோர்வை அங்கிருந்த பணியாளர்கள் நீக்கி வைத்தார்கள். மிகச் சிறப்பாக உதவி செய்தார்கள். எனது கேள்விக்கு என்ன என்ன பதிலோ அவற்றை எல்லாம் சொல்லி, அவற்றை எப்படி எப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லி அனுப்பி வைத்தார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்ற ஓர் அனுபவத்தை இதுவரை நான் எந்த அரசு அலுவலகத்திலும் பெற்றதில்லை. இது ஒரு அபாயமான ஒப்பீடாக இருக்கலாம். நான் சென்ற ஒரே ஒரு அலுவலகத்தில் எல்லாமே நன்றாக நடந்துவிட்டது ஒரு தற்செயலாகக்கூட இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு அலுவலகங்களில் இதுபோன்ற தற்செயல்கள் ஒருதடவைகூட நடந்ததில்லை.

மறுநாள் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இந்திய மொழிகளுக்கான அரங்கில் தமிழ் அரங்குகள் மூன்றே மூன்று இருந்தன. கிழக்கு, காலச்சுவடு, என் சி பி எச். சென்னை புத்தகக் கண்காட்சியில் மூச்சு விட நேரம் இருக்காது. அங்கே எப்போதாவதுதான் தமிழர்கள் வருவார்கள். இதனால் ஒவ்வொரு வாசகரும் நண்பர்கள் போல பேச ஆரம்பித்து பழகத் தொடங்கிவிட்டார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியைப் போலவே, அங்கு வந்த ஒவ்வொருவரும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களைப் பார்த்து, காணக் கிடைக்காத பொக்கிஷம் போல வாங்கிக்கொண்டு போனார்கள்.

குழந்தைகளுக்கான பிரத்யேக அரங்கில் பிராடிஜி அரங்கு அமைந்திருந்தது. 25 ரூபாய்க்கு நல்ல தரமான புத்தகங்கள் என்பதை அங்கு வந்த வாசகர்களால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டார்கள். எப்படி 25 ரூபாய்க்குத் தரமுடியும் என்று. புத்தகங்கள் மளமளவென விற்றுத் தீர்ந்தன. இதே வேகத்தில் போனால் கடைசி இரண்டு நாள்கள் புத்தகங்கள் இல்லாமல் போய்விடும் என்று பயம் வந்துவிட்டது. பத்ரி கண்காட்சியின் 6ம்நாள்தான் வருவதாக இருந்தது. அவர் வரும்போது சில புத்தகங்களைக் கொண்டுவர கேட்டுக்கொண்டபின்புதான் நிம்மதியானது.

பிராடிஜி அரங்கில்தான் ஆக்ஸிஜன், இண்டியன் ரைட்டிங் புத்தகங்க்ளையும் வைத்திருந்தோம். ஆகிஸிஜன் வெளியிட்டிருந்த பிரபாகரன் வாழ்க்கை பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றிப் பலர் பேசிக்கொண்டு சென்றார்கள். எல்லாருமே அவரை ஒரு ஹீரோ என்றார்கள். வான்படை அமைத்தது மிகப்பெரிய சாதனை என்று ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்கமுடிந்தது. இந்திய அரசு அவரைக் கொன்றுவிட்டது என்றார் ஒருவர். தமிழ்நாட்டில் என்ன என்னவிதமான குரல்களைக் கேட்க முடியுமோ அத்தனையையும் அங்கேயும் கேட்கமுடிந்தது.

(டெல்லி பெண்கள் பற்றியும், தாஜ்மஹால் பதேபூர் சிக்ரி, மதுரா பற்றியும், டெல்லி உணவுகள் பற்றியும், கொஞ்சம் புத்தகக் கண்காட்சி பற்றியும், புத்தகங்கள் பற்றிக் கொஞ்சமும் (பாரா பற்றி எழுதாமல் எப்படி முடிக்கமுடியும்?) எனக்குத் தோன்றும்போதெல்லாம் தொடரும்!)

(டெல்லி புத்தகக் கண்காட்சி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெற்றது.)

புகைப்படங்கள். (சில புகைப்படங்கள் சரியாக விழவில்லை. கேமரா சொதப்பிவிட்டது!)

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2010

சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றிய எனது பதிவு இட்லிவடையில்.

Share

பெங்களூரு புத்தகக் கண்காட்சி 2009

கடந்த 13, 14, 15 ஆகிய நாள்களில் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டேன். 2007க்குப் பின் 2009ல் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் கலந்துகொண்டது. சென்ற வருடம் கலந்துகொள்ளவில்லை. அப்போதே பலர் கிழக்கு பதிப்பகம் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்டனர். இந்த முறை கலந்துகொண்டோம்.

