Archive for கிரிக்கெட்

சச்சின் – பில்லியன் ஆஃப் ட்ரீம்ஸ்

சச்சின் – இன்னொருவரின் நம் டைரி
 
சச்சின் டெண்டுல்கர் கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவு நாயகன். இன்று அரைக்கிழவர்களாகியிருக்கும் ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் எப்படி இளையராஜா ஒன்றரக் கலந்திருக்கிறாரோ அப்படி ஒவ்வொரு இந்திய அரைக்கிழவர்களின் பெரும்பாலான கனவாக சச்சினே இப்போதும் எஞ்சியிருப்பார். சச்சின் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் நாம் அவரது ஆட்டத்தைப் பார்த்தது நம் வாழ்நாளின் கொடுப்பினை என்று உறுதியாக நம்பும் ஒரு மிகப்பெரிய மக்கள்திரளுள் நானும் ஒருவன். இன்று கிரிக்கெட்டைப் பார்ப்பதை நிறுத்திவிட்ட பலரும் விரும்புவது ஒரு டைம் மிஷினில் மீண்டும் சச்சினின் யுகத்தைச் சென்றடைந்துவிடமாட்டோமா என்பதையே. அப்படி ஒரு டைம் மிஷின்தான், சச்சின் – பில்லியன் ஆஃப் ட்ரீம்ஸ், கொஞ்சம் குறைகளுடன்.
 
படம் என்று நம்பிச் சென்றவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை நிச்சயம் சந்தித்திருப்பார்கள். நான் ஒரு வாழ்க்கையைத் தேடியே சென்றேன். என் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ‘இப்படத்தில்’ பெரும்பகுதியில் நடிகர்கள் இல்லை. மினுமினுப்புக் காதல் இல்லை. நாடகிய துரோகங்கள் இல்லை. இப்படி ஒரு படத்தைப் பார்க்கமுடியும் என்று நம்பமுடியாத ஒரு டாக்குமெண்ட்ரியாக இத்திரைப்படம் வந்திருப்பது பெரிய மகிழ்ச்சிக்குரிய விஷயமாக எனக்குப் படுகிறது.
 
இன்னொருவரின் டைரியில் நம் வாழ்வின் மறக்கமுடியாத பக்கங்கள் நம்கண்முன்னே விரியும்போது, மீண்டும் அவ்வாழ்வுக்குள் சென்றுவிடமாட்டோமா என்ற ஏக்கம் இணைகோடாகத் திரைப்படம் முழுக்க விரிகிறது. சச்சின் அவுட்டா, இந்தியாவே அவுட்டு என்ற வசனங்களையெல்லாம் எத்தனை முறை கேட்டிருப்போம், சொல்லி இருப்போம். இது நடந்து பத்து வருடங்கள்தான் ஆகிறது என்பதால் வரலாற்றை மிக அருகில் இருந்து மீண்டும் ஒரு முறை வாழ்ந்தது போன்ற உணர்வுடன் பார்க்கமுடிகிறது.
 
சச்சினின் நீண்ட நெடும் பயணத்தில் எதை எடுப்பது எதை விடுவது என்பது மிகப்பெரிய சிக்கல் என்பது உண்மைதான். எனவே மிக முக்கியமான ஹைலைட்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு, உச்சகாட்சியாக உலகக் கோப்பை வெல்வதை நோக்கியே படம் பயணிக்கிறது. சஸ்பென்ஸ், திரில் எதுவும் இல்லை என்பதால் நிஜமான உணர்வுடன் படத்தைப் பார்க்க முடிகிறது. பத்து முக்கியமான விஷயங்களை மனத்தில் வைத்து எடுத்ததெல்லாம் சரிதான். ஆனால் எப்படி மிக மிக முக்கியமான வாழ்க்கைத் தருணங்களைத் தவறவிட்டார்கள் என்று யோசிக்கும்போது வரும் எரிச்சல் இன்னும் அடங்கவில்லை.
 
சச்சினின் முதல் ஆட்டத்தில் அவர் டக் அவுட் என்பது, இது போன்ற திரைப்படத்துக்கு எத்தனை முக்கியமான பதிவு? அடுத்த சச்சின் அடையப்போகும் உயரத்துக்கு இது எத்தனை முக்கியமான எதிர்முனை? கோட்டை விட்டிருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் தொடங்கும் சச்சினின் வாழ்க்கையைச் சொன்னவர்கள் சச்சினின் ஒருநாள் முதல் போட்டியைப் பற்றிப் பேசவே இல்லை. இதைவிட அநியாயம், சச்சின் முதன்முதலாக எப்போது துவக்க ஆட்டக்காரராக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார் என்பதைக் காட்டவே இல்லை. ஜஸ்ட் ஒரு வரியில் பேச்சில் அதைக் கடந்துவிட்டார்கள். அந்த ஒருநாள் போட்டி சச்சினின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் நிறத்தையே மாற்றியது. அது ஒரு வரலாற்றுத் தருணம். அதையும், அதை நிகழ்த்திக்காட்டிய அசாருதீனையும், அத்தருணத்தை அற்புதமாக்கிய சச்சினின் பேட்டிங்கையும் காட்டாத ரணம் இன்னும் ஆறவில்லை. இதையெல்லாம் விடப் பெரிய அக்கிரமம், நூறுகளாக அடித்துக் குவித்த சச்சின் அடித்த முதல் சதம் பற்றிய விவரணை இல்லாதது. என் நினைவில் தோராயமாக 80 ஆட்டங்களுக்குப் பிறகே சச்சின் சதமடித்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு நிற்கவே இல்லை. இவற்றையெல்லாம் கவனமாகப் பதிவு செய்திருக்கவேண்டாமா?
 
