Archive for சென்னை புத்தகக் கண்காட்சி 2009

சென்னை புத்தகக் கண்காட்சி 2011

சேமிப்புக்காகவும் வசதிக்காகவும் இங்கே பதிகிறேன்.

நன்றி: இட்லிவடை

நாள் 01

நாள் 02

நாள் 03

நாள் 04

நாள் 05

நாள் 06

நாள் 07

நாள் 08

நாள் 09

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2011

சென்னை புத்தகக் கண்காட்சியின் பரபரப்பு தொற்றிக்கொண்டு இன்றோடு கிட்டத்தட்ட 20 நாளிருக்கும். திருநெல்வேலியின் தேரோட்டம் போன்றது சென்னை புத்தகக் கண்காட்சி. இதைவிட என்னால் எளிமையாக விளக்கிவிடமுடியும் என்று தோன்றவில்லை. அந்த நிகழ்ச்சியைவிட அது தரும் பரபரப்புதான் போதை. அவ்வித போதையின் அடிமை நான். 20 நாள்களாக எதிலும் ஒரு கவனமின்மை, எல்லாவற்றிலும் ஒரு சிரிப்பு, எல்லாவற்றிலும் ஒரு சிறிய பதட்டம், ஆனால் உள்ளுக்குள்ளே இன்னொரு மனம் அதையே பார்த்து அமைதி என்று சிரிக்கும் இரட்டைநிலை – இதுதான் சென்னை புத்தகக் கண்காட்சி. ஏன் இப்படி? நீங்கள் ஒரு பதிப்பகத்தின், அதுவும் புத்தகக் கண்காட்சியின் பேசுபொருளாக இருக்கப்போகும் ஒரு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சியை நடத்திப் பார்த்தால்தான் தெரியும்.

எல்லா வேலையும் நாம் திட்டமிட்டபடி கட்டுக்குள் இருந்தாலும், எங்கேயோ ஏதோ கட்டுக்குள் இல்லை என்று தோன்றிக்கொண்டிருப்பது மடத்தனமா உள்ளுணர்வா எனத் தெரியவில்லை. மடத்தனமோ, உள்ளுணர்வோ – இதுதான் இலக்கை நோக்கி விடாமல் விரட்டிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. எனவே அதற்கு ஒரு நன்றி.

இந்தமுறை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நியூ ஹொரைஸன் மீடியாவின் அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களையும், அதாவது கிழக்கு, நலம், வரம், ப்ராடிஜி உள்ளிட்ட அனைத்து பதிப்பகங்களின் அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இதில் வசதி உள்ளது என்பதோடு எங்களது பொறுப்பும் கூடுகிறது. நிச்சயம் இந்தமுறை கிழக்கு வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கப்போவது உறுதி.

இதில் சுஜாதாவின் புத்தகங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறது. 60க்கும் மேற்பட்ட சுஜாதாவின் புத்தகங்கள். சுஜாதாவின் வாசகர்கள் கிழக்கு புத்தகங்களையும் பார்க்கப் போகிறார்கள். சுஜாதா தனது புத்தகங்களின் விற்பனையாளர் என்பதோடு, மற்ற புத்தகங்களின் விற்பனையையும் அதிகமாக்குபவர் என்று நான் நம்புகிறேன். இம்முறை அது நிரூபிக்கப்படும்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களும் ஒருவரான ஜெயமோகனின் இரண்டு புத்தகங்கள் – உலோகம், விசும்பு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். விசும்பு – எததனை முறை படித்தாலும் எனக்குச் சலிக்காத புத்தகம். 2011 மார்ச்சுக்குள், ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பு, ஜெயமோகன் குறுநாவல்கள் தொகுப்பு, ஆழ்நதியைத் தேடி, தமிழிலக்கிய அறிமுகம் போன்ற புத்தகங்கள் வெளிவரும்.

இதுபோக, கிழக்கு வாசகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான பல்வேறு புத்தகங்கள் வெளியாகின்றன.

இவைபோக, மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும் முக்கியமான புத்தகங்களை உடனடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இந்த முறை, சென்னை புத்தகக் கண்காட்சியின் முதல் நாளிலிருந்து தினமும் பத்து வரி புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். அனானி ஆப்தர் இட்லிவடை வலைப்பதிவில் அது வெளிவரும். எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதாமல் போவது எனக்கு ஒன்றும் புதியதல்ல. எனவே ஒருவேளை நான் எழுதாமல் போனாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் இதனை தைரியமாகச் சொல்லிவிடமுடிகிறது.

எல்லாப் பதிப்பகங்களும் வெளியிடப் போகும் பல்வேறு புத்தகங்கள் பற்றி எழுதி ஏன் அவற்றைப் பிரபலப்படுத்தக்கூடாது என்று கேட்டார் பாரா. அதற்கு முதலில் என் வலைப்பதிவை பிரபலப்படுத்தவேண்டும் என்றேன்! நான் கடைசியாகப் படித்த இரண்டு புத்தகங்கள் தேகம், சரசம் சல்லாபம் சாமியார் – இதைப் பற்றி நான் என்ன எழுதிவிடமுடியும்? 🙂

புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.

