Archive for சுற்றுலா

சில புகைப்படங்கள்

கடந்த மாதம் திருப்பதிக்குச் சென்றிருந்தபோது எடுத்திருந்த வெகு சில புகைப்படங்களை வலையேற்ற நினைத்திருந்தேன். இப்போதுதான் முடிந்தது.

கீழ்த்திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும்போது கடும் மழை பெய்தது. வளைந்து வளைந்து செல்லும் சாலைகளில் கடும் மழையில் மறைந்துபோன சாலைகளில் பிரயாணித்தது த்ரில்லிங்காகவும் பயமாகவும் இருந்தது. அந்த மழையும் அதைத் தொடர்ந்து எழுந்த காலநிலையும் திருப்பதி சுற்றுலாவை மிகவும் இனிமையாக்கியது.

சில புகைப்படங்கள்.

ராமர் பாதம் காணும் இடத்தில் இருந்து எடுத்த படம். கீழ்த்திருப்பதியைக் காணலாம்.

-oOo-

Raamar pAtham

ராமர் பாதம். வானிலிருந்து கீழிறங்கிவந்த பெருமாளின் பாதம் பட்ட பகுதி என்பது ஐதீகம்.

-oOo-

Photobucket - Video and Image Hosting

சிலைகளின் தோரணம். கற்கள் தானாகவே தோரணம் போல் அமைந்த காட்சி. பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று அங்கிருந்த அறிவிப்புப் பலகை சொல்லியது. வானிலிருந்து கீழிறங்கிய பெருமாள் இங்கேதான் முதலில் தங்கியதாக ஐதீகம் சொல்லுகிறது.

-oOo-

Photobucket - Video and Image Hosting

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து தங்கக்கோபுரத்தின் தோற்றம்.

-oOo-

Photobucket - Video and Image Hosting

ஒரு மரத்தின் பிடித்த தோற்றம்.

-oOo-

Photobucket - Video and Image Hosting

ஐந்து மொட்டைகளின் அட்டகாசம்.

-oOo-

அஷ்டே!

Share

நெருப்புக்கோழி – Ostrich

 

Ostriche

Ostrich

மஸ்கட்டிலிருந்து துபாய் செல்லும் வழியிலுள்ள நெருப்புக்கோழிப் பண்ணைக்குச் சென்றதையடுத்து இந்தக் கட்டுரை. அன்றைக்கு நெருப்புக்கோழிகள் ஐயோ பாவம். இன்றைக்கு நீங்கள்.

நெருப்புக்கோழிகளை ஆங்கிலப்படங்களிலும் மிருகக்காட்சி சாலையில் வலைக்கம்பிகளுக்குள்ளாகவும் கண்டது மட்டுமே என் முந்தைய அனுபவமாக இருந்தது. நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டு நெருப்புக்கோழிப் பண்ணையின் கம்பிக் கதவுகளை நெருங்கும்போதே மிக அன்பாக வரவேற்றது நெருப்புக்கோழிக்கூட்டம்.

நெருப்புக்கோழியின் உடலெங்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் (மாட்டு)ஈக்கள் காருக்குள் நுழைந்து எரிச்சல் மூட்டிக்கொண்டிருந்ததையும் மீறி, காரை நோக்கி விரைந்து வரும் நெருப்புக்கோழிகளைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. நெருப்புக்கோழி மிக அருகில் வந்ததும் கை தானாக காரின் கண்ணாடியை ஏற்றிவிட, நெருப்புக்கோழிகள் கார் கண்ணாடிகளைக் கொட்டத் தொடங்கின.