இன்னொரு முக்கியத் தருணம், மணற்புயல் வீசும்போது சச்சின் அதை எதிர்த்து நின்றது. இப்படியான ஒரு நாடகத் தருணம் நிஜ வாழ்க்கையில் நடந்து அதை ஐம்பது கோடிப் பேர் பார்த்தார்கள் என்பதெல்லாம் நம்பக்கூடிய ஒன்றா? அப்படி நிகழ்ந்ததைத் திரைப்படத்தில் காட்டவேண்டாமா? அந்த ஆட்டத்தில் சச்சின் அடித்ததை மட்டுமே காண்பிக்கிறார்கள். புயலை விட்டுவிட்டார்கள்.
 
சச்சின் கேப்டனாக இருந்தபோது அசாருதீன் ஏற்படுத்திய பிரச்சினைகளே அதிகம் என்பதை அன்று பேசாத ஊடகங்கள் இல்லை. அதை மிகத் தெளிவாக இப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். அசாருதீனின் அரசியலைப் பற்றிப் பேசும்போது அசாருதீனை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் அசாருதீனைத்தான் காமிக்கிறார்கள். அசாருதீனின் மிகப்பெரிய ரசிகனாக இருந்த எனக்கு அவர் செய்த ஃபிக்ஸிங் தந்த எரிச்சலும் ஏமாற்றமும் கொஞ்சநஞ்சமல்ல. இப்படத்தில் இக்காட்சிகளைப் பார்க்கும்போது ஏற்பட்ட பரவசமும் கொஞ்சநஞ்சமல்ல. சச்சினுக்கும் அப்படியே இருந்திருக்கவேண்டும்.
 
ராகுல் டிராவிட், சச்சின், சௌரவ் கங்கூலி (கூடவே கும்ப்ளே) இவர்களே இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய சூத்ரதாரிகள். இவர்களே இந்திய கிரிக்கெட்டை மீட்டெடுத்தவர்கள். இதை மிக முக்கியமாகச் சொல்கிறார் சச்சின் டெண்டுல்கர். மிக மகிழ்ச்சியாகக் கடந்த தருணங்கள் அவை, திரைப்படத்திலும், அன்றைய நிஜ வாழ்விலும்.
 
கொல்கத்தாவில் நடந்த உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோற்றதைச் சொல்லும் இப்படம், அதற்கு இணையான தோல்வியாக நான் நினைக்கும் சென்னை டெஸ்ட் தோல்வியைக் காட்டவில்லை. சச்சின் அழுது மேன் ஆஃப் தி மேட்ச் வாங்க மறுத்த ஆட்டம் அது. அவரால் இந்தியாவின் அத்தோல்வியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதுவும் பாகிஸ்தானுடன் தோல்வி. அதுவும் வெற்றிக்கோட்டைத் தொடும் வேளையிலான தோல்வி. அந்த ஆட்டத்தில்தான் சச்சினின் முதுகுவலியை உலகமே அறிந்துகொண்டது என்பது என் நினைவு. அதைப் பற்றியும் இப்ப்படத்தில் இல்லை. சிம்பாப்வேவின் ஒலங்காவுக்கு தண்ணிய காட்டியது பற்றியெல்லாம் மூச்சே இல்லை.
 
வெங்கடேச பிரசாத்தின் ஒரு பந்தில் ஃபோர் அடிக்கும் அமீர் சோஹைல் (சரிதானா?) அடுத்த பந்திலேயே அவுட் ஆகும் காட்சியை சச்சின் ஒரு குழந்தையைப் போலச் சொல்கிறார். ஒட்டுமொத்த திரையரங்கமும் அதிர்ந்தது. தோனியைக் காட்டும்போது, டிராவிட், கங்குலி, ஷேவக் என ஒவ்வொருவர் வரும்போது தியேட்டர் அலறுவதைப் பார்க்கவும் குதூகலம் கொள்ளவும் நீங்கள் 1989ல் பதின்ம வயதில் இருந்திருக்கவேண்டும். இன்று நாற்பதைத் தொடும் அத்தனை பேரும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தங்கள் குழந்தைகளுக்குக் காட்டவேண்டும் என்ற வெறியில் தியேட்டரில் குழுமி இருந்தார்கள் என்றே நினைக்கிறேன்.
 
தோனியைப் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் சச்சின் முன்வைக்கவில்லை. கிரேக் சாப்பல் பற்றி மிக விளக்கமாகச் சொல்லும் சச்சின், அசாரூதினைப் பற்றிய கருத்தைச் சொல்லும் சச்சின், 20-20 வகை ஆட்டத்தில் இருந்து தான் விலகியதைப் பற்றி எந்த ஒரு வரியையும் சொல்லவில்லை. சச்சின் தன் குடும்பத்தின் மீதும் தந்தையின் மீதும் வைத்திருக்கும் பாசமும் நம்பிக்கையும் இப்படத்தில் மிக விரிவாகவே பதிவாகிறது. உண்மையில் ஒரு குடும்பமே இந்தியாவுக்கு சச்சினைத் தர உழைத்திருக்கிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னுடன் தன் சகோதரன் அஜய் இருப்பதாக சச்சின் சொல்வதெல்லாம் ஒரு அண்ணனுக்கு எத்தனை பெரிய பெருமிதம்? சச்சினின் பணிவு படம் முழுக்க பார்க்கக் கிடைக்கிறது.
 
தனக்கு இப்படத்தில் வேலை இல்லை என்பதை ஏ.ஆர்.ரஹ்மான் உணர்ந்ததுதான் பாராட்டுக்குரியது. ரசிகர்களின் காட்டுக் கத்தலே பின்னணி இசை என்பதை உணர்ந்து அவர்களோடு இணைந்து பயணிக்கிறது பின்னணி இசை. எப்போது தீம் பாடல் துவங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்கமுடியாதபடித் தொடங்குகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
 
பாகிஸ்தானுடனான ஒவ்வொரு உலகக்கோப்பை வெற்றியின் பெருமிதத்தையும் சச்சின் பதிவு செய்கிறார். தன் உடைமைகளை வைத்திருக்கும் பெட்டியில் கடவுள்களின் படத்துடன் இந்தியக் கொடியும் இருக்கிறது. கடவுளும் தந்தையுமே தன் வெற்றிக்குக் காரணம் என்று தான் உறுதியாக நம்புவதை, உலகின் முன் பலப்பல முறை சொன்னதை இப்படத்திலும் மீண்டும் மீண்டும் சொல்கிறார் சச்சின்.
 
