Archive for ஆவணப் படம்

கேளாய் த்ரௌபதாய்

கேளாய் த்ரௌபதாய் என்ற ஆவணப் படம் – சஷிகாந்த் அனந்தசாரி இயக்கியது. இன்று எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடைபெறுவதாக அறிந்தேன். அதன் போஸ்டர் கவனத்தைக் கவரவும் இன்று செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அதன் ட்ரைலரை இணையத்தில் பார்த்தபோது அது கூடுதல் ஆர்வம் தருவதாக இருந்தது. மதியம் இரண்டு மணிக்கு நானும் மருதனும் சரியாக மியூசியம் தியேட்டரில் இருந்தோம்.

அப்போதுதான் அங்கே ப்ரொஜக்டரை அமைத்துக் கொண்டிருந்தார்கள். இயக்குநர் கொஞ்சம் டென்ஷனாக இருப்பதாகத் தெரிந்தது. இயக்குநர் கொண்டு வந்திருந்த பென் ட்ரைவில் எதோ பிரச்சினையோ என்னவோ. அவர் வைத்திருந்த கேசட்டும் ஓடவில்லை என்று நினைக்கிறேன். எப்படியோ லேப் டாப்பில் இருந்த வீடியோவை ப்ரொஜக்டரில் இணைத்து, கொஞ்சம் போராடி, ஒருவழியாக படத்தைச் சரியாகத் திரையில் தெரிய வைத்தார்கள்.

அடுத்து ஆடியோ! என்ன செய்தாலும் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. மொபைலில் இருக்கும் ‘உண்மை சொன்னால் நேசிப்பாயா’ பாடலை ஸ்பீக்கரில் இணைத்தால் மிகத் துல்லியமாகப் பாடுகிறது. ஆனால் டாக்குமெண்ட்ரியின் ஆடியோவை சரியாக அது ஒலிபரப்பவில்லை. லேப்டாப்பில் எதோ பிரச்சினை என நினைக்கிறேன். இப்படியே முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. இயக்குநர் நொந்துபோய்விட்டார். என்னங்க இது ஒழுங்கா செக் பண்ணி கொண்டு வரமாட்டீங்களா என்று மியூசியத்தின் பொறுப்பாளர்களை அவருக்கே கேட்காத குரலில் கேட்டுக்கொண்டிருந்தார். எதோ ஒரு கேபிள் இல்லாததுதான் பிரச்சினை என்று ஒரு பொறுப்பாளர் கண்டுபிடித்தார்.

அதற்குள் இந்த வெளியீட்டைப் பார்க்க வந்திருந்த ஒருவர் சத்தம் போட ஆரம்பித்தார். நாட்டுப்புறக் கலைக்கு இவ்வளவுதான் மரியாதையா என்று கேட்டார். இயக்குநர், இது எதிர்பாராத பிரச்சினை என்று விளக்கினாலும், அதெல்லாம் மத்த எல்லாமே ஒழுங்கா நடக்குது, மலையாளம் ஹிந்தி பெங்காலி எல்லாம் பிரச்சினை இல்லை, எங்களுக்கு மட்டும் பிரச்சினையா என்றார். தான் (நாட்டுப்புறக் கலை நிகழ்த்தும்) அந்த கம்யூனிட்டியில் இருந்து வருவதாகவும் இது இந்திய அரசின் பிரச்சினை என்றும் சொன்னார். பொறுப்பற்ற தனம் என்றெல்லாம் சொன்னார். மீண்டும் எல்லாவற்றுக்கும் இந்திய அரசே காரணம் என்றார். ஆடியோவுடன் போராடிக்கொண்டிருந்த இளைஞர் பொறுமையாக, இதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை, இது ஒரு டெக்னிகல் பிரச்சினை என்றார். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டார் அந்தக் கோபக்காரப் போராளி.

அத்துடன் நிறுத்தி இருக்கலாம். உண்மையில் அங்கே இருந்த அனைவருக்குமே இந்த ஆடியோ பிரச்சினை எரிச்சல் தருவாதகவே இருந்தது. ஒரு கூத்து தொடர்பான ஆவணப் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தையே சிதைத்துவிட்டது. மருதன் பேயறைந்தது போலவே உட்கார்ந்து இருந்தார். அந்நேரத்தில் அந்தப் போராளி, “சரி இதெல்லாம் போதும். யாரு டைரக்டர்? அவரை பேசச் சொல்லுங்க கேப்போம். லைட்ஸ் ஆன், மைக் ஆன்” என்று சொல்லவும், இயக்குநர் தானே அந்த டைரக்டர் என்று சொன்னார். உடனே போராளி, “ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நம்ம கலாசாரம் எப்படி இருந்தது தெரியுமா தெரியாதா? நீங்க எடுத்தா எப்படி இருக்கும்? அதுதான் இதுலயே தெரியுதே… அப்ப நாம ஆடி பாடி பறவித் திரிந்தோம். அதெல்லாம் இருக்கா?” என்றெல்லாம் சொல்லத் துவங்கினார். உடனே நான், “என்னங்க இது, அவர் பேச்சைக் கேக்காமலயே இப்படி பேசுறது சரியா?” என்று குரல் கொடுத்தேன். அதுதான் இவங்க பிரிபரேஷன்லயே தெரியுதே என்று சொல்லிவிட்டார்.

