நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் செருப்பு வீசியது கண்டிக்கத் தக்கது. கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு செயல். இந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் எள்ளளவும் பிறழக் கூடாது.

கவாய் சொன்ன தீர்ப்பை நானும் ஏற்கவில்லை. அதேபோல், பல நீதிமன்றங்களின் பல செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவும், குழப்பம் தருவதாகவும் இருக்கின்றன. ஒரு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாகச் சிக்கிய பணமெல்லாம் நீதித்துறையின்மீது நம்பிக்கையின்மையைப் பல மடங்கு கூட்டின. இவை எல்லாமே உண்மை. ஆனால் இந்த நேரத்தில் இவற்றையெல்லாம் சொல்லி, ஹிந்து மதக் கடவுளை கவாய் ஏளனம் செய்ததற்காக ராகேஷின் செயலை நாம் ஆதரிப்போம் என்றால், அது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.
இந்த நேரத்தில் திராவிட ‘முற்போக்காளர்கள்’ இதுதான் சாக்கு என்று, மிகவும் நியாயவாதிகள் போலப் பேசுகிறார்கள். அவர்களுக்கு நாம்தான் அந்த இடத்தைக் கொடுக்கிறோம் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.
இதே போன்ற ஒரு செயலை, ஹிந்து ஆதரவு நீதிபதிக்கு ஹிந்து எதிர்ப்பு வழக்கறிஞர் செய்திருந்தால், இந்நேரம் இந்த ‘முற்போக்காளர்கள்’ அவருக்கு கலைமாமாமணி விருதைக் கொடுத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களது இரட்டைத் தனத்தையும், தேவைக்கேற்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டு அதுவே நேர்மையான, உலகமே விதந்தோதும் நீதியான செயல் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதையும் நாம் லட்சத்து ஓராவது முறையாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இதில் பெரிய நியாயவான்கள் போல, ‘அந்த நீதிபதியின் தீர்ப்பும் சரியல்ல’ என்று சதாரணமாகச் சொல்பவர்களைக் கூட ஜாதி ரீதியாகத் தூற்றிக்கொண்டு அலைவதையும் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்கள் என்றுமே பொருபடுத்தத் தகுந்தவர்கள் அல்ல. தொடர்ந்து எக்ஸ்போஸ் செய்யப்படவேண்டியவர்கள். இவர்களுக்கு இருப்பது இரண்டே இரண்டுதான், ஒன்று ஹிந்து மத வெறுப்பு, அடுத்து பிராமணக் காழ்ப்பு. இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
நீதிபதி கவாயின் ஹிந்து மதக் கடவுள் மீதான விமர்சனமும், ராகேஷ் அவர் மேல் செருப்பு எறிந்ததும் வேறு வேறு என்று நாம் இந்நேரத்தில் பார்க்கவேண்டும். சரியாகச் சொல்வதென்றால், கவாயின் செயலைவிட ராகேஷ் செய்தது அராஜகமானது. கண்டிப்போம்.