Archive for சிறுகதை

கொல்லப்பட்டவர்கள் – சிறுகதை

அவன் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த அந்தக் குறுகிய சந்திலிருந்து இன்னொரு சிறிய முடுக்கு பிரிந்து சென்றது. அதனுள் மூக்கைப் பிடித்துகொள்ளாமல் நடக்கமுடியாது. மூத்திர நெடி கடுமையாக இருக்கும். அந்த மூத்திரச் சந்திற்குள் சென்றான் அவன். அவன் வாய் அவனையுமறியாமல் ஏதோ உளறிக்கொண்டிருந்தது. மதுவின் கட்டுப்பாட்டில் அவன் இருக்கும்போது அவனுக்கு இந்த உலகம் மிக எளிதாகிவிடுகிறது. அவன் உளறிக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொண்டே உளறிக்கொண்டிருந்தான். ஆனால் என்ன உளறுகிறான் என்பது பற்றிய பிரக்ஞை அவனிடம் இல்லை.

இன்று சில பேரை அவன் கொல்லவேண்டியிருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தான். அவனது நிலையில் அவன் இல்லை என்றாலும் என்ன செய்யப்போகிறான் என்பது பற்றிய தீர்மானமான எண்ணம் இருந்தது. உளறிக்கொண்டிருந்தாலும் உள்மனது என்னவோ அவன் கொல்லப்போகிறவர்களைப் பற்றிய பட்டியலைத் துல்லியமாய்த் தயாரித்துவிட்டிருந்தது. கொல்லும் முறைகளில் கூட இரண்டு மூன்று விதங்களை அவன் யோசித்துத் தேர்ந்திருந்தான்.

அவனுக்குப் பிறரைக் கொல்லும் எண்ணம் உதிக்கத் தொடங்கியது பதிமூன்றாம் வயதில்.

அன்றைக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்த ருக்மணி டீச்சர் பாடத்தில் மட்டுமே மும்முரமாக இருந்தாள். அவன் அமர்ந்திருந்த பெஞ்சின் முன்வரிசையில் இருந்த மாணவர்கள் கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்ப்பது மேற்படி புத்தகமாகத்தான் இருக்கவேண்டும் என்று அவன் யூகித்தான். அந்தப் புத்தகத்தைப் பார்த்தே தீருவது என்ற எண்ணம் அவனுக்கு வலுத்தது. மற்றவர்கள் கொஞ்சம் அசந்த நேரத்தில் அவன் அந்தப் புத்தகத்தைக் கைக்கொண்டுவிட்டான். பள்ளியின் கழிப்பறைக்குப் பக்கத்தில் செல்லும் சந்தில் நின்று அந்தப் புத்தகத்தை வாசிக்க அதைப் பிரித்தான். பக்கங்களில் பல இடங்களில் கிழிந்திருந்தன. பல புஷ்டியான பெண்கள் பல விதங்களில் நின்றிருந்தார்கள். அந்தப் புத்தகத்தை வரி விடாமல் வாசிப்பது என்றும் அதைப் பத்திரமாக வைத்திருப்பது என்றும் தேவைப்படும்போது எடுத்துப் படிப்பது என்றும் முடிவு செய்தான். அவன் எதிர்பாராதவாறு பியூன் முத்து அங்கு வந்தார்.

“என்னடா பண்ற?”

அவன் விழித்தான். அவர் அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பறித்துப் பார்த்தார். அவன் பிடரியில் தட்டி, “பிஞ்சுலயே பழுத்திட்டியா? போடா” என்று அதட்டி அவனை அனுப்பினார். அவன் பயந்துகொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினான். பிறகொரு சமயத்தில், அவர் சத்துணவு சமைக்கும் கூடத்தில் வைத்து அந்தப் புத்தகத்தைப் படிப்பதைப் பார்த்தான். அவனுக்குள் சொல்லமுடியாத கோபம் எழுந்தது. அவனுக்கு அவரைக் கொலை செய்தால் என்ன என்று தோன்றியது.

கொலை செய்யவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டதே ஒழிய அதற்கான மார்க்கங்கள் சுலபமில்லை என்பதை அவன் வெகு சீக்கிரமே அறிந்துகொண்டான். முத்து அவனைப் பார்க்கும்போதெல்லாம் கேலியாகப் பார்ப்பது போலவே அவனுக்குத் தோன்றும். அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும். மனதுக்குள் எப்படி அவரைக் கொல்வது என்றே யோசிப்பான். பள்ளி முடித்து, கல்லூரி சேர்ந்து அதைப் பாதியிலேயே டிஸ்கண்டினியூ செய்து, மெக்கானிக் வேலைக்கும் சேர்ந்துவிட்டான். அதுவரை முத்து அந்தப் பள்ளியில் பியூனாகவே இருந்தார். அவரைக் கொல்லும் எண்ணமும் அவனுக்கு வலுவிழந்துவிட்டிருந்தது.

மூன்று வாரங்களுக்கு முன்பு செக்கடி முக்கில் முத்துவை யாரோ கொன்றுவிட்டார்கள் என்று அவன் காதிற்குச் செய்தி வந்தது. ஓடிப்போய்ப் பார்த்தான். ரத்தவெள்ளத்தில் முத்து செத்துக்கிடந்தார். கந்துவட்டிக் கும்பல் கொன்றுவிட்டது என்று பேசிக்கொண்டார்கள்.

அவனுக்குள் முத்து பற்றிய எண்ணங்கள் தீவிரமாகக் கிளர்ந்தெழுந்தன. கொலை செய்யும் அளவிற்கு முத்து பாதகச் செயலை செய்யவில்லை என்றாலும், அன்றைய தினத்தில் அவன் எவ்வளவு அவமானம் அடைந்தான் என்பதும், முதன் முதலில் கொலை எண்ணம் உதித்தது முத்துவின் மேல் என்பதால் அவரைக் கொலை செய்வது அவசியம் என்பதும் அவன் நினைவிற்கு வந்தன. இன்று மிகத் தீர்மானமாய் முத்துவை மீண்டும் கொல்வது என்று முடிவெடுத்தான். அவனுக்குப் பதிமூன்று வயதுதான் என்றும் அவனே தீர்மானித்துக்கொண்டான்.

பள்ளிக்குப் பக்கவாட்டில் செல்லும் சந்துக்குள் சென்று பையன்களுக்குத் தெரியாமல் எடுத்த மேற்படி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். சற்று நேரத்திற்கெல்லாம், சொல்லி வைத்த மாதிரி முத்து வந்தார். அவர் சொல்லப்போகும் வசனங்கள் அவனுக்குத் தெரியும். “பிஞ்சுலயே பழுத்திட்டியா? போடா” என்று அவர் அதட்டினார். அவன் “பழுத்தா என்ன?” என்றான். முத்துவுக்கு என்ன சொல்வது என்று தெரியப்போவதில்லை. “ஏண்டா, நானே கஷ்டப்பட்டு புத்தகத்தை லவட்டிக்கிட்டு வந்தா, என்கிட்ட லவட்டிட்டு நீ படிக்கிறயா?” என்று சொல்லிக்கொண்டே, பின்பக்கம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவர் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினான். அவர் அலறிக்கொண்டே கீழே விழுந்தார். அவன் அவர்மேல் அமர்ந்து, அவர் வாயைப் பொத்திக்கொண்டு, அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்தவாறே அவரது குரல்வளையை அறுத்தான். முத்து செத்துப் போனார்.

சட்டையை உதறிக்கொண்டு, கையிலிருந்த கத்தியைத் தூரப் போட்டுவிட்டு அவன் அந்த முடுக்கை விட்டு வெளியேறினான்.

அவனது கொலைப் பட்டியலில் அடுத்து உள்ளது மல்லிகா.

பெண் என்கிற போதை அவனுக்குள் ஆழ வேரூன்றிக்கொண்டிருந்த சமயத்தில் மல்லிகா அவனுக்குப் பரிட்சயமானாள். மல்லிகா அவனுக்கு ஜூனியர். அவளும் அவனைப் போலவே பி.காம் எடுத்திருந்தாள். அடிக்கடி அவனிடம் சந்தேகங்கள் கேட்பாள். அவனுக்கு எதுவும் தெரியாது என்றாலும் தெரிந்த மாதிரி நான்கு வார்த்தைகள் சொல்லிவைப்பான்.

மல்லிகா எடுப்பாக இருப்பாள். அவன் முன் வளைய வளைய வருவதாக அவன் நண்பர்கள் அவனிடம் சொன்னபோது அவளை ஆழ்ந்து பார்க்கத் தொடங்கினான். அவன் அவளது மார்பகங்களையே எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பான். இப்படி ஒரு பெண் இருக்கமுடியும் என்றே அவன் நம்பவில்லை. அவள் அத்தனைப் புஷ்டியாக இருந்தாள். அவன் அவளை அப்படிப் பார்க்கிறான் என்பது அவளுக்கும் தெரியும். அவளுக்குள் அதுகுறித்து பெருமையும் சந்தோஷமும் இருந்தது. அதைத் தாண்டி அவன் எதாவது செய்யமாட்டானா என்றும் ஏங்கினாள். அப்போது அவனுக்கு வயது இருபத்தொன்று இருக்கும். அவனைக் காமம் விடாமல் துரத்திய காலம். அவனது நண்பர்கள் வீட்டில் எல்லாரும் எங்காவது வெளியூருக்குப் போனால் டெக் மற்றும் கேசட்டுடன் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவான். கேசட் வாடகைக்கு விடும் அத்தனைக் கடைகளும் அவனுக்குப் பரிட்சயம். இரண்டே நிமிடங்களில் கேசட் வாங்கிக்கொண்டு வந்துவிடுவான். விதவிதமாகக் கேசட் வாங்குவதில் அவனுக்கு நிகர் யாரும் கிடையாது என்று அவனது நண்பர்கள் சொல்லும்போது அவன் மிகவும் பெருமை கொள்வான். மிருகங்களுடனான கேசட்டை அவன் வாங்கி வந்தபோது அவன் நண்பர்கள் அவனை வியந்தனர்.

மல்லிகாவின் அம்மாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அவள் இரவு நேரங்களில் செல்வதும் வருவதும், அவளது கணவன் கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே அவளை விட்டு ஓடிப்போய்விட்டதும் ஊருக்குள் எப்போதும் பேச்சாயிருக்கும். இந்த விஷயம் அவனுக்கு ஒரு வகையில் தோதாகப் போய்விட்டது. மல்லிகாவை எப்படியும் தொட்டுவிடலாம் என்று கணித்திருந்தான்.

அன்று இரவு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதைப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தான். மல்லிகாவின் வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள். மல்லிகாவும் ஆரம்பத்தில் அவனுக்குக் கொஞ்சம் ஒத்துழைத்தாள். ஆனால் திடீரென்று அவனைத் தள்ளிவிட்டு, “நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை” என்று அழுதாள். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதற்குப் பிறகு அவன் அவளுடன் பேசவில்லை.

மல்லிகாவிற்குத் திருமணம் செய்ய அவளது அம்மா ஆகப்பாடுபட்டாள். ஆனால் எதுவுமே அமையவில்லை. அமையாது என்று அவனுக்குத் தெரியும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரே மல்லிகாவின் வீட்டு முன்னர் திரண்டிருந்தது. அவனும் ஓடிப்போய்ப் பார்த்தான். யாரோ மல்லிகாவைக் கெடுத்துக் கொன்றுவிட்டிருந்தார்கள். மல்லிகாவின் அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். கிழிந்த ஜாக்கெட்டுடன் மல்லிகாவும் மார்பகம் மேல் குத்தி நின்றிருந்தது. அவனுக்கு விகாரமாக இருந்தது.

மல்லிகாவை இன்று விடப்போவதில்லை என்று அவன் தீர்மானித்து வைத்திருந்தான்.

அன்று இரவு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுக்கு இப்போது இருபத்தொன்று வயது. மல்லிகாவும் ஆரம்பத்தில் ஒத்துழைத்தாள். ஆனால் அவனைத் திடீரென்று தள்ளிவிட்டு, “நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை” என்று அழுதாள். “ஏண்டி நீ என்ன பத்தினியா” என்று மூர்க்கமாகக் கத்தினான் அவன். மல்லிகா அதிர்ந்ததைப் பார்க்கும்போது அவனுக்குள் சந்தோஷமும் வெறியும் வலுவடைந்தது. அவளைப் படுக்கையில் தள்ளி, அவள் மேல் பாய்ந்தான். அவளது கைகளைப் பின்புறமாகக் கட்டி, “உன்னல்லாம் கொல்லனும்டி தேவடியா” என்று சொல்லிக்கொண்டே, பின்புறம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்தினான். அவள் கத்திக்கொண்டே அவன் மீது சரிந்தாள். முழுவதுமாகச் சரிந்தாள். அவளின் உடல் முழுதும் அவன் மீது படர்ந்திருந்தது. “இனிமே மயங்க மாட்டாண்டி இவன்” என்று சொல்லி, வயிற்றிலிருந்து கத்தியை உருவி, மீண்டும் குத்தினான். மல்லிகா முழுவதுமாக அடங்கினாள்.

வீட்டை விட்டு வெளியில் வந்து கத்தியைத் தூக்கி எறிந்தான்.

இன்னும் ஒரு கொலை மட்டும் பாக்கியிருக்கிறது.

அவனது சொந்தம் என்று சொல்லிக்கொண்டவர்கள் அவனுக்கு லட்சுமியைக் கட்டி வைத்தார்கள். அவனுக்குக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணமே இருந்திருக்கவில்லை. ஆனால் லட்சுமியைப் பார்த்ததும் அவளின் உடலுக்கு ஆசைப்பட்டு ஒத்துக்கொண்டான். இதை அவனே பலமுறை அவளிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் லட்சுமி எப்போதும் எதையோ பறிகொடுத்தவள் போல இருந்தாள். அவளிடம் ஒரு புதுப்பெண்ணிற்கு உரிய எதுவுமே இருந்ததில்லை. அவனுக்கு அதைப் பற்றிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. இரவில் அவள் தயாராய் இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவனுக்கு தெரிந்த வாழ்க்கை.

ஒருநாள் இரவில் அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஆண்குரல் கேட்டு விழித்தான். லட்சுமியைக் காணவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். லட்சுமி தனபாலுடன் பேசிக்கொண்டிருந்தாள். தனபால் ஏதோ மறுக்க, அவள் விடாமல் அவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அவனுக்கு அவள் என்ன சொல்கிறாள், தனபால் எதை மறுக்கிறான் என்று விளங்கவில்லை. அவனுக்கு கோபம் வந்தது. ஆனாலும் ஒன்றும் நடக்காத மாதிரி சென்று படுத்துக்கொண்டுவிட்டான்.

இரண்டு மூன்று தினங்களில் அவன் எதிர்பார்த்த மாதிரியே லட்சுமி அவனுடன் நன்றாகப் பேசினாள். அவனுக்குச் சந்தேகம் வலுத்தது. அவனுக்குத் தனபால் பற்றியே யோசனையாக இருந்தது. இருவரும் ஓடிப்போகப் போகிறார்களோ? லட்சுமி அதற்கான வேலைகளில்தான் ஈடுபட்டிருந்தாள். லட்சுமி அவனை ஒன்றும் தெரியாதவனாகப் பாவித்திருந்தாள். ஆனால் அவன் லட்சுமியின் மன ஓட்டங்களை மிக எளிதில் கணித்துவிட்டிருந்தான். அவன் அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான். அவள் கொஞ்சம் அதிர்ந்தாலும், மெல்ல சுதாரித்துக்கொண்டு, “ஆமா இப்ப என்ன? உன்கூட எவ இருப்பா? எருமை மாதிரி மேல பாயிரியே. தனபாலுக்குப் பொம்பளை மனசு புரியும்”, என்று சொல்லி அழுதாள். அவளுக்கும் தனபாலுக்கும் கல்யாணத்திற்கு முன்பே தொடுப்பு இருந்தது அவனுக்குப் புரிந்தது. அவள் மேல் கோபம் கோபமாக வந்தாலும் அவனுக்கு அதற்கு மேல் என்ன செய்யவேண்டும் எனத் தெரியவில்லை. அவளை அறைய வேண்டும் என வெறி வந்தது. ஆனால் அறைய முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறினான்.

அன்றிரவு அவன் வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டி இருந்தது. எவ்வளவு தட்டியும் லட்சுமி கதவைத் திறக்கவில்லை. அவனுக்குப் பயம் வந்தது. கதவை உடைத்துப் பார்த்தபோது, லட்சுமி தூக்குப் போட்டுச் செத்துப் போயிருந்தாள்.

ஆனால் இன்று அவன் லட்சுமியை விடப்போவதில்லை. அவன் மனதில் வெறி இருந்தது. அவன் அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான். அவளும் அதே போல் “ஆமா இப்ப என்ன? உன்கூட எவ இருப்பா?”, என்று சொல்லி அழுதாள். “ஏண்டி தேவடியா முண்ட, அந்த நாய் கூட ஓடிப்போகப் போறியா? நா உன்னை சும்மா விடமாட்டேண்டி, பொலி போட்ருவேன்” என்று ஆவேசமாகக் கத்தினான். தொடர்ந்து, “என்னடி பாக்கிற? உன்னல்லாம் உசுரோட விட்டா நா ஆம்பிளைன்னு சொல்லிக்கிட்டுத் திரியறதே கேவலம்டி” என்று சொல்லிக்கொண்டு, ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அரிவாள்மனையை எடுத்து, அவள் உச்சந்தலையில் வெட்டினான். லட்சுமி தலையைப் பிடித்துக்கொண்டே கீழே சரிந்து விழுந்ததைப் பார்த்தான்.

அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. பெரும் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டது போலவும், அவனது வாழ்வின் சிறிய எதிரிகள் எல்லாம் அவனுக்குப் பயந்து அவன் முன் மண்டியிட்டுக் கிடப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. அதிலும் முக்கியமாய், தனபால் “என்னை விட்ருங்கண்னே விட்ருங்கண்னே” என்று கெஞ்சிக்கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்தான். வீட்டை விட்டு வெளியில் வந்து அரிவாள்மனையை வீசி எறிந்தான். அந்தச் சத்தம் கேட்டு, அவன் வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பூனை தாவிக் குதித்து ஓடியது. அவன் கொஞ்சம் பயந்து, பின் சுதாரித்துக்கொண்டு, “தாயோளீ, நாளைக்கு லிஸ்ட்ல உன்னையும் வக்கிறேன் பாரு” என்றான் சன்னதம் வந்த குரலில்.

-oOo=

Share

மஹான் – சிறுகதை

மிக நீண்டிருந்த அந்தக் குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். கடந்த இருநூற்றம்பைது ஆண்டுகளில் எனக்குத் தேவையான சில முக்கியக் குறிப்புகளைத் தருமாறு ஸ்நெல்லிடம் கேட்டபோது அவன் முகம் விநோதமாக மாறியதைக் கவனித்தேன். அதை நான் விரும்பவில்லை என்பதையும் ஸ்நெல் உடனே கண்டுகொண்டான். வழக்கமாக அனுப்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பாமல், அதனைப் பிரதி எடுத்துக் கையில் தருமாறு சொன்னபோது அவன் கொஞ்சம் வெளிறியதாகவே தோன்றியது. மிக முக்கியமான அரசு விஷயங்கள் எக்காரணம் கொண்டும் பிரதமரின் மின்னஞ்சல் முகவரியைத் தவிர வேறெந்த முகவரிக்கும் அனுப்பப்படக்கூடாது என்பது சட்டம். என் சட்டம். மேதகு கஹானி வதேராவின் சட்டம். அதுவும் ஸ்நெல் போன்ற உயர் அரசுப் பதவியில் இருப்பவரது மடல்கள் வேறெங்கும் அனுப்பப்படவே கூடாது. பிரமதராகிய நானே கேட்டபோது ஸ்நெல்லால் அதை மறுக்கமுடியவில்லை. மீறி மறுத்தால் இந்த அறிவியல் யுகத்தில் அவன் பிறந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் போகச் செய்துவிடமுடியும். இதைப் போல அரசாங்க எதிரிகள் பலரை ஸ்நெல்லே முன்னின்று கொன்றிருக்கிறான். அதனால் அவன் மறு பேச்செதுவும் பேசாமல் ஒத்துக்கொண்டான்.

அந்தக் குறிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். அது ஸ்நெல்லின் முன்னுரையுடன் ஆரம்பித்தது.

* மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு. கஹானி வதேராவுக்கு என் மரியாதையான வணக்கங்கள். வேறு வழியில்லாமலேயே இந்தப் பிரதியை உங்கள் கைகளில் தருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இதன் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் வரையில்தான் என்னுயிருக்குப் பாதுகாப்பு இருக்கும். இதை உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை என்றாலும் உங்களின் மேதகு கவனத்திற்குக் கொண்டுவருவது என் கடமையாகிறது.

* நீங்கள் சில குறிப்புகள் கொடுத்து அதன் அடிப்படையில் இக்கட்டுரையைத் தயார் செய்யச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் கேட்டிருந்த விவரங்கள் அனைத்துமே நீங்கள் முன்னரே அறிந்தவைதான். மேதகு பிரதமரின் கட்டளைக்கிணங்கி அவற்றைத் தந்திருக்கிறேன்.

* ஒரு வசதிக்காக 2100-ஆம் வருடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். அதற்கு முன்னரே நமது நாடு அறிவியலின் அதிகப் பயன்பெறு நாடாக மாறிவிட்டபோதும், 2100-ஆம் ஆண்டிலிருந்து தொடரும் ஆண்டுகளையே நமது நாட்டின் அதி வேக வளர்ச்சி ஆண்டுகளாக உலக நாடுகள் அங்கீகரித்தன. அதனால் 2100-ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறேன்.

* 2100-ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத ஓர் அறிக்கையை, அன்றையப் பிரதமராக இருந்த திரு.சஞ்சீவ் சிங் வெளியிட்டார். திரு. சஞ்சீவ் சிங் வெளியிட்ட அறிக்கை நமது பாரதத்தையே ஸ்தம்பிக்க வைத்தது எனலாம். எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு ரகசியக் குழுக்களின் முடிவை மீறி, அவர் அந்த அறிக்கையை வெளியிட்டார். நாட்டில் நடக்கும் விஷயங்கள் ஒரு வெளிப்பாடான தன்மை கொண்டிருக்கவேண்டும் என்ற அவரது கொள்கை அவ்வறிக்கையை வெளியிடச் செய்தது. அதன்படி 1930 ஆண்டு தொடக்கத்திலிருந்து, முக்கியமான ஆளுமைகளின் மரபணுக்கள் சேமிக்கப்படுகின்றன என்றும் அவற்றின் க்ளோன்களை நாம் நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிவிட முடியும் என்றும் அதற்கான முயற்சிகள் பரிசீலனைக் கட்டத்தைத் தாண்டி, வெற்றி பெற்றிருக்கிறது என்று அரசின் சார்பாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பினால் அவரது ஆட்சி பறிபோனது. அதைத் தொடர்ந்து வந்த அரசுகள் க்ளோனிங் முறைப்படி புதிய படி-உயிரிகள் தயாரிக்கும் திட்டத்தைத் தடை செய்தன.

* 2220-ஆம் ஆண்டைப் பற்றிய சில குறிப்புகளைக் கேட்டிருந்தீர்கள். அப்போது பாரதப் பிரதமராக இருந்தவர் தற்போதைய எதிர்க்கட்சியின் ஸ்தாபகரான திருமதி.ரேணுகா பிஸ்வால். அவர் க்ளோனிங் உருவாக்கத் தேவையான மரபணுக்களைச் சேகரித்து வைத்திருக்கும் மையம் [Clone and Bio-Technology Institute of Pune] புனேவில் இருந்தது என்றும் அது அழிக்கப்பட்டுவிட்டது என்றும் அறிவித்தார். மேலும், மரபணுக்களைச் சேகரித்து வைப்பதுவோ, க்ளோனிங் முறையில் படி-உயிரி தயாரிப்பதுவோ, மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிவித்தார்.

* 2276-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப்போரில் உலகம் பெரும் நாசங்களைச் சந்தித்தது. அப்போது உங்கள் தந்தையார் பிரதமராக இருந்தார். உலக வல்லரசுகளாக இருந்த பெரும் நாடுகள் தங்கள் சாவுமணியைத் தாமே அடித்துக்கொண்டன. சுமார் ஏழரை ஆண்டுகள் நீடித்த அப்போர், அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டதால் ஒரு முடிவுக்கு வந்தது. உலகின் ஜனத்தொகையில் 36% மடிந்ததாக ஐ.நா.வின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் லேசான சேதத்துடன் தப்பித்துக்கொண்டன.

* 2285- ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் உங்கள் தந்தையார் மேதகு ரஜதேவ் வதேரா பெரும் வெற்றி பெற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் அறிவியல் துறை அசுர வளர்ச்சி கண்டது.

* 2289-ஆம் ஆண்டு, கத்தாரில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்க உங்கள் தந்தை மேதகு ரஜதேவ் வதேரா சென்றிருந்தபோது, அவரைப் போன்ற மனிதர் ஒருவரை டில்லியில் பார்த்ததாக எதிர்க்கட்சிகள் புரளியைக் கிளப்பின. அதைத் தொடர்ந்து க்ளோனிங் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது. தன்னைப் போல க்ளோனிங் உருவாக்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் பரப்பிய குற்றச்சாட்டை மேதகு ரஜதேவ் வதேரா வன்மையாக மறுத்தார்.

* 2290-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மேதகு ரஜதேவ் வதேரா பெரும் தோல்வி அடைந்தார். க்ளோனிங் விஷயத்தை எதிர்க்கட்சிகள் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டன. தோல்வியினால் துவண்ட மேதகு ரஜதேவ் வதேரா, அதே ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்குப் பின்னரும் அவரது க்ளோனிங் பற்றிய புரளிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஆனாலும் அவரது அறிவியல் மற்றும் உயிரியல் துறைகளின் மீதான தீர்க்க தரிசனத்தை முன்னிறுத்தி, உலக நாடுகள் அனைத்தும் அவரை “நவீன பாரதத்தின் தந்தை” என்று அங்கீகரித்தன.

* 2298-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் உங்கள் தலைமையில் நமது கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 22 ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து பாரதத்தின் பிரதமராக, யாராலும் அசைக்க முடியாத நிரந்தரத் தலைவராக நீடித்து வருகிறீர்கள். நீங்கள் அறிவியல் துறையில் செய்த சாதனைகள் மகத்தானவை.