இம்முறை மொத்தமே 9 தமிழ் அரங்குகள்தான். அதிலும் பதிப்பாளர்கள் என்று பார்த்தால் மொத்தமே 5 பேர்தான். கிழக்கு, விகடன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு, திருமகள் நிலையம். இது போக 5 விற்பனையாளர்கள் கலந்துகொண்டார்கள். நாதம் கீதம் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்கி வைத்து விற்பனை செய்தது. கண்ணப்பன் பதிப்பகம் சில புத்தகங்களையும், கிரி டிரேடர்ஸும் கீதம் பப்ளிஷர்ஸும் கலந்துகொண்டன.

தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் மக்கள் பெங்களூருவில் குறைந்துகொண்டே வருகின்றனர் என்பதால், புத்தக விற்பனையும் குறைந்துகொண்டே வருவதாகத்தான் தோன்றுகிறது. கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் வாங்க வந்த பலரின் பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்கத் தெரியவில்லை. திக்கித் திணறித் தமிழ் பேசுகிறார்கள். இப்படியே செல்லும்போது போகப் போக பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் தமிழ் புத்தகங்களின் விற்பனை குறையத்தான் செய்யும் எனத் தோன்றுகிறது. தற்போது பெங்ளூருவில் செட்டில் ஆகியிருக்கும் ஐடி இளைஞர்கள் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கிறார்களா என்பதே தெரியவில்லை. ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பழக்கமாவது இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

பெங்களூரு தமிழ்ச் சங்கம் சென்றிருந்தேன். நான் சென்ற நாள் வைரமுத்து தமிழ்ச்சங்கத்துக்கு வருவதாக இருந்தது. சிறிது நேரம் காத்திருந்து பார்த்தேன். அவர் வந்த விமானம் தாமதமானதால், கிளம்பிவிட்டேன். தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் நல்ல நூல்கள் பல இருப்பதாக அறிந்தேன். அன்று பார்க்கமுடியவில்லை. வைரமுத்து வருவதாக இருந்த கூட்டத்துக்குக்கூட 100 பேர்கூட வரவில்லை. முன்பைப் போல தமிழ்க்கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஆர்வம் மக்களுக்கு இல்லை என்றார் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் தலைவர். பெங்களூரு தமிழ்ச்சங்கம் வாராவாரம் கவிதைப் பட்டறை போன்ற ஒன்றை நடத்துகிறது. கவிதை சொல்லும் கவிஞருக்குப் பல்வேறு பட்டங்கள் எல்லாம் கொடுத்து அவர் கவிதை சொல்லுவார் என்ற அறிவிப்பு ஒன்றைக் கண்டேன். மக்களை ஓட வைக்க இது ஒன்று போதாதா என நினைத்துக்கொண்டேன். இன்னமும் திருக்குறள், வளையாபதி, குண்டலகேசியில் உலகம் முடிந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்ச்சங்கத்துத் தமிழர்கள் என்றுதான் தெரிகிறது. தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் யோகா வகுப்புகள், தமிழ் கன்னட வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறிக்கொண்டிருந்தார்கள் சிலர். இத்தகைய அமைப்பை வைத்துக்கொண்டே எத்தனையோ செய்யலாம். இத்தகைய அமைப்பை நடத்தும்போது, அதிலிருக்கும் பிரச்சினைகளையும் நான் அறிந்தே இருக்கிறேன் என்றாலும் நிறையவே செய்யலாம் என்பது மட்டும் நிச்சயம்.

பெங்களூருவில் தமிழ்ப்புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கிட்டத்தட்ட யாருக்குமே தெரியவில்லை. உண்மையில் உருப்படியான தமிழ்ப்புத்தகங்கள் விற்கும் கடை எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்ச்சங்கத்தில் கேட்டபோது இரண்டு கடைப்பெயர்கள் சொன்னார்கள். ஒன்று, நல்வாழ்வகம். அல்சூர் மார்க்கெட்டில் காளியம்மன் கோவில் தெருவில் காளியம்மன் கோவிலுக்குப் பின்னே இருக்கிறது. அங்கு சென்று பார்த்தபோது, கடையில் மு.வரதராசனாரும் சிவவாக்கியரும் இருந்தார்கள். ’அங்கேயே தங்கிவிட்ட’ தமிழ்ப்புலவர்களால் பதிப்பிக்கப்பட்ட சில கவிதைப் புத்தகங்களும், தமிழீழம் போன்ற சில புத்தகங்களும், ஆயுர்வேதம், சித்த மருந்துகள் பற்றிய புத்தகங்களும் இருந்தன. அது புத்தகக் கடையாக மட்டுமின்றி, ஒரு நாட்டுமருந்துக் கடையாகவும் செயல்பட்டு வருகிறது. அக்கடையின் உரிமையாளர் நல்ல புத்தகங்களை விற்பதில் ஆர்வம் உள்ளவர் என்றும் தெரிந்தது. பெங்களூருவில் புத்தகங்களை விற்பனை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல், விற்பனைக்குப் புத்தகங்களைத் தருவிப்பதில் உள்ள பிரச்சினை பற்றியெல்லாம் சொன்னார். இப்போது தமிழர்கள் கன்னடர்கள் பிரச்சினை அதிகம் இல்லை என்றாலும், எப்போதேனும் பிரச்சினை வந்தால், தமிழ்ப்புத்தகங்கள் விற்பது பெரிய ஆபத்தாக முடியலாம் என்கிற எண்ணம் பல்வேறு புத்தகக் கடைக்காரர்களுக்கும் இருக்கிறது. நல்வாழ்வகம் புத்தக உரிமையாளர் கிழக்கு பதிப்பகத்தின் பல்வேறு புத்தகங்களை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளார். இனி பெங்களூருவில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்கள், நல்வாழ்வகம் விற்பனையகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