இது திரைப்படம் போல எடுக்கப்படவில்லை என்பதுதான் எனக்குப் பிடித்திருந்தது. முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் படம் டாக்குமெண்ட்ரி ஆகிறது. பின் இறுதிவரை டாக்குமெண்டரிதான். சச்சின் போல ஒருவர் நடிப்பதை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும்? இத்தவறைச் செய்துவிடக்கூடாது என்று சரியாக முடிவெடுத்துச் செயல்பட்டிருக்கிறார்கள். கிரிக்கெட்டைப் பார்த்தே வாழ்க்கையைத் தொலைத்துவிடுவோமோ என்று என்னைப் போல அஞ்சிய கூட்டம் நிச்சயம் தவறக்கூடாத படம் இது. சுவாரஸ்யத்துக்காக அல்ல, நம்மை ஒருதடவை திரும்பிப் பார்க்க. இந்திய வரலாற்றில் இப்படியான டாக்குமெண்ட்டரியெல்லாம் வராது என்று நினைத்திருந்தேன். வந்திருக்கிறது. நிறைய குறைகள் இருந்தாலும், இந்த முயற்சிக்காகப் பார்க்கலாம்.
Share

WCC 2015

A world cup match for India without Sachin after 1987. 🙁 I miss #Sachin.

சச்சின் 16 வயதில் அப்துல் காதிர் பந்தை ஏறி அடித்தபோது எனக்கு 14 வயது. அன்றுமுதல் பெரும்பாலான சச்சின் ஆட்டங்களைப் பார்த்தேன். சச்சினுடனேயே வளர்ந்தேன். சச்சினின் முதல் நூறு ரன்களுக்காக சச்சினைவிட அதிகம் காத்திருந்தேன். சச்சின் அவுட் ஆனால் ஸ்கூல்/காலேஜ்/வேலைக்குப் போகலாம் என்று காத்திருப்பேன். நியூசிலாந்துக்கு எதிராக முதன் முதலில் முதல் ஆட்டக்காரராக களமிறங்கி பொளந்துகட்டியபோது சந்தேகமே இல்லாமல் ஒரு உலக வரலாறு எழுதப்படவிருக்கிறது என்று உணர்ந்தேன். கிரிக்கெட்டின் மையமே சச்சின்தான் என்பதில் எந்த ஐயமும் எனக்கு இருந்ததில்லை. 200 ரன்கள் எடுத்தபோது நாம் பார்த்தால் அவுட்டாகிவிடுவாரோ என்று பயந்து அலுவலகத்தில் நகம் கடித்துக் காத்திருந்தேன். உலகக் கோப்பையை சச்சின் தொடுவாரா என்றெல்லாம் கவலைப்பட்டதே இல்லை. ஏனென்றால் பெரும்பாலான உலகக் கோப்பை போட்டிகளில் சச்சினின் ஆட்டம் பிரமாதமாகவே இருக்கும். 

இன்று அந்த சச்சின் இல்லாமல் முதல் உலக்கோப்பை ஆட்டம் இந்தியாவுக்கு, 1987க்குப் பிறகு. என்னவோ அந்த ஆர்வமும் படபடப்பும் பயமும் வெறியும் வரமறுக்கிறது. அடுத்த தலைமுறைக்கும் இப்படித்தானா என்று தெரியவில்லை.

ஐ மிஸ் யூ சச்சின்.

Share

Good Bye Ganguly


இஷாந்த் சர்மாவும் ஹர்பஜனும் தோளில் தூக்கி வைத்து கங்குலியைக் கொண்டுவர இன்னொரு சடங்கு முடிந்தது. ஒரு வாரத்திற்கு முன்புதான் கும்ப்ளேவிற்கு இந்தச் சடங்கை செய்திருந்தார்கள் இந்தியர்கள் என்பதினால் அனுபவம் அவர்களுக்குக் கைக்கொடுத்திருக்கும். தோனி, கங்குலியின் கடைசி டெஸ்ட் என்பதால், ஆஸ்திரேலியா 9 விக்கட் இழந்தபின்பு அவரை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லிப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதுவும் முன்பு நடந்துகொண்டிருந்த சடங்குதானா அல்லது புதிய சடங்கு இப்போது தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.

சவுரவ் கங்குலியின் முதல் ஆட்டத்திலிருந்து நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர். உலகின் சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்களில் ஒருவர். அவர் இன்னும் இரண்டாண்டுகள் இந்தியாவிற்காக விளையாடியிருக்கலாம். திடீரென ஓய்வை அறிவித்தது குறித்து அதிர்ந்தேன். மிகச்சிறந்த வெளியேறுதலாக, அவர் வெளியேறும் டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தது குறித்து சந்தோஷமாக இருந்தது.

கங்குலியைப் போன்ற ஆட்டக்காரர்கள் எப்போதாவதுதான் கிடைப்பார்கள். சச்சின் டெண்டுல்கரின் பிரம்மாண்டத்தில், உள்ளொடுங்கிப் போயின கங்குலியின் சாதனைகள். ஒருநாள் ஆட்டத்தில் 22 சதங்கள் என்பது சாதாரண விஷயமல்ல.