ஒருவழியாக லேப்டாப்பை மாற்றி திரையிடலைத் துவங்கினார்கள். இயக்குநர் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தார். ஆனாலும் ஆடியோ தெளிவாக இல்லை. கூத்துக் கலைஞர்கள் பாடும்போது பின்னால் ரயில் ஓடும் சத்தம், ஃபேன் ஓடும் சத்தம், ஏரோப்ளேன் ஓடும் சத்தம் என என்னவெல்லாமோ கேட்டது. இந்தியப் பாரம்பரியத்தைக் காட்டி மருதனை நைஸாக ஹிந்துத்துவம் பக்கம் லவட்டிக்கொண்டு வரலாம் என்று பார்த்தால், ஆடியோ தந்த எரிச்சல் நான் மருதனுடன் கம்யூனிஸம் பக்கம் போய்விடுவேன் என்ற அச்சம் முளைத்த நேரத்தில் மருதனும் நானும் வெளியேறினோம்.

பாவம் இயக்குநர். இந்த அநியாயத்தை மியூசியத்துக்காரர்கள் செய்திருக்கக்கூடாது. இது போன்ற திரையிடலுக்கு அதன் ஆடியோ ரொம்ப முக்கியம். இணையத்தில் ஹெட்ஃபோனில் கேட்டபோது கூத்துக் கலைஞர்களின் குரலில் ஈர்க்கப்பட்டே நான் இத்திரையிடலுக்குச் சென்றேன். அவசியமானதே சரியாக இல்லை என்றால் அதைத் தொடர்ந்து பார்த்து என்ன செய்வது என்று எண்ணித்தான் பார்க்காமல் வந்தேன்.

ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து போராடி விளம்பரம் செய்து எல்லாரும் வந்து உட்கார்ந்திருக்கும்போது இது போன்ற பிரச்சினைகள் தரும் மன அழுத்தம் சொல்லமுடியாதது. எனக்கு இதில் சில அனுபவங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நினைவுக்கு வந்தன. ஆனாலும் அங்கே உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ஒலி இரைச்சலாக இருந்ததால் வெளியேறிவிட்டேன். மீண்டும் திரையிட்டால் பார்க்கவேண்டும்.

Share

பசுவதை பற்றிய ஆவணப்படம்

பசுவதை தடையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். ஆலயம் தொழுவோர் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர்கள் பத்ரி (பத்ரி சேஷாத்ரி அல்ல) மற்றும் ராதா ராஜன்.

ஆலயம் தொழுவோர் சங்கத்தின் சார்பாக முதலில் பலர் பேசினார்கள். ஆலயத்தின் பல்வேறு சொத்துகள் இன்று அரசால் எப்படி கபளீகரம் செய்யப்படுகின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள். ஹிந்து ஆலயங்களை அரசிடமிருந்து மீட்டு அவற்றை ஹிந்து அமைப்புகளிடம் கொடுப்பதே ஒரே வழி என்றெல்லாம் சொன்னார்கள். ஹிந்து ஆலயங்களில் நடைபெறும் எல்லாமே தர்மத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் அதனை சரியான முறையில் செய்ய ஹிந்து அமைப்புகளால் மட்டுமே முடியும் என்றார்கள். அரசு செய்யும் தவறுகளைத் திருத்துவதைவிட ஹிந்து அமைப்புகளிடம் ஹிந்து ஆலயங்கள் வருவதே முக்கியமானது என்பதே இச்சங்கத்தின் நோக்கம் என்பது புரிந்தது. இதில் தவறு காண இடமில்லை. ஏனென்றால் எல்லா அரசுகளுமே ஆலயங்களின் சொத்துக்களைத் தங்கள் பினாமி சொத்துகளாகத்தான் பாவிக்கின்றன. ஆனால் ஹிந்து அமைப்புகள் வசம் வரும் ஆலயங்களில் பராமரிக்கப்படும் முறைகள் எவ்வகையிலும் சாதி ஏற்றத்தாழ்வு சாராததாக இருக்கும் உறுதியை ஹிந்து அமைப்புகள் வழங்கவேண்டும். அரசு தரப்பில் நடக்கும் குறைகளை எதிர்கொள்ளவாவது முடியும். தனிப்பட்ட நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளின் கைகளில் வரும் ஆலயங்களில் நடக்கும் அத்துமீறல்களை எதிர்கொள்வது நிச்சயம் சவாலான ஒன்றே.

பின்னர் பசுவதை பற்றிய, கேரளாவுக்கு இறைச்சிக்காகக் கடத்தப்படும் மாடுகளைப் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. பசு என்றாலே அது எருமை எல்லாவற்றையும் சேர்த்தே குறிக்கும் என்று சொல்லப்பட்டது. இதிலிருந்தே எனது குழப்பம் தொடங்கிவிட்டது. பசுவதை பற்றிய ஒரு தெளிவின்மை எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு ஆன்மிக ஹிந்துவாக என்னால் நிச்சயம் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓர் சக ஹிந்துவாக, மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது. எனவே இதுகுறித்த குழப்பம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த ஆவணப்படம் அந்தக் குழப்பத்தைப் பன்மடங்கு கூட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

பசுவதைத் தடை என்பதை ஹிந்து அமைப்புகள் இன்னும் தெளிவாக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒட்டுமொத்த பசுக்கொலை தடை என்று தொடங்கினால் அது வெற்றி பெறும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த பசுவதைத் தடை என்பது, பல்வேறு சாதிகளின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக ஆகிவிடும் என்பதால் இதனை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட, மாட்டிறைச்சியை உண்ணும் உணவுப் பழக்கம் உடைய சாதிகளின் பங்கேற்பில்லாமல் இப்பசுவதை எதிர்ப்பை மேலே கொண்டு போகவே முடியாது. எத்தனையோ தலித்துகள் இன்றும் பசுவதையை ஏற்பதில்லை. உண்மையில் பசுவதை எதிர்ப்பு அவர்கள் மூலம் அவர்களில் இருந்தே தொடங்கவேண்டும். அம்பேத்கர், தலித்துகள் இறந்த பசுக்களின் தோலை உரிப்பதிலிருந்தும், அவற்றின் இறைச்சியை உண்பதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என நண்பர் ஒருவர் சொன்னார். இங்கிருந்தே நாம் தொடங்கவேண்டும். பசுவதை (அதாவது பசுவைக் கொல்லுதல்) என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதை அம்பேத்கர் ஏற்காததன் சூட்சுமம், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் பற்றிய அவரது பார்வையில் உள்ளது. இதே பார்வையே நேருவுக்கும் இருந்திருக்கவேண்டும்.

