Archive for அறிவிப்பு
பபாஸி தேர்தல் – இது எங்க ஏரியா!
NHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக!
இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா?
1. 1857 சிப்பாய் புரட்சி, உமா சம்பத்
2. ஏ.ஆர். ரஹ்மான், என்.சொக்கன்
3. சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் பார்முலா, ராபர்ட் குந்தர்
4. வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா, டாக்டர் கேரன் ஒடாஸோ
5. நம்பர் 1 சேல்ஸ்மேன், சோம. வள்ளியப்பன்
6. மாயாவதி, சி.என்.எஸ்
7. இண்டர்வியூ டிப்ஸ், எஸ்.எல்.வி. மூர்த்தி
8. அத்வானி, ஆர்.முத்துக்குமார்
9. ஒரு மோதிரம் இரு கொலைகள், ஷெர்லாக் ஹோம்ஸ்
10. சீனா – விலகும் திரை, பல்லவி அய்யர்
11. பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா.ராகவன்
12. விஜய்காந்த், யுவ கிருஷ்ணா
13. பன்றிக்காய்ச்சல், டாக்டர் புரூனோ மஸ்கரனாஸ்
14. வைரஸ் நோய்கள், டாக்டர் முத்து செல்லக் குமார்
15. நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், டாக்டர் கே.எஸ்.சுப்பையா
16. மு.க. ஸ்டாலின், ஜி.ஆர்.சுவாமி
17. விடுதலைச் சிறுத்தைகள், ஜோதி நரசிம்மன்
18. மெட்ராஸ் – சென்னை, நந்திதா கிருஷ்ணா
19. தும்பிக்கை வந்தது எப்படி?, ருட்யார்ட் கிப்ளிங்
20. ஜங்கிள் புக், ருட்யார்ட் கிப்ளிங்
கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!
1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
2. மேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
5. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.
6. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.
7. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
8. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
9. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
10. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
11. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
12. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
13. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
14. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
15. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.
16. ஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.
மின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: bookreviews@nhm.in
கிழக்கு பாட்காஸ்ட் – ஆஹா FMல்.
ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, கிழக்கு பாட்காஸ்ட் என்னும் ஒரு புதிய நிகழ்ச்சி நாளை முதல் ஒலிபரப்பாகும்.
எப் எம் என்றாலே வெறும் திரைப்பாடல்கள் என்கிற அளவில் பழக்கப்பட்டுப்போய்விட்ட பண்பலையில் ஒரு மாறுதலான நிகழ்ச்சி வரப்போவது மகிழ்ச்சியளிக்கிறது. திரைப்படப் பாடல்கள் இல்லாத ஒரு நிகழ்ச்சி, இதுவரை எதாவது ஒரு பண்பலையில் ஒலிபரப்பாகியிருக்குமா என்பது சந்தேகமே. வானவில் பண்பலையில் ஒருவேளை ஒலிபரப்பாகியிருந்திருக்கலாம்.
இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒப்புக்கொள்ளவே பல பண்பலைகள் தயங்கின என்பதே உண்மை. தமிழ்நாட்டில் இன்றைக்கு வரைக்கும் பண்பலை என்பது வெறும் திரைப்படத்துக்கான ஒரு கருவியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற, இந்த நிகழ்ச்சி உதவுமானால் உண்மையிலேயே ஒரு பெரிய வெற்றியே.
பல பண்பலைகளுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்ப முடியும் என்பதையே உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன சொன்னாலும், எவ்வளவு பேசினாலும், மீண்டும் மீண்டும் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதிலேயே வந்து முடித்தார்கள். பாடல்கள் இல்லாத நிகழ்ச்சியை யாருமே கேட்கமாட்டார்கள் என்பதே அவர்களது முடிவான நம்பிக்கை. இப்படி பாடல்கள் இல்லாமல், ஓர் அரட்டை நிகழ்ச்சியைக் கேட்கவென்றே நிறையப் பேர் இருபபார்கள் என்பதை அவர்களால் யோசிக்கவே முடியவில்லை.
நாம் ஒரு நிகழ்ச்சியை பாடல்களின் பாதிப்பே இல்லாமல் ஒலிபரப்பிவிட்டால் உடனே அதை அனைவரும் கேட்டுவிடமாட்டார்கள் என்பதையும் நாங்களும் புரிந்துகொண்டிருக்கிறோம், மற்றவர்களைக் கேட்க வைக்க நாமும் முயல்வேண்டும் – என்றெல்லாம் சொன்ன பின்பும் அவர்கள் யோசிக்கத் தயாராக இல்லை.