* நமது அறிவியல் யுகத்தில் உலகமே நம்மைத் திரும்பி நோக்கியது 2303-ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டுதான் க்ளோனிங் முறைப்படி படி-உயிரி செய்வது தவறல்ல என்ற கொள்கை முடிவை நமது அரசு அறிவித்தது. அதை அறிவித்த நாளே உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாளாக நீங்கள் பிரஸ்தாபித்துக்கொண்டீர்கள். உலகில் முதன்முதலாக, க்ளோன் உயிரி உருவாக்கப்படுவது தவறல்ல எனக் கொள்கை முடிவெடுத்த நாடு நமதே. மேலும் 1930-ஆம் ஆண்டுமுதல் முக்கிய ஆளுமைகளின் மரபணுக்கள் சேமிக்கப்படுகின்றன என்றும் அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் [CBTI of Pune] அவற்றை இன்னும் பாதுகாத்து வருகிறது என்றும் அறிவித்தீர்கள். முன்னாள் பிரதமர் திருமதி. ரேணுகா பிஸ்வால் 2220-ஆம் ஆண்டு அறிவித்தது போல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அழிக்கப்படவில்லை என்றும் அறிவித்தீர்கள். இதுவரை ஆண்ட எல்லாக் கட்சிகளும் இத்திட்டத்திற்கு மறைமுக ஆதரவைக் கொடுத்தன என்றும் இனியும் மரபணு சேமிப்புத் தொடரும் என்றும் அறிவித்தீர்கள். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களை அறிவியல் வன்கரம் கொண்டு அடக்கியது நமது அரசு. க்ளோன் முறைப்படி படி-உயிரி தயாரிக்கப்படுவதை எதிர்த்த அனைத்து மனிதர்களும் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து க்ளோன் எதிர்ப்புக் கலவரம் மெல்ல அடங்கியது. நமது நாடும் அறிவியல் யுகத்தில் ஆழமாகத் தன்னைப் பதித்துக்கொண்டது.

* பல முற்காலத் தலைவர்களை ஒத்த க்ளோனிங் மாதிரிகளைப் பற்றிய கட்டுக்கதைகளும் புரளிகளும், திரைப்படங்களும் இப்போதும் நம் நாட்டில் உலவி வருகின்றன. ஆனால் நம்முடைய அரசு கொள்கை முடிவாக ஏற்றுக்கொண்டதே ஒழிய, எந்தத் தலைவரின் உயிர் மாதிரியையும் உருவாக்கவில்லை என்பதே உண்மை.

இன்னும் நீண்டு கொண்டு செல்லும் அறிக்கை எனக்கு அயர்ச்சியைத் தந்தது. ஸ்நெல் என்னைச் சந்தோஷப்படுத்தும் குறிப்புகளை மட்டும் தந்திருக்கிறான் போல. அவனைத் தொலைபேசியில் அழைத்தேன்.

“மேதகு பிரதமருக்கு என் வந்தனங்கள்”

“நான் கேட்பதற்குச் சுருக்கமாய்ப் பதில் சொல். க்ளோனிங் முறைப்படி உயிரிகள் நமது அரசில் உருவாக்கப்படவே இல்லை என்கிறாயா? உண்மையச் சொல்.”

“மேதகு பிரதமர் அறியாததல்ல…”

“எனக்குத் தேவையற்ற விளக்கங்கள் வேண்டாம். நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.”

“நான் நேரில் வருகிறேன்” என்றான் ஸ்நெல்.

ஐந்து நிமிடங்களுக்குள் ஸ்நெல் வந்தான். யாராலும் வேவு பார்க்கமுடியாத என் ரகசிய அறைக்குள் சென்றோம்.

“ஸ்நெல், எத்தனை க்ளோன்களை இதுவரை நாம் உருவாக்கியிருக்கிறோம்?”

“நீங்கள் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியாததல்ல…”

“சரி விஷயத்திற்கு வருகிறேன். நீ நினைப்பது போல நான் கஹானி வதேரா அல்ல”

ஸ்நெல் அதிந்து, “க்ளோன்?” என்றான். நான் தலையசைத்தேன். ஸ்நெல்லுக்கு வேர்த்தது. அவனது கவனமெல்லாம், நான் எப்படித் தப்பினேன், எப்படி இங்கு வந்தேன், நிஜமான கஹானி வதேரா என்ன ஆனான் என்பது பற்றியே இருந்தது.

“இந்த நாட்டின் நன்மையைக் கருதி, கஹானி வதேரா இனியும் பிரதமராகத் தொடர்ந்தால், நாட்டில் ஜனநாயகம் என்பதே ஒழிந்துவிடும் என்று யூகித்து, இந்தத் திட்டத்தை நாங்கள் ஒரு குழுவாகச் செயல்படுத்தினோம்”

“நாங்கள் என்றால்…?”

பெயர்களைச் சொன்னேன். ஸ்நெல்லால் நம்பவே முடியவில்லை.

“நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் மேதகு கஹானி வதேராவின் அரசின் அதி ரகசியக் குழுவின் அங்கத்தினர்கள். அவர்களா?!”

“அதனால்தான் இந்தத் திட்டம் சாத்தியமாயிற்று. அரசின் அதி ரகசியக் குழுவின் அங்கத்தினர்கள் வேவு பார்க்கப்படுவதில்லை என்பதை நீ அறிவாயே…!”

நான் தொடர்ந்தேன்.

“அந்தக் காலத்தில் மகன் தகப்பனுக்குக் கொள்ளி வைப்பானாம். கஹானி வதேராவுக்கு அவன் தகப்பன் ரஜதேவ் வதேராவே கொள்ளி வைத்தான். பாரதத்தின் முதல் க்ளோன் யாரென்று தெரியுமா? நான் தான். கஹானி வதேரா பிறந்த உடனேயே நானும் உண்டாக்கப்பட்டேன். இருவருக்கும் ஒரே வயது, ஒரே உருவம். ஆனால் எண்ணங்கள் மட்டும் வெவ்வேறு. கஹானி வதேராவின் பல திட்டங்கள் நாட்டைச் சீரழிப்பதாயும் அவனைத் தவிர வேறு யாரும் நாட்டின் தலைவனாக முடியாது என்பதைச் செய்யும் நோக்கம் உடையதாயும் அமைந்ததை நீ அறிந்திருப்பாய். இந்தியாவில் கிராமங்களே இருக்கக்கூடாது என்பதற்கு அவன் மேற்கொண்ட ஆபரேஷனில் எத்தனைக் கிராமங்களும் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் அழிந்தார்கள் என்பது நீ அறிந்ததுதானே? ஒரு புள்ளி விவரக் கணக்கு 22 கோடி மக்கள் இறந்ததாகத் தெரிவிக்கிறது. அவர்கள் பிறந்து உயிர் வாழ்ந்ததற்கான தடயங்கள் கூட இல்லை.”

இதைச் சொல்லும்போதே எனக்குப் பதறியது.

“நீ அவனை எதிர்த்துப் பேசினால், நீ இம்மண்ணில் பிறந்ததற்கான அடையாளமே தெரியாமல் போகச் செய்யும் அளவிற்கு இந்நாட்டில் அறிவியல் மற்றும் உயிரியல் துறைகள் அவனுக்கு ஒத்துழைக்கத் தயாராய் இருக்கின்றன. அதற்குப் பயந்துதானே என்னிடம் இந்தப் பிரதிகளை மின்னஞ்சலுக்கு அனுப்பாமல் என்னிடம் தந்தாய்?”

ஸ்நெல் தலையாட்டினான்.

“இப்படி நேரும் என்று முன்னரே உணர்ந்த எங்கள் குழு என்னைப் பயிற்றுவிக்கத் தொடங்கியது. எனக்கு இருந்த சில மனத் தடைகள் மெல்ல மெல்ல நீங்கத் தொடங்கின. நானே என் மன அளவில் கஹானி வதேராவாக மாறத் தொடங்கினேன்.”

“திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது”

“எனக்கும் அப்படித்தான். ஆனால் எனக்கு இப்போது தெரியவேண்டியது ஒரே ஒரு விஷயம். ரஜதேவ் வதேரா எத்தனை க்ளோன்களை உருவாக்கினான்? மூன்று க்ளோன்களை உருவாக்கியதாகச் சில வாய்மொழிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான விவரங்களோ தடயங்களோ இல்லந. முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மூன்று க்ளோன்கள் உருவாக்கப்பட்டதாக நான் யூகிக்கிறேன். ஒன்று நான். மற்ற இருவர் யாரென்று தெரியுமா? எங்கள் குழுவால் அதைக் கண்டறிய முடியவில்லை.”

“அது மேதகு கஹானி வதேராவுக்குத்தான் தெரியும்.”

“நீ என்னை நம்பவில்லை என்று நினைக்கிறேன். நிஜமாக நான் கஹானி வதேரா இல்லை. நான் அவரது க்ளோன். கஹானி வதேராவை உனக்குக் காட்டுகிறேன் வா” என்று அருகில் இருக்கும் ஒரு ப்ளாஸ்மா திரையின் சுவிட்சை அழுத்தினேன். திரை ஒளிர்ந்தது. ஒரு கண்ணாடிப் பேழையில் குழந்தை போல கஹானி வதேரா உறங்கிக்கொண்டிருந்தான்.

“இந்த விவரம் போதுமா, இல்லை என் குழுவைச் சேர்ந்த மற்றவர்களையும் உன்னிடம் பேசச் சொல்லட்டுமா”

“வேண்டாம். நான் சொல்கிறேன். மூன்று க்ளோன்கள் என்பது தவறு. மொத்தமே இரண்டு க்ளோன்கள்தான் உருவாக்கப்பட்டன. ஒன்று நீங்கள். இன்னொன்று காந்தி.”

“காந்தி?”

“இன்றுவரை மஹாத்மா என்று போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காந்தி. மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. 1948-இல் சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி. நம் கட்சியின் ஸ்தாபகராக நாம் அங்கீகரித்திருக்கும் காந்தி. மக்கள் மனத்தில் இன்னும் நீக்கமற நிறைந்திருக்கும் காந்தி.”

எனக்குத் தலை சுற்றியது.

“அவரை ஏன் உருவாக்கினான் ரஜதேவ் வதேரா?”

“நீங்கள் சொன்ன விஷயங்களில் நிறையத் தகவல் பிழைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விளக்குகிறேன். இவை கஹானி வதேராவின் சட்ட இலக்கணப்படி ராஜதுரோகமாகும். இருந்தாலும் சொல்கிறேன். நம் நாட்டின் நன்மையைக் கருதி”

ஸ்நெல் சொல்லத் தொடங்கினான்.

“முதல் க்ளோன் நீங்கள். அதை உருவாக்கியது ரஜதேவ் வதேரா. காந்தியின் க்ளோன் வைக்கப்பட்ட இடத்தில் நீங்கள் இல்லை. உங்களை ரகசியமான இடத்தில் வைத்திருந்தார் ரஜதேவ் வதேரா. அது எந்த இடம் என்று எனக்குத் தெரியாது. இரண்டாவது க்ளோன் மஹான் காந்தி. அதை உருவாக்கியது கஹானி வதேராதான். ரஜதேவ் வதேரா அல்ல. அதற்கான காரணம் விநோதமானது. என்னதான் சர்வாதிகார ஆட்சி செய்தாலும், ஏதேனும் ஒரு காலத்தில் மக்கள் பெரும் புரட்சியில் ஈடுபடுவார்கள் என்றே எதிர்பார்த்தான் கஹானி வதேரா. அப்போது இந்தக் காந்தி க்ளோனை வைத்து ஒரு நாடகம் நடத்தி மக்களை அமைதிப்படுத்த முடியும் என்று நம்பினான். அதற்குக் காரணம், கடந்த ஆயிரம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த தலைவர் காந்திதான் என்று தனிப்பட்ட அளவில் தீவிரமாக நம்பியதே. அதனால் காந்தியால் பெரும் கலகத்தைக் கட்டுக்குக் கொண்டுவரமுடியும் என்பதில் உறுதியாக இருந்தான் கஹானி வதேரா. இப்படி ஒரு எண்ணத்தை அவனுக்குத் தந்தவர்கள் அவன் மிக நம்பும் அறிவியல் மற்றும் உயிரியல் தொழிநுட்பப் பிரிவைச் சேர்ந்த கஹானி வதேராவின் தீவிர விசுவாசிகள். மக்கள் காந்தியின் மீது வைத்திருக்கும் அன்பும் பிம்பமும் அபரிமிதமானது. இன்னும் எங்கேனும் ஒரு மூலையில் காந்தியைப் பற்றிய மக்களின் ஏக்கக் குரலைக் கேட்கமுடியும். அவரைப் போன்ற ஒரு பிம்பம் பாரதத்தில் தோன்றாதா என்று ஏங்குவதைக் காணமுடியும். ஆனால் காந்தியின் க்ளோன் வளர வளர கஹானி வதேராவின் எண்ணம் வலுவிழந்தது. காந்தியின் க்ளோன் தான் ஒரு மஹானின் க்ளோன் என்பதை அறிந்த பிறகு, காந்தியைப் பற்றிய வரலாற்றையும் சாகசங்களையும் படித்த பிறகு, அன்பு, ஆன்மிகம், அஹிம்சை என்று பேச ஆரம்பித்துவிட்டான். கஹானி வதேராவுக்கு எதிரான தனது கருத்துகளையும் கூற ஆரம்பித்துவிட்டான். உயிரியல் தொழிநுட்பப் பூங்காவில் கஹானி வதேராவின் அறிவியல் மய வேகத்தை எதிர்த்து ஒருமுறை உண்ணாவிரதம் கூட இருந்தான். இவன் வெளியில் வருவது ஆபத்து என்பதை உணர்ந்த கஹானி வதேரா காந்தியின் க்ளோனை ஆழ் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டான். காந்தியின் க்ளோனை கஹானி வதேரா கொன்றுவிடுவான் என்றே நான் எதிர்பார்த்தேன்.”

“ஸ்நெல் நன்றி. இனி நான் பார்த்துக்கொள்கிறேன்”

“என்ன செய்யப் போகிறீர்கள்?”

“பொறுத்திருந்து பாருங்கள்”

* * *

இரண்டு நாள்களில் எங்கள் குழு ஒரு திட்டத்தைத் தயாரித்தது. அதற்கு ஆபரேஷன் – அஹிம்சா என்று பெயரிட்டோ ம். அதன்படி, காந்தியின் க்ளோனை விடுவிப்பது என்றும், கஹானி வதேராவாகிய நானே அவரை எங்கள் கட்சியின் தலைவராக்குவது என்றும், அவரது தலைமையின் கீழ் பாரதம், அறிவியல் மயத்திலிருந்து குறைந்து மீண்டும் பசுமைக்கும் அன்புக்கும் அஹிம்சைக்கும் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். மேலும் காந்தியின் க்ளோன் பதவி ஏற்றதும் யாரும் அறியாதவாறு கஹானி வதேராவைக் கொல்லவும் முடிவு செய்தோம். அனைவரும் கைகுலுக்கிக் கொண்டோ ம். ஆபரேஷன் – அஹிம்சா ஆரம்பமானது.

ஆனால் விஷயம் நாங்கள் நினைத்தவாறு எளிதாக இருக்கவில்லை. காந்தியின் க்ளோனை எளிதில் விடுவித்துவிட்டோ ம். கஹானி வதேராவே சொல்வதாக எண்ணி, உயிரியல் தொழில் நுட்பப் பூங்காவின் இரகசிய அதிகாரிகள் மிக ஒத்துழைத்து, காந்தியின் க்ளோனை வெளிவிட்டார்கள். கஹானி வதேராவின் ஒவ்வொரு அசைவிற்கும் அறிவியல் நிழலுலகம் எப்படி அசைகிறது என்பதைப் பரிபூர்ணமாக உணர்ந்தேன். நம் நாட்டைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற என் எண்ணம் வலுத்தது. ஆனால் காந்தியின் க்ளோன், காந்தி போலவே இருந்தான், மனத்தளவிலும். இந்த யுகத்திலும் இப்படி ஒருவன் இருக்கமுடியுமா என்று அதிசயக்க வைத்தான் காந்தியின் க்ளோன். தனக்குப் பதவி மோகம் இல்லை என்றும் தான் பதவியில் அமரப்போவதில்லை என்றும் மிக உறுதியாகக் கூறத் தொடங்கினான். எங்கள் குழு அவனுக்குப் பெரும் விளக்கம் அளித்தது. ஒருவழியாக அவன் எங்கள் ஆபரேஷன் – அஹிம்சாவிற்குச் சம்மதித்தான்.

* * *

நாடே அல்லோகோலப்பட்டது. உலகின் முதல் மனித க்ளோனாக காந்தியின் க்ளோன் அறிவிக்கப்பட்டது. தங்கள் ஆதர்ச நாயகனை நேரில் பார்த்த அனைத்து மக்களும் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார்கள். “மஹான் காந்தீ மஹான்” என்ற பழம் பிராந்தியப் பாடல் பல இடங்களிலும் ஒலித்தது. காந்தியின் க்ளோனைக் காண [இனி காந்திஜி, எங்கள் பாரதத்தின் பிரமராகப் போகும் மாண்புமிகு காந்தியின் க்ளோனை இனி அப்படித்தான் என்னால் அழைக்கமுடியும்] நாடெங்கும் ஜனத்திரள் திரண்டது. அறிவியல் மயத்திலிருந்து, எந்திரத் தனத்திலிருந்து நாட்டைப் பசுமைக்கும் சுபிக்ஷத்திற்கும் கூட்டிச் செல்ல காந்திஜியினாலே மட்டுமே முடியும் என்று அனைவரும் பிரஸ்தாபித்தார்கள். பழம் படங்களிலிருந்து கண்டுகொண்ட சில மனிதர்கள் குல்லா கூட வைத்திருந்தார்கள். நாடே மிக நீண்ட நாள்களுக்குப் பின்னர் நிஜமான சந்தோஷத்தில் திளைத்திருந்தது.

அதிகாரப்பூர்வமாக எங்கள் கட்சியின் தலைவராகக் காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் எங்களைப் பாராட்டின. எங்கள் இந்த முடிவு, நாட்டில் நிஜமான ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வரும் என்றும் பாராட்டினார்கள். மீண்டும் க்ளோன் முறையில் படி-உயிரி தயாரிப்பதைத் தடை செய்யவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்திஜியும் நானும் இதை வெகுவாக ஆதரித்தோம். மேலும் இனிமுதல் தனிமனிதனைத் தொடரும் அறிவியல் நிழலுலகம் செயலிழக்கப்படுகிறது என்றும் தனிமனிதனின் தனிப்பட்ட செயல்கள் கண்காணிப்பு உள்ளிட்ட ஜனநாயகத்திற்கு விரோதமான எதையும் அரசு செய்யாது; ஊக்குவிக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. அது அன்று முதலே நடைமுறைக்கு வரவேண்டும் என்று காந்திஜி விரும்பினார். ஏகமனதாக எல்லாக் கட்சிகளும் அதை ஆதரிக்க, நான் கையெழுத்திட [நான் கையெழுத்திடும் முதலும் கடைசியுமான சட்டம் இதுதான் என்பதை எண்ணிக்கொண்டேன்] கஹானி வதேராவின் கடைசிச்சட்டம் இதுவெனப் பத்திரிகைகள் எழுதின. மேலும் கஹானி வதேராவுக்கு ஞானோதயம் வர காந்திஜி வேண்டியிருக்கிறது என்றும் எழுதின. காந்திஜியும் நானும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டோ ம். நான் மெல்ல அவர் காதில், “க்ளோன்களின் யுகம் க்ளோன்களால் முடிவுக்கு வருகிறது” என்றேன். அவர் தலையசைத்தார்.

வரும் ஞாயிறன்று காந்திஜி நம் பாரதத்தின் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

எங்கள் ஆபரேசன் அஹிம்சாவின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்த ஆயத்தமானோம். காந்திஜிக்கும் தெரியாத திட்டம் இது. எங்கள் திட்டப்படி சனி அன்று இரவு நிஜமான கஹானி வதேராவை வதம் செய்யத் திட்டமிட்டிருந்தோம். உண்மையில் எங்கள் குழு அதற்கான நிமிடங்களுக்காகக் காத்திருந்தது. சரியாக அன்றிரவு எட்டு மணிக்கு நாங்கள் கஹானி வதேராவை மறைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்றோம். அவன் ஆழ் நித்திரையில் இருந்தான். ஒரு ஊசி மூலம் கொல்ல ஏற்பாடாகியிருந்தது. அதற்கு முன்னர் அவனை உயிர்ப்பித்து, அவனிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி, அவனைக் கொல்லவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. கஹானி வதேரா ஆழ் நித்திரையிலிருந்து எழுப்பப்பட்டான். எங்களைப் பார்த்ததும் உயிரில்லாமல் சிரித்தான். என்னைப் பார்த்து “ஹாய்” என்றான். எனக்குப் பாவமாக இருந்தது. “உன்னைக் கொல்லப் போகிறோம்” என்றேன். “நீயே உன்னைக் கொல்வது, எனது அரசின் சாதனை” என்றான் முனங்கியவாறே. அருகிலிருந்த எங்கள் குழுவைச் சேர்ந்த உயிரியல் அதிகாரிகள், அவன் உயிர்ப்பித்த காந்தியின் க்ளோனை வைத்தே நாட்டைச் சுபிக்ஷமாக்கப் போவதாகச் சொன்னார்கள். மெல்லப் புன்னகை செய்தான். சரியாக 8.06க்கு அவனுக்கு மரண ஊசி ஏற்றப்பட்டது.

“என்னை இந்நாடு மறக்கவே முடியாது” என்றான் கஹானி வதேரா.

சில விநாடிகளில் அவன் சப்த நாடியும் ஒடுங்கிப் போனான். என் உருவம் என் கண் முன்னே இறக்கும் அதிசய நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

* * *

ஞாயிற்றுக்கிழமை.

நாடே கோலாகலத்தில் மூழ்கியிருந்தது. இடுப்பில் வேட்டி மட்டும் கட்டி, மூக்குக் கண்ணாடி அணிந்த அரைக்கிழவர் பாரதப் பிரதமராகப் போகும் அந்தக் கனவு நிமிடங்களுக்காக இந்தியாவே காத்திருந்தது. உலகின் அனைத்து நேச நாடுகளும் தத்தம் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற அரங்கில் காத்திருந்தார்கள். எதிர்க்கட்சிகள் கூட அத்தனை உற்சாகமாய் இருந்தன.

காந்திஜி வாய் நிறையப் புன்னகையுடன் பாராளுமன்றக் கட்டிடத்தை நோக்கி நடந்துவந்தார். வழியெங்கும் அவருக்கு மலர்கள் தூவப்பட்டன. சிரித்த முகத்துடன் காந்திஜி அதை ஏற்றுக்கொண்டார். சிறிது நாளில் காந்தியின் க்ளோன் காந்திஜியாகவே மாறிவிட்டதை நினைத்து எனக்குச் சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.

இன்னிசை கீதங்கள் முழக்கப்பட்டன. யானைகள் அணிவகுத்து நின்று மலர் தூவின.

அமைதியான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஏதோ ஒரு யானைக்கு மதம் பிடித்திருக்கவேண்டும் என்றே நினைத்தேன் நான்.

திடீரென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு மனிதன் எந்திரத்துப்பாக்கியுடன் காந்திஜியை நோக்கி முன்னேறி வந்தான்.

“ஐ’ம் ஸாரி காந்திஜி” என்று சொல்லி அவரை நோக்கிச் சுட்டான்.

காந்திஜி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்தார்.

அனைவரும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். நான் அவனை நோக்கி ஓடினேன். அனைவரும் அவனைப் பிடித்து உலுக்கி யாரென்று கேட்டார்கள்.

அவன், “நாதுராம் கோட்ஸே” என்றான்.

சிதறியிருந்த ரத்தத் துளிகளில் கஹானி வதேராவின் முகம் தோன்றி, “என்னை இந்நாடு மறக்கவே முடியாது” என்றது.

* * *

Share

அவன் – சிறுகதை

அன்று மிக மன உளைச்சலாக உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் மனம் விஷ்ணுவையே நினைத்துக்கொண்டிருந்தது. சிறிய குடுமி வைத்து, நெற்றியிலும் வயிற்றிலும் நாமம் போட்டுக்கொண்டு, பஞ்ச முத்திரை இட்டுக்கொண்டு சமிஸ்கிரதத்தை வாசிக்கும் அவனது தோற்றத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. சயின்ஸ், மேத்ஸ் தொல்லை இல்லை என்றானாம். முதல் முறை மிக சந்தோஷமாகப் போனானாம். இரண்டு முறை ஃபோன் செய்தபோது அழுதிருக்கிறான். நான் யாருக்கும் ஃபோன் செய்யவில்லை. மாதங்கி இரண்டு தடவை என்னைக் கூப்பிட்டு, விஷ்ணுவைப் போய் பார்த்துவிட்டு வா என்றாள். எப்படி அவனை அனுப்பின என்று மீண்டும் மீண்டும் கேட்டேன். இதுல என்னடா இருக்கு என்று படு கேஷுவலாகச் சொல்லிவிட்டு விக்கி விக்கி அழுதாள். வயித்துல இருக்கும்போதே நேந்துக்கிட்டது என்றாள். அப்படி ஆம்பளைப் பையன் பொறக்கணுமா? பொறந்து என்ன ஆச்சு? பன்னெண்டு வருஷம் பார்க்காம இருக்கப் போற? இதுக்கு எதுக்குப் பெத்துக்கிட்ட? – என்ற எல்லாக் கேள்விகளுக்கும் அவளது பதில் வெறும் அழுகை மட்டும்தான். என்னால போய்ப் பாக்க முடியாது. மாமா, உன் கூட வர்றேன்னு சொன்னா கூட்டிக்கிட்டு வருவேன். ஸ்ரீதர் பாவா திட்டுவார். எனக்கெதுக்கு? அம்மா, அப்பா ரெண்டு பேரும் முடிவு பண்ணி கொண்டு போய் விட்டாச்சு. நல்ல காரணம், நேத்திக்கடன். அதை மீற முடியுமா? எத்தனை வருஷம்? பன்னெண்டு வருஷமாம். முதல் நாலு வருஷம் திருவேற்காட்டிலேயே இருக்கலாம். அடுத்த எட்டு வருஷங்கள் பெங்களூருக்குச் சென்று சமிஸ்கிரதமும் புரோகிதமும் படிக்கவேண்டும். ஸ்ரீதர் பாவா ரொம்ப சந்தோஷப்பட்டுச் சொன்னாராமே. நாமம் போட்டுக்கிட்டு, பஞ்சகச்ச கட்டிக்கிட்டு செண்டிக வெச்சிக்கிட்டு பார்க்கவே அழகா இருக்குன்னு. மாதங்கி பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் பேசுறது கேட்குதா இல்லையா என்று கேட்டபோதெல்லாம் ம் என்று மட்டும் சொன்னாள். லேசான குரலில் மாத்வ சம்பதி தெரிஞ்சா நல்லதுதானே என்றாள். இவன் கூட படிச்ச பையன்கள் எல்லாம் டாக்டரா வரட்டும். இவன் அவர்களுக்கே கல்யாணம் செய்து வைக்கட்டும். மாதங்கி மீண்டும் என்னைப் போய்ப் பார்த்துவிட்டு வா என்றாள். சரி என்றேன். மாதங்கி பதில் சொல்லாமல் இருந்தாள். சிறுது நேர மௌனம். பிறகு, “பழம் பிஸ்கட் கொண்டு போடா. வெளிய எதுவும் வாங்கிக்கொடுக்காத. வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாதாம். போன் வாரம் வந்திருந்தான் வீட்டுக்கு. குருமா செஞ்சிருந்தேன். அவனுக்கு உசுரு பாத்துக்கோ. சாப்பிடுடா, பரவாயில்லை, வீடுதானேன்னு சொன்னேன். மாட்டவே மாட்டேன்னுட்டான். உங்க பாவாவுக்கு ஒரே பெருமை. அவன் வாயிலயே வேண்டாம்னு வரவெச்சிட்டாங்கன்னு ரொம்ப பெருமைப்பட்டார். ரெண்டு வாரம்தான் ஆகுது. அதுக்குள்ள மாறிட்டானேன்னு எனக்கும் ஆச்சரியம்…..” போதும் உன் புராணமும் உன் பாவா புராணமும் என்று சொல்லி ஃபோனைத் துண்டித்தேன். ஸ்ரீதர் பாவா மீண்டும் என்னைக் கூப்பிட்டார். என்னடா வீட்டுப் பக்கம் வரலை என்றார். பிஸி என்றேன். உடம்பைப் பாத்துக்கோ என்றார். நான் வண்டியில போய்க்கிட்டு இருக்கேன், அப்புறம் பேசுங்க என்று சொல்லி ஃபோனை கட் செய்தேன்.