இன்னொரு புத்தகக் கடை ஸ்ரீராம்புராவில் இருக்கிறது என்றார்கள். எனக்குத் தெரிந்த கன்னடத்தில் நான் பேசியபோதெல்லாம் மிரண்டு போன கன்னடர்கள் என்னுடன் தமிழிலேயே பேச ஆரம்பித்தார்கள். ஆட்டோகாரர் எங்களை சரியாக அந்த தமிழ்ப்புத்தக்கடையில் கொண்டு போய்ச் சேர்த்தார். அங்கே தமிழ் வார இதழ்கள்தான் கிடைத்தன. புத்தகங்கள் இல்லை. கடையிலும் யாரும் இல்லை. கடைக்காரருக்காகக் காத்திருந்தோம். அவர் புத்தகங்கள் விற்பனை செய்யும் ஆர்வத்துடன் இல்லாததாலும், அக்கடையில் புத்தகங்கள் விற்க இடமில்லாததாலும், அங்கிருந்து கிளம்பி பெங்களூரு புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தோம்.

பெங்களூரு புத்தகக் கண்காட்சி பெங்களூருவின் மையமான இடத்தில் நடக்காமல், கொஞ்சம் தள்ளி இருக்கும் இடத்தில் நடக்கிறது. மேக்ரி சர்க்கிளுக்கு வருவது கடினம் என்றுதான், பெங்களூரு புத்தகக் கண்காட்சிக்கு வந்த பலரும் சொன்னார்கள். ஆட்டோவில் மீட்டர் போட்டு, மீட்டரில் வரும் காசை மட்டும் வாங்கிக்கொள்கிறவர்களைப் பார்க்கும்போது, வேற்றுக் கிரக வாசிகள் போன்று தோன்றியது. இதில் ஆட்டோக்கள் தூரமான இடங்களுக்கு வருவதில்லை. பக்கத்தில் இருக்கும் இடமென்றால் வருகிறோம், இல்லையென்றால் வரமாட்டோம் என்கிறார்கள். ஒருவழியாக பெங்களூரு புத்தகக் கண்காட்சியை வந்தடைந்தோம். ரமேஷ் அரவிந்த் புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு எங்களை அரங்குக்குள் வரவேற்றார்.

பெங்களூரு புத்தகக் கண்காட்சியை எல்லா வகையிலும் சென்னை புத்தகக் கண்காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

பெங்களூரு புத்தகக் கண்காட்சியின் உள்ளரங்க அமைப்பு அட்டகாசமாக உள்ளது. மக்கள் நடந்து செல்லும் பாதை குறுகலாக அமைக்கப்பட்டுவிட்டதுதான் ஒரு குறை. மற்றபடி, மிகச் சிறப்பாகப் பலகைகள் அமைத்து, அரங்குகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு தூசி கிடையாது, குப்பை கிடையாது. ஒவ்வொரு அரங்குக்கும் குப்பையைப் போட டஸ்ட் பின் வைத்திருக்கிறார்கள். தினமும் காலை நான்குபேர் ஒரு வலையை இழுத்து வருகிறார்கள். எல்லாரும் குப்பையை அதில் கொட்டிவிடுகிறார்கள். ஆனால் சென்னை புத்தகக் கண்காட்சியில் குப்பையை நடு சாலையில் கொட்டவேண்டும். மறுநாள் அதை துப்புரவு செய்வார்கள்.

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு அரங்குக்கும் தினமும் இரண்டு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில் தருகிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில், பொதுவில் தண்ணீர் வைத்திருப்பார்கள். அதனை நாம் பிடித்துக்கொள்ளவேண்டும். இதில் என்ன பிரச்சினை என்றால், தண்ணீரைப் பொதுவில் வைத்ததும், ஒரே அரங்கத்தைச் சேர்ந்தவர்களே நிறையப் பிடித்துவைத்துவிட்டால், மற்றவர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் போய்விடும். பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் அந்தப் பிரச்சினை அல்ல.

ஏதேனும் ஒரு குறை என்றால், பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் அதனை உடனே சரி செய்கிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் பலமுறை அலைந்துதான் அதனை சரி செய்யமுடியும்.

கேண்டீன் செயல்படும் இடம் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் மிகப் பிரம்மாண்டமாக பெரியதாக இருக்கிறது. அங்கு வரும் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட இருக்கைகள் கிடைக்கின்றன. சென்னை புத்தகக் கண்காட்சியில் இது சாத்தியமே இல்லை.