முதலில் இருந்த இந்த நிகழ்ச்சிக்கான எங்கள் தேர்வைப் புரிந்துகொண்டவர்கள் ஆஹா எஃப் எம் மட்டுமே.
தொலைக்காட்சிகள் எங்கேயோ போய்க்கொண்டிருக்க, இன்னும் பண்பலை வானொலிகள் வெறும் திரைப்படப் பாடல்களிலேயே மூழ்கிக் கிடப்பது அவலம்தான்.
ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்று பகல் பனிரெண்டு மணிக்கு அரட்டை. கொஞ்சம் வித்தியாசமான அரட்டை. அறிவுபூர்வமான அரட்டை. நிச்சயம் கேளுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம் என்பதை முன்பே அறிந்துகொள்ள விரும்புகிறவர்களும், ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி நினைவூட்டவேண்டும் என்று எதிர்பாக்கிறவர்களும் START NHM என டைப் செய்து, 575758 என்கிற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பி பதிவு செய்துகொள்ளவும். ஏற்கெனவே பதிவு செய்துகொண்டவர்கள் மீண்டும் பதிவு செய்துகொள்ளவேண்டியதில்லை. இதில் பதிவு செய்துகொண்டால் கிழக்கு பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள், புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு போன்றவற்றையும் எஸ் எம் எஸாகப் பெறலாம்/பெறவேண்டியிருக்கும்!
இந்நிகழ்ச்சியை சென்னையில் இருக்கும் நேயர்கள் மட்டுமே கேட்கமுடியும் என்பதால், இந்நிகழ்ச்சி பற்றிய எஸ் எம் எஸ்ஸும் சென்னை மொபைல் நம்பர்களுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.
இனி, வாரா வாரம் புது அவதாரம்!
கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – முதாளித்துவ பயங்கரவாதம் – ஒத்திவைப்பு
சில தவிர்க்கமுடியாத காரணங்களால், இன்று நடைபெறுவதாக இருந்த ‘முதலாளித்துவ பயங்கரவாதம்’ என்னும் தலைப்பிலான கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. நடைபெறப்போகும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
தடங்கலுக்கு வருந்துகிறோம்!
கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – முதலாளித்துவ பயங்கரவாதம்
பயங்கரவாதம் என்றதும் தோழர்கள்தான் பேசப்போகிறார்கள் என்று தெரிந்திருக்கும் என நான் எழுதினால் நான் தேவையில்லாமல் தோழர்களை கிண்டல் செய்வதாக கமெண்ட்டுவார்கள். எனவே மாற்றிச் சொல்கிறேன். தோழர்கள் வந்தாலே பயங்கரவாதம் பற்றிப் பேசுவார்கள் என்று நீங்கள் யூகித்தது சரிதான். (நல்ல எண்ணத்தில்தான்!) முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிப் படுபயங்கரமாகப் பேசப்போகிறார்கள். அனைத்துத் தோழர்களும், ‘நண்பர்’களும் நிச்சயம் வாருங்கள். :))
அறிவிப்பு:
21 ஜூலை 2009 (செவ்வாய்) அன்று கிழக்கு மொட்டைமாடியில் முதலாளித்துவ பயங்கரவாதம் என்னும் தலைப்பில் உரையாற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து இருவர் வருகை தருகிறார்கள்.
சுப. தங்கராசு
மாநிலப் பொதுச் செயலாளர்
பு.ஜ.தொ.மு.பா. விஜயகுமார்
மாநிலப் பொருளாளர்
பு.ஜ.தொ.மு.நேரம் : மாலை 6.15
நிறைய கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம். அனைவரும் வருக!
மொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3)
ஒபாமா ப்ராக் புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட அரவிந்தன் பெற்றுக்கொண்டார். ஆயில்ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட தமிழ் சுஜாதா பெற்றுக்கொண்டார்.