ஸ்ரீ சுந்தர தீர்த்த மடத்தில் சென்று விஷ்ணுவைப் பார்க்கப் போனேன். காவியை மார்பு வரை கட்டியிருந்த ஒரு ஆச்சார் “யாருன நோட பேக்கு” என்றார். செல்லும் வழியைக் காட்டினார். அங்கே ஒரு மரத்தடியில் விஷ்ணு தனியாக உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டான். சுற்றியும் பல மரங்கள் இருந்தன. நிறைய பையன்கள் வெள்ளை நிற பஞ்சகச்சம் கட்டி அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். காம்பவுண்ட் சுவற்றில் கரியால் ஸ்டம்ப் வரைந்திருந்தார்கள். கிரிக்கெட் ஆடுவியாடா என்றேன். என்னை இப்ப வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவியா என்றான். “அது அப்புறம். கிரிக்கெட் ஆடுவியா?” “ஆமா. ஆச்சாரும் எங்க கூட ஆடுவார். நேத்து அவர் பால்ல சிக்ஸ் அடிச்சேன். அடுத்த பால்ல அவுட்டாயிட்டேன்” “அவுட்டாயிட்டியா? அடுத்த தடவை அவர் பால் போடும்போது, சட்டுன்னு நிறுத்தி, நான் அவுட் ஆகாம இருக்கிறதுக்கு என்ன ஸ்லோகம்னு கேளு” கண்ணில் நீர் வரும் அளவிற்குச் சிரித்தான். “ஏண்டா வீட்ல குருமா சாப்பிடமாட்டேன்ன?” “ஆச்சார் திட்டுவார்” “அந்நியன் பாத்தியாடா?” அந்நியன் மாதிரி குரலை மாற்றிப் பேசிக் காட்டினான். “சிடி போட்டாங்க” “சிவகாசி வரவும்மாமா உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன். சரியா?” “இப்போ?” “இப்ப இல்லை. உனக்கு பிஸ்கட் பிடிக்கும்னு பிஸ்கட் வாங்கிட்டு வந்தேன். இந்தா வெச்சிக்கோ” “இதையே தின்னு தின்னு எரிச்சலா வருது மாமா. அம்மா, அப்பா வாராவாரம் இதுதான் வாங்கிட்டு வர்றாங்க.” “உனக்கு வேற என்னவேணும்?” “ஜெம்ஸ் வாங்கிட்டு வருவியா?” “அடுத்த தடவை வாங்கிட்டு வர்றேன்” “அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருது. கண்டிப்பா வாங்கிட்டு வரணும்… அத்தையையும் கூட்டிக்கிட்டு வா.” “எத்தனாவது பிறந்தநாள்டா?” “பதிமூனு” “ஒன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் காமிடா” “வேணாம். எல்லாரும் என் மேல பொறாமைல இருக்காங்க. நாந்தான் இங்க ஆச்சாருக்கு பெட். அவர் சொன்ன ஒடனே படிச்சி ஒப்பிச்சுடுவேன். அதனால எல்லாரும் என் மேல பொறாமைல இருக்காங்க.” “சரி மாமா போகணும்” சட்டென அவன் முகம் மாறியது. மீண்டும் ஒரு சந்தோஷத்துடன் அடுத்த வாரம் அத்தைய கூட்டிக்கிட்டு வருவேல்ல என்றான். வர்றேன் என்றேன்.

ஸ்ரீதர் பாவா மிகவும் விளக்கினார். படித்தாலும் வேலை கிடைக்காது என்று சொல்லி அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார். “கிருஷ்ணாச்சார் பாத்தியா? ஒனக்கு பூணூல் போட்டப்ப அவர்தான் வந்தார். அப்ப அவருக்கு வயசு இருபத்தொண்ணு. இப்ப பார், மதுரைல அவர்க்கு சொந்த வீடு இருக்கு” கொஞ்சம் நேரத்தி, “நேந்துக்கிட்டோ ம். அதான்” என்றார். கடைசியாக படிக்க வைக்க முடியலை; செலவு கட்டுப்படியாகலை என்றார். “நீ கோச்சுக்கிட்டு வராம இருந்துடாத. உன் அக்கா அதுக்கும் சேர்த்து அழறா” என்றார். அவரே “ஒரு வார்த்தை உன்னைக் கேட்டிருக்கலாம்தான். எல்லாம் சேர்ந்து என்னை மாத்திடுவீங்க. அதான் கேக்கலை” என்றார்.

அன்று விஷ்ணுவிற்குப் உபநயனம். அன்று காலையிலேயே உத்ராய மடத்திற்கு என்னை வரசொல்லியிருந்தார் ஸ்ரீதர் பாவா. நான் போக நேரமாகிவிட்டது. மடத்தில் மூன்றாவது மாடியில் விஷ்ணுவுக்குப் பூணூல் போட்டுக்கொண்டிருந்தார்கள். மூன்று மாடி ஏறுவதற்குள் வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்த ப்ரியா மிகவும் கஷ்டப்பட்டுவிட்டாள். என்னால முடியல பாவா என்று சொல்லிக்கொண்டே மூன்றாவது மாடியை அடைந்துவிட்டாள். ஹோமப் புகை கலந்த, அதிகம் காற்றோட்டமில்லாத, ஒரு ஃபேன் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் அறையில் ஹோமத்தின் முன்பு நின்றிருந்தான் விஷ்ணு. நான் வந்தவுடன் என்னையும் அவன் அத்தையையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்தான். நிமிடத்திற்கொருமுறை ஸ்ரீதர் பாவா அவன் தலையை மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆச்சாரைப் பார்த்துத் திருப்பினார். அவன் ஆச்சார் சொல்லச் சொல்ல மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே, ப்ரியாவுடன் சைகையில் ஏதேதோ பேசினான். அவனது பால் நிற பிஞ்சு உடம்பில் பூணூல் அணிவித்திருந்தார்கள். பிரம்மோபதேசம் செய்யும்போது தலையை எட்டிப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான். பூணூல் போட்டு முடிந்ததும் ஓடி வந்து, “தேவுடா தேவுடா” என்று பாடினான். ப்ரியாவின் மடியில் பொத்தென விழுந்தான். மாதங்கி அவனைத் திட்டினாள். எல்லோரும் கீழே சாப்பிடப்போனோம். ஆண்களெல்லாம் சட்டையைக் கழற்றினார்கள். மாதங்கி என்னைத் தனியே அழைத்துப்போய் என் கையில் பூணூல் தந்தாள். நானும் சாப்பிட வந்தேன். உத்ராய மடத்தில் வித்தியாசமாகப் பரிமாறினார்கள். அனைவரும் கையில் நீரை எடுத்துக்கொண்டு, ஆச்சார் மந்திரம் சொல்லும் வரையில் காத்திருந்தார்கள். முதலில் பரிமாறப்பட்ட சாம்பார் இரசம் மாதிரி இருக்கிறதென்றேன். விஷ்ணு, இது ரசம்தான் மாமா என்றான். இங்க அப்படித்தாண்டா போடுவாங்க என்றாள் மாதங்கி. “இப்பவே இவனுக்கு பூணூல் அவசியமா? பதிமூனு வயசுல எதுக்கு பூணூல்? ஸ்கூலெல்லாம் முடிஞ்ச பின்னாடி போட்டாப் போதாதா? இவன் பி.டி.பீரியட் எல்லாப் பசங்களும் இவனை ஒரு மாதிரி பார்க்கமாட்டாங்களா?” “இதுல என்னடா ஒரு மாதிரி பார்க்கவேண்டியிருக்கு? இதுவே லேட்டாயிடுச்சுன்னு ஸ்ரீதர் பாவா பொலம்பினார் தெரியுமா? ஏழு வயசுல போட்டா ஸ்லாக்கியமாம். நமக்குக் கொடுத்து வைக்கலைன்னு அவன் பாட்டியும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க” “நல்ல குடும்பம்” “நீ பேசாம சாப்பிடு. இடது கையால தொடாத. தண்ணியைத் தொட்டுட்டு, இடது கையை அந்தாண்ட வெச்சிட்டுச் சாப்பிடு” “உன் தமிழே ஒரு மாதிர் இருக்கு” “நீயாவது நல்லா இரு. எப்ப கொண்டு போய் விடப்போற அவளை” “அவளையே கேட்டுக்கோ” விஷ்ணு நூறு முறை என் தொடையைப் பிராண்டியிருந்தான். “என்னடா பேசவிடமாட்டேங்கிற?” “சந்திரமுகி பார்த்துட்டீங்களா?” “ம். நீ?” “நாயர், உங்க ஊர் டெண்டர் எங்க கைக்கு வந்தாச்சு. உங்க நாலு லட்ச ரூபாய் காண்ட்ராக்ட எங்க முதலாளி செந்தில்நாதன் வாங்கிட்டார்….. மாப்பு வெச்சிட்டாண்டா ஆப்பு….ரஜினி ஒரு சீன்ல பறந்து அடிப்பானே? யப்பா… அடி தாங்காம அவன் என்னமா போய் விழுவான்? மாமா, இன்னொரு தடவ கூட்டிக்கிட்டுப் போவியா?” “போவீங்களான்னு கேளு” என்றாள் மாதங்கி. “யார்கிட்டயும் கேக்கக்கூடாதுன்னு சொன்னேன்ல?” என்றார் ஸ்ரீதர் பாவா. “பாவா, அவன விடுங்க. நாங்க பேசும்போது நீங்க எதுக்கு அவனைத் திட்றீங்க? விடுங்க” என்றேன். ஸ்ரீதர் பாவா மாதங்கியை முறைத்தார். ப்ரியா விஷ்ணுவைப் பார்த்து போலாம் என்று சைகை காட்டினாள். நான் அவளை முறைத்தேன். ‘சரி, விஷ்ணு.. லாய்.. உன்னைத்தான். லாய்…” “என்ன மாமா?” “ஏன் இன்னைக்கு ஒனக்குப் பூணூல் போட்டிருக்கு தெரியுமா?” “ஏன்?” “இந்த வாரம் ஞாயித்துக்கிழமை உனக்குப் பூணூல். அடுத்த வாரம் ஞாயித்துக் கிழமை உனக்குக் கல்யாணம். அதுதான்” “போங்க மாமா” “இல்லடா. நெசமாத்தான். உங்க பாலாஜி சித்தப்பாவுக்கு என்ன பண்ணாங்க? மொத வாரம் பூணூல். அடுத்த வாரம் கல்யாணம். அது மாதிரிதான் ஒனக்கும்” என்று கூட சேர்ந்துகொண்டாள் மாதங்கி. “ஐயோ எனக்கு வேண்டாம்ப்பா. நானும் உன்ன மாதிரி பெரியவான ஒடனே ப்ரியா அத்தை மாதிரி பெரிய பொண்ணைக் கட்டிக்குவேன்” “அது என்னடா ப்ரியா அத்தை மாதிரி?” “அவங்க ஸ்கூல்ல ஒரு பொண்ணைப் பார்த்துட்டானோ என்னவோ” என்றார் ஸ்ரீதர் பாவா. “போப்பா” என்றான் விஷ்ணு.

“பூணூலுக்கு வந்திருக்கும்போதாவது சொல்லியிருக்கலாம். ஒண்ணுமே நடக்கப்போறதில்லைன்ற மாதிரி பேசிக்கிட்டு இருந்தீங்க. உங்க இஷ்டம்தான். உங்க முடிவுதான். இல்லைன்னு இல்லை. ஆனாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு” “சரி விடு. எவ்வளவோ விஷயம். எங்களுக்கு மட்டும் என்ன அவனைக் கொண்டு போய்விட்டா சந்தோஷமா? தினமும் அழுதுக்கிட்டேதான் தூங்றா உங்க அக்கா” உள்ளே அழுதுகொண்டே காப்பி போட்டுக்கொண்டிருந்தாள் மாதங்கி. சரி நாங்க கிளம்புறோம் என்று சொல்லிவிட்டு நானும் ப்ரியாவும் வீட்டிற்கு வர பஸ் பிடித்தோம். குழந்தைய சுமந்துக்கிட்டு இருக்கிறவளை இந்த நேரத்துல கூட்டிக்கிட்டுப் போணுமா என்று ஸ்ரீதர் பாவாவும் மாதங்கியும் சொல்லிக்கொண்டே பஸ் ஸ்டாப் வரையில் வந்து பஸ் ஏற்றிவிட்டார்கள். மாதங்கி ஒரு வேப்பிலையைப் பறித்து ப்ரியாவுக்கு வைத்துவிட்டாள். “மாமா, விஷ்ணுவ மட்டும்தான் பார்க்கப் போவீங்களா? என்னைப் பார்க்க வரமாட்டீங்களா?” என்றாள் விஜி. “உன் தம்பி இல்லாம எப்டிடி இருக்க?” “அவந்தான் அடிக்கடி வர்றானே. அவன் அங்க இருந்து படிச்சா அவன் ஃப்யூச்சருக்குத்தான நல்லது?” நான் ஸ்ரீதர் பாவாவைப் பார்த்து “நல்ல ட்ரெயினிங்” என்றேன். மாதங்கி என்னைக் கிளம்பு என்றாள். பஸ் மெல்ல நகர்ந்தது. நான் வழியோரக் காட்சிகளில் கவனம் செலுத்திக்கொண்டு வந்தேன். “இருந்தாலும் நீங்க ரொம்ப பேசறீங்க. பாவான்ற ஒரு மரியாதை இருக்கா? அவர் கொண்டு போய் விட்டுட்டாரு. ஆச்சு. அதென்ன அத்தனை தடவை சொல்லிக் காண்பிக்கிறது?” “ரொம்ப பாவமா இருக்குதுடி. அங்க போய் ஐயோ பாவம்” “சரி இல்லைன்னு சொல்லலை. அவர் கேட்டப்ப நீங்க விஜியை தத்து எடுத்துக்கிட்டு இருக்கலாம்ல? கொள்கை அது இதுன்னீங்க. அப்ப விஜியையே தத்து எடுத்துக்கோன்னு சொன்ன உடனே தத்து எடுக்கிற ஐடியாவையே விட்டுட்டீங்க?” “சும்மா ஒளராத. ரெண்டு கொழந்தைங்க. ஒண்ணு மடத்துக்கு. இன்னொன்னும் தத்துன்னா பாவா எதுக்கு?” “அவங்களுக்கு ஆயிரம் கஷ்டம். இனிமே போனா நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு வாயை மூடிக்கிட்டு இருங்க. உங்க ஆர்க்யூமெண்ட்டெல்லாம் நம்ம குடும்பத்துக்குள்ள வேண்டாம். ஐயோ பாவம் மாதங்கி அக்காதான் ரெண்டு பக்கமும் மாட்டிக்கிட்டு தவிக்கிறாங்க”

அதற்குப் பின் இரண்டு மூன்று முறை விஷ்ணுவைப் பார்க்க மடத்திற்குப் போனேன். ஆச்சார்கள் சிலர் என்னைப் பரிச்சயப் பட்டுக்கொண்டார்கள். ஸ்ரீ ஹரி கதா புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டார்கள். அவுட் ஆஃப் ஸ்டாக் என்றேன். விஷ்ணு சுரத்தில்லாமல் பேசினான். எங்களில் யாரையாவது பார்த்தால்தான் அப்படிச் சோர்ந்து போவதாக ஆச்சார் கூறினார். வேத பாடங்களை ஒப்புவிப்பதிலும் சமிஸ்கிரத ஸ்லோகங்களை எழுதுவதிலும் அவனே முதல் என்று அவனைப் பாராட்டினார். “ஸயின்ஸ் மேத்ஸ் எல்லாம் கிடையாதா?” “இந்தக் காலத்துல அதுவும் வேண்டியிருக்கே. வாரத்துக்கு ரெண்டு ட்யூட்டர்ஸ் வந்து சொல்லித் தர்றாங்க” என்றார். “மாமா, அன்னைக்கு ஆராதனை அன்னைக்கு மத்தியானம் மூணு மணிக்குத்தான் சாப்பாடு போட்டாங்க” என்று சொன்னான் விஷ்ணு. “காலேல அவல் உப்புமா தருவாங்களாமே. அம்மா சொன்னாளே” “தந்தாங்க. எனக்குப் பிடிக்கலை” “சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கா?” “சூப்பரா இருக்கு. மூணு வேளையும் சுடச்சுட. ஆனா எல்லாம் இனிப்பா இருக்கு. சாம்பார், இரசம் எல்லாம் இனிக்குது” “இப்ப ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேக்கா போட்டுட்டாங்களா?” “சேக்கான்னா?” “ராசி ஆயிட்டாங்களா?” “அப்பப்ப ஃப்ரெண்ட்ஸ். அப்பப்ப எனிமீஸ்”

சில வாரங்கள் போகமுடியவில்லை. விஷ்ணுவே எனக்கு ஃபோன் செய்தான். நான் மீண்டும் மடத்திற்குப் போனேன். விஷ்ணு மிகவும் சந்தோஷமாய் இருந்தான். ஆச்சார் காலில் விழும்போது அபிவாதயே சொன்னான். சாப்பிட உட்காரும்போது சுற்றிக் கட்டினான். சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கும்போது ஸ்லோகம் சொன்னான். காயத்ரி மந்திரம் சொன்னான். எச்சி சாப்பிடமாட்டேன் என்றான். சூழலுக்குள் வாழப்பழகிக்கொண்டுவிட்டான் என்று புரிந்தது. நிறைய நண்பர்களுடன் பேசினான். எல்லாரிடமும் மாமா என்று அறிமுகம் செய்துவைத்தான். இவருக்குத் தெரியாததே கிடையாது என்றான். “உன்னோட பெஸ்ட் ஃபிரண்ட் யாருடா?” “அவ இங்க இல்லை” “அவளா?” “ஆமாம்.. வாங்க காட்றேன்”

மடத்திற்கு வெளியே செல்லும் சாலை நீண்டு போய் வலது பக்கம் திரும்பியது. அதன் ஓரத்தில் ஒரு பள்ளி இருந்தது. “அது கவர்மெண்ட் ஸ்கூல்தான?” அதன் பின் வாசல் வழியே அழைத்துச் சென்றான். மதிய உணவிற்காக சமைத்துக்கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்ததும் ஒரு சின்ன பெண் ஓடி வந்தது. “இவதான் செல்வி. என் பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்றான். “உங்க அம்மா எங்க இருக்காங்க?” “அதோ சமைக்கிறாங்களோ அவங்கதான்” “அப்படியா. எப்பவும் நல்ல ஃபிரண்ட்ஸா இருக்கணும்” “சரி அங்கிள்” விஷ்ணு “அப்றம் வர்றேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு வந்தான். “எப்படிடா இவளை ஃபிரண்ட் பிடிச்ச?” “இவ எங்க மடத்துக்குப் பக்கத்துல இருக்கிற ஸ்கூல்லதான் படிக்கிறா. சைக்கிள் ஓட்டிக்கிட்டு இருக்கும்போது கீழ விழுந்துட்டா. நாந்தான் ஹெல்ப் பண்ணேன். அப்படியே ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோ ம்” “சரி மாமா கிளம்பறேன். நீ ஒழுங்கா படி” “அடுத்த தடவை வரும்போது அத்தையைக் கூட்டிக்கிட்டு வா. நா செல்வியைக் காட்டணும்” “சரி.”

பஸ்ஸில் வரும்போது நினைவுகள் முழுதும் எங்கெங்கோ சிறகிட்டுப் பறந்தன. மிகவும் நிறைவாக உணர்ந்தேன். வீட்டிற்கு வந்ததும், எப்போது எப்படி முடியப்போகிறது என்ற முடிவறியாத ஒரு புனைவை ஆரம்பித்தேன். இங்கேயே இக்கதை முடிகிறது அல்லது தொடங்குகிறது.

அத்தியாயம் – 1

நான்கடி உயரம் உடைய மஞ்சள் நிறச் சுற்றுச் சுவர் நீண்டு கொண்டே செல்லும். அதன் முடிவில் கரி அப்பிய அந்தச் சமையலறை இருக்கும். எப்போது அங்கிருந்துதான் பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் இருவரும். அவனுக்கு வயது 13 ஆகப்போகிறது. அவளுக்கு வயது 12 ஆகிறது. அவன் உயரத்தை அவள் கரிக்கோடால் அந்தச் சமையலறையின் சுவரில் வரைந்திருந்தாள். அதற்குச் சற்று கீழே அவளின் உயரத்தை அவன் அளந்திருந்தான். அணில்கள் உள்ளே வந்து கிழே சிதறிக் கிடக்கும் சில பருக்கைகளையோ தானியங்களையோ கொறித்துக்கொண்டு அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுச் செல்லும். முதலில் அணில்கள் உள்ளே வந்த போது அவன் மிகப் பதறினான். அவள் அதைப் பார்த்து இரசித்து வெகுவாய்ச் சிரித்தாள்.

“அணிலுக்கு போய் பயப்படுறியே”

அவன் பேசவில்லை. அவனைப் பொறுத்தவரை அவன் பேச அவளும் அவள் குடும்பமும் தகுதியற்றது. அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் விலகிச் சென்றான். இப்போதெல்லாம் அப்படியில்லை. அவன் அங்கு வந்து அவளுடன் பேசிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் யாரும் பார்க்கக்கூடாது என்றுதான் அதிகம் பயந்துகொண்டிருந்தான். அங்கு வராமல், அவளைப் பார்க்காமல் அவனால் இருக்கமுடியாது என்பது அவனுக்குத் தெரியும். யாருமில்லாமல் அவள் மட்டும் எந்த நேரத்தில் தனியாக இருப்பாள் என்பதை அவன் நன்கு அறிந்து வைத்திருந்தான்.

“என்ன என்னயவே முறைச்சிப் பார்த்துக்கிட்டு இருக்க?”

“ஒண்ணுமில்ல. சும்மாத்தான்….. நீ கூடத்தான் என்னயவே பாத்துக்கிட்டு இருக்க”

“ஏன் பாத்தா என்னவாம். எவ்வளவு செகப்பா இருக்க தெரியுமா நீயி?”

“அவ்ளோ செகப்பா? இருக்கும். அம்மா கூட அடிக்கடிச் சொல்லுவாங்க”

அம்மா என்று சொல்லவும் அவன் பேச்சு தடைபட்டது. அவள் அவனைச் “சொல்லு” என்றாள்.

“அம்மா கூடச் சொல்லுவாங்க. ஆனா நீ கருப்பு. நாங்க ஸ்கூல்ல படிக்கும்போது கருப்பா இருக்கிற பொண்ணுங்களை கருப்பிம்போம்”

ஸ்கூல் என்று சொல்லும்போது அவன் கொஞ்சம் உடைந்தான்.

“அப்போ நானும் கருப்பியா? ஒனக்கு ரொம்பத்தான் வாய்”

“கருப்பா இருந்தாலும் நல்லா இருக்க. நாந்தான் செகப்பாயிட்டேன். ஆம்பளப் பசங்க கருப்பா இருந்தாத்தான் அழகுன்னு அக்கா சொல்லுவா”

அக்கா என்னும்போதும் கொஞ்சம் உடைந்தான்.

“எங்க வூட்ல எல்லாரையும் கருப்பா பாத்து பாத்து உன்னைப் பாக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு”

சமையலறைக்குள்ளிருந்த சிறிய மேடொன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அந்த மேடு சமையலறையை இரண்டாகப் பிரித்தது. அவள் இரண்டாம் அறையின் ஒரு மூலையில் சாய்ந்து நின்ற படி பேசிக் கொண்டிருந்தாள். கைகளால் கழுத்திலிருந்த பாசியை உருட்டிக்கொண்டிருந்தாள். வெளியிலிருந்து உள்நோக்கி வேகமாகக் காற்றடித்தது. ஓரத்தில் எரிந்துகொண்டிருந்த அடுப்பு காற்றால் உக்கிரமாகி சத்தத்துடன் எரிந்தது. காற்றில் அவன் அணிந்திருந்த பஞ்ச கச்சம் சிறிது விலகி அவனது தொடை பளீர் என்று தெரிந்தது. அவள் அவன் தொடையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கொஞ்சம் வெட்கமடைந்தான். விலகியிருந்த கச்சத்தை சரி செய்துகொண்டான்.

அவள், “தொடை ரொம்ப செகப்பு” என்று சொல்லிச் சிரித்தாள். அவன் எழுந்து அவளருகே சென்றான். அவள் சிரிப்பை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சட்டென அவளை நெருங்கி முத்தமிட்டு, அவளைக் கட்டிக்கொண்டான். அவளும் அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். அவன் முதுகில் கிடந்த பூணூலை கைகளில் சுற்றிக்கொண்டு இறுக்கினாள். அவன் கையிலும் மார்பிலும் இட்டுக்கொண்டிருந்த கோபிச்சந்தனம் வேர்வையில் கரைந்து வழிந்தது.

எப்போதும்போல் உள்ளே வந்த அணில், அக்கம் பக்கம் பார்த்துவிட்டு சட்டென்று வெளியில் தாவி, புகை படிந்திருந்த மஞ்சள் சுவரில் ஏறி ஓடியது.

-oOo-

Share

அப்பாவின் நண்பர்-சிறுகதை

ரண்டு பக்கமும் பூவரச மரங்களும் மருத மரங்களும் நின்றிருக்கும் செம்மண் சாலை. தாமிரபரணியின் வாசத்தைச் சுமந்துவந்து என்னைத் தழுவி ஆசுவாசப்படுத்திச் செல்கிறது காற்று. இரவு கவியத் தொடங்கும் மாலையின் பின்பொழுதில் அந்தச் சாலையில் வந்துபோன நாள்கள் மனதுள் படுவேகமாகத் தோன்றி மறைகிறது. சாலைக்குக் குறுக்காக ஓடும் ஓடையைக் கடக்க உதவும் சிறிய பாலத்தில் நின்று கொண்டு தூரத்தில் ஓடும் ஆறை மானசீகமாகப் பார்க்கிறேன். தூரத்தில் ஆற்றில் குளித்துவிட்டு வரும் ஒன்றிரண்டு மனிதர்களில் சீனிவாசராவின் உருவம் தெரிகிறது. சீனிவாசராவ் என்னைப் பார்த்திருப்பார் என்றே நினைக்கிறேன். அவரின் நடையில் வேகம் கூடியது போன்று தோன்றியது. சீனிவாசராவைத் தவிர்க்க முடியாது. ஒரு வார்த்தையாவது பேசியே ஆகவேண்டும்.