சென்னை புத்தகக் கண்காட்சி 2011

ஜனவரி 4 (செவ்வாய்) முதல் ஜனவரி 17 (திங்கள்) வரை.

இடம்:
புனித ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி, பச்சையப்பா கல்லூரி எதிரில், பூந்தமல்லி ரோடு.

நேரம்:
விடுமுறை நாள்களில்: காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை.
வேலை நாள்களில்: மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

எங்கள் ஸ்டால் எண்:

கிழக்கு – F 13

புத்தகங்களை நிதானமாகப் படித்துப் பார்த்து வாங்க வேலைநாள்களில் வருவது நல்லது. விடுமுறை நாள்களில் கடும் கூட்டம் இருக்கும் என்பதால், உங்களால் புத்தகங்களை நிதானமாகப் பார்க்க முடியாமல் போகலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (இறுதி நாள்)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று மிக நல்ல கூட்டம் இருந்தது. நல்ல விற்பனையும் இருந்தது. இரவு 8.30க்கு முடியும் புத்தகக் கண்காட்சியை 9.30 வரை நீட்டித்தார்கள்.

கிழக்கு அரங்கில் பில் போட்டுக்கொண்டிருக்கும்போது ஞாநி வந்தார். புக் வேணுமா சார் என்றதும், ‘தினமும் உங்களைப் பார்த்தா உங்க ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதுவீங்கன்னு தெரியாம போயிடுச்சு. இன்னைக்கு பார்த்துட்டேன். எழுதிடுங்க’ என்றார். ‘சார், நீங்க வேற சார்’ என்றேன். ‘ரெண்டு நாள் வராம விட்டுட்டேன்’ என்றார் ஞாநி. இரவு புத்தகக் கண்காட்சி முடிந்து கிளம்பும்போது மீண்டும், ’பார்த்துட்டேன், மறந்துடாதீங்க’ என்றார். 🙂

கவிஞர் மதுமிதா வந்திருந்தார். கவிதைகளோடு வரவில்லை என்பது மிகப்பெரிய ஆசுவாசம். வாழ்க அவரது நல்லுள்ளம். இரண்டு நாள்களுக்கு முன்பு கவிஞர் நிர்மலா வந்திருந்தார். அவரும் கவிதைகளோடு வரவில்லை என்பது கவனத்திற்குரியது.

வார்த்தை இதழில் ‘எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது’ என்ற தொடரை எழுதும் வ.ஸ்ரீநிவாசன் வந்திருந்தார். பெரியார் புத்தகத்தைப் பார்த்துவிட்டு ‘ராஜாஜி புத்தகம் இருக்கிறதா’ என்று கேட்டார். அவரிடம் ராஜாஜி எழுதிய கடிதங்களின் தகவல்கள் உட்பட பல்வேறு தொகுப்புகள் இருக்கின்றன என்றறிகிறேன்.

நிறைய வாசகர்கள் திடீரென்று சில பெயர்களைச் சொல்லி அப்புத்தகங்கள் இருக்கிறதா எனக் கேட்டார்கள். முக்கியமாகக் கேட்கப்பட்டவை. பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மார்கோ போலோ, உலகப் போர், இலங்கை பற்றிய புத்தகம், ராஜிவ் காந்தி, அம்பேத்கர் போன்றவை. முன்பொருதடவை இப்படி வசந்தகுமாரிடம் ‘நிறைய பேர் காடு புத்தகம் கேக்கறாங்க, ஏன் ரீபிரிண்ட் போடலை’ என்று கேட்டதற்கு:

‘எத்தனை பேர் கேட்டிருப்பாங்க?’

‘ஒரு இருபது முப்பது பேர் கேட்டிருப்பாங்க.’

‘ஆயிரம் காப்பி அடிச்சிட்டு மீதி 970ஐ என்ன பண்றது?’

தோழர் செல்லரித்துப்போன, பழுப்பேறிய புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தார். மிகவும் பத்திரமாக யாரும் எடுக்கமுடியாத இடத்தில் வைத்துவிட்டு, ‘பாத்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார். ‘இதை புத்தகக் கண்காட்சி வளாகத்தோட நடுவில வெச்சாலும் ஒருத்தனும் எடுக்கமாட்டான்’ என்றேன்.

இப்படி பல நண்பர்களின் சந்திப்பினூடாக பதிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. சென்ற புத்தகக் கண்காட்சியைவிட ஒரு லட்சம் வாசகர்கள் அதிகம் வந்தார்கள் என்ற பேட்டியை காந்தி கண்ணதாசன் கொடுத்துக்கொண்டிருக்க, எனது ஒட்டுமொத்த அப்சர்வேஷன் இங்கே.

* சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நிச்சயம் மந்தம். கூட்டத்திலும் சரி, விற்பனையிலும் சரி, சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.

* புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சரியான பேருந்து வசதி இல்லை என்பது மிகப்பெரிய குறை. இதை நீக்காதவரை இந்த இடம் இதுபோன்ற பிரச்சினைகளையே தந்துகொண்டிருக்கும்.