நெருப்புக்கோழிகள் எந்த வகையானவை, அவற்றிற்கு மனிதர்களைத் தாக்கும் குணம் எப்போது வரும் (பண்ணையின் காவலாளிகள் கோழிகளுடன் பழகுவது மாதிரி நெருப்புக்கோழிகளுடன் பழகுவதைக் கண்டாலும் மனதிற்குள் ஒரு பயம் இருந்துகொண்டுதான் இருந்தது.) போன்ற விவரங்கள் தெரியாததால் முதலில் கொஞ்சம் தள்ளியே இருந்தேன். சீனப்படங்களில் லீ மாதிரி ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறுகாலைத் தூக்கி இடது தோளில் வைத்து ஏறி, வானத்தில் பறந்து டைவ் அடித்து உச்சந்தலையில் ஒரு கொத்து கொத்தினால் யார் காப்பார்கள் என்ற எண்ணம் மனதின் ஓர் ஓரத்தில் சுழன்று கொண்டே இருந்ததால் “துஷ்டாரைக் கண்டா தூர விலகு” என்று முணுமுணுத்துக்கொண்டு விலகிப்போனேன். எங்களுடன் வந்திருந்த ஐந்து தமிழ்க்குடும்பங்களிலுள்ள எல்லா வீரர்களுக்குள்ளும் இந்த எண்ணம் இருந்திருக்கவேண்டுமென்பதே என் யூகம்.

காரை விட்டு இறங்கி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு நெருப்புக்கோழிகளை அருகில் சென்று காணத் தொடங்கினோம். போகப் போக நெருப்புக்கோழிகள் மிண்டாப்பூச்சிகள் என்று தெரிந்துபோனது. அதன்பின் எல்லாரும் அதனருகில் சென்று நின்று கொண்டு ·போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நெருப்புக்கோழிகள் மீதிருந்த பயம் முற்றிலும் விலகிப்போனது. நேரம் ஆக ஆக நெருப்புக்கோழிகள் எங்களைப் பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தது!

ஓரிடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த சோளத்தை தின்று கொண்டிருந்த நெருப்புக்கோழிகள் எங்களைக் கண்டதும் விலகுவதும், நாங்கள் அந்த இடத்தை விட்டு விலகிய பின்பு மீண்டும் சோளம் வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நெருங்குவதுமாக இருந்தன. குணத்தில் வெறும் கோழிகள் போல்தாம் என நினைத்துக்கொண்டேன்.

நெருப்புக்கோழிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழத் தேவையான சூழ்நிலை பண்ணையில் நிலவுகிறது. நெருப்புக்கோழியின் முட்டை, சிறிய குஞ்சு, கொஞ்சம் வளர்ந்த நெருப்புக்கோழி, முற்றிலும் வளர்ந்து இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிட்ட நெருப்புக்கோழிகள் என எல்லா நிலையிலும் நெருப்புக்கோழிகளைக் காணலாம்.

Ostriche Eggs Ostriche Stage -1 Ostriche Stage-2 Grown Ostriches

நெருப்புக்கோழியின் முட்டை அளவில் பெரியது; எடை அதிகம் கொண்டது. நெருப்புக்கோழியின் முட்டையோட்டில் பல விதமான வண்ணங்கள் தீட்டி, ஓவியங்கள் வரைந்து விற்கிறார்கள். நெருப்புக்கோழியின் இறகைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட “வாலுள்ள பேனா” கிடைக்கிறது. இறகையும் தனியே விற்கிறார்கள்.

நெருப்புக்கோழியின் குணநலன்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். அவையாவன:

1. ஆண் நெருப்புக்கோழிகள் கருப்பு மற்றும் வெள்ளை நிற இறகுநுனிகளையும் சிவப்புக் கால்களையும் கொண்டுள்ளன. இனப்பெருக்க காலத்தில் சிவப்பு நிறச் சொண்டையும் கொண்டிருக்கின்றன. பெண் நெருப்புக்கோழிகள் சாம்பல் நிற இறகு நுனிகளைக் கொண்டுள்ளன.