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில், அசாருதீன் மீது தவறுகள் இருந்த நிலையில், தொடர் தோல்வியால் சச்சின் தலைமைப் பொறுப்பை நிராகரித்த நிலையில், கங்குலி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சோர்ந்து போயிருந்த இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தைப் பாய்ச்சியவர் கங்குலி. அதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் சக ஆட்டக்காரர்கள் மீது கோபத்தை, அட்டக்களத்தில் வெளிப்படுத்தியதில்லை. அசாருதீன் ஆட்டக்களத்தில் ஒரு கணவானாகவே நடந்துகொள்வார். அவர் தவறு செய்யும் சகவீரர் மீது ஆட்டக்களத்தில் கோபம் கொண்டது குறைவு. ஆனால் கங்குலி இவற்றையெல்லாம் ஏறக்கட்டினார். ஏதேனும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தவறு செய்யும்போது, அங்கேயே வெடித்தார். ‘தவறை அங்கே கண்டிக்காமல் எங்கே கண்டிப்பது’ என்று செய்தியாளர்களிடம் சீறினார். கங்குலியின் தலைமையின் கீழ் ஜூனியர் ஆட்டக்காரர்கள் நிறைய பேர் விளையாடியதால் இந்தக் கோபமும் எடுபட்டது.

இந்திய அணியின் மிகப்பெரிய சாபம் அணிவீரர்களுக்குள் இருக்கும் ஈகோ. சச்சின் – திராவிட் – கங்குலி காலத்தில் இது மிகப்பெரிய அளவில் குறைந்தது என்றே சொல்லவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில உரசல்கள் இவர்களுக்குள்ளே இருந்தபோதும், பெரும்பான்மை சமயங்களில் இவர்கள் இணைந்தே செயல்பட்டார்கள். முக்கியமாக அசாருதீன் தலைமைப் பொறுப்பிலிருந்து டெண்டுல்கல்கரின் தலைக்கு தலைமைப் பொறுப்பு வந்தபோது ஏற்பட்ட தொடர் தோல்விகளின்போது, கங்குலியும் டிராவிட்டும் டெண்டுல்கருக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதைப் பற்றி இந்தியா டுடே அப்போது ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. அதேபோல் கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்றபோது இந்தக்கூட்டணி தொடர்ந்தது. ஓர் ஆட்டம் என்பது அக்ரெஸிவ்வானது, அதில் தவறில்லை என்கிற நிலையை இந்திய கிரிக்கெட்டில் நிலை நிறுத்தியவர் கங்குலியே. அவர் சட்டையைக் கழற்றி சுற்றிக் காண்பித்ததற்கு (இங்கிலாந்துடனான ஆட்டமா, நினைவில்லை) வரிந்து கட்டிக்கொண்டு அவரைப் போட்டுத் தாக்கின ஊடகங்கள்.

ஒரு செயலை இந்தியர்கள் (உள்ளிட்ட ஆசியாக்காரர்கள்) செய்யும்போதும், அதே செயலை ஆஸ்திரேலியர்கள் அல்லது ஆங்கிலேயர்கள் செய்யும்போதும் உலக ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ளும் நாம் அறிந்ததே. அந்த உலக ஊடகங்களை ஒட்டி இந்திய ஊடகங்கள் வால் பிடிப்பதும் புதியதல்ல. சட்டையைக் கழற்றி சுற்றிய விஷயத்திலும் அதுவே நடந்தது. எதிரணி அப்படி நடந்துகொண்டிருந்தாலும், இந்திய அணியின் தலைமை அப்படி செய்திருக்கக்கூடாது என்கிற உபதேசங்கள் முன்வைக்கப்பட்டன. ஆட்டம் என்பது அக்ரெஸிவானது என்கிற எண்ணமுடைய கங்குலி இவற்றையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. நான் கங்குலியை மிகவும் ரசித்தது இதுபோன்ற தடாலடிகளிலேயே.

கங்குலியின் தலைமைப் பொறுப்பின்போது அவர் யாராலும் அண்டமுடியாத தீவாக மாறினார் என்கிற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தான் விரும்பாத ஓர் ஆட்டக்காரரை அணியில் சேர்த்துவிட்டால், அவரை ஒழித்துக்கட்டுவதற்குக் கங்கணம் கட்டினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பெரும்பான்மை ஊடகங்களில் வந்த இந்த செய்தி உண்மையாக இருக்கலாம். இதற்கான தண்டனையை அவர் கிரெக் சேப்பல் மூலம் அனுபவித்தார். ஃபார்ம் என்பது எல்லா நேரத்திலும் ஒருவருக்கு இருக்கமுடியாது என்பதை மறந்திருந்த கங்குலி, சேப்பல் மூலம் அதை நினைவுபடுத்திக்கொண்டார். டால்மியாவின் ஆதரவில் அதிகமாகச் செயல்பட்ட கங்குலியின் தேவையற்ற செயல்கள் சேப்பலின் அதிரடியால் முடிவுக்கு வந்தன. ஓர் அதிரடி இன்னோர் அதிரடியை அடக்கியது என்றே சொல்லவேண்டும். இந்தச் சறுக்கல் இல்லாமல் இருந்திருந்தால் கங்குலி இன்னும் இரண்டாண்டுகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் விளையாடியிருக்கமுடியும்.

இந்த மோதலுக்கு கங்குலி கொடுத்த விலை அதிகமானது. அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதோடு, அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இது அதிகபட்ச முடிவு. இந்த முடிவு முட்டாள்தனமானது. கங்குலி போன்ற சிறந்த ஆட்டக்காரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அரசியல் தரும் தொல்லைகள் எல்லை மீறியவை. டால்மியா மூலம் அரசியல் செய்த கங்குலி அதே அரசியலுக்குப் பலியானார். லக்ஷ்மண் சொன்னது போல, சீனியர் ஆட்டக்காரர்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஓய்வெடுக்கச் சொல்லி நிர்ப்பந்திக்காமல் இருந்தாலே போதுமானது. எல்லா நேரத்திலும் லக்ஷ்மண் சொன்னதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், கங்குலி, சச்சின், டிராவிட் போன்ற ஆட்டக்காரர்களுக்கு அது பொருந்தவே செய்கிறது.