* அரங்க உள்கட்ட அமைப்பைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் பபாஸி மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது, மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது. உள்ளே வரும் எந்த ஒரு வாசகரும் இதை உணரமுடியும். நிறைய கூட்டம் வந்தாலும் நடப்பதற்கு ஏற்ற, அகலமான நடைபாதை, சிவப்புக் கம்பளங்கள் விரித்த பாதை, எல்லாமே சரியாகச் செய்யப்பட்டிருக்கின்றன.

* புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள்ளே உணவு அரங்கங்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும்.

* சென்ற ஆண்டுவரை மல்டிமீடியா வரிசை எனத் தனியாகக் கொடுத்திருந்தார்கள். அது இந்தமுறை இல்லை. அடுத்தமுறை மல்டிமீடியா அரங்க வரிசையைத் தனியாக வைக்கவேண்டும்.

* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் மிகக்குறைவு. சன், ஜெயா, கலைஞர் எனப் பல்வேறு சானல்கள் இருக்கும் நிலையில், அவர்களுடன் பேசி, குறைந்த விலையில் விளம்பரங்களைப் பெற்று, அவற்றில் ஒளிபரப்பாதவரை, கூட்டம் இப்படி குறைந்துகொண்டுதான் போகும்.

* புத்தகக் கண்காட்சிக்கென்று ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ள செய்யவேண்டிய விஷயங்களைத் தொடர்ந்து செய்யவேண்டும். திறப்புவிழாவிற்கு மக்களை ஈர்க்கும் ஒரு தலைவரை அழைப்பதில் தொடங்கி, தொடர்ந்து ஊடகங்களில் புத்தகக் கண்காட்சி பற்றி செய்திகள் வரவைப்பதுவரை பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும். அப்போதுதான் பத்து நாளும் மக்கள் மனதில் புத்தகக் கண்காட்சி பற்றிய நினைவு வந்துகொண்டே இருக்கும்.

* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது கழிப்பறைகளின் வசதி கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் அவை சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இதை பபாஸி கவனத்தில் கொள்ளவேண்டும்.

* எல்லா நாளும் சரியாகக் கிடைத்துக்கொண்டிருந்த குடிநீர், இறுதிநாள் காலைமுதல் கிடைக்கவில்லை. ஒருநாள்தானே என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. கடுமையான தாகம். குடிநீர் வாங்க, பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியில் செல்லவும் முடியாது. இதுபோன்ற குறைகளையும் பபாஸி களையவேண்டும்.

* வாகனங்களை நிறுத்துமிடம் சரியாக, சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு வரை இருந்த குழப்பங்கள் அறவே தவிர்க்கப்பட்டிருந்தன.

* விளம்பரங்களைத் தவிர்த்துப் பார்த்தால், பபாஸியின் செயல்பாடு பாராட்டத்தக்கதாகவே உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இருக்கும் சில குறைகளும் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

* கடைசியாக ஒன்று. தொடக்க நாளில் மழை பெய்வதைத் தடுக்க பபாஸி முயலவேண்டும்.

நான் குழந்தைகளுக்களுக்கான சில புத்தகங்களை வாங்கினேன். எளிய ஆங்கிலத்தில் மகாபாரதம், ராமாயணம், பஞ்ச தந்திரக் கதைகள் வாங்கினேன். நாவல் டைமில் மலிவு விலையில் வெளிவந்த ‘கோணல் பக்கங்கள் பாகம் 1’ பத்து ரூபாய்க்கு வாங்கினேன். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் காலியாகிவிட்டன. அதனால் வாங்கமுடியவில்லை. பாரதிய வித்யா பவனில், ‘தமிழ் வழியாக சமிஸ்கிருதம்’ படிக்கும் புத்தகங்களை வாங்கச் சென்றேன். ‘முதல் ரெண்டு பாகம் இல்லை, மூணாம் பாகத்துலேர்ந்து வாங்கிக்கிறேளா’ என்றார்கள்.

பின்குறிப்பு 1: வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கியதால் பல பதிப்பாளர்களுக்கு நாமம் விழுந்துவிட்டதாக சிலர் பேசிக்கொண்டார்கள். இந்த சைவ சூழ்ச்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பின்குறிப்பு 2: ஒவ்வொரு நாளும் எதாவது எழுதவேண்டும் என்கிற தொல்லை இன்றோடு ஒழிந்தது என்பதை எண்ணும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சும்மா இருப்பதே சுகம் என்றவனே உலகின் தலைசிறந்த ஞானி. 🙂

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 10)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

இன்று நல்ல கூட்டம் இருந்தது. தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த கூட்டம், மதியம் இரண்டு மணிக்கு மேல் சூடு பிடித்தது. இன்றும் கூட்டம் இல்லாமல் போய், புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம் இருந்தது என்கிற வரியை எழுத முடியாமலேயே போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி இல்லாமல் சரியான கூட்டம். அதிலும் சுற்றிப் பார்க்கும் ஆவலுள்ள கூட்டம் இல்லாமல், புத்தகம் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

முதல் இரண்டு வரிசைகளுக்குள் நுழையவே முடியவில்லை. அந்தக் காட்சியைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் மக்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் காத்திருந்தார்கள். இத்த பத்து நாள்களில் இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை. இதைவிட பதினோராம் நாள் (புத்தகக் கண்காட்சியின் கடைசி ஞாயிறு) இன்னும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மனுஷ்யபுத்திரனிடம் பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான கருத்தே அவரிடமும் இருந்தது. சென்ற முறையைவிட இந்தமுறை கூட்டம் குறைவு என்பதுதான் அவரும் சொன்னது. அதற்கான காரணங்கள் பற்றி சில கருத்துகளைச் சொன்னார். அவை எல்லாமே நான் ஏற்கெனவே சொன்னவையே. சில பதிப்பாளர்கள் மனம் உடைந்து போகும் அளவு பேசுகிறார்கள் என்றார். அதுவும் உண்மையானதே.