அவர் சீனிவாசராவா வேறு யாரோவா?

அந்தச் சிறிய வெள்ளைப் பாலத்தின் மீது காகங்களும் குருவிகளும் எச்சங்கள் இட்டிருக்கின்றன. எச்சமில்லாத ஓரிடம் பார்த்து அமர்கிறேன்.

காகங்கள் பித்ருக்கள். நேற்று அப்பாவின் திதிக்கு வந்திருந்த ஆச்சார் அப்படித்தான் சொன்னார்.

அப்பாவின் நினைவை நான் மேலெழும்ப விடுவதேயில்லை. அப்பாவுக்கும் எனக்கும் பின்னப்பட்டிருந்த இழை என்றோ அறுந்துவிட்டது. அப்படி ஒரு இழை இருந்ததாகக் கூட நினைவில்லை. அப்பாவின் சிரித்த கோலத்தை நினைவில் கொண்டுவர முயன்றதில் ஒருமுறைகூட வென்றதில்லை. அவருக்கு எதற்கு வேண்டுமானாலும் கோபம் வரும். யாரிடம் வேண்டுமானாலும் கோபம் வரும். அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வது வெகு அபூர்வம். அதற்காக அம்மா அதிகம் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. அப்பா இறந்த அன்று அம்மா ஒரே ஒரு தடவை அழுதாள். அப்பாவைத் தூக்கிக்கொண்டு போகும்போது அழாதவள் எல்லாக் காரியமும் முடிந்து நான் திரும்பி வீட்டிற்கு வந்தபோது என்னைப் பார்த்து அழுதாள்.

சத்தமேயில்லாத அழுகை. அவளை நேருக்கு நேராகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே அவள் அழுகிறாள் என்று தெரியும் வகையான அழுகை. அந்த அழுகைக்குப்பின் அப்பாவிற்காக அம்மா அழவேயில்லை.

ஆனால் சீனிவாசராவ் எனக்கும் அப்பாவிற்குமிடையே பலமான ஒரு இழை இருந்ததாகப் பாவித்துக்கொண்டு அதை மேலும் மேலும் பலமுள்ளதாக்குவார். மிகுந்த பிரயாசைப்பட்டே நான் தப்பிக்கவேண்டியிருக்கும்.

நீரில்லாமல் கருத்துப்போய் சாக்கடையாகத் தேங்கிக் கிடக்கும் ஓடையில் வீசப்பட்டிருந்த இலைகளுக்காகப் பன்றிகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. என் கையிலிருந்த தர்ப்பைப் புல்லையும் காய்ந்துபோன பூ ஆரத்தையும் தூக்கி வீசி எறிந்தேன். ஆற்றில்தான் எறியவேண்டும் என்ற அம்மாவின் பிடிவாதமும் எனது சோம்பேறித்தனும் ஓடையில் முடிந்தன.

எனக்குக் கல்யாணம் ஆகும்வரை அப்பாவுடன் கோபம் வரும்போதெல்லாம் என் மனதளவில் நான் தோற்பேன். அப்போதெல்லாம் வெட்கம் பிடுங்கித் தின்னும். வெளியில் உரக்க ஜம்பம் பேசினாலும் ஒரு எல்லைக்கு மேல் அப்பாவை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத்தனம் என்னை உந்தும். எங்கேயாவது ஆளில்லாத ஒரு தனிமைக்குள் ஓடி ஒளிந்துகொள்ளத்தோன்றும். அப்போது என் கால்கள் இந்தச் செம்மண் சாலையைத் தேடி நடக்கும்.

இந்தப் பாலம்தான் என் சுமைதாங்கி. இங்கிருந்தபடி என் மூர்க்கமான மனதை அலையவிடுவேன். பல இடங்களில் சென்று மோதும். எகிறிக் குதிக்கும். பின் சாந்தமடையும். சாந்தமடையாமல் மேலும் தோற்கும் தருவாயில் அதற்குத் தூக்கு மாட்டி தற்கொலை செய்துவைப்பேன்.

தாமிரபரணியில் சென்று சிறிது நேரம் உட்கார்ந்து ஆற்றின் சலனத்துடன் கூடிய அமைதியை உள்வாங்கிக்கொண்டிருப்பேன். ஓடும் ஆறு என் மன உளைச்சல்களை, நிச்சலனங்களைக் கரைத்துக்கொண்டு ஓடும். ஆற்றில் மூழ்கி எழுந்திருக்கும்போது அப்போதைக்கு ஒரு புது உலகம் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

என் கல்யாணத்திற்குப்பின் தாமிரபரணியின் தேவை குறைந்தது. வெகு சில அசந்தர்ப்பங்களில் மட்டுமே இந்தச் சாலையும் இந்தப் பாலமும் ஆறும் எனக்குத் தேவைப்பட்டிருக்கின்றன. நேற்று அப்பாவின் திதி தந்த அவரது நினைவு இன்று என்னை இங்கு விரட்டியிருக்கலாம் அப்பாவிடமிருந்து நான் எத்தனை வேகமாக விலகுகிறேனோ அத்தனை வேகமாக ஏதோ ஒன்று என்னை அவரை நோக்கித் தள்ளுகிறது.

காகம் ஒன்று படபடத்துப் பறக்கிறது. அது அப்பாவாக இருக்கலாம் என்று எண்ணும்போது சீனிவாசராவ் மிகச் சமீபத்துவிட்டிருந்தார்.

“என்னடா இங்க உட்கார்ந்துக்கிட்டு இருக்க?”

சீனிவாசராவும் நானும் தமிழில்தான் பேசிக்கொள்வோம். மற்ற ராவுஜிக்களைப் போல வலிய வலிய கன்னடம் பேசமாட்டார். அவரின் பேச்சை நான் அதிகம் சிரத்தையோடு கவனிப்பதில்லை என்பதை அவரும் ஓரளவிற்கு அறிவார். ஆனாலும் காணும்போதெல்லாம் ஒருவார்த்தையாவது பேசாமல் போகமாட்டார்.

“அப்பா திதி முடிஞ்சிருச்சா”

“ம். நீங்க நல்லா இருக்கீங்களா”

“ஏதோ இருக்கேன். வாயேன் நடந்துக்கிட்டே பேசலாம். நீயும் வீட்டுக்குத்தானே போகப்போற?”

சீனிவாசராவுடன் போவதில் எனக்கு அதிக இஷ்டமில்லை. இன்னும் சிறுதுநேரம் காகங்களையும் காற்றில் ஆடும் மரங்களையும் நன்கு கவிந்துவிட்ட இருளையும் பழக விரும்பினேன். அவரைப் போகச் சொல்லிப் பார்த்தேன். அவர் விடுவதாக இல்லை. வேறுவழியில்லாமல் நானும் கிளம்பினேன். அவரும் என்னுடன் பாலத்தில் அமர்ந்துவிட்டால் சுலபத்தில் தப்பிக்கவே முடியாது என்கிற பயமும் ஒரு காரணம்.

வழியெங்கும் நொங்கின் மேல் பாகம் வெட்டப்பட்டுச் சிதறிக் கிடக்கிறது. பதனீர் குடித்துவிட்டு தூக்கி எறியப்பட்ட பனை ஓலைகள் சாலையெங்கும் பரவிக்கிடக்கின்றன. சீனிவாசராவின் தொடர் பேச்சுக்கு அவ்வப்போது காது கொடுத்துக்கொள்கிறேன். என்னையறியாமல் ஒருபுறம் கேட்கவும் இன்னொருபுறம் சுற்றுப்புறத்தை உற்று நோக்கவும் இரண்டிற்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் சஞ்சரித்து மீள்கிறேன்.

“உங்க அப்பாவுக்குப் பதனீர்னா அப்படி ஒரு இஷ்டம். எத்தன தடவ இங்க வந்து குடிச்சிருக்கோம். டம்ளர்ல குடிக்கமாட்டான். பனை ஓலைலதான் குடிப்பான். அதுதான் அவனுக்குப் பிடிக்கும்”

முன்பெல்லாம் எனக்கும் பதனீர் இஷ்டமாக இருந்தது. அப்பாவிற்குப் பிடிக்கும் என்று தெரிந்தகணத்தில் பதனீரை வெறுத்துவிட்டிருந்தேன். இவர் அப்பாவிற்குப் பதனீர் மிகப் பிடிக்கும் என்று உறுதிப்படுத்துகிறார். எது எனக்குப் பிடிக்குமென்று என்றாவது அப்பா கேட்டிருக்கிறாரா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

எண்ணெய் போடாத சைக்கிள் ஒன்றில் சத்தம் எழுப்பியபடி ஒருவன் கடந்து போகிறான். அந்தச் சத்தம் எனக்குப் புல்லரிப்பை ஏற்படுத்துகின்றது. பல்லைக் கடித்து உள்ளங்கைகளை முறுக்கிபுல்லரிப்பைக் கட்டுப்படுத்துகிறேன். அப்பாவிற்கும் இதுபோலவே சில சத்தங்கள் விரும்பத்தகாத புல்லரிப்பை ஏற்படுத்தியிருக்குமோ என்கிற எண்ணம் பெரும் பீதி தருவதாக இருந்தது.

சீனிவாசராவ் பேசிக்கொண்டிருக்கிறார்.

“உங்க அப்பனுக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. ஓட்டப் பழகும்போது ஒரு தடவ கீழ விழுந்து கால்ல நல்ல அடி. அதுலேர்ந்து சைக்கிள் பக்கத்துலயே வரல அவன். ஆளும் கொஞ்சம் குள்ளமா! உன் உயரம்தான் இருப்பான். கால் சரியா எட்டலை. அதுலேர்ந்து சைக்கிளே ஓட்டமாட்டான்”

எனக்கு சைக்கிள் நன்றாக ஓட்டவரும் என்பது ஆசுவாசம் தந்தது. என் உயரமும் என் அப்பாவின் உயரமும் ஒரே அளவு என்று சீனிவாசராவ் சொல்வது எரிச்சல் ஏற்படுத்தியது. சீனிவாசராவ் அப்பாவை விட்டுவிட்டு வேறு எதாவது பேசினால் நல்லது. சொல்லிவிடலாமா?

அருணகிரி தியேட்டரைக் கடந்து தெற்குபுதுத் தெருவுக்குள் நுழைகிறோம். தியேட்டருக்குச் சிலர் வேகவேகமாக நடக்கிறார்கள். எனக்கென்னவோ படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வமிருக்கவில்லை.

“உங்க அப்பாவுக்குப் படம்னாலே ஆகாது. தியேட்டர்ல எத்தனை படம் பார்த்திருப்பான்னு நினைக்கிறே?”

அப்பாவிற்குப் படம் பிடிக்காது என்று சொல்லாத அம்மாவை நினைத்துக் கோபம் கொண்டேன். அப்பாவின் குணநலன்கள் என்னுள் இருப்பதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. இந்தச் சீனிவாசராவின் வீடு எங்கே இருக்கிறது? எப்போது போவார்?

“மாமா உங்க வீடு எங்க இருக்கு?”

“மறந்துட்டியா? ஒருதடவை வந்திருக்கியே. சுடலைமாடன் கோவில் தெருவில.. ஜெராக்ஸ் கடைக்குப் பக்கத்துல.. மறந்துட்டியா? இட்லி மாவு விற்கப்படும்னு ஒரு போர்டு போட்டிருக்குமே.. இப்ப வேணா வாயேன்”

“வந்திருக்கேனோ.. சரியா ஞாபகமில்லை”

“உங்கப்பாவும் இப்படித்தான். எதை மறக்கிறதுன்னு கணக்கே இல்லை. எதை வேணா மறப்பான்” சொல்லிவிட்டு வெகுவாகச் சிரித்தார். எனக்குள் கோபம் சூழ்ந்தது. ஆனாலும் தன்னை மறந்து சிரிக்கும் அவரது இரசனையான சிரிப்பை நிறுத்த மனம் வரவில்லை. சீனிவாசராவ் சிரிக்கும்போதே அவரது குழந்தைத்தனம் வெளிவந்துவிடும்.

வாகையடிமுக்கு வந்துவிட்டிருந்தோம். திருவள்ளுவர் சிலை அழுக்கப்பி தூசி படித்து கிடக்கிறது. இப்படிக் கவனிப்பாரற்ற சிலைகளைக் காணும்போதெல்லாம் வருத்தம் வரும்.

“சிலையைப் பார்க்கும்போது ஞாபகம் வருது. உங்கப்பாவுக்குச் சிலைன்னாலே இஷ்டமில்லை. சிலை அகற்றும் போராட்டம்னு தனியாளா கூத்தடிச்சான். போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனான். போலீஸ்ல மிரட்டி விட்டுட்டாங்க”

சீனிவாசராவ் என் பொறுமைக் கோட்டைக் கடக்கச் செய்யாமல் போகமாட்டார் என்று நினைத்துக்கொண்டேன். இனியும் எதையாவது சொல்லிக்கொண்டிருந்தால் என்னால் சும்மாயிருக்கமுடியாது. பொறுமை இழந்து அவரைப் பார்க்கிறேன். பூணூல் தனது நிறத்தை இழந்து கருப்புக்கோடாக மார்பில் கிடக்கிறது. தொங்கிப் போன மார்பிலும் நெற்றியிலும் ஒட்டிப் போன வயிற்றிலும் நாமக்கீற்றுகள் தென்படுகின்றன. அவரது முகம் எப்போதும் லேசான சிரிப்பை ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதில் நிரம்பியிருக்கும் வாத்சல்யமும் அவரது வயதும் தோற்றமும் எப்போதும் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் சிரிப்பும் என் கோபத்தைப் புறக்கணித்து என்னுள் மரியாதையைத் திணிக்கின்றன.

சந்திப்பிள்ளையார் கோவில்வரை வந்தாகிவிட்டது. டவுண் பஸ்கள் சீறிப் பாய்ந்து எங்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வொரு பஸ் கடக்கும்போதும் சீனிவாசராவ் நின்று நிதானித்து, பஸ் போனபின் என்னுடன் நடக்கிறார். என் கோபத்தின் சுவடு அவருக்குப் புலப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். சிறிதுநேரம் அமைதியாக இருந்தார்.

திடீரென “என்னை நம்பி வீட்டுல பொண்டாட்டியும் நாலும் பொண்ணுங்களும் இருக்கு” என்று சொல்லி வெகுளியாகச் சிரித்தார். அவரால் அமைதியாக இருக்கமுடியாது என்று தோன்றியது. என் மனதுள் அவரைப் பற்றிய ஒரு இரக்கம் சூழ்ந்தது. நானும் லேசாகச் சிரித்தேன்.

“இவ்வளவு வந்தாச்சு. வீட்டுக்கும் வாயேன்”

“இல்ல மாமா இன்னொரு நாள்”

“சரி வா. போத்திக் கடைல ஒரு காபி சாப்பிட்டுட்டுப் போகலாம். வேண்டாம்னு சொல்லாத. எனக்காக வா”

போத்தி கடையில் கூட்டம் அதிகமில்லை. ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். சீனிவாசராவ் இருவருக்கும் காபி சொன்னார்.

“போத்திக் கடை காபின்னா அப்பல்லாம் அவ்வளவு பிரசித்தம். காலேல அஞ்சு மணிக்கெல்லாம் அப்படி ஒரு கூட்டம் வரும். உங்க அப்பாவுக்கு காலேல ஒரு காபியும் உளுந்தவடையும் சாப்பிடலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்”

நான் சர்வரைக் கூப்பிட்டு காபி வேண்டாம் என்று சொல்லி டீ சொன்னேன். சீனிவாசராவ் ஏதோ ஒரு தெலுங்கு கீர்த்தனையை வாய்க்குள் முனகினார். “உங்க அப்பா நன்னா பாடுவார்” என்று அவர் ஆரம்பிக்காமல் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். போத்திக்கடை முழுக்க கடவுள் படங்களாக இருந்தது. கதை வைத்த ஆஞ்சநேயரும் ராகவேந்திரரும் ராமர் பட்டாபிஷகமும் மத்வாச்சாரியாரும்…

“உங்க அப்பாவுக்குத் தெய்வ நம்பிக்கையே இல்லை தெரியுமோ”

சீனிவாசராவை உற்றுப் பார்த்தேன். என்னைக் கவனிக்காமல் அவர் டீயை ஆற்றிக்கொண்டே சொன்னார்.

“ஆரம்ப காலத்துல உங்க அப்பாவுக்குத் தெய்வ நம்பிக்கையே கிடையாதுடா. அதுலதான் உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிறைய பிரச்சனை. ஒரு காலத்துல உங்க அப்பா தெய்வ நிந்தனை போராட்டம்லாம் கலந்துக்குவாரன். உங்க அம்மா சொன்னாலும் கேக்கமாட்டான்”

என்னைப் பெரும் கலவரம் பற்றிக்கொண்டது. எனக்கும் அதிகம் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் அப்பா அளவு போராட்டம் என்றெல்லாம் சென்றதில்லை.

“ஒங்கப்பாவுக்கு கண்ணு மண்ணு தெரியாம கோவம் வரும். உங்க அம்மாவை ரெண்டு மூணு தடவை அடிச்சிருக்கான்”

மிக அதிகம் கோபப்பட்ட ஒரு நிலையில் பாருவை அடிக்க கை ஓங்கியிருக்கிறேன். இத்தனை நாள் எனக்கும் அப்பாவுக்கும் சம்பந்தமேயில்லை என நான் நினைத்ததெல்லாம் எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட பிரமையோ? அப்பாவின் சாயல் என் மீது அப்படியே படிந்து போயிருக்கிறதோ? பார்த்து பார்த்து விலகிக்கொண்டாலும் ஒட்டிக்கொண்டே வருமோ? சீனிவாசராவைப் பார்க்காமல் இருந்திருக்கலாமோ? சுற்றிலும் அப்பாவின் பல பிம்பங்கள் நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தன.

“உங்க அப்பா முன்னாடி யாரும் வாதம் செய்யமுடியாது. உங்க அப்பா எப்பவாவதுதான் பேசுவான். ஆனா முத்துத் தெறிச்சாப்புல இருக்கும். அதுக்குப் பதில் சொல்றதுக்குள்ளயே எதிராளிக்குத் தாவு தீர்ந்திடும். அதிகம் பேசமாட்டாரன். ஒன்ன மாதிரிதான்” நுரையோடு டீயைச் சூப்பினார்.

“இன்னொன்னும் சொல்லணும். சில விஷயங்கள்ல அப்படியே உன் ரூபத்துல ஒங்க அப்பாவைப் பார்க்கிறேன். எதிராளி பேசும்போது அவன் கவனம் வேற எங்கயாவது இருக்கும். அதனால பேச்சைக் கவனிக்கிலைன்னு இல்லை. அதையும் கவனிப்பான்”

வெகுவேகமாக என் அப்பா சிரித்துக்கொண்டே, என் எதிர்ப்பையும் மீறி, வெறியான அத்துமீறலுடன் என்னுள்ளே நுழைந்துகொண்டார். மிகுந்த பிரயாசைப்பட்டு என் அப்பாவைப் பிய்த்து வெளிய எறிய முயல்கிறேன். அப்பாவின் குரூரமான சிரிப்பு மட்டுமே எங்கும் எதிரொலிக்கிறது.

என் அப்பாவை என்னால் அடக்கமுடியவில்லை.

சீனிவாசராவ் டீயைக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்துவிட்டு கவுண்ட்டருக்குச் சென்றார். காசை அவரே கொடுத்தார். போத்தியிடமிருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு வந்தார்.

“ஆத்துக்குக் குளிக்கப் போகும்போது போத்திகிட்ட கொடுத்துட்டுப் போயிருந்தேன். வர்ற வழில ஒன்னைப் பார்த்தேன். நல்லதாப் போச்சுன்னு நினைச்சுக்கிட்டேன். உங்கப்பாவுக்கு கடைசி காலத்துல சாமிமேல நம்பிக்கை வந்திருச்சு தெரியுமோ”, என்றவர், “ஏன்னு நினைக்கிறே?” என்று கேட்டுக்கொண்டே மஞ்சள் பையைப் பிரித்து உள்ளிருந்து ஒரு சிறிய பிள்ளையார் சிலையன்றை எடுத்தார். அதன் மேலே நிறைய அருகம்புல் ஒட்டியிருந்தது.

“இந்த மூலிகைப் பிள்ளையார்தான் காரணம். இது சாதாரண பிள்ளையார் இல்ல. மூலிகையிலயே செஞ்சது. இதை அவன் கும்பிட ஆரம்பிச்சதும்தான் அவன் நினைச்சது நிறைய நடந்ததுன்னு சொல்லியிருக்கான். நீயும் ஒண்ணு வாங்கிப் பாரேன். நாப்பது ரூபா. எனக்குக் கமிஷன் அதனால சொல்றேன்னு நினைச்சிடாத. ஒங்கப்பன் அப்படித்தான் சொல்வான். அதுக்காகவே என்கிட்ட வாங்காம வேற யார் கிட்டயோ வாங்கினான். ஒனக்கு தெய்வ நம்பிக்கையுண்டு, அதனால சொல்றேன். காசு இப்ப கைல இல்லைன்னா பரவாயில்லை. வீட்டுக்கு வந்து வாங்கிக்கறேன்”

எனக்குள் இருந்த அப்பா “சீனிவாசராவ் கமிஷனுக்காகச் சொல்கிறான் வாங்காதே” என்றார்.

என் அப்பாவைத் தூரத் தள்ளி, அந்தப் பிள்ளையார் சிலையை வாங்கிக்கொண்டேன்.

சீனிவாசராவ் சொன்னார், “இந்த விஷயத்துல ஒங்கப்பன் மாதிரியில்லை. ஒனக்கு யோசிக்கத் தெரிஞ்சிருக்கு”.

அப்பா “துரோகி” எனக் கத்திக்கொண்டே இரண்டு கைகளால் என் நெஞ்சில் ஓங்கி ஓங்கிக் குத்தினார்.

(முடிந்தது)

Share

ஒரு இறப்பின் இரண்டு மூலங்கள் – சிறுகதை

வாக்கிங் போய்விட்டு, விசாகபவன் முன்னே சூடாக உளுந்த வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தலையில் காய்கறிக்கூடையைச் சுமந்து போய்க்கொண்டிருந்த வயதான கிழவி கல் தடுக்கிக் கீழே விழுந்தாள். நானும், வாக்கிங் வராமல் வடை மட்டும் சாப்பிட வரும் மாலியும், கிழவியைத் தூக்கிவிட ஓடினோம். வெறிச்சோடிப் போய் காலையின் பரபரப்புக்காத் தயாராகிக்கொண்டிருக்கும் தெரு சட்டென ஒரு பரிதாபத்தை வரவழைத்துக்கொண்டு அந்தக் கிழவியைச் சூழ்ந்து கொண்டது. மாலி கிழவியின் அருகே குனிந்து “ஆச்சி.. ஆச்சி..” என்றான். கிழவியிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் இல்லை. நான் குனிந்து கிழவியைத் தொட்டு உசுப்பினேன். உடல் சில்லிட்டிருப்பதாகப்பட்டது.

பத்து கடை தள்ளியிருக்கும் முடிவெட்டும் கடையிலிருந்து ஒருவன் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டே ஓடிவந்தான். அவன் முடிவெட்டிக்கொண்டு இரண்டு மாதத்திற்கு மேல் ஆகியிருக்குமோ என்னவோ. கருகருவென நிறைய முடி இருந்தது அவனுக்கு. இப்படி எந்த ஆணுக்காவது நிறைய முடி இருப்பதைப் பார்த்துவிட்டால் ஒவ்வொரு முறையும் என் பாட்டி, ‘இப்படி ஒரு பொட்டச்சிக்கு வளரமாட்டேங்கு” என்று அங்கலாய்த்துக்கொள்வாள். வந்தவன் கிழவியைப் பார்த்த கணத்தில் ‘உசுரு போயிட்டு’ என்றான். “ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போலாம்” என்றேன். மாலி கண் காட்டினான். ‘எனக்குத் தெரிஞ்ச கிழவிதான். நா போய் ஆளக்கூட்டியாரேன்” என்று சொல்லிவிட்டு, முடியை இரண்டு தரம் கோதிவிட்டுக்கொண்டு நடையைக் கட்டினான் கடைக்காரன். நாங்கள் நாலு பேர் சேர்ந்து கிழவியை நடைபாதையை விட்டு ஓரமாகக் கிடத்தினோம். மாலி இரண்டாவது முறை கண்ணைக் காட்டினான். நான் கூட்டத்திலிருந்து வெளியில் வந்தேன். யாரோ ஒரு பெண், “இப்படியும் உண்டுமா” என்றாள். வழியில் உருளைக்கிழங்கு, தக்காளி, கொஞ்சம் பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி எனப் பலவும் சிறிய கருப்பு நிற பர்ஸ் ஒன்றும் சிதறிக் கிடந்தன.

மாலி, “வேல இருக்குல்ல?”

“ம்”

“கெளம்பு. அவன் வந்து பாத்துக்கிடுவான். நானும் போவணும். எஸ்.ஆர்.எம். வாரேன்றுக்கான். நீ போய் ஆ·பிஸ¤க்குக் கிளம்புற வேலயப் பாரு” என்று சொல்லிவிட்டு, நான் அந்த இடத்தை விட்டு நகர்கிறேன் என்று அவனுக்குத் திருப்தி ஏற்பட்ட பின்பு, தன் ஸ்ப்லெண்டரை இரண்டு முறை உறுமச் செய்து, ஒன்றுமே நடக்காத மாதிரி ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே போனான்.

நடந்து விட்டுக்கு வந்து, மேம்போக்காகத் தினமலரை மேய்ந்துவிட்டு, தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு, சாப்பிடும்போது “எப்படிச் செத்துருப்பா?” என்றேன். “யாரைக் கேக்குறீங்க?” என்றாள் மனைவி. “ஒண்ணுமில்லை” என்றேன்.