2. நெருப்புக்கோழிகள் பாலைவன வாழிகள். அதிக வெப்பத்தைத் தாங்க வல்லவை. (ஒரு காலத்தில் ஓமானில் மட்டுமே நெருப்புக்கோழிகள் இருந்தன)

3. நல்ல நிலையிலுள்ள பெண் நெருப்புக்கோழி இனப்பெருக்க காலத்தில் சராசரியாக இரண்டு நாளுக்கொருதரம் ஒரு முட்டை இடும். (ஓமானில் குளிர்காலம் நெருப்புக்கோழிகளின் இனப்பெருக்க காலமாகும்)

4. நெருப்புக்கோழிகள் தங்களைத் தாக்கவரும் உயிரினங்களை கால்களைக் கொண்டு உதைப்பதன் மூலம் தங்களையும் தங்கள் கூடுகளையும் தற்காத்துக்கொள்கின்றன. ஒரு நெருப்புக்கோழியால் சராசரியாக 500 கிலோகிராம் ஆற்றலுடன் உதைக்கமுடியும். ( நெருப்புக்கோழியின் கால்நகத்தால் ஏற்படும் வலி ஒரு மனிதனை மரணிக்கச் செய்யும் அளவு வலுவானது)

5. நெருப்புக்கோழிகளின் கண்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவுவரைப் பார்க்கும் திறனுள்ளவை. அவற்றின் மூளையின் எடை 40 கிராம் மட்டுமே. இதனால் நெருப்புக்கொழிகள் தங்கள் உள்ளுணர்வைச் சார்ந்தே செயலாற்றுகின்றன.

6. நெருப்புக்கோழிகளின் முட்டைகள் பலவித அழகுப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் தோல், தோல்பொருள்கள் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

7. ஒரு நெருப்புக்கோழிமுட்டையின் சராசரி எடை 1.5 (ஒன்றரை) கிலோகிராம். (18 முதல் 24 கோழிமுட்டைகளுக்கு ஈடாக நெருப்புக்கோழியின் ஒரு முட்டையைச் சொல்லலாம். நெருப்புக்கோழியின் ஒரு முட்டையைக் கொண்டு ஒரு குடும்ப ஆம்லெட் போடலாம்). ஒரு நெருப்புக்கோழிமுட்டை 250 கிலோகிராம் வரையிலான எடையைத் தாங்கவல்லது.

8. நெருப்புக்கோழி முட்டையில் அதிகக் கொழுப்புச்சக்தி இருந்தாலும் அதன் உடற்கறி மீனை விடக் குறைந்த அளவே கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளது.

9. நெருப்புக்கோழி சராசரியாக 130 -150 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது.

இத்தனைப் பராகிரமங்கள் நிறைந்த நெருப்புக்கோழி சுத்த சைவம் என்பது ரொம்ப முக்கியம். 😉

பண்ணையில் இருந்து வெளியே வரும்போது கூட வந்த நண்பர்கள் சொல்லிக்கொண்டு வந்த “கமெண்டுகள்” ரொம்ப முக்கியமானவை.

“ஆஸ்ட்ரிச்னு சொல்றாளே.. நெருப்புக்கோழியா வான்கோழியா?”

“நெருப்புக்கோழி இங்க ஏதுடா? வான்கோழிதான் எல்லாம்”

“பார்த்தாலே தெரியறதே.. நெருப்புக்கோழி வாய் திறந்தா நெருப்புக் கொட்டும்பா.. இது வாயைத் திறந்து மாட்டுஈயைன்னா கொட்டுறது”

“வான்கோழிக்கு இத்தனைப் பெரிய பண்ணை வெச்சிருக்கான்னா ஆச்சரியம்தான். நெருப்புக்கோழிக்கு வைப்பாளோ?”

“நெருப்புக்கோழி பக்கத்துல போய் நின்னா தூக்கிண்டு போயிடப்போறது”

“பொம்பளை நெருப்புக்கோழின்னா தேவலாம்”

“நாட்டி தாத்தா”

இடையில் புகுந்து நெருப்புக்கோழிப்பண்ணையை இரண்டு மணி நேரம் சுத்திப் பார்த்துவிட்டு, வான்கோழிப்பண்ணையான்னு கேட்டு நெருப்பை அள்ளிக் கொட்டாதீரும்வோய் என்று சொல்லிவிட்டு வந்தோம்.

Bowing Ostriche

சீ யூ பை பை

Share