ஆவணப்படத்தைப் பற்றிய ராதா ராஜன் நேரு மீது குற்றம் சாட்டும் தொனியில்தான் பேசினார். அவரது குற்றம் சாட்டுதல் அவரது பார்வையிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் ஒரு பெரிய இயக்க முன்னெடுப்பு ஒருவரது அல்லது சிலரது தனிப்பட்ட பார்வையில் ஏற்படும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு நடக்கமுடியாது என்பதே உண்மை. எனவேதான் காந்தி பசுவதைத் தடை என்பது தனிப்பட்ட மனிதரின் மனங்களில் நிகழும் மாற்றமாக இருக்கவேண்டும் என்றார் போல. சட்டத்தின் மூலமாக இதனைச் செய்யமுடியாது. செய்தால் அது ஹிந்து மதத்தில் சாதி ரீதியான பிளவை இன்னும் ஆழமாக்கும். 

அது மட்டுமல்ல. நேரம் பார்த்துக் காத்திருக்கும் கிறித்துவ மதம் பரப்பும் குழுக்களுக்கு பந்தி விரிப்பது போல் ஆகிவிடும். நேரு அரசின் போது பசுவதைத் தடைச் சட்டம் வருவதை அரசில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் வரவேற்றார்கள். ஆனால் நேரு பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக ஒரு குழுவை நியமித்து அதன் கருத்துகளைக் கேட்டார். அக்கருத்துகளையும் செயல்படுத்தவில்லை. இந்திராவின் ஆட்சிகாலத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் குறித்து ஒரு குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கோல்வல்கரும் இருந்தார். இது பற்றிய மேலதிகத் தகவல்களைப் படிக்கவேண்டும். இந்த ஆவணப்படத்தின்படி, இக்குழுவின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. வாஜ்பாய் அரசிலும் இன்னொரு குழுவிடம் கருத்துக் கேட்கப்பட்டதாம். அக்குழுவின் கருத்துகளும் வெளியிடப்படவில்லை போல. வாஜ்பாயும் நேரு போல் அம்பேத்கர் போல் சிந்தித்திருக்கவேண்டும். 

பசுவதைத் தடைச் சட்டம் என்பது, உயிர்க்கொல்லாமை என்பதை ஒட்டி சிந்திக்கக்கூடிய ஆளவுக்கு மேம்போக்கானதல்ல. நிச்சயம் ஆழமானது. இந்தியாவில் சிறிய சிறிய குழுக்களாக இருந்தாலும் பல்வேறு நுண்மைகளுடன் வேர்கொண்டிருக்கும் பல்வேறு சாதிகளின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஒட்டியது. அதைக் கணக்கில் கொள்ளாமல் நாம் பேசமுடியாது. அந்த சாதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக பசுவதைத் தடையை மேலே கொண்டு போகவும் முடியாது. இந்த ஆவணப்படம் வெளியீட்டின்போதே இச்சாதிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் பசுவதை தடை பற்றிய மன மாற்றத்தை நோக்கி நாம் முன்னேற முடியும். பசுவதை எக்காரணம் கொண்டும் ஏற்காத என்னைப் போன்றவர்கள்கூட, ஹிந்து தர்மத்துக்குள் இருக்கும் பல சாதிகளின் கண்ணோட்டங்களைப் பார்க்க யோசிக்கும்போது, அந்த அந்த சாதிகளின், அதுவும் பசுக்கொலை ஒரு பெரிய தவறல்ல என்று நினைக்கும் சாதிகளின் ஆதரவைப் பெறுவது எத்தனை சிக்கலானது என்று புரிந்துகொள்ளலாம். இவர்களை நோக்கியே நாம் பசுக்கொலையைப் பேசவேண்டும்.

முஸ்லிமகள் சில இடங்களில் பசுக்கொலையை ஹிந்துக்களுக்கு எதிரான சிம்பலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பதிலுக்கு பன்றி இறைச்சி நல்லது என்பதுபோன்ற ஹிந்துக்குரலையும் கேட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் விட, பசுவதை என்பது ஹிந்துக்களுக்குள்ளான பெரிய பிரச்சினையே அன்றி ஹிந்து முஸ்லிம் பிரச்சினை அல்ல என்று ராதா ராஜன் சொன்னார். இது சரியானதே. எப்போது அது ஹிந்துக்களின் தோல்வியாகிறதோ, அப்போது நாம் அனைத்து ஹிந்துக்களிடமும் அதாவது அனைத்து சாதிகளிடமும் இருந்து நம் பேச்சைத் தொடங்கவேண்டும். அதற்கு முதலில் நாம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிப் பேசவேண்டும். இல்லையென்றால், ‘எங்களைக் காப்பாத்தவே நாதியில்லை. இதில் மாடுகளைக் காப்பாத்துறது அதைவிட முக்கியமா போச்சா?’ என்ற குமுறலுக்கு பதில் இல்லாமல் ஓடி ஒளியவேண்டியிருக்கும்.