மூலம்-1

தினமும் வயிற்றுப்பிழைப்புக்காக காய்கறி வாங்கி, கொஞ்சம் இலாபம் வைத்து, தெருத் தெருவாக விற்பாள் போல. தலையில் காய்கறிக்கூடை இருந்தது. அப்படித்தானிருக்கவேண்டும். கருத்த தேகம். சுருக்கங்கள் நிறைந்த உடல். பொட்டில்லை. தாலியில்லை. அரசு இனாமாகத் தரும் சேலையை உடுத்தியிருந்தாளோ? இரவிக்கை இல்லை. எவளோ ஒருத்தி, “இப்படியும் உண்டுமோ” என்று சொன்னது சரிதான். இப்படியும் உண்டுமா? கல் தடுக்கிக் கீழே விழுந்தவள், சிறு இரத்தக் காயம் கூட இல்லாமல், செத்துப் போவாளா? அவளைத் தொட்டுக் கூடப் பார்க்காமல், “உசுரு போயிட்டு” என்றவனை எந்த வகையில் சேர்க்கலாம்? ஒருவேளை அந்தக் கிழவி செத்துப் போவதற்காகவே காத்திருந்தானோ? அப்படிச் சொல்ல முடியாது. அவனுக்குத் தெரிந்த கிழவி என்றுதான் சொன்னான். அவளது மரணம் அவனுக்கு எந்த வகையிலும் தேவையானதாய் இருக்காது. “பாத்த ஒடனே கண்டுக்கிட்டேன் கிழவி போயிட்டுன்னு” என்று பிற்பாடு பிரஸ்தாபிப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். நிஜமாகவே கிழவி இறந்துவிட்டாள் என்பதைப் பார்த்த நொடியிலேயே கண்டுகொண்டு சொல்லியிருக்கலாம். என்னால் அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். மாலியும் அப்படிச் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்தது கூட மாலிக்குத் தெரிந்திருக்காது என்பதே காரணமாய் இருக்கவேண்டும். அவனுக்கு அவள் செத்தது சட்டென பிடிபட்டிருக்கலாம்.

எத்தனை மகன்களோ மகள்களோ? மகன் நல்ல வேலையில் இருந்திருக்க வாய்ப்பிருக்காது. இருந்திருந்தால், தெருத் தெருவாய்க் காய் விற்று, அரசு தரும் இனாம் சேலையை உடுத்திக்கொண்டு வாழ்ந்திருக்கமாட்டாள். மகனுக்கும் அவளுக்குமான உறவு எப்படி இருந்திருக்கும்? அம்மா இறந்ததைக் கேட்டு மகன் ரொம்பத் துடித்துப் போயிருப்பானோ? கிழவிக்கு அதிகம் வயசானதாகத் தெரிந்தது. மகனுக்குக் கல்யாணம் ஆகி, அவனுக்கும் வயதாகிப் போயிருக்கலாம். அப்படி இருந்தால் ரொம்ப அழுவான் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? ஒருவேளை அதிகம் அழுதிருக்கவும் செய்யலாம்.

கிழவி கன்னங்கள் ஒட்டிப்போய், வயிறு ஒட்டிப்போய்க் கிடந்தாள். மருமகள் கொடுமைக்காரியோ என்னவோ. சூதுவாது தெரியாத இந்தக் கிழவியை என்ன பாடு படுத்தினாளோ. நல்ல சாப்பாடு போட்டு, நறுவிசாக வைத்திருந்தால் கிழவி கன்னம் ஒட்டிப்போய், வயிறு ஒட்டிப்போய், சாகப் போகிற காலத்தில் தெருத் தெருவாய்க் காய் விற்கப்போவாளா? மருமகள் அடாவடிக்காரியாய் இருந்திருப்பாள். அதை மகனும் பார்த்துக் கொண்டிருந்திருப்பான். கிழவி மனம் வெறுத்துப்போய் அதிலேயே பாதி செத்துப்போயிருப்பாள். அதுதான் கீழே விழுந்ததும் மீதி இருந்த பாதி உயிரும் பிரிந்திருக்கிறது. இப்படியும் உண்டுமா? மகனும் மருமகளும் சேர்ந்தே அவளைக் கொன்று விட்டார்களே!

ஒருவேளை மகனோ மகளோ இல்லாத அனாதையாக இருக்குமோ? இருக்கலாம். அனாதைக் கிழவிகளுக்குத்தானே தானே அரசு இனாம் சேலை தருகிறது? மகனில்லாத, கலியாணம் ஆகிவிட்ட மகள் மட்டுமே இருந்தாலும் அரசு இனாம் சேலை தரும். மகனிருந்தாலும் தருமோ? மகள் நல்லவளாகத்தான் இருக்கவேண்டும். மாப்பிள்ளைக்குப் பயந்து, கடைசிக் காலத்தில் தன் தாயைக் கவனிக்க முடியாத நிலைமை அவளுக்கு வந்திருக்கவேண்டும். ஐயோ பாவம் அந்தக் கிழவியின் மகள். அவளின் மாப்பிள்ளை என்ன மனிதன்? அவனுக்கும் ஒரு வயோதிகம் காத்திருக்கிறது என்பதை எப்படி மறந்தான்? இப்படித்தான் பலரும் அவரவர்களின் எதிர்கால வயோதிகத்தை மறந்துவிடுகிறார்கள்.

அன்று காலை அந்தக் கிழவி என்னென்ன நினைத்திருப்பாள்? மகனின் காலில் விழுந்து, “வயசான காலத்துல என்ன நல்லா வெச்சிக்கடா” என்று கேட்டுக்கொண்டு, தனக்கொரு வழியமைத்துக்கொள்ள நினைத்திருக்கலாம். அல்லது மகளிடம் தன்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி மன்றாட நினைத்திருக்கலாம். அல்லது யார் துணையுமில்லாமல் கடைசி வரை காய் விற்றே பிழைத்துக்கொள்ள தீர்மானித்திருக்கலாம். எப்படியோ அவளின் கடைசி வந்தேவிட்டது. ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்து, காய்களும் பழங்களும் சிதறிப்போக, அவள் அமைதியாக அடங்கிப்போனாள்.

“ஸார்! ஏதோ யோசனையிலயே இருக்கீங்க. கமிஷனர் ஊர்ல இல்லை. ·ப்ரீயா இருக்கும். படத்துக்குப் போலாம்னீங்க. பம்பாய் தியேட்டர் சீனிவாசன்கிட்ட டிக்கெட்டுக்குச் சொல்லியிருக்கேன். போலாமா?”

“அதில்லை. காலேல வாக்கிங் போனப்ப ஒரு கிழவி கல் தடுக்கிக் கீழ விழுந்தா. அந்த ஸ்பாட்லயே செத்துட்டா. இப்படியும் நடக்குமா? என்ன கஷ்டமோ என்னவோ”

“ஓ! கேக்கவே கஷ்டமாயிருக்கு. அதிருக்கட்டும். படத்துக்கு நேரமாயிட்டு. போலாமா?”

“வயசானவங்களுக்கு கவர்மெண்ட்ல இனாம் சேலை தர்றாங்களே.. மகன் இருந்தாலும் தருவாங்களா?”

“என்ன சார்?”

“இல்ல. கவர்மெண்ட்டுல வயசானவங்களுக்கு ·ப்ரீயா சேலை தர்றாங்களே.. மகன் இருந்தாலும் தருவாங்களான்னு கேட்டேன்”

‘ஏன் சார்? வீட்டுல கேக்க சொன்னாங்களா?”

“நாம படத்துக்குப் போவோம்”

மூலம் -2

அன்றைய தினம் முழுதும் தியேட்டரிலும் மதிய உறக்கத்திலும் மாலை கொஞ்சம் ஆ·பிஸிலும் கழிந்தது. ·பைலை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு, நாளை கமிஷனருக்குத் தயாராக இருக்கவேண்டிய ·பைல்களையெல்லாம் ஒரு பிக்ஷாப்பரில் எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன். வீட்டிலும் வேலை பார்த்தால் மட்டுமே ·பைல்களையெல்லாம் முடித்துத் தயாராக வைக்க முடியும். இல்லையென்றால் கமிஷனர் வாயில் விழவேண்டியிருக்கும்.

சுசுகியில் விசாகபவனைக் கடந்தபோது காலையில் கிழவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மனதுள் திரையிட்டது. அந்தக் கிழவியை யார் கொண்டு போயிருப்பார்கள் என்று யோசனை பரவியது. வண்டியை நிறுத்திவிட்டு விசாகபவனுக்குள் சென்று கா·பி ஆர்டர் செய்தேன்.

“இன்னைக்குக் காலேல ஒரு கிழவி செத்துப் போச்சே… யார் கொண்டு போனாங்க?” – சர்வர் திருதிருவென விழித்தான். “சரி. பில் கொடுங்க” என்று கேட்டு காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். தூரத்தில் சலூன் கடையில், காலையில் வந்தவன் சுறுசுறுப்பாக முடிவெட்டிக்கொண்டிருந்தான். இப்போதெல்லாம் இரவுகளில் முடிவெட்டிக்கொள்ளுவது சகஜமாகிப்போய்விட்டது. மீண்டும் மீண்டும் கிழவியின் சாவைப் பற்றிய எண்ணமே வந்துகொண்டிருந்தது.

மாலியை ·போனில் அழைத்தேன். திட்டினான்.

“ஒனக்குத் தேவையா அந்த எளவெல்லாம்? எதாவது பிரச்சனைன்னா கூடவே நீ போவியா? ஒளுங்கா வீட்டுக்குப் போய்த் தூங்கு” என்றான். “உனக்கு ழ-வே வரமாட்டேங்கு” என்று சொல்லி ·போனைத் துண்டித்தேன்.

அடுத்தடுத்த இரண்டு மூன்று தினங்களில் கிழவியும் அவள் சாவும் என்னைக் கடந்து போய்விட்டன. சரத் சென்னையிலிருந்து எந்தவொரு அவசியமுமில்லாமல் அவன் வீட்டிற்கு வந்திருந்தான். “அப்பா அம்மாவ பாத்துட்டுப் போலாம்னு” என்று அவன் சொல்லியதைக் கேட்டு அவர்கள் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் பக்கத்துத் தெரு மஹா(லெக்ஷ்மி)வைப் பார்க்கப் போவான்.

“சரத் வந்திருக்கான்னாங்க? நீங்க எப்படி இருக்கீங்க?”

சரத்தின் அம்மா வாய் ஓயாமல் பேசினாள். அந்தத் தெருவில் யார் யாரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்குள் என்ன என்ன பிரச்சனைகள் வந்தது, இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் எந்தப் படம் நல்ல படம், இடையில் சுனாமியில் இறந்துபோன ஒன்றுவிட்ட மாமாவின் மகளைக் கட்டியவருக்காக ஒரு அழுகை என்று எல்லாம் ஒரே நேரத்தில் செய்தாள். நான் உச்சுக்கொட்டிக்கொண்டிருந்தேன்.

“அம்புட்டுதாண்டே வாழ்க்கை. நேத்து இருந்தவக இன்னைக்கில்லை. நோக்காடு கெடந்தே போகக்கூடாது. சாவு வருதுன்னே தெரியாம போயிரணும்”

சரத் சீக்கிரம் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். சரத்தின் ஆச்சி அதற்குமேல் வாயை அடக்கமுடியாமல் – யார் வந்தாலும் அவள் லொட லொடவென்று பேசக்கூடாது என அவளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது – “செத்தா அந்தக் கெழவி செத்தால்லா.. அவள மாதிரி சாவணும்” என்றாள்.

சரத்தின் அம்மா, “ஆமாடே.. அத்த சொல்றது சரிதான். கல் தடுக்கிக் கீழ விழுந்தா செத்துட்டா. சாவுன்னா இப்படித்தாண்டே வரணும்” என்றாள். தனக்குக் கிடைத்த ஆமோதிப்பில் சரத்தின் ஆச்சி அடுத்து ஏதோ சொல்ல வாயெடுத்தாள். “சரி போதும், வந்தவன பேசியே கொன்னுறாதீய” என்றவள் என்னைப் பார்த்து, “காப்பி சாப்பிடுதயாடே?” என்றாள். நான் அவசரமாக “எந்தக் கிழவி? எப்படிச் செத்தா?” என்றேன். சரத்தின் அம்மா கா·பி எடுக்க சமையலறைக்குள்ளே சென்றாள். அங்கிருந்தபடியே, “இங்க ஒரு கிழவி தெனம் காய் விக்கும். நம்ம தெரு முக்குல காய் விக்கும்லா.. நீ பாத்திருப்ப. ஒனக்கு ஞாபகமில்லியோ? வயசுப் பசங்க எங்க அக்கம் பக்கம் பாக்கீய? அது ரெண்டு நா முன்னாடி காலேல, விக்கதுக்கு காய் வாங்கிட்டு வந்திருக்கு. கல்தடுக்கிக் கீழ விழுந்திருக்கு. அங்கனயே செத்துட்டு” என்றாள்.

சரத்தின் ஆச்சி, “அங்கனயே ஒண்ணும் சாகலத்தா. இழுத்துக்கிட்டு கிடந்திருக்கா. அங்க இருக்கிறவனுவோ எவனும் தண்ணி கூட ஊத்தல. நாசமா போறவனுவோ” என்றாள்.

எனக்குப் பகீரென்றது. “பதினஞ்சு நிமிசம் இழுத்துக்கிட்டு கிடந்தவளைத் தூக்கி ஓரமாப் போட்டுட்டு, நம்ம பொன்னுராசுதான் டீ வாங்கி ஊத்திருக்கான். ஒரு வாய் குடிச்சிருக்கா. ரெண்டாவது வாய் குடிக்கவே இல்லை. அப்படியே சீவன் போயிட்டு. பொன்னுராசு புண்ணியம் பண்ணிருக்கான்”

“யாரு பொன்னுராசு?”

“நாவிதன் இருக்காம்லா. அவந்தான். சொக்காரந்தான் செத்த கெழவிக்கு!”

“ஓ! அந்தக் கிழவிக்கு பையன் இல்லியா?”

“இருக்கான். மெட்ராஸ்ல வேல பாக்கான். மருமகளும் வேல பாக்கா. கிழவி திமிரெடுத்தவ. மகன் கூடத்தான் வெச்சிருந்தான் கிழவிய. கிழவி அட்டூழியம் தாங்காம போயிட்டுவா தாயின்னுட்டான். கிழவிக்கு பென்சன் வருது. ஒரு காசு தரமாட்டா பையனுக்கு. மருமவ சும்மா விடுவாளா? கிழவி புருசன் கவர்மெண்ட்டு உத்தியோகத்துல இருந்தான். காக்காசுன்னாலும் கவர்மெண்ட்டுக் காசுன்னு இவ பண்ண பவுசு, அது ஒரு தனிக்கதத்தா. அவனயும் நிம்மதியா இருக்க விட்டாளா? இவ தொல்லை தாங்காமத்தான் செத்தான். வெஷம் குடிச்சுச் செத்தான்னு ஊர்ல பேசிக்கிடுதாக. நமக்குத் தெரியாதப்பா. தெரியாதத நம்ம வாயால பேசக்கூடாது பாரு. பிராமணன் பரலோகம் போனானாம்; மவராசி முடிபோச்சேன்னு அழுதாளாம்ன்ற கதயா, புருசன் செத்தன்னிக்கு, அத்தக்காரி போட்ட சாப்ப்பாடு ருசியா இல்லன்னு ஊரயே நாறடிச்சா. பென்சன் வருது. கவர்மெண்ட்ல மாசா மாசம் அரிசி, வருஷம் ரெண்டு சேலைன்னு வாங்குதா. கையக் கால வெச்சிக்கிட்டு வீட்ல கெடக்கலாம்லா? இருக்கமாட்டா. காசப் பாத்துப் பாத்துச் சேத்தா. என்னத்துக்காச்சு? திடீர்னு கீழ விழுந்து செத்துட்டா. போவும்போது கொண்டா போனா? ரெண்டு கத்திரிக்கா கூடப் போடமாட்டா கிழவி” என்றாள் சரத்தின் ஆச்சி.

நான் செய்துவைத்திருந்த கிழவி மண்கோபுரத்தை கடலின் பேரலைகள் மூர்க்கமாக அடித்துக்கொண்டு போயின.

இப்படியும் உண்டுமா?

(முற்றும்)

Share

பின்தொடரும் பூனைகள் – சிறுகதை

ஹையோ, புஸி எத்தன அழகு
புஸ¤புஸ¤ன்னு
லைட் எரியுற கண்ணோட
அப்படியே கட்டிக்குவேன்
பூனை என் செல்லம்

(வெங்கட், இரண்டாம் வகுப்பு, சித்ரா மெட்ரிகுலேஷன் பள்ளி)

ன்னை விடாது தொடரும் பூனைகள் போலவே நீங்களும் என்னைப் பின்தொடரப்போகிறீர்கள். இப்போது என்னுடன் என் எழாம் வயதில் இருக்கிறீர்கள்.

முதல் பூனை

என் பாட்டிக்குப் பூனை என்றாலே பிடிக்காது. அதன் உடலிலிருந்து உதிரும் மயிர் வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பல நோய்களை உண்டாக்கும் என்று சொல்லுவாள். பாட்டியின் செல்வாக்கை மட்டுப்படுத்தி வைப்பதில் என் அம்மா அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுவாள். வீட்டில் பூனையை வளர்க்க, பாட்டிக்குப் பிடிக்காது என்ற ஒரு காரணம் என் அம்மாவிற்குப் போதுமானதாய் இருந்தது. ஆனாலும் அம்மா என்னைப் பூனையின் பக்கத்திலேயே அண்ட விட மாட்டாள். என் அக்கா மட்டும் எந்தவிதத் தடையுமில்லாமல் பூனையைக் கொஞ்சுவாள். அதைப் பார்க்கும்போது என்னுள் ஏக்கம் பரவும்.

ஏனோ இந்தப் பூனை என்னை ஈர்க்கிறது. சாம்பல் நிறக்கோடுகளுடன் புசு புசுவென உரோமங்களுடன் முன் வலது காலை எச்சில்படுத்தி முகத்தைத் துடைக்கும் அழகைப் பார்க்கும்போது பூனையை அள்ளிக் கொஞ்சத் தூண்டும். மடக்கி வைக்கப்பட்ட படுக்கை விரிப்புகளில் நான்கு கால்களையும் மேலே தூக்கி பூனை ஆழ்நித்திரையில் இருக்கும்போது அது அறியாமல் பதுங்கிச் சென்று முகத்தை வைத்துப் பூனையை அழுத்திக் கொஞ்ச வெகுநாளாக எனக்கு ஆசை.

நான் பூனையின் அருகில் சென்றாலே யாராவது பார்த்துவிடுவார்கள். சமையலறையின் சன்னல் வழியாக அக்கா பார்த்துக் கத்துவாள். பாட்டி புலம்பத் தொடங்குவாள். பெரிய பிரளயத்துக்குப் பின் பூனை ஏகப்பட்ட வசவுகளைப் பெறுவதோடு அன்றைய தினம் கழியும்.

வீட்டில் யாருமே இல்லை என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு கொஞ்சச் செல்லும்போது பூனை இல்லாது போனதுமுண்டு.

இன்னும் சில சமயங்களில் நானே வாய்ப்பைக் கெடுத்துக்கொள்வேன். கொஞ்சம் அதீத ஈடுபாட்டுடன் கொஞ்சிவிடுவேன். பூனை மிகுந்த பயத்துடன் கொஞ்சம் கோபம் கலந்து புதுமாதிரியாகக் கத்தும். அந்தச் சத்தத்தை வைத்தே நான் பூனையைக் கொஞ்சுகிறேன் என்று அக்கா கண்டுபிடித்துவிடுவாள். பாட்டி, “அந்தச் சனியனைக் கொண்டு போய் விட்றுங்கடான்னா யாரு கேக்குறா? நா என்ன சொன்னாலும் எனக்கு எதிரா செய்யணும் அவளுக்கு..” என்று பூனையையும் என்னையும் விட்டுவிட்டு அம்மாவை வையத்தொடங்குவதோடு அன்றைய தினம் முற்றும்.

இப்போது வீட்டில் யாரும் இல்லை. என்னைப் பார்த்தவுடனே ஓடும் பூனை இன்று கொஞ்சம் நட்பு கலந்த குரலில் மிக மெலிதாக “மியாவ்” என்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தினம் பால் ஊற்றும் அக்கா இன்று மறந்துவிட்டாள் என்பதை யூகித்தேன். பூனை பசியிலிருக்கிறது. சமையலறையில் பாலைத் தேடி எடுத்துக்கொண்டுவந்து அதன் கிண்ணத்தில் ஊற்றினேன். சிறிது தயக்கத்திற்குப் பின் பருகத் தொடங்கியது. நாக்கு பாலை நக்கிக்கொண்டிருந்தாலும் அதன் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. அதிக ஈர்ப்புச்சக்தியுள்ள கண்கள். கரும்பச்சை நிறத்தில் அதன் கண்களைப் பார்க்கும்போது நான் என் வசமிழக்கத் தொடங்கினேன். மெல்ல பூனையை நெருங்கினேன். அது பால் குடிப்பதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு மீண்டும் குடிக்கத் தொடங்கியது. அதனருகில் அமர்ந்து தலையைத் தடவிக்கொடுத்தேன். மெல்லிய சத்தத்தில் அது உறுமுவது கேட்டது. நான்கைந்து முறைத் தடவிக்கொடுக்கவும் இயல்பாகி என் கைகளை உரச ஆரம்பித்தது. எனக்கு மிகுந்த சந்தோஷமாயிருந்தது. நாளை முதல் என்ன ஆனாலும் பூனைக்கு நான்தான் பாலூற்றவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அக்கா வரும்போது பூனை என்னைக் கொஞ்சுவதைப் பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்ற என் எண்ணம் உறுதிப்படத் தொடங்கியது.

பூனையும் நானும் வெகு விரைவில் நண்பர்களானோம்.

தினம் காலையில் பூனைக்குச் சன்னதம் பிடித்த மாதிரி ஒரு பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். சமையலறையிலிருந்து ரேழிக்குப் பாயவும் ரேழியிலிருக்கும் கதவு வழி மேலேறி சேந்திக்குச் செல்லவும் அங்கே இருந்து கீழே குதிக்கவும் அதன் அட்டகாசம் சொல்லி மாளாது. நான் கையில் சிறிய குச்சியையோ அல்லது அம்மாவின் படுக்கையறையில் வாடிப்போய்க் கிடக்கும் பூநாரையோ எடுத்துக்கொண்டு ஆட்டுவேன். தூரத்திலிருந்து அதைப் பார்க்கும் பூனை பதுங்கிப் பதுங்கி நடக்கத் தொடங்கி ஓடிவந்து என் கையில் தாவும். ஒரு கட்டத்தில் மூச்சு வாங்கிச் சாயும். இரண்டே நிமிடத்தில் ஆர்வம் தாங்காமல் மீண்டும் பரபரப்பாக ஓடத் துவங்கும். பூனையின் காலை நேரங்கள் எனக்கு மிக உவப்பானவை. சில சமயங்களில் அக்கா நான் அன்றைய வீட்டுப்பாடத்தை எழுதாமல் பூனையுடன் விளையாடுகிறேன் என்று போட்டுக்கொடுப்பாள். அவளுக்குப் பொறாமை என நினைத்துக்கொள்வேன். அவளிடமும் சொன்னேன். மிகுந்த அலட்சிய பாவத்தோடு “பூனை உங்கூட வெளயாட மட்டுந்தான் செய்யும். ஆனா அதுக்கு நெசமாலுமே எம் மேலத்தான் பாசம்” என்றாள். அவள் அகந்தைக்குச் சிகரம் வைக்கிற மாதிரி ஒரு நாளும் வந்தது.

இரவில் ·பேனின் சத்தம் கர்ண கொடூரமானதாய் இருக்கும். கொஞ்சம் பெரிய மனுஷ தோரணையில் “அந்தச் சத்தம் இல்லைன்னா தூக்கம் வரமாட்டேங்குது” என்பாள் அக்கா.

அவள் உறங்கும்போது பார்க்கவே எனக்குப் பயமாய் இருக்கும். பாதிக்கண் திறந்து தூங்குவாள். வயதை மீறிய வளர்ச்சி அவளுக்கு என்று பக்கத்துவீட்டு லட்சுமணன் அவன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. சில தினங்களுக்கு முன்பு காலையில் வழக்கம்போல் பூனையுடன் விளையாட முனைந்தபோது அக்கா திட்டினாள். இனிமேல் பூனையுடன் அப்படி விளையாடக்கூடாது என்று சொன்னாள். அதற்கான காரணங்களைச் சொல்ல முற்றிலும் மறுத்துவிட்டாள். பாட்டியும் கூட, “பூனை பாவம், அதை உபத்திரவிக்காதே!” என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பூனையும் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பில்லாமல் அமைதியாக இருந்தது. கடந்த சில நாளாகவே பூனையிடம் காலை வேளைகளில் பரபரப்பில்லை என்றாலும் இன்று அதன் அமைதி அளவிற்கு அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். யோசிப்பினிடையே தூக்கம் வரத் தொடங்கியது.

காலையில் வீட்டில் ஏகத்திற்கும் பரபரப்பு. ஆளாளுக்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. யாரிடமாவது கேட்டாலும் பதில் சொல்வார்கள் என்று தோன்றவில்லை. அக்கா ரேழியில் இருக்கும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் சென்று கட்டிலில் உட்கார்ந்துகொண்டேன். என்றைக்கும் இல்லாமல் அக்கா மீது பாசம் வருவதுபோல உணர்ந்தேன். உடனடியாக அதை மறுக்கவும் செய்தேன். அவளைத் தொட்டு அக்கா என்று அடிக்குரலில் கூப்பிட்டேன். நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த மறுவினாடி சொன்னாள்.

“நாந்தான் சொன்னேன்ல.. பூனைக்கு எங்கிட்டத்தான் பாசம் ஜாஸ்தின்னு.. நேத்து அது குட்டிப் போட்டிச்சு தெரியுமா.. உனக்கெங்க தெரியும். படுத்தா சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம பாதி வாயத் தொறந்துக்கிட்டு எச்சி ஒழுகிக்கிட்டு தூங்கத்தான் தெரியும்.. நேத்து நைட் பூனை வந்து என்னை முட்டி முட்டி எழுப்பிச்சு.. நாந்தான் கட்டிலுக்குக் கீழ இடம் ஒழிச்சுக் கொடுத்தேன். அழகா நாலு குட்டி போட்டுருக்கு.. பூனை உன்னை எழுப்பலை. என்னைத்தான் எழுப்பிச்சு.. தெரிஞ்சுக்கோ . இல்ல பாட்டி..” என்று பாட்டியையும் துணைக்கழைத்தாள். பாட்டி, “இந்த விஷயம்லாம் பொண்ணுங்களுக்குத்தான் புரியும்னு பொம்பளைப் பூனைக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு.. அவனுக்கு என்ன தெரியும். நீ அவனை சும்மா சீண்டாத” என்றாள்.

கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தேன். கருஞ்பச்சைக் கண்களுடன் இரண்டு முன்னங்கால்களை முன்னே நீட்டி, பின்னங்கால்களைப் பின்னே நீட்டி, பக்கவாட்டில் சாய்ந்து படுத்திருந்தது. மூன்று குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன. ஒரு குட்டி மடியைத் தேடிக்கொண்டிருந்தது. நான்கு குட்டிகளும் கண் திறக்கவில்லை. தாய்ப்பூனை பெரிய சாகசத்திற்குப் பின் ஓய்வெடுக்கும் வீரன் மாதிரி சத்தம் இல்லாமல் மியாவ் என்று வாயை மட்டும் அசைத்தது. சாம்பல் நிறக்கோடுகளாலான புசுபுசுவென்று இருக்கும் அப்பூனையை ஏனோ என் ஆழ்மனதிலிருந்து வெறுத்தேன்.

எழாம் வயதில் நடந்த சம்பவங்களைத் தொகுத்துச் சொன்னதன் களைப்பை மீறி உங்களை என் பதினைந்தாம் வயதிற்கு அழைத்துச் செல்கிறேன்.