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் டாய்லட் வசதி பாராட்டத்தக்க வகையில் உள்ளது. இத்தனை பேர் கூடும் இடத்திலும் இத்தனை சிறப்பாக டாய்லெட்டை வைத்திருந்தது அதிசயிக்க வைத்தது. டாய்லெட் விஷயத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி மகா மட்டம் என்றே சொல்லவேண்டும்.

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் ஏடிஎம் வசதி உள்ளது. இதுவ்ரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த வசதி வரவில்லை. உடனே செய்யவேண்டிய வசதி இது.

இதற்கெல்லாம் முக்கியக் காரணம், கூட்டம். பெங்களூரு புத்தகக் கண்காட்சியைப் போல கிட்டத்தட்ட பத்து மடங்கு கூட்டமாவது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும். அதனால் பெங்களூரு புத்தகக் கண்காட்சிக்கு இத்தனை பிரச்சினைகளைச் சமாளிப்பது எளிமையாகவும், சென்னை புத்தகக் கண்காட்சிக்குக் கடினமாகவும் உள்ளது.

பெங்களூரு புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் மிகக் குறைவு. ஆனால் சென்னை புத்தகக் கண்காட்சி, ஒப்பீட்டளவில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறது என்றே சொல்லவேண்டும்.

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் 20 ரூபாய். இது மிக மிக அதிகம். சென்னையில் ஐந்து ரூபாய் மட்டுமே. கார் நிறுத்தவும் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் 20 ரூபாய் வசூலிக்கிறார்கள். சென்னையில் எவ்வளவு என்று நினைவில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி தொடர்ந்து பல வருடங்களாக நடைபெறுவதால், புத்தகம் வாங்குவதை, புத்தகங்களைப் பார்ப்பதை ஒரு கல்ச்சராகவே மாற்றிவிட்டார்கள் இங்கே. ஐந்தாவது வருடமாக நடக்கும் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில், இந்த பழக்கம் இனிமேல்தான் வளரவேண்டும். புத்தகக் கடைக்குள் சென்று பார்க்காமல், கடையில் புத்தகங்கள் வாங்குவது போல வெளியில் நின்றே பலர் பார்க்கிறார்கள். நாம்தான் உள்ளே வந்து பாருங்க என்று சொல்லவேண்டியிருக்கிறது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் பழைய புத்தகங்களை எங்கேயும் பார்க்கமுடியாது. பெங்களூருவில் பழைய புத்தக விற்பனையாளர்களே கொடிகட்டிப் பறக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் 50 ரூபாய் என்பது போன்ற தட்டிகளைப் பார்க்கலாம். ஆங்கில நூல்களை அடுக்கி வைத்து விற்கிறார்கள். இதனைத் தடுக்காவிட்டால், புதிய புத்தகங்களின் விற்பனை காலப்போக்கில் பாதிக்கப்படும் என்றுதான் நினைக்கிறேன்.

அரங்குகள் ஒதுக்கும் விஷயத்தில் பெங்களூரு புத்தகக் கண்காட்சி நிர்வாகம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் என எல்லாருக்கும் அவர்கள் கேட்பது போல அரங்குகள் அமைத்துத் தருகிறார்கள். குலுக்கலில் இடம் கிடைப்பது மட்டும்தான் அதிர்ஷ்டம். மற்றபடி, நான்கு அரங்குகளைச் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். சேர்த்து எடுத்த நான்கு அரங்குகளுக்கு நான்கு பெயர்கள் வைத்துக்கொள்ளலாம் என இப்படி எதையும் செய்து தருகிறார்கள். பதிப்பகங்கள் குறைந்த அளவிலும், விற்பனையாளர்கள் அதிக அளவிலும் அரங்குகள் எடுத்திருக்கிறார்கள்.

கர்நாடக பதிப்புலகம் பற்றிச் சிலருடன் பேசிக்கொண்டிருந்தோம்.

ஒரு பெரிய கர்நாடக பதிப்பாளர்கூட, மூன்று லட்சம் மொத்த விற்பனையை பெரிய விற்பனையாகவும், வெற்றியாகவும் கருதுகிறார். நடுத்தர விற்பனையாளர் 1.5 லட்சம் மொத்த விற்பனைக்கே அசந்துபோகிறார். கர்நாடக பதிப்புலகம் மிகச் சிறப்பாக இருப்பதாக இவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். தமிழ்ப் பதிப்புலகம் இவர்களைவிட முன்னணியில் நிற்கிறது. இதைவிட எப்படி அதிகம் விற்பனை செய்யமுடியும், வாய்ப்பே இல்லை என்கிற நம்பிக்கை கர்நாடக பதிப்பாளர்களுக்கு உள்ளதாகத் தோன்றுகிறது. கர்நாடகப் பதிப்புலகம் என்றாலே இலக்கியம் சார்ந்தது என்று நம்புகிறார்கள். இலக்கியத்தைத் தவிர எதுவும் அதிகம் விற்பனையாகாது என்றெல்லாம் நினைக்கிறார்கள். இலக்கியத்தின் விற்பனையும் அத்தனை சிறப்பாக இல்லை என்பதைக்கூட இவர்கள் இன்னும் உணரவில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சியை இதுவரை எந்த கர்நாடக பதிப்பாளரும் பார்த்ததில்லை. பபாசியின் உறுப்பினர்கள் எத்தனை பேர் இதுவரை பெங்களூரு புத்தகக் கண்காட்சியைப் பார்த்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. டெல்லி, திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் தங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொள்ளாதவரை, ஒட்டுமொத்த கண்காட்சி முன்னேற்றத்தை ஏற்படுத்தமுடியாது.