ஆர். முத்துக்குமார் எழுதிய ஒபாமா பராக் புத்தகத்தைப் பற்றி சந்திரமௌலி பேசினார். ஒபாமாவின் வெற்றிக்கான உழைப்பு, அமெரிக்காவின் தேர்தல் முறை என்பதைப் பற்றி ஆர்.முத்துக்குமார் விவரமாக எழுதியிருப்பதாகப் பாராட்டினார். ஒபாமாவின் வெற்றி, அவர் கருப்பர் என்பதற்காகக் கிடைத்த வெற்றியல்ல என்றார். அவர் தன்னை கருப்பர் என முன்வைத்து தேர்தலைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒபாமாவைப் பற்றிய பல்வேறு புத்தகங்களின் எஸென்ஸ் இந்தப் புத்தகம் எனக் குறிப்பிடும் வகையில், ஒபாமா பற்றி இல்லாத தகவல்களே இப்புத்தகத்தில் இல்லை என்று பாராட்டினார். புத்தகத்தின் குறைகளையும் குறிப்பிட்டார். புத்தகத்தில் உள்ள சில எழுத்துப் பிழைகளையும், ஃபார்மட்டிங் பிழைகளையும் குறிப்பிட்டார். இன்னும் நல்ல எடிட்டிங் இருந்திருக்கவேண்டும் என்றும் சொன்னார். கிழக்கு வெளியிட்டிருக்கும் மற்ற புத்தகங்களின் தரத்தில் இருந்து, எடிட்டிங்கை மையமகா வைத்து, இது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றார். ஆனால் இத்தகைய சிறிய குறைகள், புத்தகத்தின் ஓட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் இக்குறைகள் களையப்படவேண்டியவை மட்டுமெ என்றும் குறிப்பிட்டார். பதிலளித்த பத்ரி, சந்திரமௌலி குறிப்பிட்ட பல பிழைகள் ஏற்கெனவே களையப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். உண்மையில் சந்திரமௌலி போன்றவர்கள் முன்வைக்கும் இக்குறைகள் நிச்சயம் பதிப்புக்குழுவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உருப்படாதது நாராயணனும் பா.ராகவனும், ஒரு சிறிய மாற்றம் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார்கள். முதலில் பன்னிரண்டு நிமிடங்கள் (அது என்ன பன்னிரண்டு நிமிடக் கணக்கு எனத் தெரியவில்லை) நாராயணன் பேசுவார், பின்பு நாராயணனும் ராகவனும் கலந்துரையாடுவார்கள். பின்பு எல்லாரும் கேள்விகள் கேட்டு கலந்துரையாடல். இதுதான் விஷயம். நாராயணன் பேசியது, பின்பு அவர் பதில் சொன்னது எல்லாம் சேர்த்தால் 90 நிமிடங்கள் வருமென்றால், அதில் அவர் பேசிய நிமிடங்கள் 50 இருக்கலாம். மீதி 40 நிமிடங்கள் பேச ஆயத்தமாவது, மூச்சு இழுத்து விட்டுக்கொள்வது, ஆள்காட்டி விரலால் மூக்கின் கீழே நெருடிக்கொள்வது, தொண்டையைக் கனைத்துக்கொள்வது என்பது போன்ற கமல்தோஷத்தில் செலவழிந்தன. ஆனால் பேசிய நிமிடங்களில் மிகச் சிறப்பாகப் பேசினார். எண்ணெய் அரசியலோடு, உலக அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் அவரது ஆர்வம், அறிவு என்னை வியக்க வைத்தது. பொது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. பல்வேறு கேள்விகளுக்கு மிகச் சரியான அணுகுமுறையில் பதில் சொன்னார். ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றியதாக அவருடைய பேச்சு அமையாமல், ஒரு ஒட்டுமொத்த, அமெரிக்கா சார்ந்த/சம்பந்தப்பட்ட அரசியலை முன் வைத்ததாக அமைந்தது. புத்தகத்தில் குறை சொல்லவேண்டியது சம்பிரதாயம் என்றவர் புத்தகத்தில் உள்ள ஒருசில குறைகளைச் சொன்னார். புத்தகத்தில் உள்ள ஓர் அச்சுத்தவறைச் சொன்னவர், புத்தகத்தின் போதாமையாகச் சொன்னது, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு என்பதைப் பற்றி.
