சிறை என்ற கொடுமையைப் பார்த்தேன். என்னடா அனைத்து ‘முற்போக்கு’களும் இப்படி டான்ஸ் ஆடுகிறார்களே என்று பார்த்தால், அது ஏன் என்பதற்கு இன்றுதான் பதில் கிடைத்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் ஒரு தமிழ்ப்படம், வாரே வாஹ், என்னை தமிழ் இயக்குநர்கள் ஏமாற்றுவதே இல்லை.
அதே இஸ்லாமிய தாஜா ஜல்லி. உண்மையில் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் எந்த அச்சத்திலும் இல்லை. இருக்கவேண்டிய தேவையும் இல்லை. (பிராமணர்கள் பயந்து வாழ்கிறார்கள் என்பதையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். இதை ஏன் இப்போது சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், உண்மையில் தமிழ்நாட்டில் ஒரு மதமாகவோ இனமாகவோ சாதியாகவோ அஞ்சி வாழவேண்டிய நிலையில் யாரும் எப்போதும் இருந்ததில்லை என்பதைச் சொல்வதற்காகத்தான். அவ்வப்போது எழும் பிரச்சினைகள் எல்லாம் எல்லாருக்குமே பொதுவானவை. ஒரு சாதி அல்லது மதம் மேல் இருக்கும் வெறுப்பு என்பது இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அவர்கள் அஞ்சி வாழ வேண்டிய அளவுக்கு இன்னும் போகவில்லை.) ஆனால் இந்தப் படம் இல்லாத ஒன்றை இருப்பது போல இட்டுக்கட்டிச் சொல்கிறது.
படம் முழுக்க புல்லரிப்புதான். ஒரே ஒரு இஸ்லாமியப் பையன், அன்பே உருவான பையன், அவன் விலகிப் போனாலும் காதலிக்கும் இந்துப் பெண். என்ன ஒரு டெம்ப்ளேட்! தெரியாமல் அவன் அந்தப் பெண்ணின் அப்பனைக் கொன்றுவிட, உண்மை தெரிந்து அவனையே உருகி உருகிக் காதலிக்கும் பெண்… இன்னொரு காட்சியை மறந்துவிட்டேனே… அந்த நீதிபதி மன்னிப்புக் கேட்கும் காட்சி… இதைச் சொல்வதா அல்லது நானும் முஸ்லிம்தான் என்று போலிஸ் சொல்வதைச் சொல்வதா… எத்தனை எத்தனை காட்சிகள். அதிலும் கோர்ட்டுக்கு முன்னால் அவன் நமாஸ் செய்யும் காட்சியில் நானே வாயடைத்துப் போய்விட்டேன். இயக்குநர் எங்கோ சென்றுவிடுவார் என்பது உறுதி.
இந்தப் படத்தின் ஹீரோவாக வரும் விக்ரம் பிரபுவின் கதாபத்திரம் அற்புதம். இத்தனை கிறுக்கான போலிஸை தமிழில் இதுவரை எந்தப் படமும் இத்தனை மெச்சூர்டாகக் காட்டியதில்லை. பைத்தியக்காரத்தனமான மெச்சூரிட்டியின் உச்சம் இந்தக் கதாபத்திரம்தான்.
தவறவே விடக் கூடாத படம். பார்த்துக் கண்ணீர்விட்டுத் தொலையுங்கள்.


