ACER 2024 Report

ACER 2024 அறிக்கை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து:

  • தமிழ்நாட்டு அரசு என்ன செய்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, அது என்ன என் ஜி ஓ அல்லது தனியார் அமைப்புகளை ஆதரித்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, தமிழ்நாட்டு அரசு மேல் இந்த நான்கு ஆண்டுகளிலும் ஒரு குற்றச்சாட்டுக் கூடச் சொல்லாமல் தந்திரமாக அமைதியாக இருந்துவிட்டு, இன்று ஏசர் கல்வி அறிக்கை மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொன்னால், அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும்…
  • ஏசர் அறிக்கை வடநாட்டை உயர்த்திப் பிடிக்கிறதா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நிச்சயம் அது தமிழ்நாட்டைத் தாழ்த்திச் சொல்லவில்லை. ஆதாரம்? எப்படி உங்களிடம் வடநாட்டை அது உயர்த்திச் சொல்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லையோ, அப்படியே என்னிடமும் ஆதாரம் இல்லை. உங்களிடம் இருக்கும் கட் ஃபீலிங் போல எனக்கும் ஒரு கட் ஃபீலிங்கும், கூடவே நேரடி அனுபவுமும் உள்ளன.
  • அரசுப் பள்ளிகளின் நிலை நாற்பதாண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. இதில் திமுக, அதிமுக என்கிற பேதமே தேவையில்லை. இரண்டு கட்சிகளும் மாணவர்களுக்கு பொருளாதார ரீதீயாக (உணவு தருவது, செருப்புத் தருவது, முட்டை, லேப்டாப் போன்ற மிக முக்கியமான முன்னெடுப்புகள்) உதவுவதில் இந்திய அளவில் முன்னோடியாகச் செயல்பட்டார்களே ஒழிய, இவற்றைவிட முக்கியமான கல்வி சார்ந்த முன்னெடுப்பில் தேங்கித்தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

//நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது எங்கள் வகுப்பாசிரியர் நார்மன் சார் செய்த முதல் வேலை, 9ம் வகுப்பில் முழுவாண்டுத் தேர்வில் அனைவரும் உண்மையாக வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பதை வாசித்ததுதான். அதுவரை முழுவாண்டுத் தேர்வு மதிப்பெண்களை நாங்கள் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. பள்ளியிலிருந்து ப்ரொமோடட் என்று ஒரு அஞ்சலட்டை வரும், அவ்வளவுதான். அன்று அவர் வாசித்த மதிப்பெண்கள் பலரைக் கலக்கமடையச் செய்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் 42 பேர் என்ற நினைவு. அரசு உதவி பெறும் பள்ளி. தமிழ் வழிக் கல்வி. ஐந்து பாடங்களிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 15 பேர் கூட இல்லை. மற்ற அனைவரும் குறைந்தது ஏதேனும் இரண்டு பாடங்களிலாவது 15 அல்லது 16தான். ஒரே ஒரு நல்ல விஷயம், தமிழை எழுத்துக் கூட்டி வாசித்துவிடுவார்கள். எழுதச் சொன்னால் முடிந்தது கதை. ஆங்கிலம் – சுத்தம். ஆங்கிலத்தின் மேலேயே தமிழில் எழுதிப் படித்து ஒப்பித்தவர்களே பலர்.//

அப்போதே இந்த லட்சணம்தான். இன்று நிலை முன்னேறிவிட்டது என்று நினைக்க எந்த முகாந்தரமும் இல்லை.

  • என் ஜி ஓ மூலமாக சர்வே எடுத்தார்கள், யாரென்றே தெரியாதவர்கள் சர்வே செய்தார்கள் என்பதெல்லாம் சால்ஜாப்பு. அப்படிப் பார்த்தால் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்துத் தயாரிப்பதே ஆசிரியர்கள்தான். அவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பல வேலைகளைச் செய்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
  • அடுத்த உருட்டு, சாம்பிள் குறைவானது என்பது. உண்மையில் சாம்பிள் கூடுதலாக இருந்திருந்தால், அறிக்கை இன்னும் மோசமாக நம்மைக் கழுவி ஊற்றி இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, 8ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவனைத் தமிழ் வாசிக்கச் சொன்னேன். அவனது தமிழ்ப் பாடப் புத்தகத்தில் வரும் ஒரு பாடம். அதுவும் அந்த வகுப்பு தொடங்கி 9 மாதங்களுக்குப் பிறகு. அவனால் ஒரு வரியைக் கூட ஒழுங்காக வாசிக்க முடியவில்லை. (வீடியோ.)

இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்லவேண்டும். மாணவர்களைத் தமிழ் படிக்க வைக்க நம்மால் முடியவில்லையே தவிர, தேர்வில் அவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும். ஆம். ஒரு தேர்வில் எப்படி மாணவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும் என்பதில் நம் ஆசிரியர்கள் உச்சம் தொட்டு அதையும் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் நீட் போன்ற தேர்வுகள் அவசியமாகின்றன.

பல உதாரணங்கள் இதற்கு உண்டு. ஒன்பதாம் வகுப்பில் தமிழ் அ ஆ தெரியாமல் வரும் பையனைக் கூட, பத்தாம் வகுப்பு முழுத் தேர்வில் நம் ஆசிரியர்களால் 60 மதிப்பெண்கள் வாங்க வைக்க முடியும். இது நடந்திருக்கிறது. இதனால்தான், இனி ப்ளூ ப்ரிண்ட் கிடையாது என்று இந்த அரசு முடிவு செய்தபோது நான் அதை வரவேற்றேன்.

