
நேற்று அப்பாவின் நினைவு தினம். மார்ச் 4. திதியும் அவர் இறந்த நாளும் ஒரே நாளில் வந்தது.
அப்பா 2007ல் மறைந்தார். நீண்ட நாளாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். நான் சென்னையில் இருந்தேன். அப்பா திருநெல்வேலியில் அண்ணன் வீட்டில் இருந்தார். அப்பாவைப் பார்க்க திருநெல்வேலிக்குச் சென்றிருந்த சமயத்தில், அதாவது அப்பா மறைவதற்கு ஒரு வாரம் முன்பு வந்த சனிக்கிழமை இரவில், அப்பாவின் உடல்நிலை மிக மோசமானது. நானும் என் அத்தைப் பையனும் அருகே இருந்தோம். மற்றவர்கள் ஓய்வெடுக்கப் போயிருந்தார்கள். அப்பாவைக் கண்காணிக்க, மாற்றி மாற்றி கண் விழித்துப் பார்க்கும் ஏற்பாடு அது.
—
Advt.
கருட புராணம், சுவாசம், ரூ 190
—
இரவு இரண்டு மணி வாக்கில் அப்பாவின் நாடி இறங்கிக்கொண்டே போனது. ஆக்ஸிஜன் வைத்தோம். ஒரு பயனும் இல்லை. இன்னும் அதிகபட்சம் 2 மணி நேரம் கூடத் தங்காது என்று தோன்றியது. அப்போதுதான் உறங்கச் சென்றிருந்த அண்ணனை எழுப்பினோம். அவரும் எங்களுடன் அமர்ந்துகொண்டார். ஒரு கட்டத்தில் நாடி இறங்குவது எங்களுக்கு ஒரு வாடிக்கையாகிப் போனது. கொஞ்சம் நேரம் வெளுக்கவும் உறவினர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தோம்.
ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் அப்பாவுக்கு புதிய தெம்பு பிறந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் நார்மலாகிவிட்டார். எங்களால் அதை நம்பவே முடியவில்லை.
அப்பாவைப் பார்க்க வந்த இன்னொரு அத்தைப் பையன், வீட்டுக்குள் வந்தார். அப்பா தலை சீவி பௌடர் போட்டுக்கொண்டு, சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, “வாடா சுரேஷ்” என்று கெத்தாக அழைத்ததைப் பார்த்துவிட்டு, அவர் எங்களைப் பார்த்து, “என்னடா ரொம்ப சீரியஸ்னீங்க. நல்லாத்தான இருக்காரு” என்றார். பின்னர் அவருக்கு நிலைமையை விளக்கினோம்.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. நான் சென்னைக்குக் கிளம்பவேண்டும். வீட்டில் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த வாரம் சனிக்கிழமை மார்ச் 3ம் தேதி சந்திர கிரஹணம் என்று சிறிய பெட்டிச் செய்தி போட்டிருந்தது. அதை அம்மா பார்த்துவிட்டு, “கிரஹணம் தாண்டனுமே” என்றாள்.
நான் சென்னைக்கு வந்துவிட்டேன். சனிக்கிழமை சந்திர கிரஹணம் வந்த கழிந்தது. அப்பா தாண்டிவிட்டார் என்று நினைத்தோம். ஆனால் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்குத் தன் இறுதி மூச்சை விட்டார் அப்பா. ஃபோனில் என்னிடம் அம்மா, “கிரஹணம் தாண்ட விடாதுடா” என்றாள் அம்மா.
இந்த 2026 மார்ச் 3ம் தேதி சந்திர கிரஹணம். மார்ச் 4 அப்பா இறந்த நாளும் அதே திதியும்.
இறுதி வரை நம்முடன் வரப் போகிறவை நம் நினைவுகளே. நினைவுகளே நாமே அன்றி நாமென்ற ஒன்று தனியே இல்லை.