சுரேஷ் கண்ணன் வந்திருந்தார். ‘பகடி எழுதும்போது வேணும்னே எழுதுற மாதிரி இருக்கே’ என்று டீசண்ட்டாக கேட்டார். ‘உங்க பகடி சகிக்கலை, செயற்கையா இருக்கு’ என்று அதற்கு அர்த்தம். ‘தினமும் எதாவது எழுதணும், ஜஸ்ட் பத்து நிமிஷத்துல எழுதுறேன், அப்படித்தான் இருக்கும்’ என்றேன்.

ரஜினி ராம்கி தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கிருபா தன் மனைவியுடன் வந்திருந்தார்.

நிறைய பேர் என்னிடம் ‘தினமும் தோழர் தோழர்னு எழுதுறீங்களே, யாருங்க அந்த தோழர்’ என்றார்கள். எல்லோரிடமும் மருதன் பற்றிச் சொன்னேன்.

யுவன் சந்திரசேகரனிடம் இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அவரது நாவல் அல்லது குறுங்கதைகள் (நீங்களுமா?!) தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். உயிர்மை அரங்கில் அதைப் பார்க்கத் தவறிவிட்டேன்.

லக்கிலுக்கும் அதிஷாவும் வந்து, கடை போட்டிருக்கும் பதிப்பாளர்களைவிட அதிகமுறை வந்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தார்கள். அதிஷா சந்தனப் பொட்டு வைத்திருந்தார். லக்கிலுக் பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் போட்டிருந்தார்.

நான் விஜய பாரதம் ஸ்டாலில் ‘மகாபாரதம்’ சொற்பொழிவு சிடி வாங்கினேன். 30 மணி நேரம் ஓடுமாம்! ஜி ஜி என்றழைத்தார்கள். ஸ்ம்ஸ்க்ருத பாரதி நடத்தும் சமிஸ்கிருத வகுப்புகள் பற்றிய தகவலைத் தந்தார்கள்.

பின்குறிப்பு: ஒருவர் அரக்கபரக்க வந்து என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் எங்க இருக்கு’ என்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஜி’க்கு விஜயபாரதம் அரங்குக்குக்கு செல்லும் வழியைக் காட்டி வைத்தேன்.

சுகுமாரன் விஷயத்தைப் பற்றி சுகா எழுதியிருக்கும் ஒரு சிறு பதிவு இங்கே.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 09)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

ஒன்பது நாள்களில் விற்காத விற்பனையை இந்த இரண்டு நாள்களில் எதிர்பார்க்கும் பதிப்பாளர்களின் வினோத எண்ணத்தை நினைத்தபடியே இப்பதிவை எழுதுகிறேன். 20 பந்துகளில் 44 ரன்கள் எடுக்கவேண்டியிருக்கும்போது, வெங்கடபதி ராஜு திடீரென்று சிக்ஸராக அடித்து இந்தியா ஜெயித்துவிடும் என்று நினைத்துக்கொண்டு சீரியஸாக கிரிக்கெட் பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கிரிக்கெட்டைப் போலவே புத்தகக் கண்காட்சியும் யாராலும் கணிக்கமுடியாத விளையாட்டாகிவிட்டது. காணும் பொங்கலன்று புத்தகங்களைக் காணக்கூட மக்கள் வரவில்லை. எல்லோரும் கடற்கரையிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் தஞ்சமடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

வழக்கம்போல உணவு அரங்குகளில் கூட்டத்துக்குக் குறைவில்லை. அந்த வழியில் நடக்கவே முடியவில்லை. இயற்கைப் பழங்கள் ஒரு தட்டு 15 ரூபாய். இந்தப் புத்தகக் கண்காட்சியின் சாதனை விற்பனை இதுவாகத்தான் இருக்கமுடியும். சாதனை ஏதோ ஒன்றில் வந்தால் சரிதான்.

நியூ ஹொரைசன் மீடியாவின் ‘நலம் வெளியீடு’ அரங்கில் நல்ல கூட்டம் இருக்கிறது. உடல்நலம் சார்ந்த எளிய தமிழ்ப் புத்தகங்களின் தேவையை இவை உணர்த்துகின்றன. உடல்நலம் சார்ந்த, தீவிர இலக்கிய நடையில் எழுதப்பட்ட புத்தகங்கள் உள்ளன. சாளரம் வெளியிட்ட குழந்தைகள் பற்றிய புத்தகம், அடையாளம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன.