கங்குலி சதமடிக்கும் தருணங்கள் மிகச் சிறப்பானவை. 45லிருந்து 6 அடித்து 50ஐக் கடக்கவும், 95லிருந்து 6 அடித்து சதம் கடக்கவும் அவருக்கு மிகவும் பிடிக்கும். கண்ணை கண்ணை முழித்துக் கொண்டு, பிட்ச்சில் பாதி ஏறி சிக்ஸ் அடிக்கும் அழகு இன்னும் கண்ணில் நிற்கிறது. ஒரு பந்து மேலே பட்டுவிட்டால் சுருண்டு உடனே விழுந்துவிடுவார் கங்குலி. நாங்கள் எல்லாரும் ‘சரியான சோளக் கொல்லை பொம்மையா இருக்கானே’ என்று சொல்லிச் சிரிப்போம். இனி அந்தக் காலங்கள் திரும்பி வராது. இன்னும் இரண்டு வருடங்கள் இருந்து ஆடியிருக்கவேண்டிய கங்குலியை ஒழித்துக்கட்டியது கிரிக்கெட் அரசியல். அரசியல் என்றாலே அது அரசியலாகத்தான் இருக்கும். கங்குலி வெளியேறும் இப்போதைய வருத்தத்தில் நிழலாடுகின்றன இரண்டு முகங்கள். சச்சின், டிராவிட். இன்னும் என்ன என்ன சோதனைகளோ இருவருக்கும்.

ஒரு டெஸ்ட் தொடர் வெற்றி என்கிற நிம்மதியோடு வெளியேறும் கங்குலியை என்றென்றும் இந்திய கிரிக்கெட்டும் உலக கிரிக்கெட்டும் மறக்காது.

(குறிப்பு: எவ்வித ஆதாரத்தையும் பார்க்காமல் நான் என் மனதில் இருந்த சித்திரங்களை மட்டும் வைத்து எழுதியது. மேலும் ஒருநாள் ஆட்டங்களை மனதில் வைத்தே எழுதியது. தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 🙂 )

Share

ஓ திராவிட்!


“It was a very big disappointment not to complete my double century, especially when I was so close to it”

“Though I was fully aware of it, the declaration came as a surprise to me. What I knew was that we were going to give the Pakistanis an hour to bat before stumps.”

“It was surprising to see Rahul declare the innings as soon as Yuvraj got out. I checked with the umpires and they confirmed the declaration”

“What is the point in discussing the matter after the declaration has been made by the captain?”

–Sachin Tendulkar.

ஓ திராவிட்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் இருக்கும்போது கேப்டன் ராகுல் ட்ராவிட் (கங்கூலி காயத்தால் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. அதனால் அதற்குப் பதிலாக ராகுல் ட்ராவிட் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார்) ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இது சில சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியர்களில் கவாஸ்கரும் ராகுல் ட்ராவிட்டும் இதுவரை நான்கு இரட்டைச் சதங்களை எடுத்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர் இந்த இரட்டைச் சதத்தை எடுத்திருப்பாரானால் அவரும் இவர்களோடு இணைந்திருப்பார். எல்லோருமே சச்சினின் இரட்டைச் சதத்தை எதிர்பார்த்திருந்தார்கள். ஏனென்றால் இந்த டெஸ்ட்டில்தான் வீரேந்திர சேவாக் 300 ரன்கள் எடுத்து (309 ஓட்டங்கள், 375 பந்துகள், 39X4, 6X6) புதிய இந்திய சாதனையை ஏற்படுத்தினார். இதுவரை எந்தவொரு இந்திய ஆட்டக்காரரும் 300 ஓட்டங்களைக் கடந்ததில்லை. ஒரே ஆட்டத்தில், அதுவும் பாகிஸ்தானில் வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக, ஒரு முச்சதமும் ஓர் இரட்டைச் சதமும் எடுக்கப்பட்டிருந்தால் அது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத மைல்கல்லாக இருந்திருக்கும். எல்லோரும் இதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். யுவராஜ் சிங் ஆட்டமிழந்தவுடன் கேப்டன் ராகுல் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டெண்டுல்கரும் தனது அதிருப்தியைப் பின்னர் தெரிவித்தார்.

ஓர் ஆட்டக்காரர் 194 இருக்கும்போது ஆட்டத்தை டிக்ளேர் செய்யுமளவிற்கு இந்திய அணிக்கு நெருக்கடிகள் இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. இதுவே நான்காம் நாள் ஆட்டமாக இருந்து, ஆட்டத்தை டிக்ளேர் செய்வதன்மூலம் பாகிஸ்தானை வெல்ல முடியும் என்கிற நிலைமை இருந்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியும். இரண்டாவது நாளே, அதுவும் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாத நிலையில் (இதைப்பற்றிய காரசாரமான விவாதம் பாகிஸ்தானியர்களிடையே நிலவுகிறது. வேண்டுமென்றே ஆடுதளத்தை பேட்டிங்கிற்குச் சாதகமாக அமைத்துவிட்டதாகவும் அதற்குப்பின் திரைமறைவு இரகசியங்கள் இருக்கிறதென்றும் பலத்த விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன) பாகிஸ்தானை மட்டையடிக்க அழைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பதுதான் என் எண்ணமும். அப்படி அழைக்கப்போவதாயிருந்தால் அது பற்றிக் களத்தில் இருக்கும் ஆட்டக்காரரிடம் தெரிவித்திருக்கவேண்டியது அவசியம். அதுவும் அந்த ஆட்டக்காரர் 200 ஐ நெருங்கிக்கொண்டிருக்கும்போது, அதுவும் அந்த ஆட்டக்காரர் சீனியர் என்கிற போது இது பற்றி அவரிடம் முன்பே சொல்லியிருக்கவேண்டியது அவசியமாகிறது. இதை எப்படி ராகுல் ட்ராவிட் கணிக்கத் தவறினார் என்பது புரியவில்லை. இத்தனைக்கும் ட்ராவிட் பொறுமைக்கும் தீவிர அர்ப்பணிப்பு உணர்வுக்கும் எல்லா ஆட்டக்காரர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதற்கும் பெயர்போனவர். ஏதோ ஒரு அவசரத்தில் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட மோசமான முடிவாகத்தான் இதை என்னால் பார்க்கமுடிகிறது.