பின்பு எல்லோரும் பங்குபெறும் கலந்துரையாடல் ஆரம்பித்தது. பத்ரியின் முதல் கேள்வியே, நாராயணன் சொன்ன, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு, இந்தியா எப்படி அதை எதிர்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியது. பத்ரி கேட்ட இரண்டு நிமிடக் கேள்விக்கு, பாரா 20 நிமிடங்கள் பதில் அளித்தார். (பாராவிற்குப் பேசத் தெரியாது என்று ஏற்கெனவே நாம் அளித்த செய்தி நினைவில் இருக்கலாம்.) ஆரம்பிக்கும்போது, ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றி, ரிப்பன் பக்கோடாவைக் கொறித்துக்கொண்டே ஆரம்பிப்பதில் தவறே இல்லை என்று சொல்லி, தனக்கும் தமுஎச-விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்லேடனைவிட அமெரிக்காவே மிகப் பெரிய தீவிரவாதி என்றார். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருள் பற்றிய விவாதத்தில், சில விஷயங்கள் இன்று பரிசோதனை முயற்சியில் இருந்தாலும், இன்னும் ஒரு 50 வருடங்களுக்காகவது பெட்ரோலின் தேவை இருந்தே தீரும் என்றார். ஏகப்பட்ட கேள்விகள் இந்த எண்ணெய் அரசியலைப் பற்றி எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் பாரா, நாராயணன், பத்ரி ஆகியோர் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அணு சக்தி என்பது பெட்ரோலுக்கு முழுமாற்றாகமுடியுமா என்ற கேள்விக்கு, அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றார் நாராயணன்.
சத்யா (எம்.டி, நியூ ஹொரைசன் மீடியா), நம்நாட்டில் ஏகப்பட்ட சூரிய சக்தி இருக்க, அதற்கு இதுவரை எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இப்போதாவது இதில் கவனம் செலுத்துவோமா, அது சரியாக வருமா என்றார். அதில் இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், தற்போது அதில் இந்திய அரசின் கவனம் குவிந்திருக்கிறது என்றும் நாராயணன் சொன்னார். ஆனால், அணு ஆயுதத்தில் நம் கவனம் இருக்குமளவிற்கு சூரிய சக்தியில் நம் கவனம் இதுவரை இருக்கவில்லை என்றும், தற்போது இருக்கும் கவனமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதுதான் என்றும் சத்யா சொன்னார்.
எண்ணெய் அரசியலின் மீதான கேள்விகள் மிக நீண்டு கொண்டிருக்க, கேள்வி கேட்காமலேயே பதில் சொல்லிவிடும் அபாய முடிவிற்கு முத்துக்குமார் சென்ற நேரத்தில், அவரிடம் நான் கேள்வியைத் துவக்கி வைத்தேன். ஏற்கெனவே இரண்டு ஒபாமா புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது ஆர்.முத்துக்குமார் எழுதியிருக்கும் புத்தகத்தின் தேவை என்ன, அது மற்ற புத்தகங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது என் கேள்வி. அதை தான் எழுதிய ஒரு காரணத்திற்காகவே அனைவரும் வாங்கவேண்டும் என்று சொல்லி, பேச்சுக்கலையில் திராவிடப் பாரம்பரத்தியின் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து, மற்ற புத்தகங்கள் ஒபாமாவைப் பற்றி மட்டும் சொல்லிநிற்க, தனது புத்தகம் ஒபாமாவோடு அமெரிக்காவின் அரசியலையும், தேர்தல் முறையையும் முன் வைக்கிறது என்றார். தொடர்ந்து பதிலளித்த பாரா, ஒரு வாழ்க்கை வரலாறு என்பது அவர் பிறந்தார், வென்றார், இறந்தார் என்று சொல்வதல்ல; மாறாக, எந்த முறையில், எந்த இடத்தில் ஒருவரின் வெற்றியும், முக்கியத்துவமும் இருக்கிறது, அதன் பின்னணி என்ன என்பனவற்றை விளக்குவதிலேயே இருக்கிறது, அதை இப்புத்தகம் தெளிவாகச் செய்திருக்கிறது என்று அப்புத்தகத்தின் எடிட்டர் என்கிற முறையில் பதில் சொன்னார். தொடர்ந்து ஒபாமா பற்றிய விவாதங்கள் களைகட்டின. ஒபாமா வென்றதுக்குக் காரணம், கருப்பர்கள் வெறித்தனமாக வருக்கு வாக்களித்ததே என்றார் லக்கிலுக். அது மட்டுமே காரணமல்ல என்று விளக்கினார் பத்ரி. ஸ்ரீகாந்த் இது தொடர்பான தனது கருத்துகளையும் சொன்னார். ஸ்ரீகாந்த் ஒபாமாவை அண்ணன் ஒபாமா என்றார். வைகோ சந்தித்தது ஒபாமாவையா, ஸ்ரீகாந்தையா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துவிட்டது. அமெரிக்கா எந்த நாட்டில் தனக்கு லாபம் வருகிறதோ அங்கு மட்டுமே உதவி என்ற போர்வையில் உள்ளே செல்லும் என்று கிட்டத்தட்ட அனைவரும் சொன்ன நிலையில், அதற்கும் சில எதிர்ப்புக் கேள்விகள் எழுந்தன. அமெரிக்கா அழித்த நாடுகளும் உண்டு, அமெரிக்காவால் வாழ்ந்த நாடுகளும் உண்டு என்றார் ஸ்ரீகாந்து. உதாரணமாக ஜப்பான் என்றார். லாபத்திற்காக மட்டுமே அமெரிக்கா ஒரு நாட்டிற்காகச் செல்லும் என்றால், வியட்நாமை எந்த வகையில் சேர்ப்பது என்றார் சத்யா. ஒரு சில விலக்குகள் நீங்கலாக, அமெரிக்காவின் குணம் அதுவே என்றார் பாரா. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவியது தனது குற்ற உணர்விற்காக என்றார் பத்ரி. ஒபாமா மீது நிறைய எதிர்பார்ப்பு எல்லாருக்குமே உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் அதிகம் நல்லது செய்யாவிட்டாலும், அமெரிக்காவின் இன்றைய நிலையை மேம்படுத்தினாலே அதுவே மிகப்பெரிய வெற்றி என்று ஒபாமாவின் தம்பி நம்பிக்கையாகச் சொன்னதோடு கூட்டம் முடிவடைந்தது.
ஒபாமாவின் வெற்றிக்கு அவர் பையில் வைத்திருந்த ஆஞ்சநேயர் படமே காரணம் என்ற செய்தி உண்மைதானா என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு ஏன் அனைவரும் அப்படி சிரித்தார்கள் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
பின்குறிப்பு: நேசமுடன் வெங்கடேஷ் பின்நவீனத்துவப் பாணி கேள்வி (அது கேள்வியாக இல்லாமல் பதிலாகவும் இருக்கலாம்!) ஒன்றை எழுப்பினார். அதைப் பற்றி தனியாக ரூம் போட்டு யோசிக்க உத்தேசித்திருக்கிறேன்.
மால்கம் எக்ஸும் நிறைய எக்ஸ்களும் (நாள் 2)
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகத்தை சோம வள்ளியப்பன் வெளியிட ’உருப்படாதது’ நாராயணன் பெற்றுக்கொண்டார். மால்கம் எக்ஸ் புத்தகத்தை பா.ராமசந்திரன் வெளியிட நேசமுடன் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார்.
சோம வள்ளியப்பன் யுவ கிருஷ்ணாவின் (லக்கிலுக்) ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தக்த்தைப் பற்றிப் பேசினார். விளம்பரங்களைத் தயாரிப்பதில் விளம்பர ஏஜென்ஸிகளின் பங்கு, ஒரு விளைபொருள் (ப்ராடக்ட்) வெற்றியில் விளம்பரங்களின் பங்கு, அதன் தோல்வியில் விளம்பரங்களின் பங்கு, நெகடிவ் விளம்பரங்களின் வெற்றி, விளம்பரங்களில் நேரும் போட்டி (உதாரணமாக கோக் Vs பெப்சி, ஹார்லிக்ஸ் Vs காம்ப்ளான்) எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். நல்ல விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் ஒரு விளம்பரமாக, பத்தாண்டுகளுக்கு முன்பு வந்த சிறிய மொபைல் போனுக்கான விளம்பரத்தைக் குறிப்பிட்டார். ஒரு பெண் மொபைல் பேசிக்கொண்டிருக்க, தன்னுடன் பேசுவதாக நினைக்கும் ஒருவர் எழுந்து வரவும், அவரிடம் ‘ஒன் காஃபி ப்ளீஸ்’ (என்று நினைக்கிறேன்) எனச் சொல்லும் விளம்பரம் அது. (அந்த விளம்பரத்தில் எனக்குப் பிடித்தது, அந்த மனிதர் முகம் அடையும் பாவங்கள். சிறந்த நடிப்பு அது.) லக்கிலுக்கின் இப்புத்தகம் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகவும், பல்வேறு விஷயங்களை லக்கிலுக் எழுதியிருப்பதாகவும் பாராட்டினார். ஒரு சிறிய குறையாக, எப்படி சிறந்த விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எப்படி விருது வழங்குகிறார்கள் என்பதைப் பற்றியும் ஓர் அத்தியாயம் எழுதியிருக்கலாம் என்றார். சிறந்த நடையில் புத்தகம் எழுதியிருப்பதாக லக்கியைப் பாராட்டினார். (சோம வள்ளியப்பன் தொலைக்காட்சிகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நேற்றைய கூட்டத்தில் அவர் இன்னும் சிறப்பாகப் பேசுவார் என எதிர்பார்த்தேன். அவர் பேச்சில் ஒரு கோவை இல்லை என்பதே மிகப்பெரிய குறை.)