கிழக்கு அரங்கிற்கு கவி (சன் பண்பலையில் ’சின்னதம்பி பெரியதம்பி’ நிகழ்ச்சியில் பெரிய தம்பியாகக் குரல் கொடுப்பவர்) கடை மூடும் நேரத்தில் வ்ந்தார். பண்பலையில் வரும் நிகழ்ச்சிகளில் நான் கேட்டவற்றில் எனக்குப் பிடித்த ஒரே நிகழ்ச்சி இது மட்டுமே. பெரிய தம்பி திருநெல்வேலிகாரராக இருக்கவேண்டும் என நினைத்திருந்தேன். அவர் மயிலாடுதுறைக்காரராம். மயிலாடுதுறையிலிருந்து கேள்வி கேட்டே பிரபலமானவர் தொடங்கி, இப்படி நெல்லை மொழியில் பேசி பிரபலமானவர் வரை பலர் இருக்கிறார்கள் போல. 🙂 இன்று கிழக்கு பதிப்பகம் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ‘யாரும் போகாதீங்க’ன்னு சொல்லணும் என்றார். ’என்ன வேணும்னா சொல்லுங்க’ என்று சொன்னேன்.

சாதத் ஹஸன் மண்ட்டோவின் படைப்புகள் புத்தகத்தை புரட்டியபோது கண்ணில் பட்டது.

பிழை:

வயிற்றை மிகச் சுத்தமாகக் கிழித்துக்கொண்டு அந்தக் கத்தி சரியான நேர்க்கோட்டில் அவனின் தொப்புளுக்குக் கீழ் இறங்கியது.

அதில் அவனின் பைஜாமா நாடாவும் வெட்டப்பட்டது.

கத்தியைப் பிடித்திருந்தவனிடமிருந்து, அந்த வார்த்தைகள் வருத்ததோடு வெளியேறியது. “ச்சே… ச்சே… நான் தவறு செய்துவிட்டேன்.”

இப்புத்தகம் நல்ல வாசிப்பனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். ‘சஞ்சாரம்’ இதழில் வெளியாகியிருந்த சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களைப் படித்தபின்புதான் இந்த நூலை வாங்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஏற்கெனவே இப்புத்தகம் நிழல் வெளியீடாக வெளிவந்து, பதிப்பில் இல்லாமல் இருந்தது. இப்போது புலம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களும் புத்தகமாக வெளிவந்துள்ளது.

நர்மதா பதிப்பகத்தில் ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’ புத்தகம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஆசிஃப் மீரான் சிலாகித்த புத்தகம் இது. நெல்லை வட்டார மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என நினைக்கிறேன். இன்று நேரமிருந்தால், புரட்டிப் பார்த்து வாங்கவேண்டும். நெல்லை கண்ணன் எழுதியது.

சுகுமாரன் வந்திருந்தார். சுகாவிற்கு நடந்த கதை என்ன என்று கேட்டார். சொன்னேன். இருவரும் சேர்ந்து சிரித்தோம். கவிதைப் புத்தகத்தைப் போன்ற, குறைந்த செலவிலான கையெறிகுண்டு வேறொன்று இருக்கவேமுடியாது.

இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. இரண்டு நாள்களில் நல்ல கூட்டம் வரும் என்று வழக்கம்போல நம்புகிறோம். நாளையும் வழக்கம்போல எழுதவேண்டிய நிலை வந்துவிடக்கூடாது.

பின்குறிப்பு 1: பத்ரி ‘ஆஞ்சநேயர் வடை’ கொண்டு வந்துகொடுத்தார். சில நாள்களுக்கு முன்பு அனுமன் ஜெயந்தி வந்தபோது, பல கோவில்களில் இதை பிரசாதமாகக் கொடுத்தார்கள். வடை என்றால் வடையல்ல, தட்டை போல இருக்கும். கடிக்கும்போது படபடவென சத்தம் கேட்கும். உடைவது பல்லா தட்டையா என்பதைக் கண்டறிய சில நொடிகள் எடுக்கும். ‘இதை சாப்பிட்டதாலதான் ஆஞ்சநேயர் வாய் வீங்கிட்டோ’ என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த வடை நன்றாக இருந்தது. எல்லாம் வல்ல தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன்… சே… எல்லாம் வல்ல ஆஞ்சநேயர் பதிப்பாளர்களைக் காக்கட்டும்!

பின்குறிப்பு 2: இன்றும் தோழர் வந்திருந்தார். சில ஆங்கிலப் புத்தகங்களை கையில் வைத்திருந்தார். பழைய புத்தகக் கடையில் வாங்கியவையா அல்லது அங்கு விற்பதற்கா எனத் தெரியவில்லை. நானும் இன்று சில ஆங்கிலப் புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ‘நேரம் ஓட்டலாம்’ என்றிருக்கிறேன்.

பின்குறிப்பு 3: சுரேஷ் கண்ணன் ஃபோன் செய்து ‘என்னென்ன சிற்றிதழ்கள் கிடைக்கின்றன’ என்று கேட்டார். இவர் திருந்த வாய்ப்பில்லை போலிருக்கிறது.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 08)

பதிவுவகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

நேற்றுமுந்தினம் போலவே நேற்றும் கூட்டம் இருந்தது. விடுமுறைக்கான கடும் கூட்டம் இன்னும் வரவில்லை. சென்ற ஞாயிறன்று இருந்த கூட்டத்தைப்போல் இதுவரை கூட்டம் வரவில்லை. இன்னும் மீதமிருக்கும் மூன்று நாள்களில் ஏதேனும் ஒருநாளில் அந்த அதிகபட்ச கூட்டத்தை புத்தகக் கண்காட்சி காணும் என்று நினைக்கிறேன். அது பெரும்பாலும் வரும் ஞாயிறாக இருக்கலாம்.