கன்னட பதிப்பகமான வசந்த பிரகாஷனாவின் உரிமையாளர் முரளி பேசுவதை இந்த ஒளித்துண்டில் காணலாம்.

கிழக்கு அரங்கில் தமிழர்கள் பலர் வந்து புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். கன்னட பதிப்பகங்கள் சிலவற்றைத் தவிர, பெரும்பாலான கன்னட பதிப்பகங்களின் அரங்குகளில் இருந்த கூட்டத்தைவிட்ட கிழக்கு பதிப்பக அரங்கில் கூட்டம் அதிகம் இருந்தது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் புத்தகங்களை வாங்கியவர்கள் எனலாம். துப்பறியும் சாம்பு உள்ளிட்ட தேவனின் புத்தகங்கள், இந்திரா பார்த்தசாரதியின் நூல்கள் ஆகியவற்றை வாங்கிப் போனவர்களும் அதிகம். ஆனாலும், எப்போதும் போல சுய முன்னேற்ற நூல்களும், தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்களுமே அதிகம் விற்பனையாயின. சமையல் புத்தகங்களின் விலை ரூபாய் 25 மட்டுமே என்பதால், அவை சக்கைப்போடு போட்டன.

ஒரு பெண்மணிக்குத் தமிழில் சுமாராகப் பேசத் தெரிந்திருந்தது. தமிழர்தான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்குப் புத்தகம் வாங்க வந்திருந்தார். என்ன வாங்க என்று தெரியவில்லை. சுயமுன்னேற்ற நூல்களெல்லாம் வேண்டாம், ஹ்யூமரசான நாவல் எதாவது வேண்டும் என்றார். நான் அந்த வேலைக்காரப் பெண்ணிடம் பேசினேன். துப்பறியும் சாம்பு வேண்டுமென்றார். இப்படி வேலைக்காரப் பெண்ணுக்காகத் தமிழ்ப் புத்தகம் வாங்குபவரைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்தில் அவரது கணவர் வந்து, அதேபோல் வீட்டில் வேலைக்காரப் பெண்ணுக்குப் புத்தகம் வேண்டும் என்றார். அவரது மனைவி வாங்கிவிட்டதாகச் சொன்னதும், நன்றி சொல்ல்விட்டுப் போனார்.

ஒரு முதியவர் அரங்குக்குள் வந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஸ்டாலைப் பார்த்தார். அவருக்கு புத்தகம் வாங்க வேண்டும் என்கிற ஆர்வமும், எதற்குச் செலவும் என்ற எண்ணமும் ஒரு சேர இருந்தது போல. பேரன் வெளியில் நின்று கொண்டு எதையாவது வாங்கு என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவர் ஒன்றும் வாங்காமல் வெளியே வந்துவிட்டார். பேரன் ஒண்ணும் வாங்கலையா என்றதற்கு, இவர் கூலாக அவ்வளவா கலெக்‌ஷன் இல்லை என்று சொல்லிவிட்டார். பேரன் இதைவிடவா என்று சொல்லிக்கொண்டே அவரைக் கூட்டிப் போனான்.

இன்னொருவர் கிழக்கு அரங்கில் பல புத்தகங்களைப் பார்த்தார். அவர் கண்ணில் பட்டதெல்லாம் அரசியல், தீவிரவாத இயக்கங்கள் பற்றிய புத்தகங்கள் போல. வெளியே வரும்போது தவம் வெளியீட்டில் உள்ள வேதாந்த தேசிகர் புத்தகத்தைப் பார்த்ததும் முகம் மலர்ந்து எடுத்தார். தன் பையனை அழைத்து ‘செம புத்தகம் இது தெரியுமா’ என்றார்.

பலர் மருதன் எழுதிய புத்தகத்தைத் தொடர்ந்து படிப்பதாகச் சொன்னார்கள். பலர் பா.ராகவனின் தொலைபேசி எண்ணைக் கேட்டு நச்சரித்தார்கள். 1857, இந்தியப் பிரிவினை, இரண்டாம் உலகப் போர் போன்ற வரலாற்றுப் புத்தகங்கள் சிறப்பாக விற்பனை ஆயின. முதல் உலகப்போர் போடாமல் ஏன் முதலில் இரண்டாம் உலகப் போர் போட்டீர்கள் என்று சிலர் கேட்டனர்.