பா. ராமசந்திரன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) மருதனின் மால்கம் எக்ஸ் புத்தகத்தைப் பற்றிப் பேசினார். தமுஎச-வின் மாநாடு தற்போதுதான் முடிவடைந்திருந்ததால் தான் மிகவும் பிஸியாக இருந்ததாகவும், ஆனாலும் மால்கம் எக்ஸ் புத்தகம் என்பதால் தான் பேச ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் பேச வருவதற்கு முன்பாக எல்லாரும் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பேச ஆரம்பித்த பா.ராமசந்திரன் (பாரா என்று வந்தாலே இப்படி எதாவது சொல்லி பேச ஆரம்பிப்பார்கள் போல!) தான் பேச வரும்போது யாரும் சிப்ஸ் கொறித்துக்கொண்டிருக்கக்கூடாதே என்று நினைத்ததாகச் சொன்னார். காரணமாக, ‘மால்கம் எக்ஸை சிப்ஸ் கொறித்துக்கொண்டு பேசமுடியாது’ என்று சொல்லி, தான் தமுஎச-வின் தீவிர உறுப்பினர் என்பதை நிரூபித்தார். இன்னும் சிறிது நேரத்தில் காப்பி வருமே என நினைத்துக்கொண்டேன். [’ஹிந்துமத வெறியன் கோட்ஸே காந்தியைக் கொன்ற போது அவர் ஹே ராம் என்று சொல்லி இறந்ததுபோல’ என்றெல்லாம் பேசினார். கோட்ஸே ஹிந்துமத வெறியன். அதில் விவாதமில்லை. ஆனால் காந்தி இறந்தபோது ஹே ராம் என்று சொன்னாரா இல்லையா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது இப்போது தேவையா என நினைக்கலாம். தமுஎச என்று வந்துவிட்டாலே என்ன வேண்டுமானாலும் எழுத வந்துவிடுகிறது. :-)] பா.ராமசந்திரன் மால்கம் எக்ஸின் வாழ்க்கையை, அவர் கறுப்பினத்தவராகப் பிறந்து அடைந்த அவமானங்களை, வலியை விவரித்தார். இனவெறியை எங்கும் பரப்பும் அமெரிக்காவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட மால்கம் எக்ஸை வானளாவப் புகழ்ந்தார். ‘அஸ்லாமு அலைக்கும்’ என்று நூலில் இருந்ததைப் பார்த்தபோதே, மால்கம் எக்ஸ் இஸ்லாமியராக மாறுவார் என எதிர்பார்த்ததாகச் சொன்னார். முதல் அத்தியாயத்திலேயே சுட்டு வீழ்த்தப்படும் மால்கம் எக்ஸ் புத்தக்த்தை சிறப்பாக எழுதியிருப்பதாக மருதனைப் பாராட்டினார். புத்தகத்தில் எவ்விதக் குறையையும் பா.ராமசந்திரன் வைக்கவில்லை. மால்கம் எக்ஸை ஒரு புனித பிம்பமாகவே நிறுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
பின்னர் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். பத்ரி மருதனிடம் நிறையக் கேள்விகள் கேட்குமாறு ஊக்குவித்தார். மால்கம் எக்ஸைப் பற்றி கூட்டத்துக்கு வந்திருந்த ஏகப்பட்ட மிஸ்டர் எக்ஸ்கள் கேள்வி கேட்டார்கள். விளம்பரப் பிரியர் யுவகிருஷ்ணாவை கேள்வி கேட்காதவர்களே இல்லை எனலாம். தொடர்ந்து விளம்பரங்கள் பற்றியும், விளம்பர