நேற்று காலையில் மந்தமாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நான்கு மணிக்குப் பின்பு பரபரப்பாகியது. மக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். இந்த முறை சொதப்பியது, புத்தகக் கண்காட்சி அரங்கித்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் உணவு அரங்குகள். அங்கு மக்கள் தேங்கிவிடுகிறார்கள். அவர்கள் மற்ற பதிப்பகத்திற்குள் செல்லுவதில்லை. அல்லது அங்கேயே கண்ணில் படும் அரங்குக்குள் மட்டுமே சென்றுவிட்டு மற்ற அரங்குகளைப் பார்க்காமல் போயிவிடுகிறார்கள். இந்த உணவு அரங்குகளை அடுத்தமுறை கண்காட்சி அரங்குக்குள் வைக்காமல் தனியே வெளியே வைக்கவேண்டும். குறைந்தபட்சம், அங்கு நடக்கமுடியாமல் அவதிப்படும் வாசகர்களுக்காவது நன்மையை உண்டாக்கும். என்னென்ன உணவு விடுதிகள் இருக்கின்றன? வடை, பஜ்ஜி, போண்டா விற்கும் உணவகம், ஐஸ்கிரீம் விற்கும் உணவகம், காஃபி, தேநீர்க் கடை, பழங்கள் விற்கும் உணவு அரங்கு, பழச்சாறு கடை, முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு விற்கும் கடை – இத்தனையையும் மீறி ஒரு வாசகன் ஒரு புத்தகத்தைக் கண்டடையவேண்டும். மனதில் உறுதி வேண்டும்.

புனித வியாழன். தோழர் வ்ந்திருந்தார். உடனே சென்று கைகுலுக்கிப் பேசலாம் என்றால், தீவிரமாக கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவர் கை வலித்து ஓய்ந்ததும், மெல்ல அருகில் சென்று ‘ஸ்டாலினியப் படுகொலைகள்’ புத்தகம் எங்கே கிடைக்கும் என்றேன். ‘தமிழினில போட்டிருக்காங்க. பின் தொடரும் நிழலின் குரல்ன்ற பேர்ல வந்திருக்கு’ என்றார்.
நிறையப் பேர் பாராவைத் தேடினார்கள். மாயவலியில் அவர் இருப்பதைச் சொன்னேன்.

இன்று தினமலரில் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும் அரங்கு என்று இரண்டு அரங்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று, உயிர்மை பதிப்பக அரங்கு. மற்றொன்று, மணிமேகலைப் பிரசுரம். மனுஷ்யபுத்திரன் இதற்கெல்லாம் மனமுடைந்துவிடுபவர் அல்ல என்பது என் திண்ணம்.

நேற்று சில பதிப்பகங்களைப் பார்வையிட்டேன். புலம் என்கிற பெயரில் பதிப்பகத்தை ஆரம்பித்திருப்பவர் நண்பர் லோகநாதன். காலச்சுவடில் இருந்தவர். நல்ல உழைப்பாளி. புத்தகம் பதிப்பிக்கும் துறையில் பல நுணுக்கங்கள் அறிந்தவர். அட்டையில் ஒரு சில இடங்கள் மட்டும் மேடாக இருப்பது, சில இடங்கள் மின்னும் நிறத்தில் இருப்பது என்பன போன்ற சில நுணுக்கங்களில் (இவை ஏற்கெனவே வந்தவைதான் என்றாலும்) புத்தகம் வந்தால் அவற்றின் நோக்குத்தரம் எவ்வளவு உயர்வாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தியவர்.

நேற்று கண்ணில் பட்ட, கவனத்தை ஈர்த்த மேலும் சில புத்தகங்கள்.

அஞ்சுவண்ணம் தெரு, கூனன் தோப்பு – தோப்பில் முகமது மீரான் – அடையாளம்
மஹாகவியின் ஆறு காவியங்கள் – தொகுப்பு: எம்.ஏ. நுஃமான் – அடையாளம்
இலங்கையில் சமாதானம் பேசுதல் – அடையாளம்
புத்தம் அருள் அறம் – ஜி.அப்பாத்துரை – ஆழி

நண்பர் விஜய மகேந்திரன் வ்ந்திருந்தார். தோழமை பதிபக்கத்தின் வெளியீடாக வரவிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் எனது ஒரு சிறுகதையும் இடம்பெறுகிறது. அப்புத்தகத்தை வாங்க நாற்பது, ஐம்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னேன். கடும் அதிர்ச்சியுடன் சிரித்தார். தமிழினி மணி, ’புத்தகச் சந்தைக்கு இத்தனை பெரிய இக்கட்டு வருமென்று நினைக்கவில்லை’ என்றார்!