இரண்டாம் பூனை

பூனைகளை நம்பாதீர்கள் தோழர்களே
அவை ஆழ்மன அழுக்கின் சின்னங்கள்
உலகம் பெற்ற சாபத்தால்
பிறந்துவிட்ட சைத்தான்கள் பூனைகள்
பூனைகளின் கண்கள்
சைத்தான் கைகளிலிருக்கும் அப்பம்
அது உங்களை அவைபால் ஈர்க்கும்
நான் சொல்கிறேன் கேளுங்கள்
ஓ தோழர்களே
பூனைகளை நம்பாதீர்கள்
(வெங்கட், பத்தாம் வகுப்பு, ம.தொ.நல ஒன்றிய மேல்நிலைப் பள்ளி)

யதுக்கு மீறி வளர்ந்திருந்த அக்கா வயதுக்கு மீறிய காரியம் ஒன்றைச் செய்தாள். பக்கத்துவீட்டுக் கோவிந்தனுடன் ஓடிப்போனாள். வீட்டில் எல்லோரும் அக்காவைத் திட்டித் தீர்த்து அழுது புரண்டார்கள். “ஒரே பேத்தி.. வயத்துல சுமந்துக்கிட்டு இருக்கா.. அவளைப் பார்க்க ஒரு நாதி இல்ல.. நா ஏன் இன்னும் சாகாம இருக்கேனோ” என்ற பாட்டியின் புலம்பலைத் தொடர்ந்து, அதற்காகவே காத்திருந்த மாதிரி, எல்லோரும் மனம் கனிந்து அக்காவை வீட்டுக்குக்குள் ஏற்றினார்கள். வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்த அக்கா என் மேல் அளவு கடந்த பாசத்தோடு என்னிடம் அத்தானின் புகழைப் பாடுவாள். நான் பதில் சொல்லாமல் கேட்டுக்கொள்வேன். “நாலு வருஷத்துக்கு முன்னாடியே உன்ன வயசுக்கு மீறின வளர்ச்சின்னான் கோவிந்தன்” என்று நான் சொல்லவில்லை.

திடீரென ஒருநாள், “பூனையில்லாமல் வீடு வெறிச்ன்னு இருக்கு” என்று சொல்லி ஒரு பூனையை வீட்டுக்குள் கொண்டு வந்தாள். அத்தான் கோவிந்தன் சம்பந்தமே இல்லாமல் “பூனை ரொம்ப அழகு. உன்னை மாதிரியே” என்று சொல்லி வைத்தான்.

ஐந்து வயதில் என் மனச்சித்திரத்தில் உறைந்து போன பூனைக்கும் இதற்கும் அதிக வித்தியாசங்களில்லை. சாம்பல் நிறக்கோடுகள். கரும்பச்சைக் கண்கள். வெள்ளை நிறத்தில் மீசை. ஆனால் மடியில்லை. ஆண் பூனை. பூனைகளை நம்பக்கூடாது என்று எத்தனையோ முறை மனதுக்குள் சொல்லிக்கொண்டாலும் அதன் விளையாட்டில், அழகில் மெல்ல நான் என் நம்பிக்கையை இழந்தேன்.

இப்போது யாரும் என்னைத் தடுக்கவில்லை. என் இஷ்டப்படி பூனையுடன் விளையாடினேன். பூனைக்குப் பெயர் ஏதும் வித்தியாசமாக வைக்காமல் புஸி என்று அழைத்தோம். அது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கூட நான் “புஸி, பாஸ்! பாஸ்! பாஸ்!” என்றழைத்தால் தூக்கத்தைக் கலைந்துவிட்டு ஓடி வரும். நான் எப்போது அழைத்தாலும் அதற்கு எதாவது தின்னக்கொடுப்பேன் என்று புரிந்துவைத்திருந்தது.

என் கண்டிப்பும் அதற்குப் புரிந்திருந்தது. “ஏய்!” என அதட்டினால், தான் ஏதோ தவறு செய்கிறோம் எனப் புரிந்துகொண்டு அமைதியாகும். என் செருப்புச் சத்தம் கேட்கும்போதே சத்தமில்லாமல் வந்து காலை உரசும். அரைக்கண்ணைத் திறந்து வாலை செங்குத்தாக மேலே தூக்கி காலை உரசினால் அது கொஞ்சுகிறது என்று புரிந்துகொள்வேன். என் அக்காவிற்குப் பூனையைக் கொஞ்சுவதை விடவும் முக்கியமான வேலை அத்தானைக் கொஞ்சுவது. அதனால் பூனையை மறந்துவிட்டிருந்தாள்.

எப்போதுமே காலம் ஒரே போல் இருந்துவிடுவதில்லை. இதை மிகுந்த துயரத்துடன் சொல்கிறேன்.

வரண்டாவில் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தேன். பெரிய வராண்டா. இரண்டு மரத்தாலான தூண்கள் உண்டு. பூனை காலை நேரத்தில் வெறி பிடித்த மாதிரி விளையாடும்போது இந்தத் தூண்களில் ஏறி இறங்குவது வழக்கம். ஒரு தூணின் பின்னிருந்து தரையோடு தரையாக பூனையின் வால் ஒன்று அசைந்தது போல இருந்தது. புஸியின் பழக்கப்பட்ட சாம்பல் நிற வாலாகத் தெரியவில்லை. இருந்த இடத்திலிருந்து தலையை நீட்டி தூணின் அந்தப் புறம் பார்த்தேன். ஏதோ ஒரு வெள்ளைப்பூனையின் மேலே புஸி படுத்திருந்தது. வெள்ளைப்பூனையின் வால் வெண்மையும் சாம்பலும் கலந்த நிறத்தில் இருந்தது. புஸியின் வாய் வெள்ளைப்பூனையின் உச்சந்தலையைக் கவ்விக்கொண்டிருந்தது. புஸி தன் கால்களால் வெள்ளைப்பூனையைப் இறுக்கப்பிடித்துக்கொண்டிருந்தது. லேசான உறுமலையும் கேட்டேன். பொறி தட்டவும் புஸியின் அநாகரீகச் செயலில் கோபம் கொண்டு கையிலிருந்த நோட்டால், ஏய் என்று அதட்டிக்கொண்டே ஓங்கி அடித்தேன். எதிர்பாராத தாக்குதலால் பயமும் கோபமும் ஒருங்கே எழ, வழக்கமாக எழும் மியாவ் சத்தத்திலிருந்து முற்றிலும் வேறாக, நினைத்தாலே கிலியை ஏற்படுத்தவல்ல ஒரு சத்தத்துடன் சீறியபடி திரும்பியது. கோபத்தில் அதன் உடலெங்குமுள்ள மயிர்கள் விறைத்து நிற்க, கரும்பச்சைக் கண்கள் சீற்றத்தை உமிழ, கோபத்துடன் உர்ரென்றது.

இப்படிப் பூனையின் மயிர்கள் விறைத்துப் பார்ப்பது மிகச் சில சமயங்களில்தான்.

நான் கடைக்குச் செல்லும்போது என் கூடவே புஸியும் வரும். நாய்களைத் தெருவில் கண்டால் சட்டென அருகிலிருக்கும் மரத்தில் தாவி ஏறிவிடும் அல்லது திறந்திருக்கும் ஏதேனுமொரு வீட்டிற்குள் ஓடிவிடும். எதிர்பாராத ஒரு தருணத்தில் தெருநாய் ஒன்று புஸியை மடக்கிவிட்டது. நான் கல்லைத் தேடி ஓடினேன். புஸி செய்வதறியாமல் அங்குமிங்கும் நோக்கியது. மரமில்லை. எந்தவீட்டின் கதவும் திறந்திருக்கவில்லை. தான் மாட்டிக்கொண்டது அறிந்த பின்னர் எதிர்க்கத் துணிந்தது. அதன் உடலெங்கும் மயிர்கள் விறைத்தெழ, வால் மேல் நோக்கி செங்குத்தாக விறைப்பாக, வாலிலும் உரோமங்கள் சிலிர்த்தெழுந்து நின்றன. மிகுந்த கோபத்தோடு புஸ் என்ற சீறலோடு வலது முன்னங்கையின் பிளவுகளிலுள்ள நகங்களைக் காற்றில் கீறியது. இத்தனை வேகத்தை எதிர்பார்க்காத நாய் மெல்ல பின்வாங்கியது. இரண்டு முறை குரைத்துவிட்டு ஓடிப்போனது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் உறைந்துபோனார்கள். அதன்பின் புஸி தெருவில் மிகப்பிரசித்தம்.

அப்படியொரு சீற்றத்தை இப்போதும் சீறியது. அதன் வாயில் வெள்ளை நிறத்திலான கோரைப்பற்கள் மிக தீர்க்கமாகத் தீட்டப்பட்டு எதற்கும் தயார் நிலையில் இருப்பதாகத் தோன்றியது. இதனிடையில் வெள்ளைப் பூனை ஓடிவிட்டிருந்தது. நான் அதே இடத்தில் அசையாமல் அடுத்து என்ன செய்யவேண்டுமெனத் தெரியாமல் நின்றேன். பூனையின் சீற்றம் படிப்படியாகக் குறைந்தது. அதன் சிலிர்ப்படைந்திருந்த மயிர்கள் படியத் தொடங்கின. புஸியின் கோபம் தணிந்ததை அறிந்து, குனிந்து தடவிக்கொடுக்க முனைந்தேன். நான் மீண்டும் அடிக்க வருவதாக நினைத்த புஸி கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்காத வகையில் என் ஆள்காட்டி விரலை மிகக்கடுமையாகக் கடித்தது. நான் கையை உதறியும் கூட அதன் பற்கள் என் ஆள்காட்டி விரலை விடவில்லை. மீண்டும தன் உரோமங்கள் சிலிர்த்தெழ, கரும்பச்சைக் கண்கள் கனல் உமிழ, போருக்குத் தயாரான புலியின் உறுமலுடன் மிக ஆழமாகக் கடித்தது புஸி.

பூனை என்பது ஒரு மிருகம். மனதின் ஆழத்திலிருந்து ஒட்டுமொத்தப் பூனையினத்தையே வெறுத்தேன்

மூன்றாம் பூனை

பூனைகளுக்கும் எனக்கும் ஒத்துவராதென்பதை மிகத் தெளிவாக உணர்ந்தேன். எழாவது வயதிலும் பதினைந்தாம் வயதிலும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நான் மறக்கவில்லை. எப்போதும் என்னைப் பூனைகளின் கரும்பச்சைக் கண்கள் துரத்திக்கொண்டேயிருப்பதை நீங்கள் அறிவீர்களா?

மூன்றாவது பூனையின் வரவு உஷாவின் மூலம் வந்தது. நான் அவளை எதிர்க்கவே முடியாத ஒரு அசந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண்டேன்.

பார்க்கும்போதெல்லாம் சிரித்த உஷாவின் அழகில் மிக எளிதில் வீழ்ந்ததை இப்போது என்னால் மடத்தனம் என்று ஒப்புக்கொள்ள முடிகிறது. அன்று இயலவில்லை. அன்று எப்படி அவள் கண்களை ஆழமாகப் பார்க்காமல் போனேன்?

அறியாமல் மோதிக்கொண்டபோது நான் சொன்ன “ஸாரி”களைப் புறக்கணித்து நாணத்துடன் சிரித்த நாளின் பின்பகலில் மீண்டும் இருமுறை வேண்டுமென்றே மோதினேன். அதுவரை நான் அறிந்திருக்காத என்னை அறிந்தேன். பஞ்சைக்கொண்டு செய்த அவள் உடலில் என் கைகள் எல்லையில்லாத வேகத்தில் எல்லையில்லாத சுதந்திரத்தோடு நீந்தின. பாதி மூடியிருந்த கதவின் இடையில் தள்ளி மிகுந்த வெறியுடன் அவளை முத்தமிட்டேன். மெலிதான உரோமங்கள் பரவியிருக்கும் கைகளை அழுந்தப் பிடித்தபோது அந்த ஸ்பரிசம் எனக்கு ஏற்கனவே பரிட்சயமான மாதிரி இருந்தது. அவளின் உடலெங்கும் என் மீது சரிந்திருக்க இருவரும் தன்னை மறக்கத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் எதிர்பாராத ஒரு கணத்தில் மிகக்குறைந்த இடைவெளியில் அவள் கண்களின் ஆழத்தை என் கண்கள் சந்தித்து மீண்டன. அன்று எல்லாம் அடங்கிய ஒரு நிசப்தம் என்னுள் பரவியதை இப்போதும் உணர்கிறேன். உஷா, “என்னாச்சு.. என்னாச்சு?” என்றாள். கரும்பச்சைக் கண்கள். மிக ஆழத்தில் மானசீகமாக நான் உணர்ந்தேன். அவை பூனையின் கண்கள். அதிக நெருக்கத்தில் மட்டுமே அறிய முடிந்தது. அவளுடன் எனக்கு உண்டான ஸ்பரிசத்தின் தன்மை கூட பூனையை என் கைகள் வருடும்போது உண்டானதை ஒத்ததுதான். அன்று அம்மா என்னிடம் “உஷாவை பிடிச்சிருக்கா?” என்றாள். அவளின் கண்கள் ஏதோ ஒரு கலக்கத்தைத் தருகின்றன என்றேன். “அவ கண்ணுக்கு என்ன குறைச்சல்? எவ்வளவு அழகு!” என்று சொன்னாள். அம்மாவிற்கு அவளின் கண்களை அதிக நெருக்கத்தில் பார்க்கும் அவசியம் நேராது.

நான் திடமாக நம்புகிறேன். என்னைப் பூனையின் கண்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மறுதினம் உஷா பூனை ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். என்னுள் கலவரம் எழுந்து அடங்கியது. முதல்நாள் எதிர்பாராமல் (அல்லது எதிர்பார்த்து) கொடுத்த முத்தத்தின் ஈரத்திலிருந்து நான் எழுந்திருக்காததால் மிகுந்த உத்வேகத்துடன் பூனையின் வரவை எதிர்க்கமுடியாமல் போனது.

பிறந்து பதினைந்து நாள்களே ஆன குட்டி அது. முழுக்க முழுக்க வெண்ணிறத்தில் இருந்த அதைக் காதைப்பிடித்துத் தூக்கி “ரொம்ப சொரணையுள்ளது இந்தக் குட்டிதான்” என்றாள் உஷா. அந்தப் பூனைக்குட்டி வீல் வீல் என்று அலறிக்கொண்டே இருந்தது. முதலிலிருந்தே அந்தப் பூனையிடம் வெகு கவனமாக இருக்கத் தீர்மானித்திருந்தேன். வீட்டில் அம்மாவும் அக்காவும் உஷாவும் அதற்கு ராஜ உபசாரம் அளித்தார்கள். அக்காவின் பையன் பூனையின் ஒவ்வொரு அசைவையும் இரசித்தான். அவனது இருபத்தி ஏழாவது வயதில் பூனைகளைப் பற்றி முழுதும் அறிவான். கழிவிரக்கத்துடன் கூடிய கவிகள் வரைவான்.

பொதுவாகவே பூனைகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சில தினங்களில் தாயை மறந்துவிட்டு சகஜமாகத் தொடங்கிவிடும். இந்தப் பூனை விதிவிலக்காய் இருந்தது. பாலைக் குடிக்கவே மறுத்துவிட்டது. அதன் உடல் நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே வருவதைப் பார்த்துப் பயந்துபோனாள் என் பாட்டி. “பூனை செத்தா பாவம். ரொம்ப குட்டியா இருக்கும்போதே தூக்கிட்டு வந்திருக்கக்கூடாது. கொண்டு போய் கொடுத்திரலாம். ஒரு மாசம் கழிச்சு திருப்பித் தூக்கிட்டு வரலாம்” என்றாள். உஷா நிறைய அழுதாள். அவளைவிட என் அக்கா பையன் கதறி கதறி அழுதான். “நான் செத்தா கூட இப்படி அழமாட்டான் போல இருக்கே” என்ற பாட்டியின் கேலிப்பேச்சு அவனை மேலும் சீண்ட கூடுதலாக அழத் தொடங்கினான். பூனையைக் கொண்டு போய் விடுவதை மாபாதகச் செயலாக நினைத்த உஷா அவளால் அதைச் செய்யமுடியாது என்று மறுக்கவும் அந்த வேலை எனக்கு வந்தது. நானும் மிகுந்த வருத்தப்படுவது போல காட்டிக்கொண்டு உள்ளூர மிகுந்த சந்தோஷத்துடன் பூனையைக் கொண்டுபோய் விடச் சம்மதித்தேன்.

எட்டு வீடுகள் அடங்கிய வளைவு அது. குறுகலாகச் செல்லும் சிறிய பாதை இரண்டு பக்கங்களிலும் நான்கு நான்கு வீடுகளுடன் விரிந்தது.கையில் நான் வைத்திருந்த பூனைக்குட்டி கத்திக்கொண்டே இருந்தது. பூனையின் வீடு எந்த வீடாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பூனையின் தொண்டை கிழியும் சத்தத்தைக் கேட்டேன். அது தாய்ப்பூனையின் கோபக்குரலாக இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்ததும் எனக்குள் பீதி ஏற்பட்டது. கையிலிருந்த குட்டியைக் கீழே போட்டுவிட்டேன். லேசாகத் திறந்திருந்த சன்னலின் வழியே தலையை நுழைத்து, பின் முழு உடலையும் நுழைத்து வெளி வந்தது தாய்ப்பூனை. அதன் கரும்பச்சை நிறக்கண்களைச் சந்திக்கும் தைரியம் எனக்கில்லை. எந்தவொரு யோசனையுமில்லாமல் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தது தவறு எனத் தெரிந்துகொண்டு, திரும்பி வேகமாக நடந்தேன். பூனையின் கண்கள் முதுகில் உறுத்த, திரும்பிப் பார்த்தேன். தாய்ப்பூனை நால் கால் பாய்ச்சலில் ஓடி வந்து என் காலைப் பிராண்டியது. காலை உதறிவிட்டு ஓடினேன். அடிக்குரலில் கத்திக்கொண்டு பின் தொடர்ந்து வந்து காலின் கட்டை விரலைக் கவ்வியது. மீண்டுமொருமுறை பலம் கொண்ட மட்டும் காலை உதறினேன். தூரத்தில் போய் விழுந்தது பூனை. விழுந்த வேகத்தில் எழுந்து என்னை நோக்கி வருவதைப் பார்த்து, இனியும் தாமதிக்ககூடாது என்று நினைத்து குறுகிய சந்தின் வழியே வெளியே ஓடினேன். அதற்குள் வளைவின் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் வந்து பூனையை விரட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

ஒட்டுமொத்தப் பூனையினமும் எனக்கெதிரான வன்மத்துடன் இருக்கின்றன. அதன் கரும்பச்சை நிறக்கண்கள் எப்போதும் ஒருவிதக் குரோதத்துடன் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பூனைகள் இல்லாத வீட்டில் காற்றில் அலைகிறது
அது உதிர்த்துவிட்டுப் போன அதன் ரோமமும்
அது கடித்த தடத்தில் மொய்க்க விரும்பும் ஈயும்
(வெங்கட், பூனை கடித்த இரவு)

நான்காவது பூனை

அனல் மிகுந்த நாளன்றில் துபாயின் விமானநிலையத்தில் என் கைக்கடிகாரத்தை ஒன்றரை மணிநேரம் குறைவாக்கி வைத்துக்கொண்டு யாரோ ஒருவனின் வரவுக்காகக் காத்திருந்தேன். முதல் வெளிநாட்டுப்பயணம் தந்த படபடப்பும் நம்மைக் கூட்டிக்கொண்டு போக யாரும் வராமல் போய்விடுவார்களோ என்கிற அசட்டுத்தனமான பயமும் அதிக வேர்வையை உமிழ்ந்துகொண்டிருந்தது.

அசப்பில் இந்தியனல்லாத ஒருவன் என்னை நெருங்கி “ஆப் வெங்கட் ஹே?” என்று என் பெயர் எழுதப்பட்டிருந்த அட்டையைக் காண்பித்தான் . “யெஸ்” என்றேன். அனாசயமான ஹிந்தியில் அலட்சிய பாவத்துடன் ஒருவித ஸ்டைலான உச்சரிப்பில் ஏதேதோ அடுக்கிக்கொண்டு போனான். அவன் அணிந்திருந்த கூலிங்கிளாசை வலது கையின் முட்டினால் அடிக்கடி தூக்கிவிட்டுக்கொண்டான்.

“Sorry. I do not know Hindi”

“Really? you indian yaar.. how come you dont know Hindi. Are you madarasi?” என்றான். பதில் சொல்லாமல் என் பெட்டியை எடுத்துக்கொண்டேன். அவன் சிரித்தான். “OK. You follow me!” என்று சொல்லி முன்னே சென்றான். விதவிதமான பெண்களையும் கார்களையும் ஓங்கி உயர்ந்து நிற்கும் பணக்காரமயமான கட்டடங்களையும் பிரமிப்போடு உள்வாங்கிக்கொண்டு நடந்தேன். பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறிக்கொள்ளவும் சீரான வேகத்தில் வண்டி ஓடத்துவங்கியது.

“Where are you from?”

“I am from Pakistan” என்றான். ஏதோ ஒரு FM ல் ஆங்கிலப்பாடலை ஒலிக்க வைத்தான். நான் அமைதியானேன். கையில் வைத்திருந்த சிறிய பைக்குள் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை பார்த்துக்கொண்டேன். பாஸ்போர்ட் இருந்தது. கூடவே சிறிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றும் இருந்தது. “நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டே விமானநிலையத்தில் வைத்து உஷா என் கைகளில் அவளின் போட்டோவைத் திணித்த ஞாபகம் வந்தது. அவன் அறியாத வண்ணம் பைக்குள்ளே இருந்த உஷாவின் போட்டோவைக் கூர்ந்து பார்த்தேன். மெல்ல மெல்ல உஷா மறைந்து பூனையின் சித்திரம் விரிந்தது. முக்கியமாய்க் கண்கள். கரும்பச்சை நிறத்தில் கண்களை மனதின் மிக ஆழத்தில் மீண்டும் கண்டேன். என் உடலில் சிறு நெருக்கம் பரவியது. மிக நெருக்கத்தில் அவள் உதட்டில் முத்தமிட்ட கணங்களும் சர்வ சுதந்திரத்துடன் அவள் உடலில் என் கைகள் பரவியபோது நான் உணர்ந்த பூனை உடலின் மிருதுத்தன்மையும் நினைவுக்கு வந்தன. என் பின்னே ஏதோ இரண்டு கரும்பச்சைக்கண்கள் கூர்ந்து பார்ப்பதாகத் தோன்றியது.

திடீரென ப்ரேக்கை அழுத்தினான் பாகிஸ்தானி.

“Oh God!”

“What happened?” என்றேன். “ஷிட்!” என்று சொல்லிக்கொண்டே பாகிஸ்தானி ஓங்கி ஸ்டியரிங்கில் குத்தினான். வண்டியின் ஹாரன் ஒருமுறை ஒலித்து அடங்கியது.

“Poor cat!” என்று சொல்லிவிட்டு வண்டியை மீண்டும் இயக்கினான். Cat என்கிற வார்த்தையைக் கேட்டதும் சில்லிட்டு மீண்டேன். பூனையின் நினைவு தந்த அச்சத்தில், திரும்பி காரின் பின் கண்ணாடி வழியாக என்னை விட்டு விலகி ஓடும் சாலையைப் பார்த்தேன். பூனை ஒன்று அடிபட்டுக் கிடந்தது. உடல் நசுங்கி, இரத்தம் பீறிட்டு, கண்கள் பிதுங்கிக் கிடந்தது. அடுத்த வண்டி இன்னொரு முறை நசுக்கவும் துண்டுகளாகச் சிதறியது அப்பூனை.

பாகிஸ்தானி மீண்டும் “poor cat!” என்றான். மிக வேகமாக “No!” என்றேன்.

“What?” என்று சொல்லிக்கொண்டே அவன் அணிந்திருந்த கூலிங்கிளாஸைக் கழட்டினான். அவனுக்குப் பூனைக்கண்கள் இருக்குமென்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னையுமறியாமல், “Your eyes…” என்று இழுத்தேன்.

“மேரி ஆங்கே..” – அதற்குமேல் என்னால் தொடரமுடியாத நீண்ட வாக்கியத்தினை ஹிந்தியில் சொன்னான்.

“Sorry.?!”

“Oh! You donno hindino! My eyes are cat’s eyes!” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினான்.

“நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது”

“நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது”

“நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது”

எதிரொலிப்பது உங்களுக்குக் கேட்கிறதா? கேட்டால் கவனமாக இருக்கவும்.

பூனைகள்; எங்கும் பூனைகள்
எப்போதும் அவை இரையை எதிர்பார்த்து.
இரை, சில நேரங்களில் எலியும்
சில நேரங்களில் எதுவும்
பூனைகளைப் பூனைகளில் மட்டும் பார்க்காமல்
கண்ணில் படும் எல்லாப் பொருள்களிலும் பாருங்கள்.
ஒரு எலியில் கூட “பூனைமை” புலப்படும்.
(வெங்கட், எதிரொலித்த நொடியில் மனதில் தோன்றிய வரிகள்)

“பின் தொடரும் பூனைகள்” என்ற சிறுகதை தமிழோவியம்.காமில் வெளியாகியிருக்கிறது. அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

முதல் பக்கம்

இரண்டாம் பக்கம்

மூன்றாம் பக்கம்

இறுதிப்பக்கம்

Share

கணேசன்ஜி – சிறுகதை

 
அக்ரஹாரம், முத்தரசநல்லூர், திருச்சி.

“அதோ அவர்தாண்டா!” என்று இராமகிருஷ்ணன் (எனக்கு இராம்கி) அவரைக் காண்பித்தான். முகத்தில் வெள்ளைத்தாடியும் மிக மெல்லிய ஃபிரேமினாலான மூக்குக்கண்ணாடியும் தீர்க்கமான கண்களுமாக முதல் பார்வையிலேயே எனக்குப் பிடித்துப்போனார். அப்பழுக்கில்லாத, சுருக்கங்களற்ற காவி வேட்டி உடுத்தியிருந்தார். வெள்ளைத்தாடியும் காவி வேட்டியும், இராம்கி அவரைப் பற்றிச் சொன்ன விஷயங்களும் அவர்பால் மிகுந்த மரியாதை கொள்ளச் செய்தன.

கணேசன்ஜி ஓர் அறிமுகம் என்று பெரிய குரலில் விவித்பாரதியில் வருகிறமாதிரி நிகழ்ச்சி விவரிக்கும் தொனியோடு இராம்கி கணேசன்ஜியைப் பற்றிச் சொன்ன விஷயங்களைச் சுருக்கிச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்.