ஏஜென்ஸிகள் பற்றியும் கேள்விகள். எல்லாவற்றிற்கும் லக்கிலுக் பொறுமையாகப் பதில் சொன்னார். அனைவரும் பொறுமையாகக் கேட்டார்கள். விளம்பரங்களில் ‘செலிபிரிட்டியை ஏன் விளம்பரங்களில் போடவேண்டும்’ என்கிற கேள்வியும், ‘கருப்பு நிறத் தோல்’ பற்றிய கேள்வியும் சில விவாதங்களை எழுப்பின. (கருப்பு வேண்டாம் என்று சொல்கிறோமே, ஆனால் டை (மயிர்ச்சாயம்) அடிக்கும்போது மட்டும் கருப்பை வேண்டுகிறோமே, அது எப்படி என்று ஒரு நண்பர் கேட்டபோது, அவரது பேரல்லல் திங்கிங்கை நினைத்து கூட்டமே அசந்துவிட்டது! அந்த நண்பர் எங்கள் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் என்பது ஜெனெரல் நாலெட்ஜுக்காக மட்டும் இங்கே.) மருதனை மறந்துவிட்டார்கள். ஒரு எக்ஸ் ஏன் அரசியல்வாதிகளை வேட்டி விளம்பரங்களில்கூட பயன்படுத்துவதில்லை என்றார். அரசியல்வாதிகளுக்கு விளம்பரம் தரமாட்டார்கள் என்றார் லக்கி. ஆனால் உண்மையான காரணத்தை நான் கண்டுபிடித்தேன். அரசியல்வாதிகளை நம்பி வேட்டி விளம்பரங்களை எடுத்தால், அவர்கள் வேட்டியை உருவிக்கொண்டு சண்டைக்கு நிற்கும்போது விற்பனை பாதிக்கப்பட்டுவிடும் என்று விளம்பர நிறுவனங்கள் அஞ்சலாம் என்றேன். நல்ல அரசியல்வாதி யார் என்று ஒரு நிமிடம் யோசித்த லக்கி, தமிழருவி மணியன் எனச் சொன்னார். எங்கே கருணாநிதி பெயரைச் சொல்லிவிடுவாரோ என்று அந்த ஒரு நிமிடத்தில் நான் அடைந்த கலவரத்தைச் சொல்லி மாளாது. இந்த யுவனுக்குள் இருந்து பதில் சொன்ன கிருஷ்ணனுக்கு நன்றி. 🙂
பத்ரி மீண்டும் ஞாபகப்படுத்தி மருதனிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.. இன்னொரு ’நண்பர் எக்ஸ்’, இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து மருதன் எந்தத் தலைவரைப் பற்றி எழுதப்போகிறார் என்று கேட்டார். அவர் கேட்ட தொனி, இன்றைக்கு நல்ல தலைவர்களே இல்லையே என்கிற ஆதங்கத்தில். ஆனால் பத்ரி அப்படி எல்லாம் நிகழாது என்றும் தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தலைவர்கள் உருவாவர்கள் என்றும் சொன்னார். (பத்ரி லெஃப்ட் விங்க் என்கிறார்கள்! ஆம், நிச்சயம் புரட்சி வரும்.) நான், மருதனே தலைவராகிவிட்டால் அவர் ஏன் புத்தகம் எழுதவேண்டும் என்றேன். அப்போதும் பத்ரி விடவில்லை, சுயசரிதை எழுதுவார் என்றார். (புரட்சி வந்தேவிட்டது!) கூட்டம் முடிவதற்கு முன்பாக மைக்கைப் பிடித்த பா.ராமசந்திரன், இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத நிறையப் பேர் இருப்பார்கள் என்றும், அதற்கான நம்பிக்கை உள்ளது என்றும், அந்த விதையை கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தில் விதைக்காவிட்டால் தனக்கு அன்றிரவு தூக்கம் வராது என்றும் சொன்னார். (இவர் தமுஎச என்கிறார்கள்.)