ஆவணப் படம் தொடர்பாகச் சொல்லவேண்டுமானால், இந்த ஆவணப்படம் மனதை உலுக்கக்கூடியதாக, உயிரை அறுக்கக்கூடியதாக இல்லை. சாதாரணமாக நாம் பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்ட, வண்டிகளில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லப்படும் மாடுகளையே காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய அரங்கத்தில் பலர் இதனைப் பற்றிப் பேசி, அதற்குப் பிறகு பார்க்கும்போதுகூட ஒரு மெல்லிய பாவம் மட்டுமே தோன்றுகிறது. நாம் மனமும் மூளையும் மழுங்கடிக்கப்பட்டுவிட்ட என்னைப் போன்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியானால் அதை உடைக்கிற உளியின் சக்தியும் அதற்கு இணையான, அதைவிட அதிகமான வலு கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வலு இந்த ஆவணப்படத்தில் இல்லை. ப்ரீச்சிங் டூ தி கன்வர்டட் வகைக்கு மட்டுமே சில உச் உச் த்ஸொ த்ஸொ வரும். மற்றவர்கள் இதனை எளிதாகப் பத்தோடு பதினொன்றாகக் கடப்பார்கள். இப்படிச் சொல்வதால், இந்த ஆவணப் படத்தின் பின்னாலுள்ள உழைப்பை, தியாகத்தை நான் கண்டுகொள்ளவில்லை என்பது அர்த்தமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் என் கோடி வணக்கங்கள். ஆனால் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று மட்டுமே சொல்லவருகிறேன். 

மற்ற சாதிகளின் கருத்துக்களோடு, இது மக்களுக்கான இயக்கம் என்று சொல்ல வைக்கிற வகையிலான ஆவணப்படமே பசுவதைத் தடை குறித்த முக்கியமான ஆவணப்படமாகத் திகழமுடியும். அதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புவோம். ஆவணப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

Share

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – The Human Bomb CD

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – The Human Bomb CD

மே 21, 1991ல் ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுகிறார். அதன் மறுநாள், இந்த வழக்கு, தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. சிறப்புப் புலனாய்வுக்குழு – சிபிஐ இந்த வழக்கை எடுத்துக்கொண்டதில் இருந்து, விசாரணை முடியும் வரை உள்ள முக்கியமான நிகழ்ச்சிகளை, ஆதாரங்களை மிகச் சுருக்கமாக ‘Human Bomb’ சிடியில் பார்த்தேன். சிறப்புப் புலனாய்வுக்குழுவின் தலைவர் ரஹோத்தமனின் தயாரிப்பில் வந்திருக்கும் இந்த குறுவட்டு, உலகத்தில் மிகவும் சிக்கலான வழக்கு இதுவே எனவும், மிக விரைவாக முடிக்கப்பட்ட வழக்கும் இதுவே என்றும், எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி குற்றவாளிகளை இனம்கண்ட வழக்கும் இதுவே என்றும், விடுதலைப் புலிகளே – விடுதலைப் புலிகள் மட்டுமே ராஜிவ் காந்தியின் கொலைக்குக் காரணம் என்றும் சொல்கிறது.

இந்த ஆவணப் படத்தின் தயாரிப்புத் தரத்தை அதிகம் பாராட்ட முடியாது. அதிலும் இரண்டு நாள்களுக்கு முன் Death of a President பார்த்துவிட்டு, இதனைப் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்துக்கும், நிஜ, அதிலும் இந்திய ஆவணப்படத்துக்குமான வேறுபாடு முகத்தில் அறைந்தது. என்றாலும், Death of a Presidentஐ ஒரு திரைப்படம் போலவே காஃபி சாப்பிட்டுக்கொண்டும் சமோசா சாப்பிட்டுக்கொண்டும் பார்க்க முடிந்தது. இந்தத் தரம் குறைந்த இந்திய ஆவணப் படத்தை அப்படிப் பார்க்க இயலவில்லை.

எந்த சூழ்நிலையில் ராஜிவ் காந்தி பிரதமாரானார் என்பது பற்றியும், ஏன் விடுதலைப் புலிகள் அவரைக் கொல்ல முடிவெடுத்தனர் என்பது பற்றியும் மிக மேலோட்டமான விவரணைக்குப் பின்னர், ராஜிவ் காந்தியின் கொலையைப் பற்றிய ஆராய்ச்சியின் போது சிக்கிய தகவல்கள், ஆதாரங்கள் என்ற ஆதார விஷயத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்தக் குறுவட்டு.

1987ல் பன்னிரண்டு கறும்புலிகள் (சயனைடு தின்று தற்கொலை செய்துகொள்ளும் புலிகள்) இறந்த சம்பவத்திலிருந்து, அவர்களின் இறுதி ஊர்வலம் வரை எல்லாவற்றையும் இந்த குறுவட்டில் பார்க்கமுடிகிறது. கறும்புலிகள் ஏன் சயனைடு தின்று இறக்கவேண்டும் என்று சொல்லும் பிரபாகரனின் பேட்டியும், (பிபிசிக்குக் கொடுத்தது என நினைக்கிறேன்), இரண்டு கறும்புலிகள் தாங்கள் எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி புனித போருக்காகத் தாங்களாகவே இணைந்ததாகச் சொல்லும் காட்சிகளும் இதில் உள்ளன.

கொலை செய்ய முக்கியமான நபராக இருந்து உதவிய சிவராசன், திலீபனின் இரண்டாவது நினைவுதினத்தில் பேசிய பேச்சின் வீடியோ வடிவம் இந்த குறுவட்டில் உள்ளது. குண்டு வெடிக்கச் செய்து, தானும் இறந்துபோன தனு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பங்குகொண்டு, பெற்ற பயிற்சிகளின் காட்சிகள் இந்த வட்டில் உள்ளன.

அத்திரை, மற்ற பெண் விடுதலைப் புலிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளது.

வேதாரண்யத்தில் அப்போது புலிகள் எப்படி மறைவிடத்தில் எல்லாவற்றையும் பதுக்கி வைத்தார்கள் என்பது பற்றிய காட்சிகளும், அதைத் தொடர்ந்தே எப்படி தமிழ்நாட்டை புலிகள் தங்கள் களமாகப் பயன்படுத்தினார்கள் என்று காவல்துறை உணர்ந்துகொண்ட செய்திகளும் உள்ளன.

ஹரி பாபு எடுத்த புகைப்படக் கருவி சிக்கியதுதான் வழக்கின் மிக முக்கியத் திருப்பம் என்று சொல்கிறார் ரஹோத்தமன். அதேபோல், முருகனும் நளினியும் கைது செய்யப்பட்டது இன்னொரு முக்கியத் திருப்பம் என்கிறார். புகைப்படக் கருவி தொடக்கத்தில் சிக்கியபோது, அதை அத்தனை முக்கியமான ஆதாரமாக கருத வேண்டிய நிலையில் காவல்துறை இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் அந்த புகைப்படக் கருவியின் வழியாக சிக்கிய படங்களே இன்றுவரை ராஜிவ் காந்தி வழக்கின் முக்கியத் தடயங்களாக நிற்கின்றன.

ராஜிவ் காந்தியைக் கொல்லும் முன்பாக, ஓர் ஒத்திகைக்காக, சென்னையில் விபி சிங்கின் ஒரு கூட்டத்தில் சிவராசன் பங்கேற்றதின் படக் காட்சியையும் இதில் பார்த்தேன்.

ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு அதன் வேர் வரை சென்று, எல்லா ஆதாரங்களையும் திரட்டிய காவல்துறையின் பணி அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். இன்று ஒரு வரியில் இதனைச் சொல்லமுடிந்தாலும், இதைச் செய்து முடிப்பதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொண்டிருக்கவேண்டிய சவால்கள், உயர் இடக் குறுக்கீடுகள், பத்திரிகைகளின் கேள்விகள் எல்லாம் எதிர்கொள்ள சாதாரணமானவையாக இருந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

தனுவும் சுபாவும், அகிலாவும் விடுதலைப் புலித் தலைவர்களுள் ஒருவரான பொட்டு அம்மானுக்கு எழுதிய கடிதங்களின் நகல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் அவர்கள் இக்காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்ற ரீதியிலும், இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் சிங்கின் (விபி சிங்காக இருக்கவேண்டும்) அருகில் சென்றோம் என்கிற ரீதியிலும் எழுதியிருக்கிறார்கள். பாக்கியநாதன், பேபி சுப்பிரமணியத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றும், கொலைக்கு முன்பான கடிதங்களுள் முக்கியமான ஒன்று. திருச்சி சாந்தன் செப்டெம்பர் 1991ல் பிராபகரனுக்கு எழுதிய கடிதத்தில், சாந்தன் (சின்ன சாந்தனாக இருக்கலாம் என நினைக்கிறேன்) பிடிபட்டது பெரும் ஆபத்தாய் முடிந்துவிட்டது என்றும், சிபிஐ-யின் சித்திரவதைகள் வர்ணிக்க முடியாதவை என்றும், விசாரணைகளில் சிபிஐ தம்மைப் பற்றிய செய்திகளை முழுமையாகவே அறிந்துவிட்டனர் என்றும் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதமும் இக்குறுவட்டில் உள்ளது.

கோடியக்கரையில் 9 பேர் அடங்கிய குழு – இவர்களே ராஜிவ் காந்தி கொலைக்கு எல்லா வகையிலும் பங்காற்றியவர்கள் – வந்திறங்கிய நாள் முதல் அவர்களின் எல்லா செயல்படுகளையும் கிட்டத்தட்ட இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஆராய்ந்திருக்கின்றது.

மே 21, 1991ல் ராஜிவ் காந்தி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து, அவர் கொடுத்த பேட்டிகள், வழியில் அவர் எதிர்கொண்ட பூமாலைகள், பூந்தமல்லி கூட்டம் என எல்லாவற்றையும் பார்த்தேன். ராஜிவ் காந்திக்கு பூமாலையும் செண்டும் கொடுக்க மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு குரல் மைக்கில் ஒலிக்கிறது. மற்றவர்களை மேடைக்கு இடது பக்கம் வரிசையில் நிற்கச் சொல்கிறது அக்குரல். அடுத்த சில நிமிடங்களில் ராஜிவ் காந்தி தனது இறுதிக் கணத்தின் புகைப்படமாகிறார்.

இத்தனை சவால்களை எதிர்கொண்டு இத்தனை விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கும் காவல்துறை, இந்த சாவல்கள், கடின செயல்பாடுகளைக் கணக்கில் கொள்ளும்போது ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடக்கூடிய போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால் ஒரு இந்தியத் தலைகுனிவைத் தடுத்திருக்கலாம் என்னும் ஆற்றாமையைத் தவிர்க்கவே முடியவில்லை.