அவர் குடும்ப வாழ்க்கை அத்தனைச் சிலாக்கியமாக இல்லை- ஏமாறி, புத்திசுவாதீனமில்லாத ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்டு அவனோடு வாழப்பிடிக்காமல் தாய்வீட்டுக்கு வந்த ஒரு பெண்ணுக்கு மறுவாழ்க்கை கொடுத்தார்- ஒரே வருடத்தில் அந்தப் பெண் பேப்பர் போடும் ஒருவனுடன் ஓடிப்போனாள்- அன்று முதல் தனியாகத்தான் இருக்கிறார்- ஓடிப் போன கணேசன்ஜியின் மனைவி, தன் பையனுடன் இப்போது இதே தெருவில்தான் இருக்கிறாள்.

அந்தப் பையன் யாருக்குப் பிறந்திருப்பான் என்ற சந்தேகம் உள்ளிட்ட பல விஷயங்களை இராம்கி கிண்டலும் கேலியுமாகச் சொன்னான். விரிவான அறிமுகத்தில் எனக்குத் தேவையானதைத் தவிர மற்றதையெல்லாம் நான் மறந்தாகிவிட்டது.

எத்தனைக் கெஞ்சியும் இராம்கி அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவைக்க மறுத்துவிட்டான். அவனைப் பார்த்த பார்வையிலேயே கணேசன் மாமாவுக்குக் கோபம் வருமென்றான். அவன் அவரைக் கணேசன் மாமா என்றுதான் அழைக்கிறான்.

“சொன்னா கேளுடா.. லீவுக்கு வந்தோமா என்ஜாய் பண்ணோமா.. காலேஜ்ல சேர்ந்தோமா.. சைட் அட்ச்சோமான்னு இரு.. இங்கிலீஷ்லாம் தானா வரும்.. அதுவுமில்லாம, முந்தா நேத்து சைக்கிள்ல போகும்போது அவர் மேல மோதிட்டேன். கீழே விழுந்துட்டார். நா நிக்காம போயிட்டேன். மனுஷன் கடுப்புல இருக்கார். நேத்து அப்பாக்கிட்டக் கூடச் சத்தம் போட்டுருக்கார். நா வந்து உன்னை அறிமுகப்படுத்தி வெச்சா சரியா வராது. கர்வி. இங்க்லீஷ்ல தாட் பூட்ம்பார். அதைக் கேட்டா இருக்கிற இங்கிலீஷும் மறந்துடும்.”

கணேசன்ஜிக்குக் கோபம் வந்தால் இங்கிலீஸ்தான் பேசுவார். எதிரே நிற்கும் நபருக்கு இங்கிலீஸ் தெரியுமா என்றெல்லாம் பார்க்கமாட்டார். ஹிந்தி சொல்லிக் கொடுக்கும்போது கூட அப்படித்தான். யாராவது எஸ்ஸே படிக்காமல் வந்தால் இங்கிலீஸ்தான். அவரது இங்கிலீஸ்க்குப் பயந்தே ஹிந்தி ட்யூஷன் நிறுத்தியவர்கள் அநேகம்பேர்.

இராம்கி தன் முடிவில் உறுதியாக இருந்துவிட்டபடியால் வேறு வழியில்லாமல் நானே அவர் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் நான் நிற்பதைப் பார்த்து சைகையால் உள்ளே வரச் சொன்னார். ரேழியில் “ஸ்வாகதம்” என்று ஹிந்தியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. வரிசையாக நிறையப் பெரிய மனிதர்களின் படம் இருந்தது. அவர்களில் எனக்குத் தெரிந்த ஒருவர் விவேகானந்தர் மட்டும்தான். ரேழியைத் தாண்டி முதல்கட்டில் ஒரு நாற்காலியைக் காண்பித்து அமரச் சொன்னார்.

“இல்லைங்க நா நின்னுக்கிட்டு. ..”

உட்கார் உட்கார் என்று சைகையிலேயே சொன்னார். நான் உட்கார்ந்துகொண்டேன். வாயில் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலையை வெளியில் சென்று துப்பிவிட்டு வந்தார். நான் எழுந்து நின்றுகொண்டேன். உட்கார் உட்கார் என்று மீண்டும் சைகை காண்பித்துவிட்டுப் பின்னால் சென்றார். உட்கார்ந்தபடியே நான் அறையை முழுதும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். வால்வு ரேடியோ இருந்தது. (அவருக்கு ரேடியோ கேட்பதில் ஆர்வம் அதிகம் என இராம்கி ஒருமுறை சொன்னான். சினிமாப்பாட்டுன்னா பைத்தியம் என்றான் கூட இருந்த த்ரிலோச்சன்.) வாய் கொப்பளிக்கும் சத்தம் சிறிது நேரத்தில் நின்றது. அவர் நடந்து வரும் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே வந்து….

“சொல்லுங்கோ” என்றார்

காவி வேட்டி. அழுக்கே இல்லாத வெள்ளை நிற ஹவாய் செப்பல். ராம ராம என ஹிந்தியில் எழுதப்பட்ட மேல் துண்டு. இரண்டு ஸ்படிக மாலைகள். ஒரு உத்திராட்ச மாலை. குருவாயூரப்பன் வெள்ளி டாலர். விபூதிப் பட்டை. குங்குமம். எனக்குப் புல்லரிப்பது போல இருந்தது. அப்படியே பார்த்துக்கொண்டு நின்றேன். இதுமாதிரி நிறையச் சமயங்களில் தேவையில்லாமல் ஸ்தம்பிப்பதாக இராம்கி என்னைக் குற்றப்படுத்தியது ஞாபகம் வந்தது.

‘க்கும்’ என்ற செருமலுக்குப் பின் “சொல்லுங்கோன்னேன்” என்றார்.

மெல்லிய சத்தத்தில் அறையில் வியாபித்திருக்கும் பாட்டின் தொடக்கம் என்னவாயிருக்கும் என்ற என் சிந்தனையைப் புறந்தள்ளிவிட்டு என்னைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் சொன்னேன். பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறைக்கு அத்தை வீட்டுக்கு வந்ததைச் சொன்னேன். இராம்கியின் நண்பன் எனச் சொன்ன போது, நான் அறிந்த வரையில் அவர் முகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

“என்ன வேணும் உங்களுக்கு?”

“நா இங்கிலீஸ் கத்துக்கணும். நா இங்கிலீஸ்ல ரொம்ப வீக்”

“நா இதுவரைக்கும் யார்க்கும் இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்ததில்லை. ஹிந்தி சொல்லித்தரத்தான் தெரியும். யாரோ உங்ககிட்டத் தப்பா சொல்லியிருக்கா” என்றார்.

“ஷ்”-ல் ஓர் அழுத்தம் கொடுத்த மாதிரி இருந்தது. குரலில் மென்மையும் தீர்க்கமும் இழைந்தோடியது. காவி வேட்டியின் ஒரு நுனியைக் கழுத்தின் பின்வழியாகச் சுற்றி மறுபக்கமாக இழுத்துக்கொண்டார். தரையைப் பார்த்துக்கொண்டே பேசினார். எனக்குப் பார்க்க கண்கள் பாதி மூடியிருந்தது மாதிரி இருந்தது. ஏதோ ஒரு ஞாபகத்தில் நான் பேச ஆரம்பித்தேன்.

“இல்லை. நீங்க கோபத்துல நல்லா இங்கிலீஸ் பேசுவீங்கன்னு..” நாக்கைக் கடித்துக்கொண்டேன். எத்தனைப் பெரிய அபத்தத்தைச் செய்திருக்கிறேன் என்று உணரத் தொடங்கிய போது உடம்பு நடுங்க ஆரம்பித்தது. உள்ளங்கைகள் சில்லிடுவதை உணர்ந்தேன். கணேசன்ஜியிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை. கண்கள் என் பார்வைக்கு அதே மூடிய நிலையில்தான் இருப்பதாகப்பட்டது. கூடுதலாக வாய் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது. ஸ்லோகம் சொல்வாராயிருக்கும். (“ஸ்லோகம் சொல்றதெல்லாம் வெறும் படம். ‘அது’ மாதிரிப் புத்தகங்கள் நிறைய வெச்சிருக்காராம். ட்யூசன் படிக்கிறச்சே த்ரிலோச்சன் பாத்துருக்கானாம்” என்றான் இராம்கி)

“சரிங்க. நா அப்புறம் வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்கு என்ன சொல்கிறார் என்று கூடக் கவனிக்காமல் வெளியில் வந்தேன்.

அவர் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்? அவரைப் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு வந்திருப்பதாக நினைத்திருப்பாரோ? ஒருவேளை நானும் இராம்கியும் அவரை நக்கலடிப்பதகாகக் கூட நினைத்திருக்கலாம். அதை அவரிடம் விளக்க முடியாது. கண்ணைப் பார்க்காமல் பேசும் எதிராளியிடம் பேச என்ன இருக்கிறது. கர்விதான். நான் தீர்மானித்தேன்.

இராம்கியிடம் சொன்னேன். சத்தமாகச் சிரித்தான். “நா தேவலைனு நினைச்சிருப்பார் மனுஷன்” என்றான்.

“இப்ப என்ன பண்ண இராம்கி?”

“ஒண்ணும் பண்ணவேண்டாம். இங்கிலீஷ் படிக்கிறதைவிட நிறைய இருக்கு. நா சொல்லித் தர்றேன். கௌசு உன்னை ரொம்ப விசாரிச்சா. அவளப் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்” என்றான். “தலையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா” என்றவன் விவகாரமான சைஸ் ஒன்றைச் சொன்னான். பிடிக்காதது போல் தலையில் அடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

அத்தையும் மாமாவும் வராண்டாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“எங்கப்பா போன? இப்பதான் ராஜாவை விட்டு உன்னைக் கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னேன். கணேசன் மாமா ஊட்டுக்கு வந்திருந்தாரு. உன்ன நாளைக்கு அவர் ஊட்டுக்கு வரச் சொன்னாரு. என்னடா விஷயம்?” என்றாள் அத்தை. “அவரு நம்ம ஊட்டுக்குலாம் வருவாருன்றதே இப்பத்தான் எனக்குத் தெரியும். வந்து நாலு நாள்ல எப்படி அப்படிப் பழகின?” என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே இருந்தார் மாமா. நானும் ஆச்சரியம், சந்தோஷம், அதிர்ச்சி உள்ளிட்ட ஏதோ ஒன்றைப் பட்டுக்கொண்டேன்.

-o0o-

கணேசன்ஜி இங்கிலீஷ்தான் சொல்லித் தந்தார். ஆனால் நான் அதைத் தவிர நிறையக் கற்றுக்கொண்டேன். உண்ணும்போது சோற்றைப் பிசையும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஐந்து விரல்களைத் தவிர வேறெங்கும் ஒரு பருக்கை ஒட்டாது. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது செருப்பைக் கழற்றி வைப்பார். இரண்டு செருப்பையும் ஜோடியாகத்தான் விடுவார். (என் குடும்பத்தில் எல்லார் வீட்டிலும் செருப்புகள் மூலைக்கொன்றாய்த்தான் கிடக்கும்.) காஃபி சாப்பிட்ட கையுடன் லோட்டாவைக் கழுவி அதற்குரிய இடத்தில் தலைகீழாகக் கவிழ்த்து வைப்பார். தினம் தினம் குளிக்கும் முன்பு அவரது உடைகளைத் துவைத்து விடுவார். துவைத்தவற்றைக் காயவைப்பதில் கூட கணேசன்ஜி தனிவிதம். ஏனோ தானோ என்றில்லாமல் (அப்படிச் செய்தால் நமக்கும் கணேசன்ஜிக்கும் என்ன வித்தியாசம்?) ஈர வேட்டியை உதறிக் கொடியில் காயப் போட்டு இரண்டு பக்கத்து நுனிகளையும் ஒரே அளவாக வைப்பார். சுருக்கங்களில்லாமல் இரண்டு கைகளாலும் ஈரவேட்டியை இழுத்துவிடுவார். அப்படிச் செய்த வேட்டி காய்ந்த பின்னர் அயர்ன் செய்தது மாதிரி இருக்கும். (“காசுக்கள்ளன். நயா பைசா செலவழிக்கமாட்டார்” என்பான் த்ரிலோச்சன்.) இப்படி ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களிலும் கணேசன்ஜி அவருக்கே தெரியாமல் எனக்குச் சொல்லித்தந்தது ஏராளம்.

கணேசன்ஜி இங்கிலீஷ் சொல்லித் தந்தது கூட ஒரு தனிவிதம். ஹிந்து பேப்பரை எடுத்து சினிமா சம்பந்தப்பட்டச் செய்திகளாக வாசிக்கச் சொல்வார். (“மனுஷன் அலையறார்”- த்ரிலோச்சன்.) ஒரு மாதத்திலேயே எனக்கே தெரியாமல் அதன் அடிப்படை இலக்கணம் பிடிபடத் துவங்கியது.

“நா எங்கடா சொல்லித் தந்தேன்? ஹிந்துன்னா சொல்லிக் கொடுத்தது” என்பார். “மாமா சந்தோஷமா இருக்கார்.. இல்லைனா இங்கிலீஷ்னா பேசுவார்” என்றான் இராம்கி. இராம்கிக்கும் கணேசன்ஜியைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே “மாமா மாதிரி வருமா” என்று தொடங்கிப் பத்துப் பக்கத்திற்குப் புகழ் பாடித்தான் நிறுத்துவான். (இராம்கிய நம்ப முடியாது. எப்பவேணா கட்சி மாறுவான்” என்பான் த்ரிலோச்சன்) கணேசன்ஜியும் இராம்கியின் துடுக்குத்தனத்தையும் கிறுக்குத்தனமான கமெண்ட்களையும் கூட இரசிக்க ஆரம்பித்திருந்தார்.

நான் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இரண்டரை மாதங்கள் முடிந்திருந்தது. கணேசன்ஜி வாழ்க்கையில் பல விஷயங்களைச் சொல்லித் தந்தார். பல விஷயங்களை வாழ்ந்து காட்டினார். கணேசன்ஜி ஒரு புத்தகம்.

எனது விடுமுறை கழிந்து நான் ஊருக்குத் திரும்ப வேண்டி வந்தது. திருநெல்வேலி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க ஜமீந்தாரைப் பார்த்து ரெக்கமண்டேஷன் கேட்க வேண்டும் என்பதால் உடனடியாக வரச்சொல்லி கடிதமும் ஃபோனும் வந்திருந்தது. (“உங்காத்துல எல்லாருக்குமே கொஞ்சம் படம் ஜாஸ்தி. லெட்டர் போறாதா? ஃபோன் செய்வானேன்?”- த்ரிலோச்சன்)

கணேசன்ஜியிடம் சொல்லிக்கொள்ளப் போனேன். சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவர் சமையல் செய்யும் அழகு கூடத் தனிதான். ஒருவருக்கு மட்டும் தேவையானதை சரியாகச் சமைப்பார். மிகாது. (“எங்காத்துல எப்பவுமே ஒரு உருண்டை கூடத்தான் சமைப்பா”- த்ரிலோச்சன்) சமையல் செய்யும்போது பொருள்களை இறைய மாட்டார். தேவை முடிந்தபின்பு பாத்திரங்களைக் கையோடு கழுவி வைத்துவிட்டுத்தான் அடுத்தப் பாத்திரத்தை எடுப்பார். பீட்ரூட்டுக்குத் தோல் சீவும்போது அவர் மாதிரி மிக மெல்லியதாகத் தோலைச் சீவ இன்னொருத்தர் பிறந்தால்தான் உண்டு. (“இந்த விஷயத்தை நான் ஒப்புத்துக்கறேன். அவரை அடிச்சுக்க முடியாது. காசுகள்ளன்னு சொன்னேனே!”- வேறு யார்? த்ரிலோச்சன்தான்.) அவர் மாதிரி யாருக்கும் சமையலும் வராது. சமைக்கவும் வராது.

“ஜி.. நா ஊருக்குப் போறேன்”. எனக்குத் தொண்டை அடைத்தது.

சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் “இங்க வா!” கைகளால் அழைத்தார். வாயிலிருந்த கவளத்தை விழுங்கிவிட்டு (விழுங்கும்போது தொண்டைக்குழி ஏறி இறங்கியது. அவர் பேசும்போது தொண்டை ஏறி இறங்கும் அழகைச் சொல்ல விட்டுவிட்டேன். இன்னொரு சமயத்தில் சொல்கிறேன். த்ரிலோச்சனிடம் சொன்ன போது “வயசானா எல்லாத்துக்கும் அப்படித்தான் ஆகும். ரொம்ப உளறாதே” என்றான் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன்.) கையை நீட்டச் சொன்னார். அவர் தட்டில் ஒரு ஓரத்தில் தனியாக இருந்த சோற்று உருண்டையை எடுத்துக் கையில் தந்து உண்ணச் சொன்னார்.

“நீ சொல்லிண்டு போக வருவேன்னு தெரியும்” என்றார். சாப்பிட்டேன். நெய் வாசனை தூக்கலாக இருந்தது. “அடுத்த வருஷ லீவுக்கு வருவியோன்னோ.. அப்ப இன்னும் நிறைய சொல்லித் தர்றேன். லெட்டர் போடணும். மறந்துடாதே” என்றார்.

“வரேன் ஜி”

அவரிடமிருந்து பதில் இல்லை. என் பார்வைக்கு அவரது கண்கள் மூடியிருப்பதாகப்பட்டது. வாய் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது. நான் இன்னொரு முறை “வரேன் ஜி” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தேன்.

முதலியார் தெரு, பாட்டபத்து, திருநெல்வேலி.

இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சைக்கிளை ஓட்டுவது எனக்கு ரொம்ப இஷ்டமான ஒன்று. அதுவும் பாலத்தின் இறக்கத்தில் அப்படி வரும்போது கண்களை மூடிக்கொண்டால் காற்றில் மிதப்பது போல இருக்கும். 11-D பஸ்ஸில் போகும் பெண்கள் கூட்டத்தில் ஒருத்தி இதை வெகுவாக இரசித்தாள் என்றுதான் அனுமானித்திருக்கிறேன். “ஒருநா இல்ல ஒருநா கீழ விழுந்து அவ முன்னாடி நீ சீப்படலைனா எம்பேரு ஜாகீரு இல்லை” என்பான் ஜா. பெயர் இப்போது மட்டும் ஜாகீரா என்ன? வெறும் ஜாதான்.

பழக ஆரம்பித்த நாள்களில் தினம் தினம் ஒரு புதுக்கதை சொல்வான். “பாலத்துக்குக் கீழத்தான் ஆவியெல்லாம் பதுங்கியிருக்குமாமே.. கோயில்ல பூஜை பண்ணுது பாரு ஒரு ஹிப்பித்தலை.. அது சொல்லிக்கிட்டு அலஞ்சது.. ஒனக்குத் தெரியுமா?”. இப்போது ஞாபகம் வரவும் மூடியிருந்த கண்களைத் திறந்துகொண்டேன். பாலம்தாண்டி, ஜா வீடு தாண்டி மசூதிக்கு அடுத்த வளைவில் திரும்பினேன். ஜா வீட்டு முன்னாடி சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.

“வாப்பா.. ஜா இல்லையா? எங்க போயிருக்கான்?”

“இங்க இல்லன்னா எங்க இருப்பான் மூதி.. உங்க வீட்டுலத்தாம்ல கெடப்பான்.. போயி கொட்டிக்க வரச்சொல்லு” என்றார் வாப்பா. வாப்பாவின் இந்த அன்பு பரீச்சயமான ஒன்றுதான். உள்ளேயிருந்து ஜார்ஜிதா சொன்னாள், “திருச்சியிலேர்ந்து யாரோ ரெண்டு பேர் வந்துருக்காக்காங்க.. அண்ணந்தான் உங்க விட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போச்சி”

யார் வந்திருப்பார்கள் என யூகிக்க முடியவில்லை. அம்மாவும் அப்பாவும் உறவுக்காரர்கள் கல்யாணத்துக்குப் போயிருக்கிற சமயத்தில் வேறெந்தச் சொந்தக்காரர்களும் வர வாய்ப்பில்லை. “கல்யாணம்னு வந்துட்டா ஒரு ஆளு விடாமப் போயிருவீங்களே. நீ போலயா பசை?” என்று ஜா கிண்டலடித்தது நினைவுக்கு வந்தது. “யார் காதுலயாவது பசைன்னு விழுந்து நாலு சாத்துப்பட்டா சரியாயிடுவ” என்றால் கண்ணை உருட்டி உருட்டி அழகாகச் சிரிப்பான்.

“யாருன்னு தெரியாதா ஜார்ஜிதா?”

“நா பாக்கலண்ணே”

“சரி.. சைக்கிள் வெளிய நிக்கி.. ஜா வந்தா எடுத்து உள்ள விடச் சொல்லிடு” என்று சொல்லிவிட்டு- “தொர உள்ள எடுத்து விடமாட்டாராமான்னு வாப்பா கேட்டார்” என்று நாளை ஜார்ஜிதா சொல்லிச் சிரிப்பாள்- யார் வந்திருப்பார்கள் என்கிற யோசனையுடன் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன்.

இராம்கி சொல்லாமல் வரும் ஜாதியில்லை. சொல்லிவிட்டு வராமலிருக்கும் ஜாதி. இராம்கி நினைவின் வழியாக மனம் கணேசன்ஜிக்குச் சென்றது. (“ஒனக்கு இதே பொழப்பு.. ஒண்ணு பேசிக்கிட்டு கெடக்கும்போதே இன்னொன்னு நினைக்க ஆரம்பிச்சிடுத” என்பான் ஜா.)

கணேசன்ஜி இப்போது என்ன செய்துகொண்டிருப்பார். மாநிலச்செய்திகள் கேட்டுக்கொண்டிருப்பார். “எத்தனை டீவி வந்தாலும் ரேடியோல கேக்கிற சுகமிருக்கே.. அதே அலாதிதான்.” (“சரியான லூசு.. இவரை மாதிரி ஆளுங்க சில பேர் பழசையே பிடிச்சிண்டு தொங்குறா” என்று த்ரிலோச்சன் நினைவுக்கு வர, அவன் இப்போது என்ன செய்வான் என நினைக்க ஆரம்பித்தேன். ஜா சொன்னது ஞாபகம் வரவும் மீண்டும் கணேசன்ஜிக்குத் தாவினேன்). அப்படிச் சொல்லும்போது அவர் கண் விரிகிற அழகு இருக்கிறதே… அலாதிதான்.

நடையை விரைவாக்கினேன். இராம்கி வந்திருந்தால் அவனிடம் கணேசன்ஜி பற்றி விசாரிக்கலாம். அவர் இப்போது முன்னிருந்த மாதிரி இல்லை என்கிற செவி வழிச்செய்தியை நான் நம்பவில்லை. எனக்கு கணேசன்ஜி எப்போதுமே முன்மாதிரிதான்.

திருவனந்தபுரத்திற்கு இன்டெர்வியூ செல்லும் வழியில் திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷனில் இராம்கியைப் பார்த்தபோது பல செய்திகளைச் சொன்னான். இதையெல்லாம் என்னிடம் சொல்லவேண்டும் என்று முன்பே தீர்மானித்துக்கொண்டு வந்தவன் போல் வேகமாகப் பேசினான்.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி பெரிய ரகளை. அவரோட பொண்டாட்டி இல்லை.. அதான் ஓடிப்போய், திரும்பி வந்து பையனோட அதே தெருல இருக்காளே..”

புத்தகக்கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே சொல்ல ஆரம்பித்தான். விஷயங்களைக் கோர்வையாகச் சொல்வதில் இராம்கி கில்லாடி. சில சமயம் பள்ளங்களை இட்டு நிரப்பிக் கோர்வையாக்கிச் சொல்வான். எது நடந்தது, எது ரொப்பியது என்று புரிந்துகொள்ளக் கொஞ்சம் பயிற்சி வேண்டும்.

“அவ திடீர்னு கதவைப்பூட்டிண்டு தூக்குல தொங்கப்போறேன்னு ஒரே ஒப்பாரி. ஊரே அல்லோலப்படுது. உன் இராமன் இருக்காரே.. அவர் பாட்டுக்கு ஈசி சேர்ல படுத்துண்டு இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு சினிமாப்பாட்டு கேட்டுண்டு இருந்தார். என்ன மனுஷண்டா? ஒருவழியா அவளைச் சமாதானப்படுத்தி கதவைத் திறக்க வெச்சா ஊர்க்காரா. ஏண்டி இப்படிப் பண்றன்னு ஊர்க்காரா கேட்டதுக்கு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டா. அவருக்கும் பள்ளத் தெருவுல இருக்கிற ஒரு பொம்பளைக்கும் தொடுப்பாம். மொதநா இராத்திரி இவளே பாத்தாளாம். மாமா வெள்ளரித் தோப்புல விழுந்து ஓடி மறைஞ்சுட்டாராம்.”

“வெள்ளரித் தோப்பு இல்லை. தோட்டம்”

“ரொம்ப முக்கியம். ஏதோ ஒரு எழவு. ஒருத்தரும் சரியில்லைடா. எல்லா அமளியும் முடிஞ்சப்பறம் யார்கிட்டயோ கணேசன் மாமா சொன்னாராம். தூக்குப் போட்டுக்கிறவ ஊரைக் கூட்டியா தூக்குப் போட்டுப்பான்னு. அது அவரோட பொண்டாட்டி காதுக்கும் போயிடுத்து. அக்ரஹாரம் பத்தி தெரியாதா? பார்.. நான் ட்ருவேண்ட்ரம் போறேன். இன்டெர்வியூ இருக்கு. என்ன பேசிண்டிருக்கோம் பார்”

“பரவாயில்லை. சொல்லு”

“என்ன சொல்ல? அவ்வளவுதான். அவ காதுக்குப் போன உடனே பிடாரியாயிட்டா. சும்மாவே பிடாரிதான்றது வேற. மாமா வீட்டுக்கு முன்னாடி வந்து சாமியாடிட்டா. உங்க மாமா வழக்கம் போல இங்கீலீஷ்ல தஸ் புஸ்ன்னார். ”

“அவருக்கும் பள்ளத்தெரு பொம்பளைக்கும் கனெக்ஷன்றத நீ நம்புறியா இராம்கி?”

“எனக்குத் தெரியலைடா. ஆனா நிறையப் பேர் அவரைப் பள்ளத்தெருவுல பார்த்ததா சொன்னா. த்ரிலோச்சன் கூட சொன்னான்”

ஆக இராம்கி அவன் கண்ணால் பார்க்கவில்லை. வழி வழியாக வரும் செய்திகள். உப்பிப் பருத்துப்போன, உள்ளே ஒன்றுமே இல்லாம இராட்சதக் குமிழ். (இப்படி நான் ஆழப் பேசும்போது, “ஆரம்பிச்சிட்டான்யா.. தீடீர்னு வேற உலகத்துக்குப் போயிடுவான். புதுத் தமிழ் வந்திடும்” என்பான் ஜா.)

“நீ பாத்தியா?”

அவன் அதற்குப் பதில் சொல்லாமல் வேறு கதை ஆரம்பித்தான்.