சிலர் என்னிடம் வந்து, ஒரே ஒரு புத்தகம் மட்டும் வாங்கவேண்டும், உங்கள் சஜஷன் என்ன என்றார்கள். சீனா -விலகும் திரை புத்தகத்தைச் சொன்னேன். ஏழெட்டு பேராவது என்னை நம்பி இதனை வாங்கியிருப்பார்கள். பிடிக்கவில்லை என்றால் என்னைத் தொடர்புகொள்வதாகச் சொல்லி என் விசிட்டிங் கார்டையும் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

பெரும்பாலான தமிழ் வாசகர்கள் கேட்ட கேள்வி – பெங்களூருவில் எங்கே தமிழ்ப்புத்தகம் கிடைக்கும் என்பதுதான். க்டைசி மூன்று நாளில் கேட்டவர்களுக்கு நல்வாழ்வகம் முகவரியைச் சொன்னோம். அதுபோக ரிலயன்ஸ் டைம் அவுட்டிலும், லேண்ட் மார்க்கிலும் புத்தகங்கள் கிடைக்கும் என்றும் சொன்னோம். இப்படியாக பெங்களூரு புத்தகக் கண்காட்சி இனிதே முடிவடைந்தது.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் நடந்த இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் சொல்லவேண்டும். அரங்கத்தில் தினமும் ஒரு சிறுவனோ சிறுமியோ காணாமல் போய்க்கொண்டிருந்தார்கள். இரண்டு முறை அறிவிப்பு வரும். பின்னர் கிடைத்துவிடுவார்கள். ஒருதடவை பவன் என்ற பையன் காணாமல் போனான். அறிவிப்பு வந்துகொண்டே இருந்தது. பையன் கிடைக்கவே இல்லை. அவனது தங்கையோ அக்காவோ தெலுங்கில் ரா ரா என்று விசும்பலோடு அழைத்தாள். மனதுக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியும் பச்சை நிற முக்கால் பேண்ட்டும், ஆரஞ்சு நிற டீ ஷர்ட்டும் போட்ட ஆறு வயது பையனைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு நாள் என் பையனைப் பார்க்காமல் இருந்த எனக்கு, இந்த பவன் தொலைந்து போனது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது. கடைசியில் அந்தப் பையன் கிடைத்தானா கிடைக்கவில்லையா என்பது தெரியாமல் அன்றைய தினம் முடிந்துவிட்டது. மறுநாள் வந்ததும், அறிவிப்பாளர்கள் பகுதிக்குச் சென்று அந்தப் பையன் என்ன ஆனான் எனக் கேட்டேன். அந்த ஆறுவயது பையன், தன் அம்மா அப்பாவைக் கண்டுபிடிக்கமுடியாமல், கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் நடந்தே தன் வீட்டுக்குச் சென்றுவிட்டானாம். அங்கிருந்தவர்கள் தகவல் சொல்லி, அவனது அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த தருணமது.

இனி நான் கன்னடத்தால் அனைவரையும் கதிகலங்க வைத்த கதை. எனக்குத் தெரிந்த கன்னடத்தில், நான் தங்கியிருந்த ரூம் பையனிடன் பேச, அவன் கதிகலங்கிப் போய்விட்டான். என்னுடன் வந்திருந்த மணி, தயவு செய்து கன்னடத்தில் மட்டும் பேசாதீங்க என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆட்டோவில் போகும்போது, ஆட்டோவின் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஒரு நடிகரைக் காண்பித்து அவர் பெயர் என்ன என்றேன். அதுவும் கன்னடத்தில் கேட்டேன். அந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாராம். ஆட்டோகாரர் கடுப்பாகியிருப்பார் என நினைக்கிறேன்.

ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டபோது பட்ட துயரம் தனிக்கதை. கர்நாடகாவில் வெல்லத்தை உடனடியாகத் தடை செய்வது நல்லது. விவஸ்தை இல்லாமல் எல்லாவற்றிலும் வெல்லம் போட்டு வைக்கிறார்கள். சாம்பார் தின்றால் இனிப்பு. கூட்டு தின்றாலும் இனிப்பு. ரசத்திலும் இனிப்பு. ஒரு மனிதன் எப்படித்தான் உயிரோடு இருப்பது? சாம்ராட் என்ற ஹோட்டலில் சாப்பிடும்போது, ஏன் இப்படி எல்லாத்துலயும் வெல்லம் போட்டு வைக்கிறீங்க என்று கேட்கவும், அவர் மிளகாய்ச் சட்னி கொண்டு வந்து கொடுத்தார். கொஞ்சம் நாக்குக்குத் தெம்பு வந்தது.

எப்படியும் ஒரு கன்னடப் படமாவது அங்கே பார்த்துவிடவேண்டும் என நினைத்தேன். புத்தகக் கண்காட்சியிலேயே மிகவும் களைத்துப் போய்விட்டதால், படம் பார்க்கச் செல்லமுடியவில்லை. இல்லையென்றால், சிவராஜ் குமார் பயமுறுத்திக்கொண்டிருந்த அந்த கன்னடப் படத்துக்கு ஒரு விமர்சனமும் எழுதியிருப்பேன்.

