Ennepinna

எண்ணேப்பின்னா

இது எங்கள் வழக்கம். பலர் வீட்டில் இப்பழக்கம் இருக்கும். மீந்து போன பழைய சாதத்தை, நல்லெண்ணெய்யும் உப்பும் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து, அதை உருட்டி, அதில் குழி செய்து, குழம்பு சேர்த்து உண்டால், சொர்க்கம். (இதில், கன்னடத்தில் கரத எண்ணெ எனப்படும், வடை இதியாதி சுட்ட எண்ணெய்யைப் போட்டுப் பிசைந்தால் சுவை இன்னும் கூடும்.)

சுண்ட வைத்தப் பழங்குழம்பு என்றால், அதுவும் கொதிக்க கொதிக்க இருந்தால், சுவை அள்ளும். அதாவது அந்தக் குழம்பு நாக்கில் படும்போது நாக்கு பொள்ளிப் போகவேண்டும்.

எண்ணேப்பின்னா என்றால், எண்ணெய் உப்பு அன்னம் என்று பொருள். சிலர் வழக்கத்தில் எண்ணப்பிட்டன்னா என்றும் எண்ணப்புன்னா என்றும் சிலர் சொல்வதுண்டு.

என் அம்மா கையில் உருட்டித் தருவார். இப்போது நினைத்தாலும் அந்தச் சுவைக்கு நாக்கு ஏங்குகிறது.

அப்போதெல்லாம் பழைய சோறு நிறைய மீந்து போகும். ஏனென்றால் எப்போதும் சாதம் வீட்டில் இருக்கவேண்டும் என்பது ஒரு விதி. கஷ்ட ஜீவனம். பழைய குழம்பும் இதுவும் உண்டால் மதியம் மூன்று மணி வரை பசிக்காது. சுவையும் அள்ளும்.

இப்போதெல்லாம் மதியத்துக்கு உணவு என்றால் அது மதியமே காலியாகும் வகையில்தான் சமைக்கிறோம். எப்போதாவதுதான் இப்படிச் சாப்பிட முடிகிறது. டயட் கவலை வேறு. ஆம், இந்த உணவு என்னைப் போன்ற ஸ்லிம்மிக்களுக்கான உணவு.

Share

Comments Closed