இந்தக் குறுவட்டில் ஒரு பேட்டியில் பிரபாகரன், ‘ராஜிவ் காந்தி கொலைக்கு நீங்கள்தான் பொறுப்பாளியா’ என்னும் கேள்விக்கு இப்படிச் சொல்கிறார்.

“நாங்கள் ஆரம்பத்திலேயே எங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறோம். எங்களைப் பொருத்த வரைக்கும் இந்தக் கொலை எங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு அபாண்டமான குற்றச்சாட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.”

The Human Bomb,
Script, Compiled & Produced by: K. Raghothaman
Supdt. Of Police – CBI (Retd),
Consultant and Investigator,
214, 42nd Street, 8th Sector,
K.K. Nagar, Chennai – 600 078.
Email: krmmcoin2@gmail.com
விலை: 199 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/Human-Bomb-DVD.html

Share

Death of a President – பரிபூரண சுதந்திரத்தின் உச்சம்

சோனியா காந்தி ஜூலை 2009ல் கொலை செய்யப்பட்டுவிட்டார். யார் எதற்காகக் கொன்றார்கள் என ஆராய்கிறது சிபிஐ. கொலை செய்தவர்கள் யாராக இருக்கும் என்று யோசிக்கும்போது, இலங்கைத் தமிழர்களின் பட்டியலை முதலில் பார்க்கத் தொடங்குகிறது சிபிஐ.

இப்படி ஒரு திரைப்படத்தை இந்தியாவில் யோசிக்கவாவது முடியுமா எனத் தெரியவில்லை.

ஓர் அதிபரின் மரணம் என்னும் ஆங்கிலத் திரைப்படம் இதனைச் சாதித்திருக்கிறது. இத்திரைப்படம் ஆவணப்பட உத்தியில் இயக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் புஷ் கொல்லப்பட்டுவிடுகிறார். அதனை விசாரிக்கும் எஃ பி ஐ, புஷ்ஷின் மெய்க்காப்பாளர்கள், அமைச்சர்கள், எஃபிஐ அதிகாரிகள், சந்தேகத்திற்கு உரிய கலவரக்காரர்கள் உள்ளிட்ட எல்லாரையும் விசாரிக்கிறது. அவர்கள் நடந்தவற்றை விவரிக்க விவரிக்க காட்சிகள் உருப்பெறுகின்றன. ஆவணப்படத் தன்மையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய பலமாக அமைகிறது.

சிகாகோவில் வணிகர்களின் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து பெரிய கூட்டம் மறியல் செய்கிறது. அதை மீறி புஷ் அக்கூட்டத்தில் சிறப்பாகப் பேசுகிறார். அக்கூட்டம் முடிந்ததும் சிகாகோ மக்களைப் பார்த்துப் பேசும் புஷ் சுடப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கிறார். ஜார்ஜ் புஷ் பேசும் இடத்துக்கு எதிரே இருக்கும் பலமாடி உணவகத்திலிருந்தே யாரேனும் சுட்டிருக்கவேண்டும் என்று கருதும் எஃபிஐ, அங்கே பணிபுரியும் அலுவலர்களின் பட்டியலைப் பார்க்கிறது. அங்கிருக்கும் முஸ்லிம்களை முதலில் சந்தேகிக்கத் துவங்குகிறது. முதலில் சந்தேகத்துக்கு உள்ளாகும் ஒரு முஸ்லிம் தனது தரப்பைக் கூறுகிறார். அவரது சகோதரர் ஈராக்கில் போரில் இறந்ததுக்குக் காரணம் புஷ்தான் என்று அவரது தந்தை நம்புகிறார். புஷ் கொல்லப்பட்டதும், அவரது தந்தை தன் மகனுக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். இன்னொரு முஸ்லிம்தான் கொலைகாரனாக இருக்கவேண்டும் என்று எஃபிஐ முடிவு செய்கிறது. கைரேகைத் தடங்கள் ஒத்துப் போவதாலும், அவர் ஆஃப்கானிஸ்தான் சென்றிருப்பதாலும் அவர்தான் கொலையாளியாக இருக்கமுடியும் என்று முடிவெடுக்கிறது எஃபிஐ.

யாரையேனும் கொலையாளி என்று முடிவு கட்டவேண்டிய அழுத்தம் எஃபிஐக்கு. அவர் முஸ்லிமாகவும், ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றவராகவும் இருந்தால், அவரை அல்க்வைதாவுடன் எளிதில் தொடர்புபடுத்திவிட முடியும் என்று நினைக்கிறது எஃபிஐ. 11 ஜூரிகள் அடங்கிய சபை இவரையே குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கிறது. அவர் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கிறார். இவரது மேல்முறையீட்டை இழுத்தடிக்கிறது எஃபிஐ. குற்றவாளியின் வழக்கறிஞர் இந்த இழுத்தடிப்பைக் கேள்வி கேட்கிறார். விசாரணை தொடர்கிறது என முடிகிறது திரைப்படம்.

எது உண்மை, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு, படம் முழுதும் விரவிக் கிடக்கும் ஆவணப்படத் தன்மை நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. உண்மையில் ஜார்ஜ் புஷ் இப்போது உயிரோடு இருக்கிறாரா அல்லது உண்மையில் கொன்றுதான்விட்டார்களா என்று ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைத்துவிடுகிறது திரைப்படத்தின் கச்சிதமான ஆக்கம்.