பின்குறிப்பு: பா.ராகவன் இஸ்கான் அரங்கில் கிருஷ்ணனின் அழகான படத்துக்கு அருகிலேயே பழியாய்த் தவம் கிடந்ததையும், இஸ்கான் அரங்கு கிழக்கு அரங்குக்கு நேர் எதிரே அமைந்து எப்போதும் கிருஷ்ணன் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் என்று நான் சொன்னபோது ஓர் ஆன்மிகச் சிரிப்பில் அதை அங்கீகரித்ததையும், அன்றே அப்போதே அங்கேயே சன்னியாசம் வாங்கி கிருஷ்ணனுக்கு சேவை செய்ய ஒற்றைக் காலில் நின்றதையும், அவர் மனதை மாற்றி இஸ்கானையும் கிருஷ்ணனையும் நான் காப்பாற்றியதையும் வெளியில் சொல்லமாட்டேன் என்று அவரிடம் சத்தியம் செய்திருக்கிறேன்.

நல்வாழ்வகம் கடை




மல்லேஸ்வரத்தில் உள்ள பெட்டிக்கடை


புத்தகக் கண்காட்சிக்கு அழைக்கும் ரமேஷ் அரவிந்த்!



















குப்பையைச் சேகரிக்கும் முறை

இஸ்கான் அரங்கில் ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கும் பா.ராகவன்



ஏ.டி.எம் செண்டர்

கழிப்பறை

Share

நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2009

From neyveli book fair 2009

* கோட்டை போன்ற செட்டுடன் வாசகர்களை அழைத்தது நெய்வேலி புத்தகக் கண்காட்சி. கோட்டையில் உச்சியில் இந்தியக் கொடி கம்பீரமாகப் பறக்கிறது. இது இயக்குநர் சங்கரின் செட்டு போன்று இருக்கிறதா, டீ.ராஜேந்தர் போட்ட செட் போன்று இருக்கிறதா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே (பாராதான் நடுவர்!) நடைபெற்றது எனக் கேள்விப்பட்டேன். ஆனால் எதற்கு இத்தனை செலவு என்றுதான் புரியவில்லை.

From neyveli book fair 2009

* பத்து நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இன்றோடு நிறைவுபெறுகிறது. தினம் ஒன்றுக்கு சில குறும்படங்களைத் திரையிட்டு, அதற்கு மாணவர்களை விமர்சனம் எழுதச் சொல்லி, அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கினார்கள்.


* பரிசுகளை ப்ராடிஜி வழங்கியது. (இது பிராண்ட் பில்டிங் டைம்!)

* சிறப்பு விருந்தினராக பத்ரி சேஷாத்ரியும், பரிசுகளை வழங்கவும் சிறப்புரை ஆற்றவும் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டார்கள்.

* எழுத்தாளர் ஷோபா சக்தி பார்வையாளராக வந்திருந்தார்.

* விழா ‘கனவு கீர்த்தனை’ என்னும் குறும்படத்துடன் தொடங்கியது. மிகச் சிறப்பான குறும்படம் என்று சொல்லம்முடியாவிட்டாலும், எந்நாளும் செல்லுபடியாகக்கூடிய பாரம்பரிய செண்டிமெண்ட்டான இந்தியத் தாத்தா- யூ.எஸ். பேத்தி கலாசார வேறுபாட்டை உணர்வுபூர்வமாகக் காட்டியது.

From neyveli book fair 2009

* அடுத்ததாக லீனா மணிமேகலையின் ’தேவதைகள்’ குறும்படம் திரையிடப்பட்டது. ஒப்பாரி வைக்கும்/மரணத்துக்கு நடனமாடும் ஒரு பெண், கடலில் சிப்பிகள் எடுத்து மாலை கோர்த்து வாழ்க்கையை நடத்தும் பெண், சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண் என மூன்று பெண்களின் வாழ்க்கையை யதார்த்தமாக மிக அருகில் இருந்து காண்பித்தது இக்குறும்படம். பின்பு மேடையில் பேசிய அனைவருமே இக்குறும்படம் தந்த அதிர்வைப் பற்றிப் பேசினார்கள். இக்குறும்படத்துக்குப் பின்னே ஏதேனும் அரசியல் இருக்குமோ என்கிற எண்ணத்துடனே பார்த்தேன். எனக்குத் தெரிந்து எவ்வித அரசியலும் இல்லை. பெண்ணியப் பிரதி என்கிற வகையில் இக்குறும்படம் மிக முக்கியமானதே. சிறப்பாகவும் இருந்தது. செயற்கையாக நடந்த சில காட்சிகளைக்கூட மிகவும் யதார்த்தமாக மாற்றியதில் லீனா மணிமேகலையின் சாமர்த்தியம் தெரிந்தது.

