Haq (H) – ஜீவனாம்சம் கோரி தன் உரிமைக்காகப் போராடி (ஹக் என்றால் உரிமை) இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஷா பானு வழக்கை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.

திரைப்படமாக அழகாக வந்திருக்கிறது. மிகப் பொறுமையாக ஆழமான வசனங்களுடன் நகரும் திரைப்படம். டோண்ட் மிஸ் வகையறா.
நம் இயக்குநர்கள் முஸ்லீம் தாஜா அரசியலுக்காக, நிஜத்தில் ஒரு பட்டியலினப் பையன் கதையை இஸ்லாமியப் பையனாக மாற்றி, நீதிமன்ற வாசலில் நமாஸ் செய்யும் அர்த்தமற்ற காட்சிகளை (சிறை) வைத்துக்கொண்டிருக்க, ஹிந்தியில் உண்மையான வரலாற்றைப் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
படத்துக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? நிஜத்தில் ஷா பானு தனது 62 வயதில் வழக்கைத் தொடுக்கிறார். இந்தப் படத்தில் இளம் வயதிலேயே கதாநாயகி வழக்கைத் தொடுக்கிறார். ஷா பானுவின் அப்பா ஒரு கான்ஸ்டபிள். ஆனால் கதாநாயகியின் அப்பா ஒரு மௌல்வி. இப்படிச் சில மாற்றங்கள். இவை எதுவுமே தேவையற்ற மாற்றங்களும் கூட. உண்மையில் 62 வயதுப் பெண் ஜீவனாம்சத்துக்காகப் போராடுவது இன்னும் வலுவாகவே இருந்திருக்கும்.
கதாநாயகியின் அப்பாவை மௌல்வி என்று வைத்ததன் மூலம், தேவையற்ற எதிர்ப்புக் குரல்களை இயக்குநர் சமாளித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். மௌல்வியின் மகள் என்பதால் தனக்கு குரான் மற்ற எவரையும் விட நன்றாகவே தெரியும் என்று அவர் பேசும் பல வசனங்கள் எதிர்ப்பாளர்களை வாயடைக்கும்ச் செய்துவிடும் வகையிலானவை. வசனங்கள் படு கூர்மை.
ஷா பானு தன் வீட்டிலிருந்து கணவனால் வெளியேற்றப்பட்ட பிறகு தனியாகவே வாழ்ந்தார். ஆனால் கதாநாயகி தன் கணவன் வீட்டில், அது தன் பெயரில் உள்ள வீடு என்பதால், வலுக்கட்டாயமாக அங்கே குடியேறி வாழ்கிறார். தேவையில்லாமல் கதையை வளைத்திருக்கிறார்கள் இங்கே.
கதாநாயகிக்காக வழக்காடும் வழக்கறிஞர் ஒருவரும் முஸ்லிம். படத்துக்காக வைத்திருப்பார்களோ என்று தேடிப் பார்த்தால், ஷா பானுவுக்காக வாதாடிய பல வக்கீல்கள் முஸ்லிம்களே.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பில் ஜீவனாம்சத் தொகையாக ரூ 22 / மாதம் என்று சொல்லப்படும்போது — நமக்கு அது முன்பே வரலாற்று ரீதியாகத் தெரிந்திருந்தும் கூட — அதிர்ச்சியாகவே இருக்கிறது. கடைசியில் தன் போராட்டத்தில் வெற்றி பெறுவதோடு படம் நிறைவடைகிறது. ஆனால் வரலாறு நிறைவடையவில்லை.
இஸ்லாமிய தாஜா அரசியலுக்காக இந்தத் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக ராஜிவ் அரசு, இந்தத் தொகையை இத்தா காலத்தில் அதாவது விவாகரத்து செய்யப்பட்ட பின்னான மூன்று மாதக் காத்திருப்புக் காலத்தில் மட்டும் கொடுத்தால் போதும் என்ற வகையில் சட்டம் இயற்றுகிறது. அதைச் சட்ட ரீதியாகச் சரியாக்க 2023 வரை (ஒரே சமயத்தில் தரப்படும் முத்தலாக் தொடர்பாக 2019 வரை) காத்திருக்க வேண்டியதாயிற்று. இவையெல்லாம் கடைசியில் திரையில் எழுத்துகளாகக் காட்டப்படுகின்றன.
செக்யூலர் முஸ்லிம்களும் முஸ்லிம் பெண்களும் இந்திய வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் தவறவிடக் கூடாத படம் — உண்மையிலிருந்து சில இடங்களில் படம் விலகிச் சென்றாலும் ஆதாரப் பிரச்சினையில் இருந்து துளி கூட விலகவில்லை என்பதற்காகவும், சென்சிடிவ் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் தேவையற்ற வகையில் யாரையும் சீண்டவில்லை என்பதற்காகவும்.
நவம்பர் 2025ல் வெளியான இந்தத் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.
பின்குறிப்பு: வலதுசாரிகள் திரைப்படம் எடுக்க நினைப்பதில் தவறில்லை. நிச்சயம் அது தேவையான ஒன்று. ஆனால் தரம் இந்தப் படத்தைப் போல இருக்க வேண்டும். இந்தப் படத்துக்கான செலவு பெரிய அளவில் இருந்திருக்காது. ஆனால் தரம் அட்டகாசம். தரம் இல்லாமல் நாம் நம் கருத்துகளை எங்கேயும் கொண்டு செல்ல முடியாது.