சகாரா டிவி இந்த முடிவு ட்ராவிட்டால் மட்டும் எடுக்கப்பட்டதல்ல; (காயத்தினால் ஆடாமலிருக்கும்) கங்கூலியுடன் கலந்தாலோசித்தே எடுக்கப்பட்டது என்று சொல்கிறது. அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு ட்ராவிட்டும் கங்கூலியும் பேசிக்கொண்டிருப்பதை க்ளிப்பிங்க்ஸில் காட்டுகிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அவர்கள் இருவருக்கும் தவிர யாருக்கும் தெரியாது என்பதால் சகாரா என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஊடகங்கள் ஆட்டக்காரர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை ஊதிப் பெரியதாக்கி பரபரப்பு ஏற்படுத்த காத்திருக்கிறார்கள். சகாரா டிவியும் அப்படி முயல்கிறது என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.

தனிப்பட்ட ஸ்கோரை விட அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரே முக்கியம் என்ற பேச்சும் இந்த நேரத்தில் எடுபடுமெனத் தெரியவில்லை. அப்படி ஒரு நிலையில் இந்திய அணி இருக்கவில்லை என்பதை கிரிக்கெட்டின் எந்த நிலை இரசிகரும் உணர்வார். குறைந்தபட்சம் இத்தனை ஓவரில் ஆட்டத்தை டிக்ளேர் செய்ய தீர்மானித்திருக்கிறோம் என்று டெண்டுல்கரிடம் சொல்வது ராகுல் ட்ராவிட்டின் கடமையாகிறது. அப்படிச் சொல்லியபின் அடுத்த சில பந்துகளில் அவர் 200ஐத் தொட முயன்றிருக்கலாம். அதில் வென்றிருக்கலாம்; தோற்றிருக்கலாம். அது வேறு விஷயம். அப்படிச் செய்திருந்தால் ட்ராவிட்டின் முடிவு இத்தனைத்தூரம் விமர்சனத்திற்குள்ளாகியிருக்காது.

டெண்டுல்கர் ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்பதாகவும் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டபோது தான் மிகுந்த ஆச்சரியமும் வருத்தமும் அடைந்ததாகவும் கூறியிருக்கிறார். பொதுவாக கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும் என்று தெரிந்திருந்தாலும் தனக்கு அது பற்றிச் சொல்லப்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

ராகுல் ட்ராவிட் டெண்டுல்கரிடம் சொல்லிவிட்டு டிக்ளேர் செய்திருக்கலாம் என்பதுதான் என் எண்ணமும். பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருவர் முச்சதமும் இன்னொருவர் இரட்டைச்சதமும் ஒரே ஆட்டத்தில் எடுக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்? ஓ ட்ராவிட்!

Share

கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் இந்திய வெற்றி

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றிருக்கிறது.

முதல் இன்னிங்கிஸில் 500க்கும் மேல் எடுத்த அணி தோற்பது 108 ஆண்டுகளுக்கு பின்னர் என்கிறது புள்ளிவிவரம். திராவிட் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மூன்று மாதங்களில் இரண்டு இரட்டைச் சதங்களை அடித்து, தனது திறமையை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் திராவிட்.


வெற்றிக்களிப்பில் ராகுல் திராவிட்

வரலாற்றின் பின்னே சென்று பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எந்தவொரு காரணமும் இல்லாமல் திராவிட்டைத் தூக்கி வெளியில் வைத்தது இந்தியத் தேர்வாளர்கள் குழு. திராவிட்டின் ஆட்டத்தின் மீது அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு, “பந்துகளை வீணாக்குகிறார்” ஊடகங்கள் வழியாகப் பரவியது இந்தக்குற்றச்சாட்டு. திராவிட் என்றாலே பந்துகளை வீணாக்குபவர் என்கிற குற்றச்சாட்டு அவர் மேல் விழுந்தது.

அப்போது அவர் பந்துகளை வீணாக்கத்தான் செய்தார். ஆனால் தவறு அவர் மீதில்லை; இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மீது.

ஐம்பது ஓட்டங்களுக்கு நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகள் பறி கொடுத்த நிலையில் இந்தியா தத்தளித்துக்கொண்டிருக்கும்போது இந்திய அணியின் விக்கெட்டுகளைக் காப்பாற்றவேண்டிய பெரும் பொறுப்பு திராவிட்டுக்கு வந்து சேரும். தத்தளித்துக்கொண்டிருக்கும் ஓர் அணியைக் காப்பாற்றவேண்டிய நபர் அடித்து ஆட முடியாது. கொஞ்சம் பந்துகளைச் சாப்பிட வேண்டித்தானிருக்கும். இதுதான் நேர்ந்தது திராவிட்டுக்கு.

அவர் விக்கெட் காப்பாற்றியதையெல்லாம் மறந்து, பந்துகளை மட்டுமே வீணாக்கியதாகக் குற்றம் சாட்டி அவரை அணியிலிருந்து நீக்கியது இந்தியத் தேர்வாளர்கள் குழு. இத்தனைக்கும் அப்போதைய கேப்டன் அசாருதீன், ஆட்டக்காரர்கள் சச்சின், கங்கூலி உள்ளிட்டோர் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவரது நீக்கத்தைக் கண்டித்து ஹிந்து நாளிதழ் ஒரு கவர்ஸ்டோரி வெளியிட்டது. அவர் எந்தெந்த ஆட்டங்களில் பந்துகளை வீணடித்தார்; அந்த ஆட்டங்களில் திராவிட் மைதானத்திற்குள் வரும்போது இந்திய அணியின் நிலைமை என்னவாக இருந்தது என்ற புள்ளிவிவரங்களை உள்ளிட்ட அந்தக் கட்டுரை தேர்வாளர்களின் நியாயமற்ற நடவடிக்கையை மிக அழகாக எடுத்துக்காட்டியது.