குற்றவாளி யாராக இருக்கலாம் என்னும்போது முதலில் முஸ்லிம்களின் பட்டியலைத்தான் பார்த்தோம் என்கிறது எஃபிஐ. இது ஒரு இனத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பார்க்கவேண்டாம், அந்த நேரத்தில் அங்கே இருந்துதான் தொடங்கமுடியும் என்கிறார் அவர். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு முஸ்லிமை, இத்தனை பெரிய கொலைக்கு வெறும் கைரேகையை மட்டுமே வைத்து பொறுப்பாக்க முனைவது, அமெரிக்காவின் மனத்தின் அடியில் உறைந்துகிடக்கும் அல்க்வைதா பயத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. கைரேகை நிபுணர் ஒருவர் சொல்கிறார், கொலை செய்தவனின் கைரேகை பொதுவாகத் துப்பாக்கியில் கிடைக்காது; நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில்தான் இப்படிக் காண்பிப்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல என்று. இதையும் சேர்த்துக்கொண்டு பார்த்தால் எஃபிஐயின் அவசரத்தையே இயக்குநர் (Gabriel Range) காண்பிக்க நினைத்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இயக்குநர் சொல்ல வருவது, அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேவையான, கடுமையாக்கப்படவேண்டிய சட்டங்களைப் பற்றி. அந்த நோக்கில் அவர் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

குற்றவாளி என்று அறியப்படும் முஸ்லிமின் மனைவியும் விசாரணையில் தன் கருத்தைச் சொல்கிறார். ஆஃப்கானிஸ்தானில் அல்க்வைதா அணியில் தன் கணவர் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டார் என்றும், உடல்நிலை சரியில்லை என்று அவர் நடித்ததால் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், இதனை யாரிடமும் சொல்லவேண்டாம், பாகிஸ்தான் சென்றதாக மட்டும் சொன்னால் போதும் என்று அவர் சொன்னதாகவும் இவர் சொல்கிறார். உண்மையான ஒரு விசாரணையில் ஏற்படும் குழப்பத்தை திரையில் கொண்டுவருவதில் இக்காட்சியில் பூரணத்துவத்தை எட்டியிருக்கிறார் இயக்குநர். இதைப் பார்க்கும் ஒருவர் குற்றவாளி உண்மையில் யார் என்னும் குழப்பத்தோடே திரைப்படம் பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

இத்திரைப்படத்தின் வழியாக நாம் காண்பது அமெரிக்கா தரும் சுதந்திரத்தை. முதலில் இது போன்ற ஒரு படத்தை எடுத்தது, இரண்டாவதாக குற்றவாளி என்று சொல்லப்படும் முஸ்லிமுக்கு ஆதரவாகப் பேசும் வழக்கறிஞரின் கேள்விகள், அடுத்ததாக புஷ்ஷுக்கு எதிராகக் காட்டப்படும் கலவரக்காரர்களின் மறியல்களும் கூச்சல்களும். எல்லாவற்றிலும் சுதந்திரம். இதையே இத்திரைப்படம் நமக்கு முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறது. இந்தியாவில் இது சாத்தியமாகுமா என்ற ஏக்கத்தை உருவாக்கிவிடுகிறது திரைப்படம்.

ஒரு தலைவரின் கொலையை விசாரிப்பது என்பது நாம் கதை போலச் சொல்லப் பிறர் அதனை அப்படியே புரிந்துகொள்வது அல்ல. நாம் எதிர்பார்க்காத திசைகளிலெல்லாம் பயணிக்கும் காற்றைப் போன்றது அது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் சிறப்பு அதிகாரியாக இருந்த ரஹோத்தமனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதையெல்லாம் கேட்டபோது, ஒரு வழக்கின் பல்வேறு புதிர்கள் எப்படி விடுவிக்கப்படுகின்றன என்றும், விடுவிக்கப்பட்ட அதே புதிர்கள் எப்படி மீண்டும் சிக்கலாகிக்கொள்கின்றன என்றும் ஒரு சேரப் பார்க்கமுடிந்தது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய சிடி ஒன்றையும் ரஹோத்தமன் வெளியிட்டிருக்கிறார். அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன்.

நேரில் காண்பது என்னவோ ஒரு குண்டு வெடிப்பு அல்லது தோட்டா. அதற்குப் பின்னர் சிதறிக் கிடக்கும் பல்வேறு செய்திகளை அள்ளிக் கூடையில் போடும் காவல்துறையின் ஒரு பரிமாணத்தை வெற்றிகரமாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.

Share

ராமையாவின் குடிசை – அணைக்க முடியாத நெருப்பு

நீண்ட நாள் நான் பார்க்க நினைத்துக்கொண்டிருந்த ‘ராமையாவின் குடிசை’ என்கிற ஆவணப் படத்தை பத்ரி தந்தார்.

ராமையாவின் குடிசை, இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார். விலை 250 ரூபாய்.

தனியொருவனுக்கு உணவு இல்லை. ஜகத்தை எரிக்காமல் பசித்தவர்களையே எரித்த கதை.

01. ஆவணப் படம், ஒரு (கம்யூனிஸ்ட்) கட்சியின் சார்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

02. ஆரம்பக் காலம் முதலான பிரச்சினைகள் விளக்கப்பட்டு, அப்பிரச்சினை ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்பதன் தோற்றத்தோடு உச்ச நிலையை அடைவதும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

03. தலித்துகள் இருக்கும் இடத்திற்குப் பிரச்சினை செய்ய வரும் பக்கிரிசாமி என்கிற, நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான நாயுடுவின் ஆள் மரணம் அடைகிறார். இதற்குப் பழி தீர்க்கும் விதத்தில் தலித்துகள் மீது தீவிரமான தாக்குதல் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 44 பேர் ஆளடையாளம் தெரியாமல் கரிக்கட்டையாக எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.