பின்குறிப்பு: இதை இப்போது புத்தகக் கண்காட்சியில் இருந்து உள்ளிடுகிறேன். ஓர் அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘முக்கிய அறிவிப்பு. வாசகர் ஒருவர் தங்கள் புத்தகங்களோடு சேர்த்து பில்புக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தங்கள் புத்தகங்களை வாசகர்கள் சரி பார்த்து, பில் புக் இருந்தால் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ தொடர்ந்து பில் போட்டுக்கொண்டே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்பதுதான் இதன் நீதி என்க.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 07)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

பொங்கலன்று கூட்டம் குவியும் என்கிற நம்பிக்கையும் மெல்ல கரைந்தது. கூட்டம் சுமாராகவே இருந்தது. பெரும்பாலான பதிப்பாளர்கள் கடந்தமுறை நடந்த விற்பனையில் பாதியாவது தாண்டுமா என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு பதிப்பக நண்பர் புத்தகக் கண்காட்சி வைத்த இடம் சரியில்லை என்று சொன்னார். என்று இங்கு வைக்கத் தொடங்கினார்களோ அப்போதிருந்தே விற்பனை இல்லை என்றும் இந்தமுறை கடுமையான விற்பனைச் சரிவு என்றும் அவர் சொன்னார். இன்னொரு பதிப்பகத் தோழர் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியே இது என்றார். எப்படி இருந்தாலும், கூட்டம் குறைவாக இருந்தது என்பதுதான் விஷயம். மாலை நான்கு மணிக்கு மேல் கொஞ்சம் கூட்டம் வரத் தொடங்கியது.

நேற்று நான் சில தமிழ் பதிப்பக அரங்குகளைச் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்களைப் பார்த்தேன். சில புத்தகங்களைக் குறித்து வைத்துக்கொண்டேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றின் பட்டியல்.

வாங்கியவை:

பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் – நா.வானமாமலை – அலைகள்
காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் – கருப்புப் பிரதிகள்
ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – உயிர்மை
ஊமைச் செந்நாய் – ஜெயமோகன் – உயிர்மை
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா – உயிர்மை
உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி
எனது இந்தியா – ஜிம் கார்பெட் – காலச்சுவடு
பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன் – காலச்சுவடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் – திருச்செந்தாழை – காலச்சுவடு

குறித்து வைத்துக்கொண்டவை:

உறவுகள் – எஸ். பொ. – மித்ர வெளியீடு
உலகை உலுக்கிய திரைப்படங்கள். – போதி வெளியீடு
மும்பை 26/11 – வினவு – பதிப்பகம் நினைவில்லை
மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு – சந்தியா
ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் – சந்தியா
உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம் – உயிர்மை
அங்கிள் சாமுக்கு மண்டோ கடிதங்கள் – பயணி வெளியீடு
சாதத் ஹஸன் மண்டோ படைப்புகள் – புலம் வெளியீடு
சிறுவர் சினிமா பாகம் 2 – விஸ்வாமித்ரா – வம்சி வெளியீடு
தவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு – உயிரெழுத்து

இன்று நேரமிருந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு மேலும் சில புத்தகங்களை உள்ளிடுகிறேன்.

புத்தகக் கண்காட்சி நிறைவடையும் தருவாயில் திடீரென்று ஒலிபெருக்கியில் ‘ஃபயர் சர்வீஸ் உடனே வரவும்’ என்று நான்கைந்து முறை பதட்டத்துடன் அறிவித்தார்கள். அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் பதட்டமடைந்து வெளிவாயிலுக்கு ஓட, சிறிய பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்பு காந்தி கண்ணதாசன் ஒலிபெருக்கியில் ‘சிறு சார்ட் சர்க்யூட் மட்டுமே என்றும் அதனால் பதட்டப்பட ஒன்றுமில்லை’ என்று அறிவித்தபின்பே கூட்டம் அமைதியானது. தேவையான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சிறிய சார்ட் சர்க்யூட்டுக்கு முதலில் இப்படி மைக்கில் அலறாமல் இருந்தால் இந்த சிறிய பதட்டத்தையும் தவிர்த்திருக்கமுடியும். இதை காந்தி கண்ணதாசனும் ஒலிபெருக்கியில் சொன்னார்.

இன்றைய புத்தகக் கண்காட்சியில் இப்போது இருக்கிறேன். அங்கிருந்தபடியே இப்பதிவை உள்ளிடுகிறேன். கூட்டம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பதிப்பாளர்களை இன்று எப்படி காப்பாற்றுகிறது என்று பார்க்கலாம்.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 06)

வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

ஒவ்வொரு நாளும் ஒரே செய்தியை மாற்றி மாற்றி எழுதும் டைரிக் குறிப்பு போல, இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செய்திகள் வருகின்றன என்பதை நானே உணர முடிகிறது. சென்ற வருடமும் இப்படித்தான் நிகழ்ந்தது. இதைத் தவிர்க்கமுடியாது. அதனால் என் டைரிக்குறிப்பைத் தொடந்து படிக்கவும்.