சில மாதங்களுக்குப் பிறகு திராவிட் ‘டெஸ்ட் பந்தயங்களுக்கு மட்டும்’ என்ற “தலைவிதியோடு” அணிக்குள் வந்தார். அவரது ஆட்டம் பலமுறை இந்திய அணியின் தோல்வியைத் தவிர்த்தது. மெல்ல மெல்ல திராவிட் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்தார்.

இடையில் சில மேட்சுகளில் பந்துகளை வீணடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்தது. முதலில் வெறுமனே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிஜமாகச் செய்துவிடுவாரோ என கிரிக்கெட் உலகம் அஞ்சிய போது அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் திராவிட். டெஸ்ட் மேட்சுகளுக்கும் ஒருநாள் ஆட்டங்களுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொண்டார்.

தற்போது இந்தியாவின் மிகப்பொறுப்பான ஆட்டக்காரர்களில் ஒருவர். இந்திய ஆட்டக்காரர்களில் மேட்ச் வின்னர்கள் மூன்று பேர். அதிலொருவர் திராவிட். உலகத் தரம் வாய்ந்த ஆட்டக்காரர்களில் ஒருவர். டெஸ்ட் பந்தயங்களில் அவரது பொறுமை அசாத்தியமானது. கோட்டை விட்டுத் தவறும் பந்துகளை ஓட்டங்களாக்கும் வித்தையை லாவகமாகச் செய்கிறார்.

22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வென்றதில் மிக முக்கியப் பங்கு திராவிட்டுக்கு இருக்கிறது. அவர் பெருமைப்படவேண்டிய ஒரு இன்னிங்ஸ் இது. இதுவே அவரது வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸாகவும் அமையலாம். இதைவிட இன்னுமொரு சிறந்த இன்னிங்க்ஸையும் தரலாம். ஓர் இந்தியனாக, கிரிக்கெட் இரசிகனாக இரண்டாவது சொன்னதை எதிர்பார்க்கிறேன்.


“இந்தக் காட்சைத் தவறவிடாமல் பிடித்து ராகுல் திராவிட்டை அவுட்டாக்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்”

அஜித் பாலசந்திர அகர்க்கர்.

கபில்தேவுக்குப் பிறகு என்னை அதிகம் கவர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அகர்க்கர்தாம். அகர்க்கரைக் கபில்தேவுடன் ஒப்பிட முடியாது என்பது வாஸ்தவம்தான். இந்தியாவிலிருந்து வந்த உலகத்தரம் வாய்ந்த ஒரே பந்துவீச்சாளர் கபில்தேவ் மட்டுமே. ஆனாலும் அகர்க்கர் வசீகரிக்கிறார்.

இனி நான் சொல்லப் போவதெல்லாம் நினைவிலிருந்து மட்டுமே. புள்ளிவிவரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இணையத்தில் சரிபார்த்து எழுத நேரமில்லை. அதுவரை எழுதாமல் இருக்கவும் முடியவில்லை.

முதல் நான்கைந்து மேட்சுகளில் அத்தனைத் தூரம் அசத்தவில்லை என்றாலும் அவரது வேகம், மிதமான பந்துகள், சில இன் ஸ்விங்கர்கள், இந்தியப் பந்து வீச்சாளர்கள் மனோஜ் பிரபாகருக்குப் பிறகு மறந்து போயிருந்த யார்க்கர் என எல்லாவற்றையும் வீசி, கிரிக்கெட் நோக்கர்களின், விமர்சனர்களின் கவனத்தை ஈர்க்கத்தவறவில்லை
அந்த இளைஞர். வந்தது நியூசிலாந்து ஆட்டம். அகர்க்கர் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பார்வையில் பட்டார்.

இந்தியா முதலில் பேட் செய்து ஏறத்தாழ 230 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து ஆடத்தொடங்கிய சிம்பாப்வேயின் ஆரம்பம் இந்த ஓட்டங்களை எளிதாக எட்டிவிடும் என்கிற எண்ணத்தைத்தான் இந்தியர்களுக்குக் கொடுத்தது. ஆனால் அகர்க்கரின் இரண்டாவது சுற்று அந்த எண்ணத்தை முற்றிலுமாகத் தகர்த்தது. நான்கு
விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகனானார் அகர்க்கர். அசாருதீன் அகர்க்கரை மிக அதிகமாக நம்பத்தொடங்கியதும் அப்போதுதான். அந்த ஆட்டத்தில் வர்ணணையாளர் டோனி க்ரெய்க் Its agarkkar, agarkkar, agarkkar என்று புகழ்ந்தார். அது மிகச் சில புதிய ஆட்டக்காரர்கள் மட்டுமே பெற்ற கிரெடிட்.