From neyveli book fair 2009
From neyveli book fair 2009
From neyveli book fair 2009

* பத்ரி, லீனா மணிமேகலை உள்ளிட்டவர்கள் பேசினார்கள். போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

* ஷோபா சக்தியை மேடைக்கு அழைத்துப் பேசச்சொன்னார்கள். அவர் தனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்துக்கு நன்றி சொன்னார்.

* ‘நான் இரண்டு நிமிடங்கள் பேசலாமா’ என அனுமதி வாங்கிக்கொண்டு, சாமிநாதன் என்கிற உள்ளூர் எழுத்தாளர் பேசினார். நாடகங்கள் நடத்திய அவர் சில குறும்படங்கள் எடுத்ததாகவும், நிலவுக்கு எத்தனை பேர் போனாலும் ஆம்ஸ்டிராங்கின் பெயர் நிலைத்திருப்பது போல எத்தனை குறும்பட விழா நடத்தினாலும் நெய்வேலியில் முதல் குறும்படம் எடுத்த தனது பெயர் நிலைத்திருக்கும் என்றும், இதுவரை நான்கு வருடங்கள் குறும்படப் போட்டியில் வெல்லவில்லை என்றாலும் தொடர்ந்து முயல்வேன் என்றும் பேசிவிட்டுச் சென்றார்! அரங்கம் கொஞ்சம் கலகலப்பாகியது!

* மீண்டும் கண்மணி என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இரண்டாவது பெண் குழந்தையைக் கலைக்கச் சொல்லும் குடும்பத்தை மீறி ஒரு பெண் தனது பெண் குழந்தையை வளர்க்க முடிவெடுக்கும் ஒரு கதை. எவ்வித காரணமும் இல்லாமல் எப்படி அந்தப் பெண் திடீரென்று பெண் குழந்தையைக் கலைக்காமல் இருக்க முடிவெடுக்கிறாள் என்றெல்லாம் சரியாகச் சொல்லாமல் மிக மேம்போக்காக இருந்தது இக்குறும்படம்.

* இத்துடன் கூட்டம் இனிதே முடிவு பெற்றது.

* மிகவும் முயற்சி எடுத்து ஒரு புத்தகக் கண்காட்சியை ஒட்டிப் பல நிகழ்வுகளையும் சேர்த்துச் செய்ய நினைக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

From neyveli book fair 2009

* திடீரென்று ஷோபா சக்தியை மேடைக்கு அழைத்து அவரை நெளியச் செய்தது போன்ற சிலவற்றைத் தவிர்க்கவேண்டும், அல்லது முதலிலேயே அவரிடம் சொல்லி அவரையும் ஆயத்தப்படுத்தியிருக்கவேண்டும். இதெல்லாம் மிகமிகச் சிறிய குறையே.

* நானும் பத்ரியும் ஒரு மணி நேரம் நெய்வேலி புத்தகக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தோம். பலர் பத்ரியிடம் பேசினார்கள். ஒருவர் ஜெஃப்ரி ஆர்ச்சரின் புத்தகங்கள் எப்படி விற்பனை ஆகின்றன என்று கேட்டார். இன்னொருவர் ‘உங்களை டிவியில் பார்த்தேனே’ என்றார். கிழக்கு புத்தக அரங்கில் சிறிது நேரம் நின்றிருந்தோம். கூட்டம் வரத் தொடங்கியிருந்தது. விதிகள் புத்தகங்கள், பிராபகரன் புத்தகங்கள் தொடர்ந்து விற்பனை ஆகிக்கொண்டே இருந்ததைப் பார்க்க முடிந்தது.

* இரண்டு மணிக்கு சென்னைக்கு வண்டியேறினோம். ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்தேன். மகன் கேரம்போர்டு விளையாடலாமா என்றான். என் மனைவி காஃபி கொடுத்தாள். சர்க்கரை அளவு கூடுதலாக இருந்தது. (இந்தக் குறிப்பு எதற்கென்றால், என்றேனும் எனது இக்குறிப்புகளையெல்லாம் சேர்த்தெடுத்து ‘பாஸ்கரதாஸின் குறிப்புகள்’ போல புத்தகமாக வெளியிட்டால், மிகவும் உதவியாக இருக்கும். அதற்காகத்தான்.)

* நெய்வேலி புத்தகக் கண்காட்சி பற்றி வலைப்பதிவுலகில் ஒன்றுமே இல்லையா என்கிற அவப்பெயரை நீக்குவதற்காகவே இப்பதிவு எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க வலைப்பதிவர் ஒற்றுமை, ஓங்குக வலைப்பதிவுகளின் புகழ். எனவே இப்பதிவைப் படிப்பவர்கள் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளுமாறு இறைஞ்சுகின்றேன்.

* புத்தகக் கண்காட்சியில் நான் ஒரு புத்தகம் கூட வாங்காமல் வந்தது நல்ல சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. மீண்டும் அடுத்த புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்!

(படங்களைப் பெரியதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.)

Share