களம்காவல் (M) – பார்க்கும்போது போரடிக்காமல் செல்கிறது என்பது பிளஸ். மம்மூட்டியின் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. ஆனாலும் என்னவோ முழுமையாக அதை உள்வாங்க முடியாத அளவுக்கு ஒரு இடறல் படம் முழுக்க இருக்கிறது. திரைக்கதையாகப் பார்த்தால் மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. மம்மூட்டியா இப்படி என்கிற பரபரப்பு, முதல் 10 நிமிடங்களில் குறையத் தொடங்கியதும் திரைக்கதை பக்கம் நம் கவனம் செல்லும் போது, என்னடா இது என்ற எரிச்சல் வரத்தான் செய்கிறது. ஒரு 50 வயது பெண்ணுக்கு 20 திருமணங்கள் நடந்த செய்தி நமக்குத் தெரியும். நம் ஊரில் ஆண்களுக்கான ‘இந்த’ poverty செய்தி நமக்குப் புதியதல்ல. ஆனால் ஒரு 50 வயது ஆணுக்கு இத்தனை பெண்கள் அதுவும் குழந்தை குட்டியுடன் உள்ள பெண்கள் ஏன் விழுந்தார்கள் என்பதற்கான காரணம் எதுவுமே வலுவாக இல்லை என்பது மிகப்பெரிய குறை. ஆனாலும் முதல் 10 நிமிடமும் கடைசி அரை மணி நேரமும் விறுவிறுப்பாகத்தான் இருக்கின்றன. மிகப்பெரிய ஆறுதல் கொலைக்கு ஒரு மோட்டிவ் காண்பிக்கிறேன் என்று எதையாவது காண்பிக்காமல் இது இப்படித்தான் என்று முதலிலேயே நமக்குச் சொல்லி விடுவது. நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நடக்கும் திரைப்படம் என்பதால் பின்னணியில் தமிழ்ப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்தக் காலத்தில் வந்த நேரடித் தமிழ் பாடல்களைப் பயன்படுத்தாமல் இவர்களே தமிழ்ப்பாடல் போன்ற சிலவற்றை உருவாக்கிப் படம் முழுக்கப் பல இடங்களில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். மலையாளிகளே எழுதும் தமிழ்ப் பாடல் எப்படி இருக்கும்? ஆம், இதிலும் நாராசமாகத்தான் இருக்கிறது.