நினைவிலிருக்கும் அகர்க்கரின் இன்னொரு ஆட்டம் இலங்கையுடனானது. முதலில் பேட் செய்த இந்தியாவின் துவக்கம் மிக மோசமானதாக இருந்தது. அடுத்தடுத்து முன்னணி விக்கெட்டுகள் சரிய தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியாவைத் தோளில் சுமக்க ஆரம்பித்தார்கள் ராபின்சிங்கும், ஜடேஜாவும். இந்த மாதிரி விஷயங்கள் அவர்கள் இருவருக்கும் புதியதல்ல. ஏற்கனவே பல ஆட்டங்களைத் தங்கள்
தோளில் தூக்கி சுமந்திருக்கிறார்கள் அவர்கள் இருவரும். இந்தமுறையும் அவர்கள் அப்படிச் செய்ய நினைத்துத்தான் ஆடினார்கள். ஆக்ரோஷமான வாசின் பந்துவீச்சை அவர்கள் சமாளித்து, எடுக்கமுடிந்த ஓட்டங்கள் 173 மட்டுமே. அப்போது இலங்கை சிம்ம சொப்பனமாக விளங்கிய நேரம். டிசில்வாவும் ஜெயசூர்யாவும் கலுவிதரனேயும் ரணதுங்காவும் – நான்குபேரும் ஒரே மேட்சில் ·பார்மில் இருபபர்கள் – ·பார்மில் இருந்த நேரம். இந்த இலக்கு ஓர் இலக்கே அல்ல என்றுதான் நாங்கள் பேசிக்கொண்டோம். ஆனால் இந்தியப் பந்து வீச்சு இலங்கை ஆட்டக்காரர்களைத் தகர்த்தது. முதல் ஆறு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. முதல் ஓவரில் அகர்க்கர், இரண்டாவது ஓவரில் ஸ்ரீநாட் என மாறி மாறி விக்கெட்டுகள் எடுத்து முதல் ஆறு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஒரு வழியாகத் தாக்குப்பிடித்து ஆடிய இலங்கை 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்த அகர்க்கர் ஆட்ட நாயகனானார். அன்றைக்கு அவரது பந்துவீச்சிலிருந்த ஆக்ரோஷம் இன்னும் கண்ணில் இருக்கிறது. அரவிந்த் டி சில்வா ஒரு பந்தை மறிக்கும்போது, பேட்டின் விளிம்பில் பட்ட பந்து கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது. அகர்க்கர் உள்ளிட்ட இந்தியர்கள் அரவிந்த டி சில்வாவின்
அவுட்டென நினைத்து சந்தோஷப்பட, அரவிந்த டி சில்வா அம்பயரின் அறிவிப்பிற்காகக் காத்திந்தார். அம்பயர் அவுட் தரவில்லை. மூன்றாவது அம்பயரிடம் கேட்க மறுத்துவிட்டார். அகர்க்கார் சோர்ந்துபோனார். ரீப்ளேவில் டி சில்வா அவுட்டானது தெளிவாகத் தெரிந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு அகர்க்கருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. (அன்றைக்கு ஸ்ரீநாத்தும் மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்தார்)

இன்னொரு ஆட்டம் நியூசிலாந்துடனானது. இந்த முறை அகர்க்கர் “அதிரடியைக்” காட்டினார். ஒருகாலத்தில் தேவையான ஓட்ட விகிதம் (Req. Run Rate) எட்டை எட்டி, இந்தியா ஜெயித்தது ரொம்பக் குறைவு. போராடித்தோற்கும் ஓரணியாகத்தான் இந்தியா இருந்தது. ராபின் சிங்கின் வரவிற்குப்பின்னர்தான் இந்தியா போராடி ஜெயிக்க ஆரம்பித்திருந்தது. அன்றைக்கும் அப்படி ஒரு நிலைமைதான். ஏறத்தாழ பத்து பந்துகளில் 13 ரன்களை எடுக்க வேண்டிய நிலைமை. எல்லோரும் இராபின்சிங்கை நம்பியிருக்க, அவரோ பந்து மட்டையில் சிக்காது போராடிக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பார்க்காத ஒரு விதமாக, மூன்று இரண்டுகள் ஒரு ஆறு எடுத்து இரண்டு பந்துகள் மீத மிருக்கும் நிலையில் ஆட்டத்தை முடித்துவைத்தார் அகர்க்கர். “அட.. பேட்டிங்க் கூட வருமா” என்று சொல்ல வைத்தார். பின்னொரு சமயத்தில் 21 பந்துகளில் 70 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்தார். இன்றைக்கும் குறைந்த பந்துகளில் ஐம்பது எடுத்த இந்தியச்சாதனை அகர்க்கர் செய்ததுதான். அந்த ஆட்டத்தில் முதல் ஆறு பந்துகளில் அவர் எடுத்த ஓட்டங்கள் ஒன்றோ இரண்டோ. (இது பற்றிய சரியான புள்ளிவிவரத்தை பத்ரி தருவாரா?) இல்லையென்றால் பந்துவீச்சில் செய்த சாதனையைப் போலவே பேட்டிங்கிலும் ஒரு சாதனை நிகழ்த்தியிருப்பார் அகர்க்கர். பந்துவீச்சில் அவர் செய்த சாதனை, குறைந்த ஆட்டங்களில் (24 ஆட்டங்கள்) முதல் ஐம்பது விக்கெட்டுகளை எடுத்தது. இது ஒரு உலகச்சாதனை.


“எப்போதும் இதே போல் எறிவாரா அகர்க்கர்?”

அகர்க்கரின் பலவீனம் எனப் பார்த்தால் சில சமயம் லைன் கிடைக்காமல் திண்டாடுவது. ஒரு நாலோ ஆறோ போய்விட்டால் அடுத்த பந்தில் லைனுக்குள் வருவது ஒரு சிறந்த பந்துவீச்சாளரின் தேவை. இந்தப் பண்பு அகர்க்கரிடம் இல்லை. தொடர்ந்து நான்கோ, ஆறோ கொடுத்த வண்ணம் இருப்பார். ஸ்லோ யார்க்கரின் போது கொஞ்சம் கவனம் சிதறினால் ·புல்டாஸாகிவிடும். அந்தப் பந்து எல்லைக்கோட்டிற்குப் போவது உறுதி. ஸ்ரீநாத் அடிக்கடிச் செய்யும் தவறை அகர்க்கரும் செய்கிறார். அகர்க்கரின் பலம் என்று பார்த்தால் எந்தவொரு சூழ்நிலையிலும் டென்சன் ஆகாதது.

கொஞ்சம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு சீர் செய்ய முடிந்தால், இந்தியாவிலிருந்து இன்னொரு உலகத்தரம் வாய்த்த ஆல்ரவுண்டர் வருவார், கபிலுக்குப் பிறகு.

Share