முழு நேரமாகக் கட்சிக்காகக் குரல் கொடுத்த அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் காத்திருந்து ஏமாறுகிறார்கள் என்று ஜெயமோகன் எழுதியிருப்பது குறித்து.
இது முற்றிலும் அநியாயமான கருத்து. உள்நோக்கம் கொண்டது.
அரவிந்த நீலகண்டன் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் ஆதரவாக எழுத ஆரம்பித்தது திண்ணையின் தொடக்கக் காலத்திலேயே, அதாவது அப்போதெல்லாம் பாஜக இத்தனை வலுவாக ஆட்சிக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்காத நேரம், ஆர்எஸ்எஸ் பெயரைச் சொன்னாலே அடி விழும் ஒரு காலம், அந்தக் காலத்திலேயே, குறிப்பாக அதற்கும் முன்பாகவே ஆதரித்தார்.
அரவிந்தன் ஆர் எஸ் எஸ் & பாஜகவை ஆதரித்தது அவருடைய சித்தாந்தத்தின்படிதானே ஒழிய எதையும் எதிர்பார்த்து அல்ல.
இன்று பாஜக வலுவாக இந்தியா முழுக்கக் கால் பரப்பி இருக்கும் நிலையிலும் அவர் எந்த ஒரு சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. பெரிய சமரசம் அல்ல, சிறிய சமரசங்களை அதாவது கருத்து ரீதியாகச் சில சமரசங்களை அவர் செய்திருந்தாலே போதும், பல்வேறு விஷயங்கள் அவரைத் தேடி வந்திருக்கும். பல்வேறு எழுத்தாளர்கள் அவரைக் கொண்டாடி இருப்பார்கள். அந்தச் சமரசங்கள் தவறும் அல்ல. எல்லோரும் எல்லாக் கட்சியின் ஆதரவாளர்களும் எல்லா எழுத்தாளர்களும் எப்போதும் செய்வதுதான்.
நானே அவரிடம் அதைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால் அதை ஒருபோதும் செய்யாதவர் அரவிந்தன். இப்படியான ஒருவரை, ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அதனால் பாஜகவை ஆதரித்து அதனால் ஏமாந்தார் என்பதெல்லாம் அநியாயத்திலும் அநியாயம்.
இதை ஜெயமோகன் சொல்லி இருக்கக் கூடாது. பத்மஸ்ரீ அவருக்குத் தரக் கோரிக்கை வைக்கப்பட்ட போது நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்க்கிறேன். பத்மஸ்ரீ விருதுக்குத் தன் பெயர் பரிந்துரைக்கப்பட்டதே தனக்குத் தெரியாது என்று ஜெயமோகன் சொன்னார். அப்படி ஒரு வாய்ப்பு இருக்குமா என்பதை அவரவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன். என்னால் அதை நம்ப முடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.
அதேபோல் முன்பு ஒரு நண்பர் – இன்று அவர் நட்புப்பட்டியலில் இல்லை – அவர் தெளிவாகச் சொன்னார். என்னிடம் சொன்னார். நீங்கள்தான் அரவிந்த நீலகண்டனுக்கு பத்மஸ்ரீ பட்டம் வாங்கி தர மேலிடத்தில் பேச வேண்டும் என்று. எனக்கு மேலிடத்தில் யாரையும் தெரியாது என்பது தனிக்கதை.
ஆனால் எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. பத்மஸ்ரீக்கு பரிந்துரைக்கும் அறிவிப்பு வந்தது. நான் அரவிந்தனிடம் எத்தனையோ பேசினேன். பத்மஸ்ரீக்கு அப்ளை செய்வோம், கிடைக்க விட்டாலும் பரவாயில்லை என்று சொன்னேன். அரவிந்தன் ஒரேயடியாகவே மறுத்து விட்டார்.
என்னைக் கட்டுப்படுத்த உங்களால் முடியாது, யாருக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பத்மஸ்ரீ தர வேண்டும் என்று பரிந்துரை அனுப்பலாம், நீங்கள் ஏன் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, அப்படி நான் பரிந்துரை செய்தால் என் நட்பில் இருந்து விலகுவேன் என்று கடுமையாகக் கூறினார்.
ஏதேனும் எதிர்பார்ப்பவர் இப்படிச் செயல்பட மாட்டார் அல்லது தன் நண்பனை விட்டு அப்ளை செய்துவிட்டு அந்த பிரச்சினை பெரிதாகும் போது நான் அப்படிக் கேட்கவில்லை என்றாவது சொல்லாமல் இருப்பார். இந்த இரண்டையுமே அரவிந்தன் செய்யவில்லை.
மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் மட்டுமே அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
நிச்சயம் அரவிந்தன் ஏதோ ஒன்று எதிர்பார்த்திருந்தால் இத்தனை வெளிப்படையாக, கொள்கைக்காக எதிர்க்க மாட்டார்.
இப்போதும் இத்தனை சமரசமற்ற தன்மையும் எதிர்ப்பும் அரவிந்தனுக்குத் தேவை இல்லை என்பதே என் நிலைப்பாடு. ஆனால் வழக்கம் போல் அவர் அதைக் கேட்கப் போவதில்லை.
.