எனவே நம் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் தரம் இப்படித்தான் உள்ளது. இதனால் தனியார்ப் பள்ளியின் தரம் கொடிகட்டிப் பறக்கிறது என்று அர்த்தமல்ல. அவையும் இப்படியே. கொஞ்சம் மேலே இருக்கலாம், அவ்வளவுதான்.

  • ஆசிரியராக இருக்கும் எழுத்தாளர் சுகிர்தராணி மனம் நொந்து எழுதி, பெரிதும் பேசப்பட்ட பதிவைக் கீழே கொடுத்திருக்கிறேன். அவர் திராவிட எதிரி அல்ல. அவர் எழுதியது ஜூன் 2019ல். அவர் சொல்வதன் விரிவான அம்சமே ஏசர் 2024 அறிக்கை.
  • நீதிபதி சந்துரு எனக்கு எந்த வகையிலும் ஏற்பில்லாதவர். அவர் திராவிட எதிரி அல்ல. ஆதரவாளர். அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகள். (முழுமையான கட்டுரை லின்க்.)

//கல்விச் சீரழிவும் போலி மதிப்பெண்களும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11% கூடியுள்ளது: 2012 – 80.23%; 2013 – 84.44%; 2014 – 87.71%; 2015 – 90.06%; 2016 – 91.79%. கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறிய தகவலின்படி, இன்றைய மாணவர்களுக்கு அவர்களது விடைத்தாள்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின்படி தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காட்டை கணித்தோமானால் அது 52%-ஐத் தாண்டாது என்பதே உண்மை நிலவரம்.//

இது தமிழ்த் திசையில் வெளியானது. இதுவும் திராவிட அரசுக்கு எதிரான பத்திரிகை அல்ல. ஜால்ரா பத்திரிகைதான்.

நீதிபதி சந்துருவின் கட்டுரையைவிட ஏசர் 2024 அறிக்கை பொறுமையாகவே பேசுகிறது என நினைக்கிறேன்.

  • ஓர் அறிக்கையைத் திட்டுவது, அந்த அறிக்கையைத் தந்த நிறுவனத்தை மத்திய அரசின் ஜால்ரா என்பதெல்லாம் சரிதான். ஆனால் நம் தமிழ்நாட்டு நிலவரம் நமக்கே தெரியாதா? நீங்களே பத்துப் பள்ளிகளைத் தேர்ந்தெடுங்கள். தமிழ் ஆங்கிலம் கணிதம் மூன்றிலும் 5ம் வகுப்புத் தரத்திலான கேள்விகளைத் தேர்ந்தெடுங்கள். 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களிடம் விடைகளைக் கேளுங்கள். ஏசர் 2024 அறிக்கை தெய்வம் என்று உங்களுக்கே புரியும்.
  • கடன் வாங்கிக் கழித்தல் தெரியாத மாணவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இரண்டிலக்கப் பெருக்கல் தெரியாதவர்கள், எளிமையான சிறிய வார்த்தைகள் கொண்ட ஒரு தமிழ் வரியைத் திக்கி திக்கிக் கூட வாசிக்கத் தெரியாதவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இதைக் கேலியாகச் சொல்லவில்லை, வருத்தத்துடன் சொல்கிறேன்.
  • முதலில் நம் நிலைமை என்ன என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். பின்னர்தான் நாம் உண்மையில் தமிழ்நாட்டை, தமிழை, தமிழ் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்.
  • அரசு என்ன செய்யலாம்? ஒரு மாதம் ஆசிரியர்களுக்கு நேரம் கொடுத்து, அவர்களால் ஆசிரியர் என்னும் புனிதப் பணியில் இனியும் வெற்றிகரமாகச் செயல்படமுடியாது என்றால், வேறு அரசுப் பணிகளுக்கு மாறிக் கொள்ள வாய்ப்புத் தரலாம். புதிய, இளைமையான, படிப்பறிவு கொண்ட ஆசிரியர்களை நியமிக்கலாம். ஆசிரியர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயப்படுத்தலாம். ஒரு மாதம் ஆசிரியர்களுக்குத் தரப்படும் விடுமுறையின்போது ஆன்லைனில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் ‘எப்படி வகுப்பெடுப்பது’ என்ற நுணுக்கங்களை, ஆசிரியர்கள் அல்லாத நிபுணத்துவம் பெற்றவர்களால் சொல்லித் தரச் சொல்லலாம். இது ஆசிரியர்களுக்குப் பள்ளிப் பாடத்தை எப்படி அணுகுவது எனப்தைச் சொல்லித் தரும்.
  • ஏசர் 2024 தமிழர்களை அவமானப்படுத்துகிறது, தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கிறது, அது ஒரு பொய் புரட்டு என்று நிரூபிப்பதற்குப் பதிலாக, உண்மையாகவே இது சரியான நேரத்தில் விடப்பட்ட எச்சரிக்கை என்பதாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டை எப்படி இந்திய அளவில் கல்வியில் முதல் மாநிலமாக்குவது என்று யோசிக்கலாம். அடுத்த பத்தாண்டுகளுக்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கலாம். அதுதான் நம் மாணவர்களுக்கு நல்லது. அப்படியில்லாமல், தமிழ்நாட்டு அரசுக்கு ஜால்ரா அடிக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ நீங்கள் காவடி எடுப்பீர்கள் என்றால், அது உங்கள் விருப்பம்.
Share

Comments Closed