“தனியாளா ஆயிட்டார்டா.. முன்ன மாதிரி முடியமாட்டேங்குது அவருக்கு.. இப்பல்லாம் ரொம்பக் குடிக்க ஆரம்பிச்சிட்டார்”

திருவனந்தபுரத்துக்குச் செல்லும் அவனைச் சென்று பார்த்திருக்கவே வேண்டாம். (“நா சொன்னால்லாம் நீ கேப்பியா? படு.”- ஜா)

கணேசன்ஜி குடிப்பார் என்பது ஒன்றும் புதிய செய்தியில்லை. அவர் குடிக்கும்போது நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். முதல்முறை பார்த்தபோது ரொம்பவும் உறுத்தியது. “நாளைக்கு வர்றேன் ஜி” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டவனைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார். நிறையப் பேசினார். நிறைவாகப் பேசினார். அவர் அத்தனைப் பேசி அதற்கு முன்பும், பின்பும் நான் பார்த்ததில்லை. என்னென்னவோ சொன்னார். திடீர் திடீரென அமைதியானார். கொஞ்சம் பயந்துகூடப்போனேன்.

“நீ சின்னப்பிள்ளை. நோக்குப் புரியாது. என்னைப் பத்தி ரொம்ப உயர்வா நினைச்சிண்டு இருக்கே. நீ உயர்வா நினைச்சிக்கணும்னு நான் ஸ்பெஷலா நடந்துக்கலை. ஆனா நோக்கு ஒரு சித்திரம் அப்படி உண்டாயிடுத்து. இருந்துட்டுப் போகட்டும். பெரிய பாதகமிலை. ஆனா இப்ப நான் குடிக்கிறதைப் பார்த்துட்டு மனசு ஒரு மாதிரி ஆகி ஓடப் பார்க்கப் பார்த்தியோன்னோ.. அது தப்பு. ஜி மனசுல பட்டதைச் சொல்லலாமில்லையோ..?”

அமைதி.

நான் பதில் சொல்லவில்லை. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அந்தக் காலத்திலே புராணத்திலே இராமன், இராவணன்னு ரெண்டு பேரைச் சொல்லி வெச்சிருக்கா. ஏன் சொன்னா? இராமனைப் பார்த்து எது வேணும்னு படிச்சிக்கோ. இராவணனைப் பார்த்து எதுவேண்டாம்னு படிச்சிக்கோ. நான் அப்பப்ப இராமன். அப்பப்ப இராவணன்.” பலமாகச் சிரித்துவிட்டு அமைதியானார்.

எனக்கு என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லை. இப்படி ஒரு கணேசன்ஜி எனக்குப் புதியவர். (பின்னொருநாள் த்ரிலோச்சனிடம் சொன்னபோது “நா சொன்னா நீ கேக்கமாட்ட.. டியூசன் எடுக்கும்போது இதுமாதிரி நிறைய உபதேசம் செய்வார். அன்னைக்கு ஃபிட்டுன்னு அர்த்தம்” என்றான்.) “சொல்லுங்க ஜி” என்றேன். .”போறும். நாழியாறது. போயிட்டு நாளைக்கு வா” என்றார். நான் மறுபேச்சு பேசாமல் எழுந்து வந்தேன். வீட்டின் வெளிவரை வந்து வழி அனுப்புவது அவர் பழக்கம். எல்லாமுறை நான் வீட்டுக்குப் போகும்போதும் இதைச் செய்வார். நானும் அதே மாதிரி செய்ய உறுதிகொண்டிருந்தேன். இப்போதும் எனக்குப் பின்னால் கேட்கும் சரக் சரக் என்னும் செருப்புச்சத்தம் அவர் என்னை வழியனுப்ப வருகிறார் எனத் தெரிந்தது. நான் வெளியில் சென்றதும் வாசல் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே சென்றார். இறங்கி நடக்க ஆரம்பித்தேன். ஏதோ நினைவு வந்தவனாக மீண்டும் கணேசன்ஜி வீட்டுவாசலுக்கு வந்து கதவின் வழியாகப் பார்த்தேன். அவர் கட்டிலில் படுத்துக் கண்ணை மூடியிருந்தார். கட்டிலின் கீழே செருப்புகள் தாறுமாறாக இல்லாமல் ஜோடியாக இருந்தன.

எனக்குக் கணேசன்ஜி என்றும் இராமன்தான்.

கோயிலில் பூஜை செய்யும் சாமி (“அவர ஹிப்பின்னு சொல்றான்னு ஒனக்கு எத்தன தடவ சொல்ல?”- ஜா) என் கவனத்தைக் கலைத்தார். “ஆத்துக்கு யாரோ ஒரு பெரியவர் வந்திருக்கார். ரொம்ப நாழியா காத்திண்டு இருக்கார். கூட ஒரு பொம்பளையும் வந்திருக்கா. அன்னநடை நடக்காம வெரசலா நடையேண்டா..” என்று சொல்லி என் உணர்வை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தார். நான் இன்னும் கொஞ்சம் விரைவாக நடந்தேன். கணேசன்ஜியாக இருக்குமோ? இந்த நினைப்பு எனக்குள் தந்த எண்ணங்களைச் சொல்ல முடியுமா? தெரியவில்லை. நான் சந்தோஷப்படுகிறேனா? இல்லை பயத்தால் படபடப்பா? ஏன்? எனக்கே புரியவில்லை. சில விஷயம் தெளிவாகச் சொல்லப்படாமலே இருப்பதுதான் அதற்கு மரியாதை. ஜாவின் வாப்பா அடிக்கடி இதைச் சொல்வார். இப்போது புரிகிற மாதிரி இருந்தது. (“வாப்பா இப்படித்தான் எதையாவது பொலம்பும்.. கண்டுக்காத”- ஜா)

அக்ரஹாரம் கடந்து, பிள்ளையார் கோவிலைத் தாண்டி (“என்னடா சாமி கும்பிடுற? கையை விசுக்குன்னு ஒரு வெட்டு.. இதுக்குப் பேரு சாமி கும்பிடுறதா?”- ஜா) முதலியார் தெருக்குள் நுழைந்தேன்.

பொன்னம்மாக்கா வீடுதான் முதல்வீடு. அதைத் தொட்டடுத்த வீடு என்னது. பொன்னம்மாக்கா வீட்டின் வெளியிலேயே காத்திருந்தாள். பொன்னம்மாக்கா மாதிரி அன்பாகப் பேச இன்னொருத்தியால் முடியாது.

“எங்கய்யா போன? யாரோ ஹிந்தி மாஸ்டராம். திருச்சிலேர்ந்து ஒன்னப் பாக்கணும்னு வந்திருக்காரு. ஜாகீர் தான் வூட்ல இருக்கான். வேற யாருமில்ல. நா காபித்தண்ணி கொடுக்கலாம்னு நினைச்சேன். குடிப்பாரோ மாட்டாரோன்னு..”.

ஹிந்தி மாஸ்டராம் என்ற வார்த்தை காதில் விழுந்த பிறகு பொன்னம்மாக்கா சொன்னது எதையுமே கிரகிக்க முடியவில்லை. லேசான படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே போனது. கைகள் சில்லிட ஆரம்பித்தது. பொதுவாகப் பரீட்சைக்குக் கேள்வித்தாள் தரும் நேரத்தில்தான் எனக்குக் கைகள் சில்லிடும். பொன்னம்மாக்கா என்னவோ சொல்லிக்கொண்டே இருந்தாள். நேரம் காலம் தெரியாமல் இந்தப் பொன்னம்மாக்கா ஏன் இந்த இழுவை இழுக்கிறாள். ஒருவழியாக பொன்னம்மாக்கா தன் பேச்சை முடித்துக்கொள்ள, வேகவேகமாக மாடிப்படிகளில் தாவி ஏறினேன்.

வீட்டு வாசலில் பல ஜோடிச் செருப்புகள் இருந்தன. அவை இருந்த விதம்….. அவை ஒரே சீராக இல்லை. ஒரு செருப்பு பக்கவாட்டிலும் இன்னொரு செருப்பு தலைகீழாகப் புரண்டும் மற்றவை ஒன்றன் மீது ஒன்றாய் ஆளுக்கொரு திசையில் இருந்தன. நான் ஸ்தம்பித்து நின்றேன்.

உள்ளே போகாமல் ஏதோ ஒரு படபடப்போடு இன்னும் நின்றுகொண்டிருக்கிறேன்.

(முற்றும்)
 
Share

மீண்டும் ஒரு மாலைப் பொழுது – சிறுகதை


சீரான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யார் யாரோ கேள்வி கேட்டிக்கொண்டிருக்க யாரோ ஒருவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்தப் பதில் சொன்னாலும் கைதட்டச் சொல்லி பயிற்றுவிக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பது தெரிகிறது. டாக்டர் வேதசகாயம் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டது மாதிரியே இல்லை. போர்னோ படங்கள் நிறைந்த புத்தகத்தைக் கையில் வைத்து ஒவ்வொரு கோணமாக திருப்பத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். (“கொன்னுட்டான் போ”) திடீரெனச் சிரித்துக்கொண்டார்.

“இந்தப் புத்தகத்தையே எத்தனைத் தடவை பார்ப்பீங்க?”

“நீ வேணும்னா புதுசா ஒன்னு வாங்கிக்கொடு. வேண்டாம்னா சொல்றேன்?” முகத்தைக்கூடப் பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு அடுத்த பக்கத்தைத் திருப்பினார். நான் அந்த அறையைவிட்டு வெளியில் வந்தேன்.

“என்ன இன்னும் டாக்டர் அதே புத்தகத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாரா?” என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் புகுந்துகொண்டாள் செல்வி. அங்கிருந்தபடியே கத்தினாள்.

“ஊர்லேர்ந்து அம்மா ஊறுகாய் அனுப்பியிருக்காங்க. ரிஷப்ஷன்ஸ்ல ஷெல்·ப்ல இருக்குது. எடுத்துக்கோங்க.”

“சரி”

“ஸ்டோர்ல வெயிட் பண்றீங்களா? இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்”

வாட்ச்மேன் நமட்டுச் சிரிப்பு சிரித்த மாதிரி இருந்தது.

“எனக்கு வேலை இருக்கு. நான் போறேன்”.

தலையை மட்டும் வெளியே நீட்டி தாழ்ந்த குரலில் “எத்தனை நாள் தப்பிக்கிறீங்கன்னு பார்க்கிறேன்” என்றாள்.

பார்க்கலாம் எனச் சொல்லிவிட்டு ரிசப்ஷனை விட்டு வெளியில் வந்தேன். பெரிய கேட் பூட்டியிருந்தது. லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. கேட்டுக்கு வெளியே ரோடு போடுவதற்காக கல்லையும் மண்ணையும் குவித்துவைத்திருந்தார்கள். மிதமான காற்றில் மரங்கள் ஆடுவதைப் பார்க்கவே இரம்மியமாக இருந்தது. தூரத்தில் மசூதியிலிருந்து அல்லாஹ¤அக்பர்அல்லா என ஒலித்தது. ஆஸ்பத்திரியின் வலது புறத்திலிருந்து மிக லேசான கைத்தட்டல் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட அரைமணிநேரமாய் சரியான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவன் தான் பேசிக்கொண்டிருக்கவேண்டும். இது முதல் முறை அல்ல. அவன் அவனை இலக்கியவாதி என்பான். ஏற்பார்கள். மற்ற எல்லார் கேள்விக்கும் ஒரு கருத்தை முன் வைப்பான். ஏற்பார்கள். அவன் சொல்லும்போது கூடுவார்கள். அவன் சொல்லும்போது கலைவார்கள். அந்தக்கூட்டத்தில் அவனுக்கு மிகப்பெரிய ஆளுமை உண்டு.. அதனால் ஏற்பட்ட கர்வம் அவன் முகத்தில் தெரியும்.

கூட்டம் நடக்கும் இடம் தேடி, கைதட்டல் ஓசையைப் பின்பற்றி நடந்தேன்.

ஆஸ்பத்திரியின் வளாகம் பெரிய மதில்சுவரால் சூழப்பட்டிருந்தது. மதிற்சுவரின் மேலே சிறிய சிறிய உடைந்த கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. உள்ளே மதிற்சுவருக்கு இணையாக, வரிசையாய் மரங்கள். சின்னச் சின்ன தொட்டிகளில் குரோட்டன்ஸ் செடிகள். அதைத்தொடர்ந்து ஒரு மரத்தின் கீழ் குவிக்கப்பட்ட மணல். அங்குதான் கூட்டம் கூடியிருக்கிறது. பதினைந்து இருபது பேர் உட்கார்ந்திருக்க ஒருவன் மட்டும் நின்றிருக்கிறான். கையைக் கட்டிக்கொண்டு முகத்தில் மெல்லிய புன்னகையைத் தவழவிட்டுக்கொண்டு அடுத்த கேள்விக்குத் தயாராய் இருக்கிறான். காதில் வெள்ளை முடிகள் வளர்ந்திருந்தன.

ஒரு காலை தரையில் ஊன்று, இன்னொரு காலை மடக்கி, பாதத்தால் மதில் சுவரை மிதித்துக்கொண்டு யாரும் என்னைக் கவனிக்காதவாறு காம்பவுண்ட் சுவரின் மீது சாய்ந்து நின்றுகொண்டேன். எனக்கு இப்படி நிற்பதுதான் பிடிக்கும்.

“புரட்சி. பெரும் புரட்சி. யுகப்புரட்சி. வரும். வந்தே தீரும். அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.”

வானத்தை நோக்கிக் கைகாட்டினான். எல்லாரும் மேலே பார்த்தார்கள்.

“அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறான். இங்கே இருக்கிறான் அவன்”

பூமியை நோக்கிக் கைகாட்டினான். எல்லாரும் பூமியைப் பார்த்தார்கள்.

“உங்கள் முன்னே இருக்கிறான்”

தன்னைச் சுட்டிக்கொண்டான். எல்லோரும் கைதட்டினார்கள்.

அங்கிருந்து பார்க்கும்போது டாக்டரின் அறை தெரிந்தது. மூன்று நாள்களுக்கு முன்னதாக இராபர்ட் அந்த அறையின் வழியாகத்தான் பார்த்திருக்கவேண்டும். இப்போது கூட்டம் நடந்து கொண்டிருக்கும் மணலில்தான் நடந்தததாம். இராபர்ட் சொல்லும்போது அவன் குரலில் இருந்த சந்தோஷம் பொறாமையைக் தந்தது.

“நைட் ட்யூட்டியா.. தூக்கமா வந்துச்சு. டாக்டர் அவர் ஷெல்·ப்ல எதாவது பலான புத்தகம் வெச்சிருப்பார்னு எடுக்க வந்தேன். ஜன்னல் வழியா பார்த்தா.. வேப்ப மரம் இருக்குதுல்ல.. அதுக்குப் பக்கத்துல மணல் குவிச்சு வெச்சிருக்காங்கல்ல.. அங்கதான். கவிதாவும் சிவாவும். சிவா ரொம்ப பயந்த மாதிரிதான் இருந்தது. கவிதா அவனை விடவே இல்லை”

கண்கள் அகல விரித்து, அவன் சொன்ன வேகத்தில் ஒன்றிரண்டு எச்சில் துளிகள் என் மீது தெறித்தன. அதைப் பொருட்படுத்தாமல், “முழுக்கப் பாத்தியா?” என்றேன்.

“வேற வேலை? செம ஷோடா.. கொஞ்சம் லைட்டிங் மட்டும் ப்ராப்பரா இருந்ததுன்னு வெச்சிக்கோயேன்.. ரொம்ப சூப்பரா இருந்திருக்கும்.”

“அவங்க உன்னைப் பார்க்கலையா?”

“அவங்க என்னைப் பார்க்கிற மூட்லயா இருந்தாங்க.. சிவா இன்ஜெக்ஷன் போட்டுக்கிட்டு இருந்திருப்பான்னு நினைக்கிறேன்..”

“சே சே.. இப்பல்லாம் போடுறது இல்லை. முன்னாடி ஏதோ ஒரு ஜாலிக்காகப் போட்டுக்கிட்டு இருந்தான். அவனுக்கே பயம் வந்திருச்சு. எங்க அடிமை ஆயிட்டோமோன்னு.. ஒருநா சொல்லிச் சொல்லி அழுதான்.. அப்புறம் விட்டுட்டான்னு தோணுது”

“என்னமோ எனக்குத் தோணுச்சுப்பா.. அரைமணி நேரம் கழிச்சு ஒன்னுமே நடக்காத மாதிரி கவிதா ரிஷப்ஷன்ல புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்தா.. என்ன ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டேன்.. ஒன்னுமில்லை; டயர்டா இருக்குதுன்னு சொன்னா.. மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டேன். செம கட்டைடா.. ஒருநாள் நானும் டயர்டாக்கணும்”

ராபர்ட்டை நம்ப முடியாது. எதையாவது அளந்து வைப்பான். அவன் கேரக்டர் அப்படி.

கூட்டம் அடுத்த பதிலுக்குத் தயாரானது.

“பறவை என்கிறார்கள். பறப்பது பறவை. ஒரு பறவையைப் பிடித்து அதன் இறக்கைகளை வெட்டி அடைத்து வைத்துவிட்டால் அது பறவை இல்லையென்று ஆகிவிடுமா? பறக்காமல் இருக்கும்போது கூட அது பறவைதான். நானும் அப்படிப்பட்ட ஒரு சிறைவாழ்க்கையில் இருக்கிறேன். எழுதாமால் இருந்தாலும் நான் இலக்கியப் பிதாமகன் தான். எனக்குள் இன்னும் அலைமோதும் பல எண்ணங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அவையெல்லாம் அச்சாகும்போது என் மேன்மை இன்னும் உயரும். அன்று இலக்கிய உலகம் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குப் பெயரும். அதன் காரணகர்த்தா நானாக இருப்பேன். இதில் சிறிதளவும் சந்தேகமில்லை எனக்கு. ”

வானத்தை நோக்கி இரண்டு கைகளைத் தூக்கிக் கர்ஜித்தான். அவன் வெட வெட உடம்புக்கும், தொள தொள அழுக்கு வெள்ளைச் சட்டைக்கும், கைலிக்கும், அந்தக் கர்ஜித்தலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தது. இன்னொருவன் அடுத்த கேள்வியைக் கேட்டு வைத்தான். என்ன கேட்டான் என்றே புரிய இல்லை. அவனுக்கும் புரிந்திருக்காது. புரிந்திருக்கவேண்டிய தேவையும் இல்லை. அவனுக்கு அவனுடைய பதில்தான் முக்கியம்.

நான் டாக்டர் அறையை நோக்கினேன். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்துச் சைகை காட்டி, தானும் இங்கே வருவதாகச் சொன்னார். சரி என்றேன்.

டாக்டர் வருவதற்குள் அவன் அடுத்தவன் கேள்விக்கு விடை சொல்லத் தயாரானான்.

தொப்பையைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்ததில் டாக்டருக்கு லேசாக மூச்சு வாங்கியது.

“டாக்டர்.. இவரை ஏன் இன்னும் இங்க வெச்சிருக்கீங்க?”

அடிக்குரலில் பேசிக்கொண்டோம்.

“அன்னைக்குப் பார்த்தேல்ல.. கடைசியில என்ன பண்ணான்னு.. பேசிக்கிட்டு இருக்கும்போதே வயலண்ட் ஆயிடுவாங்க. எப்பன்னு சொல்ல முடியாது. அதுக்காகத்தான்.”

“அவனைப் பாதி நோயாளியா ஆக்கினதே நீங்கதான்..”

டாக்டர் சிரித்தார்.

“கற்பனையையெல்லாம் கதையோட நிறுத்திக்கக்கூடாதா?”

“நீங்க நார்மல்னு நினைக்கிறீங்களா? ஒரே புத்தகத்தை மாறி மாறிப் பார்க்கலை? கவிதாவோட ப்ராவை திருட்டுத்தனமா வாசனை பிடிக்கலை? கேவலம் வேலைக்காரி.. அவளோட ஸ்லெப்ட் வெல் பண்ணலை?”

ஸ்லெப்ட் வெல் இராபர்ட் சொல்லித்தந்தது. திடீரென ஒரு நாள் மஞ்சு நர்ஸ¤ம் வாட்ச்மேனும் ஸ்லெப்ட் வெல் என்றான். நான் பரிதாபமாக முழித்தேன். ஸ்லெப்ட் வெல் தெரியாதா என்று கேலி செய்து துணைக்குச் சிவாவையும் அழைத்தான். இருவரும் சேர்ந்து ஸ்லெப்ட் வெல்லை விளக்கினார்கள். பின் எப்போது பார்த்தாலும் மறக்காமல் “நேத்து டாக்டரும் அந்த நர்ஸ¤ம் ஸ்லெப்ட்வெல், மூனு நாளைக்கு முன்னாடி யாரும் யாரும் ஸ்லெப்ட் வெல்” எனச் சொல்லாமல் விடமாட்டான்.

“பரவாயில்லை. கோட் வோர்ட்லாம் தெரிஞ்சு வெச்சுருக்க.. பை தி பை, கேவலம் வேலைக்காரின்னா.. நர்ஸ் பரவாயில்லைங்கிறியா?” சிரித்தார் டாக்டர்.

“உங்க புல்ஷிட் ஹாஸ்யத்தை நிறுத்திட்டு, பதில் சொல்லுங்க மொதல்ல..” உஷ்ணமானேன்.

“ஆரம்பிச்சிட்டான்யா அலம்பல.. இப்ப என்ன பண்ணனும்ங்கிற?”

“காசுக்காகத்தானே இதெல்லாம்..”

“காசுக்காகன்னு பார்த்தா காசுக்காகத்தான் எல்லாம்.. நீ எழுதி என்ன சாதிக்கப்போற? உலகத்தைத் திருத்தப்போறியா? இல்லை சோ கால்ட் (so called) இலக்கியவாதியாகப் போறியா? எழுதிக்கிட்டே இருக்கேல்ல.. காசுக்காகத்தான? அது மாதிரிதான்.. வீட்டுல வெச்சுக்க முடியாம கொண்டு தள்ளிட்டுப் போறான். நாங்க பார்த்துக்கறோம். காசு வாங்கறோம். சரி.. காசு வாங்கிட்டா யாரு வேணா பார்த்துக்கலாம்னு நினைக்கிறியா? ஒரு பத்து நாள் இங்க இருந்து பாரேன்.. கொண்டு வந்து விட்டுட்டுப் போயாச்சுன்னா அவ்வளவுதான். எத்தனை பேர் ரெகுலரா வந்து பார்த்துட்டுப் போறான்ற? வாய் ஓயாம கதை, இலக்கியம்னு பேசிக்கிட்டு இருக்கானே.. அவன் பொண்டாட்டி அவனை வந்து பார்த்து அஞ்சு வருஷம் ஆகப்போகுது.. ஆனா மாசா மாசம் டாண்ணு காசு வந்துரும். ஏன் எதுக்குன்னு கேக்காம பில் செட்டில் பண்ணிடுவாங்க.”

கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பதில். இன்னும் கேட்டால் அவன் ஒரு இராத்திரியில் செய்த லீலைகளை எல்லாம் சொல்வார். இராபர்ட் மிரண்டு போனதை விவரிப்பார். பக்கத்து பெட் ஆசாமி மறுநாள் முழுதும் வலிக்குது வலிக்குதுன்னு புலம்பிக்கொண்டிருந்ததைச் சொல்லிக் காட்டிச் சிரிப்பார். அவன் நார்மல் இல்லை என்பார். (“பைத்தியங்களுக்கே கண்ட்ரோல் பண்ண முடியலையே.. நாமெல்லாம் எந்த மூலைக்கு” என்று அன்று முழுவதும் இராபர்ட் மப்பில் புலமபிக்கொண்டிருந்தான்.) இராபர்ட்டைக் கருத்து கேட்பார்.

இன்னும் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் கவிதா ஒரு ஊசியோடு வருவாள். அவளைப் பார்த்ததும் இலக்கியவாதி முதலில் ஓடுவான். ஒட்டு மொத்தக் கூட்டமும் ஓடும். கவிதா அசரவே மாட்டாள். பின்னாடியே ஓடிப் போய், கையைப் பிடித்து முறுக்கி (“ஓடப்பாக்கிறியா.. மூதி..” ) ஊசி போடுவாள். அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் அவன் அடங்கிவிடுவான். கவிதாவின் நைட் ஷி·ப்ட் அதோடு முடிந்த மாதிரிதான். அதற்குப்பின் சிவாவும் மணல்மேடும்தான்.

“அப்ப அவன் ஆயுசு முழுக்க இங்க கெடக்க வேண்டியதுதான்றீங்களா?”

“கம் ஆன் யா.. என்ன ஆச்சு உனக்கு? ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தா நைட் என் ரூம்ல இரு. அங்கே இருந்து பார்த்தா மணல்மேட்டுல நடக்குற ஷோ கிளீனா தெரியும். ஒருநாள் நானே ஸ்டே செய்யணும்னு இருக்கேன்..” கண்ணடித்தார்.

பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம். அவன் குரல் இன்னும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

“அவன் தன்னை இலக்கியவாதின்னு நினைச்சுக்கிறான். இத்தனைக்கும் அவன் நார்மலா இருந்தப்ப ஒரு புத்தகம் கூட எழுதினதில்லை. நிறைய படிச்சிருப்பான் போல.. பெரும்பாலான நேரத்துல அவன் நார்மல்தான். சில நேரங்கள்ல அப்நார்மல். அன்னைக்கு இராத்திரி நடந்துக்கிட்ட மாதிரி. அப்நார்மாலிட்டி இருக்கிற வரைக்கும் அவனை அனுப்ப முடியாது. அதுதான் விஷயம்”

“எனக்கு இந்தக் கதையெல்லாம் வேண்டாம். அவனுக்குச் சரியாகுமா ஆகாதா? அவனை வெளியில் அனுப்புவீங்களா இல்லை இங்கயே வெச்சு மாசா மாசம் பணம் பார்ப்பீங்களா?”

டாக்டர் வேதசகாயம் எனப்படுகிற அந்த நபர் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு ஒரு பெருமூச்சோடு என்னைப் பார்த்துச் சொன்னார்.

“நீ இன்னைக்கு அப்நார்மலா இருக்க. உனக்கு இப்பச் சொன்னா எதுவும் புரியாது. நீ நார்மலாகும்போது உனக்கே புரியும்” சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

இருட்டத் தொடங்கியிருந்தது.

இராபர்ட் இரவில் ஜன்னல் வழியே பார்ப்பான்.

கவிதா நிலவொளியில் மணல்மேட்டில் வெறியுடன் சிவா ஆளுவாள்.

டாக்டர் ஆயிரத்து எட்டாவது தடவையாகப் புத்தகத்தைக் கையில் எடுப்பார்.

வேலைக்காரி ஒரு அழைப்புக்காகக் காத்துக்கொண்டிருப்பாள்.

செல்வி ஸ்டோர் ரூமையே ஏக்கத்தோடுப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

அவன் தினம் தினம் பேசிவிட்டு, ஊசி மயக்கத்தில் தூங்கிக்கொண்டிருப்பான்.

வாட்ச்மேன் கேட்டைப் பூட்டிச் சாவியைப் பையில் வைத்துக்கொண்டு, பூட்டை இழுத்துப் பார்த்துக்கொண்டார்.

யோசனைக்குப் பின் டாக்டர், ” இப்படி இருப்பது ஒரு வகையில கொடுப்பினை” என்றார்.

நான் டாக்டரிடம் “கேட்டே வேண்டாம்” என்றேன்.

***
Share