நேற்று முழுநாள். ஒரு முழுநாளுக்கான கூட்டம் சிறிதும் கிடையாது. அதிலும் முதல் மூன்று மணி நேரங்களில் கூட்டமே இல்லை என்று சொல்லலாம். ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வந்திருந்தார்கள். ப்ராடிஜி அரங்குக்கு வந்தவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஆளுக்கு 100 ரூபாய் வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். எல்லோருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்கும் பழரசம், உணவு வகைகளை வாங்கி உண்ணவே விருப்பம். குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட என்ன புத்தகங்கள் முக்கியம் என்பதுதான் என் எண்ணமும். ப்ராடிஜியின் அரங்கிற்கான எதிர் அரங்கு இஸ்கான் அரங்கு. அங்கு பள்ளி மாணவர்கள் சென்றவுடன், அங்கிருந்த காவியுடை மனிதர், எல்லாப் பிள்ளைகளையும் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ராடிஜி அரங்கில் இருந்த பத்ரி ‘இந்த ஹிந்துத்துவா…’ என்று என்னவோ சொல்ல ஆரம்பித்தார். நானும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா சொல்ல ஆரம்பித்ததால் அவர் என்ன சொல்ல வந்தார் என்று காதில் விழவில்லை. 🙂 கிழக்கு பதிப்ப்கத்தின் வரிசையில் விஜயபாரதம் அரங்கும், கிழக்கு பதிப்பகத்துக்கு அடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் அரங்கும், எதிரே நித்யானந்த திவ்ய பீடமும் (இன்னொரு பக்கம் பாரதி புத்தகாலயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை) ப்ராடிஜிக்கு எதிரே இஸ்கானும் அமைந்ததெல்லாம் இயற்கையாக அமைந்ததுதான். அதனை எல்லாம் அவன் செயல் என்றும் சொல்லலாம்.

தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார். அந்த நண்பர் வருடா வருடம் இன்னும் அதிகப் பணத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

தேசிகன் வந்திருந்தார். சத்யஜித் ரேயின் இரண்டு புத்தகங்களை வாங்கினார். நியூ ஹொரைசன் எல்லா விஷயங்களையும் யூ.எஸ். ஸ்டைலில் செய்வதால், வாங்கிய புத்தகம் பிடிக்கவில்லை என்றால் திரும்பக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்ளும் யூ.எஸ். ஸ்டைலையும் அறிவிக்க ஆலோசனை வழங்கினார். தமிழவன், கோணங்கி நிலையையெல்லாம் நினைத்துப் பார்த்தேன். திகிலாகத்தான் இருந்தது.

மீண்டும் தோழர். எத்தனை தடவை தோழரைப் பற்றி எழுதுவேன் என நினைக்கக்கூடாது. தோழர் செய்திக்கு மேல் செய்தியைத் தந்துகொண்டிருக்கிறார். புத்தக கண்காட்சியின் வளாகத்திற்கு வெளியே நடைபாதையிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து தலைகாணி சைஸில் இருக்கும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். எல்லாம் சேர்ந்து ஐநூறு ரூபாய்தான் என்றார். அதை பழைய புத்தகக் கடையில் விற்றது அதை வாங்கிய இன்னொரு தோழராக இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. இந்தத் தோழர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அன்னார் வாங்கிய புத்தகங்களுள் ஒன்று ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை.’

இன்ஃபோ மேப்ஸ் கடையில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை பத்ரி வாங்கினார். நானும் அதில் சில புத்தகங்களை வாங்க நினைத்திருக்கிறேன். காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க நூலகங்களில் அலைந்தது, சிறுவர் மலர் படிக்க அதிகாலையிலேயே தினமலர் நாளிதழ் வாங்கும் நண்பன் வீட்டுக்குச் சென்று காத்திருப்பது போன்ற விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பின்பு ராணி காமிக்ஸ். ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கும் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். இல்லையென்றால், வீட்டில் காமிக்ஸிற்கும் ஒட்டுமொத்த தடை விழுந்துவிடும். காமிக்ஸில் தொடங்கி, அம்புலிமாமா, பாலமித்ரா வழியாக, விஜயசேகரனின் வீர சாகஸங்கள் போன்ற புத்தகங்கள் வழியாக ஒருவர் சிறந்த புத்தகங்களை அடைய முடியும். சிறுவர்களுக்கான, மகிழ்ச்சியைத் தவிர வேறு எவ்வித நோக்கமுமற்ற இந்தப் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு நல்ல அடித்தளம் கொடுப்பவை.

’உன்னதம்’ மாத இதழாக வெளி வந்திருக்கிறது. கௌதம சித்தார்த்தன் எனக்கு ஓர் இதழைக் கொடுத்தார். படிக்கவேண்டும். இடையில் வராமல் இருந்த உன்னதம் இப்போது மாத இதழாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து வரும் என்று நம்புவோம். ‘பள்ளிகொண்டபுரம்’ புத்தகத்தை கிளாசிக் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதையும் வாங்கவேண்டும். நீண்டநாள் வாங்க நினைத்த புத்தகம் இது. சில புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பையும் வாங்க நினைத்திருக்கிறேன். திருச்செந்தாழையின் ஒரு சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.

இன்றாவது என்னைக் கவரும், என் ரசனைக்குட்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தரமுடியுமா என்று பார்க்கிறேன்.

Share