04. 44 பேர் இறந்ததார்கள் என்று தலித்துகள் தரப்பும், 42 பேர்கள் இறந்தார்கள் என்று காவல்துறை தரப்பும் தெரிவிக்கிறது. 42 பேர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பெண் தனியாக இறந்து கிடந்ததைச் சேர்த்தால் 43 என்றும், பச்சிளம் குழந்தை ஒன்று கரிக்கட்டையாக இறந்து போயிருந்தால் அதன் தடமே கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதால் 44 என்றும் ஒருவர் சொல்கிறார். எனக்குப் பதறிவிட்டது.

05. கொல்லப்பட்ட 44 பேர்களில் பலர் குழந்தைகள், பெண்கள்.

06. நாயுடு ஒரு பெண் பித்தர் என்கிற விவரங்களை சில தலித்துகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் நாயுடுவின் உறவினர் இதை மறுக்கிறார்.

07. நாயுடுவின் உறவினர், சம்பவம் நடந்த அன்று செய்தி சேகரிக்கச் சென்ற தினத்தந்தி நிருபர், நாயுடு கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கப்பெற்றவர்கள், தண்டனையை நேரில் பார்த்தவர்கள் எனப் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். கீழ்வெண்மணி நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘குருதிப்புனல்’ நாவலை எழுதிய இந்திரா பார்த்தசாரதியின் ஒரு காட்சியில் தோன்றி, நாயுடுவை ஆண்மை இல்லாதவனாக வைத்ததன் பின்னணியைச் சொல்கிறார். ஒரு நாவலாசிரியராக அவர் நாயுடுவுக்குக் கொடுத்த ஒரு சிறந்த தண்டனை என்று நினைத்துக்கொண்டேன்.

08. ஒருவர் இது சாதிப் பிரச்சினை அல்ல, கூலிப் பிரச்சினை என்கிறார். இன்னொருவர் இதை சாதிப் பிரச்சினை என்கிறார். எனக்கென்னவோ இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருப்பதாகத்தான் தெரிகிறது, இந்த ஆவணப் படத்தைப் பார்த்த வரைக்கும்.

09. கூலி கேட்டுப் போராடும் தலித்துகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. இதனை எதிர்த்து, நாயுடுவின் ஆள்கள் வெளியூரிலிருந்து கூலியாட்களைக் கொண்டுவந்து வேலை செய்ய வைக்கிறார்கள். உள்ளூர் கூலியாள்கள் இதனைக் கடுமையாக எதிர்க்க, போராட்டம் தீவிரமடைகிறது.

10. தலித்துகளை வேட்டையாட வரும் நாயுடுவின் ஆள்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், வீடுகளுக்குத் தீவைத்துக்கொண்டும் அராஜகம் செய்கிறார்கள். அதனைப் பார்க்கும் 13 வயதுச் சிறுவன் நந்தன், அதிலிருந்து 14 வருடங்கள் கழித்து நாயுடுவைப் பழி வாங்குகிறான்.

11. தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டில் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும், பக்கிரிசாமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தலித்துகளுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை கிடைக்கிறது. ஆனால் தலித் மக்கள் மீதான் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

12. சி.என். அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்தில் இச்சம்பவம் நடக்கிறது. இச்சம்பவத்திற்கு முன்பாக, கம்யூனிஸ்டுகளின் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அண்ணாத்துரையின் அரசு மெத்தனமாக நடந்துகொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாகத் தெரிகிறது. சம்பவத்துக்குப் பின்னர் கருணாநிதி நேரில் சென்று எரிந்துபோன ராமையாவின் குடிசையைப் பார்வையிட்டிருக்கிறார் என்றும் தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்றும் இந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

13. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தலித் மக்களின் கரிக்கட்டைத் தேகம் அடங்கிய புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன. நம் கல்வியும் சமூகமும் நமக்குக் கற்றுத்தந்ததவை இவைதானென்றால் அதற்காக நாம் வெட்கப்படவேண்டும்.

14. 1968ல் நடந்த இத்துயரச்சம்பவத்தை பெரியார் தீவிரமாகக் கண்டிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது இணையத்தில் கீழ்வெண்மணி + பெரியார் என்று தேடிப்பாருங்கள். கிடைக்கும் சுட்டிகளில் ஒவ்வொன்றாகப் படித்துப்பாருங்கள். அதற்குப் பின்பு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் நிச்சயமாக நீங்கள் வீரர்தான். இது ஒருபுறமிருக்க, எதையும் கடுமையாகக் கண்டிக்கும் பெரியார், கடுமையான செயல்கள்மூலம் எதிர்வினை புரியும் பெரியார், 44 தலித் மக்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் மென்மையாகத்தான் கண்டித்திருக்கிறாரோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

15. எந்த ஒரு பிரச்சினைக்கும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு எனக் கிளம்பும் பெரியார், 44 தலித்துகள் கொல்லப்பட்ட விஷயத்தில் குறைந்தது ஒரு பத்து பேர் குடுமியையாவது ஏன் அறுக்காமல் விட்டார் என்பதுதான் புரியவில்லை.

16. 44 பேர் இறந்தது உணவுக்காக என்று நினைக்கும்போது இச்சமூகம் குறித்த கேள்விகளே மிஞ்சுகின்றன.

கீழ்வெண்மணி குறித்து ஞானக்கூத்தன் 1969ல் எழுதிய கவிதை ஒன்று.

கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க

நன்றி: பண்புடன் குழுமம்

Share