இப்படி கூட்டம் களையாக நடந்துகொண்டிருக்க ஒரு பெரிய விஷயம் நடந்தது. பலர் கவனிக்கவில்லை. ஏதோ ஒரு நண்பர் மட்டும் அதை படம் பிடித்தார். லக்கியின் இரண்டு கொலைவெறி ரசிகர்கள் ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்தில் அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள். நான் கேட்க நினைத்த ஒரே கேள்வி இதுதான். ‘லக்கி, நீங்கள் இப்படி கையெழுத்து போடும்போது எப்படி உணர்ந்தீர்கள்?’ என்பதே. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்க முடியாமல் போயிற்று. அந்த இரண்டு கொலைவெறி ரசிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
’இன்னும் கேள்விகள் கேட்டால் நான் நிஜமாகவே பேசவேண்டியிருக்கும்’ என மருதன் அறிவிக்க இருந்த கணத்தில் கூட்டம் நிறைவடைந்தது.
இன்றைய கூட்டம்:
பாராவின் ஆயில் ரேகை புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார் நாராயணன். நிறையக் கேள்விகள் வரும் என்பதால் வீட்டில் கடுமையான பயிற்சியில் பாரா ஈடுபட்டிருக்கிறார். யாருக்கேனும் கேள்விகள் தேவைப்பட்டால் என்னைத் தனிமடலில் தொடர்புகொள்ளவும். ஆயில்ரேகை புத்தகத்தை எப்படி இஸ்லாத்துடன் இணைப்பது, அங்கிருந்து எப்படி பாராவை மதச்சண்டைக்குள் கொண்டுபோவது எனப் பல விஷயங்களைத் தயாரித்து வைத்திருக்கிறேன்.
இன்னொரு புத்தகம் ஒபாமா பராக் பற்றியது. இப்புத்தம் பற்றிய ஒரு பார்வையை லக்கிலுக் அவரது பதிவில் வைத்திருக்கிறார். அதைப் படித்துவிட்டு (புத்தகத்தையே படித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு) யார் வேண்டுமானாலும் முத்துக்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம்.
முக்கியமான விஷயம், கேள்விகள் கேட்பதன் பெயர் கலந்துரையாடல் என்பதாகும்.
கிழக்கு மொட்டைமாடி புத்தகத் திருவிழா
கிழக்கு மொட்டைமாடி புத்தக வெளியீட்டுத் திருவிழா
22.12.2008 முதல் 27.12.2008 வரை தினமும் புதிய புத்தகங்கள் வெளியீடு
இடம்: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 18.
நேரம்: தினமும் மாலை 6.00 மணிக்கு.
பட்டியல் கீழே உள்ளது. மேல வருவனாங்குது. அதனால் கீழே சென்று பார்க்கவும்!
தேதி | கிழமை | புத்தகம் | ஆசிரியர் | பேச்சாளர் |
---|---|---|---|---|
22.12.08 | திங்கள் | கேண்டீட் | வோல்ட்டேர்; தமிழில் பத்ரி சேஷாத்ரி | மாலன் |
சூஃபி வழி | நாகூர் ரூமி | பா. ராகவன் | ||
23.12.08 | செவ்வாய் | சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் | யுவ கிருஷ்ணா | சோம வள்ளியப்பன் |
மால்கம் எக்ஸ் | மருதன் | பா. ராமசந்திரன் | ||
24.12.08 | புதன் | ஆயில் ரேகை | பா. ராகவன் | நாராயணன் |
ஒபாமா பராக் | முத்துக்குமார் | எஸ். சந்திரமௌலி | ||
25.12.08 | வியாழன் | நெ.40 ரெட்டைத் தெரு | இரா. முருகன் | ஜே.எஸ். ராகவன் |
விண்வெளி | ராமதுரை | பத்ரி சேஷாத்ரி | ||
26.12.08 | வெள்ளி | இருளர்கள் ஓர் அறிமுகம் | குணசேகரன் | ப்ரவாஹன் |
செங்கிஸ்கான் | முகில் | இகாரஸ் பிரகாஷ் | ||
27.12.08 | சனி | வாங்க பழகலாம் | சோம வள்ளியப்பன் | எஸ்.எல்.வி. மூர்த்தி |
ஜார்ஜ் வாஷிங்டன் | பாலு சத்யா | ஆர். வெங்கடேஷ் |